
01
“ஏ… யாஹூ…” என்று பெரும் கூச்சலுடன் பெண்கள் பலர் கத்தும் ஓசை மட்டுமே அப்பாதையெங்கும் எதிரொலித்தது.
“ஃபைனலி வி மேட் அ கேர்ள்ஸ் ட்ரிப்” என்று ஒரு பெண் கூச்சலிட்டுக் கத்த,
“யாஹ்..” என்று மற்ற பெண்கள் சப்தமாகக் கோஷம் எழுப்பினர்.
“ப்ளான் பண்ணபடி எல்லா ரீல்ஸும் எடுத்துடனும்டி” என்று சுபிக்ஷா கூற,
“கண்டிப்பா பண்ணிடலாம்டா பட்டு” என்று ப்ரீத்தி கூறினாள்.
“நல்லா ஃபன் பண்றோம்.. மாஸ் பண்றோம்” என்று பிரம்மவதனி கூற,
“அப்புடியே எதாவது அட்வென்சரா செஞ்சுட்டுப்போகனும்டி” என்று கூறினாள், விஷ்ணு ப்ரியா.
“எல்லாம் செஞ்சுடலாம்.. இந்தூருல ஒரு செம்ம மிஸ்டீரியஸ் ஸ்பாட் புடிச்சுருக்கேன். இந்த பக்கம் இருக்க ஒரு காட்டுப்பகுதி.. பேய் பிசாசுனு சும்மா உதார் விட்டுட்டு இருக்காங்க.. நல்லா பச்ச பசேல்னு இருக்கு இடம்” என்று பிரம்மா கூற,
“என்னடி அட்வென்சர்னு சொல்லிட்டு அமானுஷ்யத்தைப் பத்திப் பேசுறீங்க?” என்று பிரீத்தி கேட்டாள்.
வண்டியின் திசைமானியைத் திருப்பியபடி, “எதோ ஒன்னு.. கேட்க இன்டிரஸ்டிங்கா இருந்தா சரி.. பிரம்மா யூ கன்டினியூ” என்று சுபிக்ஷா கூற,
“இங்க ஏதோ பயங்கரமான பேய் இருக்காம்டி” என்று பிரம்மா கூறவும்,
“பயங்கரமான பேயா?” என்று மூவரும் ஒன்றாய் கேட்டனர்.
பிரம்மா, “ஆமா.. ஒரு பச்ச உருவத்தைப் பார்த்ததாதான் சொல்லிக்குறாங்க சிலர்” என்று கூற,
“தோ பாருடா” என்று சுபிக்ஷா கூறினாள்.
“ம்ம்.. சரி சரி.. குறுக்கப் பேசாம கதையைக் கேளுங்க” என்று பிரம்மா கூற,
“சொல்லு சொல்லு” என்று ஆர்வம் காட்டினர்.
“அந்த அடர்ந்த காட்டுக்குள்ள பகல்லயே அவ்ளோ வெளிச்சம் இருக்காதாம். அங்க அமானுஷ்யமான சப்தங்கள் எல்லாம் கேட்குமாம். ரொம்ப வருஷங்களாவே அந்த காட்டுக்குள்ள அமானுஷ்யம் இருக்குறதா தான் நம்பப்படுது. அங்கப்போன யாரும் திரும்ப வந்ததே இல்லைனு எல்லா கந்தர்வக்கோட்டைக்கு சொல்ற கதையும் இங்க இருக்கு. அந்த காட்டுக்குள் போன யாரும் பெரும்பாலும் திரும்பினதே இல்லைங்குறதால அந்த பேய் தான், அங்க வர்றவங்களையெல்லாம் கொல்லுதுனு நம்புறாங்க. ஆனா எனக்கு இதுல நம்பிக்கை இல்ல” என்று பிரம்மா கூற,
“நாம இதுபோல எந்த கதையைடி நம்பிருக்கோம்?” என்று விஷ்ணு கேட்டாள்.
“எக்ஸாட்க்லி” என்று சுபிக்ஷா கூற,
“சரி நாம போய் அந்த பேயைத் தேடப்போறோமா?” என்று சற்று பயத்தோடு பிரீத்தி கேட்டாள்.
“சும்மா கொஞ்சம் தூரம் உள்ளப்போய் பார்க்கலாம் பேபி.. ஆனா அங்க நிறைய நிறைய புதைகுழிகள் இருக்காம். அந்த பேய் அங்க வர்ற மக்களைப் புதைகுழில தள்ளித்தான் கொல்லுமாம். நாம அந்த புதைகுழியை மட்டும் கொஞ்சம் கவனிச்சுப் போகனும். அங்க கார்லலாம் போக முடியாது. நாம சுத்திப் பார்க்குற இடத்தெல்லாம் முடிச்சுட்டு நாளைக்கு மதியம் மேல அங்கப்போலாம்” என்று பிரம்மா திட்டம் வகுக்க,
“ஓகே ஆஃபிஸர்” என்று மூவரும் ஏற்றுக்கொண்டனர், நடக்கவிருப்பது அறியாமல்.
இரவு நெருங்கிய நேரம், அந்த அமானுஷ்யமான காட்டில், “ஆ…” என்ற அலறல் ஓசை காதை கிழிக்கும் வண்ணம் கேட்க,
அதை கேட்கத்தான் அங்கு யாரும் இல்லை…? இல்லையா?
புதைகுழிக்குள் உடல் அமிழ்ந்துகொண்டே போக, உயிர் மூச்சின் கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த அந்த அறியாதவன், “ஆ.. என்னை விட்ரு” என்று கத்தினான்.
சுற்றிலும் இருள் பூசியிருந்தது. காட்டிற்கே உரிய குளுமையோடு, புதைகுழியின் குளுமையில் உடல் விரைத்திடுவதைப் போல் உணர்ந்தான்.
பயத்தில் வியர்க்கவும் செய்தது!
திடும் திடுமென இடிகள் எழுந்து ஆங்காங்கே வெளிச்சம் மின்னி மறைய, அதில் அவ்வப்போது கண்ணுக்குப் புலப்படும் அடர்ந்த வனத்தைப் பார்த்தவன், “யாராது காப்பாத்துங்க” என்று கத்தினான்.
காற்றின் ஓசையோடு ஏதோ வித்தியாசமான சப்தமும் அவன் காதுகளை எட்டியது.
காலடி ஓசையா? மூச்சுக்காற்றின் ஓசையா?
அவனால் இருக்கும் பயத்தில் அதனைப் பிரித்தறிய இயலவில்லை.
மூச்சு வாங்கி உடல் முற்றுமாக சோர்ந்து போனதில், கத்துவதை விடுத்து, அவன் மூச்சை இழுத்துவிட,
அவன் காதருகே, உஷ்ணம் படர்ந்தது.
மூச்சுக்காற்றின் ஓசை!
நொடியில் உள்ளம் தடதடக்க,
பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கினான். பச்சை இலைகளை அரைத்தால் எழுவதைப்போன்றதொரு வாசம் அவனுக்கு வெகு அருகே வீசியது.
மெல்ல, மிக மிக மெல்லமாய், தனது தலையைத் திருப்பியவன், இருளில் தனக்கு முன் ஏதோ உருவரும் இருப்பதை உணர்ந்து, “ய..யாரு?” என்க,
பெரும் இடி ஒன்று வானில் இடித்தது.
மின்னல் கீற்றின் ஒளி பளீரென்று வீச,
அதில் பச்சை நிற உடலுடன், இருளில் பளபளக்கும் மரகதப் பச்சை விழிகள், கூர் பற்கள், தோள்வரை நீண்டிருக்கும் கூந்தலென, பார்ப்பதற்கே அச்சமூட்டும் உ(அ)ருவம் அவன் முன் அமர்ந்திருந்தது.
“அ..ஆ..ஆ…” என்று அவன் கத்தியதுதான், அவனது இறுதி ஓசையாகவிருக்கும்.
அந்த அமானுஷ்ய உருவத்தின் அழுத்தத்தில், புதைகுழிக்குள் தன்னைப்போல் மூழ்கி, இன்னுயிர் துறந்தான்… அம்மானுடன்.
காட்டில் இருக்கும் அமானுஷ்யம் புரியாமல், இரவு வெகுநேரம் அமர்ந்து சீட்டு விளையாடிவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றனர், பெண்கள் நால்வரும்.
மறுநாள் காலை, மிகுந்த உற்சாகத்தோடு எழுந்தவர்கள், தங்கள் காலைப் பணிகளை முடித்துக் கொண்டு, சுற்றிப் பார்க்கத் தயாராக,
“ஏ எப்போ டி அந்தக் காட்டுக்குப் போறோம்?” என்று விஷ்ணு கேட்டாள்.
“போவோம் போவோம்டி.. சுத்திப்பார்க்க வேண்டிய இடத்தை முதல்ல முடிப்போம். பிறகு போகலாம்” என்று சுபிக்ஷா கூற,
“ப்ச்..” என்று சளித்துக் கொண்டாலும், வந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் அவளை இழுத்துக் கொண்டது.
தங்களது ஆட்டம் பாட்டத்தை முடித்துக் கொண்டு, மதியம் போல் அக்காட்டிற்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் நோக்கத்துடன் அனைத்தையும் மூட்டைக் கட்டி, வண்டியில் ஏற்றினர்.
“ஏ காட்டுக்குள்ள சும்மா போய் பாக்கத்தான் போறோமா?” என்று ப்ரீத்தி கேட்க,
“அப்றம் அதுல எக்ஸ்ப்ளோர் பண்றதுக்கு என்ன இருக்கும்?” என்று விஷ்ணு கேட்டாள்.
“இவ ஏதோ உள்குத்தோட பேசுறாடி” என்று பிரம்மா கூற,
“ஏ வாலு.. என்னடி யோசிச்சிருக்க?” என்று சுமைகளை வண்டியில் ஏற்றியபடி சுபிக்ஷா கேட்டாள்.
தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த அட்டை ஒன்றை எடுத்து, புன்னகை முகமாய் விஷ்ணு காட்ட,
“ஏ.. இது ஊஜா போர்டு தான?” என்று ப்ரீத்தி பீதியோடு கேட்டாள்.
“இது ஊஜா போடுமில்லை, பூஜா போர்டுமில்லை.. இது ஓஜா போர்ட்” என்று கூறிய விஷ்ணு, “அங்க பேய் இருக்கு, பிசாசு இருக்குனு சொல்றதைக் கேட்டுத்தானே போறோம்? அப்ப இருக்கா இல்லையானு டெஸ்ட் பண்ணனும் தானே?” என்று கேட்டாள்.
“ஏ.. இதெல்லாம் எதுக்குடி?” என்று பயம் கலந்த குரலில் ப்ரீத்தி கூற,
“என்ன ப்ரீ.. பயமாருக்கா?” என்று பிரம்மா கேட்டாள்.
“கேர்ல்ஸ்..” என்று விஷ்ணு மற்றும் பிரம்மாவை அதட்டிய சுபி, “அந்த கதையைக் கேட்டுத்தான் போறோம்.. பட் அங்க இதை வச்சு டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு பேய் இல்லைனு சொன்னா மட்டும் யாரு நம்பப் போறாங்க?” என்று கேட்க,
“யாருக்கு சொல்லப்போறோம் நாம? ஜஸ்ட் நாம தெரிஞ்சுக்கத்தானே?” என்று விஷ்ணு கேட்டாள்.
“ப்ச்.. எனக்கு இதுலயெல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்ல” என்று சுபி கூற,
“அப்பறம் என்னடி சுபி? சும்மா ஃபன்னுக்கு தானே?” என்று பிரம்மா கேட்டாள்.
சுபி ப்ரீத்தியை நோக்க, “சரி பொழுதோட போய் ட்ரை பண்ணிட்டு வரலாம்” என்று ப்ரீத்தி கூறினாள்.
அவளை தாவி அணைத்துக் கொண்ட விஷ்ணு, “டோன்ட் வொர்ரி ப்ரீமா. உனக்கு ஒன்னும் ஆகாது.. எந்த பேய் வந்தாலும் என்னைத்தான்டித்தான் உன்னைத் தொடனும்” என்று வீர வசனம் பேச,
“ச்சி ப்பே” என்று அவளைத் தள்ளிவிட்டப் ப்ரீத்தியும் சிரித்தாள்.
“சரி சரி கேர்ல்ஸ்.. மணி பதினொன்னு ஆச்சு.. சீக்கிரம் போனாதான் வெய்யில் அடிக்கும்போதே உள்ள பார்த்துட்டு வர முடியும். லேட் ஆச்சுனா இருட்டிடும்” என்று சுபி கூற,
“ஆமா ஆமா அப்றம் காத்து கருப்பை பிரம்மா அடிச்சுருவா” என்று கூறி விஷ்ணு சிரித்தாள்.
இத்தனை குதூகலமாய் சிரிக்கும் விஷ்ணு அறிந்திருக்கவில்லை, இந்த நாள், அவள் வாழ்நாள் முழுமைக்கும், அவளால் மறக்க முடியாத ஒரு கொடூர அனுபவத்தைத் தரப்போவதை.
அவர்கள் பட்டியலில் மீதம் சுற்றிப் பார்க்க இருந்த இடங்களை முடித்துக் கொண்டு, அனைவருமாக மீண்டும் மகிழுந்தில் ஏறி அமரவும், “சாப்பிட்டுப் போவோமா?” என்று பிரம்மா கேட்க,
“வேணாம் வேணாம்.. சாப்பிடாம போனாதான் பசியையாவது காரணம் சொல்லி சட்டுனு வருவோம்.. இல்லைனா மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்னு அங்கயே டேரா போட்டுடுவோம்” என்று ப்ரீத்தி கூறினாள்.
அதில் வாய்விட்டு சிரித்த சுபி, “அடேய் இரண்டு மூர்த்திகளா.. அவ சைலென்டா உங்களைத்தான் சொல்றா” என்று கூற,
“அடிப்பாவி” என்று, விஷ்ணு மற்றும் பிரம்மா ப்ரீத்தியை முறைத்தனர்.
“சரி நாட்டு நடப்பு எதுவும் தெரியாம இருக்கோம் எதாவது நியூஸ் வைய்யேன் கேட்போம்” என்று ப்ரீத்தி கூற,
வண்டியை ஓட்டியபடியே சுபி சிலபல பெத்தான்களை அழுத்தி, செய்தி அலைவரிசையை ஒலிக்கச் செய்தாள்.
“சமீபமாக ப்ளான்டோ நிறுவனம், கேன்ஸரைக் குணப்படுத்தக் கூடிய மருந்தினை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மருந்து நூறு சதவீதம் கேன்ஸர் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது என்றும், வளர்ந்து வரும் நானோ டெக்னாலஜியையும் இதில் பயன்படுத்தி, சரியாக கேன்ஸர் செல்களை மட்டும் தாக்கும்படியாகவும் தயாரிக்க உள்ளதாகக் கூறியுள்ளது” என்று செய்தியில் கூறப்பட,
“பாரேன்.. ரொம்ப நல்ல விஷயம்ல?” என்று பிரம்மா கூறினாள்.
“நிஜமா ரொம்ப நல்ல விஷயம்.. இதுபோல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டா, எங்கம்மா மாதிரி சின்ன வயசுலயே கேன்ஸர்ல இறந்து போறவங்க வாழ்க்கையும் காப்பாற்றப்படும்” என்று விஷ்ணு கூற,
அனைவரும் ஒரு முழு நிமிடம் அமைதியாகினர்.
விஷ்ணுப்ரியா அவளது சகோதரி, மற்றும் அவளது அன்னை தான் அவளது தந்தை ராமராஜனின் மொத்த உலகமும். அவள் அன்னையுடனும் தங்கையுடனும் அத்தனை ஒட்டுதலாய் இருந்தவள். அவளுக்கு பதினைந்து வயதிருக்கும்போது அவளது அன்னை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட, சில வருடங்களில் அவளது தங்கையும் விபத்தில் உயிரிழந்திருந்தாள். அதிலிருந்து மீள பெரும்பாடு பட்டுப்போனாள் பெண்… அவளது தந்தை அவளை மனநல மருத்துவமனை அழைத்துச் சென்று, சில மாதங்கள் ஆலோசனை மேற்கொண்ட பின்புதான், அதிலிருந்து வெளிவந்தாள்.
“விடு விஷ்ணு.. அதெல்லாம் சூப்பரா மருந்து கண்டுபிடிச்சு உன்னைப் பெறாத அம்மாக்கள் பலர் காப்பாற்றப்படுவாங்க” என்று என்று சுபிக்ஷா கூற,
“கண்டிப்பா சுபி” என்று உற்சாகமாய்க் கூறினாள்.
பேசியபடி காட்டு வழியை அவர்கள் அடைந்துவிட, அவர்கள் வழியை மறித்த பெரியவர் ஒருவர், கையசைத்து வாகனத்தை நிறுத்தச் செய்தார்.
வாகனத்தை நிறுத்திய சுபிக்ஷா, ஜன்னல் கண்ணாடியை இறக்க, “என்னம்மா இந்தப் பக்கம் போறீங்க? வழிமாறி போறீங்கனு நினைக்குறேன்.. இந்தப்பக்கம் அந்த உயிரக்குடிக்குற காடுதான் இருக்கு” என்று பெரியவர் கூறினார்.
“அதுக்குத்தான் போறோம் பெரியவரே.. உண்மைலயே அப்படி அங்க என்ன இருக்குனுதான் தெரிஞ்சுக்கப் போறோம். கவலைப் படாதீங்க.. உண்மையை நாங்க கண்டுபிடிக்குறோம்” என்று பிரம்மா கூற,
“பிரம்மா..” என்று அதட்டி சுபிக்ஷா அவளை அடக்கினாள்.
பெரியவர் புறம் திரும்பி, “தாத்தா, சும்மாதான் போறோம்.. உள்ள ரொம்பதூரம் போக மாட்டோம். பார்த்துட்டு நாலு ஃபோட்டோ எடுத்துட்டு வந்துடுவோம்” என்று சுபி கூற,
“வேணாம் தாயி.. அது பொல்லாத காடு.. அந்தப் பக்கட்டுப் போன நிறைய பேர அது கொன்னுருக்கு.. அந்த மலைவாழ் மக்களே கொஞ்சம் கொஞ்சமா அந்த காட்டைவிட்டே போயிட்டாங்க.. அந்த காட்டுலருக்க பேயு பொல்லாதது” என்று கூறினார்.
மேலும் ஏதோ பேச வந்து விஷ்ணுவைத் தடுத்த சுபி, “சரிங்க தாத்தா.. சும்மா வெளியருந்து பார்த்துட்டுப் போய்டுவோம்.. நீங்க பயப்படாம போங்க” என்று கூற,
“என்னமோ தாயி.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எது எதுல விளையாடனும்னு தெரியல.. சூதானமா இருந்துகிடுங்க” என்றுவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் வண்டியை கிளப்பிய சுபி, வானம் திடீரென்று இருட்டவும், மனதிற்குள் ஏதோ சஞ்சலமாய் உணர்ந்தாள்.
இருந்தும் தன் எண்ணங்களை தனக்குள் வைத்துக் கொண்டு, மௌனமாய் அவள் வண்டியை ஓட்ட, பெரும் இடி சப்தத்தோடு, அவர்கள் பாதையில் மரத்தின் கொப்பு ஒன்று வந்து பொத்தென்று விழுந்தது.
அதில் வண்டியைச் சட்டென்று நிறுத்தியவளுக்கு, சடுதியில் உடலெல்லாம் வியர்த்துவிட்டது. “ச்சை.. இந்தக் கிளை வேற” என்று சளித்துக் கொண்ட பிரம்மா வெளியே சென்று அதை ஓரம் நகர்த்த, சுபி அப்படியே சாலையைப் பார்த்தபடி குழப்பமாய் இருந்தாள்.
அவள் தோள் தொட்ட ப்ரீத்தி, “சுபி” என்க,
திடுக்கிட்டு சுயம் மீண்டவளாய்த் திரும்பினாள்.
“என்னடி? ஏன் அரண்டு போய் இருக்க? வண்டியை எடு” என்று விஷ்ணு கூற,
சிறு தலையசைப்போடு காட்டுப் பாதையில் நுழைந்து சிறிது தூரம் சென்று, உள்ளே இறங்கி நடக்க வேண்டிய இடம் வரவும், வண்டியை நிறுத்த, அவர்கள் நால்வரும் வெளியில் இறங்கும் முன், பெரும் இடியுடன் மழை சோவென்று கொட்டத் துவங்கியது…

