
14
அந்த தள்ளுவண்டிக் கடைக்காரரின் முன், அனைவரும் நின்றிருந்தனர். அவரது மனைவி கூறியதை தான் அவரும் கூறினார்.
நேரே விடுவிடுவென்று, ஜவுளிக்கடைக்கு சென்ற ராஜசிம்மன், தானொரு காவலதிகாரி என்பதைக் கூறி, கடைவாசலில் இருக்கும் கண்காணிப்புக் கருவியின் காணொளிகளைப் பார்வையிடக் கேட்டான்.
காய்கறிக்காரரும், அவர் மனைவியும் கூறிய நாள் மற்றும் நேரத்தை வைத்து காணொளியை எடுத்தவர்கள், அவர்கள் கூறிய அங்க அடையாளங்களில் ஒருவன் அவ்விடம் வந்ததைக் கண்டனர். அவன் காய் வாங்கியது, பணப்பையைத் தவற விட்டது, அப்பெண்மணி எடுத்துத் தந்தது, அவன் புறப்பட்டதென்று அனைத்தும் பதிவாகியிருந்தது.
ஆறடி ஆண் என்பதைத் தவிர எதையும் கண்டுகொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் அதனைப் பார்வையிட்டவன், அவன் திரும்பும் நேரத்தில் மதிய வெய்யில் பட்டு எதிரொலி உருவாகி அவன் பச்சை நிறக் கண்கள் நொடிப்பொழுது பளபளத்து மறைந்ததைப் பார்த்தான்…
‘க்ரீன் ஐஸ்?’ என்று அவன் மனம் யோசிக்க,
அவன் மூளைக்குள், கருப்பு வைத்திருந்த பச்சைநிற முடி நினைவில் வந்து போனது.
“அவங்க யாரையாவது விரும்பியிருக்காங்களா?” என்று ராஜசிம்மன் கேட்க,
“இல்ல சார். அப்படியெல்லாம் அவளுக்கு யாரும் லவ்வர் கிடையாது” என்று சுடர் கூறினான்.
“உங்களுக்குத் தெரியாமல்கூட இருந்திருக்கலாம். எப்போதாவது அவங்க ஆக்டிவிடீஸ்ல ஏதும் சேஞ்சஸ் வந்தபோல ஃபீல் பண்ணிருக்கீங்களா?” என்று கருப்பசாமி கேட்க,
“இல்ல சார்.. அப்படி நாங்க உணர்ந்ததில்லை..” என்று ப்ரீத்தி கூறினாள்.
பிரம்மா மற்றும் சுபியிடம் அவர்கள் பார்வை திரும்பியது.
இருவரும் அதை உணர்ந்து, இல்லையென்று பதில் கொடுக்க,
“அவங்கள யாரும் விரும்பி, இவங்க நோ சொல்லிருக்காங்களா?” என்று ராஜசிம்மன் கேட்டான்.
“இல்ல சார் அப்படியும் ஏதும் நடந்தது இல்ல” என்று அவர்கள் கூற,
“உங்களைத் தவிர அவங்களுக்கு க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் யாரும் இருக்காங்களா? அவங்களைக் காண்டாக்ட் பண்ணி விசாரி கருப்பு.. இதுல ஏதும் லவ் மேட்டர் இருக்கானு பாரு” என்று ராஜசிம்மன் கூறினான்.
“இருந்தா அதைவச்சு எங்க ஃபிரெண்டோட கேஸை முடிக்கப் பார்த்துட மாட்டீங்களே?” என்று பிரம்மா கேட்க,
அவளை ஆழ்ந்து பார்த்தபடி அவள் முன் வந்த ராஜசிம்மன், “ஆயிரத்தில் ஒரு கேஸா இருந்தாலும், அத்தனையையும் தெளிவோட நடத்தி முடிக்கிறதுதான் எங்க வழக்கம்.. வார்த்தைகளைப் பார்த்து பேசுங்க” என்று கூறிவிட்டு சென்றான்.
கருப்பசாமியின் வீட்டை அடைந்த ராஜசிம்மன் வேக வேகமாய் அவனது அலமாரியைத் துழாவி அந்த கோப்பை எடுக்க, உள்ளே வந்த கருப்பசாமி அவனைப் புரியாத பார்வை பார்த்தான்.
“என்னடா பண்ற?” என்று கருப்பசாமி கேட்க,
“அந்த ஹேர் வேணும்” என்று கூறினான்.
“அது எதுக்கு?” என்று கருப்பசாமி கேட்க,
“டீ.என்.ஏ டெஸ்ட்கு” என்றான்.
“அதான் சொன்னேனே.. அது ஒரு ஆணோடதுனு..” என்று கருப்பசாமி கூற,
“சந்தேகப்படும் எல்லாரோடவும் அதை மேட்ச் பண்ணனும் கருப்பு.. அந்த யாரோ இன்டஸ்ட்ரியலிஸ்ட் பிரதாப்னு சொன்னியே? சுமனோட ஓனர்.. அவனோட டீ.என்.ஏ வேணும்.. வேற யார் மேல எல்லாம் உன் சந்தேகம் இருக்கோ, அதையெல்லாம் வச்சு மேட்ச் பண்ணனும்..” என்று கூறினான்.
கருப்பசாமி புரியாத குழப்பத்துடன் நிற்க, “இந்த முடிக்கு சொந்தமான பச்சையன் தான் அந்தப் பொண்ணைக் கடத்தியிருக்கனும்.. ஹீ மைட் பீ தி கல்ப்ரிட்” என்று ராஜசிம்மன் கூறினான்.
அங்கு குகைக்குள் சோர்வாய் அமர்ந்திருந்த விஷ்ணுப்ரியாவுக்கு மருந்துகளோடு வந்தான், பச்சையன்.
அவன் கொடுத்ததை எதுவும் பேசாமல் அவள் வாங்கிப் போட்டுக்கொள்ள, “எப்பப்பாரு உடைஞ்ச ரேடியோ மாதிரி பேசிக்கிட்டே இருப்ப. இப்ப என்ன அமைதியா இருக்க?” என்று கேட்டான்.
“நீ எத்தனை வருஷமா இந்த காட்டுக்குள்ள இருக்க? உனக்கு போரடிச்சதே இல்லையா?” என்று அவள் கேட்க,
அவன் அமைதியாய் அவளைப் பார்த்து நின்றான்.
“எனக்கு இன்னும் ரெண்டு நாள் இருந்தாகூட பைத்தியமே பிடிச்சுடும் போல. ஏன் என்னை வெளிய கொண்டுபோய் விட மாட்ற? எனக்கு இப்படித் தன்னந்தனியா இருக்குறது.. இது சுத்தமா பிடிக்கலை. எது பேசினாலும் நீயும் பதில் சொல்ல மாட்ற. எனக்கு ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு” என்று அவள் அழுத்தத்தோடு கூற,
தன் இடையில் கரம் ஊன்றி, பெருமூச்சு விட்டவன், அவள் அருகே அமர்ந்தான்.
“எனக்கு இப்படி இருக்க பிடிக்கல.. நான்.. நான் இருக்குற இடம் எப்பவுமே சத்தமாதான் இருக்கும்.. எனக்கு அமைதி பிடிக்கலை.. சுத்தமா பிடிக்கலை..” என்று அவள் மிகுந்த வருத்தத்துடன் கூற,
அவளை வேதனையோடு பார்த்தான்.
“ப்ளீஸ்.. என்னைக் கொண்டுபோய் விட்டுடு.. எனக்கு இப்படி இங்க தன்னந்தனியா இருக்குறது பிடிக்கவே இல்லை..” என்று அவள் கெஞ்ச,
“அதான் நான் இருக்கேன்ல?” என்றான்.
“என்ன யூஸ்? யார் நீ முதல்ல? ஆங்? நீ இருக்கன்னா.. எனக்கு புரியல.. நீ என்ன என் ஃபிரெண்டா? லவ்வரா? ஹஸ்பென்டா? அண்ணாவா? தம்பியா? யாரு நீ? இங்க இருக்க கருங்கல்லு போலதான் இருக்க. எது கேட்டாலும் சொல்ல மாட்ட. எப்பவாது பேசுவ. ஆனா மருந்து சாப்பாடுலாம் தர்ற.. எனக்கு வேணாம்.. நான் நல்லா சாப்டு சுகமா படுத்தாகூட எனக்கு வெறுமையா இருக்கு.. உன்கூட இருக்குறது… ப்ச்.. பிடிக்கவே இல்லை” என்று அவள் கூறித் தன் தலையைத் தாங்கிக் கொள்ள, அவன் பச்சைநிற விழிகளில் மெல்லிய கண்ணீர் திரை உருவானது…
கண்களை அழுந்த மூடி, பெருமூச்சுவிட்டு சாய்ந்தவன், “உனக்கு ஒரு கதை சொல்லட்டா?” என்க,
“நான் ஸ்கூல் படிக்குற பாப்பா இல்ல. உன்கிட்ட கதை கேட்டுத் தூங்க” என்று எரிச்சலுடன் கூறினாள்.
“ஃபைன்.. நீதான் பேச ஆள் இல்லைனு சொன்ன.. இப்ப நான் பேசுறேன்னு சொன்னா இப்படிச் சொல்ற” என்று அவன் கூற,
சளிப்புடன், “என்ன கதை?” என்றாள்.
“லவ் ஸ்டோரி..” என்று அவன் கூற,
“உன்னோட லவ் ஸ்டோரியா? நீ லவ் பண்ணியா?” என்று அவள் ஒரு மாதிரி ஆச்சரியமாய்க் கேட்டாள்.
“இப்படியெல்லாம் கேள்வி கேட்டு நிறுத்தினா நான் கிளம்பி போயிடுவேன்.. கதைனு சொல்லிட்டேன்ல? கதை சொன்னா, அதைமட்டும் கேட்டுக்கோ..” என்று அவன் கூற,
“சரி சரி சொல்லு” என்று ஆர்வமாய்க் கதை கேட்கத் தயாரானாள்…
அவன் சிந்தை சில நினைவுகளை அசைபோட, இதழ்களில் அதில் தேவையானவற்றை மட்டும் பிரித்தெடுத்து அவளுக்குக் கூறியது.
(அவன் சிந்தையில் விரிந்த முழுக் கதை இதோ)
சில வருடங்களுக்கு முன்பு…
அந்த அதிகாலை வேளை, அத்தனை அழகாய் விடிந்தது.
“டேட்.. எத்தனை முறை சொல்றது உங்களுக்கு? மார்னிங் காஃபி கண்டிப்பா கிடையாது. செம்பருத்திப்பூ கொதிக்க வச்சு டீ போட்டிருக்கேன். அதைக் குடிங்க” என்றபடி, ஒரு கோப்பையில் செம்பருத்தி நீருடன் வந்தான், அபூர்வன்.
மகனை மென்மையான புன்னகையுடன் பார்த்தவர், “குடு” என்றபடி அதை வாங்கிப் பருக, அவன் தனது வேலைகளைப் பார்க்கலானான்.
தனது வெள்ளைநிற அங்கியும், இதயத்துடிப்பு மாணியும் கையில் எடுத்துக் கொண்டு, புத்தகப்பையை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அமர்ந்திருந்த அவனது தந்தை சக்ரவர்த்தி, அவனது தலைமுடி ஒன்று பளீர் பச்சை நிறத்தில் பளபளப்பதைக் கண்டார்.
அதைப் பார்த்த மாத்திரம், அவர் மனதிற்குள் அழையா விருந்தாளியாய், ஒரு பயமும், அதிகப்படியான வருத்தமும் தோன்றியது.
மகன் சுதாரிக்கும் முன், சட்டென அவர் அதை பிடுங்கி விட, “ஸ்ஸ்.. ஆ.. டேட்?” என்றபடி அபூர்வன் திரும்பினான்…
“சாரி அபூர்வா.. ஏதோ முடியில ஒட்டிருக்க போல இருந்தது.. அதான்..” என்று அவர் கூற,
சிறு தலையசைப்புடன் தனது பிடரியைக் கோதிக் கொண்டான்.
அனைத்தையும் எடுத்து வைத்து, உணவு உண்டபடி தந்தையின் பதட்ட நிலையை வழக்கம் போல் கவனித்துக் கொண்டவன், “வரேன்ப்பா” எனக் கூறி புறப்பட்டான்.
பேருந்தில் ஏறி அமர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி நோக்கி, அவன் பயணமாக, அவன் மனதில் பலவகையானக் குழப்பங்கள்…
தனது பிடரியைக் கோதிக் கொண்டவனுக்கு, சமீபமாக நடந்த ஒன்று நினைவு வந்தது.
அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சக்ரவர்த்தி அவனது நகத்தினை வெட்டி எடுத்துக் கொண்டிருக்க, அதன் ஓசையில் விழித்துக் கொண்டவன், “ப்பா..” என்றபடி எழுந்தான்.
அவன் எழுந்ததும் அவரிடம் பெரும் பதட்டம்..
“அ..அபூர்வா..” என்று முதலில் தடுமாறியவர், “நெகம் நிறையா வளர்ந்துருக்கு.. மெடிக்கல் படிக்குற நீ.. நீயே இப்படி வச்சிருக்கலாமா? பொறுப்பா இருக்க வேணாம்?” என்று கேட்க,
“போன வாரம் தானேப்பா வெட்டினேன்.. அதுக்குள்ளயா வளர்ந்துடுச்சு?” என்று தன் கரத்தைப் பார்த்துக் கொண்டான்.
விரலை ஒட்டி அவனது நகங்களை அவர் வெட்டியிருக்க, “எதுக்குப்பா இவ்ளோ ஒட்ட வெட்டிருக்கீங்க?” என்று கேட்டான்.
“அ..அது.. வெட்டும்போது கவனிக்காம வெட்டிட்டேன்டா.. வளர்ந்துடும்” என்றவராய் எழுந்து சென்றார்.
பதட்டத்தில் எழுந்து செல்லும்போது அவர் தவறவிட்ட ஒரு நகக்கண், அவன் பளீர் நீல நிறக் கட்டிலில் அழகாய் ஜொலித்தது.
பச்சை நிறத்தில் ஏதோ மினுமினுப்பதைப் பார்த்தவன், அதை எடுத்துப் பார்க்க, அது தனது நகம் என்றும், பச்சை நிறத்தில் அவை மினுமினுக்கின்றதென்றும் புரிந்து கொண்டான்.
அன்றிலிருந்து, அவன் உடலில் பல மாற்றங்களைக் காண்கின்றான்..
அவனது நெஞ்சு மற்றும் கைகால்களில், ஓரிரு இடங்களில் அரிதாய் சில முடிகள் பச்சை நிறத்தில் பளபளப்பதைக் கண்டான். தான் தூங்கும்போது, தனது தந்தை தன்னை அதிகம் ஆராய்வதை உணரத் துவங்கினான்.
தன்னில் எழும் மாற்றங்கள் குறித்துத் தன் தந்தையிடம் பதட்டம் வருவதை உணரத் துவங்கினான். இவற்றையெல்லாம் யோசித்து அவன் கவலைக் கொள்ளும் நேரம் அவன் அருகே வந்து நின்றாள், பெண்ணொருத்தி.
அவளது பிரத்யேக மணத்துடன், ரோஜா நிற வாசத்தைத் தாங்கிய வாசனை திரவியத்தின் மணம், அவன் நாசி தீண்டி, இதழ் விரிய, மெல்ல நிமிர்ந்து பார்த்தான்.
அவன் அருகே, கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, நின்றுகொண்டிருந்தாள், பெண்.
மென்மையான புன்னகை அவனுக்குத் தோன்ற, அதை உணர்ந்தவளாய், அவளும் அவன் முகம் பாராது புன்னகைத்துக் கொண்டாள்.
அவள் கையில், எம்பிராயிடரி போடுவதற்கு வேண்டிய சாமான்கள் சில தள்ளாடியது.
“நான் வச்சுக்கட்டுமா?” என்று அவன் கேட்க,
அவனது பச்சையும் நீலமும் கலந்த கலவையான நிறத்தில் மின்னும் விழிகளைப் பார்த்தாள்.
“ம்ம்..” என்ற தலையசைப்போடு அவள் அவற்றைக் கொடுக்க, வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்.
இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர்களுக்குள் வாடிக்கையாக நடப்பது.
அவன் இளநிலை மருத்துவம் நான்காம் ஆண்டு மாணவன். அவள் கணினி அறிவியல் முதலாண்டு மாணவி. தினமும் காலை, எம்பிராய்டரி வகுப்பிற்கு அந்த பேருந்தில் தான் வந்து செல்வாள். ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அவளைப் பார்க்கிறான்.
வயதிற்கே உரிய துறுதுறுப்புடன், அவளும் அவனைப் பார்ப்பாள், ரசிப்பாள். குறிப்பாக அவனது விழிகளை…
ஆனால் இதுவரை இருவரும் பேசிக் கொண்டதில்லை. இப்படி எதுவும் தேவைக்கு அவனே வலிய பேச்சை எடுப்பான். ‘ம்ம்’ என்ற தலையசைப்போடு அவள் முடித்துக் கொள்வாள்.
அவனது அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அருகில்தான் அவளது வகுப்பறையும் உள்ளது. ஆக இருவரும் ஒரே பேருந்து நிலையத்தில்தான் இறங்குவார்கள்.
அன்றும் இருவரும் இறங்கினர்.
“ஏங்க..” என்று அவன் அழைக்க,
தனது உடைமைகளுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“உங்கப் பேரு..” என்று அவன் கேட்க,
அவள் இதழில் மெல்லிய புன்னகை.
“சொல்லுமா..” என்று அவன் மீண்டும் கேட்க,
“முன்னப் பின்னத் தெரியாதவங்ககிட்டல்லாம் பெயர் சொல்ல முடியாது” என்றவள், களுக்கென்ற சிரிப்போடு ஓடியிருந்தாள்.

