Loading

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாத சில அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சுவாரசியமான விளையாட்டு.

நாரயணசாமி குடும்பமும் அப்போது வாழ்க்கை தந்த பல அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் துவண்டு போய் நின்ற சமயத்தில் தான் இவ்வுலகிற்கு வந்து சேர்ந்தாள் சந்திரிகா.

இந்த மண்ணுலகிற்கு வரும்போது சிலர் போன ஜென்மத்தில் செய்த புண்ணியங்களையும், சிலர் பாவங்களையும் மூட்டை கட்டிக் கொண்டு வருவர், இதில் சந்திரிகா இரண்டாம் வகை போலும்.

அதன் வினையால் பிறந்த போதே சுற்றி அவ்வளவு சொந்தம் இருந்தும் தனித்து விடப்பட்டாள்.

அவர்களையும் குறை சொல்ல முடியாது. நல்லசிவத்தின் பெற்றோர்களின் மரணம் ஒரு பக்கம், கலைவாணியின் உடல்நிலை மறுபக்கம் என அல்லாடிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் பத்மினிக்கும் அப்போது வைரஸ் ஜுரம் வந்துவிட, ஒன்றரை வயது பிள்ளைகளான ஆதிரா மற்றும் ஸ்ரீயை சமாளிப்பதே அதை விட கொடுமையாக இருந்தது.

இந்த பிரச்சனைகளுக்கு இடையில் இன்குபேட்டரில் உள்ள குழந்தையை முதலில் யாரும் சென்று பார்க்கவில்லை.

மதிவாணன் தன் உயிரின் சரிபாதியான அவரின் காதல் மனைவி அங்கு கிழிந்த நாராய் கிடப்பதைக் கண்டு இடிந்து போய் அமர்ந்தவர் தான், அதன் பின் சுற்றி இருந்த சொந்தங்கள், தங்களின் பிள்ளைகளை பற்றி கூட சிந்தனையில்லாமல் கலைவாணி பிழைத்து வர வேண்டும் என மனதிற்குள் ஜபித்துக் கொண்டு இருந்தார்.

ஹரி மட்டும் செல்வதைக் கண்ட தெய்வநாயகி அப்போது தான் தங்களின் பேத்தியின் நினைவு வர, தங்கள் மடத்தனத்தை எண்ணி நொந்தவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த இளந்தளிரை காண சென்றார்.

குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதால், ஒரு ஒருவராய் உள்ளே சென்று பார்த்து வர அனுமதித்தனர்.

ஹரி குழந்தையின் அழகில் மயங்கியவன் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே வந்த செவிலியர் ,”குட்டி தம்பி உங்க தங்கச்சி பாப்பாவை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போன பின்னாடி நல்லா நீங்களே வச்சு பாருங்க..ஆனா இப்போ ரொம்ப நேரம் இங்க இருந்தா பாப்பாக்கு உடம்பு சரியில்லாம போய்ரும் சோ வெளிய வெய்ட் பண்றீங்களா??” என கேட்க,

“அச்சச்சோ பாப்பாக்கு சேராத அப்போ நான் கிளம்புறேன்..பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க ” என செவிலியரிடம் கூறிய ஹரி , குழந்தையை பார்த்து மென்னகையுடன் ,”அண்ணா போய்ட்டு வரேன் பாப்பு..சமத்தா தூங்குங்க..டாட்டா” என கூறியவன் அங்கிருந்து கிளம்பி வெளியேறினான்.

அவன் வந்ததும் பாட்டி , தாத்தா என வரிசையாக உள்ளே சென்று குழந்தையை பார்த்து அதன் நிலமையும் குடும்பத்தின் தற்போதைய நிலமையையும் கண்டு மனதில் ஏறிய பாரத்தோடு வெளியே வந்தனர்.

கலைவாணியின் நிலமை அபாய கட்டத்தை தாண்டியிருந்தாலும் அவர் உடம்பில் பல இடங்களில் பலமாக அடிபட்டிருந்ததால் அவர் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தார்.

அவர் பிழைத்தாலும் பரிபூரணமாக குணமாக குறைந்தது ஒன்றரை வருடமாவது ஆகிவிடும் என மருத்துவர்கள் கூறிவிட, அவர் பிழைத்தே போதும் என அனைவரும் கடவுளுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அதன் பின் வந்த நாட்களில் மதிவாணன் கலைவாணி அருகிலே இருந்து அவரை கவனித்துக் கொள்ள, பத்மினிக்கும் உடம்பு சரியில்லாத்தால் மதியழகன் அங்கேயே தங்கி அவரையும் அங்குள்ள தொழில்களையும் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டார்.

ஹரி, கார்த்திக், ஆதிரா, ஸ்ரீ இவர்களோடு சேர்ந்து சந்திரிகாவையும் சாருமதியும் பாட்டியும் பார்த்துக்கொள்ள மிகவும் திணறிப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மதியழகனும், நாரயணசாமி தாத்தாவும் கோயம்புத்தூருக்கும் தாமரைக்குளத்திற்கும் அல்லாடிக் கொண்டு மதிவாணனின் தொழில்களையும் சேர்த்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

மொத்தத்தில் அது அவர்களுக்கு ஒரு சோதனைக் காலமாக இருந்தது.

ஒன்றரை மாத மருத்துவமனை வாசத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் கலைவாணி.

இன்னும் அவரால் தனியாக எழுந்து நடமாட முடியாததால் ஒரு ஹோம் நர்ஸையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்குள் பத்மினிக்கும் குணமாகி விட எப்போதும் போல் கார்த்திக்கும் ஆதிராவும் அங்கு சென்று விட, பாட்டி மட்டும் கலைவாணியை பார்த்துக் கொள்ள இங்கேயே தங்கினார்.

மதிவாணனும் அம்மா மனைவியை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் கீழே விழுந்து கிடந்த அவர் தொழிலை தூக்கி நிமிர்த்த கடுமையாக போராடினார்.

கலைவாணியின் உடல்நிலை சரியில்லாததால் சந்திரிகாவிற்கு தாய்ப்பால் குடுக்க முடியாமல் போக, ஏற்கனவே குறை பிரசவத்தில் பிறந்ததில் நோஞ்சானாக இருந்த சந்திரிகா மேலும் வலுவிலந்து போனாள்.

நோய் எதிர்ப்பு சக்தி சுத்தமாக இல்லாமல் போக அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் என இப்படி ஏதாவது ஒன்று மாறி மாறி வந்து அவளை படுத்தி எடுக்கும்.

அவளின் துரதிர்ஷ்டம் தான் நடந்த அனைத்துக்கும் காரணம் என நம்புமளவிற்கு அந்த குடும்பத்தில் யாரும் மதி கெட்டு போய் இல்லாததால் அதன் பின் வந்த நாட்களில் அவளை கண்ணுக்குள் வைத்து தான் தாங்கினர்.

ஹரியும் தன் தங்கையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினான், அதே சமயம் தாய்க்கும் உதவியாக இருப்பவன் ஸ்ரீயை கொஞ்சவும் மறப்பதில்லை..

அப்போதே ஒரு பொறுப்புல்ல தலைமகனாக நடந்து கொண்டான் ஹரி.

அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது ஸ்ரீக்கு விவரம் தெரிய தொடங்கும் வரை.

ஸ்ரீக்கு மூன்று வயதிலே ஓரளவிற்கு விவரம் தெரிய தொடங்கவும், குழந்தைகளுக்கே உரித்தான அந்த உரிமை உணர்வு தலைதூக்க, ஹரி அவளை விடுத்து சந்திரிகாவை தொட்டாலோ தூக்கினாலோ ஓவென அழுத்து ஒப்பாரி வைத்து அவன் கவனத்தை தன் மீது திருப்புவாள்.

பிறந்ததிலிருந்தே அவனின் ஸ்பரிசத்தை வைத்தே அவனை உணர்ந்து கொள்பவள், அவன் மீது ஏனென்றே தெரியாமல் மலையளவு பாசம் வைத்திருந்தாள்.

அதனால் தோன்றிய அதீத பொசசிவ்னெஸ் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆரம்பப் புள்ளியாகிப் போனது.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியைப் போல் அளவிற்கு மீறின அன்பு கூட ஆபத்து தான் என்பதை ஸ்ரீயைக் கண்டு அந்த குடும்பத்தினர் வெகு தாமதமாக புரிந்து கொண்டனர்.

நாட்கள் அதன்போக்கில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது ஸ்ரீக்கு ஐந்து வயது, அன்று சந்திரிகாவிற்கு சிறிது நாட்களுக்கு முன் வந்த மலேரியா காய்ச்சலில் அவள் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவள் சரியாகிவிட்டால் அங்கப்பிரதக்ஷனம் செய்கிறேன் என கலைவாணி வேண்டிக்கொண்டார்.இப்போது அவள் குணமானதும் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றவே சந்திரிகாவை தூக்கிக் கொண்டு ஹரியுடம் கலைவாணி கிளம்பிக் கொண்டிருந்தார்.

ஆம் இப்போது கலைவாணி பூரண குணமடைந்திருந்தார், இருந்தும் அந்த பாசக்கார கணவன் அவரை ஒரு வேலையும் செய்ய அனுமதிக்காமல் தன் கண்களுக்குள் வைத்து தாங்கிக் கொண்டு இருப்பதால் முன்பை விட இப்போது கலைவாணி உடலிலும் மனதிலும் புது உற்சாகம் கிடைக்க மகிழ்ச்சியோடு வலைய வந்தார்.

மதிவாணனும் தன்னுடைய அயராத உழைப்பால் துவண்டு போன தன் தொழிலை தூக்கி நிறுத்தி முன்பை விட பல உயரங்களை எட்டியிருந்தார், அதற்கு அவருடைய விடா முயற்சியும் கடும் உழைப்பும் மட்டுமே காரணம் என்று சொன்னால் மிகையாகது.

கலைவாணிக்கு குணமாகி விட்டதால் ஸ்ரீயுடைய மூன்றாம் அகவையிலே தெய்வநாயகி பாட்டி தாமரைக்குளத்திற்கு சென்று விட்டார். மதிவாணன் குடும்பமும், சாருமதி குடும்பமும் மட்டும் வார இறுதியில் அங்கு போய் வந்து கொண்டு இருந்தனர்.

முன்தினம் தான் மதிவாணன் தொழில் தொடர்பாக சென்னை கிளம்பினார், அவர் இருந்தால் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே அவர் இன்று அதை நிறைவேற்ற முடிவு செய்து ஹரியிடம் கோவிலுக்கு மட்டும் செல்கிறோம் என கூறி அழைத்து வந்தார்.

ஸ்ரீ எழுந்து கொள்ளும் முன்பே கிளம்பி விட வேண்டுமென ஹரி தன் அன்னையிடம் கூற, அவருக்கும் அது சரியாகவே பட்டது, ஏனென்றால் அவருமே சில நாட்களாக ஸ்ரீயின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

ஹரி அவளை விட்டு சந்திரிகாவை மட்டுமல்ல, வேறெந்த குழந்தையை தூக்கினாலும் கூட அவள் பொறுக்காமல் அழுது கூப்பாடு போட்டு அவனை அவளிடம் வரவைத்து விடுவாள்.

அவருக்கு அவளைக் கண்டு சிரிப்பாக இருந்தது, குழந்தை தானே வயது வந்ததும் மாறி விடுவாள் என்று தப்பு கணக்கு போட்டவர் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டது தான் வினையாகிப் போனது.

அவர்கள் கிளம்பி வெளியே வரவும், ஸ்ரீ தூங்கி எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு “ஹரி” என அழைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

“போச்சுடா” என ஹரி நினைக்க, அவளோ அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு வாகாய் சாய்ந்து உறங்கும் சந்திரிகாவைக் கண்டு முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஆத்தம்மா எங்க …போதீங்க என்னை விட்டுட்டு” என ஹரியிடம் பேசாமல் தன் அத்தையிடம் கேட்க, அவளை தூக்கி கொஞ்சியவர், “சும்மா கோவிலுக்கு போய்ட்டு வரலாம்னு கிளம்புனோம் டா..நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா தான் உன்னை எழுப்பலை தங்கம்” என அவளை சமாளித்தார்.

“நானும் வதேன்” என அவள் கூற, ஹரிக்கு திக்கென்று இருந்தது , “இல்லை லட்டுக் குட்டி இன்னும் உன் கண்ணுல பாரு தூக்கம் மிச்சம் இருக்கு நீ போய் தூங்கு நீ எழுந்துக்கிறதுக்குள்ள நாங்க வந்திருவோம்” என அவன் அவசரமாக மறுக்க,

உடனே எப்போதும் போல் அழுகை என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தாள் ஸ்ரீ, அதைக் கண்டு ,”சும்மா இருக்க மாட்டியா ஹரி காலாங்காத்தால பிள்ளையை அழுக வச்சுகிட்டு” என ஹரியை கடிந்து கொண்ட கலை, ஸ்ரீயின் கண்களை துடைத்து விட்டுக் கொண்டே,”குட்டிமா அழுவாதீங்க நாம ஒன்னாவே போகலாம் வாங்க வந்து குளிச்சுட்டு கிளம்புங்க” என சமாதானப்படுத்தினார்.

அதன்பின் நால்வரும் கிளம்பி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.இப்போது சந்துவை கலை தூக்கி வைத்திருந்ததால் ஸ்ரீ எந்த அடமும் செய்யாமல் மகிழ்ச்சியாகவே வந்தாள் அவ்வப்போது அவள் சந்துவை வேறு கொஞ்ச , கலைக்கு நிம்மதியாக இருந்தது.

கோவிலுக்கு வந்து முதலில் அம்மனை தரிசித்து விட்டு வந்ததும் கலை தன் வேண்டுதலை நிறைவேற்ற தயாராக, ஹரி குழப்பமாக அன்னையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னம்மா அதான் சாமி கும்பிட்டாச்சுல வாங்க கிளம்பலாம்” என அவன் கூற, அவனிடம் திரும்பியவர் ,பக்குவமாக வந்த விஷயத்தைக் கூறி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என அறிவுருத்தினார்.

அதைக் கேட்டு ஹரிக்கு வந்ததே கோபம்,” விளையாடுறீங்களா உங்களுக்கு இப்போ தான் உடம்பு நல்லா இருக்கு..இதெல்லாம் ஒன்னும் செய்ய வேணாம் ஒழுங்கா கிளம்புங்க இல்லை அப்பா கிட்ட சொல்லிருவேன்” என மிரட்டினான்.

அவனை பாவமாக பார்த்தவர் ,”கண்ணா வேண்டிக்கிட்டதை செய்யலைன்னா அப்பறம் நம்ம சந்து குட்டிக்கு இன்னும் முடியாம போய்ரும் பா..அதுனால அம்மா சொல்றதை கேழு பத்து நிமிஷத்துல முடிஞ்சிரும்” என அவன் மனதை குறிபார்த்து கல்லை வீசினார் அந்த அன்னை.

தங்கை என்றதும் ஹரி மனதிலும் பயம் அப்பிக்கொள்ள, என்ன செய்வது என சிந்தித்தவன் ,ஒரு யோசனை கிட்ட தன் அன்னையைப் பார்த்து ,”இப்போ என்ன மா அதை செய்யனும் அவ்ளோ தான, நீங்க உட்காருங்க நான் செய்யுறேன்..யார் செஞ்சா என்ன அவ எனக்கும் பாப்பா தான” என அவன் பெரிய மனிதன் போல் கூற,

கலைவாணிக்கு மகனின் அன்பைக் கண்டு கண்கள் கலங்கியது , இல்லை வேண்டாம் என எவ்வளவு மறுத்தும் ஹரி தன் பிடிவாதத்தை விட்டு கீழிறிங்காதலால் கலை தான் அவன் கூறியதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியதாய் போயிற்று.

அவன் சொன்னபடி அங்கப்பிரதக்ஷனம் செய்ய தயாராக, அதுவரையில் சந்துவிடம் விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்த ஸ்ரீ அவன் செய்கையைப் பார்த்து அவன் அருகில் வந்தாள்.

“என்ன ஹரி எதுக் தண்ணீ மேல ஊத்திருக்க , எ..ன்ன இங்க தூங்க போதியா படுத்துருக்க” என மழலை மொழியில் வினவ,

அவனோ சிரிப்புடன் ,”இல்லை லட்டு குட்டி நம்ம சந்து பாப்பாக்கு உடம்பு சரியில்லாம போச்சுல அதான் இப்படி இங்க கோவில் முழுக்க விழுந்து உருண்டா பாப்பாக்கு இனிமேல் அப்படி சாமி வர விடாது” என அவளுக்கு புரியும் படி விளக்கினான்.

அவனையும் அங்கு கரடு முரடாக இருந்த பிரகாரத்தையும் மாறி மாறி பார்த்தவள் அவனிடம் ,”வேணா எந்தி இங்க விழுந்தா வலிக்கு சாமி கிட்ட சாரி சொல்லிக்கலாம்” என அவள் அவனுக்காக யோசிக்க,

இருவரையும் பார்த்த கலைவாணி மீண்டும் மகனிடம் வேண்டாம் என தடுக்க, அவனோ அதற்குள் வேண்டுதலை செய்ய தொடங்கியிருந்தான்.

அவனை பார்த்த ஸ்ரீ அடுத்த நிமிடம் அவளும் அவனைப் போல் தரையில் விழுந்து உருள, கலை அதைக் கண்டு அதிர்ந்து ,” குட்டிமா என்ன பண்ற ஒழுங்கா எந்திரி !!!” என அதட்டினார்.

“ஹரி பண்ணா நானும் பண்ணுவே..அவனுக்கு வலிக்குல எனக்கு வலிக்கு” என கூறியவளின் அன்பைக் கண்டு ஹரியும் கலையும் பிரம்மித்துப் போயினர்.

என்ன தடுத்தும் கேளாமல் இருவரும் சேர்ந்து அந்த வேண்டுதலை நிறைவேற்றினர்.

தன் தங்கைக்காக அவன் செய்ய, அவனுக்காக அவளும் அதை செய்தாலும் மறைமுகமாக அந்த பலன் சந்துவிற்கே சேர்ந்தது… சந்துவின் நலனை நாடி வேண்டுதல் செய்தவள் தானே அவள் வாழ்க்கையை அழிக்கப்போவதை அறிந்திருப்பாளா?? அதுதான் விதியின் விளையாட்டு என்பதை யார் அறிவர்!!!!!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்