
11
அதிகாலை…
விரகுகளை அடுக்கி, நெருப்பு மூட்டி, குளிரை விரட்டிக் கொண்டிருந்தான், பச்சையன்.
இரவு பயத்திலேயே மீண்டும் மயக்க நிலைக்கு சென்று, உறக்கத்தில் தொடர்ந்திருந்த விஷ்ணுப்ரியா, மீண்டும் விழிப்பிற்கு மெல்ல மெல்ல திரும்ப, பச்சையன் அவள் அருகே சென்றான்.
அவள் உடல் நடுங்கியது.
‘ப்ச்..’ என்ற சளிப்பும் வருத்தமும் அந்த பச்சையனிடம்.
“ய..யாரு? யாரு நீ?” என்று நடுநடுங்க ஈன சுவரத்தில் அவள் குரல் வெளியே வர, அவள் கண்ணோரம் கண்ணீர் கசிந்தது.
தனக்கு என்ன ஆனது? என்று யோசிக்க முயன்றால்.. உடலின் சோர்வு அவள் யோசனைகளை மழுங்கச் செய்தது.
“எதையாவது யோசிக்காதன்னு சொல்றேன்ல?” என்று அவன் அவள் காதோரம் கூற,
வெளியே திடுமென்ற இடி சத்தம் கேட்டது.
அவள் உடல் அதிர்ந்து அடங்க, “ஷ்ஷ்..” என்றான்.
“ப..பயமாருக்கு.. நா.. நான் ஏன் இங்கருக்கேன்? எ..என்ன என்னப் பண்ணப் போற?” என்று கண்ணீராய் அவள் கேட்க,
“உனக்கு அடி பட்டிருக்கு. அதுக்கு மருந்து போட்டு படுக்க வச்சுருக்கேன்” என்று கூறினான்.
“நீ டாக்டரா?” என்று அவள் கேட்க,
“இருக்கலாம்” என்றான்.
“நீ மனுஷனா பேயா?” என்று அவள் கேட்க,
“உனக்கு எப்படி வேணுமோ அப்படி வச்சுக்கோ” என்றான்.
“என்னைக் காப்பாத்தத்தான் பாக்குறியா? என்னை ஏதும் பண்ணிட மாட்ட தான?” என்று அவள் அதீத பயத்தோடு இறைஞ்சும் குரலில் கேட்க,
அவள் காதருகே குனிந்து, “மாட்டேன்..” என்று மெல்லமாய்க் கூறினான்.
அவள் உடலில் உள்ள காயங்களுக்கு அவன் மருந்திட, மெல்ல மெல்ல அன்றைய நினைவுகளைப் புரட்டினாள்…
அன்று, ஜீப்பில் மலையின் அழகை ரசித்தபடி தோழிகளும் சுடரும் சென்று கொண்டிருந்தனர்.
“ஹே சுடரண்ணா.. இங்க வ்யூ சூப்பரா இருக்கு. ஒரு பிக் எடுப்போமா?” என்று பிரம்மா கேட்க,
“எடுக்கலாமே” என்று கூறியவனாய் ஓட்டுனரிடம் கூறி, வண்டியை நிறுத்தச் செய்தான்.
அவரிடமே அலைபேசியைத் தந்து அவன் புகைப்படம் எடுக்கச் சொல்லி, புகைப்படம் எடுத்து முடித்ததும், அனைவரும் படத்தைப் பார்க்க அவரை நோக்கிச் சென்றனர்.
தன்னை யாரோ உற்று நோக்குவதாய் உணர்ந்த விஷ்ணுப்ரியா, அந்த குறுகிய சாலையின் மறுபக்கம் வந்து, காட்டைப் பார்த்தாள்.
“விஷ்ணு” என்று சுடர் அவள் தோள் தொட,
“ஐம் ஃபீலிங் டிஸ்டர்ப்ட் சுடரண்ணா. என்னமோ சரியில்ல” என்று தன் நெஞ்சை நீவியபடி கூறினாள்.
“ஏன்டா? என்னாச்சு?” என்று அவன் கேட்க,
“தெரியல” என்றபடி இரண்டடி நகர்ந்து நின்று அவள் பெருமூச்சுவிட, கண்ணிமைக்கும் நேரத்தில், காட்டிற்குள்ளிருந்து ஒரு மலைவாழ் குடியைச் சேர்ந்தவன், அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு விரைந்து காட்டிற்குள் ஓடினான்.
“ஆ…” என்ற விஷ்ணுவின் கதறலிலும்,
“விஷ்ணூ…” என்ற சுடரின் கத்தலிலும் திரும்பிய மற்றோர், கண்ட காட்சியில் பதறிப்போக,
“ஹே.. லீவ் ஹர்..” என்று கத்தியபடி அவன் பின்னே பாய்ந்தோடினான்.
பெண்கள் மூவரும் “விஷ்ணு..” என்ற கதறலோடு விரைய எத்தனிக்க, அவர்களை அங்கேயே நிறுத்திவிட்டுத் தான் சென்றார், வாகன ஓட்டுனர்.
ஆனால் அந்த மனிதனின் ஓட்டத்திற்கு முன் இவர்கள் இருவராலும் ஒன்னுமே செய்யமுடியவில்லை.
“ஆ..” என்று கத்திய சுடருக்கு, அந்த நொடியே கருப்பனின் உதவித் தேவையாகப்பட, அவனுக்கு அழைக்க விரைந்தோடி வாகனத்திற்குச் சென்றான்.
“ஆ.. என்னைவிடு…” என்று தன்னைத் தூக்கிக் கொண்டு செல்பவனை ஏகத்திற்கும் அடித்துக் காயப்படுத்த விஷ்ணு முயற்சித்தும் அவன் அசரவில்லை..
“என்ன விடு..” என்று கத்தி, அவனை அவள் உலுக்க,
ஒற்றையடிப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும்போது, அவன் கால் இடறியது.
அதில் நிலைதடுமாறி அவன் விழ, அவன் கையிலிருந்த நழுவி, அருகிருந்த பள்ளத்தாக்கில் உருளத் துவங்கினாள்.
முன் அனுபவம் கொடுத்த நினைவுகள் அவளை மூர்ச்சையடையத் தூண்ட, அவள் உடை ஆங்காங்கே கிழிந்து, காயங்களை வழங்கியது.
பெரிய கூர்மையான மரப்பட்டை ஒன்று அவள் கரத்தை மிக ஆழமாய் பதம் பார்க்க, “ஆ…” என்று கத்தினாள்.
அவள் ஓசை அடர்ந்த வனத்தில் குறிப்பிட்டப் பகுதியைக்கூட தாண்டுவதாக இல்லை.
ரத்தம் பெருகியோடி அவளை அரை மயக்கத்திற்குத் தள்ள, பள்ளத்தாக்கில் உருண்டு கொண்டிருந்தவள், உடலை ஒரு கரம் வளைத்துப் பற்றித் தூக்கியது.
ஒற்றைக் கையால், மரத்தின் தடிமனான வேர்களையும், மற்றையக் கரத்தால் அவளையும் பற்றிக் கொண்டு, பள்ளத்தாக்கின் மறுமுனையில் தாவி இறங்கியவன், அவளைப் பொத்தென்று கீழே விட, வலியில் அலறலுடன் கண்திறந்து, அந்த பச்சைநிற விழிகளைப் பார்த்தவள், முற்றுமாய் மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
அவள் கைகால்களில் சிராய்ப்புகளும், கீறல்களுமிருக்க, கணுக்காலில் பெரிய வீக்கம் ஏற்பட்டிருந்தது. அவளைத் தன் குகைக்குக் கூட்டி வந்தவன், சிகிச்சைகள் கொடுத்துப் படுக்க வைத்திருக்க, இதோ மூன்று நாட்களுக்குப் பிறகு, முழு விழிப்பை அடைந்திருந்தாள்.
“எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும். நா.. நான் எப்பருந்து இங்க இருக்கேன்?” என்று அவள் அழும் குரலில் கேட்க,
மெல்ல அவளைப் பற்றித் தூக்கியிருந்தார். அவன் ஸ்பரிசம், அவளுக்குள் வித்தியாசமானதொரு உணர்வைக் கொடுத்தது…
பாறையொன்றில் சாய்த்து அவளை அமர்த்திய பச்சையன், “பசிக்கலையா?” என்க,
“என்னை விட்ரு” என்று அழுதாள்.
சென்று காட்டில் பறித்து வெட்டி வைத்திருக்கும் பழங்களை அவன் எடுத்து வர, “எனக்கு எதுவும் வேணாம்.. என்னை விட்ரு” என்று அழுதாள்.
“அமைதியா சாப்பிடு” என்று அவன் பழத்தை நீட்ட, கண்ணீரோடு குனிந்தவள், மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது அணியும் பச்சைநிற அங்கியைத் தான் அணிந்திருப்பதைக் கண்டாள்.
“நான் எத்தனை நாளா இங்க இருக்கேன்?” என்று அவள் பயம் கலந்த குரலில் கேட்க,
“மூனு” என்று கூறினான்.
மூன்று நாட்கள் எழுந்து நடமாட முடியாத நிலையில், ஒரு ஆணுடன் தனித்துக் காட்டில் இருந்திருப்பது, அவளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயத்தைக் கொடுத்தது. அவனுடைய அணுகுமுறையின் கீழ் இருந்திருப்பதில், தனக்கு ஏதும் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சங்களைக் கொடுக்க, விழி கலங்கி அவனைப் பார்த்தாள்.
“எ..என்னை நீ தான் பாத்துக்கிட்டியா?” என்று அவள் கேட்க,
மெல்ல ஆமென்று தலையசைத்தான், பச்சையன்.
“எ..எனக்கு மருந்து போட்டது நீயா? எ..எனக்கு டிரஸ்..” என்று அவளால் கேள்வியை முழுதாய் முடிக்கக்கூட முடியவில்லை.
“ஹாஸ்பிடல்ல நீ மேல் டாக்டர்ஸ்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்ததே இல்லையா?” என்று அவன் கேட்ட கேள்வி, அவள் கேள்விகளுக்கு பதில்போல் அமைய, “ஆ….” என்று கத்தினாள்.
“ஷ்ஷ்” என்று ஓங்கி ஒலித்தது அவன் ஓசை.
“எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை. என்னை விடு.. நான் போகணும்” என்று அவள் கத்த,
“என்னைக் கொஞ்சம் பாரு” என்று அதட்டினான்.
“பயப்படாத.. உனக்கு ஒன்னும் ஆகலை.. ஆகவும் விடமாட்டேன்” என்று அவள் முகம் பற்றி, கண் பார்த்து கூறிய பச்சையன், அவள் தலை கோத,
அவன் விழிகளைப் பார்த்தவளுக்கு, அதை இதற்கு முன்பும் எங்கோ பார்த்திருப்பதைப் போன்ற நினைவு எழுந்தது.
“உனக்கு என்னைத் தெரியுமா?” என்று அவள் கேட்ட கேள்வி, அவன் விழியின் பளபளப்பைக் கூட்டியது.
அன்று இரவு, அவன் யாரையோ கொலை செய்வதைப் பார்த்தது சட்டென அவள் நினைவில் வந்துபோக, விஷ்ணுவின் உடல் அதிர்ந்தது.
“எ..என்னையும் கொ..கொல்லப் போறியா?” என்று அவள் பயத்தோடு கேட்க,
பச்சையன் இதழில் ஒரு குறுநகை.
“ஏன் எதுவுமே பேச மாட்டேங்கிற? நீ பேயா?” என்று அழும் குரலில் விஷ்ணு கேட்க,
அவள் காதோரம், தன் மூச்சுக்காற்று உரச, “அப்படியும் சொல்லலாம்..” என்றான்.
“எனக்கு உன்னைப் பார்த்தா பயமா இருக்கு.. நீ ஏன் பச்சையா இருக்க?” என்று அவள் கேட்க,
“ஹ்ம்..” என்ற பெருமூச்சுடன் அவள் அருகே அமர்ந்தான்.
அவள் பதறி நகர முற்பட்டாள். ஆனால் முடியவில்லை. கை கால்களை அசைக்க அத்தனை வலித்தது.
“பப்..ப்ளீஸ்.. எ..என்னை எதுவும் பண்ணிடாத” என்று பயந்த குரலில் அவள் நடுங்க,
கண்கள் பளபளக்க அவளைப் பார்த்தவன், “கோஸ்ட் கான்ட் ஈட் யூ எனிமோர் பேபி கேர்ள்” என்று அவள் சிகை கோதி, இன்னும் பயமுறுத்தினான்.
அந்த வனாந்திரப் பகுதியில், கருப்பசாமியும், ராஜசிம்மனும் நடந்து கொண்டிருந்தனர்.
“இங்கதான் அன்னிக்கு பயத்தோட ஓடி வந்துட்டு இருந்தாங்க” என்று கருப்பசாமி கூற,
அவ்விடத்தைத் தன் கூர்மையான பார்வையால் அலசியபடி, “இங்க இதுக்கு முன்னவும் நிறைய கொலை நடந்திருக்கு தானே?” என்று கேட்டான்.
“ஹ்ம்.. இந்த ஏரியாவையே ரெஸ்ட்ரிக்டெட் ஏரியாவாதான் மாத்தி வச்சிருக்கோம். ஊருக்குள்ள இந்த இடத்தில் பேய், அப்புறம் கொல்லிவாய்ப் பிசாசெல்லாம் இருப்பதாக கதை உண்டு” என்று கருப்பசாமி கூற,
ஏலனமான சிரிப்போடு, “இன்டிரஸ்டிங்.. நாமகூட அரைமணி நேரமா இங்கதான் இருக்கோம். அப்படியெதையும் நாம பார்க்கலையே?” என்று கேட்டான்.
“நானும்கூட பல முறை இங்க தனியா வந்திருக்கேன். ஈவன் நைட்.. ஆனா எதுவும் ஆனதில்ல” என்று காட்டிற்குள் இலக்கின்றி தன் பார்வையைப் பதித்தபடி கருப்பசாமி கூற,
நண்பனின் குரல் மாற்றத்தில், அவனைத் திரும்பிப் பார்த்தவன், “யார் மேலேயாவது சந்தேகம் படுறியா கருப்பு?” என்று கேட்டான்.
“இல்ல.. பட் சம்திங் மிஸ்டீரியஸ் இன்சைட் திஸ் ஃபாரெஸ்ட்” என்று கருப்பு கூற,
“இதுக்கு முன்ன இங்க இறந்து கிடந்தவங்க ரெக்கார்ட்ஸ் இருக்கா?” என்று கேட்டான்.
“இருக்கு. எல்லாமே அன்சால்வ்ட் தான். அப்படியே சால்வ் பண்ணதாக இருந்தாலும்கூட, யானை அடிச்ச கேஸாதான் இருக்கும். என்னமோ கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியலில் கணக்கு சேரக்கூடாதுன்னு முடிச்சுவிட்டதாகத்தான் படும் அதுவும்” என்று கருப்பசாமி கூற,
“ம்ம்..” என்றபடி தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
பேசியபடி இருவரும் நடந்து கொண்டிருக்க, கருப்பசாமி தூரத்திலிருந்து யாரோ தன்னைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தான்.
அதில் சட்டென்று காட்டின் புறம் திரும்பியவன் கண்களுக்கு தூரத்தில் ஒரு பச்சை நிற நிழல்…
அதைக் கண்டு முதலில் பதறியவன், பின் துரிதமாய் காட்டிற்குள் ஓட, “கருப்பு?!” என்று புரியாது அழைத்த ராஜசிம்மனும் அவன் பின்னோடே ஓடினான்.
“கருப்பு.. எங்க போற?” என்று ராஜ் கேட்க,
கருப்பசாமியிடம் பதிலே இல்லை.
தன் கண்களுக்குத் தெரிந்த பச்சை நிற உருவம் போன்ற ஏதோ ஒன்று, எங்கு தெரிந்ததோ, அந்த இடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
அவன் பார்வை இலக்கை மட்டுமே நோக்கியிருக்க, பாதையில் கவனம் துளியும் இல்லை.
அதை அவன் ஓடும் வேகம் வைத்தே உணர்ந்த ராஜசிம்மன், “கருப்பு ஸ்டாப் ரன்னிங்.. நின்னுத்தொலைடா விழுந்துடப்போற” என்று கூறி முடிக்கும் முன், கால் இடறி கீழே பொத்தென்று விழுந்திருந்தான்.
நல்லநேரம், அருகில் பள்ளத்தாக்கு ஏதுமில்லை. விழுந்த வேகத்திற்கு, அப்படியே தரையோடு ஒன்றி விழுந்துவிட, அவன் அருகே விரைந்தோடி வந்த ராஜசிம்மன், அவனைத் தூக்கிவிட்டான்.
மூச்சிறைக்க அப்படியே தரையில் அமர்ந்தவனாய், அவ்விடத்தை அவன் நோக்க, அங்கு எதுவும் தற்போது தெரிவதாக இல்லை.
“பைத்தியமாடா உனக்கு? ஃபூல்.. என்ன வெறிபிடிச்சவன் மாதிரி ஓடுற? இந்தக் காட்டில் இத்தனை வருஷமா இருந்துட்டா, காட்டு ராஜானு நினைப்போ? இங்க ஏகப்பட்ட பள்ளத்தாக்கும் புதைகுழியும் இருக்குனு மறந்துடுச்சா?” என்று தனது அக்கறையை அதீத கோபத்தில் ராஜசிம்மன் வெளிப்படுத்த,
மூச்சிறைக்க அவ்விடத்தைப் பார்த்தபடியே, அவ்விடம் நோக்கிக் கரம் நீட்டினான்.
ராஜசிம்மன் குழப்பமான முகத்துடன், அந்தப் பக்கம் பார்த்து, மெல்ல அடிவைத்து, அங்கே செல்ல,
சட்டையில் முகம் துடைத்தபடி எழுந்த கருப்பசாமியும் அவ்விடம் சென்றான்.
இருவரும் சுற்றி முற்றிப் பார்த்தபடி, எதைத் தேடுகின்றோம் என்றே தெரியாமல் தேடித் திரிந்தனர்.
ஒரு புதரை விலக்கி அவ்விடம் எட்டிப் பார்த்த கருப்பசாமி, “ராஜ்..” என்று அழைக்க,
ராஜசிம்மன் அவ்விடம் சென்று எட்டிப் பார்த்தான்.
அங்கே சில காலடி தடங்கள்…
அவை சென்று மறைந்த இடத்தில் ஒரு பட்டையான விழுது தொங்கிக் கொண்டிருக்க, அம்மரத்தை நிமிர்ந்து பார்த்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இதை நான் பார்க்குறது இது முதல் முறை இல்ல ராஜ்” என்று கருப்பசாமி கூற,
ராஜசிம்மன், குழப்பமான மனநிலையோடு அக்காட்டை சுற்றிப் பார்த்தான்…

