
அத்தியாயம் – 27
அவள் சென்று விட்டதை அறியாமல் இவர்களிருவரும் ஸ்ரீக்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
பத்து நிமிடங்களுக்கு பின்பே ஸ்ரீ சற்று நிதானத்திற்கு வர அப்போது தான் அவர்களுக்கு போன உயிர் திரும்ப வந்தது.
அதன் பின்பே சற்று நேரத்திற்கு முன் நடந்த கலவரம் நினைவிற்கு வர சந்து எங்கே என அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்.
அங்கே சந்து இல்லாமல் போக, கலைக்கு மனதில் கிலி பிடித்துக் கொண்டது.
ஆதியிடம் சொல்லி அவளும் அவரும் வீடு முழுக்கத் தேடி எங்கும் அவள் இல்லாமல் போக, வெளியே சென்று தேடலாம் என வரும் போது வீட்டிற்குள் ஹரி, கார்த்திக்கை தொடர்ந்து மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
கார்த்திக்கிற்கு அடிபட்ட விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று ஒன்றாகவே திரும்பினர்.
அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்த ஹரி அப்படியே சோபாவில் அமர வைத்து திரும்ப, அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையும் ஸ்ரீயின் தோற்றமும் அவன் மனதிற்குள் ஏதோ சரியில்லை என மணியடிக்க, “என்னாச்சு சந்து எங்க காணோம்” என கண்களை வீடு முழுக்க அலையவிட்டுக் கொண்டே அவன் கேட்க,
மற்ற மூவரின் முகமும் பயத்தில் வெளுத்தது.
அவர்கள் முகத்தை வைத்தே ஏதோ தப்பு நடந்திருக்கிறது என யூகித்தவன் ,”எங்க சந்து சொல்லப்போறீங்களா இல்லையா” என உரும,
கலை தான் பயத்திலே ,”சந்துவை காணலை பா” என கூற,
அவன் மட்டுமல்லாமல் மற்ற அனைவருமே அதில் அதிர்ந்து, அனைவரும் மாற்றி மாற்றி என்ன ஆனது என கேட்க, கலை தன் மருமகளை மாட்டி விட மனமில்லாமல் ஸ்ரீக்கும் , சந்துவுக்கும் சின்ன சண்டை என்று மட்டும் கூற,
ஹரி அதை நம்பவில்லை. ஸ்ரீயின் தோற்றமே அது சின்ன சண்டையல்ல என தெளிவாக அவனுக்கு உணர்த்த, நேரே ஆதிராவிடம் சென்றவன் ,”இப்போ இங்க என்ன நடந்ததுன்னு உண்மையை ஒன்னுவிடாம சொல்லலை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஆதி..சீக்கிரம் சொல்லு” எனக் கூற,
ஆதியும் பயத்தில் திக்கித் திக்கி அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட, ஹரிக்கு வந்த கோபத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கோபத்தில் அங்கிருந்த மர நாற்காலியை தூக்கிப் போட்டு உடைத்தவன், ஸ்ரீயின் கண்களைப் பார்த்து ,” என் தங்கச்சியை கூட்டிட்டு வந்துட்டு உன்னை கவனிச்சுக்கிறேன்” என இரும்பை விட இறுகிய குரலில் கூறியவன் மறு நிமிடம் அங்கிருந்து மின்னலென கிளம்பினான்.
அவனைத் தொடர்ந்து கார்த்திக் உட்பட அனைவரும் கிளம்பி ஒவ்வொரு மூலையாக சந்துவைத் தேட, அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
நள்ளிரவு வரை தேடியவர்கள் பின் போலிஸ் கமிஷ்னரிடம் மட்டும் தெரிவித்து ரகசியமாக தேடச்சொல்லி கேட்டுக் கொண்டு ஓய்ந்து போய் வீட்டிற்கு வர,
ஹரி அப்போது கூட வராமல் பைத்தியக்காரன் போல் தெருவெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்.
விடிகாலைப் பொழுதிலே தளர்ந்த நடையுடன் வீடு திரும்பியவன் கண்களில் அங்கு வாசலிலே நின்றிருந்த ஸ்ரீ தென்பட, அவனின் கோபம் வெடித்துச் சிதறியது.
அவள் பேசிய பேச்சு ஒரு பக்கம், சந்துவைக் காணவில்லை என வருத்தம் ஒரு பக்கம், அவள் மேல் தனக்கு பாசமில்லை என அவள் கூறியதில் அவளுக்கு தன்மேல் நம்பிக்கையே இல்லை என்ற ஏமாற்றம் ஒருபக்கம், இரவெல்லாம் அலைந்து திரிந்த சோர்வு என அவனைப் போட்டு படுத்தி எடுக்க, எப்போதும் நிதானத்தை இழக்காத ஹரி அன்று அனைத்தையும் இழந்து கோபத்தின் பிடியில் சிக்கிக் கொண்டான்.
வேகமாக அவள் அருகில் வந்தவன் அவள் கன்னத்திலே ஓங்கி அரைந்ததில், அவள் ஒரு சுற்று சுற்றி கீழே சுருண்டு விழுந்தாள்.
ஹாலில் கூடியிருந்த சாருமதியையும்,தாத்தாவையும் தவிர அனைவரும் அவனைத் தடுக்க, அனைவரையும் தன் பார்வையிலே அடக்கியவன் ஸ்ரீயைப் பார்த்து ,” அவளை உன் பேச்சாலையே கொன்னு அனுப்பிட்ட இப்போ உனக்கு சந்தோஷம் தான..சொல்லு வாயைத் திறந்து” என கத்தியவன் அவள் பேசாது இருக்கவும் மேலும் கோபம் கொண்டு ,” ஏன் டி இப்படி பண்ண அவ உன்னை என்ன பண்ணா?? அவ பூவை விட மெல்லிசானவ டி..அவளை போய் நோகடிக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு.. அவ ஒரு குழந்தை டி..இப்போ எங்க போய் எங்க மாட்டிகிட்டு முழிக்கிறான்னு நினைக்கிறப்போ உன்னை கொல்லனும் போல ஆத்திரம் வருது..ச்சை..சும்மா எல்லாத்துக்கும் என் மேல வச்ச பாசம் தான் காரணம்னு சொல்றியே..பாசம்னா என்னன்னு தெரியுமா தானே தனக்கு பிடிச்சவங்களுக்கு பிடிச்சவங்களை தானும் அன்பு பாராட்டுறது தான் ..உனக்கு என் மேல இருக்கது பாசம் இல்லை வெறி.. ஆமா நீ படிச்சவ தான தங்கச்சிக்கும் உனக்கும் வித்தியாசம் தெரியலையா அவ கூட போய் போட்டி போடுற.. அவ என் தங்கச்சி ஆனா நீ என் உயிர் டி..உனக்கு அது புரியலையா..” எனக் கூறியவனின் குரலில் கோபத்தை விட, என்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற வலி தான் அதிகம் இருந்தது.
அவன் கூற்றில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்த கண்ணீர் இன்னும் அவன் மனதை வலிக்கச் செய்ய, அதை மறைக்க அவளை மேலும் வார்த்தைகளால் சாடினான்.
“என்னோட எந்த செயல்லையும் உன்மேல எனக்கு இருந்த காதல் பாசம் ஏக்கம் அன்பு அக்கறை இது எதுவுமே உன் கண்ணுக்கு தெரியலைல.. உனக்கு என் மேல இருந்த நம்பிக்கை அவ்வளவு தான்ல..சந்து சொன்னா நான் அந்த சிந்தியாவை கட்டிக்குவேனா…உனக்கு என் மேல இருக்க நம்பிக்கையை பார்த்து உடம்பெல்லாம் புல்லரிக்குது..உயிரோட கொன்னுட்ட டி,,இங்க வலிக்குது” என தன் நெஞ்சைத் தொட்டு காண்பித்தவனைக் கண்டு அவளும் வலியில் துடித்து ஏதோ சொல்ல வர கை நீட்டி தடுத்தவன்,
“இந்த மூனு வார்த்தையை சொல்லாததுனால தான உனக்கு என்மேல நம்பிக்கை வரலை..கேவலம் இந்த வார்த்தையில இருக்க நம்பிக்கை கூட என் மேல நீ வைக்கலைன்னு நினைக்குறப்போ ரொம்ப பெருமையா இருக்கு… இப்போ சொல்றேன் கேட்டுக்கோ..ஐ..லவ் ..யூ” என முதன் முதலாக அழுத்தம் திருத்தமாக தன் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான் ஹரி.
அதைக் கேட்டு அவளுக்கு மகிழ்ச்சிக்கு மாறாக அழுகையே உடைப்பெடுத்துக் கொண்டு வர அவன் அடுத்துக் கூறிய வார்த்தைகள் அவள் மனதை யாரோ வாள் கொண்டு அறுத்தது போல் வலித்தது.
“ஆனா இப்போ அந்த காதல் செத்துப்போச்சு..நீயே கொன்னு புதைச்சுட்ட..இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..இன்னையோட நீ யாரோ நான் யாரோ..என் வாழ்க்கையில இனிமேல் உன்னை நான் பார்க்கவே கூடாது” என வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் அடுத்த நிமிடமே அங்கிருந்தும் கிளம்பிச் சென்றிருந்தான்.
அதன் பின் யார் என்ன சமாதானம் செய்தும் ஸ்ரீ அழுதே கரைந்தாள்.
கலையும் மதியும் அப்போது கூட ஸ்ரீயிடம் கோபம் கொள்ளாமல் அவளை சமாதனப்படுத்திக் கொண்டிருப்பதை கார்த்திக்கின் மூலம் அறிந்த ஹரிக்கு அவர்களை நினைத்து ஆத்திரமாக வந்தது.
பெற்ற பெண்ணை விட அவள் தான் முக்கியமாகப் போய்விட்டாளா என கோபம் கொண்டு அவன் அவர்களிடமும் பேசுவதை தவிர்த்தான்.
ஹரியை விட ஸ்ரீயின் மேல் பல மடங்கு ஆத்திரத்தில் இருந்த இன்னொரு நபர் சாருமதி.
அவர் அவரின் கோபத்தை ஹரியைப் போல் வார்த்தைகளில் வெளிப்படுத்தவில்லை, மாறாக அவளிடம் பேசுவதையே சுத்தமாக நிறுத்திக் கொண்டார்.
தாத்தா எப்போதுமே பேரன் பேத்திகளிடன் கண்டிப்பாகவே பழகுவதால் அவள் ஸ்ரீயின் மேலுள்ள கோபத்தில் அவளை தவிர்ப்பது யாரின் கண்ணையும் அவ்வளவாக உறுத்தவில்லை.
அதன்பின் குடும்பமே குலைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். சரியாக இரண்டு மாதம் கழிந்த நிலையில் ஹரிக்கும் கார்த்திக்கிற்கும் சந்து இருக்கும் இடம் தெரிந்தது.
அதற்கு ஹரியும் கார்த்திக்கும் எவ்வளவு பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள் என அவர்களுக்குத் தான் தெரியும்.
யாரிடமும் சொல்லாமல் அங்கு சென்று பார்க்க, அங்கு தன் தங்கை இருந்த கோலத்தைக் கண்டு இருவருக்கும் இதயமே வெடித்துப் போனது.
அவள் தன்னையே யார் என்று அறிந்து கொள்ளாத நிலையில் புத்தி ஸ்வாதினமாக தனியாக புலம்பிக் கொண்டிருப்பதைக் கண்டால் எந்த அண்ணனுக்குத் தான் வலிக்காது. இவர்கள் மட்டுமென்ன விதிவிலக்கா.
அவன் தங்கையை இங்கு பாதுகாப்பாய் வைத்து கவனித்துக் கொண்டிருந்த வர்ஷூவின் அண்ணன் சித்தார்த் அவர்களைக் கண்டு உள் அறைக்குச் சென்று பேசலாம் என அழைத்துச் சென்றான்.
தன் முன் அமர்ந்து என்ன நடந்தது என வலியுடன் தன் பதிலுக்காக காத்துக் கிடந்த ஹரி கார்த்திக்கின் முகத்தைக் கண்டவன், கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டு அவர்களுக்கு அனைத்தையும் ஆதியிலிருந்து கூற ஆரம்பித்தான்.
சித்தார்த் வசந்தகோபாலன்-ராஜலக்ஷ்மி தம்பதியரின் மூத்த மகன், வர்ஷூவின் செல்ல அண்ணன்.
அவனும் ஸ்ரீ சந்து படித்த அதே பள்ளியில் தான் சிறுவயதிலிருந்து படித்துக் கொண்டிருந்தான்.
இவன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலில் சந்துவைக் கண்டான். பார்த்த நொடியிலே அவளது கள்ளம் கபடமற்ற அந்த பிள்ளை முகம் அவன் மனதில் பதிந்து போனது.
அவளைக் கண்டால் தான் அவனுக்கு அந்த நாளே அழகானது போல் ஒரு மாயை தோன்றும்.எனவே தினமும் அவள் முகத்தைப் பார்ப்பதை வழமையாக்கிக் கொண்டான்.
இது காதலா இல்லையா என அவனுக்கு தெரியாது ஆனால் அவனுக்கு சந்து என்றால் மிகவும் இஷ்டம்.
அவனுக்கு ஹரியின் வயது என்பதால் இப்போது கல்லூரி முடித்து தன் தந்தையே சொந்தமாக கார் ஷோரூம்,திருமண மண்டபம் என வைத்திருந்தாலும் தன் சொந்தக்காலில் நிற்க விரும்பி கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறான், இருந்தும் தினமும் கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி வந்து சந்துவை பார்த்து விட்டுத் தான் செல்வான்.
அது தினமும் குளிப்பது, பல் விளக்குவது போல் அவனுக்கு சந்துவின் குழந்தை முகத்தைப் பார்த்து ரசிப்பது அன்றாட வழக்கங்களில் ஒன்றாகிப் போனது.
அன்றும் அப்படித்தான் விடுமுறை என்பதால் அவன் அவளைக் காண அவள் வீட்டிற்கு செல்லும் முட்டுச் சந்து வழி வந்து கொண்டிருக்க, அங்கு அவன் கண்ட காட்சியில் அவன் இதயமே நின்று போனது.
வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வந்து கொண்டிருந்த சந்துவை அங்கு அந்த ஊரில் உள்ள நாலைந்து பொறுக்கி நாய்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருக்க, மின்னலென அவர்கள் அருகில் சென்றவன் அவர்களிடம் இருந்து சந்துவை விடுவிக்க போராடினான்.
அவர்கள் குடித்திருந்ததால் அவனுக்கு அவர்களை தாக்குவது சுலபமாக இருக்க, அனைவரையும் சமாளிப்பதற்க்குள் சந்துவை ஒருவன் பிடித்து இழுத்ததில் அவள் கால் இடறி கீழே விழ அவள் தலை பலமாக அங்கிருந்த கல்லில் மோதி இரத்தம் பீறிட்டுக் கொண்டு வலிந்தது.
அவளை ரத்த வெள்ளத்தில் கண்டவன் “சந்தூஊஊஊஊ” என பெருங்குரலெடுத்து கத்தி அங்கிருந்தவர்களை அடித்து துவம்சம் செய்தவன் அவளை அள்ளிக் கொண்டு தனக்கு தெரிந்த தனது நண்பனின் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினான்.
அப்போது அவன் மனதில் இருந்ததெல்லாம் சந்து சந்து சந்து மட்டுமே, தன் வீட்டிற்கு, அவள் வீட்டிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதும் தோன்றாமல் அவள் கண்முழிப்பதற்காக காத்திருந்தான்.
அந்த க்ஷணம் அவளின் மீதுள்ள தன் காதலை உணர்ந்தவன், “இனி காலம் யாவும் உன்னை கண்கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு கண்மனியே” என மனதிற்குள் சபதமெடுத்துக் கொண்டான்.
அவளுக்கு ஆபத்து இல்லை என தெரிந்த பின்பே நேற்று மதியத்திலிருந்து தான் வீட்டிற்குச் செல்லவில்லை என்பது நினைவில் வர, வர்ஷூவிற்கு அழைத்து தான் நண்பன் வீட்டில் இருந்ததாகவும் இப்போது வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன் என தகவல் தெரிவித்த போது தான் நந்துவின் மூலம் ஸ்ரீயின் வீட்டில் நடந்ததை தெரிந்து கொண்ட வர்ஷூ சோகத்துடன் அவனிடம் அதை பகிர்ந்து கொள்ள, அவனுக்கு ஸ்ரீயையும் அவள் குடும்பத்தையும் கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
தங்கையிடம் அதை மறைத்தவன் வீட்டில் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு வைத்தான், இவளின் மயக்கம் தெளிய காத்துக் கொண்டிருந்தான்.
அவன் அடிக்கடி இவ்வாறு நண்பன் வீட்டில் தங்குவதால் அவர்களுக்கும் அவனின் மீது சந்தேகம் வரவில்லை.
சரியாக இரண்டு நாட்கள் கழித்து கண்விழித்த சந்து அவன் தலையில் பாராங்கல்லையே தூக்கிப் போட்டாள்.
அவள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் ஸ்ரீயின் வார்த்தைகள், அன்னையின் செயல், அண்ணனைப் பிரிந்து விட்ட வருத்தம் என அனைத்தும் சேர்த்து அவளை ஒரு மன நோயாளியாக்கி இருந்தது.
அவளின் நிலை கண்டு துடித்துப் போனவன், இவள் இங்கு இருந்தால் மீண்டும் அந்த நரகத்தில் மாட்டிக் கொள்வாள் என நினைத்து அவள் எந்த நிலையில் இருந்தாலும் அவள் என் குழந்தையே அவளை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என தீர்மாணித்து அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானலில் உள்ள தன் நண்பனின் கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்கியவன், வீட்டில் மும்பைக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட்டதாக கூறிவிட்டு தன் செல்போன் இலக்கத்தையும் மாற்றிக் கொண்டு இங்கு அவளை தாய்க்குத் தாயாய் பார்த்துக் கொண்டான்.
இங்கே கொடைக்கானலிலோ முதலில் அவனைக் கண்டு அஞ்சி நடுங்கிய சந்து அவனை கிட்ட வர விடாமல் கோபத்தில் அனைத்தையும் போட்டு உடைப்பவள் , நாளாக நாளாக அவன் அன்பில் கொஞ்சம் கொஞ்சமாக மாறினாள்.
அப்போது தான் ஹரி ,கார்த்திக் இவர்களை கண்டுபிடித்து அவர்கள் இங்கே வருவதாக தகவல் வந்ததும், அவனுக்கு இப்போது நாட்கள் கடந்ததில் அவர்கள் மீதுள்ள கோபம் குறைந்திருந்ததாலும் , தான் இப்படி சொல்லாமல் கொல்லாமல் அழைத்து வந்ததும் தவறு என உணர்ந்ததாலும் வந்தவர்களிடம் பொறுமையாக அனைத்தையும் கூறியவன், தனக்கு அவள் மேலுள்ள காதலையும் கூறிவிட்டு அவர்களிடம் மன்னிப்பும் வேண்டினான்.
அனைத்தையும் கேட்டவர்களுக்கு தங்கையின் நிலையை எண்ணி வருந்துவதா இல்லை இப்படி ஒரு அருமையான காதலன் அவனுக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்வதா என புரியாமல் தவித்தார்கள்.
காதலிக்கு நல்ல காதலனாய் இருந்தவன், தங்கைக்கு நல்ல தமையனாய்,பெற்றோருக்கு நல்ல புதல்வனாய் இருக்க தவறி விட்டான் சித்து.
இவன் இங்கு கொடைக்கானல் வந்தபின் அவர்கள் வீட்டையே திருப்பிப் போட்டுச் சென்றது ஒரு சுனாமி அதில் சிக்கித் தவித்தது அவனின் அன்புத் தங்கை வர்ஷூ, அந்த நிலையில் இவனை அவர்கள் எதிர்பார்த்து அவனின் எண்ணிற்கு அழைக்க,அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. அப்போது தான் ஆத்பாந்தவனாக அங்கு வந்து வர்ஷூவை மீட்டெடுத்து அவர்கள் குடும்பத்துக்கும் உதவினான் கார்த்திக்.
இவனின் காதல் அவன் கண்ணை மறைத்ததால் அப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த வர்ஷூவைக் காக்காமல் ஒரு தமையனாக பெரும் தவறு இழைத்தான். அது கார்த்திக்கால் தெரிய வந்த போதோ அவர்களை மீண்டும் காண குற்றவுணர்ச்சி தடுக்க, மீண்டும் தெரிந்தே அவர்களின் குடும்பத்தாரை வதைத்தான்.
அவர்களின் நிலை காண சகிக்காமல் சித்து ஒரு வேலை விஷயத்தில் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இப்போது லண்டன் சென்று விட்டதாகவும் மூன்று நான்கு வருடங்கள் கழித்தே அவன் வருவான் என கார்த்திக் அவர்கள் குடும்பத்தாரை சமாதானப் படுத்தி வைத்திருந்தான்.
தங்கையை அந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஹரிக்கு சுத்தமாக மனதில்லை, அவர்கள் செய்த தவறிற்கு தினமும் இவளைத் தொலைத்துவிட்டோம் என வருந்தட்டும் என நினைத்தவன் அவர்களிடம் தினமும் அவள் கிடைக்கவில்லை என்றே பொய் கூற முடிவெடுத்தவன் சித்துவின் பாதுகாப்பிலே அவளை விட்டுவிட்டு , துணைக்கு ஒரு லேடி நர்ஸையும் ஏற்பாடு செய்துவிட்டு, அங்கு வைத்தே அவளுக்கு வைத்தியம் பார்க்கவும் தயார் செய்து விட்டே கிளம்பினான்.
அவன் என்னதான் இவர்களை தண்டிக்க பொய் கூறப்போவதாக நினைத்துக் கொண்டாலும், அவனின் ஆழ்மனதில் எங்கே சந்துவின் இந்த நிலையைக் கண்டால் ஸ்ரீயின் குற்றவுணர்ச்சி மேலும் அதிகமாகி அவளை துன்புறுத்தும் என நினைத்தே உண்மையை மறைத்தான் அது அவனுக்கே தெரியாமல் மறைத்தது அவர்கள் மீதிருந்த அடங்காத கோபம்.
அதற்குள் இங்கு ஸ்ரீக்கு சென்னையில் அட்மிஷன் கிடைத்துவிட, இடமாற்றம் இப்போது சிறந்தது என நந்துவையும் வர்ஷூவையும் சேர்த்தே அவளுடன் அனுப்பி வைத்தனர்.
என்னதான் ஹரிக்கு அவள் மேல் கோபம் இருந்தாலும் அதை விட அக்கறை நிறையவே இருந்ததால் சென்னையிலே தானும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை விஜயுடன் சேர்ந்து தொடங்கியவன், கார்த்திக்கையும் இங்கேயே டிடெக்டிவ் ஏஜேன்சி அமைக்கச் சொல்லி அவளை தன் கண்காணிப்பிலே வைத்திருந்தான்.
நாளாக நாளாக ஸ்ரீக்கு தான் செய்த தவறின் அளவு புரிய, இதற்கு மன்னிப்பு கேட்க கூட தனக்கு அறுகதை இல்லை என குற்றவுணர்ச்சியில் வெந்து தவித்தவள் அதன் பின் ஊருக்கு செல்வதை அடியோடு நிறுத்திக் கொண்டவள் யாரிடமும் பேசுவதும் இல்லை.
அவனுக்கு அவளின் மாற்றம் வருத்தத்தை அளிக்க, கார்த்திக்கிடம் சென்று அவளை வாரம் ஒருமுறை சென்று பார்த்து பேசி விட்டு வர அனுப்பி அவளை பழைய உற்சாகத்துடன் மீட்டெடுக்க முயற்சி செய்தான், மேலும் இன்னும் அவளுடன் பேசாமல் இருந்த சாருமதியைக் கூட ஏதேதோ சொல்லி சமாளித்து அவளிடம் பேச வைத்தவன் அவளின் வேதனையை கொஞ்சம் குறைத்தான்.
இப்படியே வருடங்கள் உருண்டோட, இரண்டு வருடம் கழிந்த நிலையில் தாலி கட்டாமல் சந்துவை அங்கு விடப் பிடிக்காத ஹரி அவளுக்கு இப்போது பத்தொன்பது வயது ஆகிவிட்டதால் தாத்தாவிடம் மட்டும் உண்மையை எடுத்துக் கூறி அவர் முன்னிலையிலே சித்து சந்து கல்யாணத்தை எளிமையாக கோவிலில் நடத்தி வைத்தான்.
அப்போது கூட தன் அன்னை தந்தையிடம் உண்மையை தெரிவிக்க சித்து மறுத்து விட்டதால் வேறு வழியில்லாமல் ஹரியும் அதற்கு ஒப்புக் கொண்டான்.
தாத்தாவிற்கும் ஸ்ரீயின் செயலில் குடும்பத்தவர்களின் மௌனம் பெருத்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்ததன் விளைவாக இந்த தண்டனை அவர்களுக்கு தேவை என நினைத்தவர் இந்த முடிவிற்கு அவரும் ஒப்புக் கொண்டார்.
நான்கு வருடம் கடந்த நிலையில் சந்துவின் நிலையில் இருந்த ஒரே முன்னேற்றம் அவள் சித்துவையும் ஹரியையும் உணருவதே..யாரென்று அவர்களை கண்டுகொள்ளாவிடினும் அவர்கள் அருகில் இருந்தால் மட்டும் அமைதியாக இருப்பாள்.
இதற்குள் ஆதிராவிற்கும் விஜய்க்கும் வேறு பல தடங்கல்களைக் கடந்து திருமணத்தை நடத்தி வைக்க, அதற்குக் கூட ஸ்ரீ வராமல் அனைவரின் கோபத்தையும் இன்னும் சேர்த்துக் கொண்டாள்.
இந்த நான்கு வருடமும் வாரம் தவறாமல் அவளை வந்து ஹரி பார்த்துவிட்டுத் தான் செல்வான்.அது ஒன்றே அவன் மனதிற்கு கிடைக்கும் ஆறுதல். தாத்தாவும் கார்த்திக்கும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு மனம் கனக்க வீடு திரும்புவார்கள்.
நாட்கள் கடந்த பின்பே ஹரிக்கு ஸ்ரீயின் அப்போதைய மனநிலை புரிய, தன் மேலும் தவறிருப்பதால் இனிமேலும் அவளை மேலும் வதைப்பது சரியல்ல என நினைத்தே பாட்டியின் அந்த நாடகத்தை சாக்காக வைத்து திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்.
மேலும் அந்த வீட்டில் உள்ள யாரும் பழசை பற்றி பேசக்கூடாது என கண்டிஷன் போட்டே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான்.
திருமணத்திற்கு குலசாமியை போகும் போதுகூட, இவன் காணாமல் போனதற்கு சந்துவின் உடல்நலமே காரணம் அவள் எப்போதாவது திடீரென்று வெறி வந்தது போல் அனைத்தையும் உடைத்து ரகளை செய்வாள். அன்றும் அப்படி செய்யும் போது கண்ணாடி அவள் கால்களை பதம் பார்க்க இரத்தத்தைக் கண்டு அவள் அலறி அப்படியே மயங்கிச் சரிந்தாள், சித்து விஷயத்தை தெரிவித்தவுடன் வேறெதைப்பற்றியும் சிந்திக்காமல் அங்கு ஓடியவன் மறுநாள் இரவு அவள் கண்விழித்து அமைதியான பின்பே அங்கிருந்து கிளம்பி வந்தவன் இங்கு வீட்டில் உள்ளோரிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டான்.
இப்படியாக நாட்கள் கழிய இப்போதும் சந்துவின் மனநிலையில் மாற்றமில்லாததால் டாக்டர் தான் உறவுகளுக்கு மத்தியில் இருந்து அவளுக்கு அளவில்லா பாசம் அவளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவள் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் என அறிவுருத்த கடைசி முயற்சியாக அவளை இப்போது அவர்களின் கண்முன் கூட்டி வந்து நிறுத்தினான்.
ஒருவழியாக அவன் அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை கூறி முடிக்க, அங்கு குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிசப்தம் நிலவியது..
அன்பு அது மட்டுமே இவர்கள் குடும்பத்தில் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம். அவர்களின் வயதும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.இதில் யார் மீது தவறு என்று சுட்டிக்காடினால் அனைவர் மீதும் தவறே.
சந்துவை மற்ற பிள்ளைகளைப் போல் தைரியமாக சுதந்திரமாக வளர்த்திருந்தால் அவளுக்கு சிந்தியாவைப் பற்றி புரிந்திருக்கும், ஸ்ரீக்கு ஹரியின் மீதுள்ள காதலும் புரிந்திருக்கும் , மேலும் எதையும் தைரியமாக நின்று சமாளிக்கும் தெளிவு வந்திருக்கும் ..
இப்படி கோழையாக மனம் உடைந்து உணர்ச்சிகளுக்கு அடிமையாகி மனநோயாளியாகி இருக்க மாட்டாள்.
ஸ்ரீயின் தவறுகளுக்கு மூலக் காரணம் அவளின் சொந்தங்களே.. சிறுவயதில் அவள் ஹரியின் மீது அளவு கடந்த உரிமை எடுத்து சண்டையிட்ட போதே அவர்கள் அவளை திருத்தியிருந்தாள் அவளின் மனநிலையிலும் மாற்றம் இருந்திருக்குமோ??
ஹரி இவனைப் பற்றி என்ன சொல்ல, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்று தான் இருந்தது இவன் நிலமை. சிறுவயதிலிருந்தே ஸ்ரீயின் கோபத்தையும் சந்துவின் வருத்ததையும் தனியாக சமாளிக்க முடியாமல் திணறிப்போன அப்பாவி ஜீவன்.ஸ்ரீயின் உரிமைப் போராட்டம் ,கோபம் அனைத்தையும் தாங்கிக் கொண்ட ஒரே ஜீவன், ஹரி யாரிடம் பாசம் காட்டினாலும் இல்லை மற்றவர்கள் ஹரியிடம் பாசம் காட்டினாலும் அடி என்னவோ ஹரிக்கு தான்.. ஸ்ரீ அன்று சந்துவிடம் சொன்னது போல் அன்று ஒரு நாளைத் தவிர அவள் என்றுமே அவளின் கோபத்தை சந்துவிடம் காட்டியதில்லை என்றுமே அதை ஹரியிடம் தான் காட்டுவாள்.. இவனின் இந்த நிலமைக்கும் அவனுக்கு இருவரின் மீதிருந்த அதீத அன்பே காரணம்..இனிமேலாவாது இவர்கள் நிலமை மாறுமா??

