Loading

29

இனிப்பை மட்டும் சுவைத்து வந்தால் ஒரு நாள் அது திகட்டிவிடும்.‌ அதுவே கலவையான சுவைகளை எடுத்துவர, நம் உடலோடு சேர்ந்து வாழ்க்கையிலும் ஒரு சுவாரஸ்யம் தன்னால் வரும்.

எங்கனம் என்றால், ஒரே எண்ணத்தில் கங்கணம் கட்டிய குதிரையாய் ஓடாது வெவ்வேறு விதமான பாதைகளைத் தேர்ந்து செல்ல தன்னால் ஒரு ஆர்வம் மேலிடும் அல்லவா?

அடுத்து, அடுத்து என்று உள்ளூர ஒரு க்யூரியாசிட்டி (ஆர்வ மிகுதி) வளர்ந்து கொண்டிருந்தால் இந்த வாழ்க்கையில் நமக்கான இனிப்பான எதிர்காலம் கிடைக்கும். 

அதில் அவ்வப்போது காரசாரமான சில நிகழ்வுகளும் திருப்பங்களும் இணைத்துக்கொள்ள இன்னும் சிறக்கும், அதன் தொட்டு வரும் காலங்களில் அறுசுவை அலாதியாய் பிணைந்திருக்கும்.

“இப்போ எதுக்கு நீ இத்தன தத்துவத்த சொல்லுற? திரும்பவும் ஆராகூட சண்டப்போட்டியா என்ன?” என்று சிவா சொல்லியதை நினைத்து ஆராவமுதன் கேட்க,

“ஏன் நாங்க சண்டப்போடுறதுல இவ்வளவு ஆர்வமா இருக்க நீ? சும்மா ஒரு தத்துவத்த சொன்னா கேட்கமாட்டியாடா வெண்ண” என்க,

“நீ இப்படி வாழ்க்கையைப் பத்தி பேசுறவன் இல்லையே? அதுவும்..” என்று அவன்‌ இழுக்க,

“ம்ம்ப்ச், இவ பக்கத்தில இருந்தாலும் இப்போலாம் கொஞ்சம் தூரமா இருக்கற மாதிரி ஃபீல் ஆகுதுடா அமுதா, அதான் அப்போ அப்போ இப்படி ஏதாவது எனக்குள்ளையே சொல்லிக்கறது. இன்னிக்கு நீ சிக்குன” என்றான் சிவனேஷ். 

அவன் கண்ணில் அவனின் ஷக்தி பெண்ணை தேடுவது அப்பட்டமாய் தெரிய, அவன் சொற்களும் தூபம் போட்டுக் காட்டிக்கொடுத்தது ஆராவமுதனிடம்.

“ஒரு ஃபேமஸ் கோட் (quote) இருக்கு, ‘I love her and that’s the beginning and end of everything’ எவ்வளவு அழகா சொல்லிட்டாங்கள?” என்றவன் சொல்ல,

“முத்திடுச்சு” என்றுவிட்டான் ஆராவமுதன்.

“டேய்”

“சும்மா கெட, இந்த லவ் பண்ணுற பேய்க கூட எல்லாம் இதான் பேசக்கூடாது” என்றவன் அழுத்துக்கொள்ள, சிவாவிற்கு ஷக்தியின் அரவம் தெரிந்தது.

“இரு, ஷக்தி எழுந்துட்டா போல. சாப்பிட வெச்சுட்டு கால் பண்ணுறேன்” என்றவனை நினைத்து தன்னால் ஒரு மென்னகை பூத்தது ஆராவமுதனிடம்.

அறைக்குள் சென்றவனோ அங்கு தன் வலதுகையை அனிச்சையாய் 

ஊன்றப்போன ஷக்தியைப் பார்த்தவன், “கவனம்னா என்னென்னே தெரியாதா ஷக்தி உனக்கு? இன்னும் என்ன சின்ன பிள்ளையா நீ ஹான்” என்று சரமாரியாக அத்தனை திட்டுக்கள்.

அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளே இருந்த கோபம் நீர்க் குமிழியாய் வெளியே வர, பட்டாசு போல் வெடித்தான் சிவனேஷ்.

அவர்கள் இருவரும் ஈரோடு வந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. 

ஷக்தி, சிவாவிற்கு முன்னதாகவே தன் பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்க, சிவாவை கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் ஒரு ஸ்டோஷனிற்கு சஸ்பென்ஷன் முடிந்து சார்ஜ் எடுக்கப் பணித்து ஆணை கடிதம் கொடுத்திருந்தனர்.

ஈரோட்டிலிருந்து சற்று தூரம் தான் சிவாவிற்கு இருந்தும் அவர்களின் வீட்டிலிருந்தே தான் சென்று வந்தான்.

இரவு பகல் பாராத வேலை என்று சொல்வதற்கில்லை அங்கு. நல்ல ஊர், கிரைம் ரேட் குறைவு ஆதலால் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தான். 

ஆனால் அவனுக்கு வேலை இப்படி இருந்தால் ஷக்திக்கும் அவ்வாறேவா இருக்கும்?

வேலை அத்தனை குவிந்து கிடந்தது. சமீபமாக மாவட்ட ஆட்சியர் வேறு மாற்றலாகி வந்திருக்க அவர் ஏவும் வேலைகள் அவள் பதவிக்கான வேலை என்று பம்பரமாய் சுழன்றாள் பெண்.

வரி நிலுவைகள் துவங்கிச் சிறு சிறு சட்ட ஒழுங்கு நடவடிக்கை, நில பிரச்சனைகள் என்று அவள் இலக்காக்கு உட்பட்ட வேலைகளை முடித்துக் கொடுக்க நேரம் சரியாகப் போய்விடும். இதில் சிவாவை அவளால் சரிவரப் பார்க்கவோ பேசவோ முடியாது இருந்தது.

“சின்னப்பா தவழ ஆரம்பிக்கவும் அவன் பின்னாடியே ஓடுறோம் ஆரா’ம்மா. அம்மா வரலையேன்னுட்டு இருக்காத, லீவு இருந்தா நீயும் சிவாவும் வீட்டுக்கு வாங்க கண்ணு” என்று லாவண்யா தினமும் பேசிக்கொண்டு தான் இருப்பார்.

அதற்குத் தக்கத் தான் இருந்தது ஷக்தி – சிவாவின் வாழ்க்கை. பெயருக்கு இருவரும் வசிப்பது ஒரே வீடு தான். என்றபோதும் வாரத்தில் வரும் ஞாயிறன்று மட்டும் அவனைப் பார்ப்பதும் மனைவியின் கடமையை(!) செய்வதுமாக இருந்தால். 

மனைவியின் கடமை என்றால், சமையல்காரி வேடம் தான். 

அதைமீறி எந்தவித முன்னேற்றமும் இல்லை இருவரிடத்திலும். 

சொல்லப்போனால் இருவரும் அவர்கள் இருவரின் பேச்சையும் கரிசனையையும் அன்பையும் உளமார ரசித்தனர். 

வீட்டில் இருக்கும் தினங்களில் எல்லாம் சிவாவின் ‘ஆரும்மா’ என்ற அழைப்பே வீட்டை நிறைக்கும்.

சிறு அணைப்பும், மென் தீண்டலுமாய் இருந்த அவர்களின் சொல்லாத உணரும் காதல் காலம் வருடும் தென்றலாய் இருவரையும் தொட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தது.

“ஷிவ், ஐ வாண்ட் எ ஹக்” என்று வந்து நிற்பாள் ஷக்தி.

அது அவளுக்கான‌ ஒரு உந்துசக்தி.‌ எளிதாகச் சொல்ல வென்றால், அவளின் எனர்ஜி பூஸ்டர்!

“லவ் யூ, ஆரு” என்று அவள் நெற்றியில் முத்தமிடுவான், சிவனேஷ்.

வாழ்க்கையைப் பழையதை எல்லாம் கடந்துவிட்டாள், ஷக்தி. 

நிச்சயம் கடந்துவிட்டாள் என்று தான் சொல்லவேண்டும். சிவாவின் அன்பும் தோழமையும் அத்தோடான அவனின்‌ காதலும் அவளை மீட்டிருந்தது, முழுவதுமாய்.

இப்படியே அவர்கள் நாட்கள் செல்ல ஒரு குறிப்பிட்ட இடப் பிரச்சனைக்காகச் சென்ற இடத்தில் நடந்த கைகலப்பில் சிக்கி, ஷக்தியின் வலது கையில் லேசான ப்ராச்சர் ஏற்பட்டு இதோ இப்போது மூன்று வார மருத்துவ விடுப்பில் கணவனின் கவனிப்பில் இருக்கிறாள்.

கையில் ஸ்பிளின்ட் (splint) போடப்பட்டிருக்க, மேடம் ஜாலியாய் ராணியாக வீட்டில் இருந்தால்.

“ஷிவ், பசிக்குது”

“என்னங்க தண்ணீ”

“ஏங்க இன்னொரு மாத்திர மிஸ்ஸிங்”

“ஷிவ், அம்மா கூப்பிடறாங்க. இங்க வா”

“ஷிவ்..”

“என்னாங்க..”

“டேய் ஒரு போனி (டெயில்) சரியா போட வராதா உனக்கு?” 

அவளுக்குத் தோதான வாக்கியங்களில் அவனை ஆட்டிப்படைத்தாள் அவனின் குலாப்.

இதோ இப்படியே சமைக்கவும் ஊட்டவும் இன்ன பிற வேலைகள் செய்யவும் அவள் புருஷனும் விடுப்பு எடுத்து அவளுக்குச் சேவகம் செய்ய இருக்க, கேட்கவா வேண்டும்?!

“உங்களுக்கெல்லாம் யார்டா இத்தன லீவ் தராங்க? என் அண்ணன லீவ் எடுக்க சொல்லு, பத்திர காலனா மாறிடுவார். இதுங்க பொழுதுக்கும் லீவு லீவு லீவோ லீவு தான்” என்று மேகா வேறு கலாய்த்துக் கொண்டிருந்தால் பேசியில்.

“உங்களுக்கு நாத்தனார் மேல பாசமே இல்ல, அடிபட்ட புள்ளய பார்க்க வர தோனுச்சா உங்களுக்கு? விட்டது தொல்லைன்னு நான்‌ போனது போதும்னு இருக்கீங்க போல” என்றவள் சொல்லுக்கொண்டிருக்க,

“சக்தி” என்ற நம்மாழ்வாரின் குரல்.

“அண்ணீ, அப்புறம் கால் பண்ணுறேன்” என்றவள் வாயிலுக்கு விரைந்திருந்தால்.

உண்ணாமலை, நம்மாழ்வாருடன் அஞ்சலியும் வந்திருக்க, அத்தனை ஆச்சர்யம் ஷக்தி ஆராதனாவிற்கு.

அதற்குள் உள்ளிருந்து மேலெல்லாம் இட்லி மாவு லேசாய் அப்பியிருக்க, தோளில் கிச்சன் டவலும் கையில் பவுலில் அரிசியைக் கழுவியபடி, “யாரு ஷக்தி?” என்று வந்த மகனை அந்த கோலத்தில் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை.

“வாங்க அய்யா, வா ம்மா. மொசக்குட்டி எப்டி இருக்காங்க?” என்றவன் ஷக்தியின் அருகே செல்ல, ”உள்ள வாங்க” என்றவள் அஞ்சலியின் தலையைக் கலைத்துவிட்டாள்.

“சொகமா இருக்கிய சக்தி. நேத்தே வாரதா இருந்தோம், இந்த குட்டியும் வரேன்னுட்டு ஒத்தே அழுக” என்றார் பேத்தியைக் காட்டி.

சிவாவைப் பார்க்க, அவர்களின் அதிர்ந்த முகத்தையெல்லாம் அவன் சட்டை செய்யவில்லை. மிக இயல்பாக அந்த கோலத்திலேயே தான் நின்றிருந்தான்.

உண்ணாமலை, “ஒத்தாசைக்கு ஆளுங்கள வெச்சுக்கலாம்ல சிவா, என்னாத்துக்கு நீ சமையல் எல்லாம் செய்யுத?” ஆதங்கமாய் கேட்க,

“வெச்சு? கொஞ்ச நாளுக்கெல்லாம் எதுக்கு ஆளு? நானே சமைக்கமாட்டனா. ஷக்திக்குச் சரியான பின்ன அவளும் சேர்ந்துக்குவா” என்றவன் இயல்பாய் இட்லி வைத்து, கத்திரிக்காய் கொத்சு செய்தான்.

மகன் சமைப்பான் என்பதே உண்ணாமலைக்கு ஆச்சர்ய அதிர்ச்சி. இதில் அவன் பதவிசாக வேலை செய்ய, அங்கேயே நின்றுவிட்டார்.

ஷக்தி, “காஃபி இப்போ குடிக்கறீங்களா அங்கிள். இல்ல சாப்பிட்ட பின்னையா?”

நம்மாழ்வாரோ, “கொண்டுவா’த்தா” என்றார்.

அவளோ இருந்த இடத்திலிருந்தே, “என்னங்க, அங்கிளுக்கு காஃபி” என்க, நம்மாழ்வார் கூட சற்று அதிர்ந்துதான் போய்விட்டார்.

இம்மாதிரி மனைவியிருக்கக் கணவன் வேலை, அதுவும் சமையல் செய்வதெல்லாம் இன்னமும் அவர்களால் ஏற்கமுடியாத செயல். 

உண்ணாமலை சாப்பிட எடுத்து வைக்க காஃபியோடு வந்தான், சிவா.

டம்ளர் அல்லாது காஃபி மக்கில் அவன் எடுத்துவர நம்மாழ்வாரின் முகம் சற்று கூம்பியது.

ஷக்தி, “ஷிவ் கேட் ஹீம் எ டம்ளர்” என்றாள் சப்தமாக.

அவள் ஏவும் அனைத்திற்கும் அவன் வேலை செய்வது உண்ணாமலைக்கு எரிச்சல் வந்துவிட்டது.

“ஒத்த கை சும்மாதானே கெடக்கு? அதுல வேல‌ செய்ய என்ன வந்துச்சாம்? புருசனையே ஏவீட்டு” என்று சப்தமாய் அவர் முணுமுணுக்க, நம்மாழ்வார் கூட பேசாது இருந்தார்.

மகன் வேலை செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அதை அப்படியே விட்டாள் அவள் ஷக்தி இல்லையே.

“அவர் வீடு, அவர் வேலை செய்யறார். இதுல என்ன இருக்கு சந்தூர் மம்மி? கை நல்லாவே இருந்தாலும் நா இன்னைக்கி வேலை செய்யமாட்டேன், ஏன்னா இன்று அவருடைய டர்ன்” என்றாள் நக்கலாக.

“என்ன பேசுற” என்றவர் கோபத்துடன் ஏதோ சொல்ல வர,

“ம்மா, என்ன இருக்கு இதுல? வீட்டு வேல ஆம்பளைங்க செய்யக்கூடாதா என்ன? இங்க இத்தன பேசுற, அக்கா வீட்டுல போய் பார்த்திருக்கியா? காய் நறுக்கறதுல இருந்து அக்காவோட புடவய தொவச்சு போடுறது வர எல்லாம் மாமா தான்” என்றான் ஆழ்வாரைப் பார்த்துக்கொண்டு.

அந்த செய்தி அவர்களுக்குப் புதிது! 

“ஆத்தே, பொழுதுக்கும் அவ வீட்டுக்கு வரப் போக இருக்கும் போதே நெனச்சேன். கழுத, புருஷன வேல ஏவுதாலா” என்று பாரதியை உண்ணாமலை சாட, ஆழ்வாருக்கு முகத்தில் கோப ரேகைகள்!

‘ஏன்’ என்ற ரீதியில் ஷக்தி, சிவாவைப் பார்க்க அவனோ, “மொசக்குட்டி, அப்பா என்ன செய்வார் வீட்டுல” என்க, 

பிள்ளையோ, “வெசில் வாஷ் பண்ணுவார், பாப்பா டிரஸ் ஐயன் பண்ணுவார், டிவி பாப்பார்.. ம்ம்ம்.. அம்மா சாரீய இப்பி இப்பி செய்வார்” என்று உண்ணாமலையின் புடவை கொசுவத்தைப் பிடித்துக் காட்ட, ஷக்தி ‘கொல்’ என்று சிரித்துவிட்டாள்.

அஞ்சலியின் செயல் சற்று உண்ணாமலைக்கே சங்கடமாய் போய்விட்டது.

“அதான். மாமா பிள்ளைங்க முன்னத் தான் எல்லாம் செய்வார் ஏன்னா வேலை பொதுவானது. அத ஆண் தான் செய்யனும், இத பெண்தான் செய்யனும்னு ஏன் எதிர்பார்க்கறீங்க ம்மா? உங்க எண்ணத்த மாத்தச் சொல்லமாட்டேன். ஏன்னா உங்களுக்கு இது பழகிடுச்சு. பட் என்னாலையோ இல்ல என்ன மாதிரி‌ எண்ணம் இருக்கறவங்கள இப்படி உசத்தி பேசிப் பேசி என்ன கெடைக்கப் போகுது, சொல்லுங்க?”

“அதுக்குனு..” ஆழ்வார் தடுத்துப் பேச வர,

அவரை தடுத்தவன், “உங்க எண்ணம் உங்களோட அய்யா. வீட்டு வேல பொம்பளைங்கதான் செய்யனும்னா இனி வயலுக்கு பொம்பள ஆளுங்கள எடுக்காதீங்க! நோம்பிக்குத் துணி அதிகமாகிடுச்சுன்னு சலவைக்கு மணியன்கிட்ட கொடுக்காம, நீங்களே துவைங்க ம்மா” என்றான்.

நிச்சயம் அவர்களால் இரண்டையும் செய்யாமல் இருக்க முடியாது. களை எடுக்க ஆண்களைக் காட்டிலும் பெண்களின் கூலி சற்று குறைவாகக் கொடுத்தால் போதும். மற்ற வேலைகளிலும் அவர்களின் சம்பளம் கம்மியே. 

நம்மாழ்வார் அதிகம் பெண்களைத் தான் களை எடுக்கவும் நாற்று நடவும், தோட்டம் மற்றும் பண்ணை பராமரிப்பில் ஈடுபடுத்தியுள்ளார். 

நிச்சயம் மறுப்பு தான் அவரிடம்.

அடுத்து உண்ணாமலை, மணியனிடம் தான் வீட்டு ஆட்களின் துணியை (விசேட நாட்களில்) சலவைக்குக் கொடுப்பார். அவரை தவிர்த்து அந்த ஊரில் ஆளும் இல்லை இருந்தாலும் அவரை போன்ற தொழில் நேர்த்தியும் மற்றவரிடம் இல்லை. 

ஆக அவரிடமும் மறுப்புதான் வரும்.

சிவா, “பேசாம இருக்கீங்க? தொழில் அடிப்படையில மனுஷன பிரிக்கக்கூடாது அய்யா”

ஷக்தி, “அவர் என்னோட வேலை குறைக்கப் பார்க்கறார் அங்கிள். இதுல நீங்க நினைக்கிற மாதிரி எந்த அசிங்கமும் இல்லை. எல்லா வேலையும் பொதுவானது தான், நானோ அவரோ தான் செஞ்சாகனும். உங்க எண்ணப்படி நா மட்டுமே எல்லா வேலையும் செஞ்சேனா நாற்பது வயசுலையே, ஹோகயா தான்”

உண்ணாமலை, “ஏன் நான் செய்யறதில்ல. வழுவா தான இருக்கேன். உன்னால செய்ய முடியலேன்னு சொல்லு” 

ஷக்தி, “முடியுது முடியலை, அது வேற. வேலையப் பகிர்ந்து செய்யனும்னு எண்ணம் வரதே பெரிசு! கருணா’ண்ணா, உங்க புள்ள செய்யறது எல்லாம் உங்களுக்கு அவமானமா இருக்கலாம் ஆனா வேலைக்கு போற பெண்கள் எத்தன பேர் தன்னோட ஹஸ் இப்படி இல்லன்னு இருக்காங்க தெரியுமா? அதுக்குனு வீட்டு வேலை நான் குறை சொல்லல, சரிசமமா செய்யனும்னு சொல்லுறோம். அப்படிதான் என் வீட்டுல இருந்தாங்க, இவரும் அப்படிதான் இருக்கார்” என்றாள்.

அதை ஏற்க அவர்களால் முடியவில்லை. அதன் தொட்டு எதுவும் பேசி வார்த்தையை வளர்க்கவும் விரும்பவில்லை.

அந்தி மாலையில் வருடும் தென்றலின் அரவணைப்பில் வீட்டின் முன்புற இடத்தில் அமர்ந்திருந்தனர் அனைவரும்.

அஞ்சலி, ஷக்தியுடைய கைகட்டை தடவியபடியும் எப்படி நடந்தது என்று விடாது கேட்டபடி இருக்க, அவளும் அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தாள்.

”பேயின் இல்லியா.. எப்படி விழுந்த அத்த.. மாமா இல்லியா அப்ப” என்று கலகலத்துக் கொண்டிருந்தாள், அஞ்சலி.

சிவா அதை ஒரு சிரிப்புடன் பார்த்தவண்ணம் நம்மாழ்வாருடன் பேசிக்கொண்டிருக்க, மகனின் பார்வையைக் கண்டுகொண்டார், உண்ணாமலை.

மனதில் இத்தனை நாட்கள் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி எண்ணியதைக் கேட்க நினைத்துவிட்டார் அதன்பின்.

புகழ் நீலாவின் வாழ்க்கையை நிறைக்கப் பார்த்துவிட்டவரின் கண்களில் சின்ன மகனிற்கான வாழ்வு பற்றித் தெரியவேண்டிய அலைப்புறுதல் இருந்தது.

நினைத்தவுடன் மகனிருக்கும் ஊருக்கு அவரால் வரமுடியாது. அதேதான் சிவாவிற்கும். இருந்தும், மாதம் ஒருமுறையாவது அவன் மட்டும் சென்றுவருவான். அதில் எங்கு அவன் வாழ்க்கையை அவர் பார்க்க?

இன்று வந்ததும் மருமகள் அவர்களின் வாழ்வியலைக் காட்டிவிட, தாயாகச் சற்று முரண்டது மனது.

மகனும் மருமகளுக்கு இணைவாய் இணைந்து போக, வேறு என்ன அதைமீறி அவர் சொல்லிவிட முடியும்?

டீயுடன் சூடான காரப் பணியாரமும் பஜ்ஜியும் சமையல் அறையில் செய்துகொண்டிருந்தார் உண்ணாமலை. 

சரியாக ஷக்தி உள்ளே அஞ்சலிக்கு உணவை எடுக்க வர, “ஏத்தா, சந்தோசமா தான இருக்கீய்ய?” என்று ஓரக்கண்ணால் ஷக்தியைப் பார்த்தபடி உண்ணாமலை கேட்க, கண்களை மூடிக்கொண்டாள் ஷக்தி.

நிச்சயம் கோபம் வரவில்லை அவளுக்கு. மாறாக ஒருவித தவிப்பு. உள்ளத்தவிப்பு அவளின் ஷிவ்வின் மீது. 

அவள் மருத்துவரை அணுகிய போது அவர் கேட்ட முதல் கேள்வியே, “உங்க பர்சனல் லைஃப் எப்படி இருக்கு? எனி ப்ராபலம்?” என்பதே.

அப்போது அவன் மீதான காதலை அவள் உணராத தருணம், முற்றிலும் அந்த கேள்வியை மறுத்துவிட்டாள்.

இருந்தபோதும் அவன் மீது துளிர்த்த நேசத்தின் சாரல்கள் அனைத்தும் இணைந்து சேர்ந்த முடிவு அவள் சிவாவுடன் இணைவதைப் பற்றி மருத்துவரிடம் பேசியது!

அதுதான் ஆரம்பம். அவனுடன் அவள் வாழ ப்ரியப்படுகிறாள், இருந்தும் இந்த பொல்லா தயக்கமும் தேவையற்ற சிந்தனையும் அவள் போட்ட முடிச்சை அவிழ்க்கப் பார்க்கின்றது.

“சக்தி” என்ற உண்ணாமலை அவள் இருந்த நிலை கண்டு அழைக்க,

‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவளின் உள்ளத்தில் உண்டான அதிர்வுகள் பெரும் பூகம்பம்.

வெறும் உடற்சார்ந்த நிகழ்வாய் அதை அவள் எண்ணியிருக்கவில்லை. அவர்களின் காதலின் சங்கமமாய், உணர்வுகளின் பிணைப்பாய், இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் அவளின் எண்ணம், திண்ணம்.

இருந்தும் அவளின் விருப்பம் மட்டும் போதுமா? அல்ல ‘நான் தயார்’ என்று சிவாவிடம் போட்டுடைக்கவும் முடியுமா?

“என்ன” என்ற‌ உண்ணாமலைக்கும் அதிர்வே. இருந்தும் அதை அவர் தேர்ந்து மறைத்துவிட்டார்.

அவர்களின் திருமணம் நடந்த சூழலை உணர்ந்தவராதலால் ஷக்தியை ஒரு பெண்ணாய் புரிந்துகொள்ள முடிந்தது. 

அதற்கு இந்த நான்கு மாத இடைவேளை அவர் மனதில் கல்லெறிந்திருந்தது ஷக்தி ஆராதனா என்ற பெண்ணை அவர் முதலில் பார்த்தது எந்த கண்ணோட்டத்தில் என்று.

இருந்தும் மகனுக்கான தாயாய் அவர் பேசவும் செய்தார்.

“இங்காரு என்னாச்சுனுட்டு இப்படி நிக்கறவ? அதது நடக்க வேண்டிய சமயம் நடக்கட்டும். இப்போதான ஒன்னுமண்ணா இருக்கீய்யா, எல்லாம் சீக்கிரம் நல்ல செய்திய சொல்லிடுவா. கலங்காம இருத்தா” என்றவர் புடவையில் கையை துடைத்துக்கொண்டு ஷக்தியை அவர் புறம் திருப்பினார்.

அவள் கலங்கிய கண்கள் அந்த பெண்மணிக்கு ஓராயிரம் வலிகளையும் ஏக்கங்களையும் புடம் போட்டுக் காட்டியது.

“என் பிள்ளைய கட்டிக்கிறவ பயங்கர புண்ணியம் பண்ணியிருப்பான்னு சொன்ன தான? புண்ணியம் பண்ணவ என்னத்துக்கு அழுகையைக் கூட்டுற? மெத்த படிச்சு, பெரிய உத்தியோகத்தில இருக்கறவளுக்குத் தெரியாதா என்ன? இங்காரு கண்ணக் கசக்காத இரு, என் மவென் பார்த்துப்பான்” என்றவர் பேச்சு ஷக்திக்கு அத்தனை ஆறுதலைக் கொடுத்தது.

இருந்தும் என்ன முயன்றும் அவரின் கடைசி வாக்கியம், சிறு புன்னகையை அவளுள் தோற்றாமல் இல்லை.

“ஹான்.. சிரிங்கேன். இப்படியே சிரிச்சாப்படி போய் முகங்கழுவீட்டு சாமிய கும்பிடு. நல்ல வழி பொறக்காமயா போயிடும்” என்றார் மருமகளிடம்.

ஷக்தி நகரவும், “சக்தி அத்த கொடுத்த அந்த பட்டுப் புடவையை வெச்சிருக்க தான?” என்றவர் கேள்வியிட,

“ம்ம்.. கபோர்ட்ல” என்றவளை ஆழ்ந்து பார்த்தவர்,

“எப்ப இருந்தாலும், அந்த புடவையிலதென் நல்லது நடக்கோனும். நெனப்பிருக்கட்டும், நம்ம வீட்டுமுற, அதுக்குத்தான் அத்த அன்னிக்குக் கொடுத்தது. மறந்துறாத” என்க, தன்னால் அவளுக்குச் கூச்சம் மேலிட வேக எட்டு வைத்து அறைக்குள் சென்றுவிட்டாள், ஷக்தி ஆராதனா.

அடுத்த நாள் மதியம் போல மூவரும் ஆழ்வார்திருநகரி புறப்பட்டிருக்க, சிந்தனை வலையில் சுழன்றாள், சிவாவின் ஷக்தி பெண்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்