Loading

கருணாவிடம் பேசிய பின்னர் ஒரு தெளிவு வந்திருந்தது புகழிற்கு. அவனின்‌ மனக்குறையை இறக்கியதாலோ என்னவோ சற்று இலகுவாக இருந்தது அவன் மனம்.

எண்ணங்களில் தெளிவு வந்தால் வாழ்வின் மாற்றம் தன்னால் நடக்கும்!

அந்தி சாயும் வேளையில் வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது, ஷக்தியின் சிரிப்பு சப்தம்.

வீடே நிறைந்து ஒலித்த அவளின் சிரிப்பைக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் வாரிக்கொண்டது அந்த வீடும் அவளின் சிவாவும்.

“பொம்பளப்புள்ளைங்க சிரிச்சாதென் வீடே ஒளி வந்தாப்புடி இருக்கு” என்ற நம்மாழ்வாரும் அவரின் இரு பேத்திகளுடன் சிரித்து மகிழ்ந்த மருமகளைப் பார்த்திருக்க, 

“அதுக்குனு இப்படியா சிரிக்கோனும். காதே அவியுது” என்ற பாரதியின் முணுமுணுப்பு இல்லாமல் இல்லை.

காலை ஷண்முகம் அரைவாங்கியதை கேள்விப்பட்ட உடன் தன்னால் பாரதியின் செய்கைகளும் பேச்சுகளும் சுருண்டிருந்தது. 

இருந்தாலும் குத்தல் பேச்சிற்கு மட்டும் குறைவில்லை.

“மாமா” என்ற ஆதினியின் ஆர்ப்பாட்ட அழைப்பில் திரும்பியவள்,

“புகழூ, கைய அலம்பிட்டுவா. சாப்பாடு வைக்குதென்” என்று பாரதி எழ,

அவளுக்குத் தலையசைத்து, “சாப்பிட்டீங்களா அய்யா” என்று ஆழ்வாரிடம் கேட்டான் மகன்.

அவரிடம் ஒரு தலையசைப்பு மட்டும். மகனிடம் பேசி மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. அவர் எதிர்மொழியை அவன்‌ எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்க நினைப்பதை, சொல்ல எண்ணியதைப் பேசிவிடுவான் அவரிடம்.

பாரதி, “பதில் சொன்னாத்தென் என்ன அய்யா? அவனும் நெதோம் பேசுதான் உம்மகிட்ட, ஒத்த வார்த்த உதிர்த்தா என்னவாச்சாம்?” என்க,

“பேச பிடிக்கேன்னுட்டு அர்த்தம்” 

அத்தோடு முடித்துக்கொண்டார்.

அவனும், ஆதினியுடன் கீழே அமர்ந்திருந்த ஷக்தியைப் பார்த்து, “நீ சாப்பிட்டையா ஆராதனா?” என்க, ஊசி விழுந்தால் கூட சப்தமாகக் கேட்டிருக்கும் போல, வீடே அவர்களைத் தான் பார்த்தது.

வீட்டார் முன்பு நேரடிக் கேள்வி. பதில் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் எல்லாம் ஷக்தியிடம் இல்லை. 

முதலில் புகழ் அவளுக்கு ஒரு ஆளாகக் கூட அப்போது தெரியவில்லை. இருந்தும் அவள்‌ இருக்கும் இடத்தில் அவனைத் தவிர்க்க முடியாதே.

மீண்டும் அவன், “ஆராதனா” என்க, நம்மாழ்வாருக்குக் கோபம் உச்சிக்குச் சென்றது. 

“என்னடே” என்று கோபம் பொங்கக் கத்தியவர், “நீ பண்ண எல்லாத்துக்கும் இந்த புள்ள அனுபவிக்கறது போதாதோ? இப்போம் என்ன அக்கற வந்து ஆடுதுங்கேன்? நெஞ்சுல தம்பி பொஞ்சாதின்ற நினப்பிருக்கட்டும்” என்றவர் உடல் அவரின் அதீத கோபத்தில் ஆடியது.

அதுவரை அவர்களையே பார்த்திருந்த சிவா, “அண்ணனுக்குப் பதில் சொல்லு ஷக்தி” என்றவனை பாரதி முறைத்துப் பார்த்தாள்.

இதுதான் சாட்டு என்று, “இப்போ அவ என்னாத்துக்கு புகழூ கேள்விக்கு பதிலு சொல்லோனும்? மொத இவ எதுக்கு இங்க வந்திருக்கா? காலேல அத்தன சண்டையாம்? வீடா இல்ல என்னாது இது? அம்மை அத்தன அழுகுது, அய்யேன் மாமேன அடிச்சிருக்காரு! எல்லாம் இவ ஒருத்தி நாளத்தான, இவ இங்க வரலேன்னுட்டு யார் கெடந்து அழறான்னு கேக்கேன்” என்று அடக்கி வைத்த கோபம் பீறிடக் கத்தினாள்.

சட்டென்று, “தேங்க்ஸ் ஃபார் ஆஸ்கிங் மிஸ்டர். புகழேந்திரன், நான் சாப்பிட்டேன். நீங்களும் போய் சாப்பிடுங்க. எனக்கு இந்த நாய்ஸ் அலர்ஜி இருக்கு, சோ அம் லீவிங்” என்று பாரதியின் பேச்சிற்குத் துளி மதிப்பில்லாது உள்ளே சிவாவின் அறைக்குச் சென்றுவிட்டாள்.

ஆழ்வார்‌, கோபம் கொதிக்க நின்றிருந்தவர்‌ ஷக்தியின்‌ பேச்சை எதிர்பார்க்கவில்லை. அவர் அறிந்தவரை அவள் புகழைத் தவிர்ப்பால் என்று எண்ணியிருக்க, சின்ன மகன் மருமகளின் தெளிவு அவரை சற்று மட்டுப்படுத்தியது.

பாரதி, “திமிரெடுத்த கழுத, இத்தன பேசுதென் என்ன அகராதி இருந்தா என்னைய பார்த்தே திருப்பிட்டு போவா?” என்று அதற்கும் ஆட,

“நீ அழலதான? அத்தோட நிப்பாட்டுக்கா. அந்தாள் பேசுனதுக்கு வாங்கிக் கட்டிட்டு போறான், நீ ஏன் இப்போ சவுண்டு விடுற?” 

“அந்தாளா? டேய் அவர் நம்ம மாமேன்” 

”எவனோ” என்று சிவா மேலும் என்ன சொல்லியிருப்பானோ,

அதற்குள் நீலா, “மதினி, அவர் மொத சாப்பிடட்டும் அப்புறமா உம்ம சண்டைய போடுங்க” என்று வந்தவளை அப்போதுதான் பார்த்தான் புகழேந்திரன்.

“சிவா’த்தான், அக்கா உள்ளாற போய்டாங்க. இன்னும் இங்கனென்ன சோலி? போங்க உள்ள?” அவனை விரட்டியவள்,

“ஆதி, அஞ்சலி எழுந்து சிவா மாமா கூட போங்க. புகழ் மாமா, நீங்கச் சாப்பிட வாங்க” என்று எதுவும் நடவாதது போன்றவள் பேச்சால் மற்றவர்களின் பேச்சு அத்துடன் துண்டிக்கப்பட்டது.

“மதினி, அத்தகிட்ட கொழம்பு வாங்கியாங்க” என்று பாரதியை இங்கிருந்து அப்புறப்படுத்தியவள், புகழைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

கூட்டுக் குடும்பங்களில் வாழும் பெண்களுக்கு இம்மாதிரியான சில நெளிவு சுழிவுகள் தெரிந்து அதற்குத் தக்க நடந்துகொண்டு போனால் தான் குடும்பம் உடைபடாது.

நீலா அதைத் தேர்ந்தவண்ணம் கையாண்டிருக்க, மேலும் பாரதியின் பேச்சு வழுக்காமல் இருக்க அது தடை விதித்திருந்தது.

“இருந்தாலும் உம் அண்ணே மகளுக்கு வாக்கொழுப்பு அதிகோதென். என்ன பேச்சு பேசுதா பாரு” என்ற பாரதி சமையலறைக்குள் இருந்த உண்ணாமலையிடம் பொரும,

“அவ வாராம இருந்திருந்தா உம்ம அய்யா இன்னுமுட்டு வானத்துக்கும் பூமிக்குமா தவ்வுவாறு. காலேல ஆடுன ஆட்டம் காணாதா என்ன?” என்றார்.

“என்னமோ, உமக்கு வந்து வாச்ச மருமகளும் சரியாதான் இருக்காளுங்க” 

“செத்த சும்மாதென் இரேன்டீ. வந்த பிடுச்சு கடுகா வெடிக்குறவ?”

“என்னையவே அடக்கு. அவள நாலு வார்த்த கேட்கோனுமிட்டு வந்தா, என்னைய மதிக்காம போறா”

“அவ்வளவுதென் பாரதி, கம்மினிரு. எனக்குச் சோலி பலகெடக்கு” என்று முடித்துக் கொண்டார் உண்ணாமலை.

முதல் மாடியின் ஓரத்தில், தாழ்வாரத்துடன் இரண்டு புறமும் சன்னல் வைத்து விஸ்தரித்து இருந்தது சிவாவின் அறை. 

ஒரு பக்க சுவரில் பாதி அளவு அலமாரி அமைத்திருக்க அதற்குக் கீழே டேபிள் சேர் இருந்தது‌. அலமாரி மொத்தமும் அவனிற்கான புத்தகங்கள், சில முக்கிய குறிப்புகள் கொண்ட நோட்புக் இருந்தது. அதை அடுத்து ஒரு பெரிய மரப் பீரோ, குளியலறை.

நட்டநடுவே இருவர் தாராளமாகப் படுக்கும் வகையான மரக்கட்டில், சைட் டேபிள், பக்கவாட்டில் பீன்பேக்.

அவ்வளவுதான் பொருட்கள். பெரும்பாலும் சிவா இங்குத் தங்குவதில்லை என்பதை அவனின் துணிகள் அற்ற பீரோவும் தூசி தட்டப்படாத அவன் புத்தக அலமாரியும் சொல்லியது.

ஒரு காம்பேக்ட் ரூம்மாக அது இருந்ததால் ஷக்திக்கு அந்த அறை பார்த்தவுடன் பிடித்துவிட்டது.

ஆனால், இப்போது கட்டிலில் அமர்ந்திருந்தவளின் மனதோ ஒருவித படபடப்போடு ஏதோ அவளைப் போட்டு அழுத்துவது போலும் தோன்றியது.

புகழிடம் அவள் பேசியதற்காக அல்ல நீலவேணியை பார்த்தபின்னர் தோன்றிய உணர்விது.

பெரும்பாலும், இன்று இம்மனிதர்களை எதிர்கொள்ள முடியுமா என்று இருந்த அவள் மனநிலை, காலை நடந்தவற்றின் வழி அவள் பெரும் பகுதியைக் கடந்துவிட்டாள் என்று கூறியது.

நாம் விரும்பத்தகாத பேச்சையோ செயலையோ ஏன் ஒரு நிகழ்வையோ கடந்துவரப் போராடும் சமயத்தில் அதில் இருக்கும் மனிதர்களையும் அது சார்ந்த இடத்தையோ பொருளையோ மீண்டும் சந்திக்க விரும்பமாட்டோம்.

மனித இயல்பும் அதுதான். ஆனால் ஷக்திக்கு நடந்த அழுத்தம், அதீதமாய் அவளை உள்ளூர தாக்க ஆரம்பித்தவுடனேயே அவள் மருத்துவ ஆலோசனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவள் செய்த மிகப்பெரும் நகர்வு.

“ம்மா, ஃப்ளீஸ். உனக்குப் புரியாது நான் சொல்லுறது. உன் பேச்சுக்கு இத்தன பண்ணேன் தானே? என்ன சைக்காடிஸ்ட்கிட்ட தானே போறேன்னு சொல்லுறேன், அதுக்கு எதுக்கு இத்தன பிரச்சன பண்ணுற? என்னோட மெண்டல் ஃபீஸ் எனக்கு ரொம்ப முக்கியம் ம்மா. இதே மாதிரி நா இருந்தேனா, இன்னும் கொஞ்ச நாள்ல பைத்தியமாகிடுவேன்” என்று அன்று லாவண்யாவிடம் கத்தியவள் நடவடிக்கைக்கு அத்தனை எதிர்ப்பு கிளம்பியிருந்தாளும், இன்று அது அவளை ஒரு பெரும் அபாயத்திலிருந்து சிறுக சிறுக மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

இருந்தும் இப்போதை சஞ்சலம், ஒரு மனதவிப்பு தான். அதை அவளால் சரியாகக் கணிக்க முடியவில்லை. சரியா தவறா என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியவில்லை.

அவளின் அந்த யோசனையைக் கலைக்கவே மருமகள்களைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான், சிவனேஷ்.

“அத்த” என்ற ஆதினியின் அழைப்பில் திரும்பியவள், சன்னமாய் சிரித்தாள்.

“என்ன யோசிக்கற” என்றபடி இருவரையும் பெட்டில் போட்டவன், அதில் கிளுங்கிச் சிரித்த பிள்ளைகளின் அழகைப் பார்த்த மனைவியை ஆராய்ந்தான்.

“ஆதினி பாப்பா இப்போ பிக் பாப்பா ஆகிட்டாங்களே.. ஸ்கூல் எல்லாம் போறீங்களாம்.. ம்ம்” என்று சின்னவளுடன் அவள் இறங்கிவிட,

அஞ்சலியோ, “அத்த நானு தான் ஸ்கூல் போதென். ஆது போததுப் பேய் ஸ்கூல்” என்றாள் ஐந்தைத் தொடவிருந்த அஞ்சலி.

“பேயா? டேய் அது ப்ளே ஸ்கூல்.. ப்ளே சொல்லு ப்ளே” என்றவள் திருத்த, “பேய் ஸ்கூல்” என்றாள் பிள்ளை அழுத்தம் திருத்தமாய்.

”சரிவிடு, என்னமோ நீ சொல்லு” என்க,‌ ஆதினி அவள் மடியில் ஏறிப் படுத்துவிட்டாள்.

“ஷிவ், சாப்பிட்டோன தூக்கம் வருது போல. கர்டன்ஸ் போட்டுவிடு‌ தூங்க வைக்கறேன் ரெண்டையும்” என்றுவிட அவனும் அவள் சொல்லின்படி செய்தவன் பீன்பேக்கில் அமர்ந்துவிட்டான்.

இரண்டும் அவள் சொல்லும் சம்பந்தம் இல்லாதக் கதையைக் கேட்டபடி தூங்கிவிட, அவள் கண்களில் ஒரு பளபளப்பு.

“க்யூட்டா தூங்கறாங்கள ஷிவ்?”

“ம்ம்.. என்ன யோசிட்டு இருந்த நீ?”

டக்கென்று கண்களை மூடியபடி, ”ம்ம்ப்ச்” என்றாள். 

விநாடி நேர எரிச்சல்!

“என்ன ஷக்தி?”

“மறந்திருந்தத திரும்ப ரிமைண்ட் பண்ணிட்ட ஷிவ்” என்றவள் திரும்பவும் அந்த நினைப்பில் சுழன்றாள்.

‘ரொம்ப யோசிக்காதீங்க ஷக்தி. யோசனை சில நேரங்கள்ல சரியான பதில்ல நமக்குத் தரும். ஆனா பல சமயம், வேண்டாத எண்ணத்தையும் மூளையோட தீயக் கழிவையும் நம்மகிட்ட உமிழும். பேசுங்க, யார்கிட்ட நீங்க மனசு விட்டுப் பேச நினைக்கறீங்களோ அவங்ககிட்ட எந்த தடையும் இல்லாம ப்ரீயா பேசுங்க. பேசப் பேச உங்க நினைப்போடப் பல பரிணாமம் உங்களுக்கு புரியும். அது சரியா தப்பான்னு வேற ஒரு கோணத்தக் காட்டும்’ என்ற மருத்துவரின் ஆலோசனைப் பேச்சு தன்னைப்போல் அவளுள் ரீங்காரமிட்டது.

“ஷிவ்” என்றவள் விழி மலர்த்தியபோது அதில் ஒருவித அலைப்புறுதல். ஏதோ தீவிரமாய் யோசிக்கிறாள் என்று புரிய,

“சொல்லு ஷக்தி, என்னாச்சு?” என்றான்‌ அதுவரை நீடித்திருந்த இறுக்கம் தளர்த்தி.

நீண்ட மூச்சை எடுத்து தன்னை சமன் செய்தவள், “எனக்கு ஒருமாதிரி.. எப்டிச் சொல்ல? நீலவேணியப் பார்க்கப் பார்க்க உள்ள ஏதோ பண்ணுது ஷிவ். அவளுக்கு நான் ஏதோ தப்பு செஞ்சுட்ட மாதிரி, ஒரு இன்செக்யூர் ஃபீல். எனக்கு அத எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணுறதுன்னு தெரியலை ஷிவ்” என்றவள் விட்டால் அழுதுவிடுவாள் போல் தெரிந்தால்.

“என்ன ஷக்தி, எதுக்கு இத்தன பிரஷர் பண்ணிக்கிற? நீலாவுக்கு என்ன செஞ்சுட்ட நீ” என்று பெட்டில் அமர்ந்திருந்தவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

அவன் இருக்கும் தைரியத்தில், அவன் பிடி கொடுத்த இதத்தில், “நா.. நா.. புகழ லவ் பண்ணும் போது ரெண்டு தரம் ஹ.. ஹக் பண்ணியிருக்கேன். பின்ன என்கெஜ்மெண்ட் அப்போ என்னை அத்தன பக்கத்துல வெச்சு ஃபோட்டோஸ்..‌” என்றவள் திக்கத் திக்க, சிவா உணர்வுகளை அடக்கப் பெரும்பாடு பட்டுவிட்டான்.

“இப்போ நீலாவப் பார்க்க எனக்கு கில்ட்டா இருக்கு. தப்பில்ல” என்று அப்பாவியாய் கேட்பவளிடம் அவன் நிலையை யார் விளக்க?

“அந்த மாதிரி இருந்துட்டு, இப்போ வாழ்க்க முழுசும் அவங்க எதிர எப்படி இருக்க?” என்க, முடிந்தது அவனின் பொறுமை.

“பைத்தியமாடி நீ” என்று அவள் கையைப் பிடித்து அவன் முரட்டுத்தனமாக இழுத்திருக்க, தரையில் அதிர்வுடன் விழுந்தாள் ஷக்தி.

அவனின் இந்த ஆக்ரோஷத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அவனின் முகக்கடுமையை பார்த்தவளின் வலி பின்னால் சென்றது.

“ஷிவ்” என்று இடுப்பில் கை வைத்தபடி அவனை ஏறிட,

“சங்கடப்படுற மொகறையப் பாரு. ஹக் தவிர வேற எதாவது பண்ணீங்களா என்ன?” என்றவன் சீற, அவள் முகத்தைச் சுழித்துவிட்டாள்.

“மூஞ்ச சுழிச்சா, நீ சொன்னதுக்கான அர்த்தம் அப்படித்தான் வரும். அததுக என்ன என்ன கன்றாவியோ பண்ணிட்டு கல்யாணம் பண்ணிட்டு சுத்துதுங்க, இவ ஒரு ஹக் பண்ணத்துக்கு இத்துப்போன துணியாட்டம் மூஞ்ச வெச்சுட்டு கதையோட்டுற.. ம்ம்” என்று இன்னும் முறைத்தான்.

“அதுக்கு இப்படியா கேட்ப?” 

“வேற எப்படிடி கேட்க? சொல்லு? நானும் உன் புருஷேன் தான, நீ இப்படிச் சொல்லும்போது எனக்கும் ஒரு மாதிரியா இருக்காதா? வாழ்க்க முழுசும் புகழ நானும் பார்க்கனும் தான?” என்று அவன் புறத்தைக் கேட்க, பேச்சற்று போனாள் ஷக்தி.

அவனின் பார்வையிலிருந்து பார்த்தால், எத்தனை சங்கடங்களை அவன் தாண்டி வரவேண்டும் என்று புரிந்தது பெண்ணவளுக்கு.

“ஷிவ்” 

அதைத் தவிர அவளால் பேசமுடியவில்லை. அவனைக் காயப்படுத்தியதை உணர்ந்துவிட்டாள். 

நிமிடங்கள் கடந்தும் சிவாவின் கோபம் கட்டுக்குள் வரவில்லை. அவனைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை என்பது வேறு அவனைத் தாக்கியிருந்தது.

முகம் வெளுத்து அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

“ம்ம்ப்ச், ஷக்தி” என்று அவள் கை பிடிக்க, அவனைத் தாவி அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.

 

“நீ என் ஷிவ், என்னைய எனக்கு தெரிஞ்சதவிட உனக்குத் தானே தெரியும்? அதுனால தான என்னைய கல்யாணம் பண்ண” என்றவள் புரிதலில் அவன் முகத்தில் தன்னால் ஒரு புன்னகை.

”நா நீலா என்ன நினைப்பான்னு தான் யோசிச்சேன். உன்ன பத்தி யோசிக்கல, ஏன்னா நீ என்னை அப்படி நினைக்கமாட்டேன்னு எனக்குத் தெரியுமே!” என்றவள்,

“ஆனா நீலா வேற தான? எனக்கு ஒரு கில்ட்டா இருந்துச்சு அதான் உன்கிட்ட சொன்னேன்.. மத்தபடி ஒன்னுமில்லை. ஆனா நீலா மனசுல ஒரு கஷ்டம் இருக்கும் தான என்ன பார்க்கப் பார்க்க. அதான் யோசிச்சேன்” 

“அரை பைத்தியம்டி நீ” என்றவனின் அணைப்பிலேயே இருந்துவிட்டாள்.

“அவ நினச்சா உனக்கென்ன? உன்ன மட்டும் நீ பாரு, அவ அப்படியே வந்து உன்கிட்ட கேட்டா கூட நீ ஃபீல் பண்ண வேண்டாம், பிகாஸ் அது முடிஞ்சு போன விஷயம். நீ மட்டும் அதுல இருக்கல, அவ புருஷனும் தான இருந்தான்? தவிர அவளுக்கு அந்த மாதிரி எண்ணமிருந்தா சரி பண்ணவேண்டியது புகழ் தான், நீயில்ல!” என்றான் அழுத்தமாய்.

“ம்ம்”

“கில்ட்டா இருந்தா அது என் ஷக்தியோட கேரக்டரே அப்படிதான். யாருக்கு அவ கெட்டது நினச்சிருக்கா? லவ் கொடுத்தா, திரும்ப அதே லவ்வ பத்து மடங்கா கொடுக்கற நீ, ஒரு எடத்துல சருக்கிட்ட! சருக்கின எடத்தப்பத்தியேவா யோசிப்ப? அதுல இருந்து வெளிய வந்து, திரும்ப சருக்காம இருக்கத் தான பார்ப்ப.. சோ, இனி நோ தேவையில்லாத சரக்கு” என்று அவள் நெற்றியோடு முட்டி அவளை இயல்பாக்கப் பார்த்தான், சிவனேஷ்.

அவள் மனதில் நினைத்து வெளியே வருவதெல்லாம் அவளின் மனநலனை சீராக்கும். எல்லாவற்றையும் போட்டு அழுத்திக் கொள்வதற்கு, இப்படி தன்னிடம் கொட்டுவதே சிறந்தது என்று சிவாவும் அவளுடனே ஒன்றிவிட்டான், அவன் ஷக்தி பெண் மீள்கிறாள் என்று.

என்னுரை:

மனதில் ஏற்படும் அழுத்தத்திலிருந்து மீள்வது சாதாரண விஷயமல்ல. அதிலும் நாம் உயிராய் நேசித்த நபர் நம்மைவிட்டு மொத்தமாய் பிரிந்திருந்தால் அதனால் உண்டாகும் வலியென்பது சொற்களில் வடிக்கவியலாதது.

உயிர் நீத்தோ நம்மை வேண்டாம் என்றோ அல்ல ஒருவரின் நலனுக்காக நாமே பிரிவது துரோகத்தால் ஏற்படும் பிரிவு என்று பலது இருந்தாலும் அதிலிருந்து மீண்டு நாம் திரும்பி வரும் காலம் அவ்வளவு எளிதாக இருக்காது.

இங்கு ஷக்தியாக நான் சில நுணுக்க உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது அழுத்தம் எத்தனை கொடியது என்பதைச் சிறியதாய் காட்ட வேண்டும் என்றுதான்.

இதைவிட பெரும் துன்பமெல்லாம் பலருக்கும் நடந்திருக்கும் அதிலிருந்தே வெளியேறியோர் அனேகர்.

இன்றும் பல ஆயிரக்கணக்கானோர் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளைத் தினமும் உட்கொண்டு தங்களின் மனநலனைப் பாதுகாக்கவும் மீளவும் முயன்று வருகின்றனர்.

ஆரம்பக் காலத்தில் அதைக் கண்டறிந்து ஒரு மருத்துவ ஆலோசனைக்குச் செல்வது சிறந்தது.

மருத்துவரைக் காட்டிலும் நம்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் நபரிடம் நம் அழுத்ததை பகிர்ந்தால் நிச்சயம் அதன் தாக்கம் குறையும்.

இந்த இயந்திர உலகில் எல்லாம் அவசரம் தான். அதில் நம் உணர்வுகளுக்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பிற்கும் நேரம் ஒதுக்க‌ யாரும் விரும்பமாட்டார்கள்.

அதற்காக வருந்துவதை விடுத்து எளிதில் கடந்துவரப் பழகவேண்டும்.

நம்மீது அன்பு செலுத்தும் நபர்களிடம் தயங்காது அவர்களுக்கான‌ அன்பையும் நேரத்தையும் செலவழிப்பது கூட நம் மனநலன் உடல்நலன் அவருடனான நம்மின் உறவு நலன் காக்கப்படும்.

அதேசமயம் கிடைக்கும் அன்பை விழிப்புடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

ப்ரியங்களுடன்,

சாம்பவி திருநீலகண்டன்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment