
பரபரப்பாகக் காணப்பட்டது அந்த கிராமம். திக்கு திரும்ப மனித தலைகள் தான் தெரிந்தது.
“அய்யனே, அப்பனே” என்ற கூச்சல் முழக்கமாக மாறிக்கொண்டிருந்தது.
வானை தொட்டுவிடும் வண்ணம் எழுந்து நின்றிருந்த அந்த வேப்பமரத்தின் அருகில் கூட செல்ல முடியாதபடி மரத்தை சுற்றி இருபது அடி தொலைவிற்கு கயிறு கட்டியிருந்தனர்.
“கற்பூரத்தைக் காட்டுங்க, பால கொடுங்க.. திருநீறு பூசுங்க” என்ற கலவையான குரல்களுக்கு மத்தியில் காதை கிழித்தது சங்கின் ஒலி.
“தென்னாடுடைய சிவனே போற்றி..” என்ற கோசம் கேட்டபடி
அந்த செம்மண் சாலையில் புழுதி பறக்க வந்திறங்கினாள், ஷக்தி ஆராதனா.
‘வருவாய்க் கோட்டாட்சியர்’ என்று காரின் முன்பக்கம் பெயர் பலகை அவள் பதவியைக் கூற, போலீஸ் பாதுகாப்போடு அந்த வேப்ப மரத்தின் அருகே சென்றாள்.
செருப்பை கழற்றிவிட்டு அவள் தன்னின் ஆய்வை மேற்கொள்ள நான்கு அடி உயரத்தில் வேப்பரமர வேர்கள் பின்னியிருக்க அதற்கு நடுவே கருங்கலில் கம்பீரமாய் சிவபெருமான் காட்சி தந்தார்!
“மேம், நிலத்தை விரிவு பண்ண மரத்தை வேரோட இடமாற்றம் பண்ண இருந்திருக்காங்க. அப்போ நடுவில சுவாமி சிலை தென்படவும் மக்கள் இங்கையே கோவில் எழுப்பனும்னு சொல்லுறாங்க” என்றார் அதிகாரி ஒருவர்.
“பாண்டியன், எதுக்கும் மரத்தை சுத்தியும் ஒரு தடவ தொண்டிப் பார்க்க சொல்லுங்க. வேற எதுவும் பொருட்கள் சிக்கலாம்” என்றாள் ஆழ்ந்த குரலில்.
சிவலிங்கத்தை மர வேரில் இருந்து பிரிக்க முடியாது. அதுவும் கீழே ஐந்தடி ஆழத்தில் இருந்ததால் அதற்கு இன்னும் ஆழத்தில் வேர்கள் பரவி இருக்கலாம். இனி வேரோடு மரத்தை எடுக்கவும் முடியாது.
மேற்கொண்டு அந்த இடத்தை தொண்ட சின்னஞ்சிறு செம்பு, பித்தளை சிலைகள், சில செப்பேடுகள் கிடைக்க அறநிலையத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டாள் ஷக்தி.
“சிலைகள் எல்லாம் அறநிலையத்துறை வந்து இனி பார்த்துப்பாங்க. வேற ஏதாவது விலைமதிப்பு இருக்கற பொருட்கள் தென்பட்டா இமிடியட்டா நாங்க கைபற்றி அரசுகிட்ட ஒப்படைச்சுருவோம். அதன் தொட்டு, தொல்லியல் துறை கண்காணிப்பு கீழ இந்த பொருட்கள் போய் சேரும்” என்ற போட்டி கொடுக்கக் கொடுக்க, அங்கு சோழர் கால பொக்கிஷம் குடங்கள் கிடைத்ததாக தகவல் வந்தது.
இடம் பரபரப்பாக இருக்க, அதிகாரிகளும் ஆணையரும் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
சூழல் சற்று சுமூகமாக மாறியதும் சரியாக அவள் தொலைபேசி அழைத்தது.
“Mr Hulk” என்ற பெயரைத் தாங்கி வர, உடனே எடுத்துவிட்டாள்.
“ரிசல்ட் என்னாச்சு ஷிவ்” என்றாள் அதீத ஆர்வமான குரலில்.
“என்ன சொன்னாலும் அக்சப்ட் பண்ணிக்குவியா ஷக்தி” என்றான் ஆழ்ந்த குரலில்.
அது அவளை ஏதோ செய்ய, “விடுடா, ஷார்ட் டைம்’ல படிச்சே மெயின்ஸ் வரை வந்திருக்க. அதுவே பெரிய விஷயம். போச்சுனா பரவாயில்லை, அடுத்த அட்டம்ட் பார்த்துக்கலாம்” என்க,
“ம்ம்.. அடுத்ததைத் தான் பார்க்கனும்” என்றான் அவனும்.
“ஷிவ், ஃபீல் பண்ணாத. நான் இங்க அவுட்டர்ல இருக்கேன், சாமி சிலை நிறைய மண்ணுக்குள்ள இருந்து எடுத்திருக்காங்க, எல்லாத்தையும் ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு எங்க லிமிட் உட்பட்டது வேற தனியா எடுக்கனும். நைட் வர லேட் ஆகும், நீ சாப்பிடு. ரிசல்ட் போச்சுன்னுட்டு சாப்பிடாம இருக்காத” என்றவள் குரல் நலிந்திருந்தது.
கடந்த பத்து மாதங்களாக அவனின் உழைப்பைப் பார்க்கிறாள் தானே. அதிகாலையில் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை அத்தனை ஓட்டமும் படிப்பும் தன்னை தானே அப்டேட் செய்து செதுக்குவான் சிவா.
“மே மன்த் எக்ஸாம் வருதே, ஒரு ட்ரை பண்ணி பாரு சிவா. படிச்சது வரை எழுதி பாரு, ஒரு எக்ஸ்பீரியன்ஸ்ஸா இருக்கும்” என்ற ப்ரமோத்தின் சொல்லுக்கு ஏற்ப முதல் நிலைத் (Preliminary) தேர்வை எழுதியிருந்தான்.
அவன் அதிர்ஷ்டம் அதில் தேர்வாகி அடுத்த நிலையான முதன்மை நிலைத் (Mains) தேர்வை எழுதி இப்போது ஷக்தியிடம் அதற்கான விடையை சொல்லியிருந்தான்.
அவளுக்குத் தெரியும் நிச்சயம் அவன் சோர்ந்து போகமாட்டான் என்று. ஆனாலும் இன்னும் ஒரு வருடத்தைக் கடக்க வேண்டுமே!
அவள் நினைவுகளை கலைத்து வேலை அவளை இழுத்துக்கொள்ள பிரச்சனை முடிந்து, அரசுக்கும் ஆட்சியருக்கும் தகவல் கொடுத்து அவள் வீடு வந்து சேர இரவு பத்தை நெருங்கிவிட்டது.
உடலில் அத்தனை அயர்வு. அவளின் மாதாந்திர சுழற்சி, வேலை பளு, இப்போது சிவாவின் மனநிலை எண்ணி என்று தனக்குள்ளேயே அவள் சுழன்றபடி இருந்தாள்.
“ஏன்டா ஷக்தி, எதாவது சாப்பிட்டியா என்ன?” என்று அவள் உள்ளே வரும்போதே சிவா விசாரிக்க, அவன் முகத்தில் இருந்து எதையும் அவளால் படிக்க முடியவில்லை.
“ஷிவ், ஓகே நான நீ?” என்றவள் முகத்தில் தான் டன் கணக்கில் சோர்வு.
சிறு புன்னகை அவனிடம்.
“எல்லாம் நல்லா இருக்கேன். நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்றவன் அவள் வந்தவுடன் அவளுக்கான கசாயத்தை நீட்டினான்.
வெந்தயம், சீரகம், ஓமம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர், வயிற்று வலியை மட்டுப்படுத்த அத்தனை உதவி செய்யும்.
“தேங்க்ஸ்” என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
“இன்னும் மூனு மாசத்தில டெல்லி போகனும் ஆரும்மா. லீவ் அப்ளை பண்ணிடு” என்றான் அவள் காதருகே.
“எதுக்குங்க?” என்றாள் புருவம் சுருங்க.
“ம்ம்” என்று அவளை சிரிப்புடன் பார்த்தவன், “பர்சனாலிட்டி டெஸ்ட் இருக்கே எனக்கு” என்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
பின்னர், “சோனு” என்ற கூவலுடன் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள் பெண்ணவள்.
“எப்படி” என்று அழுதவாறு கேட்க, “என் ஷக்தி பொண்ணுனால” முடித்துவிட்டான்.
குறுகிய காலத்தில் வெற்றி கிடைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை தான். இருந்தும் அவனின் உழைப்பும் அதற்கு முன்பான இரண்டு முறை தோல்வியும் அவனின் பலமாக்கி இந்த முறை வென்றிருந்தான்.
இதோ புது வருடத்தின் துவக்கத்தில் டெல்லி வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.
மனது முழுக்க அத்தனை சந்தோஷப் பூக்கள் ஷக்திக்கு.
நேவி ப்ளூ சூட்டில் மிடுக்காக தயாராகி இருந்தவனை வைத்த கண் எடுக்காது பார்த்திருந்தவள், “என் ஷிவ் நல்லா பண்ணுவான் தான். இருந்தாலும் சொல்லுறேன் நோ டென்ஷன், நோ பயம்ஸ். பீ போல்ட். யூ கேன், யூ வில்! டன்” என்று அவன் இதழில் மென்மையாய் முத்தமிட்டு அவள் விலக, அவள் இடுப்பை இருபுறமும் அழுத்த பிடித்தவன்,
“என் பூவம்மா வரதுக்கு ரெடியா இரு” என்றவன் மீண்டும் அவள் இதழை அழுத்திவிட்டே அகன்றான்.
நீண்ட நேர காத்திருப்பு. அவன் நன்றாக தேர்வை முடிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் இருந்தவளிடம் மாலை வந்தவன் தம்ஸ் அப்’பை காட்டிய பின்னர் தான் இயல்பானால் ஷக்தி.
அங்கிருந்து ஷக்திக்கே தெரியாத, அவர்களின் ‘சப்ரைஸ் ஹனிமூன்’ பகல்காம் (Pahalgam) அழைத்து சென்றிருந்தான், சிவனேஷ்.
நான்கு நாட்கள், அவன், அவனின் குலாப், பனி, வெதுவெதுப்பான ரூம், சூடான டீ என்று அவர்களுக்குள்ளேயே அனை(ணை)த்தும் அடங்கியது.
அடுத்து, இறுதி முடிவுகள் வர நான்கு மாதம் ஆகும். அதுவரை, இத்தனை மாத ஓட்டத்திற்கு இளைப்பாற எண்ணியவன் பகல்காம் இருந்து ஆழ்வார்திருநகரி செல்ல முடிவெடித்திருந்தான்.
புகழ் நீலாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்க அவளை பார்க்க வென்று ஊருக்கு சென்றது. அதன் பின்னர் இப்போதான் அவர்களின் பயணம்.
‘ஆருத்ரா’ பிறந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க, புகழும் நீலாவும் அத்தனை ஆகர்ஷித்தனர்.
குழந்தை பிறந்தவுடனேவே ஷண்முகமும் கற்பகமும் திரும்ப ஆழ்வாரின் வீட்டிற்கு வந்துவிட, உறவு சுமூகமானது. இருந்தும் ஷக்தியிடம் அவர்கள் கொண்ட துவேஷம், மாறாது இருந்தது.
“ருத்ரா பாப்பா இங்க தான் இருக்கீங்களா” என்று ஆசையாய் பிள்ளையை தூக்கி கொஞ்சியவள் முகம் அத்தனை ஒளிர்ந்தது.
அஞ்சலி, ஆதினி நன்றாக வளர்ந்திருக்க டெல்லியில் இருந்து அவர்களுக்காக வாங்கிய பரிசை கொடுத்தாள்.
“அத்த, நீலா அத்த பாப்பா மாறி உன் பாப்பா எப்போ வரும்?” என்று அஞ்சலி துடுக்காக கேட்க,
“ம்ம்.. உன் சிவா மாமாவ கேளு பேபி. சரியா சொல்லுவாறு” என்று குழந்தை கேட்டபோது சொன்னவளால், அவள் ஊருக்கு வந்தவுடனேவே,
“என்ன கண்ணாலம் ஆகி வருஷம் ரெண்டாச்சு, இன்னும் எதுவும் தங்கலையா” என்ற கற்பகத்தின் பேச்சு ஷக்தியின் கோபத்தை விசிறியது.
“க்கும்ம்ம்.. வந்துட்டாலும்” என்ற பாரதியின் முனுமுனுப்பும் உண்ணாமலையின் முறைப்பும் அவளை தொடற, கடுப்பாகிவிட்டாள்.
“உங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கா ஆன்ட்டி?”
“எனக்கென்ன வந்துச்சு, வயசும் முப்பது தொட போகுது எதுவும் வரலேனா என் அத்தாச்சியோட சின்னமகனுக்கு வாரிசே இல்லாம ஆகிட்டா?” என்றவர் கொக்கியிட்டு நிறுத்த, “அத்தாச்சி” என்று கத்திவிட்டார் உண்ணாமலை.
அவரின் சொற்கள் செய்த அதிர்வு உண்ணமலையை உலுக்கியிருந்தது.
“வாய கழுவுங்க அத்தாச்சி மொத. என்ன பேச்சு பேசுதீங்க, அச்சானியமா” என்றார்.
“இப்போ என்ன நான் குழந்தை பெத்துக்கனும் அவ்வளவு தானே. அமேசான்ல ஆடர் பண்ணிடுறேன், நீங்க கேட்ட என் மூலமா வரும் கொழந்த வந்துடும்.. ம்ம்” என்றவள் சொல்லிச் செல்ல, அந்த பெண்கள் தான் விழித்தனர்.
“கெழவி என்ன பேச்சு பேசுது தெரியுமா? இன்னும் புழு இல்லையா பூச்சி இல்லையான்னுட்டு. இதுவா வந்து நைட் முழுக்க முழிச்சிருந்து பேபிக்கு ஃபீட் பண்ணி டயப்பர் மாத்த போகுது? நாம தான பண்ணனும்.
பொழுதன்னைக்கும் கொழந்த இல்லையா கொழந்த இல்லையா கேள்வி மட்டும் வரும். கொழந்த வந்துட்டா, நீயே பார்க்க மாட்டியான்னு டேஷ்ஷ திருப்பிட்டு போகுங்க. மண்ட கோளாறு பிடிச்சதுங்க” என்று சிவாவிடம் தான் அதனை போட்டு பொறிந்தாள்.
“அப்போ நம்ம ப்ராஜெக்ட் பூவம்மாவ சீக்கிரம் ஸ்டார் பண்ணணுமே” என்றவன் சொல்லி சிரிக்க, ஷக்தியின் மனநிலையை அங்கு அவன் கவனிக்காது போனான்.
“பாரு மூஞ்சி டக்குனு ப்யூஸ் போயிடும். நீ மெண்டலி ரெடியான பின்ன தான், ஓகேய்யா?” என்க,
“போடா, ஏன் எல்லாரும் இப்படி என்னைய டார்ச்சர் பண்ணுறாங்க? நமக்கு தெரியாதா? இல்ல என்னால முடியாதுன்னு நினச்சுட்டாங்களா?” என்று அழுதவளை கண்டு மனது பதற,
“டேய் ஷக்தி, என்ன பேசுற நீ? உளறாம இரு மொத” என்று அதட்டிய பின்னரே சற்று அழுகை மட்டுப்பட்டது.
“இப்படி நீ அழுதா உன்ன எப்படி நா தனியா விட்டுட்டு போக?”
“ம்ம்.. ரிசல்ட் வர நாலு மாசம் இருக்கே, அப்போ பார்த்துப்போம்” என்றவள் அவனுள் அடங்கிப்போனாள்.
அவளே வேண்டாம் என்று முதலில் தடுத்த பிள்ளைக்காக இன்று அவன் முக்கால் பாகம் வென்ற பிறகு ஏங்க ஆரம்பித்திருக்கிறாள் பாவை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
+1

