Loading

நாட்கள் றெக்கை முளைத்துப் பறந்து மாதம் ஒன்றாகக் கடந்திருந்தது.

தோப்பியும் கோப்புமாக மிகுந்த சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தவனைப் பார்த்தவுடன் எழுந்து அவனுக்கான குளம்பியைக் கலக்கச் சென்றாள், ஷக்தி.

அவளின் டிரேட் மார்க் வீட்டில் அணியும் பருத்தி மேக்ஸியும் மெஸ்ஸி பன்னுமாக இருந்தவள் முகத்தில் யோசனைக் கோடுகள்.

இருவருக்குமான குளம்பியுடன் அவர்கள் அறைக்குள் அவள் செல்ல, சிவப்பேறிய கண்களுடன் படுக்கையின் குறுக்கே மட்ட மல்லாந்து படுத்திருந்தான் அவன்.

“என்ன ஷிவ்? யூனிபார்ம் மாத்தாம பேட்ல படுத்திருக்க” குரலில் சிறு கண்டிப்பு.

ஊரே சுற்றிவிட்டு வந்தவன் தன்னை சுத்தம் செய்யாது, வியர்வை வடிந்த உடையுடன் அதனை மாற்றவும் இல்லாது இப்படிப் படுக்கையில் சுகாதாரம் இல்லாது படுத்திருப்பது அவளைக் கோபமுறச் செய்தது.

சில விசயங்களில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருப்பாள் அவள். அதில் முதன்மை, ஒழுக்கமும் ஆரோக்கியமும்.

அதில் கோபமுற்றவன், “நீயும் என்ன கொல்லாம போடீ மொதல்ல”

“கொஞ்ச நேரம் இன்னும் நீ படுத்தா, நானே உன்ன கொல்லுவேன். எழும்புடா மொத” என்று திரும்பவும் அதட்ட,

“ஷக்தீ” என்று கத்தியவன் முரட்டுத்தனமாக அவள் கையினைப் பற்றி இழுத்தான்.

“என்னடீ உம் பிரச்சனை?” என்று இரைந்தவன் நிதானத்தில் இல்லை என்பதை உணர்ந்தவள் நிதானமானாள்.

வைத்த கண் எடுக்காது அவனையே பார்த்திருந்தவள் பார்வையில் துளி மாற்றம் இல்லை. அழுத்தம், அந்த அழுத்தம் மெல்ல மெல்லச் சிவாவை நிதானப் படுத்தியது.

“ம்ம்ப்ச், ஆரும்மா” என்று அவளை அமர்ந்தவண்ணம் அணைத்துக்கொண்டான்.

“எதுக்கு இத்தன கோபம்?”

அவனிடம் மௌனம். 

நிமிடங்கள் கடக்க, “வேலைக்கும் போய் படிக்கவும் ரொம்பக் கஷ்டமா இருக்குடா குலாப்” என்று அவள் வயிற்றில் முகம் புதைத்தான் அவன்.

அவனுக்கே தெரியும் சிவில் சர்வீஸ் படிப்புகள் எத்தனை கடினம் என்று. அதிலும் அவன் நான்கு வருடங்களுக்கு முன்னர் படித்தது, இரண்டாம் முறையாகத் தேர்வு எழுதித் தோற்றிருந்தான்.

இப்போது மாற்றங்கள் வந்திருக்கலாம். அனைத்தையும் கவர்ந்து, வேலையையும் அவன் பார்த்து என்பது அவன் அளவில் இயலாத ஒன்று.

“என்ன பண்ணலாம் சோனு” அவன் முடிகளை மென்மையாய் அவள் கோதிக் கொடுத்தால்.

“ஒரு கேஸ், கொஞ்சம் கவனம் மிஸ் ஆகிடுச்சு. சர்கில் இன்ஸ் இன்னிக்கு புடிச்சு திட்டிட்டார்” என்றான் உள்ளே சென்ற குரலில்.

“தூங்காம படிச்சனாலையா” என்க,

சலித்தபடி, “இல்ல’ம்மா, வேற ஒரு தாட்” என்று அவளை இன்னும் இறுக்கிக்கொள்ள, “கஷ்டமா இருந்தா..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“நோ ஷக்தி. இது எனக்கான டாஸ்க், என் கனவோட நான் போராடப் போறேன்” என்றான் அத்தனை அழுத்தமாய்.

சில தினங்களுக்கு முன்பு ப்ரமோத்திடம் பேசியதை நினைவு கூர்ந்தான் சிவா.

ஷக்தி ஏதோ பேச்சிற்கு அவனைத் திரும்பவும் சிவில் சர்வீஸ் தேர்விற்குப் படிக்கச் சொல்லவில்லை என்பதை ஆழ்ந்து உணர்ந்து கொண்டிருந்தான் சிவா.

அதற்கு முக்கிய காரணம் ஆழ்வார்திருநகரியில் இருந்து அவனின் மொத்த புத்தக அலமாரியும் ஈரோடு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்ததே ஒரு பெரிய சான்று.

அதைத் தவிர்த்து, ப்ரமோத்தை அழைத்து சிவாவிடம் பேசச் சொல்லியிருந்தாள், ஷக்தி ஆராதனா.

ப்ரமோத் அவனுக்கு அழைக்கவுமே புரிந்துகொண்டவன், 

“ப்ரமோத்’ண்ணா இவ வெளையாடுறான்னு நினச்சா, உண்மையாவே எழுத சொல்லுறா போல” என்க,

“இதுல எதுக்குடா ஆரா விளையாடப் போறா? உன்னோட ஆம்பிஷன் சிவில் சர்வீஸ் தான சிவா, தென் கோ அஹேட். இன்னும் டைம் இருக்குடா உனக்கு, கல்குலேட் பண்ணிப் படி. யூ வில் சக்சீட்” என்றான் அனுபவமிக்க ஆட்சியராக.

“எப்படி’ண்ணா? இன்னும் ரெண்டு வருஷம் தானே இருக்கு? தர்ட்டி டூவோட என் லிமிட் ஓவராகிடும். இப்போவே தர்ட்டி ஒன் ஆகப்போகுது. எப்டி முடியும் என்னால?” என்று தன் இயலாமையை அவன் சொல்ல,

“தர்ட்டி டூவா? டேய் நீ ஜெனரல் கேட்டேகிரிக்குள் வரமாட்ட, ஆரா அதெல்லாம் பக்காவ யோசிச்சுப் பார்த்துத் தான் சொல்லியிருக்க. நான் க்ரீமி லேயர் (non creamy layer) தான் வருவ. அதுலயும் உன்னோட ஸ்டேட்டஸ் பார்க்க மாட்டாங்க, உங்க அப்பாவோட தொழில், சொத்து, வருமானம் தான் கணக்கு. இப்போ அவரோட வருஷ வருமானம் எவ்வளவுடா?”

(Non creamy layer – OBC Categoryயில் வரும் ஒரு தகுதி. 

Creamy layer & non creamy layer என்று இரண்டாகப் பிரியும். அதன் அடிப்படையில் தேர்வர்கள் பிரிக்கப்படுவர். அதற்கும் சில தகுதி கூறுகள் இருக்கின்றன. UPSC போன்ற முன்மை தேர்வுகளில் முக்கியமாக இந்த தகுதிகளைப் பார்ப்பர்.)

“ம்ம்.. தெரியலை’ண்ணா. ஆனா, சொத்து எல்லாம் அய்யா பிரிச்சு கொடுத்துட்டார். கடை அக்காவுக்கு, வயலு தோப்பு பண்ணை எனக்கும் புகழுக்கும். வீடு இன்னும் ஆச்சி பெயரில தான் இருக்கு. விவசாயம் பண்ணி வர வருமானம் தான்’ண்ணா. என்ன வருஷம் தோராயமா பத்து லட்சம் நிக்கும் அய்யா கையில.” 

“ரொம்ப நல்லது, அக்ரி ப்ராபிட் கணக்கில்ல. அவர் பெயரில வேற எதும் இருக்கா என்ன?”

“நத்திங்’ண்ணா”

“தென் சூட் இட் ஆவுட் மேன். நீ தாராளமா தர்ட்டி ஃபை வரை எழுதலாம்! ஆரா சரியாதான் சொல்லியிருக்க, ப்ரெபரேஷன் ஸ்டார் பண்ணு சிவா. யூ கேன்.”

“ண்ணா என்ன ஆளாளுக்கு இப்படி சொல்லுறீங்க? எனக்கு ஏதோ மாதிரி இருக்கே. ஒன்பது வருஷமா இங்க சர்வீஸ்ல இருந்துட்டேன், இனி அப்படியே ஓட்டிடலாம்னு இருந்தா” என்றவன் இழுக்க,

“தப்பு. கடைசியா நம்ம வாழ்க்கைய திரும்பிப் பார்க்கும் போது நினைவுகள் தான் அதிகமா இருக்கனுமே தவிரக் கனவுகள் இருக்கக் கூடாது சிவா. இது உன் கனவு, அதை ஆரா திரும்பவும் உன்ன தூசி தட்ட வெச்சிருக்கா. உனக்காக, அவளுக்காக நீ படிச்சு தான் ஆகனும். இது புதுசில்லையே உனக்கு”

“ண்ணா!” என்ற மீண்டும் தயங்கியவனுக்கு பலமளித்துப் படிக்க உதவினான், ப்ரமோத்.

அதில் அவன் சொல்லிய ஒவ்வொன்றும் சிறு வயதில் சிவா வகுத்து வைத்திருந்த கணக்குகள் எல்லாம் மேலெழுந்த அவன் எண்ணங்கள் மொத்தத்தையும் யுபிஎஸ்சி தேர்வை நோக்கிச் செல்ல பணித்திருந்தது.

‘என்னால முடியும், என்னால நிச்சயமா முடியும். சிவனேஷ் வீரபத்திரன், ஐ.பி.எஸ்’ ஜபமாய் தினமும் அவன் ஓதும் மந்திரம்.

அவனுள் ஒரு தீ கனன்று வர ஆரம்பித்திருந்தது. நிச்சயம் அது சுடர்விட்டு எரியும் என்ற நம்பிக்கையில் இருந்தாள், ஷக்தி ஆராதனா.

“சரி, காஃபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரிங்க. யூ வில் பி பெட்டர். அப்புறமா சாப்பிடுங்க” என்றவள் வெளியேறும் முன்,

“நா வேலைய ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன் ஷக்தி” என்றான் உள்ளடங்கிய குரலில்.

அதில் சடீரென்று திரும்பியவள், “சோனு” என்று அவனை வேகமாய் அணைத்துக்கொண்டாள்.

மனது படபடத்தது. இப்போதுதான் சிவாவின் தீவிரம் புரிந்தது மகிழ்ந்தாள், ஷக்தி.

அவன் நுதலில் இதழ் ஒற்றியவள், “நான் உன்கூட எப்பவும் இருப்பேன் ஷிவ். நீ என்ன முடிவெடுத்தாலும் ஐ வில் சப்போர்ட் யூ” என்க, 

“அது எனக்கேத் தெரியும் தான்” என்றான் அவனும் சன்ன புன்னகையுடன்.

”ஐ க்னோ, வேலையும் படிப்பும் பேலன்ஸ் பண்ணி படிக்கறது கஷ்டம் தான் ஷிவ். இதுல நம்ம ஸ்டேட் ஆபிசர்ஸ், சென்ட்ரல் எக்ஸாம்ஸ் படிக்கறோம்னாவே இல்லாத ஆட்டம் ஆடுவாங்க. தேவையில்லாத கொடச்சல் வரும், நெறைய பார்த்திருக்கேன். நானே நெனச்சேன், ஆனா நீயா சொல்லுவேன்னு எதிர்பார்க்கலடா” என்று முடித்தவள் முகத்தையே தான் பார்த்திருந்தான் சிவா.

“உனக்கு நா வேலையவிட்டா ப்ராப்ளம் இல்லையா ஆரு”

“என்ன ப்ராபளம்? பணத்தப் பத்தி பேசுனே, கொல விழும். நானே உனக்குத்தான் இதுல என் பணம் உன் பணம்னு யோசிச்ச” என்று கண்களை உருட்டி அவள் பேச,

சிரித்தபடி, “நீ குடுக்கலேனா கூட என் பெக்கெட் மணிக்கு என் மச்சான் இருக்கான். என் பொண்டாட்டி சொத்த வித்தாவது எனக்கு பணத்த அனுப்பமாட்டானா என்ன?” என்று அவன் புருவம் உயர்த்த,

“தட்ஸ் மை ஷிவ்” என்று சிரித்தவள் சிரிப்புகள் எல்லாம் அவன் இதழ்கள் உள்வாங்கியது.

ஈரோட்டிற்கு ஆராவமுதன் வந்திருந்த போது சிவா அவன் முடிவைக் கூற, சிவாவைத் தூக்கிச் சுற்றியே விட்டான்.

“எல்லாம் சொல்லுறவங்க சொன்னாதான் படிப்பார் அமுது” என்று மேகா அதற்கும் நக்கலிட,

சிவா, “உன்கிட்ட நான் கேட்டேனா? பையன பார்ப்பியா”

“என் பையன் இருக்கட்டும் எப்போ என் மருமக வருவா” என்று நேரடியாக அவள் கேட்க,

“ம்ம்.. சிம்பாவுக்கு மூனாகட்டும், அவன் கையிலை அவன் பொண்டாட்டி பெத்து கொடுக்கறேன்” என்ற ஷக்தியின் பேச்சில் அசந்து நின்றுவிட்டான், ஆராவமுதன்.

ஆராவமுதன், “முடிவே பண்ணிட்டீங்களா நீங்க ரெண்டு பேரும். என் சிம்பாவுக்கு இன்னும் ஒரு வயசுகூட ஆகல இதுல அவனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு வேற.. கடவுளுக்கே அடுக்காதுடீ” 

ஷக்தி, “பொண்ணுங்களுக்கு இப்போவே துண்டு போட்டு வெச்சாதான் உன் பையனுக்கு இன்னும் இருபத்து அஞ்சு வருஷம் அப்புறம் ஈசியா இருக்கும் ஈசா” 

“அப்போ சரி, வாங்க சம்பந்தி அம்மா என் பையனுக்கு வரதட்சணை பத்தி பேசலாம்” என்று ஷக்தியின் கை பிடித்து இழுத்தான் ஆராவமுதன்.

அதை எல்லாம் உதட்டில் உறைந்த புன்சிரிப்புடன் ரசித்திருந்தார், லாவண்யா.

நாட்கள் நகர சிவாவும் அவனின் ராஜினாமா கடிதத்தைக் காவலர் தலைமையகத்தில் கொடுத்திருந்தான். 

மீதமுள்ள அவன் கையில் இருக்கும் கேஸ்கள் அனைத்தையும் இன்னும் சில தினங்களுக்குள் முடித்துக் கொடுத்துவிட்டால் போதும் அவன் மொத்தமாக வெளியேறிவிடலாம்.

ஆனால் அவனின் முடிவு நம்மாழ்வாருக்குச் சிறிதும் உவப்பானதாக இல்லை. 

கௌரவமான காவல்துறை வேலையை விட்டுவிட்டு மீண்டும் படித்து, தேர்வு எழுதி, அதில் தேர்ந்து, பயின்று மீண்டும் காவல்துறையிலேயே தானே சேரப் போகிறான் என்ற எண்ணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது அவரிடம்.

“அங்கிள் நான் பேசுறது தப்பா இருக்கலாம், அதான் முன்னவே ஸாரி கேட்டுக்கறேன். இத்தன வருஷம் நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க?

அவர் உங்க மூத்த பிள்ளையோட டார்ச்சர் தாங்காம தானே போடிங் ஸ்கூலே சேர்ந்தார்! அது தெரியுமா இல்ல சின்னதில இருந்தே இப்போ சொன்னீங்களே ‘தலையச் சுத்தி மூக்க ஏன் தொடர, நேரா இருக்கறதையே பிடிச்சுக்க வேண்டியது தானேன்னு’ 

உண்மையா உங்க பிள்ளைங்கள உங்களுக்குத் தெரியுமா? அவரோட ஆசை, கனவு எல்லாமே சிவில் சர்வீஸ் தான். அத மண்ணோட மண்ணா போக வெச்சது உங்க மூத்த பிள்ள. 

அண்ணாவோட பேச்ச மீற மாட்டாம, நீங்க சொன்னீங்களேன்னு தான் எஸ்.ஐ எக்ஸாம் எழுதியிருக்கார். இல்லேனா அதுவும் இருந்திருக்காது. பட் போனது போகட்டும், என்ன நடந்தாலும் என் புருஷன் இந்த எக்ஸாம்ஸ் எழுதுவார். 

எத்தன வருஷம் ஆனாலும் சரி, நான் சர்வீஸ்’ல தான இருக்கேன்? ஏன் என் சம்பாத்தியம் போதாதா? உங்களுக்கு போதாது வேலைக்கு போயே தான் ஆகனும்னு நினைச்சா எங்கப் பட்டு செண்டர் இருக்கு, அதையுமே அவர் எடுத்துக்கட்டும்.

என்னைக்கி இருந்தாலும் எஸ்டேட், கடை எல்லாம் என்னோடப் பங்கு வரத்தான் போகுது. அதையே அவர் நிர்வாகம் செய்யட்டும். இங்க என்னுது அவரோடதுன்னு எதுவும் இல்லை. ‘நாங்க’ அவவ்ளவுதான்.” என்றவள் முடித்திருக்க, அதை மீறி ஆழ்வாரால் பேச முடியவில்லை.

இதோ மாதம் இரண்டாக நகர்ந்திருக்க, எல்லாம் முடிந்து சிவா அவனின் தேர்விற்கானப் படிப்பினை ஆரம்பித்திருந்தான். 

ஷக்தியுடன் ஈரோட்டில் தான் வசிப்பு. விடியலில் துவங்கும் அவன் படிப்பு ஷக்தி அலுவலகம் செல்லும் வரை நீடிக்கும். 

பின்னர் சிட்டிக்கு வெளியே இருக்கும் ஒரு சூட்டிங் அகாடமியில் ட்ரைனராக தற்காலிக பணியில் சேர்ந்திருந்தான், சிவனேஷ்.

நான்கு மணிநேர வகுப்பு. ஏற்கனவே அவன் பர்சனல் லைசென்ஸ்ஸோடு தனித்து ராணுவ அதிகாரியிடம் பயின்று சான்றிதழ் பெற்றவன். 

அத்துடன் முன்னாள் காவல்துறை அதிகாரி அதை வைத்தே அங்கு அவனுக்குப் பணி கிடைத்துவிட, ஒன்றரை மாதமாக ட்ரைனர் அவதாரத்தில் இருக்கிறான்.

மதியம் மீண்டும் படிப்பில் மூழ்கினால் மாலை அவன் சீமாட்டி வரும் வரை அது தொடரும்.

இவ்வாறு நாட்கள் செல்ல, பொங்கலுக்கு அனைவரும் பொள்ளாச்சியில் ப்ரமோத் வீட்டில் கூடியிருந்தனர்.

தலை பொங்கல், காளிதாஸின் தலைமையில் ப்ரத்வி துருவுடன் சேர்ந்து மகிழ்வாய் முடிந்தது.

ப்ரமோத், “ஆரா முகம் இப்போதான் ப்பா சிரிச்ச மாதிரி இருக்கு”

காளிதாஸ், “இமயன் தான் இல்லை. அவன் மக இத்தன சந்தோஷமா இருக்கறத பார்க்க எத்தன ஆசைப்படுவான் தெரியுமா.” என்றவர் கண்ணில் பளபளப்பு.

துருவைத் தூக்கி வைத்திருந்தவளைப் பார்த்தபடி, “சின்னப்பா மாதிரி ஒரு குட்டியை மட்டும் பெத்துக்கட்டும். எனக்கு அதைவிட வேற ஒன்னும் வேண்டாம்டா ப்ரமோ. அத்தன புழுக்கத்த மனசுல வெச்சிட்டு இருந்தவளுக்கு இவன் தான் அவள மீட்டு சிரிக்க வைக்கனும்னு இருந்திருக்கு போல” என்றார் சிவாவைச் சுட்டிக்காண்பித்து.

காணும் பொங்கல் அன்று சிவாவும் ஷக்தியும் பக்கத்தில் இருக்கும் ஆனைமலை செல்ல எண்ணியிருந்தனர். 

வீட்டில் கேட்டாலும் யாரும் வரமாட்டார்கள் என்பதில் திண்ணம். அவர்களின் தனிமையைக் கழிக்க அங்குச் செல்ல நினைத்திருக்க, துருவ் ஷக்தியின் சிந்தையில் விழுந்தான்.

“அண்ணி ப்ளீஸ்.. துருவ கூட்டிட்டு போறேன். நா தம்பிய நல்லா பார்த்துப்பேன், இங்க இருக்க ஊரு தானே” என்க, மேகா தயங்கினாள்.

“ரொம்பப் பண்ணாதீங்க, துருவ் குட்டி அத்த கூட வரீங்களா” என்க ஒரு வயதை தொடவிருந்த துருவும் தாவிப் பாய்ந்திருந்தான் ஷக்தியிடம்.

“ஏன்டீ அவதான் கேட்டா சிம்பாவ கொடுப்பியா? இதுங்க தனியா போறதே அதிசயம், இதுல பிள்ளைய வேற கொடுத்துவிட்டிருக்கா. சிம்பாவையே பார்த்துட்டு இருக்கும் ரெண்டும்” என்று கடிந்த கணவனை எதைக் கொண்டு தான் அவள் அடிப்பாள்? 

அவளும் இதற்குத் தானே தயக்கம் கொண்டது!

ஆனைமலை சென்ற பின்னர் துருவும் ஷக்தியும் போட்ட ஆட்டத்தை அங்கு வந்த சுற்றுலா பயணியரே திரும்பிப் பார்க்கும் படி இருந்தது‌.

துருவ் கத்தும் கத்திற்கு ஏற்ப அதற்குத் தகுந்த ராகம் அமைத்து எசப்பாட்டுப் பாடும் இருபத்து ஆறு வயது துணை ஆட்சியரைச் சிரிப்போடு பார்த்து நின்றிருந்தான், சிவனேஷ்.

பேபி கேரியரில் துருவைச் சுமந்தபடி, ”டேய், யானை குட்டிக்கூடச் சேர்ந்து அந்த ஆட்டம் போடுறாடா இவ. துருவே தேவல” என்று ஆராவமுதனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துக்கொண்டான், சிவனேஷ் வீரபத்திரன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சிவசக்தியின் காதலும் புரிதலும் அருமை..💐😍