
07
குட்டிக் குட்டியாய் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தார்போன்று வீடுகள் இருந்தன. இரவு நேரத்தில் மின் விளக்கின் வெளிச்சத்தில் அவை அத்தனை அழகாய் தெரிந்தன.
சாலையில் நடந்து சென்றபடி, ஐவரும் அதனை ரசித்துக் கொண்டிருக்க, “ரொம்ப அழகா இருக்குப்பா இந்த இடமே” என்று சுபிக்ஷா ரசனையோடு கூறினாள்.
“ம்ம்.. அழகுதான்.. ஆனா ஆபத்தும் கூட. இங்க யானை நடமாட்டம் அதிகம் சுபிமா. நைட் நேரம் வீட்டு கதவையெல்லாம் வந்து முட்டும்னு இங்க வொர்க் பண்ண என் சார் ஒருத்தர் சொல்லிக் கேட்டிருக்கேன்” என்று சுடர் கூற,
பெண்கள் நால்வருக்கும் அந்த நாளின் நினைவு வந்து போனது.
தனிச்சையாய் ப்ரீத்தி அவன் கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொள்ள, சட்டென்று அவளைப் பார்த்தவன் அவளது மருண்ட விழி கண்டு, கண்கள் மூடித் திறந்து, கோர்த்திருந்த அவள் கரத்தை அழுத்தம் கொடுத்தான்.
“சரிப்பா.. ரொம்ப லேட்டாச்சு. சாப்பிட்ட சாப்பாடெல்லாம் செரிச்சு மீண்டும் பசிக்குறதுக்குள்ள போய் தூங்குவோமா?” என்று விஷ்ணு கேட்க,
“ஆமா விஷ்ணு. எனக்கும் செம்மயா தூக்கம் வருது” என்று பிரம்மா கூறினாள்.
“ஓகேடா.. வாங்க போகலாம்” என்று கூறிய சுடர், அனைவரையும் அழைத்துக் கொண்டு மகிழுந்து இருக்கும் இடத்தை அடைந்தான்.
“விஷ்ணு, கடைசி நேரம் கிடைக்காதோனு நினைச்சேன். லக்கிலி ஃபாரெஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு கிடைச்சிருக்கு. பட் கேர்ள்ஸ்.. இது விளையாட்டு இல்ல. நைட் யாரும் தனியா எங்கேயும் போகக்கூடாது. சரியா?” என்று சுடர் கூற,
“ஓகே ஆஃபிஸர்” என்று சுபியும் பிர்மமாவும் கூறினர்.
மகிழுந்தில் சில நிமிடங்கள் தொடர்ந்த பயணத்தின் முடிவாய், காட்டிற்குள் அமைந்திருக்கும் அந்த அழகிய வீட்டை அடைந்தனர்.
யானையிடமிருந்து பாதுகாக்க வேண்டி, சுற்றிலும் மின் வேலி போடப்பட்டிருந்தது.
வண்டியை உள்ளே நிறுத்திவிட்டு, அனைவரும் தத்தமது பொதிகளோடு உள்ளே செல்ல, “ரெண்டு ரூம் இருக்கு. நானும் சுபியும் ஒரு ரூம் எடுத்துக்குறோம். நீங்க மூனு பேரும் ஒரு ரூம் எடுத்துக்கோங்க” என்று சுடர் கூறினான்.
சரியென்று கூறி அவரவருக்கான அறையில் ஐக்கியமான பெண்கள், உடை மாற்றிக் கொண்டு, உறக்கம் தழுவினர்.
விழிகளின் கெஞ்சுதலையெல்லாம் மீறி, மனதின் கட்டுப்பாடோடு விழித்திருந்தாள், விஷ்ணுப்ரியா.
நடுநசியைத் தாண்டிய நேரம்…
ப்ரீத்தியும் பிரம்மாவும் கட்டிப் புரண்டு கொண்டு, உறக்கத்தில் இருக்க, மெல்ல எழுந்து அமர்ந்தாள், விஷ்ணு.
நெஞ்சமெல்லாம் சொல்ல முடியாத குறுகுறுப்பு.
‘எனக்கு தெரிஞ்சுக்கணும்… அ..அது யாரு?’ என்று மனதோடு கேட்டவளுக்கு, தன்னை அணைத்து புதைகுழியிலிருந்து தூக்கிய கரங்களின் ஸ்பரிசம் உடலை சில்லிடச் செய்தது.
‘இது பைத்தியக்காரத்தனம்..’ என்று மூளை எடுத்துக்கூறியதைக் கேட்க, மனம் சித்தமாய் இல்லை.
அமைதியாய் எழுந்தவள், அலைபேசியை மட்டும் தனக்குத் துணையாய் எடுத்துக் கொண்டாள்.
எந்தவித ஓசையும் எழுப்பாமல், அமைதியாக அறையை விட்டு வெளியே வந்தவள், சுடரின் அறை பக்கம் சென்றாள்.
ஓசையெழுப்பாமல் அறைக்கதவை அவள் திறக்க, உள்ளே சுடரும் சுபியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அனைவரின் உறக்கத்தையும் உறுதி செய்துகொண்ட விஷ்ணு, மெல்ல வீட்டை விட்டு வெளியேறினாள்.
கும்மிருட்டான காடு, மீண்டும் உள்ளே சென்றுவிடக்கூறி அவளை மிரட்டியது. ஆனால் மனதின் உணர்வுகள், அனைத்தையும் துச்சமாய் தள்ளிவிட்டு முன்னேறவே பணித்தது. மனதின் பாதையை ஏற்று, தன்முன் விரிந்திருக்கும் பாதையில் கால் பதித்து முன்னேறத் துவங்கினாள்.
அலைபேசியின் ஒளியும், வானில் மிதக்கும் முழு நிலவின் ஒளியும் மட்டுமே, அவளுக்கு துணையாய் இருந்தன.
வனப்பகுதியால், தடைசெய்யப்பட்ட பகுதி ஒன்று அவளை வரவேற்று, விரிந்து கிடந்தது.
கைகள் குளிருக்கும் அச்சத்திற்கும் நடுநடுங்க,
அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு முன்னேறினாள்.
வனாந்திரம்…
மரங்கள் தங்களின் கோர நிழல் காட்டி அச்சமூட்ட, நெற்றியெங்கிலும் வியர்வை முத்துக்கள் பூத்தது.
காலில் மிதிபடும் இலையெல்லாம், கோரமாய் சிரித்து பயமுறுத்த, அவள் கண்கள் கலங்கின. என்ன ஒரு குருட்டு நம்பிக்கை என்று அவளுக்கும் புரியவில்லை..
‘எனக்கு தெரிஞ்சாகணும்.. யாரு? யாரு அது? அ..அந்த கை.. அந்த ஸ்பரிசம்.. அ..அந்த பச்சைநிறக் கண்..’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவளாய், முன்னேறினாள். முட்டாள்தனத்தின் உச்சத்தையெல்லாம், மனதில் தோன்றிய பெயர் தெரியாத உணர்வுகள் அடித்துத் துவைத்து, அவளை முன்னேற வைத்தது.
பாதை தவறாமல் செல்ல வேண்டும் என்பதையும் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். வெகு தூரம் செல்லாமல் காட்டிற்குள் போடப்பட்டிருக்கும் சாலையோரமாகவே தனது நடையைத் தொடர்ந்தாள்.
சற்று தூரம் வந்ததும், காட்டிற்குள் ஒளியைச் செலுத்திப் பார்த்தாள்.
அத்தனை நேரம் இல்லாத, ஒரு ஓசை அவள் காதுகளை எட்டியது.
“ஆமா.. இதையும் கவனத்துல வச்சுக்கோ. பத்திரம்” என்று ஒரு ஆணின் குரல் கேட்க,
‘இந்தக் காட்டுக்குள்ள மனுஷங்க இருக்காங்களா?’ என்ற யோசனையோடு அலைபேசி ஒளியை அணைத்து, பாறை ஒன்றின் பின் பதுங்கினாள்.
“நானும்தான் பத்து நாளா வந்துட்டுப் போறேன்? புதைகுழி இருக்குமிடத்துலருந்து தப்பினா உயிர்ப்பிழைக்கலாம். அதை விட்டுட்டுப் பேயி பிசாசுனு” என்று ஒரு ஆடவன் கூறியபடி வர,
அவன் நிழல் உருவம் மட்டும் கொஞ்சம் போல் அவளுக்குத் தெரிந்தது. இருளில் அவனும் கையில் அலைபேசியின் ஒளியை வைத்துத்தான் நடந்து வந்து கொண்டிருந்தான்.
‘யார் இவன்? தனியா இங்க என்ன பண்றான்?’ என்று அவள் யோசிக்கும் நேரம், அவன் பின் இன்னொரு உருவம் நடந்துவர,
‘தனியா வரல போலயே?’ என்று கூறிக் கொண்டாள்.
பின்னாடி வந்த உருவம், முன் செல்பவனின் தோளில் தட்ட,
நடை நிறுத்தியவனுக்கு திக்கென்று ஆனது.
“ச்ச.. யாருமிருக்காது.. எல்லாம் நம்ம பிரம்ம” என்று வாய்விட்டுக் கூறிக் கொண்டு அவன் அடுத்த அடி வைக்க,
மீண்டும் அவன் தோளில் ஓங்கி தட்டியது, பின்னாடி வந்த உருவம்.
நொடியில் அவன் உடலெல்லாம் வெளவெளத்துப் போனது.
பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் உடலும், அவளை அறியாமல் அதிர,
ஏதோ வித்யாசமான உணர்வை அவள் உள்ளம் உணர்ந்தது.
“யா..யாரு?” என்று பயத்தின் சாயம் பூசிய வார்த்தைகளை அவன் உதிர்க்கும் நேரம், பின்னே வந்த உருவத்தின் இதழ் இளக்காரமாய் வளைந்தது.
எச்சிலைக் கூட்டி விழுங்கியவன், நடுநடுங்கும் கரங்களில் அலைபேசியை அழுந்தப் பற்றிக் கொண்டு திரும்ப,
அவன் முன், உடல் முழுதும் பச்சை நிறம் கொண்டு, பச்சைநிற விழிகள் பளபளக்க நின்றிருந்தது, ஒரு உருவம்.
பார்த்த மாத்திரம், விஷ்ணுவின் உடல் பயத்தில் தூக்கிப்போட,
பச்சை நிற உருவம் கோரமாய் சிரித்தது.
உடல் வெளவெளத்து விஷ்ணு பார்த்திருக்க, கையில் மறைத்து வைத்திருந்த பெரிய கல் ஒன்றை ஓங்கி, முன்னிருந்தவன் தலையை உடைத்து விழச் செய்தான், பச்சையன்.
அரண்டுபோய் பயத்தில், விஷ்ணு மூச்சை சப்தமாய் இழுத்துவிட,
பச்சை விழிகள், கீழே விழுந்தவன் அலைபேசியைத் தூக்கி, அவள் பக்கமாய் அடித்தது.
பாரையோடு ஒன்றியவளின் உடல் சிலையாய் ஆனது.
பளபளக்கும் பச்சை நிற விழிகள், இருளில் பயம் கொடுப்பதாய் இருக்க,
அவன் ஒரு அடி முன்னே வைத்ததும், பதறிக் கொண்டு எழுந்தவள், வேகமாய் ஓட்டமெடுத்தாள்.
“ஹாஹா..” என்ற அரக்க சிரிப்பு அவளைத் தொடர,
பின்னே திரும்பிப் பார்த்துக் கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினாள்.
எத்தனை தூரம், எந்த பாதையில், எங்கு ஓடுகின்றோம் என்றெல்லாம் அவள் கருத்தில் இல்லை.
வேகமெடுத்து ஓடியவள், பின் பக்கம் பார்த்துக் கொண்டே ஓடி, எதன்மீதோ இடித்துக் கொண்டு தடுமாறி விழ,
அவள் கண்கள் முன் பச்சையனின் தோற்றத்தை ஒத்த கருநிற நிழல் உருவம் தெரிந்தது.
அதில் பயத்தின் உச்சத்திற்கு சென்றவள், “என்னை விட்ரு..” என்ற கேவலோடு அங்கேயே மயங்கி சரிந்தாள்.
காலை வால்பாறை குளிருக்கு இதம் சேர்க்கும் போர்வையை, இன்னும் கொஞ்சம் போர்த்திக் கொண்டு படுத்த பிரம்மாவை எட்டி உதைத்தாள், ப்ரீத்தி.
“அம்மே” என்று ஒரு அடி உருண்டு நகர்ந்தவள், “நாயே.. நான் உன் புருஷனில்ல.. இந்த உதை உதைக்குற?” என்று கத்த,
“என் புருஷனா இருந்தா நான் இப்படி எழுப்பிருக்க மாட்டேன். பாசமா ரொமான்டிக்கா..” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவள் திடுக்கிட்டாள்.
காரணம் திறந்திருந்த அறை வாசலில் கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு நிற்கும் சுடர் தான் என்பதில் ஆச்சரியமில்லையே?
‘ரொமான்டிக்கா?’ என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி, இதழ் அசைத்து அவன் கேட்டதில், அவளுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது.
“சொல்லுடி மண்டோதரி? என்னத்த ரொமான்டிக்கா கிழிப்பீங்க? ஒன்னு அந்த புண்ணியாவனே எழுந்தாலும் நீ எழாம தூங்கிட்டு இருப்ப. இல்லைனா எழுந்து, உன் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவ. ரொமான்டிக் இல்ல.. அதுல ரோ கூட வராது.. பாவம் அவன் உன்னைக் கட்டிக்கிட்டு சன்னியாசம் போ..” என்று பேசிக் கொண்டே போன பிரம்மாவின் வாயை ஓடிச்சென்று மூடினாள், ப்ரீத்தி.
‘அய்யோ.. யார் முன்னாடி வாங்கக்கூடாதோ, அவங்க முன்னாடியே என் மானம் மரியாதை எல்லாம் வாங்குறா’ என்று மனதோடு சிணுங்கியவள் முகமெல்லாம் செஞ்சாந்தாய் சிவந்தது.
“தெய்வத்திருமகளே.. தயவுசெஞ்சு எழுந்துபோயேன்டி” என்று ப்ரீத்தி கூற,
“இப்படி பாசமா சொல்லு ப்ரீத்தி டார்லிங்” என்று அவள் இடையில் விரல் வைத்து குத்திவிட்டு எழுந்தாள்.
“லூசு..” என்று திட்டியபடி கூச்சத்தில் சட்டென்று துள்ளி அவள் விலக,
“உங்க அட்டகாசம் முடிஞ்சதுனா சீக்கிரம் ரெடியாகுங்க” என்று சுடர் கூறினான்.
“ஏ சுடரண்ணா.. அதுக்குள்ள ரெடியாகியாச்சா? இரு இரு வரேன்” என்ற பிரம்மா, ஓடி சென்று பல் துலக்கிவிட்டு வர,
“சுபி காபி போட்டுட்டா. போய் குடி” என்று அவளை அனுப்பினான்.
“ஐ காபி” என்று பிரம்மா ஓடிவிட,
தானும் ஓடப்பார்த்த ப்ரீத்தியை மறித்து நின்றுகொண்டான்.
அவனைப் பார்த்து திருதிருவென்று விழித்தவள், “தள்ளுங்க.. நான் போனும்” என்று கூற,
“எங்க போனும்?” என்று கேட்டபடி அவளை நெருங்கினான்.
“கிக்..கீழ..” என்றவளுக்கு வார்த்தையெல்லாம் தந்தியடித்தது.
இப்படியெல்லாம் சுடர் அவளை நெருங்கியதே இல்லை. சமீபமாகத்தான் இந்த சீண்டல்கள் எல்லாம். இருவரும் பல வருடமாகக் காதலித்துக் கொண்டுதான் உள்ளனர் என்றாலும்கூட, பார்வையிலேயே அனைத்தையும் கடத்திச் செல்வானே அன்றி, நெருங்கியதெல்லாம் இல்லை. இந்த புது நெருக்கம் கொடுத்த தடுமாற்றம், அவளை வெகுவாக சோதித்தது.
“ரொமான்டிக்கா? நீ?” என்று சுடர் கேட்க,
“நீங்க இப்பலாம் இப்படி புதுசு புதுசா பேசுறீங்க?” என்று கேட்டாள்.
“நீ தான் சின்னப் பொண்ணுலருந்து இன்டிபென்டென்ட் லேடிக்கு டிரான்ஸ்பர் ஆயிட்டல்ல? கூடிய விரைவில் என் மாமனார்கிட்ட பேசும்முன்ன கொஞ்சம் ஜாலியா லவ் பண்ணலாம்னு தான்” என்று கூறி சுடர் கண்ணடித்தான்.
அவனை அதிர்வாய் பார்த்தாள்.
“என்னடி?” என்று அவன் சிரித்தபடி கேட்க,
“ஒ..ஒன்னுமில்ல.. தள்ளுங்க” என்று கூறினாள்.
“உன்னைப் பிடிச்சா வச்சுருக்கேன். போனும்னா போ” என்று அவன் கூற,
அவனைச் சுற்றி நகர எத்தனித்தவள் அவன் கைச்சிறையில் அகப்பட்டாள்.
திடுக்கிட்டுப்போய் பார்த்தவள், “எ..என்ன பண்றீங்க? விடுங்க” என்று கூற,
“நேத்து நீ மட்டும் அத்தனை பேர் முன்ன என்னைக் கட்டிப் பிடிச்சுகிட்டு இருந்த. இப்ப யாருமில்லாம தானே நான் பிடிச்சுக்கிட்டேன்?” என்று உரிமையாய் வம்பு செய்தான்.
தோளைச் சுற்றித்தான் பிடித்திருந்தான். அதற்கே அவளுக்கு அத்தனை கூச்சமாக இருந்தது. அவள் நாணம் அவனுள் அப்படியொரு குறும்பு சிரிப்பைக் கொடுத்தது.
“என்னங்க.. ஏன் இப்படி?” என்று அவள் தடுமாற,
“சரி சொல்லு.. பிரம்மா அப்படி சொல்லிட்டுப் போறா? நிஜமாவே ரோ கூட தெரியாதா?” என்று சிரிக்காமல் கேட்க, வெகுவாக சிரமப்பட்டான்.
“அச்சோ.. ஏன் இப்படி பண்றீங்க? விடுங்க” என்று அவனை நகர்த்திவிட்டு நகர முயற்சித்தவள், அவன் கால் தடுக்கி, அவனையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தாள்.
அவள் மீது தன் மொத்த பாரமும் விழாதிருக்க, கரத்தினை அவளுக்கு இருபக்கமும் ஊன்றியபோதும், இருவரின் முகமும் உரசிக்கொள்ளும் இடைவெளியில்…
அதிர்ச்சியில் விழி விரிய அவள் விழிக்க,
“பாரு.. இப்பக்கூட நீதான் கட்டிகிட்டு கட்டில்ல தள்ளுற” என்று விஷமமாய், கிசுகிசுப்பான குரலில் கூறினான்.
“அ..எ..ஏங்க.. ப்ளீஸ்..” என்று அவள் தடுமாற,
காதல் பித்தில் அழகாய் புன்னகைத்தவன், அவள் அருகே சரிந்து படுத்தான்.
அதீத நாணத்தோடு, “ஏன் இப்டிலாம் பண்றீங்க? எ..எனக்கு எப்டியோ இருக்கு” என்று ப்ரீத்தி கூற,
“ப்பா.. கூச்சத்துக்கே கூச்சம் வந்துடும் ப்ரீத்தி” என்று சிரித்தான்.
முகம் திருப்பி எழ முற்பட்டவள் கரம் பற்றியவன், “வந்து பொண்ணு கேட்கவா?” என்று கேட்க,
அவள் திருதிருவென்று விழித்தாள்.
“என்னடி? உனக்குக் கல்யாணம் ஓகேவா?” என்று அவன் கேட்க,
“சுபிக்கு பண்ணாம எப்படி?” என்று அப்போதும் தனது சம்மதத்தை வெளிப்படையாகக் கூற பயந்தாள்.
“ஏன் நீ என்கூட சேந்து அவ கல்யாணத்தை நடத்தித்தர மாட்டியா? அம்மா அப்பா ஸ்தானத்துல அவளுக்கு நாம செய்வோம்” என்று சுடர் கூற, நினைத்துப் பார்க்கவே கொள்ளை இன்பம் கொடுத்தது.
அதன் சாட்சியாய், அவள் இதழில் மெல்லிய புன்னகை.
“சொல்லு.. வந்து கேட்கவா?” என்று அவன் கேட்க,
“உங்க இஷ்டம்” என்றாள்.
“வாழப்போறது ரெண்டு பேருமாதான்.. உன் இஷ்டம்னு ஒன்னும் அதுல இருக்கு” என்று சுடர் கூற,
“பேசுங்க..” என்று நாணக்குடை பிடித்து இமை கவிழக் கூறினாள்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க,
முறைத்தாளே ஒரு முறைப்பு..
“முறைக்குறியாக்கும்? இதுதான் ரொமான்ஸா?” என்று அவன் கண்ணடிக்க,
“ப்ச்..” என்றாள்.
“சரிசரி சொல்லு.. பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க,
“வந்து பேசுங்கனு சொல்றேனே?” என்றாள்.
“அப்பவும் பிடிக்கும்னு சொல்ல மாட்டியா?” என்று அதிருப்தியாய் அவன் கேட்க,
“சொல்லுவேன்.. சொல்லும்போது சொல்வேன்.. உரிமை குடுங்க முதல்ல” என்றாள்.
“இப்ப மட்டும் உரிமையில்லையா உனக்கு?” என்று அவன் கேட்க,
“ஊர் அறிய குடுங்க” என்றவள், “அப்போ சொல்றேன்..” என்றாள்.
“எப்புடி? ரொமேன்டிகாவா?” என்று அவன் சிரிக்க,
அவனை முறைக்க முடியாமல் தானும் சிரித்து வைத்தாள்.
“சுடரண்ணா..” என்று பதட்டமாய் சுபியின் ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்க,
பதறிக் கொண்டு இருவரும் எழுந்தனர்.
அறைக்கு வந்த சுபி மற்றும் பிரம்மா, ஒன்றுபோல், “விஷ்ணுவக்காணும்” என்று கூற,
“வாட்?” என்று அதிர்வாய் கேட்டான்.

