
அகம்-39

“மதூ..! நில்லுடி! நில்லுன்னு சொல்றேன்ல்ல?” வாசலைத் தாண்டி வெளியேற முயன்றவளை கரம் பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தான் நெடுமாறன்.
“இப்போ உனக்கு என்ன வேணும்? நீ நில்லுன்னு சொன்னது நான் நிக்கணும்? இத்தனை வருஷக் காதல்.. என்னை உனக்குப் புரியும்ன்னு நினைச்சேன் மாறன். ஆனால் என்னை நீ துளியளவு கூட புரிஞ்சுக்கவே இல்லையே?” கோபமும் ஆற்றாமையும் தெரிந்தது மதுவின் குரலில்.
“இதுவொரு சின்ன விஷயம் மது.. நீ தான் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்குற! உன்னோட சேர்ந்து இருக்கணும்ன்னு தானே வேலைக்குப் போக வேணாம்ன்னு சொன்னேன். இதெல்லாம் நமக்காக.. நமக்காக மட்டும் தான் மதூ..!” அவள் கரத்தினில் அழுத்தம் வைத்தான் நெடுமாறன்.
“இது சின்ன விஷயம் இல்லை டா! எனக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். உனக்கு இதெல்லாம் புரியாது மாறன். என்னை மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கு இதெல்லாம் இமாலய சாதனை மாதிரி தான். என் ஃபேமிலியில் நான் தான் ஃபர்ஸ்ட் க்ராஜ்வேட் தெரியுமா? அப்படி இருக்கும் போது, இந்த படிப்பு மூலமா கிடைச்ச வேலை எவ்வளவு முக்கியம்ன்னு நான் சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்லை. என்னைப் படிக்க வச்சு, இவ்வளவு தூரம் என்னை வளர்த்து விட்டவங்களுக்கு, நான் எதாவது செய்யணும்ன்னு நினைக்கிறது தப்பா?”
“நானெல்லாம் தெருவிலா வளர்ந்தேன்.? என்னையும் என்னைப் பெத்தவங்க தான் வளர்த்தாங்க! கல்யாணம் பண்ணுறதே ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறதுக்குத்தான். கல்யாணம் பண்ணிட்டு பிரிஞ்சு இருக்கிறது சரியான்னு சொல்லு மது? உனக்கு உங்க அப்பா அம்மா தான் முக்கியம்ன்னா நான் முக்கியம் இல்லைன்னு தானே அர்த்தம்? அதானே கல்யாணத்தை நிறுத்தற வரை போய்ட்ட?”
“லூசாடா நீ? நான் என்ன பேசறேன்? நீ என்ன புரிஞ்சுக்கிற? எனக்கு இந்த ஜாப் ரொம்பவே முக்கியம். என்னால் வேலையை விட முடியாது. இன்னும் வேலையே கிடைக்கலை டா! அதுக்குள்ளே ஏன் இப்படி என்னை ப்ரஷர் பண்ணுறே? சேர்ந்து வாழத்தான் கல்யாணம் பண்ணுறோம், நான் இல்லைன்னு சொல்லலை! ஆனால் என் பக்கமிருந்தும் நீ கொஞ்சம் யோசிச்சு பாரேன்.!” நிதானித்து நிறுத்தி எதிரில் நின்றவன் முகம் பார்த்தாள் மது.
கொக்குக்கு ஒன்றே மதி என்பதைப் போல், மீண்டும் மீண்டும் அதையே பேசினான் நெடுமாறன்.
“மதூ.. என்னோட ஃபீலிங்ஸையும் புரிஞ்சுக்கோ! கிட்டத்தட்ட ஏழு வருஷம் இருக்குமா? இத்தனை வருட காதல் கல்யாணத்தில் முடியப் போகுது. கல்யாணத்தில் சேர்ந்துட்டு, வேலைக்காக பிரியறதை என்னால் ஏத்துக்க முடியலை டி! ரொம்ப கஷ்டமா இருக்கும் மது.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோயேன்.!”
“எனக்குப் புரியுது டா! நான், நமக்காக நம்ம எதிர் காலத்திற்காக.. எல்லாத்துக்கும் சேர்த்து தான் யோசிக்கிறேன். உங்க அப்பத்தா சொன்ன மாதிரி, நீ சென்னையில் வொர்க் பண்ண கேட்டுப் பாரேன்.. நமக்காக டா!” மென்மையாய் சொன்னாள் மது.
“என்ன பேசுற மது? நான் என் ஃபேமிலியை விட்டுட்டு வரணுமா? பேசறதுக்கு ஈஸியாய் இருக்கலாம். பட், ரொம்ப கஷ்டம் மது!”
“நான் வரேனே டா.. உன்னை மாதிரி நானும் என் அப்பா அம்மா மேல் அன்பு வச்சிருக்கேன். அவங்களை விட்டுட்டு நான் வர்ரேனே டா! அதுவும் உனக்காக வர்ரேனே.. நான் ஒண்ணும் உன்னை நிரந்தரமாய் சென்னை வரச் சொல்லலை! கொஞ்ச நாளைக்குத்தானே?” நெடுமாறனின் முகத்தில் வந்து போன உணர்வுகளை மிகக் கவனமாய் அவதானித்தது பெண்ணவளின் விழிகள்.
“அது தானே மது வழக்கம்! வழக்கத்தை எப்படி மாத்த முடியும்.?”
“ஓ! பொண்ணுக்கு மட்டும் தான், இந்த வழக்கம் வாழக்காய் எல்லாம்? பொண்ணு மட்டும் அனுசரிக்கணும்.. பொண்ணு மட்டுமே புருஷனுக்காக எல்லாம் பண்ணணும் அப்படித்தானே? நீ எனக்காக துரும்பைக் கூட நகர்த்த மாட்ட? நம்ம காதலை உன் தாத்தா முன்னால் பேச தைரியம் உனக்கு இருந்துச்சா? உங்க அம்மா, சித்தி, உன் அப்பத்தா மூணு பொம்பளைங்களோட முயற்சியால் மட்டும் தான் இந்தக் கல்யாணம் நடக்கப் போகுது. இப்போ எனக்காக யோசிக்கிறேன்னு, எனக்காக நீயே முடிவை எடுக்கிறதை என்னால் ஏத்துக்கவே முடியாது மாறன்.!”
“ஓ! நீ மட்டும் உங்க வீட்டில் எல்லாத்தையும் சொன்னியா? கடைசியா என்ன தான் சொல்றே? நீ பேசறதைப் பார்த்தால், இந்தக் கல்யாணமே வேணாம்ன்னு முடிவு பண்ணின மாதிரி இருக்கு?”
“உன் அம்மாவும், சித்தியும் என் வீட்டுக்கு வந்து பேசிட்டு போன பிறகு, உன்னைத் தவிர யாரும் என் வாழ்க்கைக்குள்ளே வர முடியாதுன்னு உறுதியா நின்னேன்டா! முதலில் இருந்தே நான் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொல்றேன். நான் சென்னைக்குப் போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்கு மேலே முடிவு பண்ண வேண்டியது நீ தான். எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் முடிவு பண்ண வேணாம்! நீ நல்லா யோசி..! இன்னும் ஒரு வாரம் கல்யாணத்திற்கு இருக்கு. கல்யாண நாள் வரையிலும்.. நீ இதே முடிவில் இருந்தால், கல்யாணத்தை நிறுத்திடுவோம்!” உறுதியாய் சொன்னாள் மது.
“ஈஸியாய் நிறுத்திடலாம்ன்னு சொல்றே? கல்யாணம் என்ன விளையாட்டு காரியமா மது? நம்ம காதலையும் மறந்து நீ இப்படியொரு முடிவு எடுத்திருக்கியா? அப்போ இத்தனை நாள் காட்டின அக்கறை எல்லாம் பொய்யா மது?”
“எமோஷ்னலா பேசாதே டா! ப்ராக்டிகலா பேசு! உன் மீது நான் வச்சிருந்த காதல் அப்படியே தான் இருக்கு. இருவருக்கும் நடுவில் இருக்கிற ஓர் உறவிற்கு, முக்கியமா கணவன் மனைவி உறவிற்கு, புரிதலும், நம்பிக்கையும் ரொம்ப முக்கியம். உன்னை நீயும் என்னை நானும் புரிஞ்சுக்கணும். புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!” மதுவின் வார்த்தைகளில் அதீத தெளிவு இருந்தது.
“அப்போ நீ என்னைப் புரிஞ்சுக்கோயேன் மது. என்னால் மதுரையை விட்டு, என் வேலையை விட்டுட்டு வர முடியாது. புது இடத்தில் பழகறதெல்லாம் ரொம்ப கஷ்டம் மது.!”
“எப்போவுமே கம்ஃபோர்ட் ஸோனிலேயே (comfort zone) இருக்க முடியாது டா! இதுவே உனக்கு வேற எங்கேயாவது வேலை கிடைச்சிருந்தால், நான் இப்படி பேசிருப்பேன்னு நீ நினைக்கிறியா? நிச்சயம் மாட்டேன். உனக்காக நானும், எனக்காக நீயும் யோசிக்கணும் டா! இந்த உறவு இறுதி வரை தொடரணும்ன்னா, நாம நம்மளை புரிஞ்சுக்கணும்! மனசு இருந்தால் நிச்சயம் வரலாம்!”
“ம்ப்ச்! மது!”
“என்னடா? இது நல்ல ஆஃபர் டா! வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக்கணும்! உன்னால் முடிஞ்சால் வா! இல்லைன்னா கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்கிறதில் தப்பில்லை! பிரிவு நம்மளோட நெருக்கத்திற்கு தான் வழி வகுக்கும்! என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே என்கிற வருத்ததைத் தவிர, உன் மேல் வேற எந்தக் கோபமும் எனக்கு இல்லை! பார்க்கலாம்.. டேக் யுவர் ஓன் டைம்! நான் கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு நினைக்கலை! ஆனால் அந்த முடிவை எடுக்க வச்சிடாதே!” எனச் சொல்லிவிட்டு மது விறுவிறுவென வெளியேறிவிட, தன்னைத் திரும்பியும் பார்க்காது செல்லும் பெண்ணவளின், முதுகை வெறித்திருந்தது ஆணவனின் கண்கள்.
*********
இதே மின்னல் வேகத்தில் ஒருவாரம் கடந்திருந்தது..
அவள் முன்னாலிருந்த கண்ணாடி, சோகச் சித்திரமாய் அவள் அமர்ந்திருந்த தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
“ஏய் மது! என்னத்துக்குடி இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருக்கே? நெடுமாமாவும் நீயும் விரும்புனீக தானே? கல்யாணத்து அன்றைக்குக் கூட, மூஞ்சியைத் தூக்கிட்டு.. நல்லாவா இருக்கு?” மதுவின் கூந்தலில் பூவைச் சூடியபடி வினவினாள் கருவிழி.
“உன் நெடுமாமாவை நீயே மெச்சிக்கோடி! அன்றைக்கு நான் வீட்டுக்கு வந்து பேசிட்டு போன பிறகு, ஒரு வார்த்தை கூட, ஃபோன் பண்ணி என்னன்னு கூட கேட்கலை! கொஞ்சமும் அக்கறையும் பொறுப்பும் இல்லை!”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை! நெடுமாமா நல்லவங்கதேன்.. குடும்பத்து மேலே கொஞ்சம் ஒட்டுதல் அதிகம் அம்புட்டுதேன். மதுரையைத் தாண்டி எங்கேயும் போனதில்லை! அதனால் தான் கொஞ்சம் யோசிக்கிது. நீ ஒண்ணும் கவலைப் படாதே மது! எல்லாமே நல்லபடியா தான் நடக்கும்.”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் கல்யாணம், எதையாவது சொல்லி தொலைச்சால் தானே எனக்குத் தெரியும்? மரமண்டை ஃபோன் பண்ணினால் எடுக்க மாட்டேங்குறான்!” எரிச்சலுடன் பதில் சொன்னாள் மது.
“ஏய்.. சும்மா டென்ஷனாகி, மூஞ்சியைத் தூக்காதே டி! கண்ணாடியில் பாரு உன் மொகரகட்டையை.. நெடுமாமா எழுந்து ஓடப் போகுது உன் மூஞ்சியைப் பார்த்து!”
“லவ் மேரேஜ்ன்னு தான் பேரு.. கொஞ்சம் கூட என்மேல் லவ்வே இல்லை இவனுக்கு. என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறான்.. இவனோட என் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயம் வர ஆரம்பிச்சுருச்சு.! நான் இவனுக்காக யோசிச்சு மதுரையிலும் சில ஜாப்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கேன்! ஆனால் சென்னை போனால் நல்ல கெரியர் க்ரோத் இருக்கும் விழி!” கலக்கமாய் சொன்னாள் மது.
“இன்னுமா கிளம்புறீக? மாப்பிள்ளையை உட்காத்தி வச்சாச்சு, இன்னும் தயாராகலையா மதும்மா? என்னத்துக்கு இப்படி மூஞ்சியெல்லாம் வாடி கிடக்கு? சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருக்கணும் ராசாத்தி. எந்த தயக்கமும் பயமும் வேணாம்! நம்ம வீடுத்தா! என்னத்துக்கு பயம்?” ஆதரவாய் மதுவை அணைத்துக் கொண்டார் பூங்கொடி.
“அக்கா! இன்னும் என்ன செய்றீக? பொண்ணை அழைச்சுட்டு வாங்கன்னு கத்திட்டு கிடக்காங்க! காதில் விழவே இல்லையா? நல்ல நேரம் போகும் முன்னே தாலி கட்டி முடிக்கணுமே? பேச வேண்டியதெல்லாம் பொறுமையாய் பிறகு பேசுங்க!” பரபரப்பாய் வந்து நின்றார் அரசி.
“இந்தா கூட்டியாறேன் அரசி! ஒரு அஞ்சு நிமிஷம்.! நீ போ நான் வர்ரேன்.!” என்றவர் மதுவைப் பார்த்து,
“என் மயன் உன்னைப் புரிஞ்சுக்கிட்டான் மதும்மா! இந்தாரு இதை உன்கிட்டே கொடுக்கச் சொன்னான்! இதைப் பார்த்துட்டு பிறகு அவன் பக்கத்தில் உரிமையாய் வந்து உட்கார்ந்தால் போதும்.” நான்காய் மடித்திருந்த காகிதத்தை அவள் கரத்தில் தந்தார் பூங்கொடி.
“ஏய் மது.. லவ் லெட்டரா டி? எனக்கும் காட்டு!” எனக் கருவிழி எட்டிப் பார்க்க,
“போடி லூசு!” என, நாணம் சுமந்த முகத்துடன் தோழியைத் தள்ளி விலக்கியவள், கசங்கியிருந்த, அந்தக் காகிதத்தை விரித்துப் பார்த்தாள். இரண்டு மாதங்களின் பின், சென்னையில் பணியாற்றுவதற்கான மாற்றல் கடிதத்தின் நகல் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதிலிருந்த நெடுமாறனின் பெயரைப் பார்த்ததும், அதீத மகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்கியது.
“அத்தை! தேங்க்ஸ் அத்தை! இதெல்லாம் அவன் பண்ணினது எனக்காகவா?”
“உனக்காக தான் மதும்மா! நெடுமாறன் எங்களுக்கு ஒத்தைப் புள்ளை! கைக்குள்ளேயே வச்சு வளர்த்து பழகிட்டோம்.! அவனும் அப்படித்தான். ஆஃபீஸ் தவிர, அவனும் பெருசா வேறெங்கேயும் போனதில்லை! கொஞ்சம் ரோசனையோடத்தேன் அலைஞ்சான். பிறகு உன்னை மனசில் வச்சு முடிவெடுத்துருப்பான் போல!” என பூங்கொடி சொல்ல, இறுக்கமாய் அவரை அணைத்துக் கொண்டாள் மது. கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், பூங்கொடியின் தோளைச் சுட்டது.
“ம்ப்ச்! நல்ல நாளும் பொழுதுமா என்னத்துக்கு அழுது கரையுறே? நல்லா சிரிச்ச முகத்தோட என் மயன் பக்கத்தில், உரிமையோட உட்காரு வா!” கருவிழியோடு சேர்ந்து தன் மருமகளைக் கரம் பிடித்து அழைத்துப் போனார் பூங்கொடி. இத்தனை நேர இறுக்க மனநிலை மாறி, நாணத்தில் சிவந்து மினுமினுத்தது மங்கையவள் வதனம்.
நெடுமாறன் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, அவனின் வலப்பக்கமாய் அமர வைக்கப்பட்டாள் மதுரிமா. அவர்களைச் சுற்றி, சொந்தமும், நட்பும், சுற்றமும் நின்றிருக்க, கடைக்கண்ணால் தன்னவனை நோக்கினாள் அவள்.
“தேங்க்ஸ் டா! லவ் யூ..!” சத்தம் கேட்காத வண்ணம் இதழ்களை மட்டும் அசைத்தாள் அவள்.
“இப்போ ஹேப்பியா மேடம்க்கு? ஒருவாரமாய் என்னைத் திட்டிட்டே இருந்திருப்பியே?” சின்ன புன்னகையுடன் கேட்டான் அவன்.
“நிறைய திட்டினேன்! நான் திட்டாமல் வேற யார் திட்டுவா? முன்னவே சொல்லாமல் கடைசி நேரத்தில் தூது விடறே.? கல்யாணம் முடியட்டும் உன்னை வச்சிக்கிறேன்.!”
“வச்சிக்கோ! வச்சிக்கோ! வாழ்நாள் முழுசும் நான் உனக்கு மட்டும் தானே?” என அவன் கேட்டதும், நாணத்தில் சிவந்த முகத்தை மறைக்க தலைக் கவிழ்ந்தாள் பெண். அவளின் செம்மைக் கொண்ட வதனத்தை இரசனையுடன் பார்த்திருந்தானௌ நெடுமாறன்.
“எப்போ பார்த்தாலும் ஒட்டிக்கிட்டே தான் நிக்கிறது? பேசாமல் ரெண்டு பேரும் ஃபெவிகால் விளம்பரத்தில் நடிக்கப் போகலாம்! லவ்வு பண்ணுறேன்னு இவிங்க அட்டூழியம் தாங்க முடியலை!” புலம்பிக் கொண்டே நின்றிருந்தான் வீரபத்ரன்.
“உனக்கு பொறாமை டா டென் ருப்பீஸ்..! என்னவோ சிங்கிள் தான் கெத்துன்னு ஸ்டேடஸ் போட்டிருந்த? இப்போ ஏன் உனக்கு வயிறு எரியுது? பாரு அழகரு இவனை.. என்னை ஒரண்டை இழுக்கலைன்னா உன் தொம்பிக்கு தூக்கமே வராது!” சலித்துக் கொண்டாள் கருவிழி.
“எங்கே போனாலும் சோடி போட்டுக்கிட்டே திரியறீங்களே கடுப்பா இருக்கு! இந்த மரமண்டைக்கும் நெடுவுக்கும் கல்யாணம் முடியப் போகுது! அடுத்து உங்கக் கல்யாணம். இந்தக் கொடுமையெல்லாம் நினைச்சால் குட்டி ஹார்ட்டு வலிக்குது. அங்கண பாரு, இந்தக் காக்கா விரட்டியும், கயலும் ஒட்டிக்கிட்டு திரியறாங்க! இப்படி ஒரு சின்னப் பையன் முன்னால் சோடி சோடியா சுத்தி, என்னை வெறுப்பேத்துறீங்களே.. ஐ அம் பாவம் மைடப்பி!”
“நீ ஏன் பார்க்கிற? கண்ணை மூடிக்கிட்டு அந்தா அங்கண தெரியற சுவற்றில் போய் முட்டு! எல்லாம் தெளிஞ்சுடும்!”
“இந்த ஃபோன் சார்ஜ் ஏற மாட்டேங்குது டா! ஸ்டேட்டஸ் போட, என்னை அழகா ஒரு ஃபோட்டோ எடுத்து கொடு டா! இந்த ஐ பேடை லாக் எடுத்துக் கொடேன் ப்ளீஸ்..! அப்படின்னு வருவல்ல, உன்னை அப்போ பார்த்துக்கிறேன் மைடப்பி!” என வீரபத்ரன் குரலுயர்த்த,
“அட பக்கிங்களா! கல்யாண வீட்டிலேயும் உங்க இம்சை தாங்க முடியலை! ரெண்டு பேரும் அங்கிட்டு ஓடிப் போங்க!” எரிச்சலுடன் இருவரையும் விரட்டினான் துடிவேல் அழகர்.
“அழகரு.. பசிக்குது அந்த பஞ்சு மிட்டாய் வாங்கி தர்ரியா?”
“கல்யாணம் முடிஞ்சதும் வாங்கித் தர்ரேன்டி வாயை மூடிக்கிட்டு நில்லு!”
“ம்ப்ச்! போ அழகரு! ஆசைப்பட்டதைக் கூட வாங்கிக் கொடுக்க மாட்டேங்குற! டேய் டென்ருப்பீஸ்.. வாடா! நாம பஞ்சு மிட்டாய் வாங்கி திண்போம்!” அழகரின் பக்கத்திலிருந்து நகர முயன்றாள் அவள்.
“தாலி கட்டி முடியும் வரை, இங்கிருந்து நகர்ந்த உன்னைக் கொன்னுடுவேன் டி! ஊரே வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கிது.. பஞ்சு மிட்டாய் தின்னப் போறாளாம்! கிறுக்கச்சி!” அவள் காதுக்குள் முணுமுணுத்தவன்,
“டேய் வீரா! நீயும் பேசாமல் நில்லு! இன்னும் பச்சைப் புள்ளைங்க மாதிரி, விளையாண்டு திரியிறீங்க!” என இருவரையும் தன்னுடன் நிறுத்திக் கொண்டவனின் கண்கள், திருமண நிகழ்வுகளைத் தான் பார்த்திருந்தது. அவனுக்கும் கருவிழிக்கும், திருமணம் நடப்பதாய் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தது அவன் மனம்.
இருவீட்டினரும், பெண்ணையும், மாப்பிள்ளையையும் சூழ்ந்து நிற்க, சக்கர நாற்காலியில், சொக்கேசனும், அவர் பின் அங்கயற்கண்ணியும் நின்றிருந்தனர். அந்தச் சபையிலிருந்த மூத்தவர், இருவீட்டினரின் சம்மததத்தையும் வேண்டி உறுதி செய்தார்.
“சரவணன்-பூங்கொடியின் ஒரே மகனான நெடுமாறனுக்கு, திருமூர்த்தி-மஞ்சுளாவின், ஒரே மகள் மதுரிமாவைக் கொடுக்க மனப்பூர்வமாய் சம்மதந்தானே?”
“சம்மதமுங்க!” இரு குடும்பத்தினரும், ஒருசேர சொல்ல, சொக்கேசன் கரம் தொட்டு, அங்கயற்கண்ணி, ‘ஆத்தா மீனாட்சி, உன்னை சாட்சியாய் நிறுத்தி, தாலியெடுத்துக் கொடுக்கிறேன். என் புள்ளைங்க நிறைவான வாழ்க்கையோடு பெறுவாழ்வு வாழணும் தாயே..!’ என மனதில் வேண்டியபடி, தாலியை எடுத்து பேரனின் கரத்தில் கொடுக்க, தான் நேசித்தப் பெண்ணவளின் சங்குக் கழுத்தில், மஞ்சள் நாண் பூட்டி, நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு தன்னில் சரிபாதியாய் இணைத்துக் கொண்டான் நெடுமாறன்.
அடுத்த ஐந்து நிமிடத்திற்கு, சபையினர் துவிய, பூக்கள் மொத்தமும், ஆசீர்வாதமாய் அவர்களை நனைத்தது.
சொக்கேசனின் குடும்ப வழக்கப் படி, அக்னி வளர்த்து திருமணம் செய்யும் வழக்கம் இல்லை! வழி வழியாய் வருவது தான் வழக்கம். அந்த வழக்கத்தை மாற்ற அவர்கள் முற்படவும் இல்லை.
இப்போதும் கூட, மதுரை சுற்று வட்டாரங்களில், அக்னி வளர்த்து, திருமண சடங்குகளைச் செய்வது மிக மிகக் குறைவு தான். உறவினர்களும், சுற்றமும் சூழ, வயதில் பெரியவர் வாழ்த்தி தாலி எடுத்துக் கொடுக்க, தாலி கட்டி, அட்சதையாய் மலர்களைத் தூவி வாழ்த்தியே திருமணம் நடைபெறும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பெண்ணுக்கு மட்டுமே வழக்கமான வழக்கங்கள், பழக்கவழக்கங்களை அனுசரித்து செல்லும் கட்டாயங்கள் எல்லாம்.
கணவனின் உயர்விற்காக மனைவி துணை நிற்க வேண்டும். அதே மனைவியின் உயர்வு என்று வரும் போது, “குடும்பம் தான் முக்கியம்” என்ற பேச்சு.
மதுவை பிரிந்து இருக்க முடியாது என்ற ஒரு காரணத்தை காதலோடு உறுதியாய் கூறியிருந்தாலும் பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நெடு “வீட்டை விட்டு வர மாட்டேன்”, “மதுரை நாட்டை விட்டு வர மாட்டேன்” என்டு வீர வசனம் பேசிட்டு இருக்கான். 😅
நேரம் எடுத்தாலும் யோசித்து நல்ல முடிவை எடுத்துவிட்டான் நெடு.
அங்க கல்யாண ஆர்பாட்டம் நடக்குது உனக்கு பஞ்சுமிட்டாய் அவசியமா மது?
பாவம் பதிற்றுப்பத்து எல்லோரும் ஜோடியா ஜோடியா சேர்ந்து அவன வெறுப்பேத்துறாங்க.
நெடு மது திருமணம் இனிதே நடந்தேறியது. 😇🍒✨
நன்றி நன்றி டா 💛💙