Loading

அகம்-23

மெல்லிய படபடப்புடன், முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்ப, எதிரில் இருந்தவரைப் பார்த்தனர், சொக்கேசனும், அங்கயற்கண்ணியும். அவர் சொன்ன விஷயத்தின் தாக்கம் இருவரின் முகங்களிலும் பிரதிபலித்தது. அவர் சொன்ன சேதியில் மனம் இருவருக்கும் நடுநடுங்கித் தான் போனது.

 

“என்னய்யா இப்படிச் சொல்றீங்க? இதுக்குத்தான் மதுரையிலிருந்து இம்புட்டு தூரம் வந்தோமா? அங்கண எங்களுக்குத் தெரிஞ்ச ஆளுகளே இருக்காகதேன். நீங்க நல்லா பார்த்துச் சொல்லுவீகன்னு இங்கண வந்தால், சட்டுன்னு இப்படி சொல்றீகளே? சும்மா மேலோட்டமா பார்க்காமல் நல்லா பாருங்கய்யா!” என்ற அங்கயற்கண்ணியின் குரலில் ஏகத்திற்கும் பதற்றம் நிரம்பி வழிந்தது.

“இங்க பாருங்கம்மா! எனக்கு பொய் சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்லைங்க! சொக்கேசன் ஐயாவை எனக்கு வருஷக்கணக்கா தெரியும்ங்க! ஐயாகிட்டேயே கேளுங்க! ஜாதகத்தில் என்ன இருக்கோ அதைத்தான் சொல்லுவேன். மத்தவங்க மாதிரி காசுக்கு ஆருடம் பார்க்கிறவன் நான் இல்லை! இருக்கிறதை சொல்றேன். அப்பறம் உங்க விருப்பம்.!”

“புள்ளைங்க ஆசைப்பட்டுருச்சே.. என்ன பண்ணட்டும்? ஒண்ணுக்கொண்ணு உசிரா இருக்குதுங்க! பிள்ளைகளை பிரிச்சு வச்சு அதுங்க கண்ணீர் வடிக்கிறதைப் பார்க்கிற திராணி இல்லையே சாமி!” சொக்கேசனின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

“ஐயா! நீங்க சொல்றது எனக்குப் புரியுதுங்க! பிள்ளைங்க ஆசைக்காக சேர்த்து வச்சால் விதி அவங்களைப் பிரிச்சிடுமே? மரணம் சம்பவிக்கும்ன்னு இருக்கே? உங்க பேரன் பேத்தி உசிரை விட ஆசை தான் பெருசுங்களா?” நெற்றி தீட்டிய வீபூதியும், காவி வேண்டியும் அணிந்து ஜவ்வாது மணம் சுற்றிலும் நிரம்பியிருக்க, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சாமி படங்களின் முன் அமர்ந்திருந்த ஜோதிடர் கேட்க, அவர் முன் அமர்ந்திருந்த சொக்கேசனுக்கும், அங்கயற்கண்ணிக்கும் உயிர் நடுங்கியது.

“இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லைங்களா சாமி? எங்கப் பிள்ளைங்க நல்லா வாழறதுக்கு விதியே இல்லையா?” குரல் கமறக் கேட்டார் அங்கயற்கண்ணி.

“அம்மா! நாம செஞ்சது பாவமோ, புண்ணியமோ நாம தான் சுமக்கணும். இப்போவெல்லாம் பண்ணின பாவத்திற்கான பலனை அந்தந்த ஜென்மத்திலேயே அனுபவிச்சுடுறோம். பரிகாரம் பண்ணுறதால் தள்ளி போடலாமே ஒழிய தடுத்து நிறுத்த முடியாதும்மா! இப்போவும் சொல்றேன், இந்தப் பையனோட ஜாதகத்திற்கு குருபலன் அமோகமா இருக்கு. தாராளமா கல்யாணம் பண்ணலாம். ஆனால், உங்க பேத்தியை இந்தப் பையன் பேரு.. ஹான், துடிவேல் அழகரோட இணை சேர்த்தீங்கன்னா மரணம் சம்பவிக்கும் அது தான் ஜாதகம் சொல்லுது. பேசாமல் வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க! பையன் அமோகமா இருப்பான்.!” என ஜோதிடர் சொன்னதும், சொக்கேசனின் புருவம் இடுங்கி யோசனைக்குப் போனது.

“அப்போ விழிக்கு யாரைக் கல்யாணம் பண்ணினாலும்..?” இடையில் நிறுத்திவிட்டு, எதிரில் அமர்ந்திருந்த ஜோதிடரின் முகம் பார்த்தார் சொக்கேசன்.

“இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாமல் இருக்கிறது தான் இப்போதைக்கு நல்லது.!” என அவர் சொன்னதும், சொக்கேசனின் முகம் வேதனையில் கசங்கியது.

“ஏன் சாமி, இப்படியெல்லாம் நடக்குது? நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்? எங்களுக்குன்னு பொறந்த ஒத்தைப் பொண்ணு தங்க மீனாட்சி. அவ வாழ்க்கை தான் பாதியிலேயே நின்னுப் போச்சு. எம் மக வயிற்றுப் பேத்தி, இவளுக்கும் இதே நிலைமை தானா? எம் மகனுங்க வழி பெண் வாரிசு தான் இல்லைன்னு ஆகிடுச்சு. மகள் வழி வாரிசும், குலம் தழைக்காமல் தனிமரமா நிக்கப் போவுதுன்னா வேதனையா இருக்கு சாமி!” கண்ணீர் ஊற்றெடுத்தது அங்கயற்கண்ணியின் விழிகளில்.

 

“அம்மா! ஐயோவோட வழியிலோ, இல்லை அவுங்க மூத்தார் வழியிலோ ஒரு பொண்ணோட சாபம் உங்கக் குடும்பத்திற்கு இருக்கு. அது உங்க வீட்டுப் பெண் வாரிசுகளை வாழ விடாது. வயசுக்கு வராத, உங்கக் குடும்பம் சேராத பெண் பிள்ளைகளுக்கு, துணி மணி, எடுத்துக் கொடுங்க! அவங்க படிப்புக்கு உதவி செய்ங்க! முடிஞ்சா கல்யாணம் பண்ணுறதுக்குக் கூட உதவி பண்ணலாம். ஆனால் இதெல்லாம் உங்க மன நிம்மதிக்குத்தான். நாம செஞ்ச புண்ணியத்தை மட்டுமில்ல, நாம செஞ்ச துரோகத்தினால் ஏற்படும் சாபத்தையும் கூட நம்ம தலைமுறைதான் நம்ம கண்பார்க்க சுமக்கப் போறாங்க! ஒருத்தர் வயிரெரிஞ்சு சொல்ற ஒத்தை சொல்லு கூட சாபம் தான். தப்புக்கோ தவறுக்கோ மன்னிப்பு கேட்டுடுடலாம்மா! துரோகத்திற்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிப்பு கிடைக்காது!” கடைசி வரிகளை சொக்கேசனை ஆழ்ந்து பார்த்தபடி சொன்னார் ஜோதிடர்.

“எவன் என்ன பாவத்தைப் பண்ணி தொலைச்சானோ? என் புள்ளைகளும், பேரன் பேத்தியும் தான் கஷ்டப்படப் போறாங்க! கண்ணு நெறைய நேசத்தோட திரியற புள்ளைகளை பிரிச்சு வைக்கணும்ன்னு நினைச்சாலே நெஞ்சு வலிக்குது. ஆத்தா மீனாட்சி, எங்களுக்கு ஏன் இம்புட்டு வேதனை.? மனசறிஞ்சு நான் எந்தப் பாவமும் பண்ணலையே? தெரிஞ்சும், தெரியாமல் எதாவது செஞ்சிருந்தாலும், தண்டனையை எனக்குக் கொடு தாயே..! என் வம்சத்தை தண்டிச்சுப்புடாத!” உயிர் உருக மீனாட்சியம்மையின் பாதத்தில் வேண்டுத்தல் வைத்தார் அங்கயற்கண்ணி.

“என்ன அசையாமல் கல்லு போல உட்கார்ந்திருக்கீங்க.? தட்சணையைக் கொடுத்துட்டு வாங்க கிளம்புவோம்.! இப்படியே இங்கணையே உட்கார்ந்திருக்கிறாதா உத்தேசமா?” எனக் கணவனை உலுக்கினார் அங்கயற்கண்ணி.

மனைவியின் உலுக்கலில் நடப்பிற்கு வந்து, இயந்திரகதியில் தட்சணையைக் கொடுத்துவிட்டு, வெளியே வந்தவர் அமைதியாய் மகிழுந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டார். வத்தலகுண்டிலிருந்து, மதுரை செல்லும் வரையிலுமே, அவரின் மனதிற்குள் சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.

“ஏன் ஓருமாதிரி இருக்கீக? எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. ஊரு உலகத்தில் இல்லாத ஜோதிடர்ன்னு வத்தலகுண்டு வரை கூட்டிட்டு வந்துட்டீங்க, மரணம், அது இதுன்னு பயமுறுத்துறார். பேசாமல் வேற யாருக்கிட்டேயாவது பார்ப்போம். நல்லதா நாலு வார்த்தை சொல்வாருன்னு பார்த்தால், என்னென்னவோ சொல்லி பயமுறுத்துறார். பரிகாரமும் சொல்ல மாட்டேங்குறார்.!” புலம்பிக்கொண்டே அமர்ந்திருந்தார் அங்கயற்கண்ணி.

“இந்தாருடி! நம்ம நெடுமாறனுக்கு எல்லாம் நல்லா தானே சொன்னார். சும்மா புலம்பிக்கிட்டே வராத. அமைதியாய் இரு!”

“ம்க்கும்! காசுக்காக சொல்லியிருப்பார்.!” நொடித்துக் கொண்டார் அங்கயற்கண்ணி.

“ஆமா! நீ கொடுக்கிற பதினோரு ரூபாய் தட்சணையை வச்சு தான் கோடீஸ்வரர் ஆகப் போறாராக்கும்? என்ன நடக்கட்டுமோ நடக்கட்டும். முதலில் அழகர்கிட்டே பேசுவோம். என் பேச்சை அவன் தட்ட மாட்டான். பேசாமல் வேற பொண்ணு பார்ப்போம். வேதனை தான்.. வேற வழி இருக்கான்னு தெரியலை!” என அவர் சொன்னதும், தலையசைத்து ஆமோதித்தார் அங்கயற்கண்ணி.

********

“வாங்க! வாங்க! உட்காருங்க! வராதவங்க வந்துருக்கீங்க?”

“மஞ்சு காபி எடுத்துட்டு வா!” வரவேற்பறையில் நின்றபடியே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தார் திருமூர்த்தி.

“என்னடா பொம்பிள்ளைகளா வந்திருக்காங்களேன்னு தப்பா எடுத்துக்கிடாதீக! நம்ம பிள்ளைங்க வாழ்க்கை சம்மந்தப்பட்டது. ஆம்பிள்ளைகளை எதிர்பார்த்துட்டே இருந்தால், எல்லாம் கை மீறிப் போய்டுமோன்னு ஒரு எண்ணம். அதுக்குத்தேன் நாங்களே வந்துட்டோம்!” என்றபடியே பூங்கொடியுடன், இருக்கையில் அமர்ந்தார் அரசி.

“காபி எடுத்துக்கோங்க! சொக்கேசன் ஐயா சொல்லி விட்டிருந்தால், வீட்டுக்கே வந்திருப்போமே?” காபி தம்ளர்களுடன் வெளிப்பட்டார் திருமூர்த்தியின் மனைவி மஞ்சுளா.

“அதுக்கு இல்லைங்க! நாங்களே பெரியவருக்குத் தெரியாமத்தேன் வந்திருக்கோம்!” தயங்கியபடியே எதிரில் நின்றவர்களின் முகம் பார்த்தார் பூங்கொடி.

“என்ன சொல்றீங்க? ஐயாவுக்குத் தெரியாமல் என்னத்துக்கு வரணும்? எதாவது பிரச்சனையா?” திடுக்கிடலுடன் கேட்டார் திருமூர்த்தி.

“நீங்களும் உட்காருங்க! பொறுமையாய் பேசுவோம். பேசி முடிச்சப் பிறகு காபியெல்லாம் குடிப்போம்!” எனச் சொன்ன அரசி,

“பெரியவர் எங்க வீட்டு மூத்தப் பையன் நெடுமாறனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காரு! ஆனால், உங்கப் பொண்ணு மதுவும், எங்கப் பையன் நெடுமாறனும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாக! உங்களுக்குத் தெரியுமான்னு எங்களுக்குத் தெரியலை. புள்ளைங்க ஆசைப்படுது. அதுங்களைச் சேர்த்து வைக்க வேண்டியது பெத்தவங்களா நம்ம கடமை இல்லையா? அதனால் தான் உங்கக் கிட்டே பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்.!” நிறுத்திவிட்டு அமைதியாய் இருந்தார் அரசி.

“எங்கப் பொண்ணைப் பத்தி எங்களுக்குத் தெரியும்ங்க! என் பொண்ணு இப்போதான் படிக்கறா! அவளைப் போய் என்னவெல்லாம் பேசுறீங்க? உங்கப் பையன் வயசென்ன? என் பொண்ணு வயசென்ன? இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்கக் கிளம்புங்க!” கோபமாய் விரட்டினார் திருமூர்த்தி.

“இங்கே பாருங்க, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க! வாழ்க்கை நம்ம பிள்ளைகளோடது. ஒரு வார்த்தை உங்கப் பொண்ணுக்கு ஃபோன் போட்டு கேளுங்களேன். நாம எடுக்கப் போற முடிவால், கஷ்டப்படப் போறது நம்ம பிள்ளைகள் தான். ஒருவேளை மது இல்லைன்னு ஒத்தை வார்த்தை சொல்லட்டும், நாங்க அப்படியே கிளம்பிடுறோம்.!”என அரசி சொல்ல,

“என்னமா நீங்க, எங்கப் பொண்ணு மேலே தான் தப்புங்கிற மாதிரி பேசுறீங்க? எங்கப் பொண்ணு மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதை ஃபோன் போட்டுத்தான் உறுதி படுத்தணும்ங்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. எங்கப் பொண்ணு விரும்பியிருந்தாலும் கூட, உங்கப் பையனுக்குக் கொடுக்கிற ஐடியா எங்களுக்கு இல்லை. எங்கப் பொண்ணுக்கு இப்போதாங்க இருபத்தியோரு வயசு ஆகுது. உங்கப் பையன் வயசு, கிட்டத்தட்ட முப்பது இருக்கும் தான்? இவ்வளவு வயசு வித்தியாசத்தில் நாங்க பொண்ணு கொடுக்க மாட்டோம். நீங்க வேற இடம் பாருங்க!” மஞ்சுளா கண்டிப்பாய் சொல்ல, எழுந்து நின்றுவிட்டனர் பூங்கொடியும் அரசியும்.

“வயசு வித்தியாசமெல்லாம் நாங்க பார்க்கலை! புள்ளைங்க மனசை மட்டும் பார்த்துதேன் நாங்க பேச வந்தோம். இப்போவும் ஒண்ணும் குறைஞ்சு போகலை. உங்கப் பொண்ணு வந்ததும், என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு ஃபோன் போடுங்க! உங்கப் பொண்ணை எங்கப் பையணுக்குக் கொடுக்க விருப்பமும், எங்க மேல நம்பிக்கையும் இருந்தால், நம்ம தரகர் நாராயணன் கிட்டே உன் பொண்ணு ஃபோட்டோவையும் ஜாதகத்தையும் கொடுத்தனுப்புங்க! நம்ம பிள்ளைகளை சேர்த்து வைக்கவே நாரதர் வேலையெல்லாம் பண்ண வேண்டி இருக்கு. என்னவோ நம்ம பையனுக்காக மட்டுமே பேசற மாதிரி குதிக்கிறாங்க! நீங்க வாங்கக்கா நாம போவோம்!” பூங்கொடியுடன் மதுவின் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார் அரசி.

“என்ன அரசி, இப்படி பேசுறாய்ங்க? நம்ம வீட்டு எருமைக்கு அறிவே இல்லை. நாம பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோமா? எல்லாத்திலேயும் அவசரம். நம்மக்கிட்டே எதையாவது சொல்லித் தொலையுறானா? அதுவும் சொல்றதில்லை. நாமளே கண்டுபிடிச்சு அவனுக்காக நாம போய் பேசி அசிங்கப் பட வேண்டியிருக்கு. பெரியவருக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சுச்சு, அம்புட்டுதேன். வீடே போர்க்களமாகிப் போவும். எல்லாம் இந்த நெடுமாறனால் வந்தது.!” புலம்பிக் கொண்டே வந்தார் பூங்கொடி.

“அக்கா! ஒரு வயசு வரும் வரை தான் புள்ளைங்க நம்மகிட்டே எல்லாத்தையும் சொல்லுவாங்க! அதுக்குப் பிறகு அவங்க சொல்லுவாங்கன்னு நாம எதிர்பார்க்கவே கூடாது. எதிர்பார்த்தாலும் ஏமாற்றம்தேன் மிஞ்சும்.  நெடுமாறனாவது அந்தப் புள்ளையை விரும்பறான்னு நமக்கு தெரியவாவது செய்யுது. எம் மயனைப் பார்த்தீங்களா? கருவிழியைக் கூட்டிட்டு கல்யாணம் வரை போய்ட்டானே? பெரியவர், இவன் மேலே எம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தாரு? அம்புட்டையும் ஒரே நாளில் ஒண்ணும் இல்லாமல் பண்ணிட்டானே? இவனையாவது ஒரு வகையில் சேர்த்துக்கலாம் போல, வீராவை எதில் சேர்க்கிறதுன்னு தெரியலை. எந்த நேரமும் கேமிராவும் கையுமா அலையறான். என்ன செய்யறான்னே தெரியலை. பிள்ளைங்க அப்படிதான்க்கா. ஏன்னா வயசு அப்படி.!” எனப் பேசியபடியே, ஆட்டோவைப் பிடித்து வீடு நோக்கி தங்களின், பயணத்தைத் துவக்கினர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
21
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. பாவம் கருவிழியும் அழகரும் இப்போ தான் லவ் மோட் க்கு வந்திருக்காங்க … அதுக்குள்ள பிரிக்க பார்க்குறாங்களே ..

    1. நாயகன், நாயகி ஆள காணோம். காத்து, கடற்கன்னியும் காணோம்.

      நேற்றைய அத்தியாயம் மகிழ்வா போனதால கண்ணு பட்டுடும்னு இன்றைய அத்தியாயத்தில் அழுக வைக்கிறீங்க எழுத்தாளரே!

      செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு ஆனால், துரோகத்திற்கு கிடையவே கிடையாது.

      சொக்கேசன் என்ன மறைக்கிறாரோ!

      அழகருக்கு வேற பொண்ணு பார்க்க கிளம்பிட்டாங்க. அங்க மது அப்பா பொண்ணு கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாரு. 🙆🏼‍♀️

      Mr.திருமூர்த்தி ஏதோ அவங்க பொண்ண குழந்தை பொண்ணு போல பேசறாரு. மது மது குடிச்சது தெரிஞ்சா என்ன சொல்வாரு.

      வீரா தான் நிம்மதியா 📸 கூட சுற்றுப்பயணம் செய்யறான்.

      1. Author

        இன்னும் மது பதில் சொல்லலையே.. சந்தோஷம் சோகம் மாறி மாறி வரும் டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 😍💛💜

    2. Author

      எப்படியாவது சேர்த்து வச்சிடுவோம் டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💛💙