
அத்தியாயம் – 28
தங்கள் காதில் வந்து விழுந்த செய்தியை தாங்க முடியாமல் கலை தரையில் அப்படியே மடங்கி அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு அழத் துவங்க, மதிவாணனும் தான் பெற்ற மகளுடைய இந்த நிலைக்கு தானும் ஒரு காரணமாகிப் போனோமே என குற்றவுணர்ச்சியில் அவர் முகம் வேதனையில் கசங்க, கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிந்தது.
அப்போது தான் இத்தனை வருடமாக தான் கமிஷ்னரிடம் சென்று மகளைப் பற்றிய விவரம் தெரிந்ததா என கேட்கும் போது அவர் இல்லை என கைவிரித்ததற்கு பிண்ணனியில் தன் மகன் தான் இருக்கிறான் என்பது புரிய, இந்த தண்டனை தங்களுக்கு தேவை தான் என நினைத்துக் கொண்டார்.
தெய்வநாயகி தன் பேத்தியை அணைக்கப்போக, அவரைக் கண்டு அவள் மருண்டு விழித்து சித்துவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, அவன் அவள் கையை அழுத்தி ஆறுதல் படுத்தினான்.
அவளின் இந்த செயல் அந்த வயதானவரின் மனதில் ஊசியை வைத்துக் குத்தியது போல் வலிக்க, அவளின் நிலையை புரிந்து கொண்டு தூரமாகவே ஒதுங்கி நின்று கண்ணீர் வடித்தார்.
தாத்தா அங்கு அழுது கொண்டிருந்தவர்களை எரிச்சலோடு பார்த்தவர், இதற்கு மேல் இங்கு நின்றால் தன் வார்த்தை அவர்களை குத்திக் கிழிப்பது நிச்சயம் என்றுணர்ந்து அவ்விடம் விட்டு அகன்றார், போகும் முன் சந்துவின் தலையை பாசமாய் வருடிக் கொடுத்த அந்த இரும்பு மனிதரின் கண்ணில் கூட இரு சொட்டு கண்ணீர் தன் பேத்திக்காக வெளிவந்தது.
பத்மினியும் மதியழகனும் அழுது கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, ஸ்ரீயின் “அம்மாஆஆ!!!” என்ற அலறல் அவர்கள் கவனத்தை ஈர்க்க, சந்து அந்த சப்தத்தில் மேலும் சித்துவிடம் ஒன்றினாள்.
சாருமதி தான் அங்கு குனிந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மகளைக் கண்டு ஆத்திரம் எல்லையைக் கடக்க, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவள் கன்னத்தில் பளார் என அரைந்திருந்தார்.
“இப்போ உனக்கு சந்தோஷமா!!! சொல்லு டி..அங்க பாரு டி அவளை எப்படி இருந்த பொண்ணு அத்தை அம்மான்னு நம்ம காலைச் சுத்தி வலைய வந்துட்டு இருந்த பிள்ளையை இப்படி ஆக்கி வச்சிருக்கியே நீயெல்லாம் நல்லா இருப்பியா..உன்னை எல்லாம் இந்த வயித்துல சுமந்து பெத்தேன்னு நினைக்கிறப்போ அறுவெருப்பா இருக்கு ..ச்சை உன்னை கருவுலையே..” என பேசிக் கொண்டே போனவரை,
“அத்தை!!!!!” என்ற ஹரியின் கர்ஜனைக் குரல் தடுத்தது.
“அத்தை இவ பண்ணி வச்ச காரியத்துக்கு உங்க எல்லாரை விடவும் இவ மேல எனக்கு ஆயிரம் மடங்கு கோபம் உள்ள இருக்கு… அதுக்காக இவளை யார் திட்டுனாலும் பார்த்துட்டு கையைக் கட்டிக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது..ஏன்னா இப்போ இவ என் பொண்டாட்டி..சோ இனிமேல் இவளை ஒரு வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க யாரா இருந்தாலும்.. அவளை திட்டுறதுக்கோ கை நீட்டுறதுக்கோ யாருக்கும் உரிமை இல்லை அது அவளை பெத்த அம்மாவா இருந்தாலும் நான் பொறுமையா இருக்க மாட்டேன் அத்தை” என இறுகிய குரலில் கூறியவன், மீண்டும் ஸ்ரீயின் கையை பிடித்து அழுத்திக் கொடுத்தான்.
தான் எவ்வளவு பெரிய தவறு செய்தும் இவனால் இன்னும் எப்படி எனக்கு ஆதரவாக பேச முடிகிறது?? என்று வியந்தவள் ,இப்போது அவனின் காதலின் முன் அவளின் தவறு மிகவும் பூதகரமாக தெரிய, தான் அவனுக்கு சரியானவள் இல்லை என அவளுக்குள் இருந்த குற்றவுணர்ச்சி ஏதேதோ சிந்திக்க வைத்தது.
கார்த்திக் தான் அவனின் உரையைக் கேட்டு ,”அடேங்கப்பா நல்லா இப்போவே பொண்டாட்டிக்கு காக்கா பிடிக்கிறான் டா..அத்தை அடிச்சிட்டு போய்ட்டா ரூம்ல போய் அவ இவனை தான அடிப்பா ..அதுல இருந்து எஸ்கேப் ஆக என்ன அழகா சமாளிக்கிறான் டா..உன் கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய கத்துக்கனும் ப்ரோ” என மிக மெல்லிய குரலில் முனுமுனுத்தாலும் அது அவன் அருகில் நின்றிருந்த அவன் மனைவியின் காதில் தெள்ளித் தெளிவாக விழுந்தது.
ஏற்கனவே சந்துவின் கதையிலிருந்தே மீள முடியாமல் இருந்தவளுக்கு இவனின் கிண்டல் கடுப்பைக் கிளப்ப ,”உன்னை பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா அங்க எல்லாரும் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்காங்க காமெடி பண்ணிகிட்டு இருக்க” என வர்ஷூ பல்லைக் கடித்துக் கொண்டு அவனை பார்க்காமல் நேராக முகத்தை வைத்துக் கொண்டே கூற,
அவனிடமிருந்து பதில் வராமல் போக அவன் புறம் திரும்ப, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லாம என் மூஞ்சியை என்ன ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்க” என அவள் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க,
அதில் ஆச்சரியப்படுவது போல் நடித்தவன் ,”ஓஹ் நீ என் கிட்ட தான் கேட்டியா?? நான் கூட உனக்கு நேரா இருந்த அந்த கரடி பொம்மை கூட பேசிட்டு இருக்கியோன்னு நினைச்சேன்” என அவன் சீரியசாக அங்கு அலங்காரமாக ஸ்ரீ அடுக்கி வைத்திருந்த பொம்மைகளை சுட்டிக்காட்டி கூற,
“ச்சை உன்னையெல்லாம் திருத்தவே முடியாது” என அவள் தலையில் அடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டாள்.
“ஆமா நான் பரிட்சை பேப்பர் பாரு நீ திருத்தி மார்க் போட, போய் அடுத்த சீனை கவனி மா..கன்டினியுட்டி மிஸ் ஆனா புரியாம போய்ற போகுது” என கூலாக பதிலளித்தவன், அவள் முறைப்பதை கண்டு கொள்ளாமல் அங்கு நடப்பதில் கவனத்தை பதிக்கலானான்.
சாருமதியோ ஹரியைப் பார்த்து ,”ஹரி நீ ரொம்ப தப்பு பண்ற என்னையை விடு..இவளுக்கு சின்ன வயசுல இருந்து எல்லாரும் ஓவரா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கோம்..இப்போ அதே தப்பை நீயும் பண்ணாத விடு அவளை..அவ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கான்னு உனக்கு புரியலையா??” என கேட்க,
அவர் கேள்வியில் அவன் தனக்குள் போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடைந்து போக ,” தப்பு பண்ணது அவ இல்லை..நீங்க தான்..நீங்க எல்லாரும் தான்!!!” என பெருங்குரலெடுத்து கத்த,
அவன் கூற்றில் அனைவரும் விக்கித்துப் போய் அவனை நோக்கினர்.
“என்ன பார்க்குறீங்க எல்லா தப்பும் நீங்க பண்ணது தான்.. ஸ்ரீயும் சந்துவும் இப்படி இருக்கதுக்கு முக்கிய காரணம் நீங்க ..உங்க வளர்ப்பு தான் எல்லாத்துக்கும் காரணம்.. ஸ்ரீ என்ன பிறவியிலேயே கெட்டவளா சொல்லுங்க இல்லையே…இல்லை அவளுக்கும் சந்துக்கும் முன்ஜென்ம பகையா?? எல்லாத்துக்கும் காரணம் அவ என்மேல வச்ச அன்பு.. சின்ன வயசுல அவ அப்படி சந்துவை மட்டும் இல்லை வேற யாரையும் என்கிட்ட நெருங்க விடாதப்போ என்ன பண்ணிருக்கனும் நீங்க??? அவளை கூப்பிட்டு புரிய வச்சிருக்க வேண்டியது உங்க பொறுப்பு..அதை பண்ணாம முதல் தப்பை பண்ணது நீங்க..அடுத்து நானா அவள் கிட்ட இதெல்லாம் தப்புன்னு புரிய வைக்க முயற்சி பண்ணப்போ அவ அழுதான்னு என்னை இதைப் பத்தியே அவகிட்ட பேசக்கூடாதுன்னு தடுத்து இரண்டாவது தப்பை பண்ணீங்க அம்மா நீங்க” என கலையை சுட்டிக்காட்டி கூறியவன், அனைவரும் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாது மருந்தென்றால் கசக்கத்தான் செய்யும் என நினைத்தவன் அனைத்தையும் இன்றோடு பேசி முடித்து விட வேண்டும் என முடிவெடுத்து மீண்டும் தொடர்ந்தான்.
“அடுத்த தப்பு சந்துவை இப்படி வளர்த்தது..சும்மா அவ சின்ன பொண்ணு எதையும் தாங்க மாட்டா யாரு எது சொன்னாலும் கஷ்டப்படுவான்னு விளையாட கூட வெளிய விடாம வீட்டுக்குள்ள அதுவும் உங்க கைக்குள்ளையே வச்சு வளர்த்து தான் அவளோட மனதைரியம் சுத்தமா காணாம போய் இப்போ இப்படி இருக்கா…நீங்க அவளை ஒழுங்கா வளர்த்திருந்தா அவ ஸ்ரீ சொன்னதை கேட்டு ஒன்னு அவ பேசியதுக்கு ஒரு அரைவிட்டு அவ மனநிலையை சொல்லிருப்பா இல்லை என் அண்ணன் வந்த பின்னாடி இதை பேசிங்கன்னாச்சும் சொல்லிருப்பா..உங்க வளர்ப்புனால தான் அவ இப்படி தொட்டாச்சினுங்கியா எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு வச்சு அவளை அவளே வதைச்சுக்கிட்டு இருக்கா.. தப்பை எல்லாம் நீங்க பண்ண அதுக்கான தண்டனையை நாங்க அனுபவிச்சுகிட்டு இருக்கோம்… என் மனசுல எவ்ளோ வலி இருக்குன்னு உங்க யாருக்காச்சும் தெரியுமா ??? இதோ இவ மேல கடலளவு காதல் இருந்தும் அவகிட்ட நெருங்க என்னால முடியலை.. அவளை வதைக்கக்கூடாதுன்னு என் காதல் ஒரு பக்கம் சொல்ல,இன்னொரு மனசு நீயெல்லாம் சந்துவோட அண்ணனா த்தூன்னு காரி துப்புற மாதிரி இருக்கு..தினமும் இவ முகத்தை பார்க்குறப்போ என் மனசுக்குள்ள நடக்குற போராட்டம் உங்க யாருக்காச்சும் புரியுதா??? சரி கோவத்தை அவ கிட்ட காமிச்சிரலாம்னு நினைச்சு கத்துனா அடுத்த நிமிஷமே அவளை விட எனக்கு வலிக்குது ..என் மனசே ரெண்டா பிரிஞ்சு என்னை தினமும் குத்திக் கிழிக்கிது இதெல்லாம் யாரால உங்களால …இதை மட்டுமா பண்ணீங்க.. இவ அவ்ளோ பெரிய தப்பு பண்ணப்போ கூட அவளை தட்டிக்கேட்க அந்த வீட்டுல யாருமே முன்வரலையே ….அப்போ அவ வயசு அப்படி ரெண்டுங்கெட்டான் வயசுல அவ எண்ணம் தரிகெட்டு பேசுனப்போ எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துட்டு இப்போ வந்து அவளை மட்டும் குறை சொல்லி தப்பிச்சுக்க பார்க்காதீங்க… தயவு செஞ்சு இனிமேலாச்சும் ஒழுங்கா யாரையும் குறை சொல்லாம தன் மேல உள்ள குறையை திருத்திக்க முயற்சி பண்ணுங்க, சந்துவை மாத்த முயற்சி பண்ணாம இவளை காயப்படுத்தி இவளையும் இன்னொரு சந்துவா மாத்தாதிங்க..உங்களுக்கு புண்ணியமா போகும்” என கையெடுத்து கும்பிட்டவன் சந்துவை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றவன் இந்த முறை சிறுவயதில் செய்த தவறைச் செய்யாமல் இன்னொரு கையால் ஸ்ரீயையும் அழைத்துக் கொண்டே அறைக்குள் சென்றான்.
அவன் சென்ற பின்னால் கூட அங்கிருந்தவர்களுக்கு அவன் பேசியது காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்க, ஹரி சொல்லிவிட்டுப் போனதில் இருந்த உண்மை மிக மிக தாமதமாக அவர்களுக்கு உரைத்தது.
அவர்கள் மீது தவறிருந்தாலும் ,ஸ்ரீ செய்தது மிகப் பெரிய தவறே என அவன் மனசாட்சிக்கு தெரிந்து தான் இருந்தது..இருந்தும் மற்றவர்கள் முன் தன் மனைவியை விட்டுக் கொடுப்பது ஆண்மகனுக்கு அழகல்ல என்ற அவனின் எண்ணமும் அவளின் மேல் உள்ள காதலுமே அவர்களின் மேலேயே மொத்தப் பழியையும் போட்டுவிட்டு அவளைக் கூட்டிக் கொண்டு உள் அறைக்கு வந்துவிட்டான்.
அங்கிருந்தவர்களின் இருண்ட முகத்தைக் கண்டு வர்ஷூ மிகவும் வருந்த,’ஹரி மாமா கொஞ்சம் பக்குவமா எடுத்து சொல்லிருக்கலாம் ‘ என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அப்போது அவளின் காதின் அருகில் ,”இதை பார்த்தா உனக்கு சந்தோஷ் சுப்ரமணியம் கிளைமாக்ஸ் மாதிரியே இல்லை” என கார்த்திக் குறும்புக் குரலில் கூற,
அவளுக்கு அப்போது வந்த கோபத்திற்கு அவனை அங்கேயே கட்டி வைத்து அடித்தால் என தோன்றியது.
“இப்போ மட்டும் நீ வாயை மூடலை பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கிட்ட அடி வாங்க விட்டிருவேன் ஜாக்கிரதை” என மிரட்ட,
ஆன்ட்டி என்ற சொல்லைக் கேட்ட பின்னும் மீண்டும் வாயைத் திறக்க கார்த்திக் என்ன லூசா(?) அவன் அங்கிருந்து ஹரி இருந்த அறைக்குள் சென்று விட்டான்.
அதன் பின் விஜய்யும் ஆதிராவும் பெரியவர்களை மாறி மாறி சமாதானப்படுத்த, வர்ஷூ சித்துவை அழைத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றாள்.
அங்கு கைகளைக் கட்டிக் கொண்டு தன்னையே துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த வர்ஷூவின் கண்களை நேராக சந்திக்க முடியாமல், வானத்தை வெரித்துக் கொண்டு நின்றான் சித்து.
“என்ன சந்திராயன் 3 எப்போ விடலாம்னு ஆராய்ச்சி பண்ணி முடிச்சுட்டியா” என நக்கலாக ஒலித்த வர்ஷூவின் குரலில் அவளை பார்த்தவன் ,”என்ன கேட்ட??” என கேட்க,
“இல்லை வானம் கண்டிஷன்லாம் எப்படி இருக்கு, ஓசோன்ல ஓட்டை எப்படி இருக்குன்னு இங்க இருந்த ஆராய்ச்சி பண்ணிட்டியான்னு கேட்டேன்” என மீண்டும் அவள் நக்கலாக கேட்டாலும் ,அவள் கண்களோ கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
“கிண்டல் பண்ணாத வர்ஷூ” என அவன் பதிலளிக்க, “வேற என்ன பண்ண எனக்கு வர ஆத்திரத்திக்கு உன்னையை அப்படியே இங்க இருந்து கீழ தள்ளி விடனும் போல இருக்கு அதை வேணா பண்ணவா” என அவளின் குரல் நிஜமாகவே அதை செய்துவிடுவேன் என்ற உறுதி இருக்க,
அந்த பால்கனியிலிருந்து கீழே எட்டிப் பார்க்க ‘இதிலிருந்து விழுந்தால் சங்கு கன்ஃபர்ம்’ என நினைத்து பதறியவன் ,”ஹேய் வர்ஷூ நான் அம்மா அப்பாக்கு ஒரே ஆம்பளை பையன் டி என்னை விட்டா நீயே கொன்றுவ போல” என பயப்படுவது போல் சித்து கூற,
அவனை எள்ளலாக பார்த்தவள் ,”ஓஹ் உனக்கு அப்பா அம்மா இருக்காங்கன்னுலாம் நியாபகம் இருக்கா..பரவாயில்லையே நான் கூட உனக்கும் பழசெல்லாம் மறந்து போச்சோன்னு நினைச்சேன்” என்று பரிதாபப்படுவது போல் கூறியவளின் குரலில் இருந்த வலியை உணர்ந்து கொண்டவனுக்கும் வேதனையாக இருக்க,
“ஐ அம் சாரி வர்ஷூ” என அவளிடம் தலையைக் குனிந்து கொண்டே மன்னிப்பு வேண்டினான் சித்து.
அவனின் வார்த்தை அவளின் கோபத்தை தூண்ட, அவன் மாரில் மாறி மாறி அடித்துக் கொண்டே ,”உனக்கு எங்களை எல்லாம் கண்ணே தெரியலைல… நானும் அம்மா அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா??? உன்னை அந்த சமயத்துல அம்மா அப்பா ரொம்ப எதிர்ப்பார்த்தாங்க.. நீ ஏன் டா விட்டுட்டு போன எங்ககிட்ட சொன்னா நாங்க சந்துவை ஏத்துக்க மாட்டோமா..இல்லை அம்மா தான் அவளை பார்த்துக்க மாட்டாங்களா ..ஒரு ..”என அழுகையுடன் ஏதோ கூறப்போனவளின் வாயைப் பொத்தினான் சித்து.
கண்களில் கண்ணீருடன் தன் ஏறிட்டுப் பார்த்த தன் தங்கையின் கண்களில் இருந்த வலி அவனை உயிரோடு கொல்ல, “என்னை மன்னிச்சிரு வர்ஷூ, சத்தியமா அப்போ சந்து இருந்த நிலமையில வேற எதுவுமே தோணலை..நான் கண்டிப்பா நல்ல பையனாவும் இல்லை, அண்ணனாவும் இல்லை.. பிரச்சனையப்போ கூட இல்லாம எல்லாம் முடிஞ்சதும் உங்க முன்னாடி வந்து நிக்க என்னோட குற்றவுணர்ச்சி இடம் குடுக்கலை வர்ஷூ…உன்னால என்னை மன்னிக்க முடியாதுன்னு தெரியும் ஆனா அதைத்தவிர எனக்கு வேறென்ன சொல்லன்னு தெரியலை” என அவன் கண்களிலிருந்தும் இரு சொட்டுக் கண்ணீர் விழ,
அண்ணனின் கண்ணீரைக் கண்டவள் உடனே தன் கண்களை துடைத்துக் கொண்டு “அதெல்லாம் ஒன்னும் இல்லை சித்து..நீ அப்போ எங்க கூட இல்லைன்னு வருத்தம் தான்..ஆனா நீயும் என்ன பண்ணுவ எங்களுக்காச்சும் கார்த்திக் கூட இருந்தாரு..ஆனா நீ தனியா சந்துவை வச்சு சமாளிச்சு அவளோட நிலமையையும் பார்த்து ரொம்ப கஷ்ட பட்டிருப்பல, பாவம் நீ ..கவலைப் படாத அவ சீக்கிரம் சரி ஆய்ருவா” என தன் கவலையை மனதிற்குள் புதைத்துக் கொண்டு அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள்.
இதுதான் பெண்கள், தங்களுக்குள் ஆயிரம் கோபம் வருத்தம் இருந்தாலும் தங்களுக்கு பிடித்தவர்கள் அதனால் வேதனைப் படுகிறார்கள் எனத் தெரிந்தால் உடனே தங்கள் கவலைகளை விழுங்கிக்கொண்டு அவர்களின் கவலையை களைய முனைவார்கள்.இதுவே பெண்மையின் மகத்துவம்.
அதற்குப்பின் இருவரும் மாறி மாறி சமாதானம் செய்து ஒருவழியாக தங்கள் கவலைகளை மற்றவருக்காக மறைத்து இத்தனை வருடமாய் விட்டுப் போய் இருந்த அண்ணன் தங்கையின் கதையை பேச ஆரம்பித்தார்கள்..
அங்கு ஹரியின் அறையில் சந்து ஹரியின் தோளில் சாய்ந்து கோழிக்குஞ்சு போல் அவனருலில் ஒண்டி அமர்ந்து அறையில் புதிதாய் இருந்த ஸ்ரீயை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் அந்த மிரண்ட பார்வை ஸ்ரீயின் மனதில் சுத்தியலை வைத்து அடித்ததைப் போல் வலித்தது.
தான் எந்த அளவிற்கு இந்த சிறிய பெண்ணிற்கு பாவம் செய்திருக்கிறோம் என நினைத்தவள் அதை நினைத்து நினைத்தே மருகிக் கொண்டு அழுது கரைந்தாள்.
அவளின் அழுகை ஹரிக்கு வலியைத் தர ,”ஸ்ரீ கொஞ்சம் உன் டேமை க்ளோஸ் பண்ணு..தப்பு பண்ணிட்டோம்னு அதை நினைச்சு அழுதுட்டே இருந்தா எதுவும் சரியாப் போகாது..சந்துவை பழைய மாதிரி மாத்த உன்னாலான முயற்சிகளை பண்ணு அதுவே போதும்..முக்கியமா அவ முன்னாடி அழுகாத.. அவளைச் சுற்றி இருக்க சூழல் தான் அவ மனநிலையை மாற்றும்..அதுனால அவ முன்னாடி சந்தோஷமாகவே இரு ப்ளீஸ்” என பொறுமையாகவே அவன் எடுத்துக் கூற,
அவன் சொன்னதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் அவளால் அழுகையை தடுக்க முடியவில்லை..அப்போது உள்ளே வந்த கார்த்திக் சந்துவின் அருகில் அமர்ந்து ,”ஹாய் சோப்பு டப்பா” என எப்போதும் அவளை வம்பிழுக்கும் அதே பெயரை வைத்து அழைக்க,
அவனை முன்பே பார்த்தது அவளுக்கு தெரிந்திருந்ததால் அவன் கூறியது புரியாவிடினும் அமைதியாகவே அவனை ஏறிட்டாள் சந்து.
“டேய் எருமை அவ கிட்டயும் உன் வாலுத்தனத்தை ஆரம்பிச்சுட்டியா இன்னைக்கு தான் வந்திருக்கா பாவம் டா” என சொன்ன ஹரி, ஸ்ரீயை கவனிக்க சொல்லி கண்ணில் ஜாடை காட்டினான்.
அதைப் புரிந்து கொண்ட கார்த்திக் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணை மூடித் திறந்தவன் , ஸ்ரீயிடம் திரும்பி ,”என் அத்தை பெத்த ரத்தினமே இந்த பக்கம் கொஞ்சம் திரும்பு” என அவளிடம் கூற,
அவளும் அழுதுகொண்டே எதற்கென்று புரியாமல் ,”எதுக்கு” என கேட்க,
“இல்லை என் ஃப்ரென்ட் ‘ அன்புடன் அனகோண்டா’ன்னு ஒரு ஷார்ட் ஃப்லிம் எடுக்குறான்..அதுல அனகோண்டாவை லவ் பண்றதுக்கு ஒரு ஹீரோயின் தேடிட்டு இருந்தான். உன் மூஞ்சி தான் இப்போ அழுது அழுது வீங்கிப்போன லேடி அனகோண்டா மாதிரியே இருக்கே அதான் உன்னை அதுக்கு போடலாம்னு தான் போட்டோ எடுக்க கேட்டேன்” என அவன் சிரியாமல் சொல்ல, ஹரி அதைக் கேட்டு பக்கென்று சிரித்து விட்டான்.
அவன் சிரித்ததைப் பார்த்து சந்துவும் ஒன்றும் புரியவில்லையென்றாலும் அவளும் சிரித்து விட, ஸ்ரீயோ கார்த்திக் சொன்னதை கண்டு கொள்ளாமல் சந்து சிரிப்பதையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த ஹரியும் கார்த்திக்கும் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.
“ஹேய் உன்னை அனகோண்டாவுக்கு தான் ஜோடியா போட போறேன்னு சொன்னேன்..நீயென்ன சந்துவை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க??? உன் புருஷன் வேணும்னா இந்த கேர்ள் கேர்ள் ரிலேஷன்ஷிப்க்கு ஓகே சொல்லலாம்.ஆனா என் மச்சான் சித்து மானஸ்தன் இதுக்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டான் ” என அவன் நீளமாக பேச,
இப்போது சற்று தெளிந்திருந்த ஸ்ரீயும் அவனைக் கண்டு முறைக்க,
“அடேங்கப்பா அப்படி பார்த்தா நாங்க பயந்துருவோமா.. நீயெல்லாம் உன் புருஷனை மட்டும் அடிச்சு தான் பழக்கம் ஆனா நானு என் பொண்டாட்டி மட்டும் இல்லாம பக்கத்து வீட்டி ஆன்ட்டியோட பிஞ்ச செருப்பாலையே அடி வாங்கிருக்கேன்..உன்னை விட நான் தான் லீடிங் அதுனால என்னை முறைக்கிறதை விட்டுட்டு மாமனுக்கு ஸ்டாரங்கா ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா ஓடு ஓடு” என கார்த்திக் அவளை விரட்ட,
அப்போது சரியாக அங்கு பிரசன்னமானாள் அவனின் ஆருயிர் மனைவி.
அதை கவனித்த ஹரி ,”என்ன மச்சான் ஆன்ட்டியை மட்டும் சொல்ற, நம்ம காலேஜ்ல கவிதான்னு நினைச்சு அந்த கக்கூஸ் கழுவுற ஆயாகிட்ட லவ் லெட்டர் கொடுத்து காம்பஸ் ஃபுல்லா அது உன்னை தொரத்தி தொரத்தி கட்டையை வச்சு அடிச்சுச்சே அதை விட்டுட்ட” என போட்டுக் கொடுக்க,
தன் பின்னால் உக்கிரமாக நின்று கொண்டிருந்த வர்ஷூவை அறியாமல் அவனும் ,”அது மட்டுமா அந்த சப்பை மூக்கி சந்தியா இருக்காளே அவளோட சல்வாரோட துப்பட்டாவை எடுத்து ஒரு நாள் பென்ச் தொடைச்சுட்டேன்னு அவ அடிக்காத அடியையா உன் பொண்டாட்டி அடிக்கப்போறா போடா போடா நாம பார்க்காத பஞ்சாயத்தா அடி வாங்காத ஏரியாவா இதெல்லாம் எனக்கு ஜில்லுனு ஜிகர்தண்டா சாப்பிடுற மாதிரி” என அவன் பெருமையாக கூற,
“அப்போ நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவ அப்படித் தான” என தன் பின்னால் இருந்து வந்த குரலைக் கேட்டவன் ,
“எவ அவ வாய்க்குள்ள என் பொண்டாட்டி வச்ச வத்தக்குழம்பை காச்சி ஊத்துன மாதிரி இவ்வளவு கேவலமா பேசுறது” என திரும்பியவன் அங்கு சந்திரமுகியாய் மாறியிருந்த தன் மனைவியைக் கண்டு அதிர்ந்தவன் ,”ஹிஹி நீ எப்போ டா தங்கம் மச்சான் கிட்ட சண்டை போட்டுட்டு வந்த??” என கேட்க,
“ஏண்டா என் குரல் உனக்கு கேவலமா இருக்கன்னு சொன்னதும் இல்லாம என் சமையலை வேற குத்தம் சொல்றியா நீ..அவங்க அடிச்சதெல்லாம் என்ன அடி இப்போ நான் காட்டுறேன் பாரு அடின்னா என்னன்னு” என அவள் அவனைத் துரத்த,
அவன் அந்த அறையைச் சுற்றி ஓடத் தொடங்கினான் .
அவளும் ,”நில்லுடா நெட்டை கொக்கு” என அவனை திட்டிக் கொண்டே அவனை துரத்த, அங்கிருந்த சந்து அதைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க,ஹரியும் ஸ்ரீயும் அவள் சிரிப்பதை ஆதுரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்!!!!

