Loading

19

 

தன்முன்னிருத்த கோப்புகளை குழப்பமும் அதிர்வுமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான், கருப்பசாமி.

 

“நீ கண்டிப்பா பிரதாப்பைக் கஸ்டடியில் எடுக்கணும் ராஜ்.. நமக்குக் கிடைத்தப் பிணங்களில், மூன்று ஆண்களைத் தவிர, மீதி ஏழு பேரும் அந்த பிரதாப்புக்கு சம்மந்தப்பட்டவர்களாக இருக்காங்க” என்று கருப்பசாமி கூற,

 

அதையேதான் ராஜும் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“இந்த இரண்டு பேரும், அவன் வீட்டுத் தோட்டக்காரங்க. இந்தப் பெண், அவங்க வீட்டு சமையல்காரரோட பொண்ணு. இந்தப் பொண்ணுங்க இரண்டுப் பேரும், அவனோட டைரக்ட் காண்டாக்ட் இல்ல. ஆனா அவன் வைஃபுக்கு டிசைனிங் பண்ணிக் குடுக்க அடிக்கடி வந்து போறவங்க. இந்த ஆள் அவனோட பேக்டரில வர்க் பண்ணினவன், இவன், அவனோட ஃபேக்டரில க்ளீனரா இருந்தவன்.. இந்த ரெண்டு பேருக்கூடவும் என்ன சம்மந்தம்னு தெரியல.. சம்மந்தம் இல்லாமலும் இருக்கலாம்” என்று துரிதமாய்த் தான் தேடிய தகவல்களை கருப்பசாமி கூற,

 

ராஜுக்கு ஏனோ அது ஒருவித சந்தேகத்தையே தோற்றுவித்தது.

 

அனைத்தையும் பார்வையிட்ட ராஜசிம்மனின் மனமெல்லாம், ‘டீ.என்.ஏ’ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளிலேயே நிலைத்திருந்தது. அன்று மாலை அவை கிடைப்பதாக தகவல் வந்திருக்க, அதை பற்றிய யோசனையிலேயே இருந்தான்.

 

“என்னடா? என்ன யோசனைல இருக்க நீ?” என்று கருப்பசாமி கேட்க,

 

“நத்திங்டா..” என்று சுயம் அடைந்தவன், “இவன் என்ன ஃபேக்டரி வச்சிருக்கான்?” என்று கேட்டான்.

 

“மெட்டல் அண்ட் அலாய் இன்டஸ்ட்ரீஸ்டா. ஸ்டீல் மாதிரி பொருட்கள் உருவாக்கி எக்ஸ்போர்ட் பண்றான்” என்று கூறிய கருப்பசாமி, “இவனோட பேக்ரௌன்ட்லாம் விசாரிச்சுருக்கேன் முன்னமே. ஆள் சரி கிடையாது. ரெண்டு முறை லஞ்சம் வழக்குல மாட்டி வெளிய வந்திருக்கான். இவன்மேல எப்பவுமே எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டு” என்று கூற,

 

“ஹ்ம்..” என்றபடி பிரதாப்பின் புகைப்படத்தை ராஜசிம்மன் பார்த்திருந்தான்.

 

அங்கு, அந்த மாளிகையின் தோட்டத்தில் சோர்வாய் சுபிக்ஷாவும், குழப்பமாக பிரம்மவதனியும் அமர்ந்திருந்தனர். இருவரது மனதிலும் அவர்களது வருங்கால மணவாளனனின் எண்ணம்தான் ஊர்கோலம் சென்றுகொண்டிருந்தது.

 

‘இவரென்ன இவ்ளோ கன்பியூஸ் பண்றார் என்னை. அன்னிக்கு சொன்னதுக்குப் பிறகு அதைப் பற்றி என்கிட்ட ஏன் எதுவுமே பேசலை? இதைப் பத்தி யோசிச்சாலே எனக்கு ஏன் இவ்ளோ ப்ரஷராகுது?’ என்று சுபிக்ஷா யோசித்துக் கொண்டிருக்க,

 

‘இந்த சிடுமூஞ்சிக்கு உணர்வுகள்தான் இல்லைனு பார்த்தா அறிவும் கிடையாது போல.. ச்சை உயிர வாங்குறான். முடியாதுனு சொன்னாலும் விடமாட்றான். சிவகாமிக்குத் தெரிஞ்சா கொன்னே போட்றுமே’ என்று பிரம்மவதனி நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

உள்ளே பெரியவர்கள் இருவரின் முன்பும், ப்ரீத்தி மற்றும் சுடரொளிவானன் பவ்யமாய் நின்றிருந்தனர்.

 

“நானே உங்ககிட்டலாம் வந்துச் சொல்லிப் பேசலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துபோச்சு” என்று சுடர் கூற,

 

ப்ரீத்தியின் கைகள் பயத்தில் வெடவெடத்தது.

 

“எனக்குப் ப்ரீத்தினா ரொம்ப இஷ்டம். அவளை மனமார விரும்புறேன். என்னைப் பத்தியும், ப்ரீத்தி பத்தியும் உங்களுக்கே தெரியும்.. எங்கக் காதலை உங்ககிட்ட வெளிப்படுத்துற சூழல் இது இல்லை.. ஆனா தெரியவந்த பிறகும் சொல்லாமலிருக்கிறது மரியாதையா இருக்காது” என்ற சுடர், நடுநடுங்கும் அவள் கரத்துடன், இறுக்கமாய்த் தன் கரம் கோர்த்து, “அவளை நான் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன் அத்தை” என்க,

 

பிரபா அவனையும் தன் மகளையும் பார்த்தார்.

 

பிரபாவிடம் திரும்பிய ராமராஜன், “எம்புள்ள சுடருக்கு நான் இருக்கேன் பிரபா. நீயும் மச்சானும் யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க” என்று சுடருக்காகப் பேச,

 

மனம் நெகிழ்ந்துபோய் அவரைப் பார்த்தான்.

 

“நா.. நான் அவர்கிட்டப் பேசிட்டு சொல்றேன் அண்ணா” என்று பிரபா எழுந்து செல்ல,

 

ப்ரீத்தி பயத்தில் தன் மொத்த சக்தியும் வடிந்தவளாய் சோர்ந்து போனாள்.

 

அவளைத் தன் அருகே அழைத்த ராமராஜன், “எதுவும் நினைக்காதடா ப்ரீத்தி. இப்ப இருக்க சூழல் வேற. அதுதான் பிரபாவோட தயக்கத்துக்குக் காரணம். எல்லாம் நல்லபடியா முடியும். பயப்படாம நம்பிக்கையோட இருங்க” என்று கூற,

 

கண்ணீரோடு அவரை அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் மாமா” என்றாள்.

 

இதனைப் புன்னகையுடன் பார்த்த சுடர், வெளியே தோட்டத்திற்கு வர, பிரம்மாவும் சுபியும் விதியே என்று அமர்ந்திருந்தனர்.

 

அவர்கள் அருகே வந்தமர்ந்தவன், “என்னாச்சு ரெண்டு பேருக்கும்? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என்று கேட்க,

 

“எனக்குக் கருப்பசாமி சாரோட நம்பர் வேணும்” என்று சுபிக்ஷா கூறினாள்.

 

ஏனென்றெல்லாம் சுடரொளிவானன் கேட்கவில்லை. “அனுப்புறேன்டா” என்று அவன் கூற,

 

“அவர்கூட தனியா பேசனும்” என்றாள்.

 

அப்போதுதான் பிரம்மவதனி சுயம் மீண்டு அவர்களை நோக்கி,

 

ப்ரீத்தியும் உள்ளிருந்து வந்தாள்.

 

“விஷ்ணு விஷயமாவா சுபிமா?” என்று சுடர் கேட்க,

 

வின்னை வெறித்தபடி இடவலமாய்த் தலையசைத்தாள்.

 

அவளது அமைதியான முகத்திற்குப் பின்னிருக்கும் அழுத்தங்களை, அவள் கண்கள் காட்சிப்படுத்த, அதில் தெரிந்த அலைப்புறுதல், சுடரை தன்னைப்போல் அவளை அரவணைத்துக்கொள்ள வைத்தது.

 

அண்ணன் தோளில் தலைசாய்த்தவள், “ஹி..ஹி சேஸ்.. ஹி லவ்ஸ் மீ” என்று தட்டுத்தடுமாறி கூற,

 

அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

“எப்போ?” என்று பிரம்மா கேட்க,

 

“நாம முதன் முதலா இங்க வந்தோமே? அப்போவே.. ஆனா அப்பத் தெரியலையாம். செகென்ட் டைம் விஷ்ணுவைக் காப்பாத்திக் கொண்டுவந்து விட்டுட்டுப் போனப்ப சொல்லிட்டுப் போனார்” என்றவள், சுடரை நிமிர்ந்து பார்த்து, “சொல்லிட்டுப் போயிட்டார் சுடரண்ணா.. என்கிட்ட எதுமே இப்பவர கேட்கவே இல்லை” என்றாள்.

 

சுடர் அவளையே பார்த்திருக்க, தோழிகள் அவளது அலைப்புறும் விழி கண்டு, அவளை வறுத்தமாய்ப் பார்த்தனர்.

 

“எ..எனக்கு.. எனக்கு ஒருமாதிரி இருக்கு சுடரண்ணா.. நீ சொல்லு.. இப்படி எதுமே கேட்காம சொல்ல வேண்டியத சொல்லிட்டுப்போனா.. உனக்கு எப்படி இருக்கும்? எ.. என்னால அவர ஃபேஸ் பண்ண முடியலை. சத்தியமா லவ் இருக்கானு தெரியல. அது பத்தி யோசிக்கக்கூட வரல. எனக்கு குழப்பமா இருக்குது சுடரண்ணா. இ..இந்த நேரம்.. இந்த நேரத்துல இந்த யோசனை அவசியமானு ஒரு பக்க மனசு அடிச்சுக்குது. பதில் சொல்லாமலே விட்டு, கடைசில வேணாம்னு முடிவு எடுத்தா, அவருக்குத் தப்பான ஹோப்பைக் கொடுத்துடுமோனும் பயமாருக்கு. என்னால நிலையா யோசிக்கவே முடியலை சுடரண்ணா.. தலையெல்லாம் வெடிக்குது” என்றவள், அழுதபடி அவன் மார்பில் முகம் புதைக்க, தோழிகள் வருத்தமாய், அவள் தோளில் தட்டிக் கொடுத்தனர்.

 

“என்ன சுடரண்ணா இது.. கடுப்பா இருக்கு.. இப்படியா இருக்கும்? எனக்கு தலை வெடிக்குது” என்று அழுதவள், அவனை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு என் நிலைமை புரியுதா சுடரண்ணா?” என்க,

 

சோகமான விழிகளை மூடித் திறந்து, ஆமென்று தலையசைத்தான்.

 

“அவர்கிட்ட நேரடியா பேசிட்டா கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்னு தோன்றுது சுடரண்ணா.. அதான் நம்பர் கேட்டேன்” என்றவள் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு, “ஓகே ஆயிடுவேன் சுடரண்ணா.. ஒருமாதிரி எல்லாத்தையும் போட்டு ஸ்டிரஸ் பண்ணிக்கிட்டேன்ல? அதான் இப்படி. உன்கிட்ட அழுதுட்டேன்ல? ஐ வில் பி ஆல்ரைட். நீ எதும் யோசிக்காத” என்றபடி எழுந்தவள், தன் தோழிகளையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டுச் சென்றாள்.

 

“அவ போல்ட்னெஸ் யாருக்கும் வராது” என்று சென்றவளை ஆச்சரியமாய்ப் பார்த்தபடி ப்ரீத்தி கூற,

 

“கண்டிப்பா” என்று பிரம்மா கூறினாள்.

 

சுடரொளிவானன் தன் தங்கையையே பார்த்திருக்க, “ஏ சுடரண்ணா.. இவங்க பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும், கட்டினா ரெண்டு பெண் தோழிகளா பாத்துத்தான் கட்டுவோம்னு சபதம் எதும் எடுத்திருப்பாங்களோ?” என்று பிரம்மா கேட்டாள்.

 

சுடரும் ப்ரீத்தியும், அவளைக் குழப்பமாகப் பார்க்க,

 

“அந்த சிடுமூஞ்சி போலீஸ் ப்ரபோஸ் பண்ணாரு” என்று கூறினாள்.

 

இருவரும் அதிர்ந்து போய், “உனக்கா?” என்று கேட்க,

 

“என்ன எனக்கா? நானெல்லாம் தேற மாட்டேனாமா?” என்றவள், “எனக்குத்தான்” என்றாள்.

 

சுடரும் ப்ரீத்தியும் கொள்ளென்று சிரித்தனர். அந்த நேரத்தில், அந்த இதமான சிரிப்பு அவர்களுக்கும் தேவையாகப்பட்டது.

 

“என்ன சொன்ன?” என்று ப்ரீத்தி கேட்க,

 

“ச்ச.. அந்த முசடை நான் கட்டிக்குறதா? வாழ்க்கையெல்லாம் சிரிப்பில்லாத ஒருத்தரோட? ம்ஹும்.. முடியவே முடியாது. நான் நோ தான் சொன்னேன்” என்று கூறினாள்.

 

“பிரம்மா.. அவரை அப்படிச் சொல்லாத. அவரோட பாஸ்ட் என்னவா வேணும்னாலும் இருக்கலாம். நான் அவரோட குணம் சரி தப்புங்குற வாதத்துக்கு வரலை. அவருக்கு நீ எஸ் ஆர் நோ சொல்றதுலயும் தலையிடல. ஆனா சிடுமூஞ்சினு சொல்லாத. கோபமும் ஒரு உணர்வு தான். அவர் நம்ம உணர்வைப் புரிஞ்சுக்காம பேசுறது தப்புனா, அவரோட கோபத்துக்குப் பின்னிருக்கும் காரணம் தெரியாம நீ கிரிட்டிசைஸ் பண்றதும் தப்புத்தானே. எதுவாருந்தாலும் இது உன் லைஃப். நீயே யோசிச்சுக்கோ. ஆனா உனக்காக சிவாக்கா கிட்ட எங்களால தர்ம அடி வாங்க முடியாது. அதையும் பார்த்துக்கோ” என்றுவிட்டு சுடர் ப்ரீத்தியுடன் எழுந்து செல்ல,

 

‘காரணமா?’ என்று யோசித்தாள்.

 

‘காரணம் இருக்குமோ?’ என்று அவள் எண்ணம் பயணிக்க,

 

அங்கு, “நீ குடுத்த சேம்பில்ஸ் எல்லாத்தோட ரிப்போர்டும் அனுப்பிட்டேன்டா. பார்த்துக்கோ” என்று அலைபேசியில் ராஜசிம்மனின் நண்பன் கூறினான்.

 

“தேங்ஸ்டா” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு புலனத்தைத் திறந்தவன், குகையில் எடுத்த நீளமான கருப்பு முடி விஷ்ணுப்ரியாவுடையது என்பதைக் கண்டு, “நினைச்சேன்” என்று கூறிக் கொண்டான். அதற்கடுத்த பக்கத்தைத் திருப்பி, தன் பார்வையை அதில் ஓட்டியவன், கருப்பசாமியின் மரபணு மாதிரிக்கும், அந்த பச்சை முடிக்கு சொந்தமானவனின் மரபணு மாதிரிக்கும் உள்ள தொடர்பைக் கண்டு அதிர்ந்து போனான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment