Loading

மெல்ல மெல்ல எழுந்துவந்த பரிதியவன் தூக்கம் களையாது மேகத்துடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க, அவனைக் காட்டிக்கொடுக்கவே இருந்த அவனின் கதிர்கள் போட்ட வர்ண ஜாலத்தை அவனின் பூமித்தாய் ரசித்துப் பார்த்திருந்தாள்.

வண்ணக்கலவையில் குளித்திருந்த வானமோ, நண்பனின் சோம்பேறித் தனத்தைக் காட்டிக்கொடுக்கத் துணியாது, அங்கிங்கு இருந்த நீர் மேகங்களை ஒன்று திரட்டி சற்று மோடமாகக் காட்சி தந்தது.

வீடே உறங்க உண்ணாமலை ஐந்து மணிக்கே எழுந்து பணியினை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்.

சில பழக்கங்கள் நம்மிடம் ஊறிப்போய் இருக்கும். உண்ணாமலைக்கு அவரே எழுந்து வாசல் தெளித்து, காலையில் காஃபிக்கு டிக்காஷன் போட்டு, செடிகளுக்கு நீர் ஊற்றி, பூஜை செய்த கையுடன் காலை உணவிற்குத் தயார்ப் படுத்த வேண்டும் என்ற எண்ணம்.

நடுவில் தேனாட்ச்சியே புகுந்தாலும், ஒரு காட்டுக் காட்டி விடுவார். வேலை செய்வதில் அலாதி பிரியமுடையவர்.

“செஞ்ச உடம்பு சேகேறும்; செய்யாத உடம்பு நோவேறும்” என்பார் அடிக்கடி.

இருந்தும் இந்த மூன்று மாதங்களாக அவரின் வேலையில் பங்கு கொள்ள வந்துவிடுவாள், நீலவேணி.

சிறு வயது தொட்டே அவரின் குணம் தெரிந்தனாலோ என்னவோ அவருக்குத் தக்க நடந்து கொள்வாள்.

இன்றும் அவ்வாறே எழுந்தவள் உண்ணாமலை பூஜை செய்யும் முன்னர் வீட்டை மொத்தம் கூட்ட ஆரம்பித்திருக்க, அவர்கள் அறைக்குள் கூட்டும் நேரம் புகழ் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.

இயல்பான ஒரு வாழ்க்கை அவர்களுக்கு. இன்னும் இருவரும் நெருங்கவில்லை என்றாலும் எதார்த்தம் புரிந்த பெண்ணவளோ அவன் போக்கில் விட்டுப்பிடிக்க எண்ணம் கொண்டு இருந்தாள்.

”ம்ம்ப்ச்.. பாரு நோட்டோட சேர்த்து கூட்டுற நீலா. கவனமே இல்ல” என்றபடி கீழே விழுந்திருந்த கையடக்க நோட் பேட்டை எடுக்கையில் அதன் முகப்பு அவளைக் கவர்ந்தது.

அதனைத் தொட்டுக் கும்பிட்டபடி, “மாமாவோடது போல” என்று துடைப்பத்தைக் கீழே போட்டவள் அதை ஆர்வம் மிகுதியில் பிரிக்க, முதல் பக்கத்திலிருந்த வரிகளில் நிலைக்குற்றியது அவளின் பார்வை.

‘அவளின் அந்த காஃபி நிற உதடுகள் என்னைப் போதை ஏற்ற போதுமானவை…’

‌புகழின் கையெழுத்து என்று தெரிந்ததும், ஷக்தி வந்த அன்று அணிந்திருந்த ‘சாக்லேட்’ வண்ண உதட்டுச் சாயம் அவள் நினைவில் வந்து இம்சித்தது.

மனம் அலைபாய, மங்கையின் எண்ணமும் பலவாறு பாய்ந்துகொண்டு வந்தது அவளிடம்.

அது கொடுத்தத் தக்கத்தினால், புகழின் மனநிலை புரியாததினால், ஷக்தி வந்ததை நினைத்தவளால், தன்னின் நிலையை எண்ணியதால் என்று எல்லாம் அவளைக் குழப்ப, “மாமா” என்று மௌனமாய் கண்ணீர் சிந்தினாள், நீலவேணி.

நேரம் நகர, வீடு காலை நேரப் பரபரப்பில் சுழன்றது.

ஊருக்கு வந்து நாட்கள் இரண்டாகியிருக்க, பிள்ளைகளுடன் வெளியே செல்ல நினைத்திருந்தான், சிவா.

சிவா, “காலேல சாப்பிட்டு, மொசகுட்டிகளோட வெளியப் போகலாமா மாமா?” என்றான் கருணாவிடம்.

“ஆமா அண்ணா, போர் அடிக்குது” என்று மலரும் சேர, ஒருமனதாக வெளியே செல்லலாம் என்று அனைவரும் கிளம்ப ஆயத்தமானர்.

சாப்பாட்டுக் கடை முடிந்திருக்க, தேனாட்ச்சியுடன் உண்ணாமலை நம்மாழ்வார் இருந்துகொண்டு, புகழுட்பட அனைவருமே பக்கத்தில் எங்காவது செல்லலாம் என்று எண்ணியிருந்தனர்.

அதுவரை கூட நீலாவின் மனது பொறுக்கவில்லை போலும். மனதில் ஒருவித நச்சரிப்பு இருந்தவண்ணம் இருந்தது. 

என்ன இருந்தாலும் அவள் வாழ்க்கை. யாரை நம்பியும் அவள் இருக்கவில்லை, இருக்கப்போவதும் இல்லை. முடிவைத் தெரிந்துகொண்ட பின்னர் அடுத்ததைப் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்தவள்,

“ஒன்னு உங்ககிட்ட கேட்கனும் மாமா” என்று தயங்கிக்கொண்டு புகழின் முன்பு நின்றிருந்தாள், நீலவேணி.

அவனோ தன்னை தயார்ப்படுத்திக்கொண்டே புருவச் சுழிப்புடன் அவளைப் பார்த்தவன், “என்ன?” என்றான் வெற்றுக் குரலில்.

எப்போதும் அவளிடம் வெறுமன வரும் குரல் தான். ஆனால் இன்று அது அவளை முற்றும் வருத்தியது.

“என்ன பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அது எனக்கேத் தெரியும். ஆனா..” என்று இழுத்து அவன் முகம் பார்க்க அவனோ, தாடை இறுக நின்றிருந்தான்.

“ம்ம்.. மேல சொல்லு” என்று கையைக் கட்டிக்கொண்டு அவன் கேட்ட விதம், அவள் நெஞ்சில் நீர் வற்றிய உணர்வு. 

இருந்தும் அவள் அதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறாள். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இன்னும் அவங்க உங்க மனசில இருக்காங்களா?” என்று அவன் கண்களைப் பார்த்துக் கேட்டேவிட்டாள்.

“எவுங்க” என்றான் அவனும் வேண்டும் என்றே.

அவன் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தது அவன் முகத்தில் நன்கு வெளிப்பட்டிருக்க, அவனின் அந்த பேச்சை அவள் சுத்தமாய் ரசிக்கவில்லை. 

“ம்ம்ப்ச்” என்று வெளிப்படையாகச் சலித்தவளின் செயல் அவனைக் மேலும் கோபம் கொள்ள செய்ய ஏதுவாக இருந்தது.

நீலாவின் கேள்வி அவனுக்கு உவப்பானதாக இல்லை. ஏன் அவன் நீலாவை மணந்துகொண்ட பின்னரும் ஷக்தியை நினைக்கிறான் என்று இன்னும் எத்தனை பேர் தான் நினைப்பர் என்ற கோபத்துடனான ஆதங்கமும் அவனுக்கு இல்லாமல் இல்லை.

அதனால், “ஆமான்னு சொன்னா‌ என்ன செய்வ? உங்க வீட்டுக்கு போயிடுவியா என்ன?” என்றான் எள்ளலாக.

அவள் நிச்சயம் போகமாட்டாள் என்பது அத்தனை திண்ணம். இருந்தாலும் அவளின் எதிர்வினையை அறிய அவனுக்கு உள்ளூர ஒரு உந்துதல்.

அவனை ஒரு நிமிடம் தீர்க்கமாய் பார்த்தவள் விருட்டென்று வெளியேறிவிட்டாள். 

“ஊஃப்ப்.. இவளோட” என்று கிளம்பி அவன் அறையை விட்டு வெளியே வரும்போது கேட்ட சொற்களில் ஸ்தம்பித்துவிட்டான் ஆணவன்.

“அவர் இன்னும் உங்கள மறக்கல, நீங்களும் சேர்ந்து வாழுற மாதிரி தெரியலை. எதுக்கு இப்படியொரு பந்தத்துல கிடந்து நாலு பேரும் சாகோனும்? நான் விலகிக்குறேன், நீங்க என் மாமாவையே கட்டிக்குங்க” என்று அழுகையூடு ஷக்தியிடம் சொன்ன நீலாவின் பேச்சைக் கேட்டு புகழேந்திரன் அதிர்ந்தான் என்றால் சிவா ஆத்திரமானான்.

“அரஞ்சேன்னு வை, என்ன பேசிட்டு இருக்க நீ” என்று நீலாவிடம் கையோங்கிவிட்டான், சிவா.

“ஷிவ்” என்று ஷக்தி ஆட்சேபிக்கும் போதே,

“அறிவிருக்காடி கூறுகெட்ட சிறுக்கி” என்று அவளை அடித்தேவிட்டார் உண்ணாமலை.

அத்தனை அழுகை பொங்கியது நீலாவிற்கு. இன்னும் அவள் உரைத்த சொற்களுக்கான பொருளை உணராமல் நின்றிருந்தால்.

“வாயில வசம்ப வெஞ்சுதேன் தைக்கபோறேன்.. ரோசனையில்லாம பேசுத, ஒடம்பு கூசல உனக்கு.. ச்சீ” என்று கோபத்தின் உச்சியில் நின்றிருந்தார், உண்ணாமலை.

அதைக் கேட்டபடி வந்த புகழோ, “நீலா, என்ன பேசீட்டு இருக்க நீ? அறிவில்ல உனக்கு” என்று அவளை நெருங்கியவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“வாடி உள்ள” என்று அறைக்குள் இழுத்துச் சென்றவனைத் தடுக்க யாரும் முற்படவில்லை.

அவர்கள் உள்ளே சென்றதும், “என்ன பழக்கம் இது ஷிவ்? அடிக்க கையோங்கர? யார் கொடுத்த இடம். அவங்க என்ன பேசினாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவியா?” என்று ஷக்தி அவனை கேள்வியிட,

“இந்தாரு கம்மினிருந்துக்க. அவ பேசினதுக்கு இன்னேரம் வெட்டியே போட்டிருக்கோனும், இவன் அடிக்க வந்ததோட நிப்பாட்டினான்னுட்டு இருந்துக்க. இவனோட ஒழுங்கா நீயி இருந்தியினா அவ என்னத்துக்கு வந்து இப்படி நிக்கபோறா? உருப்பிடியா வாழப்பாரு” என்று கோபம் தணியாதக் குரலில் உண்ணாமலை சொல்லிச் செல்ல,

“நாங்க வாழமா போகுறதுக்கும் அவங்க வந்து இப்படி கேட்கறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? அவ்வளவு அக்கறையோ” என்று ஷக்தியும் பேச, “ஃப்ளீஸ் அமைதியா இருங்க ஆராதனா” என்று மலர் அவளை அடக்கப்பார்த்தாள்.

“இந்தாரு..” என்று உண்ணாமலை மீண்டும் வெளியே வர, ”எங்க வாழ்க்கைய நாங்க நல்லா வாழ்ந்துக்கறோம். எங்கள நெனச்சு யாரும் எதுவும் சொல்லவும் வேண்டாம் வருந்தவும் வேண்டாம்” என்றாள் பட்டென்று.

“சக்தி, ஆத்தா கொஞ்சம் பேசாத இரு. வாயிக்கு வாய் பேசினா என்னத்த கிடைக்கப்போகுது” என்று நம்மாழ்வார் சொல்லவும் தான் அமைதியானாள் பெண்ணவள்.

அறைக்குள் நீலாவை இழுத்து வந்தவனோ, “என்ன நீலா பேசீட்டு இருக்க” என்று புகழ் உக்கிரமாய் கத்தினான்.

அவனுக்கு மிகவும் தலையிறக்கமாய் போய்விட்டது நீலாவின் பேச்சு. அறைக்குள் நடப்பதற்கும் வெளியே அவனைப் பற்றி அவன் மனைவியே பகிரங்கமாய் ஒரு செய்தியை அதுவும் அனர்த்த செய்தியைப் பகிர்ந்து கொண்டு அதற்கு அவளே ஒரு விடையையும் சொல்லுவது போல் பிதற்றுவதை அவன் கொஞ்சமும் ரசிக்கவில்லை.

“நான் இன்னும் ஆராதனாவ தான் நினைக்கறேன்னு உனக்குத் தெரியுமா, சொல்லுடீ” என்று அவளை உலுக்கினான்.

கீழுதட்டைக் கடித்தபடி அழுதாளே தவிர பதில் மொழியவில்லை நீலவேணி.

“நானும் சின்ன பொண்ணு, நமக்கும் டைம் வேணும்னு இருந்தா இன்னிக்கு நீ பண்ணியிருக்கறது எவ்வளவு பெரிய இம்பாக்ட் பண்ணும்னு தெரியுமா உனக்கு?” 

அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுக சிறுக ஒரு விஷயத்தை விட்டு வெளியே வரப்பார்க்க அதை மீண்டும் மீண்டும் ஒருவர் (பலர்) குடைந்து கொண்டே இருந்தால், அவனும் என்ன தான் செய்ய முடியும்?

பெட்டில் மூச்சுவாங்க அமர்ந்திருந்தவனைப் பார்க்க நீலாவிற்கும் கோபமான கோபம். சற்று முன்னர் அவள் கேட்டாள் தானே? இன்னும் நீ ஷக்தியை நினைத்திருக்கிறாயா‌ என்று கேட்டாள் தானே? 

சொல்லியிருந்தால் இப்பிரச்சினை வந்தே இருக்காது என்பது அவளின் புறம்.

அவனின் நோட் பேடை எடுத்து அவனின் புறம் வீசியவள், “இதுல இருக்கறதுக்குப் பதில் என்ன மாமா? இத படிச்ச பின்னதென் நான் உங்ககிட்ட கேள்வியே கேட்டேன். ஆமா இல்லைன்னு சொல்லுறத விட்டுபோட்டு குதர்க்கமா பதில் சொன்னது நீரு, அப்படி நான் என்னத்த தான் செய்யோனுமிட்டு நினைக்கறீரு?” என்று அவளும் கோபம் பொங்கக் கேட்க, புகழ் அதைப் பிரித்துப் பார்த்தான்.

அது ஷக்தியுடனான விமான பயணத்தின் போது, அவள் அவனுக்கான காப்பை அணிவித்த போது எழுதியது என்று உணர்ந்தவன், மனைவியைப் பார்ப்பதைத் தவிர்ந்தான்.

”சொல்லுங்க, இத படிச்ச பின்ன நானு என்னனுட்டு நினைக்கறது? நானும் மனுசி தான மாமா, எனக்கும் ஆசாபாசமெல்லாம் இருக்கும் தான. என்னதான் உங்களுக்கு முன்னவே ஒரு காதல் இருந்திருந்தாலும் எனக்கு தாலி கட்டின பின்னவாது அதை மறந்துருப்பிங்கன்னுட்டு நினச்சேன். ஆனா… இப்படி‌ பண்ணிட்டீங்களே மாமா” என்று வந்த கேவலைக் கை வைத்து மூடியபடி தரையில் அமர்ந்து அழுவிட்டாள், நீலவேணி.

இறுகக் கண்களை‌ மூடிக்கொண்டவன், “ஆராதனா இப்போ சிவாவோட வைஃப் நீலா. அவ என்னோட நினைப்புல இல்லேன்னு சொல்லமாட்டான் ஆனா அவ என் கடந்த காலம்” என்றான்.

“நேத்து அய்யா ‘தம்பி பொஞ்சாதின்னு நினைப்பிருக்கட்டும்னு’ சொன்னாரே, என்னைய என்ன அந்தளவுக்குத் தரம் தாழ்ந்தவனுட்டு நினைச்சீங்களோ? அவ வேற ஒருத்தன் பொண்டாட்டி அவள மனசுல என்ன கனவுல நினைக்கக்கூட நான் மாட்டேன். நான் பார்த்த ஆராதனா வேற, ஒரு தோழமையா ஆளுமையா தாய்மையோட பழகுனவ எப்பவும் என் எண்ணங்கள்ல இருப்பா. அத மீறி என் பொஞ்சாதிக்கு நான் துரோகம் செய்யத் துணிய மாட்டேன்” என்க, அவனையே பார்த்திருந்தாள் நீலா.

“அதுவும் நீ இப்போ வெளியே பேசின பாரு, அவங்க வாழாம இருக்காங்கனு? உனக்குத் தெரியுமா? என்ன பேச்சு இதெல்லாம் நீலா. ஆராதனா இப்போ தான் மெடிக்கல் கவுன்சிலிங் போய் சிவாவோட வாழ ஆரம்பிச்சிருக்கா, இப்போ உன் பேச்சு அவள டிஸ்டர்ப் பண்ணாதா? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவுமில்லை. முடிஞ்சது முடிஞ்சதுதான். புரியுதா?

நம்மனால அவங்க வாழ்க்கையில இனி எந்த களங்கமும் குழப்பமும் வேண்டாம். நமக்கான வாழ்க்க இருக்கு, அதப் பார்ப்போம். எனக்கான டைம் கண்டிப்பா வேணும், அத உன்கிட்ட மொதல்லையே சொல்லிட்டேன்.

இந்த எழுத்து என்னோடது தான். ஆராதனாவ நினைச்சு தான் எழுதுனேன், ஸாரி. நீயே அதத் தூக்கிப் போடு, இல்லையா கிழிச்சுடு” என்றவன் வெளியேறிவிட்டான்.

முகம் கசங்க அமர்ந்திருந்தான் சிவா. அரும்பாடுபட்டு அவன் ஷக்தியை அவன் மீட்டெடுத்திருக்க நீலாவின் பேச்சு அவனை உசுப்பியது. 

ஷக்தியிடம் நீலாவைப் பற்றித் தெளிவாய் பேசியவனால், இப்போது நீலாவால் ஏற்பட்ட நிகழ்வை எண்ணி ஷக்தியைவிட சிவாதான் அதை உருபோட்டு மன அமைதியைக் குழப்பிக்கொண்டிருந்தான்.

அதை உணர்ந்த ஷக்தியும், “ஓகே, ஓகே.. அவங்க ரிலேக்ஸ் ஆகட்டும். தூரமா எங்கையும் போகாம, பக்கமா போகலாம். ஃபிளான் கேன்சல் எல்லாம் பண்ண வேண்டாம்” என்ற ஷக்தி சூழலைச் சரியாக்கப் பார்த்தாள்.

யாரும் செல்ல விருப்பம் இல்லை என்றாலும் போயே ஆகவேண்டும் என்று நின்றாள், ஷக்தி.

நிச்சயம் வெளியே சென்றால் ஒரு மனமாற்றம் வந்தமரும் என்று நினைத்துக்கொண்டே அவள் அனைவரையும் அழைக்க, புகழும் நீலாவும் வர மறுத்தனர்.

“அட வருவியா நீயி, உங்கத்த அடிச்சதுக்கு எல்லாம் இத்தனை சோக சீதம் வாசிக்காத புள்ள” என்று மலர் நீலாவை இழுத்துக்கொண்டாள்.

எங்கும் தூரமாய் எல்லாம் அவர்கள் செல்லவில்லை. கடைசியில் 

வந்தது என்னவோ நம்மாழ்வாரின் வயலோடு ஒட்டியிருந்த தோப்பும் பண்ணைக்கும் தான்.

கிட்டத்தட்ட முப்பது ஏக்கர் நிலம். அதில் பாதி வயலும் மீதி தோப்பும் பண்ணையும் அவற்றிற்கான கிணறும் மோட்டார் அறையும் பக்கத்தில் குட்டித் தோட்ட வீடும் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இடம்.

இயற்கை தாய் தன் அழகையும் ஆசியையும் அபரிமிதமாக அவ்விடத்தில் கொட்டியிருந்தால் போலும். கண்ணைக் கவர்ந்தது அந்த இடம்.

இதற்கு முன்பும் ஷக்தி வந்திருக்கிறாள் தான். ஆனால் இத்தனை பசுமையை அவள் அப்போது கண்டதில்லை.

இன்று குடும்பமாய் அவர்கள் அனைவரும் வந்திருக்க, சிவாவின் கையைப் பிடித்துக்கொண்டு வரப்பில் நடந்தவள் மனதில் இருந்த இனிமையும் குளுமையும் சொல்லில் வடிக்க இயலாதவை.

அவள் பற்றியிருந்த கைகளை மேலும் இறுக்கியபடி நடந்தவனின் மனதில் சில்லென்று உணர்வு. 

இப்படி ஷக்தியோடு எத்தனை கனவுகள் இந்த இரண்டரை மாதங்களில் அவன் கண்டிருப்பான். அவை யாவும் நினைவாக்கியத் தருணத்தைப் பூரிப்பாய் நகர்த்தினான் சிவனேஷ்.

“ஷிவ், இன்னும் எவ்வளவு தூரம் போகனும். கால்ல கல்லு குத்துது” என்றவளுக்கு,

“இப்போ தான் காவாசி வந்துருக்கோம் ஷக்தி. இன்னும் போகனும். கல்லு தானே குத்தினா தாங்கு குரங்கே, இதுக்காக உன்ன தூக்கிட்டு எல்லாம் போகமாட்டேன்” என்றவன் இயல்பான பேச்சு அவன் மனதைப் புடம் போட்டுக் காட்டியது.

அவனின் குரங்கு, கழுத, பன்னி, எரும இன்னும் அவளிற்கான அவனின் ஆசை பெயர்கள் எல்லாம் கேட்டு இரண்டு வருடம் ஆகின்றது!

அவள் அதை சில சமயம் கவனித்திருந்தாலும் மீண்டும் அவனிடம் அப்படி அழைக்கச் சொல்லிக் கேட்கச் சங்கடம். அவர்களின் திருமணம் முடிந்த பின்னரும் கூட இயல்பாக அவளிடம் இருக்கப் பார்த்தானே தவிர்த்து முன்னர் இருந்த இயல்பான பேச்சிற்குத் தடாதான்.

அப்போது, “என்ன நீ குரங்கு சொல்லிட்டே” என்று ஆர்ப்பரித்துக் கத்தியவளைச் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

அவள் பின்னே வந்த கருணா, மலர், நீலா, அஞ்சலி, ஆதினி என்று அனைவரும் அவர்கள் பேச்சைக் கேட்டபடி வரப்பில் ஷக்தியின் பின்னால் தான் வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் முகத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு. எங்குச் சிரித்தாள் ஷக்தி கோவிப்பாளோ என்று அடக்கியபடி அவர்கள் வர, “ம்மா ஆராதனா, மன்னிச்சுக்க” என்றபடி சத்தமாகச் சிரித்துவிட்டான் கருணா.

அவர் தோள்மேல் இருந்த ஆதினி ‘குரங்கு’ என்ற சொல்லைக் கேட்டுச் சிரிக்க, மெல்ல அந்த சிரிப்பின் எதிரொலி பரவி விரிந்தது.

கருணா, “இதுவே எம் பொண்டாட்டியா இருந்திருக்கனும், புடவைய சொறுகிட்டு ‘தூக்கி அடிச்சேனா பாத்துக்க’ ரேங்ஞ்ல நிப்பா” என்க,

சிவா, “பயமே இல்ல மாமு உனக்கு”

“உன்னவிட பயந்தவன் இல்ல தான்டா நானு”

“ப்பா நானு பாடவா” அஞ்சலி ஆசையாய் கேட்க, “நீ பாடுடீ மொசக்குட்டி” என்று மருமகளைத் தூக்கிக் கொண்டான் சிவா.

அவள் ‘காப்ளர் காப்ளர்’ மழலையில் ரைம்ஸ் சொல்ல, அழுத்த முத்தமிட்டான் அவள் கன்னத்தில்.

காலை நிகழ்விலிருந்து நீலாவை மீட்க எண்ணிய மலர், “சரி சும்மா இருக்காம, அவங்க அவங்க ஸ்பாவுஸ் (துணை) பத்தி ஏதாவது பாட்டு பாடுங்க எல்லாரும்” என்க,

“எனக்கு மூடே இல்ல மலர்” என்றுவிட்டான் சிவா.

”உங்களுக்கு என்னைக்கு மூட் வந்துருக்கு சிவா மாமா?” என்றவள் சொல்ல, ஷக்தி பட்டென்று சிரித்துவிட்டாள்.

அவள் சிரித்ததிலேயே ஏதோ மார்க்கமாய் தான் நினைத்திருக்கிறாள் என்று எண்ணிய சிவா அவளை முறைக்க அவளோ, “கருணா’ண்ணா நீங்க பாடுறது”

“ம்கும்.. என்னத்த? கேட்பியா நீ அத சொல்லு மொத?” என்க,

“என் ஏர் டிரம்ஸ் (காது ஜவ்வு!) கேரண்டி கொடுங்க, கேக்கறேன்” என்றாள் கருணாவின் குரல் வளத்தைக் கருத்தில் கொண்டு.

“அதுக்கு நீங்க கேக்காமலையே இருக்கலாம் ஆராதனா. எங்கண்ணே ஆதினி தூங்கப் பாடும் பாருங்க பாட்ட..” என்று மலர் இழுக்க,

ஆசையில பாத்தி கட்டி 

நாத்து ஒன்னு நட்டு வைக்க 

வா பூவாயீ..

என்று அத்தனை உயிர்ப்பாய் அவன் பாட, ஷக்தி லய்த்துவிட்டாள்.

“அந்த பூவாயி பாரதியா மாமா” என்று சிவா கேட்டிட, 

“அப்கோர்ஸ்டா மாப்புள. உங்கக்காள தவிர வேறாறு இருக்க முடியும்”

“சேரித்தென்” 

மலர், “ரைட், அடுத்து நீலா, நீ பாடு பார்ப்போம்”

நீலா, “எனக்குப் பாடவெல்லாம் வராது அக்கா” என்றாள்.

மலர், “சரி பாடாத, பாட்டோட வரிய அப்படியே சொல்லு” என்றவள் ஒற்றைக் கண்ணை அடித்து, “புகழ் மாமாவ நினைச்சு” என்க நீலாவின் முகம் சலனமே இல்லாது இருந்தது.

மலர், “ஆரா அக்கா, நீங்க அப்படியே எங்க சிவா மாமா நினச்சு பாடுறது”

ஷக்தி, “யாரும் ஓடக்கூடாது அப்போ தான் பாடுவேன்” என்றாள் உடன்.

தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்திருந்தவள் சிவாவை நோக்கி ஒரு நக்கல் பார்வையை வீசியவள், “ம்ம்.. ஷிவ் நான் பாடுறேன்”

“நான் செத்துட்டேன்” என்றவன் கருணாவின் தோளில் சாய்ந்தபடி.

அதில் அனைவரும் சிரிக்க, சட்டென்று மாறிய முகபாவத்துடன் பாடினால் சிவாவின் நங்கை!

கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா

அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா..

முகத்தில் உறைந்த சிரிப்பும் கண்களில் மின்னிய கேளியுமாக,

முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா?

சிவாவைப் பார்த்தபடி கண்ணில் அபிநயம் பிடித்து அவள் தலையாட்டி பாட்டை முடிக்க, நீலாவின் முகத்தில் ஒருவித பாவம்.

ஷக்தி பாடி முடியத் தொட்டியில் இருந்தத் தண்ணீரை கையால் சிலுப்பி சிவா இருந்த திசை நோக்கி வீச, சிவாவிற்கு அவன் முகத்தை எங்குக் கொண்டு வைப்பதென்று தெரியாத அளவிற்கு வெட்கம். 

ஆண்கள் வெட்கம் கூட தனியழகு தானே!

கடைசியில் கருணா, “தில்லானாத் தில்லானா” என்று சிவாவின் முகத்தைப் பார்த்து முடிக்கவும், “மாமு” என்று கத்தியேவிட்டான்.

“பெருத்த சங்கடங்கள் அண்ணே” என்று மலரும் தன் பங்கிற்குச் சொல்ல, “போங்கடா பக்கோடாக்களா” என்று ஓடியே விட்டான் அவன்.

ஷக்தியின் குசும்பையும் சிவாவின் வெட்கத்தையும் பார்த்த நீலாவிற்கு அவள் பேசிய வார்த்தைகள் எத்தனை அபத்தமானது என்று மெல்லப் புரிய ஆரம்பித்தது!

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment