
17
“ஆமா நீ எங்க போன? உன்னை ஆளையே காணோம் நேத்து நைட்லருந்து?” என்று விஷ்ணுப்ரியா கேட்க,
“சும்மா.. நைட் வாக் போயிருந்தேன்” என்று பச்சையன் கூறினான்.
“இந்த காட்டுல நைட் வாக்கா? பகல்லயே போக முடியலை” என்று விஷ்ணு கூற,
“இந்தக் காட்டுலதான ஓஜா போர்டைத் தூக்கிட்டுப் பேய் இருக்கா பிசாசு இருக்கானு கேட்டு வந்த?” என்று நக்கலாய் பச்சையன் கேட்டான்.
அவனை அதிர்வாய்ப் பார்த்தவள், “அதெல்லாம் உனக்குத் தெரியுமா? அப்ப பார்த்துட்டுத்தான் இருந்தியா?” என்று கேட்க,
“ம்ம்.. நீங்க செய்த சேட்டையையும் பார்த்தேன், யானையைப் பார்த்துத் தெரிச்சு ஓடினதையும் பார்த்தேன், பள்ளத்தாக்குல உருண்டு புதைகுழிக்குள்ள நீ விழுந்ததையும் பார்த்தேன்” என்று கூறினான்.
“ம்ம்.. பார்த்ததோடு இல்லாம பாவப்பட்டப் பெண்ணோட உயிரைக் காப்பாத்துவோம்னும் முன் வந்த இல்ல?” என்று கேட்கும்போதே அவள் உடல், அவன் ஸ்பரிசத்தை எண்ணி சிலிர்த்தடங்க,
அவனும் அன்றைய நினைவில் படபடத்துத் துடித்த இதயத்தை அழுத்திக் கொண்டவனாய், பெருமூச்சு விட்டான்.
“சரி அந்த காதல் கதையைக் கண்டினியூ பண்ணுப்பா. அவங்க நல்லா பேசிக்கிட்டாங்கள்ல? அப்புறம் என்னாச்சு?” என்று விஷ்ணு கேட்க,
அவளை அமைதியாய்ப் பார்த்தான்.
“என்னப்பா? என்னாச்சு?” என்று விஷ்ணு கேட்க,
“ஒன்னுமில்ல” என்று எழுந்தான்.
“என்ன எழுந்துப் போற? கதை சொல்ல மாட்டியா?” என்று விஷ்ணு கேட்க,
“இப்ப வேணாம்.. அப்புறம் சொல்றேன்.. நீ தூங்கு” என்றான்.
“என்னப்பா நீ? எனக்கு தூக்கமும் வரலை” என்று அவள் சலிப்படைந்து, “இங்கருந்து நான் எப்ப வெளியப் போகலாம்? பாரு ஓரளவு நடக்கக்கூட ஆரம்பிச்சுட்டேன்” என்க,
“போகலாம்.. என்ன அவசரம்?” என்றான்.
“என்ன அவசரமா? அதுசரி.. உனக்கு இந்தக் காடு வீடா இருக்கலாம். எனக்கில்லை. எனக்காக அங்க எத்தனை உயிர் தவிச்சுட்டு இருக்குத் தெரியுமா?” என்று சோகமாய் அவள் கூற,
மௌனமாய் அவள் தலைகோதியவன், “போலாம்மா” என்றுவிட்டு வெளியே சென்றான்.
வெளியே சென்றவனையே அவள் பார்த்திருக்க, பாறைக்கு வந்து அமர்ந்தவன் தனது பணப்பையை எடுத்து, அதிலிருப்பவளின் புகைப்படத்தைப் பார்வையிட்டான்.
“சிவப்ரியா..” என்று அவன் இதழ்கள் தன்னைப்போல் முனுமுனுக்க, அவன் கண்கள் கலங்கி, மொட்டு மொட்டாய் கண்ணீர் வழிந்தது. நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தது…
“என்னப்பா பண்றீங்க? நானும் கேட்கக்கூடாதுனுதான் பார்க்குறேன்.. ஆனா சத்தியமா முடியலை.. என்னதான் பிரச்சினை உங்களுக்கு? எதுக்கு என் ரூம்ல கேமரா பிக்ஸ் பண்ணீங்க?” என்று உச்சக்கட்டக் கோபத்துடன் அபூர்வன் கேட்க,
அவனது தந்தை சக்ரவர்த்தி, பயமும் தடுமாற்றமுமாய் அவனைப் பார்த்தார்.
“என்னப்பா? என்னனு சொல்லுங்க. எனக்கு இப்ப இதுத் தெரிஞ்சே ஆகனும்” என்று அவன் கத்த,
“அ..அபூர்வா.. இ.. இல்லடா.. நான்” என்று தடுமாறினார்.
“நானும் பாத்துட்டுத்தான் இருக்கேன்.. நீங்க என் நகம் பச்சையா இருக்குறதைப் பார்த்துப் பதறி வெட்றதும், நான் தூங்கும்போது என்னை ஆராயுறதும்.. என்னப்பா பண்றீங்க?” என்று அபூர்வன் கத்த,
“சும்மா கத்தாதடா.. நான் உன் அப்பா” என்று அவரும் குரல் உயர்த்தினார்.
“அதுக்காகத்தான் இத்தனை நாளும் அமைதியா இருந்தேன். இதுவரை உங்ககிட்ட எதாவது கேட்டிருப்பேனாப்பா? ஒரே ஒருமுறை அம்மா எங்கனு கேட்டதுக்கு நீங்க அழுத அழுகையைப் பார்த்து, அடுத்திருந்து அம்மாவைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட உங்ககிட்டக் கேட்கலை நான். இப்ப இதெல்லாம் உணர்ந்தும், நீங்களா சொல்வீங்கனு அமைதி காத்தா, நீங்க என் ரூம்ல கேமரா வைக்குற கேவலமான வேலையெல்லாம் பார்க்குறீங்க? என்ன நடக்குது? எனக்குத் தெரிஞ்சே ஆகனும்” என்று அவன் கத்த,
பெரியவர் மனமொடிந்துபோனார்.
அவர் கண்களில் கண்ணீர் வழிய, தடுமாற்றமாய் அப்படியே பொத்தென்று இருக்கையில் அமர்ந்தார். அவரது தடுமாற்றத்தில் பதறியவன், “அப்பா..” என்று அருகே வர,
கண்ணீர் பளபளக்க அவனைப் பார்த்தார்.
“ப்பா?” என்று கேள்வியாய் அழைத்த அபூர்வன் கண்களும், தந்தையின் கண்ணீர் கண்டு, மெல்லப் பனியத் துவங்கியது.
“அபூர்வா..” என்று மகன் தலை கோதியவர், “நீ காலேஜ் போயிட்டு வா. இன்னிக்கு ஈவ்னிங் நான் உனக்கு எல்லாம் சொல்றேன்.. எல்லாம்” என்று அழுத்தமாய்க் கூற,
“என்ன ஆச்சுப்பா?” என்று கலக்கமாய்க் கேட்டான்.
“போயிட்டு வா. நிச்சயமா சொல்றேன்” என்று அவர் கூற,
மனமேயின்றி சிறு தலையசைப்பைக் கொடுத்துப் புறப்பட்டான்.
எப்போதும்போல் பேருந்தில் ஏறி அமர்ந்தவனுக்கு, அன்றைய நாள், அவன் வாழ்வின் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை.
அவன் மனக் குமுறல்களை, அவன் இனியவளிடம் கொட்டித்தீர்த்திட வேண்டுமென்று அவன் காத்திருக்க, எப்போதும்போல் அல்லாது, அன்று, தனது இரட்டை சகோதரி விஷ்ணுப்ரியாவுடன் வந்து நின்றாள், அவன் சிவப்ரியா.
அவளைப் பார்த்து, கையசைத்து அழைக்க நிமிர்ந்தவன், அவளைப் போன்றே அச்சு அசலாக இன்னொரு பெண் ஏறுவதைக் கண்டு அதிர்ந்து பார்த்தான். அத்தனை நாட்கள் அவரவர் பெயரைத் தவிர இருவரும் சொந்த விடயம் பற்றி எதுவும் பேசிக் கொண்டதில்லையே? அவளுக்கு ஒரு இரட்டைச் சகோதரி இருப்பது அவனுக்குப் புதுத் தகவல். அது கொடுத்து அதிர்வுதான் அது.
அவள் தங்கையைப் பார்த்ததும், பேசலாமா வேண்டாமா? என்று அவன் தயங்க, அவன் சிவந்த விழி கண்ட சிவப்ரியா, வேகமாய் அவன் அருகே வந்தாள்.
“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று அவள் கேட்க,
விஷ்ணுப்ரியா இருவரையும் புரியாத பார்வை பார்த்தாள்.
“சிவா.. யாருடி அவங்க?” என்று விஷ்ணு அவளிடம் மெல்லமாய்க் கேட்க,
“சொல்றேன்” என்று கூறியவள், “என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
அவள் தங்கையைப் பார்த்துத் தயங்கியவன், “ஈவ்னிங் பேசலாம்டா” என்று முடிப்பதற்குள், பேருந்து அதீத விசையோடு ஒருபக்கமாய்ச் சாய, அவன் மலரானவள் அவன்மீதே பொத்தென்று விழுந்தாள்.
குடிபோதையில் முன் வந்த வாகனம் செய்த சதியால், வண்டியை ஒடித்துத் திருப்ப முயற்சித்த ஓட்டுனர், ஒருவருக்காகப் பார்த்து, தன்னை நம்பி ஏறியவர்கள் உயிரை பாலத்தில் தள்ளியிருந்தார்.
கான்கிரீட் பாலத்தில் திடுமென்று மோதி, பேருந்தின் முன்பக்கம் சில்லு சில்லாய் நொறுங்கிய அதேநேரம், பாலமும் இடிந்துருகிப்போக, கட்டுப்பாடு இழந்த பேருந்து கரண்டியிலிருந்து ஒழுகியோடும் தேனாய் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் சரிந்தது. பேருந்து சரிந்த நேரம் உடையும் நிலையிலிருந்தக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஒருவர் நீருக்குள் சென்று விழ, முன்னிருக்கைகளிலும், கண்ணாடி ஜன்னல்களிலும் மோதிக் கொண்டு, மண்டை உடையப்பெற்று உள்ளே சில உயிர்கள் தவித்தன.
பேருந்து பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்து, பெரும் அசம்பாவிதம் நடந்துவிட, சில உயிர்கள் அந்த நிமிடமே இன்னுயிர் துறந்து வீடுபேறு பெற்றிருந்தது.
அக்கம் பக்கத்தார் பேரிரைச்சலைக் கேட்டு ஓடோடி வர, அவசர ஊர்திக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
ஆற்றிலே நீர் அதிகமில்லாததால் ஊர் மக்களே குதித்து பாதி உயிர்களைக் காத்திருக்க, மீதமுள்ளோரை தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்டனர்.
அவசர அவசரமாய் மருத்துவமனைக்கு அனைத்து உயிர்களும் ஏற்றப்பட்டன. காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்மந்தப்பட்டோரின் சொந்தங்கள் வரவழைக்கப்பட, அபூர்வனின் தந்தை பதறியடித்துக் கொண்டு வந்தார்.
கை கால்களில் பலத்த அடியுடன் உயிர் மீட்கப் பட்டுக்கிடந்த அபூர்வனைப் பார்த்து தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறியழுதார்.
அங்கு அவன் உயிரானவளும், அவளது இரட்டை சகோதரியும் தலையில் பலத்தக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்களது தந்தை ராமராஜன் மருத்துவமனைக்கு வந்து, வற்றாத கங்கையாய்க் கண்ணீர் பொழிந்து கதறினார்.
மனைவியை இழந்த துக்கத்தையே அவரால் இன்னும் தாளமுடியாதிருக்க, அதற்குள் மகள்களும் தன்னைவிட்டுச் செல்லப் பார்க்கின்றனரே என்று கதறித் துடித்தார்.
வேதனை என்றால் அப்படியொரு வேதனை அந்த மருத்துவமனை முழுவதும்.
என்னற்ற உயிர்களுக்கானப் போராட்டம், வேண்டுதல், கண்ணீர், கவலை என்று உணர்ச்சி மிகுதியில் மருத்துவமனையே அல்லோலப்பட்டது.
ஒரு உயிரின் மதிப்பு அவ்விடத்தில் உள்ளோருக்கு பூதாகரமாய் விளங்கிடும் விதமாய் பற்பல தவிப்புகளும் ஓலங்களும் எதிரொலித்தது..
சுடர், சுபி, பிரம்மா, சிவகாமி, ராஜோந்திரன், ப்ரீத்தி, பிரபா மற்றும் சுந்தரும் கூடி, ராமராஜுக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும், அவரால் அந்த தருணத்தைத் திடமாகக் கடக்கவே முடியவில்லை.
மரணத்தில் படுத்துக் கிடந்த உயிர்கள் எல்லாம், உயிராணவர்களுக்கு மரண வலியைக் கொடுத்துக் கொண்டிருக்க, அந்த பெரும்வலிக்கு நிவாரணியாய், உயிரானவர்களின் உயிர்ப்பை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.
இங்கு சற்றே பலத்த அடிகளுடன் உயிர்ப் பிழைத்திருந்த அபூர்வனை கதிரியக்க சிகிச்சைக்காக உள்ளே அனுமதித்திருந்தனர். சிகிச்சை முடித்து மீண்டும் படுக்கைக்கு வரவழைக்கப்பட்ட அபூர்வனுக்குத் துணையாய் அமர்ந்திருந்தார், சக்ரவர்த்தி.
நாட்கள் மூன்று போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் நகர, அபூர்வனை மருத்துவக் குழுவினர் ஒருவழியாகக் காப்பாற்றி இருந்தனர்.
பலத்தக் காயங்களுடன் உயிர்த்தப்பியவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை. தன்னவள் நிலை என்னவானதோ? தன் உயிரானவள் நிலை என்னானதோ? என்று தவித்துக் கொண்டிருந்தவன் மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கம் சென்றான்.
மறுநாள் காலை அங்கு மருத்துவமனையில் பெரும் போராட்டங்களுக்குப் பின், வெளியே வந்த மருத்துவக் குழு, ராமராஜனிடம் “சாரி சார்.. எங்களால உங்கப் பொண்ணக் காப்பாத்த முடியல.. ஷீ இஸ் நோ மோர்” என்று கூறினர்.
அதேநேரம் இன்னொரு அறையிலிருந்து வந்த செவிலியர், “அவங்க கோமாலருந்து முழிச்சுட்டாங்க சார்” என்க,
பரபரப்பாய்ச் சென்று பார்த்துவிட்டு வந்தவர், “உங்க ஒரு பெண்ணைக் காப்பாத்தியாச்சு சார். சிவப்ரியாவை..” என்று இழுத்து இடவலமாய் தலையசைக்க,
இங்கு, “ஆ…” என்று உச்சகட்ட அதிர்ச்சியோடு கத்திக் கொண்டிருந்தான் முற்றுமாகப் பச்சை நிறத்தில் மாறிப்போனத் தன்னைக் கண்ணாடியில் பார்த்து அதிர்வுற்ற, அபூர்வன்..
நினைவுகளின் தாக்கத்தில் தன்னிலை இழந்த அபூர்வன் என்ற பச்சையன், நிஜத்திலும் “ஆ…” என்று வின்னைப் பார்த்துக் கத்த, உள்ளே குகைக்குள் அமர்ந்திருந்த விஷ்ணுப்ரியா பதறி, அரண்டடித்து தட்டுத்தடுமாறி எழுந்தாள்.
அதேநேரம், காட்டிற்குள் ரோந்துப் பணிக்கு வந்திருந்த ராஜசிம்மனும், அந்த ஓசையில் அதிர்ந்தவனாய், ஓசை வந்த திசைநோக்கி தன் வேக நடை பதித்தான்.

