Loading

10

 

நாட்கள் இரண்டு கடந்தோடியிருந்தன.

 

எங்கு தேடியும் விஷ்ணு கிடைக்கவில்லை. தோழிகள் நான்கு பேரின் வீடும் சூனியத்தின் இருள் பூசிக் கிடந்தது. ராமராஜனின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

 

தனக்கென்ற உறவு தன் மகள் மட்டுமே என்று வாழ்ந்து கொண்டிருந்த அந்த வெள்ளந்தி மனிதருக்கு, உயிரே தற்போது தன்னை விட்டு நகர்ந்து சென்று, தன் உடலை வேடிக்கைப் பார்ப்பதாய் உணர்ந்தார்…

 

சுடரொளிவானனுக்குப் பைத்தியம் பிடிக்காதது ஒன்று மட்டும்தான் குறை.

 

‘என்னால தான சுபி? நான் தப்புப் பண்ணிட்டேன் சுபிமா. நானே என் தங்கச்சியைக் கூட்டிட்டு வந்து, இந்தக் காட்டுக்குக் காவு குடுத்துட்டேன். நான் இங்க வர ஒத்துக்கிட்டிருக்கவே கூடாது’ என்று அவன் சுபிக்ஷாவிடம் கதறியதை, யாராலும் கண்கொண்டு பார்த்திட முடியவில்லை. ஆனாலும் ப்ரீத்தியின் தாய்க்கு, அவன் இங்கே தோழிகளை அழைத்து வராமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.

 

ஒரு பெண் பிள்ளையின் அன்னையாய், தன் மகள் போல் பார்த்தப் பெண், இன்று எங்கே என்றே தெரியாத நிலையில் யோசிக்க, மனம் பதறியது. ஆதங்கத்தில் சுடரை அவர் திட்டியும் இருந்தார்.

 

‘சுடரண்ணா என்னம்மா பண்ணுவாங்க?’ என்று பிரம்மா கேட்டபோது, அவளுக்கும் சேர்த்துத் திட்டு விழ, யாராலும் எதுவும் பேசி பெரியவர்களிடம் நியாயம் செய்ய முடியவில்லை.

 

குற்ற உணர்ச்சியெனும் அரக்கன், சுடரைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது. வால்பாறையில் பிரம்மவதனியின் மாமா ராஜசேகரனின் நண்பனது விருந்தினர் மாளிகை ஒன்று, அவன் வெளியூரில் இருப்பதால், காலியாக உள்ளது தெரியவர, அனைவருக்கும் அங்கே அடைக்கலம் கொடுக்க உதவி நாடி, வீட்டு சாவியைப் பெற்றிருந்தான்.

 

ராமராஜன், பிரபாவதி, சுந்தர், சிவகாமி, ராஜசேகர், அவர்களது மகன், ப்ரீத்தி, பிரம்மவதனி, சுபிக்ஷா மற்றும் சுடரொளிவானன் என அனைவரும் அங்குதான் கூடியிருந்தனர்.

 

சுடரால் ஒருவரையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அவனுக்கு யாரிடமிருந்தும் ஆறுதலும் கிடைக்கவில்லை. அப்படிச் சொல்வதைவிட, ஆறுதல் கூறுமளவு யாருமே திடமாக இல்லை என்று கூறுவதே உசிதம்.

 

கருப்பசாமியின் ஜீப் வீட்டு வாசலை அடைய, சுபிக்ஷா அதன் ஓசையில் வெளியே ஓடிச் சென்றாள். தன் தோழியைக் கூட்டிக் கொண்டு வந்துவிட மாட்டானா என்ற அவளது ஏக்கம், கண்ணீராய் பெருகி ஓடியது.

 

அவள் மனதைப் போல், வானமும் இருண்டு, மழைக்குத் தயாராய் இருக்க, அவனைப் பார்த்தவள், “வி..விஷ்ணு?” என்று தந்தியடிக்கும் குரலில் கேட்டாள்.

 

அவன் முகம் அப்பட்டமாய் கசந்தது.

 

அவள் தோளில் தட்டிக் கொடுத்தவன் உள்ளே வர,

 

அனைவரும் பரபரப்பாய், “விஷ்ணு பத்தி ஏதாவது தெரிஞ்சுதா சார்?” என்ற கேள்வியை விதவிதமான முறைகளில் கேட்டனர்.

 

அவர்களைப் பார்க்க அவனுக்கு அத்தனைப் பாவமாக இருந்தது.

 

ஒவ்வெரின் மனதில் சொல்ல முடியாத வலி. உற்சாகமெனும் தங்கத்தை அணியும் வரை அழகு. அதற்காக உருக்கிக் குடிக்க இயலுமா? அதன் விளைவாய் அவர்கள் வந்த இடம் நெஞ்சை புன்னாக்கியிருந்தது..

 

“உங்கள்ல யாராவது ரெண்டு பேர் என்கூட வரமுடியுமா?” என்று அவன் கேட்க,

 

“எ..என்னாச்சு?” என்று ப்ரீத்தி கேட்டாள்.

 

கண்கள் மூடி ஒரு பெருமூச்சுவிட்டவன், “காட்டுக்குள்ள யானை அடிச்சு ஒரு பெண்ணோட உடல்..” என்று அவன் முடிக்கும் முன்,

 

“இல்ல.. அது என் பொண்ணா இருக்காது. என் பொண்ணா இருக்காது.. எ..என் பொண்ணு எ..என்னை விட்டுட்டுப் போக மாட்டா” என்று ராமராஜன் கதறினார்.

 

சாதுவான மனிதரின் குரலில் திடீரென்று புகுந்த சாத்தானின் வேகம், அவர் வேதனையை ஓதியது…

 

அழுதபடி அவர் பொத்தென்று இருக்கையில் அமர,

 

“அப்பா..” என்று சிவகாமி அவரைத் தாங்கி அருகே அமர்ந்தாள்.

 

“என் பொண்டாட்டி செத்த சோகத்துல கூட என்னை அவதானே சிவகாமி தாங்கினா? எ..என் அம்மாடா அவ. எ..என் கைல சத்தியம் பண்ணாலே? நா.. நான் எப்பவும் உங்கக்கூடத்தான் இருப்பேன் அப்பானு சத்தியம் பண்ணாளே சிவா.. அவ என்னைவிட்டுப் போக மாட்டாடா. அந்தத் தம்பிக்கிட்டச் சொல்லுமா. அது என் பொண்ணா இருக்காது.. அது என் பொண்ணா இருக்காது” என்று அவர் வெடித்து அழ,

 

“நம்ம விஷ்ணுவா இருக்காதுப்பா” என்று கண்ணீரோடு சிவகாமி கூறினாள்.

 

“இல்ல சார்.. அது எங்க வீட்டுப் பொண்ணா இருக்காது” என்று சுந்தர் கூற,

 

“எனக்கு உங்க ஃபீலிங்ஸ் புரியுது. பட் இது ப்ரொசீஜர். முகம் பாரைல அடிபட்டு பாதிக்கும் மேல சிதைஞ்சுடுச்சு. உரிமைப்பட்டவர்கள் அடையாளம் காண எனக்கு வேணும். ப்ளீஸ் அண்டெர்ஸ்டேன்ட் சார்” என்று கூறினான்.

 

“அய்யோ..” என்று ராமராஜன் மேலும் கதற,

 

தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்ட சுடரொளிவானன், “நான் வரேன் சார்” என்றான்.

 

சிறு தலையசைப்பைக் கொடுத்தவன், “பெரியவங்க யாரும் கூட வந்தா இன்னும் பெட்டர்” என்க, சுந்தர் முன் வந்து அவர்களோடு புறப்பட்டார்.

 

தானும் வருதாய் சுபிக்ஷா கேட்க, “வேண்டாம் சுபி” என்று கருப்புதான் முதலில் தடுத்தான்.

 

“ப்ளீஸ்.. என்னையும் கூட்டிட்டுப் போங்க. அது என் விஷ்ணு இல்லைனு தெரியும்வர எனக்கு மனசே ஆறாது. ப்ளீஸ் கெஞ்சி கேட்குறேன்..” என்று அவள் எவ்வளவு கெஞ்சியும், அவளை யாருமே அழைத்துச் செல்லத் தயாராக இல்லை.

 

ஆண்கள் மூவரும் புறப்பட்டுக் காட்டிற்கு செல்ல, ஒருவருக்கும் அவர்கள் உயிர் உடலில் அமைதியாக இருப்பதாய் இல்லை. அத்தனைப் பேரின் மனமும் அது, விஷ்ணுப்ரியாவாக இருக்கவே கூடாது என்று ஜபித்துக் கொண்டிருந்தது.

 

காட்டில் காவலர்களும், வனத்துறை அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் கூடியிருக்கும் பகுதியை இவர்கள் மூவரும் அடைய, சுடரொளி வானனுக்குக் கை நடுங்கத் துவங்கியது.

 

“பயமா இருக்கு மாமா..” என்று அவன் நடுநடுங்கும் குரலில் கதறலாய்க் கூற,

 

“நம்ம விஷ்ணுவா இருக்காது சுடர்” என்று தன் பயம் மறைத்து அவனுக்கு ஆறுதல் கூறினார்.

 

அந்த இடத்தை நெருங்க நெருங்க அவன் கால்கள் நடுங்கியது.

 

அங்கே ஆட்கள் மறைத்தும் மறைக்காமல் தெரிந்த நீல நிற உடை, அன்று விஷ்ணு உடுத்தியிருந்த நீல உடையை நினைவு செய்ய, “மாமா.. என்னால முடியல.. எனக்கு பயமா இருக்கு” என்று அவர் கரம் பற்றிக் கொண்டு அழுதேவிட்டான்.

 

கண்கள் கலங்க அவனை அணைத்துக் கொண்டவர், “நம்ம விஷ்ணுவா இருக்காதுடா.. வா” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு அருகே செல்ல,

 

பாதி முகம் பாரையில் இடித்து சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல்…

 

“இந்தப் பொண்ணு?” என்று அங்கிருந்த காவலர் கேள்வியாய் நிறுத்த,

 

பயத்தோடு சுடர் குனிந்துப் பார்த்தான்.

 

சுந்தரும் பார்த்தார்…

 

அந்தப் பெண்… பார்த்ததும் இருவருக்கும் மனம் தடதடவென்று அடித்துக் கொண்டது.

 

பொத்தென்று அங்கேயே அமர்ந்த சுடரொளிவானன், ஓவென அழுக, கருப்பசாமி அவனைப் புரியாமல் பார்த்து, “சுடர்?” என்றான்.

 

அவனைக் கட்டிக் கொண்டு, “விஷ்ணு இல்ல சார்.. இது எங்க விஷ்ணு இல்ல.. எ..எங்க விஷ்ணுவையும் இப்படிப் பார்க்கும்படி ஆயிடாது தான? ப்ளீஸ் அவளைக் கண்டுபிடிச்சுடுங்க” என்று சுடர் அழ,

 

அவனை அணைத்துக் கொண்ட கருப்பு வருத்தமாய் தட்டிக் கொடுத்து, “கண்டுபிடிச்சிடலாம். நம்பிக்கையா இருங்க” என்று காட்டில் இலக்கின்றி தன் பார்வை பதித்தப்படி கூறினான்.

 

மாலை நேரம்…

 

அந்த அடர்ந்த வனாந்திரப் பகுதி அடைமழைக்கு நடுவில், அந்தகாரத்தின் உச்சத்தில் இருந்தது. யாரும் அறியாத வகையில், பள்ளத்தாக்கு ஒன்றின் கீழுள்ள குகை அது…

 

குகையில் பகலிலேயே பெரும் இருள் சூழ்ந்திருக்க, மழை பெய்துகொண்டிருந்த மாலை வேளை, வெளிச்சமென்ற பெயர் கூட அங்கில்லை.

 

அந்த குகைக்குள், விழிப்புக்கும் முழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில், உடல் சுமக்கும் பாரத்தையும் வலியையும் உணர்ந்தவளாய், படுத்துக் கிடந்தாள், விஷ்ணுப்ரியா.

 

அவள் உடலில் அப்படியொரு அதீத வலி. குளிருக்கு உடல் நடுநடுங்கவும் செய்தது.

 

மயக்கத்திலிருந்து, வலி மெல்ல மெல்ல விழிப்பிற்கு அவளை அழைத்துவர, வலியில் மெல்லிய முனகலை வெளியிட்டாள்.

 

கண்களை கசக்கி, சுருக்கி, சிரமப்பட்டுத் திறந்தும், இருள் மட்டும் அவள் பார்வைக்கு விருந்தாய் இருந்தது. எதுவும் தெரியாததால் தன் பார்வை தான் பரிபோனதோ என்ற பயம் வந்தது.

 

அவள் பார்வைக்கு ஒரு கரும் நிழல் உருவம் புலப்பட்டு, பார்வைக்கு பாதிப்பு ஏதுமில்லை என்பதை உணர்த்திய அடுத்த நொடி, அந்த உருவத்தைக் கண்ட அச்சம் தோன்ற, மூச்சை இழுத்துவிட்டு அசைய முயற்சி செய்தாள்.

 

வலியில் எழ முடியவில்லை. இன்னும் என்னென்னவோ அசௌகரியங்கள் அவளைப் படுத்தியது.

 

“யா..யாரு? எ..என்னப்..பண்ற? யாரு?” என்று அவள் பதட்டத்தில் பிதற்ற,

 

அவள் தலையில் மிக மிகப் பரிவாய் ஒரு கரம் படர்ந்தது.

 

அந்த ஸ்பரிசம்… அதே ஸ்பரிசம்.. அதே ஸ்பரிசம் தான் அது… அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

 

“யா..யாரு?” என்று மென்மையாய், பதில் கிடைத்திட வேண்டுமென்ற ஏக்கத்துடன் அவள் கேள்வி ஒலிக்க,

 

“ஷ்ஷ்..” என்று அவள் காதில் உஷ்ணக் காற்றுத் தீண்டியது.

 

அந்த நேரம் அவள் காலில் ஏதோ ஏறி இறங்க, அச்சத்தில், “ஆ..” என்று கத்தினாள்.

 

“ஷ்ஷ்..” என்ற ஓசை மீண்டும்.

 

“கா..கால்ல என்னமோ..” என்று அவள் பதற,

 

அவளிடமிருந்து அந்த உருவம் நகர்ந்தது.

 

“கா.. கால்ல என்னமோ.. ஓடிச்சு” என்று மீண்டும் அவள் படபடக்க,

 

தீப்பெட்டி கொளுத்தப்பட்ட ஓசை அவளுக்குப் பக்கவாட்டில் கேட்டது.

 

பாவை மெல்ல தன் கழுத்தைத் திருப்பி ஓசை வந்தப் பக்கம் பார்க்க, இருளடர்ந்த இடத்தில், தீப்பெட்டியின் மஞ்சள் ஒளி, அந்த பச்சை நிற உருவத்தில் பட்டுத் தெறித்தது.

 

அவள் விழிகள் ஏகத்துக்கும் விரிய, அந்த தீப்பெட்டிக் கொளுத்திய விரகுக் கட்டையோடு, அவள் அருகே மெல்ல மெல்ல நெருங்கினான், பச்சையன்…

 

“யா..யாரு..” என்று அசைந்தவளுக்கு, மெல்ல மெல்ல தன்னில் பல மாற்றங்கள் உணரப்பெற்றது.

 

“ஷ்ஷ்..” என்ற ஓசை மட்டுமே மீண்டும்…

 

அவள் காலருகே சென்று அவளைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கியவன், என்னவென்று ஆராய, அங்கு எதுவுமில்லை.

 

போர்வை நீங்கியதும் அதீத குளிர் அவள் மேனியைத் தீண்டியது.

 

பயத்தில் மூளை படீரென்று எடுத்துரைக்க, “எ..என் டிரஸ்..? நா.. நான்.. நீ யாரு?” என்று அழுதே விட்டாள்.

 

விரகை ஓரமாய் சொருகி அவ்விடத்தில் வெளிச்சம் படரச் செய்தவன், அவள் அருகே மீண்டும் வந்து, “கண்டதையும் நினைக்காத. நீ டிரஸ் போட்டு தான் இருக்க” என்று கூற,

 

அவள் அழுகை நின்றபாடில்லை…

 

“ஷ்ஷ்..” என்று தற்போது அதட்டலாய் அவ்வோசை.

 

சிரமப்பட்டு எழ முயற்சி செய்தவள் கையில் சுரீரென்று வலியெடுக்க, “ஆ…” என்று வலி பொறுக்காமல் கத்தினாள்.

 

“இதுக்குத்தான் சொன்னேன்..” என்று அதட்டலாய் வெல்லென்று வந்து விழுந்தது அக்குரல்.

 

அவளுக்கு மெல்லத் தட்டிக் கொடுத்த கரம், எதையோ எடுத்து வந்து, வலித்த இடத்தில் தேய்த்தது. வலி பொறுக்காமல் இன்னும் இன்னும் கத்தினாள்.

 

அடைமழையைத் தாண்டி அது குகைக்குள்ளேயே மீண்டும் எதிரொலித்தது.

 

“யாரு நீ?” என்று கதறலாய் அவள் கேட்க,

 

“உன் ஓஜா போர்டோட விடைனு வச்சுக்கோ” என்று கூறினான்.

 

அதில் திடுக்கிட்டுப்போய், நீர் பளபளக்கும் விழிகளோடு அவள் அவனை நோக்க,

 

பச்சை நிற விழிகள் பளபளத்து, அவளுள் அச்சம், கலக்கம், தடுமாற்றம், குழப்பம் மற்றும் இன்னொரு புரிந்தறியா உணர்வை விதைத்தது.

 

அங்கு நண்பர்களின் குடும்பம் தங்கியிருக்கும் வீட்டிற்கு கருப்பசாமியின் ஜீப் வந்து நிற்கும் நேரம், ஒரு இருசக்கர வாகனமும் வந்து நின்றது.

 

காக்கி உடையில் மிடுக்கே உருவாய், ஆறடிக்கும் கூடுதல் உயரத்துடன், அமர்ந்த வாக்கிலேயே உயரமாக இருந்தவன், வண்டியில் அமர்ந்தபடி, கருப்பசாமியின் ஜீப்பிற்கு முன், கால்களைக் கீழே ஊன்றி நிறுத்தினான்.

 

வாகனங்களின் சப்தத்தில், வீட்டிற்குள்ளிருந்து அனைவரும் வெளியே வந்தனர். காட்டிற்குள் அலைவரிசைக் கிடைக்காததால், யாருக்கும் அழைத்துத் தகவல் கூற முடியவில்லை. அதனால், தகவல் கிடைக்காது தவித்துக் கொண்டிருந்தவர்கள், வண்டி சப்தம் கேட்டு, நொடியும் தாமதிக்க இயலாது வெளியே வந்தனர்.

 

வெளியில் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் அனைவருக்கும் பல வகையான உணர்வுகள்.

 

அவனைக் கண்டதும் ஜீப்பிலிருந்து குதித்திறங்கிய கருப்பசாமி, “ராஜ்..” என்க,

 

தனது தலைக்கவசத்தைக் கலைத்தான், அவனால் ‘ராஜ்’ என்று அழைக்கப்பெற்ற ராஜசிம்மன்.

 

சீராய் வெட்டப்பட்ட கேசம், திராவிட நிறம், இறுக்கம் பூசிய அவன் இயல்பு. அவன் முகத்தில் வலதுபக்கம் காதிலிருந்து கன்னம் வரை, கொஞ்சம் பகுதி, ஏதோ தீக்காயத்திற்கு ஆளானதைப்போல் பொசுங்கி, சட்டெனப் பார்ப்போரில் பலரை முகம் சுழிக்க வைக்கும்படியாக இருந்தது.

 

தனது வண்டியிலிருந்து, நீண்ட கால்களைத் தூக்கிப்போட்டு இறங்கியவன், “கேஸ் டீடைல்ஸ் கொடு” என்றான்.

 

“ம்ம்.. இவங்கதான் அந்த ஃபேமிலி” என்று கருப்பசாமி கூற,

 

அவர்களைத் திரும்பிப் பார்த்தான்.

 

“த.. தம்பி.. அது என் பொண்ணு இல்லைதான?” என்று ராமராஜன் கேட்க,

 

“இல்ல சார்” என்று கருப்பசாமி, அனைவரையும் ஆசுவாசம் அடையச் செய்தான்.

 

அங்குள்ளோரை ஆழ்ந்து பார்த்த ராஜசிம்மன், “எப்படிக் காணாம போனாங்க?” என்று தனது விசாரணையைத் துவங்க,

 

“மலைவாழ் பகுதியைச் சேர்ந்த ஒருத்தன் தூக்கிட்டுப்போனதா சொன்னாங்க” என்று கருப்பசாமி கூறினான்.

 

“யாரெல்லாம் அப்பக்கூட இருந்தது?” என்று அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய், தோழிகளும், சுடரும் அவன் முன் நின்றனர்.

 

கருப்பசாமி தன் நண்பனிடம், அதற்கு முந்தையநாள் இரவு அவள் காட்டிற்குள் சென்றதையும் மறைக்காமல் ஒப்புவித்தான். ஆம்! ராஜசிம்மன், கருப்பசாமியின் ஆத்ம நண்பன். இந்த வழக்கைப் பற்றிக் கூறி, தனக்கு உதவ, தனது நண்பனை அவன் அழைத்ததன் பெயரில், ராஜசிம்மன் இங்கு வந்திருந்தான். ‘ஏனடா இங்கு வந்தோம்?’ என்று அவன் நொந்துக்கொள்ளும் காலமும் விரைவில்…

 

“இஸ் ஷீ ஃபூல்?” என்று அவள் காட்டிற்குத் தனியாக சென்றதைக் குறிப்பிட்டு, கோபத்துடன் அவன் கேட்க,

 

“ஷி இஸ் நாட் அ ஃபூல்‌. யூ கான்ட் ஸே ஹர் லைக் தட்” என்று பிரம்மவதனி கோபத்துடன் பதில் கொடுத்தாள்.

 

அவள் கண்களில் அப்பட்டமான கோபம், வேதனையை மீறும் விதமாய் இருந்தது…

 

மருண்டு விழிக்கும் பெரியோரைப் பார்த்து, “என் ஃபிரெண்ட் தான்.. இந்த கேஸ்காக வந்திருக்கான். ராஜசிம்மன்” என்று கருப்பசாமி கூறி,

 

அவர்களை நண்பனுக்கு அறிமுகம் செய்து வைக்க,

 

“இவங்கக்கூட உறவு பாராட்ட வரலை. ஐ டோன்ட் நீட் எனி மோர் இன்ட்ரோ. கேஸ் டீடைல்ஸ் அனுப்பு. இப்ப முதல்ல அந்த காட்டுப்பகுதிக்குக் கூட்டிட்டுப்போ” என்றான்.

 

ராஜசிம்மன் எப்போதும் யாருடனும் ஒட்ட மாட்டான். அவனுக்கென்று இருக்கும் ஒரே உறவு கருப்பசாமிதான். அவனது இறுக்கமான முகமும், சூடான பேச்சும் அனைவரையும் தள்ளியே நிறுத்தியிருந்தாலும், அவனை ஆதிமுதல் தெரிந்தவனை என்றுமே விலகவிட்டதில்லை.

 

“ஓகேடா.. வா” என்றவன், நண்பனை அழைத்துச் செல்ல,

 

அவ்வீட்டாரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, மீண்டும் தன் தலைகவசத்தை மாட்டிவிட்டு, வண்டியில் ஏறி புறப்பட்டான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்