Loading

அகம்-2


“அழகரு! ஏய் அழகரு! எங்கே அந்த அகம் பிடிச்ச சிரிக்கி, இன்னுமா படிக்கிறா? ரூமையும் அடைச்சிக்கிட்டு இன்னுமும் என்னத்தை தான் படிக்கிறாளோ? சூரியன் உச்சிக்கு வந்தாச்சு. மகாராணி இன்னும் வெளியே வரக் காணோம்!” பசுமாட்டிற்கு தண்ணீர் காட்டியபடியே புலம்பலின் நடுவே பேரனின் முகத்தை ஆழம் பார்த்தார் அங்கயற்கண்ணி.

காதோர நரை முடியும், ஒற்றை ரூபாய நாணயம் அளவில் பெரிய குங்குமப் பொட்டும், ஒன்பது கல் மூக்குத்தியும் அப்படியே அந்த மதுரையாளும் மீனாட்சியைப் போலவே அவரைக் காட்டியது.

“அப்பத்தா! ஓயாமல் அவளையே ஏன் வையுறீக? சின்னப் பொண்ணு தானே? விடுங்க சரியாகிடுவா!” கருவிழிக்குப் பரிந்து வந்தான் துடிவேல் அழகர்.

“அவளை நீ தான் மெச்சிக்கணும். இன்னும் சின்னப் புள்ளையா அவ? புருஷன் வீட்டுக்குப் போனால் பத்து மாசத்தில் புள்ளையோட வந்து நிப்பா. இன்னும் சின்ன குழந்தைன்னு செல்லம் கொடுத்து கெடுத்துப்புடாதீக! மகாராணியை மதியச் சாப்பாட்டுக்காச்சும் கீழே இறங்கி வரச் சொல்லு!”

“சரி அப்பத்தா! நான் அவ கிட்டே சொல்லுறேன். தாத்தா எங்கே அப்பத்தா?”

“நீ சொல்றதெல்லாம் இருக்கட்டும், முதலில் செல்லம் கொடுத்து அவளைக் கெடுக்காமல் இரு. தாத்தா படிக்கிற ரூமுல இருப்பாக போய் பாரு! அப்பறம், இராத்திரி நீயும் அவளும் தாமதமா வந்தீகன்னு உங்க தாதத்தாவுக்குத் தெரியும்!” சத்தமே இல்லாமல் கன்னிவெடியைக் காலுக்கு அடியில் கொளுத்தியிருந்தார் அங்கயற்கண்ணி.

“சோலி முடிஞ்சுது! இந்த அடங்காப்பிடாரி செஞ்ச வேலைக்கு நாம வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு!” வாய்க்குள் முனகியபடியே கூடத்தின் வலது பக்க மூலையில் இருந்த சிறிய அறையை நோக்கிப் போனான் துடிவேல் அழகர்.

அங்கே கரத்தினில் கத்தையான புத்தகம் ஒன்றில் மூழ்கிப் போயிருந்தார் சொக்கேசன். அடிக்கடி மூக்குக் கண்ணாடியைக் கரம் சரி செய்தபடியே இருந்தது. ஒடிசலான, அதே நேரம் திடகாத்திரமான மாநிற தேகம் சொக்கேசனுடையது. இளமையில் துடிவேல் அழகரைப் போலத்தான் இருந்திருப்பார் என பார்த்ததும் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு முக அமைப்பில் ஒற்றுமை இருந்தது.

“அழகரு! தப்பு பண்ணினதும் தயக்கம் வந்து ஒட்டிக்கிச்சோ? உன் அயித்த மவளைக் காப்பாத்த என்ன பொய் சொல்லலாம்ன்னு யோசிக்கிறீகளோ?” பார்வை புத்தகத்திலிருந்து திரும்பவில்லை. ஆனால் அழகரின் வரவை உணர்ந்து, அவனின் வழக்கமான கம்பீரமான நடை நொடி நேரம் தடுமாறியதை வைத்தே அவனின் மனநிலையைக் கணித்திருந்தார் சொக்கேசன்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க அய்யா!”

“என்னை அய்யன்னு கூப்பிடது நெசமா இருந்தால் உண்மையைச் சொல்லு அழகரு!”

“அது.. வந்து.. கருவிழி சின்னப் பொண்ணு! தெரியாமல் ஏதோ கூடப் படிக்கிற பிள்ளைகளோட சுத்திப் பார்க்கப் போகணும்ன்னு ஆசைப்பட்டுச்சு, அதனால் தான் நான் கூட்டிப் போனேனுங்க!”

“ஓ! யாருக்கிட்டேயும் சொல்லாமல் பாண்டிசேரி கூட்டிப் போகும் அளவு பெரிய மனுஷன் ஆகிட்டீங்களோ? நாங்களெல்லாம் என்னத்துக்கு இருக்கோம்? ஒத்தை வார்த்தை சொல்லணும்ன்னு உனக்கு தோணவே இல்லையா? உன்னை நம்பி மட்டும் தான் இந்த வீட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கிறேன்னு உனக்கு தெரியும் தானே?”

“அய்யா!”

“இந்த மழுப்பல் சமாளிப்பெல்லாம் வேணாம் அழகரு.! மருதையில் போய் கேட்டுப் பாரு! இந்த சொக்கேசன் யாரு, எம்புட்டு நேர்மையானவன்னு உனக்கு புரியும். நம்ம குடும்பத்துப் பேர் கெட்டுப் போக, நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பத்து நிமிசத்தில் எல்லாரையும் கூடத்தில் கூடச் சொல்லு வாரேன்.!” ஏதோ முடிவெடுத்தவராய் சொல்லிவிட்டு புத்தகத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

********

சொக்கேசன்-அங்கயற்கண்ணி தம்பதிகளுக்கு மூன்று மகவுகள். மூத்தவர் சரவணன், அவர் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஒரேயொரு மகன் நெடுமாறன்.

இளையவர் கதிர்வேலன். அவர் மனைவி அரசி. இவர்களுக்கு இரு மகவுகள் மூத்தவன் துடிவேல் அழகர். இளையவன் வீரபத்ரன்.

கடைக்குட்டியாய் வீட்டின் பெண்ணரசியாய் பிறந்த ஒரே மகள் தான் தங்க மீனாட்சி. விதியின் சதியால் கணவன் எனும் உறவு இல்லாமல் போய்விட, தாய்வீடே தஞ்சமென ஆகிப்போனது மீனாட்சிக்கு. தங்க மீனாட்சியின் ஒற்றை மகள் தான் கருவிழி.

 

மகள் வயிற்றுப் பிள்ளையாய் இருந்தாலும் ஒற்றைப் பெண் என்பதால், கருவிழியின் ஆசைகள் இதுவரை நிராகரிக்கப் பட்டதே இல்லை. சொக்கேசனைத் தவிர அவளிடம் யாரும் கண்டிப்பு காட்டுவதும் இல்லை. தகப்பன் இல்லாத பிள்ளை என்ற சலுகையும் சேர்ந்து கருவிழியின் குறும்புத்தனங்களை அதிகப் படுத்தியிருந்தது என்பதே நிஜம்.

கூடத்தில் அனைவரும் கூடியிருக்க, தொண்டையைச் செருமியபடியே வந்து சேர்ந்தார் சொக்கேசன். அனைவரின் முகத்திலும் பதற்றமும் பயமும் மட்டுமே அப்பியிருந்தது. ஏனெனில் வீட்டில் உள்ள அனைவரையும் கூடச் சொல்கிறார் என்றாலே சொக்கேசன் முக்கியமான முடிவு எடுத்துவிட்டார் என்பது தான் அர்த்தம். அவர் எடுத்த முடிவை பகிரங்கமாய் அறிவிக்கவே இந்த ஏற்பாடு.

“அழகரு! தாத்தா என்ன சொன்னாரு!”

“ஒண்ணும் சொல்லலை டி! என்ன முடிவு பண்ணிருக்காருன்னு எனக்கே தெரியலை!”

“ம்ப்ச்! பொய் சொல்லாதே அழகரு..!”

“உன் மேல் சத்தியமாய் எனக்கு தெரியலை டி!”

“போ! நான் நெடு மாமா கிட்டே கேட்டுக்கிறேன்.!” கிசுகிசுப்பாய் அழகரிடம் பேசியவள், அருகில் நின்றிருந்த நெடுமாறனை நோக்கித் திரும்பினாள்.

“மிஸ்டர்.நெடு! ஹிட்லர் என்ன முடிவு பண்ணிருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?”

“வாயை மூடிட்டு நில்லு விழி! தாத்தா உன்னைத் தான் பார்க்கிறார்!” பயந்தபடியே பதில் சொன்னான் நெடுமாறன்.

“அவர் பார்த்துட்டு போகட்டும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?”

“ஆத்தா, மகமாயி, எனக்கு எதுவும் தெரியாது என்னை விட்டுடு!”

“நீங்க டோட்டலி வேஸ்ட் நெடு!” என அவனிடம் சொன்னவள்,

“டேய் பத்து! உனக்காச்சும் தெரியுமா?” அழகன் தம்பியான வீரபத்ரனிடம் வினவினாள் கருவிழி. அவள் தன்னை அழைத்ததில் கோபமாய் கருவிழியை நோக்கித் திரும்பியவன்,

“ஒண்ணு வீரான்னு கூப்பிடு, இல்லை பத்ரன்னு சொல்லு! பத்துன்னு சொன்னே உன்னைக் கொன்னுடுவேன். வாயை மூடிட்டு நில்லு. இல்லைன்னு வையி, ஹிட்லர் கிட்டே சொல்லி உன்னை நாடு கடத்திடுவேன்.! இந்த வீடு கொஞ்சம் உன் தொல்லையில்லாமல் நிம்மதியாய் இருக்கும். முக்கியமாய் நான் நிம்மதியாய் இருப்பேன். வர வர உன் அலப்பறை தாங்க முடியலை.” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான்.

“அப்படித்தான் சொல்லுவேன் பத்து பத்து பதிற்றுப்பத்து போடா!” வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள் கருவிழி.

“முட்டக்கண்ணி மண்டையிலே கொட்டுறேன் வா!” அவனிடமும் எந்தத் தகவலும் கிடைக்காமல் போக, அவள் பார்வை தன் அத்தைமார்களை நோக்கித் திரும்பியது.

“சின்னபாப்பா! பெரியபாப்பா! உங்களுக்காச்சும் ஏதவாது தெரியுமா?”

“இந்தாருடி கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இருந்தால், தாத்தாவே என்ன சங்கதின்னு சொல்லுவாக! செத்த நேரம் அமைதியாய் தான் இரேன்.!”என மூத்த மருமகளான பூங்கொடி சொல்ல,

“தோலை உரிச்சு தொங்கப் போடாமல் நிக்க வச்சு பேசிட்டு இருக்கோம்ல்ல, அந்தக் கொழுப்பு தான் இவ இம்புட்டு வாய் பேச காரணம். வீட்டில் அம்புட்டு பேரும் சின்னப் புள்ளைன்னு கெடுத்து வச்சிருக்காக!” சலிப்பாய் சொன்னார் இளைய மருமகள் அரசி.

“சின்னத்தை! நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?” சிணுங்கலாய்க் கேட்டாள் கருவிழி.

“ராத்திரி முச்சூடும் பொட்டப் புள்ளை வீடு வந்து சேரலைன்னா வைய மாட்டாங்களா டி? எங்க போனீகளோ தெரியலை, காலையிலேயே எம் மவன் வந்து நீ படிச்சுட்டு இருக்கேன்னு கதை சொல்லி காது குத்துறான். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? பொய்ச் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்டி கூறுகெட்டவளே! நீ படிக்கிற லட்சணம் எங்களுக்குத் தெரியாது!” அவளைப் பற்றி அறிந்தவராய் சொன்னார் அரசி.

“அழகரு!” வாய்க்குள் முணுமுணுத்தவள் அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சுற்றிப் போடப்பட்டிருந்த மெத்திருக்கைககளில் நடுநாயகமாய் சொக்கேசன் அமர்ந்திருக்க, பெரியவர்கள் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்திருக்க, சின்னவர்கள் பெரியவர்களின் பின்னால் நின்றிருந்தனர்.

“எல்லாரும் வந்துட்டீகளா? நம்ம குடும்பத்தில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கேன். இப்போ இந்த முடிவு எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்!” பேச்சை நிறுத்தியவரின் பார்வை கருவிழியிடம் தீர்க்கமாய் பதிந்தது.

“அவ சின்னப் புள்ளை! எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவு செய்ங்க!” அங்கயற்கண்ணி சொல்ல,

“எப்போ என்ன முடிவு எடுக்கணும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்!” எனச் சொன்னவர் மனைவியை தன் ஒற்றை பார்வையால் அடக்கினார். கணவரின் பார்வை புரிந்து, அமைதியாக நின்றார் அங்கயற்கண்ணி. சொக்கேசனின் முடிவை மாற்ற முடியாதென்பது அவருக்கு தீர்க்கமாய் தெரிந்திருந்தது.

“தங்க மீனாட்சி! இது உன் மவ வாழ்க்கை! பெத்தத் தாயாய் உன் மவ வாழ்க்கையில் என்ன நடக்கணும்ன்னு முடிவு எடுக்கும் அதிகாரம் உனக்கு இருக்கு. நான் ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கேன். அதுக்கு முன்னே உன் மனசில் என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும். உன் மவ வாழ்க்கையைப் பத்தி ஏதாச்சும் யோசிச்சு வச்சிருக்கியா?” அமைதியாய் அமர்ந்திருந்த மீனாட்சியிடம் கேட்டார் சொக்கேசன்.

“அப்பா! நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தேன்! அவளை வளார்த்தது நீங்க தான். அவளுக்கு நீங்க எது செஞ்சாலும் நல்லதாகத்தான் இருக்கும். இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீங்க பா! உங்க பேத்தி.. நீங்க செய்யறதை செய்ங்க!” சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார் தங்க மீனாட்சி.

“சரவணா! கதிரு! நீங்க என்ன சொல்றீக.?”

“நீங்க என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம்ப்பா!” ஒரே மூச்சில் அவர்களும் சொல்ல, இங்கே கருவிழிக்கோ புளியைக் கரைத்தது.

“என்னைப் பற்றி முடிவெடுக்க என் கிட்டே கேட்கமாட்டாரா ஹிட்லர்? முடிவு என்னைப் பத்தினது ஆனால் என்னைக் கேட்க மாட்டாங்களாம்? என்ன நியாயம் இதெல்லாம்? அழகரு நீ தான் என்னன்னு கேளேன்!” அழகரின் காதுக்குள் முனகினாள்.

“உனக்கு என்ன கேட்கிறதாய் இருந்தாலும் என்கிட்டே கேளு விழி!” சொக்கேசனின் கம்பீரக் குரல் அந்தக் கூடத்தை நிறைக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,

“ஒண்ணுமில்லை தாத்தா!” உள்ளே போனக் குரலில் சொன்னவள் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் நின்றுக் கொண்டாள்.

“ஹி..! ஹி..! இதெல்லாம் உனக்கு தேவையா டி கருகரு!” அழகர் சிரித்து வைக்க, அவனை முறைத்தபடியே அவள் நின்றிருக்க,

“நம்ம கருவிழிக்கும், மூத்தவன் சரவணனோட மகன் நெடுமாறனுக்கும் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். நம்ம வீட்டுப் பிள்ளையை ஏன் தெரியாத இடத்துக்கு அனுப்பணும்? நம்ம வீட்டிலேயே இருந்துட்டு போவாட்டும்! எல்லாருக்கும் சந்தோசம் தானே?” என சொக்கேசன் கேட்க, அனைவரின் தலையும் சந்தோஷத்துடன் சம்மதமாய் ஆடியது. கருவிழி ஒருத்தியைத் தவிர..

‘ஆத்தி! ஹிட்லர் பெரிய வெடிகுண்டா கொளுத்திபுட்டாரே! நான் என்ன செய்வேன்?’ என யோசனையுடன் நின்றிருந்தவள்,

“எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம் அழகரு! ஹிட்லர் கிட்டே சொல்லேன்! ப்ளீஸ்..” என அவள் அழகரிடம் சொல்ல,

“என்னடி சொல்றே?” அதிர்வுடன் அவளைப் பார்த்திருந்தான் துடிவேல் அழகர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. மதுரை … கூட்டு குடும்பம்… ஜாலியான குழந்தைகள் … அழகா நகருது கதை … அதெல்லாம் சரி அப்போ அழகன் கருவிழி ஜோடி இல்லையா ?? 😳

    1. Author

      உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 😍 அழகர் தான் ஹீரோ.. ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤

  2. சொக்கேசன் வகையாக மாட்டிவிட்டாரே நெடுவை கரு கருவிடம். 😅😅
    விழியின் பேச்சு வியக்க வைக்கிறது. சின்னப்பாப்பா, பெரியபாப்பா, ஹிட்லர், பத்து, நெடு இன்னும் என்னென்ன பெயர் எல்லாம் வருமோ?! 🤣🤣
    நகைச்சுவையுடன் கூடிய குடும்ப கதை அருமையாக உள்ளது.
    பத்து பத்து பதிற்றுப்பத்து 🤣🤣
    எழுத்தாளரே நகைச்சுவை உணர்வு அபாரம். சிரித்து மாளவில்லை.

    1. Author

      இன்னும் நிறைய பேர் பின்னாடி வரும் டியர் மா. நீங்க சிரிச்சீங்களே அதுவே போதும். தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤