
05
“விஷ்ணு…” என்ற இனிமையான குரல் அழைக்க,
“சொல்லு சிவு” என்று தனது தங்கையைப் பாசத்துடன் அழைத்தாள், விஷ்ணுப்ரியா.
அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவளது இரட்டை சகோதரி சிவப்ரியா, “நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் விஷ்ணு” என்றாள்.
“எனக்கும்டி சிவா” என்று தங்கையை அணைத்துக் கொண்டாள்.
திடீரென விஷ்ணுவின் குரல் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய,
“விஷ்ணு.. விஷ்ணு” என்று கத்தினாள்.
சிவா மற்றும் விஷ்ணு மறைந்த நொடி, அவ்விடமே இருள் பூசியது.
நன்றாக நின்றிருந்தவள் திடீரென்று புதைகுழிக்குள் வீழ்ந்து கத்திக் கதற, ஒரு வலிய கரம் அவளைப் பற்றிக் கொண்டு அதிலிருந்து தூக்கியது.
அரைமயக்க நிலையில் அவள் கண் விழிக்க, பளபளப்பான பச்சை நிற விழிகள் அவள் பார்வையில் எதிரொலித்தது.
படீரென்று எங்கிருந்தோ மணியடிக்கும் ஓசை கேட்க, அரண்டுபோய் தூக்கத்திலிருந்து எழுந்தாள், விஷ்ணுப்ரியா.
தன் சிரம் தாங்கி அமர்ந்திருந்தவள் முகத்தில் வியர்வை முத்து முத்தாய் பூத்துக் குலுங்கியது.
தொடர்ந்து அவளது அலைபேசி ஒலித்துக் கொண்டே இருக்க, அதை எடுத்துப் பார்த்தவள், அணைத்து வைத்தாள்.
மணியைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்ட விஷ்ணு, எழுந்து குளித்துத் தயாராகிப் புறப்பட்டாள்.
காலம் யாருக்கும் காத்திருக்காமல் விரைந்து சென்றிருந்தது…
பிரம்மா, ப்ரீத்தி, சுபி மற்றும் விஷ்ணு தங்கள் பட்டப் படிப்பை முடித்து, வேலைகளில் சேர்ந்திருந்தனர்.
பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஒரு நிறுவனத்திலும், ப்ரீத்தி மற்றும் சுபிக்கு ஒரு நிறுவனத்திலும் வேலை கிடைத்திருந்தது.
தங்கள் வாழ்வில் அடுத்தப்படியில் அடிவைத்து, பயணிக்கத் துவங்கியிருந்தனர்.
அன்று மாலை நால்வரும் ஒரு துரித உணவகத்தில் கூடி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,
“புது ஆஃபிஸ் சரௌண்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்குடி.. நீங்க இல்லாதது தான் மிஸ்ஸிங்” என்று பிரம்மா கூற,
“அதுக்கென்னடி பண்றது? இந்த மாதிரி தற்காலிக இடைவெளியை நாம பழகிக்கத்தான் வேணும். கல்யாணமெல்லாம் பண்ணிப்போயிட்டா என்ன செய்ய?” என்று சுபி கேட்டாள்.
“ஹ்ம்.. பாயிண்ட் தான்..” என்று பிரம்மா கூற,
“ஹே.. உங்களுக்கு ஒரு ஹாட் நியூஸ் தெரியுமா? வந்த ஒரே மாசத்துல நம்ம ப்ரீத்திக்கு ஒரு ப்ரபோஸல்..” என்ற சுபி, ப்ரீத்தியின் தோள் இடித்து, “ஆனா உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடி” என்றாள்.
ப்ரீத்தி முக பாவம் இந்த பேச்சின் மீதான பிடித்தமின்மையைக் காட்டியது.
“பாருடா.. யாருமா அந்த ராஜகுமாரன்? என்ன சொன்ன நீ?” என்று விஷ்ணு கேட்க,
“அவ என்ன சொல்லிருப்பா? நோ தான் சொல்லிருப்பா” என்று பிரம்மா கூறினாள்.
“நோ தான் சொன்னா.. ஆனா என்னிக்குமில்லாம இன்னிக்கு தான் அந்த பையன் விலகினான்.. ஒரு வாரமா சொன்ன நோவை விட இன்னிக்கு ஏதோ எக்ஸ்ட்ராவா சொல்லிருக்கா.. அந்த எக்ஸ்ட்ராலதான் பையன் கழண்டுகிட்டான்.. அப்படி என்னத்தடி சொல்லி அந்த பிஞ்சு நெஞ்சை உடைச்சு?” என்று சுபி கேட்க,
அவளுக்குப் பதட்டம் பிடித்துக் கொண்டது.
ஏனோ அவள் பயத்தை விடுத்து, அவள் தோழிகளிடம் கூடப் பகிர்ந்துகொள்ளாத பக்கம் அல்லவா அவன்?
“அ..அது.. முடியாதுதான் சொன்னேன்” என்று அவள் கூற,
“அதான்.. என்னிக்குமில்லாம இன்னிக்கு சொன்ன நோக்கு ஏன் அவன் போகனும்?” என்று விஷ்ணு கேட்டாள்.
“ப்ச்.. அப்படிலாம் ஏதுமில்லடி.. சும்மா அதையே கேட்காதீங்க.. கடுப்பா வருது. சரி நீ சொல்லு. நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற? அப்பா உனக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுருப்பாரே” என்று ப்ரீத்தி பேச்சை மாற்ற,
இவள் மனதில் அந்த பச்சைநிற விழிகள் வந்து போனது.
நொடியில் அவள் முகமே மாறிப்போக,
“என்னாச்சுடி?” என்று சுபி கேட்டாள்.
“என்ன கேர்ள்.. உன் முகமே சரியில்ல.. எதும் லவ்வு கிவ்வு பண்றியா?” என்று பிரம்மா கேட்க, ஏனோ ப்ரீத்திக்குத்தான் பதறியது.
“இல்ல..” என்று இழுத்த விஷ்ணுவின் உடல், அவளையும் மீறி சிலிர்த்து அடங்கியது.
அதற்குள் அவர்கள் வேண்டிய உணவுகள் வந்து, மேஜையை நிறைக்க,
“சரி சுபி.. உன் முடிவு என்ன? எப்ப கல்யாண சோறு போடப்போற?” என்று பிரம்மா கேட்டாள்.
“ஹ்ம்.. நோ ஐடியா.. சுடர் அண்ணா என்ன சொல்றானோ அதுதான்.. லவ் பண்ணா அண்ணா வேணாம்னு சொல்ல மாட்டான்.. அவன் வேணாம்னு சொல்ற குணத்தில் இருக்கும் யாரையும் நான் காட்டவும் மாட்டேன்.. பட் இப்ப வரை அப்படி யார் மேலயும் எனக்கு லவ் இல்லை” என்றவள் அறியவில்லை, அவள் மீது பித்துகொண்டு, அவளுக்காக ஒரு ஜீவன் தவிப்பதை.
“எல்லாரையும் கேட்குற.. நீ என்ன பண்ணப் போற?” என்று ப்ரீத்தி கேட்க,
“காதோல் கீதோல்னு போய் நின்னா சிவா தொடப்பக்கட்டையத்தான் எடுக்கும். நமக்கு எதுக்கு வம்புங்குறேன்? அதுவுமில்லாம ஒரு பையனைப் பார்த்து, எஃபோர்ட் போட்டு காதலிக்க வச்சு, ரெண்டு வீட்லயும் சண்டை போட்டு கல்யாணம் பண்ற அளவு எனக்கு திறமையும் இல்ல, தெம்பும் இல்ல. யாரையாவது பார்த்து சிவா குடுக்கும்.. ஜம்முனு கட்டிக்கிட்டுப் போக வேண்டியது தான். ஆனா கொஞ்சம் வேலைப் பார்த்து, சொந்தக் கால்ல நின்னு, மெச்சூர்டா முடிவு எடுக்கும் பக்குவம் வரும்வரை எனக்கு டைம் வேணும்” என்று கூறினாள்.
ஏனோ ப்ரீத்தி மற்றும் விஷ்ணுவால் அவர்கள் பேச்சில் இணைய முடியவில்லை.. ப்ரீத்திக்குத் தோழிகளிடம் மறைப்பது குற்ற உணர்வாய் இருந்தது என்றால், விஷ்ணுவிற்கு தன் உணர்வுகளை எண்ணிக் குழப்பமாக இருந்தது.
‘யாரு நீ?’ என்ற அவளது குரலும், அதற்கு பதிலாய் அவளைத் தீண்டிய அந்த உஷ்ணமானக் காற்றும், அவளை இத்தனை மாதங்களுக்குப் பிறகும், என்னவோ செய்தது.
‘யார் நீ? ஏன் என் மைன்ட்ல உக்காந்துட்டு என்னைப் படுத்துற?’ என்று மனதோடு அவள் கேட்டுக்கொள்ள,
“சரி இந்த வெள்ளி, சனி, ஞாயிறு லீவு வருதுல? எங்கயாவது போவோமா? சுடரும் கேட்டான்.. என்ன வீக்கென்ட் ப்ளான் எதாவது பண்றீங்களானு.. போலாமா?” என்று சுபி கேட்டாள்.
சட்டென்று விஷ்ணு, “வால்பாறை” என்று கூற,
மற்ற மூவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர்.
மீண்டுமா? அங்கேயா? என்ற எண்ணம் மூவருக்கும் எழுந்தது.
ஒரு முழு நிமிடம் தொடர்ந்த அமைதியில் தான் மற்ற மூவரையும் அவள் கவனித்தாள்.
“அ..அது.. அந்த காட்டுக்கு இல்ல.. அங்க நாம சுற்றிப்பார்த்த இடமெல்லாம் அழகா இருந்தது. ப்ளஸ் இன்னும் நிறைய ஸ்பாட்கு நம்மால போக முடியலைல அப்போ?” என்று விஷ்ணு கூற,
“எதையும் மறைக்குறியா விஷ்ணு?” என்று சுபி பட்டென்று கேட்டிருந்தாள்.
தடுமாற்றமாய் தான் இருந்தது. ஆனால் தனக்கே புதிராக இருக்கும் இந்த உணர்வை என்னவென்று கூறிட இயலும்? அப்படியே கூறினாலும்தான் புரிந்துகொள்வரா? நிச்சயமாக அங்கே செல்லவே வேண்டாம் என்றல்லவா கூறுவர்? என்று யோசித்தவள், “லூசு.. நான் என்னத்த மறைக்கப் போறேன்?” என்று கூற,
“இவ எதுக்கு அங்க போனும்னு சொல்றானு எனக்குத் தெரியும்” என்று பிரம்மா கூறினாள்.
விஷ்ணு உள்ளம் பதறியவளாய் பிரம்மாவைப் பார்க்க, அவள் முகத்திற்கு சற்று நெருங்கி வந்து, “அன்னிக்குக் காட்டுல விட்டுட்டுப்போன ஊஜாஆ போர்டை எடுக்கத்தான அங்க போகலாம்னு சொல்ற?” என்று தீவிரக் குரலில் கேட்டாள்.
அதில் மற்ற இருவரும் பக்கென்று சிரித்துவிட, விஷ்ணுவும் உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டு, “ச்சி தள்ளு நாயே.. யாராவது தப்பா நினைக்கப் போறாங்க” என்று அவளைத் தள்ளிவிட்டாள்.
மீண்டும் சிரிப்பலை தொடர,
“சரி நான் சுடர் அண்ணாகிட்ட கேட்குறேன்.. பட் விஷ்ணு.. என்கிட்டக் கோச்சுக்காத.. சுடர் அண்ணா முடியாதுனு சொல்லிட்டான்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது” என்று சுபி கூறினாள்.
நால்வரும் அவரவர் வீடு திரும்ப, விஷ்ணு மற்றும் ப்ரீத்தியின் மனம் மட்டும், சொல்ல இயலாத உணர்வுகளின் பிடியில் தவித்தது.
அங்கு அந்த மர்மக் காட்டில், பச்சை இலைகளுக்கு நடுவே, தனித்து அமர்ந்திருந்தது அந்த பச்சை உ(அ)ருவம்…
சிங்கம் ஒன்று, தனது வயிற்றுப் பசிக்கு, புசித்து மகிழ, மருண்ட மான் ஒன்றைத் துரத்திக் கொண்டுவர, துள்ளிக் குதித்து, தன் இன்னுயிர் காக்க ஓடியது அந்த மான்…
முன்னங்கால்களும், பின்னங்கால்களும், பூமியின் விசையை எதிர்த்து, எம்பிக் குதிக்க ஓடிய மான், அந்தப் பகுதியை அடைய, தன் மான் விழிகள் கண்ட உருவத்தில் அச்சம் கொண்டு, மருண்டு திசை தெரியாமல் தெரித்து ஓடியது…
புதருக்குள்ளிருந்து குதித்து வந்த வேங்கையானது, மான் கண்டதைத் தானும் கண்டு, அச்சத்தில் விதிர்விதிர்த்து நின்றது…
வேங்கையின் வேல் விழிகளே அச்சம் கொண்டு, அஞ்சி, தன் சக்தி மொத்தமும் திரட்டி பயங்கரமாய் உருமியது…
அதன் உருமலெல்லாம் அந்த உ/அருவத்தை பயம் கொள்ள வைத்திடுமா என்ன?
அந்த பச்சை நிற விழிகள், மங்கும் சூரிய வெளிச்சத்தில் பளபளக்க, அதைக் கண்டு இன்னும் அஞ்சிய வேங்கையது, அங்கிருந்து ஓடியது.
சில நிமிடங்களில், வேங்கையின் பெரும் உருமல் சப்தம், காட்டையே கிழித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், கருப்பசாமி…
ஊரே அஞ்சி நடுங்கும் அந்தக் காட்டின் சாலைகளில், கருப்பனைத் தவிர யாருமே ரோந்து பணிக்குச் சென்றதில்லை. அவனது அலுவலகத்தில், அவனை அனைவரும் வேற்றுகிரக வாசியைப் போல் பார்ப்பதற்கு அதுவும் ஒரு காரணம்…
சிங்கத்தின் கர்ஜனையை முதலில், சாதாரணமாக காட்டிற்குள் தனது இரையைப் பிடிக்கக் கத்திக் கொண்டிருக்கின்றதென்று நினைத்துக் கடந்தவனுக்கு, நேரம் செல்லச் செல்ல, அதன் ஒலி, வலியில் கத்துவதைப் போன்றிருந்தது.
வண்டியை ஓரம் நிறுத்தியவன், தனது கைத்துப்பாக்கியை, பாதுகாப்பிற்காக எடுத்துக் கொண்டு, காட்டிற்குள் இறங்கினான். சுற்றி முற்றிப் பார்த்தபடி, தனது நடையை எடுத்து வைத்தவன், கர்ஜனை ஒலியைத் தொடர்ந்து செல்ல, சில நிமிடங்களில் கர்ஜனை நின்றது…
காட்டிற்குள் விரைந்து சென்றவன், புதை குழி ஒன்றை நெருங்க, அங்கே சிங்கம் ஒன்று, உடலெங்கும் சேரோடு புதைகுழியின் ஓரமாய், சோர்வுற்றுப் படுத்துக்கிடந்தது.
அதைப் பார்த்தவன், சுற்றிமுற்றித் தன் பார்வையைச் சுழற்றினான்…
புதைகுழியில் விழுந்து தானாக உயிர்த்தப்பும் வாய்ப்பெல்லாம் வெகு அரிது. பிடித்துக் கொண்டு வெளியேற எதுவும் கிடைத்தாலன்றி வேறு வழியே இல்லை. எனில் யார் இந்த சிங்கத்தைக் காப்பாற்றியிருக்க முடியும்?
அவன் மனதில் பெரும் சந்தேகம் ஓடியது.
‘நானும்தான் இந்தக் காட்டுக்கு வரேன். எனக்கு எப்பவும் எதுவுமே ஆனதில்ல. அப்றம் ஏன் இந்தக் காட்டுக்கு வர்றவங்க எல்லாரும் சாகுறதா சொல்றாங்க?’ என்று அவன் மனம் எப்போதும் கேட்டக் கேள்வியையே இப்போதும் கேட்டது.
அந்தப் புதைகுழியை மீண்டும் பார்வையிட்டவன், ஒரு பெருமூச்சுடன் திரும்ப, பின்னபுறமாக ஏதோ புதர் அசையும் சப்தம் கேட்டது.
அதில் சட்டென்று திரும்பியவன் கண்களில் கூர்மை கூட, அசைந்தாடும் புதருக்குள்ளிருந்து, வழமைபோல், அனைத்துத் திரைப்படத்திலும் நிகழும் விதமாய், முயல் ஒன்று துள்ளி ஓடியது.
இருந்தும், நம்பிக்கையற்றவனாய், பூனை நடையிட்டுச் சென்றவன், புதரை விலக்கிவிட்டுப் பார்க்க, அங்கே ஒரு காலடித்தடம் சேற்றால் அச்சடிக்கப்பட்டதைப் போல் மின்னியது.
அதைக் கண்டு அதிர்ந்து போனவன், அந்தக் காலடித்தடங்களைத் தேடிச் செல்ல, அருகிலிருந்த குளம் ஒன்றினில், அந்தப் பாத சுவடுகள் முடிவடைந்திருந்தது.
சுற்றி முற்றித் தேடியவன், மனதோடு சூழ்ந்த ஏமாற்றத்துடன் திரும்ப, விஷ்ணுவைக் கண்டெடுத்தப் புதைகுழி இருக்கும் பகுதி தெரிந்தது.
உடனடியாக அழையா விருந்தாளியாய், சுபிக்ஷாவின் முகம் அவன் மனதில் வந்து போனது. முகம் முற்றுமாய், அவன் கட்டுப்பாட்டை மீறி வாட, “சுபி..” என்று காற்றுக்கும் கேட்காதக் குரலில் முனுமுனுத்துவிட்டுச் சென்றான்…
அவன் மனம் கொண்ட மங்கையிவள், கொள்ளைகொண்ட மனதை மீட்டுத் தருவதற்காகவே அவன் இருப்பிடம் நோக்கி வருவதற்கு ஆயத்தம் செய்துக் கொண்டிருந்தாள்…

