Loading

02

 

மகிழுந்தில், மெல்லமாய், ‘என் உள்ளே என் உள்ளே, ஒரு மின்னல் எழும் நேரம்…’ என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, வெளியே அடை மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

 

மகிழுந்தின் குளிரூட்டியை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தபோதும், பெண்கள் நால்வருக்கும் அத்தனை குளிர்வாக இருந்தது.

 

“என்னடி மழை இப்படிக் கொட்டித் தீர்க்குது?” என்று ப்ரீத்தி கேட்க,

 

“ம்ம்.. நானும் அதுதான் பார்க்குறேன்.. இப்பக்குள்ள நிற்குமான்னு தெரியலையே” என்று விஷ்ணு கூறினாள்.

 

“என்ன ஆனாலும் சரி.. காட்டுக்குள்ள காலடியாவது வச்சுட்டுத்தான் திரும்புறோம். இல்லைனா வரலாறு நம்மைத் தப்பா பேசாதா?” என்று பிரம்மா கேட்க,

 

சுபிக்ஷா அமைதியாக இருந்தாள்.

 

அவளும் இதுபோன்ற அமானுஷ்ய கதைகள் எதையும் நம்பமாட்டாள் தான். ஆனால் ஏனோ இவ்விடம், அவளுக்கு ஒருவித எதிர்மறை ஆற்றலை உணர்த்துவதாய் தோன்றியது. வரும்போதே அந்த முதியவர் தடுத்தது, வானம் இருண்டது, கிளை வீழ்ந்தது, மழை பெய்வதென்று, அனைத்தும், அவர்களைக் காட்டிற்குள் செல்லவிடாமல் தடுப்பதாகத் தோன்றியது.

 

சிலப்பதிகாரத்தில், தானாய் காற்றுக்கு ஆடிய கொடியானது, கோவலன் மற்றும் கண்ணகிக்கு நடக்கவிருக்கும் அவலம் உணர்ந்து, வரவேண்டாம் என்று சைகை செய்வதாய், இளங்கோவடிகள் தனது குறிப்பை ஏற்றியதைப் போல், நடந்த அனைத்தும் அவர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நிகழ்ந்ததாய், தனது எண்ணத்தை அதில் ஏற்றி, எண்ணிக் கொண்டாள்.

 

மெல்ல மெல்ல மழையின் வீரியம் குறைய, மணி மதியம் இரண்டைக் கடந்து, மூன்றை நோக்கி பாதி தூரம் சென்றிருந்தது.

 

“ஏ பசிக்குதுடி” என்று ப்ரீத்தி கூற,

 

“சாப்பாடாடி முக்கியம்?” என்று விஷ்ணு கேட்ட கேள்விக்கு, “அஃப்கோர்ஸ்டி” என்று உடனே பதில் கொடுத்திருந்தாள்.

 

“கேர்ள்ஸ்.. மழை விடுற மாதிரி தெரியுது.. கொஞ்சம் வெயிட் பண்ணினா மழை விட்டதும் காட்டுக்குள்ளப் போய் பார்த்துட்டே வந்துடலாம்” என்று பிரம்மா கூறவும்,

 

“என்னாச்சு சுபி? எதுமே பேச மாட்ற?” என்று திசைமாற்றியில் விரல் தட்டி தாளமிட்டபடி தனது சிந்தனையில் இருந்தவளிடம் விஷ்ணு கேட்க,

 

“அ..ஆங்? நத்திங் நத்திங்டா” என்றாள்.

 

“என்னாச்சு சுபி? ஏதும் பிராப்ளமா? பசிக்குதா?” என்று ப்ரீத்தி கேட்க,

 

“இல்ல ப்ரீ.. ஏதோ யோசனை” என்றவள், “ஏ மழை விடுது பாருங்க” என்றாள்.

 

அனைவரும் ஜன்னல் வழியாக வெளியே நோக்க, மழை தனிந்து மென் தூறலுக்கு மாறியிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதுவும் இல்லாமல் போக, நால்வரும், மகிழுந்தைவிட்டு வெளியே வந்தனர்.

 

மழை பெய்து சகதியாக இருந்த இடத்தில் கால்வைத்தபடி வெளியே வந்த விஷ்ணுவிற்கு, கால் வழுக்கிவிட, “அம்மே..” என்று சாய்ந்தவளைத் தாங்கிய சுபி, “ஏ லூசு பார்த்துடி” என்றாள்.

 

“சகதியா இருக்குடி.. பார்க்காம கால் வச்சுட்டேன்” என்று அசடு வழிந்தவள், அவள் கரம் கோர்த்துக் கொண்டு நடந்தாள்.

 

நால்வரும் அந்த அடர்ந்த வனத்திற்குள் நுழைய, அந்தப் பச்சை மரகத நிற விழிகளில், அவர்கள் பிம்பம் படிந்தது!

 

யாரோ தங்களை நோக்குவதாய் உணர்ந்த சுபி சுற்றி முற்றிப் பார்க்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களைத் தவிர ஏதுமிருக்கவில்லை.

 

சற்று தூரம் நடந்து சென்றவர்களில், “எவ்ளோ அழகா இருக்கு பாருடி.. இந்த அழகைப் போய் பேய் பிசாசுனு சொல்லி மூடி வச்சுட்டாங்களே” என்று ப்ரீத்தி கூற,

 

“யாருக்குத் தெரியும் ப்ரீ? மனுஷங்க இந்த அழகை கெடுக்கக்கூடாதுனு கூட இதுக்கு அப்படியொரு கட்டம் கட்டியிருக்கலாம்” என்று விஷ்ணு கூறினாள்.

 

சற்று தொலைவு வந்ததும், “போதும் கேர்ள்ஸ்.. ரொம்ப தூரம் போனா திரும்ப வர்ற வழி தெரியாம போயிடும். வாங்க போகலாம். அதான் எந்த பேய் பிசாசும் இங்க இல்லையே?” என்று சுபி கூற,

 

பெரும் காற்று ஒன்று வீசியது.

 

“ஸ்ஸ்.. ஆஹா..” என்று அந்த குளிருக்கு ஓசை எழுப்பிய விஷ்ணு, “மெயின் மேட்டரை முடிக்காம போனா எப்படி?” என்றபடி தனது பையிலிருந்த ஓஜா போர்டை எடுத்தாள்.

 

“ப்ச்.. விஷ்ணு.. அல்ரெடி இருட்டுது இங்க. நம்மட்ட லைட்கூட இல்ல” என்று சுபி கூற,

 

“பத்து நிமிஷம் தான் ஆகும் சுபி” என்ற பிரம்மா, “நீ ஓபன் பண்ணு விஷ்ணு” என்றாள்.

 

அவளும் அதனைப் பிரிக்க, அதை அங்குள்ள பாறை ஒன்றின் மீது வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணாடி போன்ற துண்டு ஒன்றின் மீது கைவைத்து, தனது தோழிகளைப் பார்த்துக் கொண்டு, “ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டாள்.

 

ப்ரீத்தி பயத்தோடும், சுபி பதட்டத்தோடும், பிரம்மா ஆர்வத்தோடும் தலையசைக்க, “இங்க பேய் யாராவது இருக்கீங்களா?” என்று விஷ்ணு கேட்டாள்.

 

அந்த காட்டில் அவள் கேள்விக்குப் பின் ஒரு ஆழ்ந்த நிசப்தம் மட்டுமே ஒலித்தது… சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டவள், சற்று சத்தமாய், “இங்க பேய் யாராவது இருக்கீங்களா? எங்க கூட கம்யூனிகேட் பண்ண விரும்புறீங்களா?” என்று கேட்டாள்.

 

மீண்டும் அமைதி மட்டுமே…

 

மறுபடியும், “நீங்க குட் ஸ்பிரிட்டா? பேட் ஸ்பிரிட்டா? எங்கக்கூட பேச முடியுமா? இந்த காட்டில் நீங்க இருப்பது உண்மையா?” என்று அவள் கேட்க, தற்போதும் அமைதி மட்டும்தான் பதிலாய்…

 

சுபிக்ஷா ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட,

 

“நான் தான் சொன்னேன்ல இங்க எந்த பேயும் இருக்காதுன்னு?” என்று பிரம்மா கூறி முடிக்கும் முன், காற்று பலமாய் வீசியது.

 

அதில் நால்வரின் விரிகூந்தலும் திசைக்கு ஒருபக்கமாய் பறக்க, “ப்ச்.. அய்யோ..” என்றபடி அதை கட்டுப்படுத்த முயன்றனர்.

 

“என்னடி ஸ்பிரிட் இருக்கா?” என்ற விஷ்ணு, “யாரும் இருக்கீங்களா?” என்க,

 

அமைதியாய் அவர்களை நெருங்கியது, யானை ஒன்று.

 

தற்செயலாய் அதைத் திரும்பிப் பார்த்த ப்ரீத்தி, “எ..எ..ஏய்..” என்று பதட்டத்தில் பேச்சு வராமல் தடுமாறியபடி வேகமாய் சுபியின் தோளில் தட்டி அழைக்க,

 

“ப்ச்.. என்னடி?” என்று திரும்பிய சுபியும், யானையைக் கண்டு அதிர்ந்து போனாள்.

 

அவர்களை விட்டுக் கொஞ்சம் தூரத்தில் தான் இருந்தது. அவர்கள் தடுமாற்றத்தில் தாங்களும் திரும்பிய விஷ்ணு மற்றும் பிரம்மா, “ஏய் யானைடி” என்று கோரஸாக கத்த,

 

“தெரியுதுல ஓடுங்கடி” என்றபடி ப்ரீத்தி ஓடினாள்.

 

அவள் ஓடவும் யானையும் தன் வேகத்தை அதிகரிக்க,

 

“யாரும் இருக்கீங்களா இருக்கீங்களானு கேட்டு யானையை வரவச்சுட்டியேடி பாவி” என்று கத்தியபடி பிரம்மா ஓடவும்,

 

“நான் யானையவாடி கூப்பிட்டேன்?” என்று நொந்தபடி பெண்ணவள் தானும் ஓடினாள்.

 

யானை பெண்களை வெகு சமீபமாய் நெருங்க,

 

“அய்யோ ஓட முடியலடி” என்று ப்ரீத்தி மூச்சு வாங்க, அழும் குரலில் கூறினாள்.

 

“ப்ரீத்தி எப்படியாவது தம் கட்டி ஓடிடு.. காருக்குப் போயிட்டா கூட நாம சேஃப்” என்று சுபி கூற,

 

“ஆ…” என்ற அலறல் சப்தம் கேட்டு, பிரம்மா, சுபி மற்றும் ப்ரீத்தி திரும்பினர்.

 

ஓடும்போது கால் வழுக்கி அருகிருந்த பள்ளத்தாக்கில் விஷ்ணு உருண்டு விட,

 

“விஷ்ணு..” என்று மூவரும் அதிர்ந்துபோய் கத்தினர்.

 

யானை அவர்களை நெருங்கி ஓடிவர,

 

“விஷ்ணு..” என்று தானும் அப்பக்கமாக குதிக்கவிருந்த பிரம்மா கரம் பற்றி, “லூசுத்தனமா பண்ணாதடி” என்றபடி சுபி இழுத்துச் செல்ல,

 

அழுதபடியே ப்ரீத்தியும் ஓடினாள்.

 

எப்படியோ மூவரும் மகிழுந்தை அடைந்துவிட, வேகமாய் அதில் ஏறி ஆளுக்கொரு இருக்கையை ஆக்கிரமித்தனர்.

 

யானையிடமிருந்து தப்ப, வண்டியை சுபி செலுத்த,

 

“சுபி விஷ்ணுடி” என்று ப்ரீத்தி கதறி அழுதாள்.

 

கண்களில் கண்ணீர் பொழிய, “உங்களையும் இழக்க முடியாதுடி.. ஐம் சாரி” என்று ஆக்ஸிலரேடரை வேகமாய் அழுத்திய சுபிக்ஷா, வண்டியைக் கிளப்ப, “விஷ்ணு” என்று பிரம்மா கதறி அழுதாள்.

 

துரத்திக் கொண்டு வரும் யானையிடமிருந்து தப்பி, வெகுதூரம் ஓட்டிச் சென்றுவிட்ட சுபிக்ஷா, வாகனத்தை நிறுத்திவிட்டு, மூச்சு வாங்க இருக்கையில் சாய, அவள் கண்ணோரம் கண்ணீர் பெருக்கெடுத்தது…

 

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எத்தனை நடந்துவிட்டது? விஷ்ணு? அவள் இனி தங்கள் வாழ்வில் இல்லையா? அவ்வளவு தானா? தான் தான் அவளை அழைத்து வந்து கொன்றுவிட்டோமா?

 

குற்ற உணர்ச்சி வண்டாய் குடைய, காதுகளைப் பொத்திக் கொண்டு, “ஆ….” என்று கத்தினாள், சுபி.

 

ப்ரீத்திக்கும் பிரம்மாவிற்கும் அழுவதைத் தவிர என்ன செய்வதென்றே தெரியவில்லை…

 

வெடித்து அழுதனர்…

 

“நான்தான்.. நான்தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று பிரம்மா தன் தலையில் அடித்துக் கொள்ள,

 

“அவ என் கையைப் பிடிச்சுட்டுத்தான் ஓடினா.. ஓடுற அவசரத்துல நான்தான் அவ கைய விட்டுட்டேன்” என்று ப்ரீத்தியும் அழுதாள்.

 

நிமிடங்கள் கடக்க, அழுகை ஓய்ந்த பாடாக இல்லை…

 

ஒரு முடிவோடு நிமிர்ந்து அமர்ந்த சுபி, வண்டியை மீண்டும் கிளப்ப,

 

“சுபி.. எங்க போற? விஷ்ணு இல்லாம எப்படிப்‌ போக?” என்றனர்.

 

“விஷ்ணு இல்லாம இங்கிருந்து நாம போக மாட்டோம்” என்ற சுபி, நேரே சென்றது வனத்துறை அதிகாரிகளிடம் தான்…

 

வாகனத்தைச் சீறிக் கிளப்பிவந்து நிறுத்தியவள், ஓட்டமாய் உள்ளே செல்ல, ப்ரீத்தியும் பிரம்மாவும் அவளைத் தொடர்ந்தனர்.

 

ஓடிவந்து அங்கு முன் வரிசை மேஜையில், வனத்துறை பாதுகாவலர் உடையில் இருந்த ஒருவன் முன் மூச்சிறைக்க அவள் நிற்க,

 

அவளைக் கண்டு அதிர்ந்து எழுந்தவன், “யாருமா நீங்க?” என்று கேட்டான்.

 

“சா..சார்.. எப்படியாவது எங்க விஷ்ணுவைக் காப்பாத்திக் குடுங்க சார்” என்று மடிந்தமர்ந்து அவன் காலைப் பிடித்துக் கொண்டு சுபி அழுதுவிட,

 

பதறிப்போய் அவளை நகர்த்தியவன், “யாருமா நீ? என்னாச்சு? முதல்ல என்னனு தெளிவா சொல்லு” என்றான்.

 

“சார்.. நா..நாங்க..” என்று தேம்பலோடும் விசும்பலோடும் அவள் பேசவர,

 

அவளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து புகட்டியவன், “ரிலாக்ஸ்” என்றான்.

 

“சார்.. எங்க ஃபிரெண்டு காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டா சார்.. அவளை எப்படியாவது காப்பாத்திக் குடுங்க சார்” என்று ப்ரீத்தி அழுதபடி கூற,

 

“வாட்? இந்த காட்டுக்குள்ளயா?” என்று கேட்டான்.

 

“ஆமா சார்” என்று பிரம்மா அழ,

 

“சார்.. நா..நான் தான்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. காட்டை பார்ப்போம்னு போயி, யானைக்கிட்ட மாட்டி, தப்பி ஓடும்போது, அ..அவ பள்ளத்தாக்குல விழுந்துட்டா சார்.. அவளை எப்படியாவது காப்பாத்திக் குடுங்க சார்” என்று கரம் கூப்பி வெடித்து அழுதாள்.

 

அந்த பெண்களின் அசட்டுத்தனத்தை எண்ணி கன்னம் கன்னமாய் அறையத்தான் தோன்றியது அவ்விளைஞனுக்கு.

 

அந்த நேரம் அவர்களைத் திட்டுவதற்கானது அல்ல என்று சிந்தித்தவனாய், துரிதமாய் செயல்பட்டு, உடன் சில அதிகாரிகளையும், பெண்களில் சுபியை மட்டும் அழைத்துக் கொண்டு, மீண்டும் காட்டை நோக்கி பயணமானான்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்