
அத்தியாயம் – 21
தங்களை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்த லாரியை கண்டு “அம்ம்மாஆஆஆ!!!!” என கண்களை மூடிக்கொண்டு பயந்து போய் கத்திய ஸ்ரீயையும் வர்ஷூவையும் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தப் பக்கம் பிடித்து இழுத்திருந்தான் ஹரி..
இன்னும் தாங்கள் விபத்திலிருந்து தப்பியதை உணராமல் கண்களை மூடிக் கொண்டிருந்த ஸ்ரீயையும் வர்ஷூவையும் ஹரி பிடித்து உலுக்க, கண்களை திறந்த இருவரும் தங்களுக்கு அடிபடாததை நம்பமுடியாமல் தங்கள் கை கால்களை ஆராய்ந்து ஒன்றும் ஆகவில்லை என உறுதிபடுத்திய பின்பே போன உயிர் திரும்ப வந்தது இருவருக்கும்.
அப்போது கார்த்திக்கும் அங்கு வந்துவிட ,என்ன நடந்தது என ஹரியிடம் கேட்டு தெரிந்து கொண்டவனுக்கு,ஹரி மட்டும் சரியான நேரத்தில் வந்திருக்கவில்லை என்றால் அடுத்து நினைத்து பார்க்கவே உள்ளம் பதறியது.
ஹரியும் அதே நிலையில் தான் இருந்தான்..ஸ்ரீக்கு மட்டும் ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் என்ற நினைப்பே அவன் உயிரை உலுக்கியது..
தன் கையணைப்பில் இருந்த ஸ்ரீயை மேலும் இறுக்கி அணைத்துக்கொண்ட ஹரி ,அவளுக்கு தைரியம் அளித்தானா??இல்லை தனக்கு தைரியம் பெற்றுக்கொள்ள அப்படி செய்தானா ?? என்பது அவனுக்கு தான் வெளிச்சம்.
கார்த்திக்கிற்கு வர்ஷூவை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தாலும் அதை செய்யமுடியாமல் முதலிரவன்று அவன் கொடுத்த வாக்கு அவன் கண்முன் வந்து தடை செய்ய, அவன் என்ன செய்வதென தெரியாமல் தவித்து போய் நின்ற வேளையில் பயத்தில் வர்ஷூவே அவன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.
அவள் செய்கையை நம்ப மாட்டாமல் தன் கைகளையும் அவளையும் மாறி மாறி பார்த்த கார்த்திக்கிற்கு அப்போதே ரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட வேண்டும் என்பது போல் மனம் துள்ளியது.
அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவரும் தங்களையே பார்ப்பதை உணர்ந்த ஹரி ஸ்ரீயையும் வர்ஷூவையும் காரில் போய் அமரச்சொல்ல,அவர்களிருவரும் சென்று கார்த்திக்கின் காரில் சென்று அமர்ந்தனர்.
அவர்கள் சென்றதும் கார்த்திக்கிடம் வந்த ஹரி முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு,”அப்போ அவனுங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டானுங்கன்னு நினைக்கிறேன்..இனிமேலும் நம்ம டைம் வேஸ்ட் பண்ண கூடாது கார்த்திக் சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” என தீவிரமான குரலில் கூற,
கார்த்திக்கும் சீரியசான குரலில்,”ம்ம்..எனக்கும் அப்படித்தான் தோணுது பார்க்கலாம்..சரி நீ என்னை தான இவங்களை வந்து பிக்கப் பண்ணிக்க சொன்ன..நீ எப்படி இங்க வந்த??” என அவன் சந்தேகத்தை வினவ,
“ப்ச்..மனசே சரியில்லைடா..அவ கூட பேச கூடாது ஒதுங்கி இருக்கலாம்னு தான் காலையில உன் கிட்ட சொன்னேன்..ஆனா ஒரு நாள் ஓட்டுறதுக்குள்ளேயே சத்தியமா முடியலை..வேலையில கான்சென்ட்ரேட் பண்ணவே முடியலை..அதான் இவளை பார்த்துட்டு போகலாம்னு வந்தா இங்க அந்த லாரியையும் இவங்களையும் பார்த்து கையும் ஓடலை காலும் ஓடலை…நான் மட்டும் கரெக்டா வரலைன்னா இந்நேரம் என்ன ஆய்ருக்கும்னு நினைச்சு கூட பார்க்க முடியலை” என கூறிய ஹரியின் குரலில் என்ன முன்றும் தன் நடுக்கத்தை மறைக்க முடியவில்லை,
அவன் தோளில் ஆதரவாக கைவத்த கார்த்திக் பேச்சை மாற்ற எண்ணி,” ஆமா உனக்கும் ஸ்ரீக்கும் இப்போ என்ன பிரச்சனை நேத்து கூட நல்லா தான பீச்சுக்கு போய் உருண்டு புரண்டுட்டு வந்” என கூற வந்தவன் ஹரியின் முறைப்பில் அதை மாற்றி,”நல்லா தான இருந்தீங்க..அவளை பார்த்தா சண்டை போட்ட மாதிரி தெரியலை..உனக்கு ஒரு நாள்ல என்னாச்சு..என்ன பிரச்சனைன்னு சொல்லு” என கேட்க,
“கொடைக்கானல்ல இருந்து போன் வந்துச்சு” என ஹரி மொட்டையாக கூறினான்.
அதிலேயே கார்த்திக்கிற்கு விஷயம் என்னவென்று புரிந்துவிட,”ஓஹ் அதானா விஷயம்..சந்து இப்போ எப்படி இருக்கா எதுவும் ப்ராப்ளம் இல்லையே” என கார்த்திக் கவலையாக கேட்க,
“ம்ம்..இப்போ பரவாயில்லை..நேத்து தான்” என கூற வந்தவன் அதை பற்றி கூற முடியாமல் வலியில் முகம் இறுக நிற்க,
கார்த்திக் அவன் வேதனையை புரிந்து கொண்டவன் போல் மேலும் எதையும் தோண்டி துருவாமல்,”ப்ரோ நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத….இதை இன்னும் எவ்ளோ நாளைக்கு மறைக்க போற, என்னைக்காச்சும் ஒருநாள் எல்லாருக்கும் தெரியனும் தான..அதை இப்போவே சொல்லிட்டா நல்லது தான் டா..பாவம் டா ஸ்ரீ அவ இந்த நாலு வருஷம் நீ பேசாம இருந்தப்போவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா..இதுல இப்போ கல்யாணம் பண்ணிட்டு அவ கூட பேசாம இருந்தா ரொம்ப நொந்து போய்ருவா..எல்லாத்தையும் இப்போவே சொல்லிரு டா.. ” என ஆலோசனை வழங்கினான்.
ஹரியும் அதைப்பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தான்.அதற்குள் பயத்தில் இருந்து ஒருவழியாக தெளிந்த ஸ்ரீ,காரில் இருந்தே ,”ஹேய் என்ன தான் பேசுவீங்க நீங்க அப்படியே ரெண்டு நாட்டோட பிரதம மந்திரிங்க பாரு ரோட்டுல நின்னு ஆலோசனை கூட்டம் நடத்திகிட்டு இருக்கீங்க..பசிக்கிது டா..வந்து சாப்பாடு வாங்கி குடுங்க” என ஸ்ரீ சப்தம் போட்டாள்.
“எவ்வளவு பெரிய ப்ரச்சனை போய்கிட்டு இருக்கு பக்கிக்கு பசிக்கிதாம்..நல்லா பிடிச்சுட்டு வந்திருக்க டா..உன் பொண்டாட்டியை எல்லாம் அருங்காட்சியகத்துல கொண்டு போய் தான் வைக்கனும்” என கார்த்திக் அலுத்துக் கொண்டான்.
ஹரிக்கும் இவ்வளவு நேரம் இருந்த குழப்பம் போய் அவள் செய்கை புன்னகையை வரவிக்க, கார்த்திக்கை பார்த்து நமுட்டுச் சிரிப்புடன்,”பரவாயில்லை தம்பி என் பொண்டாட்டியாச்சும் மரியாதையா ஹோட்டல் போய் சாப்பாடு வாங்கி சாப்பிடுறதோட நிறுத்திக்கிறா..ஆனா உன் பத்தினி குக்கர்ல பூரியெல்லாம் வச்சு கொலை முயற்சியெல்லாம் பண்ணுறா..அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை” என கிண்டலாக கூற,
இதற்கு பதிலேதும் கூற முடியாத கார்த்திக், தன் தர்மபத்தினியை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டே காருக்குச் சென்றான்.
ஹரி அவன் காரில் வந்ததைக் கண்ட ஸ்ரீ , அவனிடம் போகச் சொன்ன கால்களை கஷ்டப்பட்டு அடக்கி கார்த்திக்கின் காரிலே வீம்பாக அமர்ந்திருந்தாள்.
காலையில் அவளிடம் சொல்லாமல் கொல்லாமல் கிளம்பி சென்றதற்கு தான் இந்த செல்ல கோபம் என புரிந்த ஹரியும் சின்ன சிரிப்புடன், கார்த்திக்கை காரை ஹோட்டலுக்கு விட சொல்லிவிட்டு, அவர்களை பின் தொடர்ந்தான்.
ஹோட்டல் அஞ்சப்பருக்கு வந்த நால்வரும் ஒரே டேபிளில் சென்று அமர்ந்தனர்.
கார்த்திக் அவனுக்கும் வர்ஷூவிற்கும் அவளுக்கு பிடித்த பெப்பர் சிக்கன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸை ஆர்டர் செய்ய,ஸ்ரீ அவனிடம் ,”ஹேய் லூசு இது அவளுக்கு பிடிக்காது..ஷி இஸ் வெஜ்ஜி..வேற ஆர்டர் பண்ணு” என கூற,
அவனோ ,”அவளுக்கு இது தான் பிடிக்கும்..நீ உன் ஆத்துக்காரை கவனி..போ” என உறுதியாக கூற,
“எனக்கென்ன போய் அடிவாங்கித் தொலை” என ஸ்ரீயும் விட்டுவிட்டாள்,
வர்ஷூ இன்னும் அந்த பயத்தின் தாக்கத்திலிருந்தே வெளிவராததால் அவள் அவன் ஆர்டர் செய்ததையும் இவர்களின் சம்பாஷனைகளையும் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் பின்னாளில் ஏற்படும் பல குழப்பங்களை தவிர்த்திருக்கலாமோ??
ஹரி ஆர்டர் செய்யட்டும் என ஸ்ரீயும், ஸ்ரீ ஆர்டர் செய்யட்டும் என ஹரியும் வீம்பு பிடித்துக் கொண்டு இருந்ததால், கடுப்பான கார்த்திக் அனைவருக்கும் வர்ஷூவுக்கு பிடித்த அதே உணவை ஆர்டர் செய்து விட்டான்.
உணவு வந்த பின்னே அதை எடுத்து சாப்பிட போகும் போது தான் அதை உணர்ந்த வர்ஷூ, குழப்பமாக அனைவரின் தட்டையும் பார்க்க,
அனைவருமே அதை சாப்பிடுவதைக் கண்டு ‘ஓஹ் ஹரி மாமா எல்லாருக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிட்டாரு போல..ஸ்ரீக்கு பெப்பெர் சிக்கன் பிடிக்கும்னு அதையே பண்ணிருக்காரு’ என தவறாக புரிந்து கொண்டு பல வருடம் கழித்து தனக்கு பிடித்த உணவை ஆசையாக உண்ண ஆரம்பித்தாள்.
ஸ்ரீயோ அவளிடம் இருந்து கார்த்திக்கு பல அடிகளை எதிர்பார்த்தவள் அது ஒன்றும் நடக்காமல் போக, குழப்பத்தோடே தன் உணவை சாப்பிட தொடங்கினாள்.
ஹரியும் கார்த்திக்கும் இது எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் வேறொரு முக்கியமான சிந்தனையில் மூழ்கியிருந்ததால் இவர்களிருவரையும் கண்டுகொள்ளவில்லை.
அனைத்தும் முடிந்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப எத்தனிக்க, கார்த்திக் இருவரின் சின்னபிள்ளைத்தனமான செயல்களைக் கண்டு தன் மனதிற்குள் திட்டம் தீட்டியவன் வேகமாக வர்ஷூவின் தோளைப் பற்ற,
தன் நினைப்பிலிருந்து வெளிவந்த வர்ஷூ கோவமாக அவனை முறைத்தாள்.
அதைக் கண்ட கார்த்திக்,அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “ஹரிக்கும் ஸ்ரீக்கும் சண்டை கொஞ்ச நேரம் கோ ஆப்பரேட் பண்ணு மா ப்ளீஸ்..நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் நம்பு” என கெஞ்ச,
வேறு வழியில்லாமல் வர்ஷூவும் அமைதியாக அவனுடன் நடந்தாள்.
கார்த்திக்கின் காரின் அருகில் நின்றிருந்த ஸ்ரீ இருவரின் கோலத்தையும் பார்த்து, அவர்களுக்கு தொந்தரவாக தாம் இருக்கிறோம் என நினைத்து வேறுவழியில்லாமல் பின்னால் நின்றிருந்த தங்களின் காருக்கு அருகே சென்றாள்.
அவள் வருவதைக் கண்ட ஹரி ,’வாடி குட்டச்சி என்னமா சீன் போட்ட..கடைசில என்கிட்ட வந்துதான ஆகனும்’ என விஷமமான புன்னகையோடு அவளைப் பார்த்திருக்க,
அதைக் கண்டுகொண்ட ஸ்ரீ வேண்டுமென்றே அவன் காரைத் தாண்டி சென்று அங்கிருந்த ஆட்டோவில் ஏறப் போனாள்.
அவள் செய்கையில் கடுப்பான ஹரி விடுவிடுவென சென்று அவள் சுதாரிக்கும் முன் அவளை இழுத்து காரினுள் தள்ளி கதவை சாற்றியிருந்தான்.
அதை பார்த்துக் கொண்டே கார்த்திக் நிற்க, அப்போது தான் தன் மனைவியின் கோபப் பார்வையை உணர்ந்து என்னவென்று அவளை பார்க்க, அவன் கை இன்னும் தன்னை அணைத்திருப்பதை பார்வையாலே சுட்டிக்காட்டினாள் வர்ஷூ.
“ஹிஹி சாரி மறந்துட்டேன்” என அசடு வழிந்து கொண்டே கார்த்திக் தன் கரத்தை விலக்க,
‘சரியான ஜொல்லு ஜோல்னா பையன்..வாடி இன்னைக்கு நைட் உனக்கு ஜவ்வரிசி பாயசம் செஞ்சு வைக்கிறேன்’ என கறுவிக்கொண்டே வர்ஷூ காரில் ஏறி அமர்ந்து கொள்ள,
‘ச்சே ரொம்ப உஷாரா தான் யா இருக்கா..ஹும்ம் உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான் டா கார்த்தி’ என நொந்து கொண்டே காரைக் கிளப்பினான் கார்த்திக்.
காரில் அமர்ந்திருந்த ஸ்ரீயின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்க, அதை கண்டுகொள்ளாத கார்த்திக் கூலாக விசிலடித்துக் கொண்டே காரை தங்கள் வீடு நோக்கி விரட்டினான்.
அவனின் உற்சாகம் அவளை மேலும் கோபம் கொள்ளச் செய்ய, அங்கிருந்த மியூசிக் ப்ளேயரை ஆன் செய்தாள்.
அங்கேயும் அவளை சோதிப்பதை போல்,
“நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பார்க்கா விட்டால் நானும் பார்க்க மாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்”
என்ற பாடல் ஒலித்தது.
அதைக் கேட்டு ஹரி அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வாயை மூடிச் சிரிக்க,
கடுப்பானவள் அதை ஆஃப் செய்துவிட்டு ,”காரை நிறுத்து” என ரோட்டை பார்த்துக் கொண்டு கூறினாள்.
அவன் கேட்டும் கேளாதது போல் காரை நிறுத்தாமல் சென்று கொண்டிருக்க, அவன் பக்கம் திரும்பியவள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு ,”இப்போ நிறுத்தலைனா குதிச்சிருவேன் ” என மிரட்டினாள்.
அதைக் கேட்டு பெரிதாக சிரித்த ஹரி,”சென்ட்ரல் லாக் போட்டிருக்கப்போ கதவை திறக்க முடியாதுன்னு கூடாவா உனக்கு தெரியாது..இது தெரியாம என்ன தான் இத்தனை வருஷமா படிச்சியோ” என எரிகிற நெருப்பில் நல்லெண்ணையை ஊத்தினான்.
அவள் இது தேறாது என நினைத்து கடுப்பில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அந்தப்புறம் திரும்பி அமர்ந்து கொள்ள, அவளின் இந்த சிறுபிள்ளைத்தனமான செயல் அவள் மீது மேலுள்ள காதலை மேலும் கூட்டியது.
சிரித்துக் கொண்டே காரை வேறொரு சாலையில் அவன் திருப்ப, அவனின் மனைவி அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
சரியாக இருபது நிமிடம் கழித்து அவன் காரை நிறுத்த வேகமாக இறங்கிய ஸ்ரீ தன் முன் தெரிந்த கடலைக் கண்டு கண்களை அகல விரித்தாள்.
அவளின் விழியில் விழுந்து தொலைந்து போன மனதை மீட்டெடுக்க விரும்பாமல் அவளையே அவன் காதலாக பார்த்துக் கொண்டிருந்தான்.
நேற்று இதே போல கடலில் நடந்த சம்பவங்கள் அவள் கண் முன் விரிந்து அவளை நாணம் கொள்ளச் செய்ய, அதன் காரணமாக அவள் கன்னம் செவ்வானமாய் சிவந்தது.
அந்த இரவிலும் அவள் கன்னச்சிவப்பை கண்டுகொண்ட அவளின் கள்வன் , சந்தோஷமாக விசில் அடிக்க,
அதில் தன் மோன நிலையிலிருந்து கலைந்த ஸ்ரீ அவனை முறைத்து விட்டு யாருமற்ற அந்த திருவான்மையூர் பீச்சில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
‘ஆனாலும் இந்த குட்டச்சிக்கு ரொம்ப திமிரு தான்’ என நினைத்தவன் , அவள் பின்னாலே செல்ல,அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.
அவனே கீழிறங்கி வந்து ,”ஹேய் சாரி டி..காலையில ரொம்ப முக்கியமான வேலை அதான் உன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னு சொல்லாம போய்ட்டேன்..அதுக்காக இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்காத லட்டு..சத்தியமா பார்க்க முடியலை” என கூற,
முதலில் கூறியதில் கொஞ்சம் மலை இறங்கியவள் கடைசியாக அவன் கூறியதை கேட்டு ஃப்ர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த அவளின் கோபம் பத்தாம் ஃப்ளோருக்கு போய் அமர்ந்து கொண்டது.
இவளை எப்படி சமாதானப்படுத்த என யோசித்தவன் அவள் பின்னால் நடந்து கொண்டே விஜயிடம் கேட்க, அவனோ ‘சொந்தமா உழைச்சு முன்னேறு டா நன்னாரிப்பயலே’ என காரித்துப்பி விட,
வேறுவழியில்லாமல் நம் கூகுள் ஆண்டவரின் காலிலே போய் விழுந்தான்.
அவர் பல ஐடியாக்களை வாரி வழங்க, அதில் தன்னால் இப்போது செய்யக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுத்தவன் அதை எப்படி செய்வது எனத்தெரியாமல் குழம்பி நின்றான்.
கவிதை எழுதுவதை தேர்வு செய்தவன் அதை எப்படி செய்வது என யோசித்துக் கொண்டிருக்க, அப்போது தான் அவன் கண்ணில் அது விழுந்தது.
வேகமாக தன் போனை எடுத்து டைப் செய்தவன் ஒரு ஹார்ட் ஸ்மைலியுடன் அதை அவளுக்கு அனுப்பி வைக்க,
நோட்டிஃபிகேஷன் சவுன்ட் கேட்டு அதை திறந்து பார்த்தாள் ஸ்ரீ,
அவள் கணவன் தான் வாட்ஸப்பில் குறுஞ்ச்செய்தி அனுப்பியிருந்தான்..
“எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என் கண்மணியே
உன் விரலோடு என் விரல் கோர்த்து நான் வரவேண்டும் துணையே”
என்ற வரிகளோடு சேர்த்து சில காதல் ஸ்மைலிகளும் இருக்க,
அதைக் கண்டு கோபத்தில் அவன் புறம் திரும்பியவள் அவன் அருகில் வந்து அவனை சரமாரியாக தாக்க ஆரம்பித்தாள்.
“ஹேய் கவிதை பிடிக்கலைனா குணமா வாயில சொல்லணும் எதுக்கு டி இப்போ அடிக்கிற” என அவளின் அடிகளை வாங்கிக்கொண்டே கேட்க,
“தடிமாடு பாட்டோட லிரிக்ஸை எடுத்து அனுப்புனதும் இல்லாம அதை சொந்தமா கூட யோசிக்காம கார்த்திக் ஸ்டேடஸை பார்த்து சுட்டு அனுப்பிட்டு அதை கவிதைன்னு தைரியமா வேற சொல்லிக்கிறயா” என கேட்டுக்கொண்டு அவள் அடிப்பதை நிறுத்தாமல் தொடர, ‘ஸ்டேடஸ் பார்த்து அனுப்புனியே அது யாரோட ஸ்டேடஸ்னு பார்க்காம இப்படி மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே டா ஹரி’ என நொந்து கொண்ட ஹரி அவள் கைகளைப் பற்றி அவள் அடிப்பதை நிறுத்தினான்.
“விடுடா எருமை” என அவள் திமிர, கைகளில் இன்னும் அழுத்தம் கொடுத்தவன் அவளைக் கண்டு ,”லட்டு என்னை நிமிர்ந்து பாரு” என கூற,அவன் குரலில் இருந்த ஏதோவொன்று அவளை அவனைப் பார்க்கச் செய்தது.
அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன், “லட்டு ஐ அம் ரியல்லி வெரி சாரி..நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்னு தெரியுது..சொல்லாம இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்..மன்னிச்சுரு லட்டு..ஐ லவ் யூ” என ஆழ்ந்த குரலில் கூறியவன் அவள் நெற்றியில் மென்மையாக தன் இதழை ஒற்றி எடுத்தான்.
கண்களில் கண்ணீரோடு அவனை ஏறிட்டு பார்த்தவள்,”ஐ அம் சாரி டூ ஹரி..இது சின்ன பிள்ளைத்தனமா தான் இருக்கு..ஆனா அந்த லாரி வந்து என்னை இடிக்க போன அந்த நிமிஷம் எனக்கு உன் முகத்தை நான் பார்க்காமையே உன்னை விட்டு போ..” என கூறிக்கொண்டு போனவளின் வாயில் விரலை வைத்து தடுத்தவன்,
“ப்ளீஸ் லட்டு சும்மா வாய் வார்த்தையா கூட அப்படி சொல்லாத..என்னால தாங்கிக்க முடியாது..ப்ளீஸ்” என ஹரி இறைஞ்சுதலாக கூற,
“எனக்கு புரியுது ஹரி..ஆனா நீ ஒன்னை மட்டும் புரிஞ்சுக்கோ நான் சாகும்போது என் கண்ணுல உன் முகம் மட்டும் தான் தெரியணும் அதான் என்னோட ஒரே ஆசை” என காதலோடு கூற,
“ச்சு என்ன லட்டு இது..இன்னும் வாழவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள சாகுறதை பத்தி பேசுற” என அதட்டிய ஹரி, அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அவளும் அவனோடு வாகாக ஒட்டிக்கொள்ள, அதன் பின் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து கடலை இரசித்தவர்கள் மனம் ஒரு நிலை அடைந்ததும் தங்கள் வீட்டிற்கு புன்னகையோடு கிளம்பிச் சென்றனர்.
அதன் பின் வந்த நாட்களில் இருவரும் சிறிய சிறிய ஊடல்களுடனும் நிறைய நிறைய காதலுடனும் தங்கள் நாட்களை கடத்தினர்.
கார்த்திக் வர்ஷூ வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை..தாமரை இலை நீர் போல பட்டும் படாமல் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் இவர்கள் இருவரின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு தெரியாமலே இருவரை ஏற்பாடு செய்திருந்தனர் ஹரி மற்றும் கார்த்திக்.
சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் , அன்று காலை எழும்போதே ஸ்ரீக்கு ஏனோ மனம் பாரமாக இருக்க, குளித்து முடித்து பூஜையறைக்கு சென்று சில நிமிடங்கள் பிரார்த்தித்து விட்டு வந்த பின்பே அவள் மனம் லேசாக தெளிவடைந்தது.
ஹரியும் அன்று காலை முதலே ஒருவித பதட்டத்தோடு இருக்க, அவனை கவனித்தவள் அவன் அருகில் சென்று ,”ஹேய் ஹரி என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்க..எதுவும் பிரச்சனையா” என அக்கறையாக கேட்க,
சடுதியில் தன் முகத்தில் பொய்யான உற்சாகத்தை கொண்டு வந்த ஹரி,”அதெல்லாம் ஒன்னும் இல்லை டா..சும்மா ஆபிஸ் டென்ஷன்..நீ சாப்பிட்டியா?” என பேச்சை மாற்றினான்,
அவன் கூறுவது பொய் என அவனின் சரி பாதிக்கா தெரியாது, அவனிடம் ஏதோ கேட்கப் போனவளை தடுத்தது காலிங் பெல்லின் சப்தம்.
இந்த நேரத்தில் யார் என நினைத்தவள் ,போய் கதவைத் திறக்க, அங்கே தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்டு திகைத்துப் போனாள்.
வந்தவர்களிடம் ,”ட்ராவல் எல்லாம் எப்படி இருந்துச்சு ஓகே தான” என்ற ஹரியின் கேள்வி அவனுக்கு அவர்கள் வருவது முன்னமே தெரியும் என்பதை பரை சாற்ற,
‘இவன் ஏன் இதை என்னிடம் மறைக்க வேண்டும்’ என நினைத்து ஸ்ரீ மேலும் குழம்பினாள்.
அவளின் இந்த சிந்தனையை கலைத்தது பாட்டியின் குரல் ,”என்ன டி வாயாடி எப்படி இருக்க??? நீ நல்லா தான் இருப்ப..உன்னை கட்டிக்கிட்டு என் பேரன் தான் கஷ்டப் படுறான்..அவன் கிட்ட தான் இதை கேட்கணும்” என கேள்வியும் நானே பதிலும் நானே என அவர் பேச,
அவரை முறைத்த ஸ்ரீ ,’ஏய் கிழவி உனக்கு இருக்கு..தாத்தா இருக்கப்போ பேச மாட்டேன்ற தைரியத்துல தான ஆடுற..இரு இரு நைட் உன்னை கடத்திட்டு போய் கும்மு கும்முனு கும்முறேன்’ என மனதிற்குள் பாட்டியை கறுவிக் கொண்டவள் வெளியே ஈஈஈயென சிரித்து வைத்தாள்.
ஹரியிடம் ஏன் அவன் தன்னிடம் இதை மறைத்தான் என கேட்க நினைத்த ஸ்ரீ அவனை நோக்கி போக, அதற்குள் அவளை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றிருந்தார் சாருமதி.
அதில் எரிச்சலடைந்த ஸ்ரீ,”ச்சு என்னம்மா எதுக்கு இப்போ என்னை இழுத்துட்டு வந்த” என எரிந்து விழுந்தாள்.
“இப்படி தான் ஹரி கிட்டயும் மூஞ்சியை தூக்கி வச்சுட்டு திரியுறயா??” என சாருமதி அதட்ட,
“இதை கேட்க தான் கூப்பிட்டியா??இப்போ என்னன்னு சொல்லப்போறியா?? இல்லை நான் இங்க இருந்து கிளம்பவா??” என ஸ்ரீ அலுப்பாக கேட்க,
“ஏன் டி இப்படி காலுல சுடுதண்ணீ ஊத்துனவ மாதிரி பறக்குற…ஹரியும் நீயும் சந்தோஷமா தான இருக்கீங்க” என தாய்க்கே உரித்தான கவலையுடன் அவர் கேட்க,
“ப்ச்..இதுல என்ன உனக்கு சந்தேகம்…நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம் போதுமா” என அவள் பதிலளித்தாள்.
“அதை ஏண்டி இப்படி சலிப்பா சொல்ற..கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொன்னா தான் என்னாவாம்??” என சாரு குறைபட்டுக்கொண்டார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கோம்” என முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி கூறியவள் ,”இப்போ நான் போலாம் தான” என கேட்டாள்,
“போடி வாயாடி” என செல்லமாக அவள் முதுகில் தட்டியவர் அவளோடு சேர்ந்து வெளியே வந்தார்.
அதன் பின்னும் அவளுக்கு ஹரியுடன் தனித்து பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போக, சோர்ந்து போனாள் ஸ்ரீ.
சற்று நேரத்தில் கார்த்திக் மற்றும் விஜய் ஜோடிகளும் ஜோதியில் ஐக்கியமாக அந்த இடமே களைகட்டியது.
ஆனால் ஹரி மற்றும் கார்த்திக் மட்டும் முகத்தில் சிறு பதற்றத்தோடு வாட்ச்சையும் வாசலையும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போல காலிங் பெல் அடிக்க, இருவரும் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
ஸ்ரீயே இம்முறையும் போய் கதவைத் திறக்க, வாசலில் நின்றிருந்த சந்து என்கிற சந்திரிகாவைக் கண்டு அவள் இதயத்துடிப்பு ஒரு நிமிடம் நின்று போக, அவளையே அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

