
013
ப்ரீத்தி தனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் தயாராகிக் கொண்டிருக்க, அங்கு வந்த அவளது அன்னை பிரபா, “நீ கண்டிப்பா போனுமா ப்ரீத்தி?” என்று கேட்டார்.
“என்னம்மா பேசுறீங்க?” என்று ப்ரீத்தி அதிர்ந்துபோய் தன் அன்னையிடம் கேட்க,
“என்னை வில்லி மாதிரி பார்க்காத ப்ரீத்திமா.. எனக்கு விஷ்ணுவும் பொண்ணு மாதிரிதான்.. ஆனா நீ என் பொண்ணு.. விஷ்ணுவைத் தொலைச்ச துக்கத்தையே என்னால சத்தியமா தாங்க முடியலை. அவளைத் தேடுறேன்னு நீங்க இப்படி ஊர் ஊரா அலையப் புறப்படுறது எனக்கு சத்தியமா மனசுக்கு ஒப்பலை.. உன்னை மட்டுமில்ல, சுபி பிரம்மாவையும் போகாதீங்கனுதான் சொல்றேன். சுடர் ஆம்பளை.. உங்க அளவு பாதுகாப்புக்குப் பிரச்சினை இருக்காதுனாகூட, விஷ்ணுவை யார் எதுக்குக் கடத்தினாங்கனு தெரியாத இடத்தில் அவனுக்குமே பாதுகாப்பில்லைனுதான் தவிக்குறேன்” என்று கூறினார்.
“நாங்க யாரும் தனித்தனியா போகலை. ஒன்னாத்தான் போறோம்.. சுபி அண்ணாவும் வர்றாங்கம்மா.. நம்ம விஷ்ணுவை நாம கண்டுபிடிக்காம யாரும்மா தேடுவா? போலீஸ்ட சொல்லி ஒரு வாரம் மேல ஆகியும் எந்தத் தகவலும் கிடைக்கலை. பிணம் கிடக்குது வந்து பாத்துட்டுப்போனு கூப்பிட்டப்ப மாமா முகத்தைப் பார்த்த தான நீயும்? மனுஷன் அத்தை சாவிலிருந்து இவளுக்காகத்தானேம்மா மீண்டு வந்தாரு? நாங்க எல்லாருமாதான் அவளையும் கூட்டிட்டுப் போனோம். எங்கள்ல ஒருத்திக் காணும்னா, அதுல எங்களுக்கும் பொறுப்பு இருக்குத்தானேம்மா?” என்று கண்ணீரோடு ப்ரீத்தி கேட்க,
“முன்னகூட சுடர் இருந்தான். அப்பவும் விஷ்ணு காணாம போனாதானே? இப்பவும் அவன் இருக்கான்னு எப்படி விட முடியும்? இப்ப உங்கள்ல யாரும் காணாமப் போகமாட்டீங்கனு என்ன நிச்சயம்?” என்று கேட்டார்.
அந்த சாதுவிற்குள் எங்கிருந்துதான் அத்தனைக் கோபம் வந்ததோ? தன்னவனைத் தன் அன்னைத் தவறாகக் கூறுவது பொறுக்காமல், “விஷ்ணு காணாம போனதுக்கும், அவங்களுக்கும் என்னம்மா சம்மந்தம் இருக்கு? இப்படிப் பேசாதீங்கம்மா. என் அம்மா ஒருத்தரை கஷ்டப்படுத்துறதுல எனக்கு ரொம்ப வருத்தமாகுது. விஷ்ணு என் க்ளோஸ் ஃபிரெண்ட்.. சின்ன வயசுலருந்து ஒன்னாருந்த ஒருத்தி.. அவங்க அவளைக் கூடப் பிறக்காத தங்கச்சிபோல பார்க்குறாங்க.. எல்லாருக்குமே வலிதானேம்மா? யார் என்ன செய்ய முடியும்? நானும் விஷ்ணுவும் மட்டும் போய், விஷ்ணுவை யாரோ தூக்கிட்டுப் போயிருந்தா, என்னாலதானனு தான சொல்லிருப்பாங்க? அதை உங்களாலத் தாங்கிக்க முடியுமாம்மா?” என்று கேட்டாள்.
“என்ன ப்ரீத்தி பேசுற நீ?” என்று அவர் அதிர,
“வேணாம்மா. எல்லாருமே வேதனைலதான் இருக்கோம். ஒருத்தர ஒருத்தர் கஷ்டப்படுத்திக்க வேண்டாம். இது நாமெல்லாம் ஒன்னா துணையா இருக்க வேண்டிய நேரம்.. உங்களை எதிர்த்துப் பேசுறேன்னு நினைக்காதீங்கம்மா.. உங்களை ஹர்ட் பண்ணிருந்தா சாரி” என்றபடி, தனது மஃப்ளரை அணிந்துகொண்டு வெளியேறினாள்.
வெளியே சுடர் மற்றும் சுபி நின்றிருக்க, இவள் வரும் நேரம் பிரம்மாவும் வந்து சேர்ந்தாள்.
“உங்களையெல்லாம் வராதீங்கனு சொன்னா ஏன் கேட்க மாட்றீங்க?” என்று சுபியிடம் சுடர் பேசிக் கொண்டிருக்க,
“சுடரண்ணா.. விஷ்ணுமேல உனக்கு மட்டுமில்ல எங்களுக்கும் அக்கறை இருக்கு. இது எங்க இஷ்டம்.. பேசாம வந்து வண்டியை எடு” என்று பிரம்மா கூறினாள்.
நால்வரும், அருகிலிருந்த ஒரு கிராமத்திற்குத்தான் சென்றனர்.
அங்கே சென்றதும், “ரெண்டு ரெண்டா பிரிஞ்சு தேடுவோமா?” என்று ப்ரீத்தி கேட்க,
“ஒன்னும் வேணாம். எல்லாரும் என்கூடவே வாங்க” என்று சுடர் கூறினான்.
“அப்ப நாங்க தடுக்கி விழுந்தாகூட நான் தான் காரணமோனு அழமாட்டீங்கனு சத்தியம் பண்ணிக் குடுங்க வர்றோம்” என்று கோபம் போல் ப்ரீத்தி கூற,
அதில் ஊறியிருந்த அவளது அன்பை உணர்ந்து, அவனது வலி சுமக்கும் மனம் கொஞ்சம் ஆசுவாசம் பெற்றது.
நால்வருமாக, வீடு வீடாய் சென்று விஷ்ணுவின் புகைப்படம் காட்டிக் கேட்டனர்.
“சுடரண்ணா.. ரொம்ப பயப்படாத. ஒரே தெருவில் அட்லீஸ்ட் ரெண்டு ரெண்டு பேரா வேற வேற வீட்லயாது கேட்போம். அப்புறம் எதுக்கு நாலு பேர்?” என்று சுபிக்ஷா கேட்க,
சுடர் முகத்தில் சோகமும் குழப்பமும்.
“சுடரண்ணா.. நீயும் ப்ரீத்தியும் இந்த தெருவுல இந்த வரிசைல உள்ள வீடெல்லாம் கேளுங்க, நாங்க அந்த வரிசைல கேட்குறோம். தெரு எண்டுல ஜாயின் ஆயிப்போம். கைல ஃபோன் இருக்கு. எஸ்.ஓ.எஸ்கூட ஆன்லதான் இருக்கு. ஒரே தெருவுல கூப்பிட்ட குரலுக்கு வந்து நிக்கப் போறோம்” என்று பிரம்மா கூற,
அரை மனதாக, “ஓகே டா. பாத்து. ஜாக்கிரதை.. வீட்டுக்குள்ள வரைலாம் போகாதீங்க. வெளியிலிருந்தே கேட்டுக்கோங்க” என்று சுடரொளிவானன் கூற,
சரியென்ற தலையசைப்போடு, பிரம்மா மற்றும் சுபிக்ஷா, எதிர் வரிசைக்குச் சென்றனர்.
ஒவ்வொரு வீடாக நால்வரும் கேட்டுக்கொண்டே முன்னேறினர். ஒரு வீட்டில் கேட்டுவிட்டு வெளியே வரும்போது, “தேங்க்ஸ்” என்று சுடர் ப்ரீத்தியிடம் கூற,
“ஒட்டுக்கேட்டுட்டீங்கன்னு தெரியும்” என்று ப்ரீத்தி கூறினாள்.
“ஒட்டெல்லாம் கேட்கலை.. உன்னைக் கூப்பிடத்தான் வந்தேன். அப்பக் கேட்டது” என்று அவன் கூற,
“ம்ம்..” என்றாள்.
“எனக்காக நீ பேசும்போது இதமா இருந்துச்சு..” என்று அவன் கூற,
“வேற யார் பேசுவாங்க? நான் தான் பேசனும். எமோஷனலா ஸ்டிரக் ஆயிருக்கீங்கப்பா. இதுல உங்க மேல தப்பில்ல. இந்த கில்டை தயவுசெஞ்சு தூக்கியெறிங்க. நம்ம விஷ்ணு கண்டிப்பா கிடைப்பா” என்று ப்ரீத்தி நம்பிக்கையோடு கூறினாள்.
அவர்கள் பேசிக் கொண்ட இடைவெளியில், நான்கு வீடுகளில் கேட்டு முடித்து, சுபிக்ஷா மற்றும் பிரம்மா முன்னேறியிருந்தனர்.
ஒரு வீட்டில் கேட்டுவிட்டு வெளியே வந்த பிரம்மா, சாலையோரம் அலைபேசியில் பேசியபடி நடந்து வந்துக்கொண்டிருந்த ஒருவன் மீது இடித்துக் கொண்டாள்.
அவள் தடுமாறி தடம்மாற, அவள் விழாமல் பிடித்துக் கொண்டவன், “சாரி” என்று தனது அடர்ந்த குரலில் கூறினான்.
தடுமாற்றத்தில் தன்னிச்சையாய் கண்மூடியிருந்தவள் அவன் குரலில் சட்டெனக் கண்விழித்துப் பார்க்க, அவனது பக்க முகத்திலிருந்த தீக்காயம் தான் அவள் கண்ணில் பட்டது.
பார்த்த மாத்திரமே அது அவனை அடையாளப்படுத்தப் போதுமானதாக இருந்தது அவளுக்கு. சட்டென அவனிடமிருந்து நகர்ந்தவள், தானும் “சாரி சார்.. உங்களை கவனிக்கல” என்க,
“நீங்க???” என்று அவளை அடையாளம் கண்டுகொண்டவனாய் இழுத்தான்.
“பிரம்மா.. விஷ்ணு ஃபிரெண்ட்” என்று அவள் கூற,
“இங்க தனியா என்ன பண்றீங்க?” என்று விசாரணையாய்க் கேட்டான்.
“விஷ்ணுவைத் தேட வந்தோம்” என்று அவள் கூற,
“அதான் கம்ப்ளைன்ட் தந்திருக்கீங்க தானே? இப்படி வந்து நீங்க யாராவது தொலைந்தா என்ன செய்வீங்க?” என்று ஒரு காவலனாய் அவன் கண்டிப்புக் காட்டினான்.
“தனியா போறதுதான் ஃபிரெண்ட்ஸ்கு பழக்கம் போல” என்று, விஷ்ணு காட்டிற்கு ஒருமுறைத் தனியாகப் போனதையும் குறிப்பிட்டு அவன் முனுமுனுக்க,
“பார்த்துப் பேசுங்க சார்.. தப்பு செய்தவங்கள விட்டுட்டு விக்டிம்ஸ பிளேம் பண்ற சீப் மென்டாலிடியை ஒரு போலீஸா நீங்களும் ஆதரிக்காதீங்க” என்றாள்.
“காட்டுக்குள்ள தன்னந்தனியா போறது ஆபத்துனு தெரியும் தானே? இதுல எங்கருந்து உங்க பெர்ஸனல் லிபெர்டி வந்தது? இதுல தேடுதல் வேற.. உங்களுக்கு யாருமா ப்ரொடெக்ஷன் தருவாங்க?” என்று அவன் கேட்கவும்,
“கம்ப்ளைன்ட் குடுத்து ரெண்டு வாரமாகப் போகுது சார்.. எந்த ஒரு தகவலும் வரலை. கம்ப்ளைன்டை கன்ஸிடர் பண்ணாங்களா, இல்ல யானைமேல பழியைப் போடப்போறாங்களானு யோசிச்சிட்டிருக்குறதுக்கு நாங்களும் நாலு இடத்துல தேடுவோம்ல?” என்று அவனைப்போலவே அவளும் சுள்ளென்று பேச,
அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
“நீங்க இதுல என்ன எஃபோர்ட் போடுறீங்கனு எனக்குத் தெரியாது சார்.. உங்களுக்கு இது ஆயிரத்தில் ஒரு வழக்கா இருக்கலாம்.. எங்களுக்கு எங்களோட விஷ்ணு ஒருத்தி தான்.. எங்க மன ஆறுதலுக்காக வேண்டும்னாலும் நாங்க எடுக்குற முயற்சியை சப்போர்ட் பண்ண வேண்டாம். பட் எங்க எமோஷன்ஸ கிரிடிஸைஸ் பண்ணாதீங்க” என்றவளிடம் அப்பட்டமானக் கோபம் இருந்தாலும், கண்களில் வலி தெரிந்தது.
அதைக் கண்ட ராஜசிம்மனின் மனம், பொங்கி வரும் பாலில் நீர் தெளித்ததைப் போல் கட்டுப்படத் துவங்கியது.
கோபத்தின் மிச்சத்தில், வழக்கம் போல் கை விரல்கள் நடுங்க, அதை தனது கால்சட்டைப் பைக்குள் நுழைத்துக் கொண்டவன், “சாரி.. யூ கேரி ஆன்” என்றான்.
அவள் பேச்சின் நியாயம் அவனைத் தளைந்துபோக வைத்தது. அவள் தைரியம், அவனைத் தளைந்துப்போகக் கட்டளையிட்டது…
“தேங்க்ஸ் ஃபார் தி அன்டெர்ஸ்டான்டிங்” என்று அவள் முடிக்கும் முன்,
“பிரம்மா..” என்று பதட்டமாய் அழைத்தபடி சுபிக்ஷா அங்கு வந்தாள்.
அவள் பதட்டத்தில் தானும் பதறிய பிரம்மா, “என்னாச்சு சுபி?” என்க,
“அ.. அந்த வீட்டாளுங்க அவளைப் பார்த்திருக்காங்க” என சுபிக்ஷா கூறினாள்.
அருகிலிருந்த ராஜசிம்மனும், சுபிக்ஷா கூறிய தகவலில் அதிர்ந்துபோய் திரும்பவும், அவள் தகவல் கொடுத்ததன் பெயரில், ப்ரீத்தியும், சுடரொளிவானனும் அங்கே ஓடி வர,
அனைவருமாக அந்த வீட்டிற்குள் சென்றனர்.
காவலர் உடையில் நெடுநெடுவென்று ராஜசிம்மன் வரவும், அந்த வீட்டுப் பெண்மணி, பயந்துபோய் எழுந்தார்.
‘இவர யாரு வர சொன்னது?’ என்று பிரம்மா கோபத்துடன் அவனை முறைக்க,
அவள் கோபப் பார்வை உணர்ந்தும் அதை கண்டுகொள்ளாதவனாய், “எப்ப எங்க பாத்தீங்க?” என்று கேட்டான்.
“ச..சார்..” என்று அவர் அஞ்ச,
“ப்ளீஸ்.. நீங்க சொல்றதுலதான் எங்க ஃபிரெண்டோட உயிரே இருக்கு” என்று ப்ரீத்தி கெஞ்சினாள்.
அவள் அழுகுரலில் மனம் இழகியது போலும்…
“என் வீட்டுக்காரர் தள்ளுவண்டில காய்கறி வியாபாரம் பண்றாருங்க.. முந்தாநேத்து மதியம் அவருக்கு சாப்பாடு கொண்டு போனப்ப, ஒரு தம்பி காய் வாங்க வந்துச்சு. அந்த தம்பியோட பர்ஸுலதான் இந்த புள்ளையோட போட்டோ பாத்தேங்க..” என்று அவர் பயத்தோடு கூற,
“அந்த பையன் எப்படியிருந்தான்?” என்று சுடர் கேட்டான்.
“சிவப்பு சட்டை போட்ருந்தான். முழுக்கை சட்டை.. பேண்டு ஷூனு போட்ருந்தானுங்க. தலையில ஹெல்மட்டுப் போட்டுருந்ததால மூஞ்சி தெரியல. கைலகூட கருப்பா க்ளௌவுஸு போட்ருந்தாருங்க. பைய வாங்குறப்ப பர்ஸ கீழ போட்டுட்டாரு.. அத எடுத்துத் தர்றப்பத்தான் பாத்தேனுங். வேற ஏதும் தெரியாதுங்க” என்று அப்பெண்மணி கூற,
“கடை எங்க இருக்கு? பக்கத்துல எதாவது பெரிய கடை இருக்குமா?” என்று ராஜசிம்மன் கேட்டான்.
“ஒரு ஜவுளி கடை இருக்கும்ங்க..” என்ற பெண்மணி, அவர்கள் தள்ளுவண்டி கடை இருக்கும் பகுதியைக் கூற,
உடனே கருப்பசாமிக்கு அழைப்பு விடுத்தபடி, வீட்டை விட்டு ராஜசிம்மன் வெளியேறினான்.
“கருப்பு.. அந்த பொண்ணுக் காணாமப் போன கேஸ்ல ஒரு ஹின்ட் கிடைச்சுருக்கு. லொகேஷன் சொல்றேன்.. உடனே வா..” என்று ராஜசிம்மன் கூற,
மற்ற நால்வரும் அவனருகே வந்து நின்றனர்.
“தேங்ஸ் ஃபார் தி இன்ஃபோ” என்று கூறிய ராஜசிம்மன், அருகிருந்து கடைவாசலில் நிறுத்திவைத்திருந்த தனது வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல,
“சுடரண்ணா.. வா நம்மலும் போவோம்” என்று சுபிக்ஷா கூறினாள்.
உடனே தலையசைத்த சுடரொளிவானன், அவர்களை அழைத்துக் கொண்டு செல்ல,
அங்கே காட்டிற்குள், அந்தப் பாறை ஒன்றின் மேல் அமர்ந்து, தனது பர்ஸில் வைத்திருக்கும் தன்னவளின் படத்தை மென்மையாக வருடிக் கொண்டிருந்தான், பச்சையன்..
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பச்சையன் யார்? விஷ்ணுவிடம் பேசும் போது ஆங்கில வார்த்தைகளை பேசுகிறான்.. படித்த, நகர்ப்புற வாசிக்கு காட்டில் என்ன வேலை? அவன் ஏன் பச்சையாக இருக்கிறான்? சஸ்பென்ஸ் தாங்கல.