Loading

புகழின் வாழ்க்கையை அழகாக்கியிருந்தாள், நீலவேணி. 

அவனின் பழைய ஆணவம் அவ்வப்போதுத் தலைதூக்கும் தான். இருந்தும் அதையெல்லாம் அவள் பெரிது படுத்தாது, அவனை அனுசரித்து அவனை அவளின் செயலால் மூங்கிலாக அவனுக்கேத் தெரியாது வளைக்க ஆரம்பித்திருந்தாள்.

அவனின் ‘வார்னிங் பிரியட்’ முடிவடைந்து திருவண்ணாமலையில் நீலவேணியுடன் ஒரு புது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறான், புகழேந்திரன்.

அன்று நீலாவின் ‘என்னதான் உங்களுக்கு முன்னவே ஒரு காதல் இருந்திருந்தாலும் எனக்குத் தாலி கட்டின பின்னவாது அதை மறந்துருப்பிங்கன்னுட்டு நினச்சேன். ஆனா, இப்படி‌ பண்ணிட்டீங்களே மாமா’ என்ற வார்த்தைகள் அவனை ரீங்காரமிட்டுக் கொன்றது.

அவன் ஷக்தியின் வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துவிட்டாளும் அவளின் நினைப்பு இல்லாமல் இல்லை. அதை அவன் மறுக்கவும் இல்லை தான்.

இருந்தும், அந்த நினைவுகள் ஒரு பசுமையானவையாகத் தான் இருந்ததே தவிர்த்து தவறாக இருந்திருக்கவில்லை. 

அவன் மனைவிக்கு அந்த எண்ணங்கூட வேண்டாம் என்ற கருத்தை வாய்விட்டு அவள் சொல்லிய பின்னர், புகழேந்திரன் முற்றும் முழுதாக மாற நினைத்தான்.

“மூனு மாசம் லீவுல தான புகழு இருக்க, தேவையில்லாம கண்ட எண்ணம் வரும். செவனேன்னு புக்ஸ் படி, விவசாயத்த பாரு, அதுக்கு ஏத்தாப்படி நெறய ஆய்வுக்கட்டுர நெட்ல வரும். அதை பாரு, சும்மா கெடக்கிற மூளச் சாத்தான் வீடாகிடும்” என்று கருணா சொல்லுக்குத் தக்க புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தான்.

கடந்த சென்ற மூன்று மாதங்களில்,

நான் ஒரு நாள் ஒரு புத்தகத்தைப் படித்தேன், என் முழு வாழ்க்கையும் மாறிவிட்டது‘  

ஓர்ஹான் பாமுக் என்ற துருக்கி நாட்டு எழுத்தாளரின் வாக்கியம் போல் புகழின் வாழ்க்கையும் மாறியது.

“வீட்டுல இந்த புத்தகமெல்லாம் கெடந்துச்சு, படிய்யா. படிக்க புக்கிருக்கானுட்டு மலர கேட்டியாம், கொடுத்துவிட்டா” என்று கருணா நீட்டிய ஐந்து புத்தகமும் ‘இந்திரவேணி’ என்ற எழுத்தாளரின் படைப்பு.

பெரும்பாலும் குடும்ப அமைப்பை மையமாக வைத்து, சமூகக் கருத்தை ஒட்டி பேசியவரின் பேச்சுக்களும் அவரின் வெளி சமூகத்தை மற்றுமொரு பரிணாமத்தில் பார்த்தான், புகழ்.

எழுத்தின் வழி ஒருவரின் கண்ணோட்டத்தை நாம் பல வகையில் பார்க்க முடியும். அந்த சக்தி, எழுத்தாளரின் எழுத்தில், அவர் எழுதும் கற்பனைக் கூற்றை நம்மிடம் விட்டு அதில் நம்மை ஆழ்ந்து படிக்க வைப்பதில் அந்த எழுத்து வென்றிருக்கும்.

மனிதனின் எண்ணங்கள், ஒருசில கோட்பாடுகள், மக்களின் சராசரி கல்வியறிவு துவங்கி பணக்காரர்களின் பணப் புழக்கம், தொழில் முறை வரை அத்தனை நேர்த்தியான அலசலாக இருந்தது அவரின் எழுத்து.

“செத்து மண்ணோட மண்ணா போற இந்த உடம்பு, இருக்கற வரை எத்தன ஆட்டம் ஆடுது. இந்த ஆட்டமெல்லாம் ஆறடியில அடங்கிடும்னு தெரிஞ்சும் எதுக்கு இத்தன வன்மமும் காழ்ப்புணர்ச்சியும்?”

“பணமிருக்கறவன் ஆடுவன், பணமில்லாதவன் அடங்குவான்.

ஆனா, ரெண்டுக்கும் நடுவுல நிக்கறவன் தவிப்பு இருக்கே, வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்து செத்திட்டு இருப்பான்” 

புகழ் விழுந்துவிட்டான் அந்த எழுத்தின் தக்கத்தில்.

அதை நீலாவிற்குக் கருணா தெரியபடுத்தவும், “பாத்தேன்’ண்ணா. நீங்க செஞ்ச வேலையினு மலரக்கா சொல்லுச்சு. ஆனாலும் இம்புட்டு மாற்றத்தை அவருகிட்ட நானே எதிர் பார்க்கலை” என்றவள் அடுத்து செய்த செயல் புகழுக்குத் தன்னை தெரியப் படுத்தியதே.

‘நான் எழுத்தாளர். இந்திரவேணி.

பன்னிரெண்டு வரை தான் படிச்சிருக்கேன். தமிழ் வழிப் பள்ளில தான் படிச்சேன்.‌ எங்க அப்பா ஊர் தலைவர் அதுனாலேயே பெரிய நட்பு வட்டம் இல்ல எனக்கு. என்னோட சில எண்ணங்கள, சமையல் குறிப்ப, சமூக கருத்தப் பதிவு பண்ண தோனுச்சு. அப்போதான் என் புகழ் மாமா எனக்கு முகநூல் பத்தி சொன்னாரு. இப்போ மூனு வருசமா என்னோட கருத்தப் பதிவு பண்ணுறேன். தோனுற கருத்த, பார்க்கற மனுஷங்களை என்னோட கண்ணோட்டத்தில கதையா முடிஞ்சு இப்போ உங்க கையில தவழ விட்டிருக்கேன்.

நான் மொத்தமா பன்னிரெண்டு புத்தகம் எழுதியிருக்கேன். பெரும்பாலான கட்டுரைகள் *** மலர்ல வெளியாகிட்டு வருது.

ஒரு எழுத்து தரும் மாற்றமும் பாதிப்பும் அத்தனை ஆழமா இருக்கும். என்னோட எழுத்துனால பலபேர் அவங்க வாழ்க்கையில நடந்தத முகநூல் வழியா என்கிட்ட சொல்லும் போது ஏதோ சாதிச்ச திருப்தி. 

அப்போ அவங்க சொல்லுறதுக்கு எல்லாம் ‘ஓ.. அப்படியா. சந்தோஷங்க’ என்று சொல்லி கடந்துடுவேன். ஆனா எப்போ என் அத்தான் கையில என் புத்தகத்தப் பார்த்தேனோ அப்போவே என்னோட இந்த எழுத்து பணி முழுமையான உணர்வு. 

என்னோட வாழ்க்க, இப்போ என்னோட எழுத்துனால மாறி வந்திருக்கு. அதை நிச்சயம் கெட்டியா விடாம பிடிச்சுப்பேன், அதுவும் என்னைய கைவிடாது.

தமிழும் அன்பும் நல்லெழுத்துக்களும் எப்போதும் மேலோங்கும்!

திருமதி. நீலவேணி புகழேந்திரன்.’

இந்திரவேணி, யாரோ ஒரு நடுத்தர வயதில் தன் அன்னையின் வயதை ஒத்து இருக்கும் பெண்மணி என்று நினைத்திருந்தவனின் முகநூல் கணக்கை இணைத்து நீலா பதிப்பித்தப் பதிவை பார்த்தவனுக்கு, உச்சபட்ச டெசிபல் அதிர்வுகள்.

“நீலா, நீயா இந்த புக்ஸ் எல்லாம் எழுதின?” என்று கேட்டவனிடம் ஆம் என்ற தலையசைப்பு மட்டுமே பெண்ணவளிடம்.

அதன்பின், புகழ் அவளிடம் பேசவில்லை. அவனுக்குச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. 

அந்த கால அவகாசம் கொடுத்த திடம் இன்று ஒரு மனமொத்த நிறைந்த வாழ்க்கை அவர்களுக்கு. 

புரிதல், அது வந்துவிட்டாலே நம் வாழ்க்கையின் மொத்த பார்வையும் பாதையும் மாறி விடும்.

அதைவிட, விட்டுக்கொடுத்தும் அரவணைத்தும் செல்ல கற்றுக்கொண்டால், அந்த பாதை மேம்படும் செம்மையாய். அதற்கு, நீலவேணி ஒரு சிறந்த சான்று.

இதோ, தலைத் தீபாவளிக்கு ஆழ்வார்திருநகரி வந்திருந்தார்கள் நீலாவும் புகழும்.

சிவாவும் ஷக்தியும் நாளை வருவதாகக் கூறியிருக்க, இன்றே அவர்களின் மகிழ்வைப் பகிர விரும்பவில்லை புகழ்.

மறுநாள் காலையில் சிவா வந்தவுடனேயே, அவனை அணைத்துக்கொண்டான், புகழேந்திரன்.

தம்பியிடம் பழையபடி பழக முயற்சிக்கிறான் ஆனால் முன்பிருந்த காழ்ப்பு இல்லாது அண்ணனாய், அவனை உயரப் பார்க்க விரும்பும் நலம் விரும்பியாய்.

“தேங்க்ஸ்டா சின்னுக்குட்டி” என்று புகழ் கலங்கிய கண்களுடன் கூற, அவனின் அந்த அழைப்பிலேயே சிவா புரிந்துகொண்டான் புகழின் மனநிலையை.

சின்னுக்குட்டி, ஆசையாய் புகழ் சிவாவைச் சிறுவயதில் அழைக்கும் பெயர். அது நாள் போக்கில் அவனின் குணத்தால் மறைந்திருக்க இப்போது மீண்டும் அது துளிர்த்திருந்தது அவனுக்கு வந்திருந்த புதிய பதவியின் பொருட்டு.

அன்பால் அணைத்து நின்றிருந்தவனைச் சிவாவும் அணைத்துக்கொள்ள, அதைப் புன்சிரிப்புடன் பார்த்திருந்தாள், ஷக்தி ஆராதனா.

முகத்தைத் திருப்பவில்லை. இருந்தும் புகழ் என்பவன் சிவாவின் அண்ணன், அவள் புகுந்த வீட்டின் தலைமகன் அந்த அடிப்படையை மனதில் பதிய வைத்துக்கொண்டவள் மனம் நிர்மலமாக இருந்தது அவனைப் பொறுத்தவரை.

“என்னடா நடுவுட்டுல படமொட்டறீங்க அண்ணனும் தம்பியும்” என்று கருணா வழக்கம் போல் கேளியில் இறங்க,

“என்ன உங்களுக்கு இப்போ? அவனுங்களே எத்தன நாளுக்குப் பிறகு அணைச்சு நிக்குதானுக? கம்மினிருங்க” என்ற பாரதி கலங்கிய கண்களுடன் தம்பிகளின் அருகே சென்று நின்றுகொண்டாள்.

தேனாட்ச்சி, “எட்டி மலையம்மா, எம் பேரனுகளுக்கு மொத சுத்திப்போடுடி ஆத்தா” 

புகழ், “எங்களுக்கு இருக்கட்டும், உங்க பேத்திக்கு சுத்தி போடுங்க” என்று சொல்லிப் புன்னகைத்து நின்றான்.

“அவளுக்கு எதுக்குங்கேன்” என்று நீலாவைப் பார்த்தபடி தேனாட்ச்சி கேட்க,

“உனக்கு உன் கொள்ளு பேரன் வேண்டாமாக்கும்” என்று அடுத்து அவன் சொன்னதில் வீடே ஒரு நிமிடம் பேச்சற்று நின்றிருந்தது.

“ஹே, காங்கிரஸ் நீலவேணி” என்ற ஷக்தியின் பேச்சால் மீண்டவர்களுக்குக் கொண்டாட்டம் போதவில்லை.

நீலாவின் கர்ப்பம் தெரிந்த பின் சிவனேஷின் முகத்தில் தெறித்த எதிர்பார்ப்பைத் தான் கண் எடுக்காது பார்த்திருந்தாள், ஷக்தி.

நேரம் கடந்தாலும் சிவாவின் பார்வை மாற்றம் அவளை உள்ளூர ஏதோ செய்தது. 

அவள் எண்ணிக்கொண்ட நிகழ்வுகள் அவளை மீண்டும் மீண்டும் யோசனையிலேயே வைத்திருக்க அதை முதலில் அவன் கவனிக்கவில்லை.

மாலை இயல்பாய் தேனாட்ச்சியுடன் இருந்தவளின் முகப் பொலிவைப் பார்த்த பெரியவர், “சக்தி கண்ணு, பாரு இந்த வேணி உன்ன முந்தீட்டா. அடுத்த தீபாவளிக்கு என் கொள்ளு பேத்திய பெத்து கொடுத்துடு, சொல்லிப்புட்டேன்” என்க, அவள் முகத்தில் தன்னால் ஒரு இறுக்கம்.

அதைத் தேர்ந்து அவள் மறைத்தாலும், ‘எங்களுக்குத் தெரியாதா எப்போ பெத்துக்கனும்னு’ என்றவள் மனதினுள் நினைக்காமல் இல்லை!

இரவு அவர்களின் இயல்பான அந்தரங்க பொழுதில்

சிவாவின் தோள்பட்டையில் படுத்திருந்தவள் முகத்தில் யோசனை ரேகைகள்.

அதைச் சரியாய் உணர்ந்தவன், “என்ன ஷக்தி?” என்றான்.

அவன் அவளை அவளின் உணர்வுகளுக்கு ஏற்ப, சூழ்நிலைக்குத் தக்க அழைக்கும் அழைப்புகள் எல்லாவற்றிலும் அவளிற்கான அவனின் காதல் மிளிர்ந்தது.

அதை உணர்ந்தவள் போல், அவனை மேலும் முண்டினாள், அணைத்தாள் இறுக்கமாக.

“என்னடா, வலிக்கிதா எங்கையும்” என்று மெல்ல அவள் உடலைப் பிடித்துவிட, அவள் தொண்டை வறண்டது.

ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவள், “ஷிவ்” என்றாள் கண்களில் பெருந்தவிப்புடன்.

அவள் எண்ணத்தின் விதை சரியா என்று தெரியாது. ஆனால் அதை சிவா சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தவிப்பு.

அவள் மனதில் அவர்களின் வாழ்க்கைக்கான ஒரு பெரும் திட்டம் காத்திருந்தது. அது முழுக்க முழுக்க அவளின்‌ ஷிவ்விற்கானது.

அதை அவன்‌‌ ஒற்றுக்கொள்வானா என்பது கேள்விக்குறி தான். இவளின் எண்ணமும் அதனை ஒட்டியபடி இருக்க, அவனிடம் பிழையில்லாது அவள் எண்ணம் சிந்தாமல் போய் சேரவேண்டும் என்ற வேண்டுதல்.

“என்ன ஆரூ, ஏதாவது சொல்லனுமா?” என்றவனை கழுத்தோடுக் கட்டிக்கொண்டவள் உடல் அவனை முழுவதுமாய் தழுவியிருந்தது.

இருவருக்கும் சேர்த்து போர்வையை இன்னும் மேலேற்றி அவளை அணைத்தவன், “சொன்னாதான் தெரியும்” என்றான் குஞ்சாய் அவளை அரவணைத்து.

அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “நா.. நா சொல்ல வரத சரியா புருஞ்சுப்ப தான” என்றால் ஒருவித தவிப்பான குரலில். 

“சொல்லு” 

அவன் கழுத்தில் இருந்த செயினை இழுத்தபடி, “அது.. நமக்கு இப்போதைக்கு பேபி வேண்டாம்” என்றாள்.

அவன் சலனமே இல்லாது அவளைப் பார்த்திருந்தான்.

அவர்கள் இருவருக்குமான அன்யோன்ய அந்தரங்க பொழுது இன்னும் முடிவடையக் கூட இல்லை. அதில் அதன் ஆதாரமான காதலை அதன் இணைவான பிள்ளையைத் தற்சமயம் வேண்டாம் என்கிறாள்.

என்ன நினைப்பான் ஆணவன்?

சரி, என்னதான் நினைக்க வேண்டும்?

அவன் பேசாது அமைதி காக்க, அது அவளுக்குள் தவிப்பையும் பயத்தையும் கிளப்பியது. 

“தப்பா எல்லாம் எதுவும் இல்லங்க. இப்போ வேண்டாம்னு..” அவள் இழுக்க,

“சரி‌ உனக்கு எப்போ ஓகேவா படுதோ அப்போவே என் பூவம்மாவ பெத்துக்கலாம்” என்றான் அவனும் இலகுவாக.

அதன் பிறகே அவளுக்கு மூச்சு வந்தது. உடல் அப்பட்டமாகத் தளர, “ஷிவ்” என்று அவன் கழுத்து வளைவில் இளைப்பாறினாள்.

“இதுக்குத்தான் இத்தன அக்கப்போரா?” என்றவன் அவள் அத்தனை நேரம் பட்ட பதற்றத்தை எண்ணி, 

“நம்ம இன்டிமஸி எப்படி ரெண்டு பேர் விஷயமோ, அதுதான பேபிக்கும். நீ ரெடியில்லாம எப்படி நாம பெத்துக்க முடியும்?” அவள் முடியை ஒதுக்கியபடி அவன் சொல்ல,

“அதுதான்” என்றவள்,

“கடவுள் கொடுக்கும் வரத்த நானா தள்ளிப்போட நினைக்கறேன் ஷிவ். இப்போவே லாவ்ஸ் (லாவண்யா) வயசாகுதுன்னு குத்துது. சீக்கிரமா பாப்பா வேணுமாம். பட் நாம தான அத முடிவு பண்ணனும்?”

“ம்ம்.. ஆனா மேடம் ஏன்‌ இப்போ வேண்டாம் சொல்லுறீங்க” பதமாய் நூல் விட்டான் அவளிடம்.

பேச்சு சுவாரஸ்யத்தில் அவளும் தன் மனதில் உள்ளதைப் பகிர்ந்தாள்.

“ம்ம்” 

“சரி, ஏன் நீயே எழுதலாமே ஷக்தி, என்னவிட உனக்கு அறிவும் grasping nature தாஸ்தி தானே” என்றவன் சிவா.

“என்னோட standard எனக்கு நல்லா தெரியும் ஷிவ். அதான், டெஃப்டி கலெக்டரோட நின்னுட்டேன். ஆனா உனக்கு அப்படி இல்லயே” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொன்னவள்,

“என்ன எனக்கு இல்ல” என்றவன் பார்வை பாவையின் முகத்தில் நிலைத்து நின்றது.

“ஐ வான்ட் மை ஹஸ்பண்ட் டு பி எ சிவில் சர்வன்ட் (CIVIL SERVANT)” என்றாள் அவனை அழுந்த பார்த்த வண்ணம்.

“இப்போ இந்த இன்ஸ்பெக்டர் வேல உனக்கு ஓகேவா இருக்கலாம். ஆனா முழு மனசா இருக்கியா இதுல? சின்ன வயசுல இருந்தே ஐ.பி.எஸ் (IPS) ஆகனும்னு தானடா கனவோட இருந்த? உன் ப்ரதர் அவரைவிட நீ மேல வந்துடக்கூடாதுன்னு ஒரு எண்ணத்துல சொன்னா, நீயும் சரின்னு விட்டுடுவியா? நீ படிச்சிருக்கனும் ஷிவ்!

உன் ப்ரதர் சொன்னதால நீ ஒன்னும் உன் ட்ரீம்ம விடவேண்டாம். ரெண்டு அட்டம்ட் தான போச்சு, இன்னும் நாலு இருக்கு. முப்பது வயசு தான உனக்கு, இன்னும் அஞ்சு வருஷம் உன் கையில இருக்கு. படி, படிச்சு போஸ்டிங் வாங்கிட்டு வா, உன் பிள்ளைய பெத்து கையில தரேன். அதுவரை, நோ..” என்றவள் இருவரின் நிலையையும் கண்ணால் காட்டினாள்.

“ஹேய், போடி சண்டிக்குதிர..” என்றபடி அவன் வெற்று மார்பில் அவள் முகத்தை அவன் அழுத்திக்கொள்ள, திமிறி எழுந்தாள் நங்கை.

“மிஸர்ஸ். சிவனேஷ் சொன்னது, சொன்னது தான். இனி, நட்சத்திரத்த நீ மட்டும் கவுண்ட் பண்ணு” என்றவள் போர்வையில் சுருள,

“ஆஹான், ஆனா பாருங்க மிஸ்டர். ஷக்தியோட மூட் இப்போ வேறயா இருக்கே மேடம்” என்று சொன்னபடி போர்வையினுள் நுழைந்தவன், அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான். 

“ஆனா நா பில்ஸ் எடுக்க மாட்டேன்.. அது உன்பாடு” அசராது அவள் சொல்ல,

“ஏய்.. என்னடி” ஜர்காகிவிட்டான் சிவா.

“என்னைய தொந்தரவு செய்யாத ஷிவ். என் முடிவு சொல்லிட்டேன், உன் ஆரூம்மாகாக நீயே ப்ரடெக்ஷன் எடுத்துக்க ராசா” என்றவள் அவனை அணைத்தபடியே தூங்க ஆரம்பிக்க, அவன் முகத்தில் அத்தனை கனிவு!

அவள் சொல்லிவிட்டாள், ஆனால் நிஜத்திற்கு அவனின் சிவில் சர்வீஸ் படிப்பு இந்த முப்பது வயதில் சாத்தியப்படுமா என்ற பெரும் கேள்வி அவனிடம்?

அதைப் புறம் தள்ளியவனாக அவள் தலையில் செல்லமாய் குட்டியவன், அணைத்துக் கொண்டான் அவன் குலாபை.

•••

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்