
04
நள்ளிரவு வேளை…
பிரம்மாவும் ப்ரீத்தியும் உறங்கியிருக்க, இருவருக்கும் அருகே, சோர்வாய் தூக்கம் சொக்க அமர்ந்திருந்தாள், சுபிக்ஷா.
இரண்டுமுறை தூக்கத்தில் அவள் தலை சாய, தன்னை மீட்டுக்கொள்ள வெகு பிரயத்தனப்பட்டாள்.
“தூங்குறதுனா தூங்குமா” என்று கருப்பு கூற,
“இருக்கட்டும் சார்” என்று அவள் கூறும்போது, “சுபி..” என்ற குரல் கேட்டு சட்டென்று எழுந்தாள்.
அங்கு சுடர் வந்து நிற்க,
“சுடர்” என்று கதறலாய் அழைத்தபடி ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டவள், தேம்பி அழுது விட்டாள்.
அத்தனை நேரம் அவள் கடைபிடித்த தெம்பெல்லாம் அவனிடம் தஞ்சம் புகுந்ததைப்போல், அவள் தேம்பி அழ,
“சுபிமா..” என்று தங்கையை அணைத்துக் கொண்டவன், அவள் முகம் பற்றி, “கூல் கூல்டா சுபி” என்றான்.
“சுடர்.. நாங்க எதுவும் வேணும்னே பண்ணலை சுடர்.. இ..இது..” என்று சுபி அழ,
“ஷ்ஷ்.. ஷ்ஷ்..” என்று அவளுக்குத் தட்டிக் கொடுத்தவன், அவள் தோய்ந்து சாயவும், “ஏ சுபிமா..” என்று பதறினான்.
அவள் சாய்வதில் கருப்பசாமியும் பதறிக் கொண்டு வந்து பிடிக்க,
“சுபி..” என்று அழைத்தபடி அவளை இருக்கையில் அமர்த்தினான்.
கருப்பு தண்ணீரெடுத்து வர,
சுடர் அதைத் தங்கைக்குப் புகட்டினான்.
அவள் பெருமூச்சோடு சாய்ந்து அமர, அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டவன், கருப்பைப் பார்த்து, “நீங்கதானே சார் இவங்கள கூட்டிட்டு வந்தவங்க?” என்று கேட்டான்.
“ஆமா சார்..” என்று கருப்பு கூற,
“ரொம்ப நன்றி சார்.. சின்ன பொண்ணுங்க.. பண்ணது தப்புத்தான்.. பட் ப்ளீஸ் சார்.. இது வெளிய போக வேணாம். தெரிஞ்சா படிப்புல இருந்து எல்லாமே ஸ்பாயில் ஆயிடும் சார்.. ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.
“சார்.. டோன்ட் வொர்ரி.. நான் அதெல்லாம் எதுவும் பண்ணலை” என்றவன், “பெரியவங்க வரலையா?” என்று கேட்க,
“சுபிக்கு நான் மட்டும்தான்.. விஷ்ணு பிரம்மா எனக்கும் தங்கச்சி தான்.. நான் பார்த்துக்குறேன் சார்.. ரொம்ப நன்றி” என்று கூறினான்.
சரியென்று கூறிய கருப்பசாமி, பத்திரம் கூறிவிட்டுப் புறப்பட,
சுடரொளிவானன், அத்தனை நேரம் தனது தங்கை கொடுத்த அரவணைப்பை, தான் அவளுக்குக் கொடுக்கலானான்.
விஷ்ணுப்ரியா, பிரம்மவதனி, சுபிக்ஷா மற்றும் ப்ரீத்தி நால்வரும், பள்ளிகாலம் தொட்டுத் தோழிகள். தற்போது முதுநிலை கணினி பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவிகள்.
ப்ரீத்தி வீட்டுக்கு ஒரே பெண். செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள் என்றாலும், பிள்ளையின் ஒழுக்கத்தையும் கணக்கில் கொண்டு, அதிக கண்டிப்பையும் ஊட்டியே வளர்த்தனர், பிரபாவதி மற்றும் சுந்தர் தம்பதியினர்.
விஷ்ணுவுக்குத் தந்தை மட்டுமே. ராமராஜன், மிகவும் சாதுவான மனிதர். தந்தை வளர்க்கும் மகள் என்பதைவிட, மகள் வளர்க்கும் தந்தை என்று கூறுமளவு, அவரும் அவரது மகளும். பாசமும் கண்டிப்பும் இருக்கும் என்றாலும், அதிர்ந்து பேசி அறியாத மனிதர்.
பிரம்மா, அவளது பெற்றோருக்குப் பல வருடங்கள் கழித்து, இரண்டாம் மகவாய் உதித்தவள். அவளது அக்கா சிவலட்சுமி, மாமா ராஜசேகரன், அவர்களது ஐந்து வயது ஆண் குழந்தை மட்டுமே, தற்போது அவளுக்கென்ற சொந்தம்.
சுபியின் பெற்றோர், விவகாரத்துக் காரணமாய் பிரிந்து, தனித்தனி வாழ்வைப் பார்த்துச் சென்றுவிட, அவளும் அவளது அண்ணனும், பாட்டியிடம் தங்கள் வாசத்தை வைத்துக் கொண்டனர். பாட்டி இறந்த பின்பும் கூட, சுடர் தங்கையைத் தனது பொறுப்பில் பார்த்துக் கொள்ள, நால்வரின் நட்பைப் போல், அந்த நான்கு குடும்பங்களும் கூட, ஒன்றிணைந்து இருந்தனர்.
மறுநாள் காலை, பெண்கள் மூவரும் தூக்கம் கலைந்து எழ, சுடர் மூவருக்கும் பாதுகாப்பாய் அங்கே அமர்ந்து, தூக்கம் போக, குளம்பி குடித்துக் கொண்டிருந்தான்.
“சுடரண்ணா… எப்போ வந்த?” என்று பிரம்மா கேட்க, அவன் பார்த்தானே ஒரு பார்வை..
அதன் உஷ்ணத்தில் கப் சிப் ஆனவள், சுபியை நோக்க, சுபியும் எதுவும் பேசாமல்தான் இருந்தாள். எனில் ப்ரீத்தியைத்தான் சொல்லவும் வேண்டுமா?
“உங்க மூனு பேரையும் கன்னம் கன்னமா அறையனும் போலத்தான் வருது எனக்கு.. உயிர் உங்களுக்கு விளையாட்டா போச்சா?” என்று சுடர் காட்டமாய் கேட்க,
“சாரி சுடர்.. நாங்க எதுவும்..” என்று சுபி முடிக்கும் முன், “வாய மூடு சுபி” என்றான்.
“சுடரண்ணா.. சுபியை எதுவும் சொல்லாத. இதுக்கெல்லாம் காரணம் நான்தான்.. நான்தான் அந்த காட்டைப் பத்திச் சொல்லி, அங்க போலாம்னு ஐடியா குடுத்தேன்.. அங்க யானையெல்லாம் இருக்கும்னு தெரியாம போச்சு” என்று பிரம்மா கூற,
“சொன்னது நீன்னு சரெண்டர் ஆகுறதால உன்னையும் விட மாட்டேன், நீ ஒருத்தி சொன்னனு மூளையைக் கழட்டி வச்சுட்டு உன் பின்னாடி வந்த இதுகளையும் விடமாட்டேன்” என்று கத்தினான்.
ப்ரீத்தி அரண்டுபோய் அமர்ந்திருக்க,
“போய் மூஞ்சி கழுவிட்டு வாங்க” என்று கூறி அனுப்பினான்.
மூவரும் புத்துணர்ச்சி பெற்று வருவதற்குள், மருத்துவரிடம் சென்று பேசிவிட்டு வந்தவன், “விஷ்ணு நைட்டே முழிச்சுட்டா.. ரொம்ப பெயின்னு அழுகை.. நாலு அஞ்சு பெயின்கில்லர் போட்டுத்தான் படுக்க வச்சிருக்காங்க. எப்படியும் இன்னிக்கும் ஆஸ்பிடல்ல இருக்குற போலதான் இருக்கும். காலேஜ் திறக்க இன்னும் பத்து நாள் இருக்கு தானே? காலைலயே சிவாக்கா கால் பண்ணாங்க. நான் அட்டென்ட் பண்ணி ப்ளான் எக்ஸ்டென்ட் ஆயிருக்குனுதான் சொல்லி வச்சிருக்கேன். நேர்ல கூட்டிட்டுப் போகும் வரை எதுவும் சொல்ல வேணாம். அப்புறம் இன்னொன்னு.. காட்டுல போய் விழுந்ததா சொன்னா நாலு பேருக்கும் வீட்ல சோறு தண்ணியே கிடைக்காது பிறகு.. நடந்து போகும்போது வண்டி எதுவும் இடிச்சிடுச்சுனு சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்று கூறினான்.
“விஷ்ணுவைப் போய் பார்க்கலாமா?” என்று கண்ணீரோடு ப்ரீத்தி கேட்க,
ஆடவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் பார்த்ததும் பாவைத் தன் பார்வையைத் தழைத்துக் கொள்ள, அவன் இதழ் சற்றுப் புன்னகைக்கத் துடித்து, அவன் கட்டளையின் பெயரில் அடங்கியது.
“போய் பாருங்க..” என்று அவன் கூற,
மூவரும் உள்ளே சென்றனர்.
கட்டிலில் கட்டுகளுடன் படுத்திருந்தவள் முகம் வலியில் சுருங்கித் தெரிந்தது.
அவள் மனம், நிகழ்வுக்கும் மயக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தது. அவள் பார்வையில் பட்டதெல்லாம்,
பச்சை நிறத்தில் காற்றைப்போல் தன்னைத் தீண்டிய கரங்களும், பச்சை நிற விழிகளும் தான்..
புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருந்தவளைத் தூக்கிய அந்தப் பச்சைக் கரம்… காற்றைப் போல், தன்னைத் தீண்டியதா? என்று அறிந்துகொள்ள இயலாத ஸ்பரிசம்.. நினைக்கையிலேயே அவள் உடல் சிலிர்த்தடங்கியது.
அதேநேரம்.. அங்கு அந்தக் காட்டில், புதைகுழிக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது ஒரு வயோதிக உடல்…
“அய்யோ.. யாராவது காப்பாத்துங்களேன்.. இந்தக் காட்டோட சாபத்துக்கு ஒரு முடிவே இல்லையா..” என்று அவ்வுருவம் கத்திக் கூச்சல் போட,
அந்தப் பச்சைநிற விழிமணிகள், கதறும் அந்த மனிதனையே கண்கள் பளபளக்கப் பார்த்து, தனது கூர் பற்கள் பிரகாசிக்கப் புன்னகைத்தது…
வாரம் ஒன்று கடந்திருந்தது..
“இதுக்குத்தான் உங்களையெல்லாம் ஒண்ணா அனுப்பக்கூடாதுன்னு சொல்றது.. சுடர்.. நீ சொன்னேன்னுதானே அனுப்பினோம்? பாரு என்ன பண்ணிட்டு வந்துருக்கானுங்க.. ஒன்னுக்கொன்னு ஆயிருந்தா என்னத்துக்கு ஆகும்?” என்று ப்ரீத்தியின் தாய் பிரபா சப்தம் போட,
விஷ்ணுவிற்கு பெரும் குற்ற உணர்ச்சியாய் இருந்தது.
“அம்மா.. ப்ளீஸ்.. அண்ணாவ திட்டாதீங்க.. நா..நான் கவனிக்காம விழுந்ததுக்கு அண்ணா என்ன பண்ணுவான்? ப்ளீஸ் அண்ணாவைத் திட்டாதீங்க” என்று கண்கள் கலங்கி கண்ணீரோடு விஷ்ணு கூற,
பிரம்மா அவளை அரவணைத்துக் கொண்டாள்.
“ப்ச்.. விஷ்ணு…” என்று அவளை அதட்டிய சுடர், “அம்மா.. சாரிம்மா..” என்று கூற,
“சாரி சுடர்.. நீயும்தான் என்ன பண்ணுவ?” என்ற பிரபா, “சரி போய் படுத்து ரெஸ்ட் எடு.. அடுத்து ஆறு நாள்ல காலேஜ் வேற இருக்குல்ல?” என்று கூறினார்.
விஷ்ணுவின் தந்தை ராமராஜன், “பாப்பா.. வாடா” என்று அவளைத் தாங்க,
அவளுக்கு இன்னும் கண்ணீர் வந்தது.
தன்னால் தானே அனைவருக்கும் சிரமம் என்று மனம் குமைய,
“சாரிப்பா” என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.
“அய்யோ பாப்பா.. அழாதடா.. உடம்பு வேற சரியில்லைல? உன்னை யாரோ வந்து இடிச்சுட்டுப் போனதுக்கு நீ என்னடா பண்ணுவ? விடுடா கண்ணம்மா.. அப்பா எதுவும் நினைக்கலைடா.. அழாதடா” என்று ராமராஜன் கூற,
பார்த்த அனைவருக்கும் பெரும் வருத்தமாக இருந்தது.
அனைவரும் விஷ்ணு வீட்டில்தான் கூடியிருந்தனர். விஷ்ணுவை வண்டி ஒன்று இடித்துவிட்டதாக அவர்கள் கூறிய பொய்யை நம்பி, பெண்கள் நால்வரோடு சேர்த்து, அவர்களுக்குப் போக அனுமதி வாங்கித்தந்த சுடரையும் சேர்த்து வருத்தெடுத்திருந்தார், பிரபாவதி.
பின் இதில் யாரையும் குறை கூறுவதற்கில்லை என்று புரிந்து, அவரும் மனம் வருந்தி தான் நின்றார்.
“விஷ்ணு.. உடம்பைக் கெடுத்துக்காத. வா வந்து படு” என்று பிரம்மாவின் அக்கா சிவா கூற,
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
தோழிகள் மூவர், மற்றும் சுடரும் உள்ளே செல்ல,
சுடரின் கரம் பற்றிக் கொண்டு, “சாரி சுடரண்ணா.. என்னாலதான் நீயும் திட்டு வாங்குற” என்று கூறினாள்.
மென்மையான புன்னகையுடன், “சின்ன வயசுல சுபி, பாட்டி கழுவி வச்ச பாத்திரத்தையெல்லாம் எடுத்து கிணத்துக்குள்ள வீசிடும்.. தெரியாமதான் செய்வா.. பாட்டி ஆனா என்னைத்தான் திட்டுவாங்க..” என்று அவன் கூற,
சுபி மென்மையான புன்னகையுடன் அவன் புஜத்தைக் கட்டிக் கொண்டாள்.
“நீயும் எனக்கு சுபி மாதிரிதானேடா.. விடு.. எதையாவது நினைச்சு அழுது உடம்பைக் கெடுத்துக்காம நல்லா ரெஸ்ட் எடு” என்று சுடர் கூற,
அவனை அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் சுடர் அண்ணா” என்றாள்.
மென்மையான புன்னகையுடன் அவள் தலைகோதியவன், “விடுடாமா.. எல்லாம் ஒரு பாடம் தான்.. என்ஜாய் பண்ணின நாட்களை மட்டும் மனசுல வச்சுட்டு, மித்ததையெல்லாம் மறந்து வா” என்று கூற,
அவள் மனதில் அந்தப் பச்சைநிறக் கண்கள் வந்து போயின..
மறந்திட இயலுமா?
உடலில் ஒரு சிலிர்ப்புத் தோன்றி மறைய, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.
அப்படியே மெல்ல மெல்ல அவள் தூக்கம் கொள்ளவும், அவளைப் படுக்க வைத்தவன், “தூங்கட்டும்.. வாங்க போகலாம்” என்க,
பெண்கள் ஒவ்வொருவராய் எழுந்து வெளியேறினர்.
பிரம்மாவும் சுபியும் முன் சென்றுவிட, ப்ரீத்தியின் கரம் பற்றி நிறுத்தியிருந்தான், சுடர்.
அவள் அதிர்ந்துபோய் திரும்ப, “நீகூட என்கிட்ட மறைச்சுட்டல்ல?” என்று கோபம் கொண்டு கேட்டான்.
“ப்ச்.. விடுங்க.. எல்லாரும் வெளிய இருக்காங்க” என்று ப்ரீத்தி அதீத பயத்தோடு கூற,
“இருக்கட்டும்.. எனக்கு பதில் சொல்லு.. என்கிட்ட ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.
“நா.. நான் வேணாம்னு தான் சொன்னேன்..” என்று மெல்லிய குரலில் சிரம் தாழ்த்தி அவள் கூற,
“என்கிட்ட சொல்லலைன்னுதான் கேட்டேன்” என்றான்.
பதில் சொல்லத் தெரியாமல், “நா.. நான் போறேன் விடுங்க” என்று அவள் தடுமாற,
அவன் இதழ்கள் புன்னகைக்கத் துடித்தது.
ஆம்! சுடரும் ப்ரீத்தியும் காதல் பறவைகள்.. வீட்டில் யாருக்கும் அவர்கள் காதல் விவகாரம் தெரியாது. ப்ரீத்திக்கு காதல் என்றாலே அதீத பயம்தான்.. அதிலும் பெற்றோர் என்ன சொல்வரோ என்ற பயமும் கூட.. சொல்லப்போனால் தைரியமாக அவனிடமே இன்னும் அவள் காதலை முன்மொழிந்திருக்கவில்லை.. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது.. ஆனால் சொல்லிக்கொள்ளத்தான் அவளுக்கு பயம் தடா போட்டது.
மெல்லிய குறும்பு புன்னகையோடு அவன் அவளை நோக்க, அவளுக்குத்தான் பயத்தில் வெடவெடப்பாக இருந்தது.
“எ..எனக்கு பயமா இருக்கு.. விடுங்களேன்” என்று அவள் கூற,
அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு அவன் வெளியேறினான்.
அவன் அணைப்பில் அதிர்ந்துபோய் நின்றவள், படபடக்கும் நெஞ்சை சமன்படுத்த முடியாமல், அங்கேயே அமர்ந்து விட்டாள்.
இங்கு உறக்கத்திலும், தன் கண்முன் தோன்றும் பச்சை நிற விழிகளுக்கு சொந்தமானவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து, உடல் சிலிர்க்கப் படுத்திருந்தாள், விஷ்ணு..
‘யார் நீ?’ என்ற அவளது குரலே, அவள் காதுக்குள் கேட்டது.
பதிலாய், ஒரு கதகதப்பான காற்று அவள் காதுமடலைத் தீண்டியது.
அவள் சேறு படிந்த உடலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பாய் மேலே தூக்கிய அந்த ஸ்பரிசம், அவளுக்குள் மின்சாரம் பாய்ச்சியது…
அந்த ஸ்பரிசம் யாருடையது? அது யார்? சாமியா? இல்லை ஆசாமியா?
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.. பெண்களின் நட்பும் சுடரின் பாசமும் அருமை 👍