
08
பித்து பிடிக்காத நிலையில் இருந்தான் சுடர். அவனுக்கு அத்தனைக் கோபம் வந்தது. அத்தனை முறை சொல்லியும்கூட அவள் தனியே சென்றிருக்கின்றாள் என்பதுதான் அவனது கோபத்திற்கான காரணம்.
“சுடரண்ணா.. போலீஸ் போலாம் வா” என்று சுபி கூற,
“அவ்ளோ சொல்லியும் அவ எங்க சுபி தனியா போனா? ஃபோனும் இல்ல. கால் பண்ணா ரீச் ஆகவும் மாட்டேங்குது” என்று கூறினான்.
அவனிடம் கோபத்தை மீறிய வருத்தமும் வேதனையும் இருந்தன…
“அண்ணா.. நாம போய் தேடிப் பார்ப்போம்” என்று பிரம்மா கூற,
“நாம என்ன செய்தாலும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டுச் செய்யலாம். நீங்க இப்படி யோசிச்சுட்டே இருந்தா எதுவும் மாறாது” என்று ப்ரீத்தி கூறினாள்.
அவளை வேதனையோடு அவன் நோக்க,
கண்கள் மூடித் திறந்து ஆறுதல் கூறினாள்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அவன் எழ,
வாசலில் அழைப்புமணி ஒலிக்கும் ஓசை கேட்டது.
சுபி வேகமாய் சென்று கதவைத் திறக்க,
தனது ஆஸ்தான வனத்துறை பாதுகாவலர் உடையில் நின்றிருந்தான், கருப்பசாமி.
சுபிக்ஷாவைக் கண்டதும், அவன் கண்களில் கோடி சூரியனின் பளபளப்பு. ஆனால் அதனை கவனிக்கும் நிலையிலெல்லாம் அவள் இல்லையே?
சுபிக்ஷா அவனைக் குழப்பமாய் பார்த்து, “நீ..நீங்க?” என்க,
தனக்குப் பின்னே திரும்பிப் பார்த்தான்.
பயத்து மருண்ட விழிகளோடு அவன் பின்னிருந்து விஷ்ணு வெளிவர,
“விஷ்ணு..” என்று அவளைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
அனைவரும் வாசலுக்கு வர,
“எங்கடி போன? எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?” என்று சுபி வருத்தம் தோய்ந்த கலங்கிய குரலில் கேட்டாள்.
“முதல்ல அவங்கள உள்ள கூட்டிட்டு போகலாமே?” என்று கருப்பசாமி கூற,
அவனை நிமிர்ந்து பார்த்தவள், விஷ்ணுவை உள்ளே அழைத்துச் சென்றாள்.
பின்னே திரும்பிப் பார்த்த சுபி, “நீங்களும் வாங்க சார்” என்க,
மறுப்பின்றி கருப்பும் உள்ளே நுழைந்தான்.
மருட்சியாய் விழித்த விஷ்ணு, கருப்பசாமியை நோக்க,
“ஃபாரெஸ்ட் ரோட்ல நைட் தனியா வந்துருப்பாங்க போல. எதையோ பார்த்து பயந்து வந்தாங்க. என்மேல மோதி பயத்துல மயங்கிட்டாங்க. சாரி உங்க யாரோட காண்டேக்டும் என்கிட்ட இல்ல. அவங்களை தெரிஞ்ச டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போய் அவங்க முழிச்சதும் கூட்டிட்டுவர லேட் ஆயிடுச்சு” என்று கருப்பசாமி கூறினான்.
சுடரின் முகம் இறுகிக் கொண்டே சென்றது.
பயத்தில் இதழ் நடுநடுங்க, அவனை நெருங்கிய விஷ்ணு, “சு..சுடரண்ணா..” என்க,
அவள் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை கொடுத்தான்.
நடுக்கத்தில் இருந்தவள் நிலைதடுமாறி சாய, சுபியும் கருப்பும் வேகமாக அவளை வந்து தாங்கிக் கொண்டனர்.
“சுடரண்ணா.. என்ன பண்ற?” என்று சுபி கத்த,
“வாய மூடு” என்று கத்தியவன், “உன்மேல நம்பிக்கை வச்சுத்தான் நீ திரும்ப வால்பாறை போலாம்னு சொன்னதா சுபி கேட்டப்ப, ஃபாரெஸ்ட் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கனும்னு கேட்டப்பனு எல்லாத்துக்கும் சம்மதிச்சேன். நைட் உன்மேல உள்ள நம்பிக்கைலதான டோர் கீயைக் கூட எல்லாருக்கும் தெரியும்படி டேபில்ல வெச்சேன்? எத்தனை முறை சொன்னேன்? தனியா யாரும் எங்கயும் போகக்கூடாதுனு.. கேட்கவே கூடாதுல உனக்கு? உனக்கு எதாவது ஒன்னு ஆகி நாளைக்கு நான் குற்ற உணர்ச்சியோடவே சாகனும்ல விஷ்ணு?” என்று சப்தமாய் கத்தினான்.
விஷ்ணுவின் கண்களில் கண்ணீர் பெருகியோடியது…
விஷ்ணுவின் உடல் நடுநடுங்க, “சுடரண்ணா.. அவ பயப்படுறா” என்று சுபி கலக்கமாய் கூறினாள்.
“நான் பயந்தேன்ல? அவளைக் காணும்னு சொன்னதுலருந்து எவ்ளோ பயந்தேன்? புரிஞ்சுக்கவே இல்லதான அவ?” என்று கூறும்போது சுடரின் கண்கள் கலங்கியது.
“சு..சுடரண்ணா.. சாரி..” என்று அவள் கூற,
“பேசாத விஷ்ணு” என்றான்.
அதிகப்படியான அச்சம் அவளை மேலும் நடுங்கச் செய்ய, மெல்ல மெல்ல கண்கள் சொருகி மயங்கி சரிந்தாள்.
“விஷ்ணு.. விஷ்ணு..” என்று சுபி கத்த,
பிரம்மா வேகமாக நீர் எடுத்து வந்தாள்.
சுடருக்கு கண்ணீர் பெருகியோடியது.
சுபியின் அருகே வந்த சுடர், விஷ்ணுவைக் கரங்களில் அள்ளி, நீள்விருக்கையில் அமர்த்தினான்.
“ஏன் சுடரண்ணா? அவ ரொம்ப பயப்படுறா” என்று சுபி ஆற்றாமையாய் கூற,
“எனக்கில்லையா சுபி? அவளைப் பார்க்க எப்படியிருக்கு தெரியுமா? செத்துட்டேன்… ஏன் சுபி இப்படிப் பண்ணா?” என்று சுடர் அழுதே விட்டான்.
ப்ரீத்தி கண்களில் கண்ணீரோடு தன்னவனைப் பார்த்தாள்.
அவன் தோளில் கரம் வைத்து, அவள் அழுத்தம் கொடுக்க,
கண்ணீரோடு அவளைப் பார்த்தான்.
கண்கள் மூடித் திறந்து அவள் தட்டிக் கொடுக்க, கண்களை அழுந்த மூடிக் கொண்டான்.
பிரம்மா நீரோடு வர,
அதை வாங்கி அவள் முகத்தில் தெளித்து எழுப்பினான்.
மெல்ல அவள் விழி திறக்க முயல, நீரை அவளுக்குப் புகட்டி, பருகச் செய்து, முதுகை வருடிக் கொடுத்தான்.
சுடரின் தவிப்பான விழிகளைப் பார்த்தவள், “சாரி சுடரண்ணா” என்ற கதறலோடு அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
கண்ணீர் திரை மின்ன அவளை அணைத்துக் கொண்டு முதுகை தட்டிக் கொடுத்தவன், “ப்ளீஸ்டா.. இப்படிப் பண்ணாத” என்று கூறினான்.
“சாரி சுடரண்ணா.. தப்பெல்லாம் என்னோடது தான்.. நா.. நான் அப்படிப் போயிருக்கக்கூடாது சுடரண்ணா.. சாரி” என்று அவள் தேம்பி அழ,
அவள் கண்ணீர் துடைத்தவன், “விடு.. அழாத. உடம்பு முடியாமப் போயிடப்போகுது” என்று கூறினான்.
“சாரி சுடரண்ணா.. ஐம் ரியலி சாரி” என்று மீண்டும் மீண்டும் கூற,
“ஷ்ஷ்.. பாப்பா.. போதும்விடு” என்று தட்டிக் கொடுத்தபடி கூறினான்.
அப்போதுதான் கருப்பசாமியை மற்றவர்கள் கவனித்தனர்.
“சார்.. சாரி.. உங்கள கவனிக்கலை.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. இவளைக் காணும்னு ரொம்ப பயந்துட்டோம். போலீஸ்ல கம்ப்ளைன்ட் தரலாம்னு நினைக்கும்போது உங்க நினைவுதான் வந்தது” என்று இயல்பாய் சுபி கூறியது, கருப்பின் இதயத்தில் இதம் சேர்த்தது.
“இட்ஸ் மை டியூட்டி மா” என்று அவன் கூற,
“ரொம்ப நன்றி சார்.. எங்க விஷ்ணுவோட உயிரை ரெண்டு முறையும் நீங்கதான் காப்பாத்தித் தந்திருக்கீங்க. ரொம்ப தேங்ஸ்” என்று சுடர் கூறினான்.
மீண்டும் ஒரு புன்னகை தந்தவன் விஷ்ணுவைப் பார்த்து, “அந்தக் காட்டுக்குள்ள பகல் நேரமே அந்தப் பகுதிக்கெல்லாம் யாரும் போக மாட்டாங்க. போகவும் கூடாது. இப்படி இரவு நேரம் தனியா போறது இதுவே கடைசியா இருக்கட்டும். உங்களுக்கு அடுத்து எதுவும் பிரச்சினை வந்துட வேணாம்னுதான் அமைதியா வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டேன். எல்லா முறையும் இது தொடராது” என்று கொஞ்சம் கடுமையாகக் கூற,
பயத்தோடு சம்மதமாய் தலையசைத்தாள்.
“குட்.. டேக் கேர்” என்றவன், “ஓகே எனக்கு டைம் ஆகுது. நான் கிளம்புறேன்” என்று கூற,
“ஓகே சார். ரொம்ப தேங்ஸ்” என்று கூறினான்.
தன்னுடைய அலைபேசி இலக்கங்களைக் கொடுத்தவன், “இது என்னோட நம்பர். எதுவும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க” என்று கூற,
நன்றி கூறி சம்மதமாய் தலையசைத்தனர்.
விடைபெற இருந்தவனை வாசல் வரைச் சென்று வழியனுப்பினாள் சுபிக்ஷா.
உள்ளே, “ஏன்டி அந்த காட்டுக்குப் போன?” என்று பிரம்மா கோபமாய் கேட்க,
அவள் உடல் அந்தத் தீண்டலின் சிலிர்ப்பையும், இரவு கண்ட காட்சியின் பயத்தால் ஏற்பட்ட அதிர்வையும், ஒருசேர உணர்ந்தது.
“விஷ்ணு?” என்று கேள்வியாய் அழைத்த பிரம்மா அவள் தோள் தாங்க,
“அ..அந்த..அந்தக் காடு..” என்று குரல் தந்தியடிக்கக் கூறியவள், “அங்க என்னமோ சரியில்ல சுடரண்ணா” என்று சுடரைப் பார்த்தாள்.
“என்னமோ இருக்கு சுடரண்ணா.. நா.. நான் பாத்தேன்.. அ..அந்த கை என்ன..” என்றவள் சட்டென்று தன் வாயை மூடிக் கொண்டாள்.
ஏனோ அந்த ஸ்பரிசம் தனக்குத் தரும் சுகத்தை அவளால் வாய்விட்டுக் கூறிட இயலவில்லை. தன்னவர்கள் என்றாலும் கூட தன்னைத் தவறாக நினைத்துக் கொள்வரோ என்று அஞ்சினாள்.
அவள் கூறாமல் நிறுத்திக் கொண்ட இடத்தில், மற்ற அனைவரும் அவளுக்கு ஏதோ தவறாக நடக்க விளைந்திருப்பதாய் நினைத்து நிரப்பிக் கொண்டனர்.
“அங்க..அங்க..” என்று அவள் தடுமாற,
“ஷ்ஷ்..” என்று அவள் தோள் தட்டிக் கொடுத்தான் சுடர்.
“அ.. அந்த கண்.. பச்சைக் கலர்ல இருந்துச்சு..” என்று அவள் பயத்தோடு தனது கற்பனையில் விரிந்த காட்சியைப் பார்த்தபடி கூற,
“என்னாச்சு அண்ணா? என்ன சொல்றா இவ?” என்று கேட்டாள், அப்போதே உள்ளே வந்த சுபிக்ஷா.
கண்களால் அவளைத் தடுத்த சுடர், “விஷ்ணு.. ரிலாக்ஸ்.. ஒன்னுமில்ல. நீ பயந்திருக்க. நல்லா ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகிடும்” என்று கூற,
அவள் அவனைக் குழப்பமாய் ஏறிட்டாள்.
“ஒன்னும் இல்ல விஷ்ணு” என்று பிரம்மாவும் ஆறுதல் கூற,
“நீ தூங்கி ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகும்” என்று பிரம்மா கூறினாள்.
“என்னாலதான் நம்ம ட்ரிப் ஸ்பாயில் ஆகுதுல்ல?” என்று விஷ்ணு கேட்க,
“இவ்ளோ யோசிக்குறவ நைட் அப்படிப் போயிருக்கவேகூடாது.. செய்யுறதயும் செஞ்சுட்டு கேள்வியைப் பாரு” என்று சுபி கூறினாள்.
வருத்தமாய் அவளை விஷ்ணு நோக்க,
“நடந்தது நடந்துடுச்சு. விடுங்க.. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். மதியம் மேல கிளம்பலாம்” என்று சுடர் கூறினான்.
அனைவரும் அதற்கு உடன்பட,
இன்னும் தனக்கான கெட்ட நேரம் முடியாததை அறியாமல், விஷ்ணு உறக்கம் தழுவினாள்.
பிரம்மா, ப்ரீத்தி மற்றும் சுடர் கூடத்தில் படம் பார்த்துக் கொண்டிருக்க,
அறையில் உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவோடு அமர்ந்திருந்த சுபிக்ஷா, குழப்பமாய் அமர்ந்திருந்தாள்.
அவள் கண்ணில் கருப்பசாமியின் முகம் விரிந்தது.
வெளியே அவனை வழியனுப்ப சென்ற நேரம், “சுபிக்ஷா.. ரைட்?” என்று கேட்டான்.
அவனுக்கா தெரியாது? அன்றாடம் அவள் நாமத்தை அல்லவா ஜபித்துக் கொண்டு தவிக்கின்றான்?
“என் பெயர் இன்னும் நினைவிருக்கா சார்?” என்று அவள் ஆச்சரியமாய் கேட்க,
“ம்ம்.. மறக்க முடியுமா உங்களையெல்லாம்” என்றான்.
அந்த நாளின் பரபரப்பு ஒரு நொடி அவள் மனதில் ஓடி மறைந்து, ஒரு பெருமூச்சு எழுந்தது.
“விஷ்ணுவை பத்திரமா கொண்டு வந்து சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி சார்” என்று சுபி கூற,
“அது என் கடமை” என்றவன், “உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்கிட்டயா? என்னது சார்? விஷ்ணு விஷயமாவா?” என்று சுபி கேள்விகளை அடுக்க,
“இல்ல.. என் விஷயமா” என்றவன், அவள் குழம்பிய முகம் கண்டு, “நான் உங்களை விரும்புறேன்” என்று கூறினான்.
விழிகள் விரிய அவனை அதிர்வாய் அவள் நோக்க,
“எனக்கு லாஸ்ட் டைமே உங்க மேல ஒரு ஈர்ப்பு. நீங்க போனதுக்குப் பிறகு அதுவும் தன்னால போயிடும்னு நினைச்சேன். ஆனா..” என்றவன் தொண்டைக்குழியில் சிறு தள்ளாட்டம்.
“அத்தனை கலக்கத்தோட உங்க தோழிக்காக நீங்க வந்து அழுததுல உங்க பாசம் தெரிஞ்சது. மத்தவங்க வந்து அழும்போது, உங்க கஷ்டத்தையெல்லாம் மறைச்சு எல்லாத்தையும் தைரியமா ஃபேஸ் பண்ணீங்க. ஒரு பருந்து அதோட குஞ்சுகளை தன் சிறகின் கீழ அடைகாப்பதைப் போல அவங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் பாதுகாப்பும் தந்தீங்க. உங்க குணமும் தைரியமும் என்னை வியக்க வச்சது. அந்த வியப்பு காதலா மாறும்னு நான் அப்ப நினைக்கல. அந்த காட்டுப் பக்கம் போனாலே உங்க நினைவு தன்னைப் போல வருது.. ஒருவித இதம் தருது. நீங்க காலம் பூரம் என்கூடவே இருந்தா, நம்ம வாழ்க்கையை அழகாவும் நிம்மதியாவும் வாழ முடியும்னு தோன்றுது. யோசிச்சு உங்க பதிலைச் சொல்லுங்க சுபிக்ஷா” என்று, தன் உணர்வுகளைத் தன் பக்கமிருந்து கூறி, முடிவை அவள் கையில் ஒப்படைத்துவிட்டுச் சென்றான்.
அவளிடம் தன் காதலை சேர்ப்பித்த ஆசுவாசம் அவனிடம். தன் நெஞ்சை நீவி, மெல்லிய புன்னகையோடு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு செல்பவனை வியப்பாய் பார்த்து நின்றாள்.
அவள் பதில் சொல்வாளா? மாட்டாளா? மீண்டும் தன்னால் அவளைப் பார்க்க இயலுமா? என்றெல்லாம் அவன் யோசித்தானோ இல்லையோ? சொல்லிவிட்டேன் என்ற திருப்தி கொடுத்த நிம்மதியே போதும் என்பதைப் போல் சென்றவனை நினைத்துப் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை அவளால். சுபியின் உலகில் சுடர் தான் அனைத்தும். அவனோடு சேர்ந்து அவளது தோழிகளே அவளது உலகம்… தற்போது அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள விண்ணப்பக் கடிதம் கொடுத்து சென்றவனுக்கு, என்னவென்று பதில் அனுப்ப வேண்டுமெனப் புரியாது விழித்தாள்.
நினைவுகளில் தவித்துக் கொண்டிருந்தவளை, உறக்கத்தில் பதட்டமாய் அசையும் விஷ்ணுவின் ஓசை கலைத்தது.
பிரண்டு பிரண்டு படுத்தபடி கனவில் எதையோ கண்டு அவள் பதட்டமடைவது தெரிய, அவள் அருகே சென்று தலை கோதிய சுபி, “ஷ்ஷ்.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல விஷ்ணு..” என்றாள்.
அதில் பட்டென்று கண் திறந்தவள், மீண்டும் மெல்ல மெல்ல கண்கள் சொருக மூடிக் கொள்ள, அவளையே பார்த்த சுபிக்கு, மனதில் ஏதோ சொல்ல முடியாத சஞ்சலம் தோன்றி மறைந்தது…

