

சுபாஷ் முகம் இறுகிப் போய் நின்றிருந்தான். “அப்போ நடந்த சம்பவங்கள் எல்லாமே ஃபேக் ராகவி! நம்மளைப் பிரிக்கிறதுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது,” என்றான் அவன்.
ராகவிக்குத் தலை சுற்றியது, கால்கள் தள்ளாடின. தட்டுத்தடுமாறித் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், “ஏன்?” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
”தெரியல…”
“யாரு?” – மீண்டும் கேட்டாள்.
“கண்டுபிடிக்க முடியலை. ஆனா யாரோ நம்மகூட வேலை பார்த்தவங்கதான். தேடிக்கிட்டு இருக்கேன். அவன் மட்டும் கையில கிடைக்கட்டும்… அப்புறம் இருக்கு!” எனத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான் சுபாஷ்.
“எப்படி கண்டுபிடிச்ச?” – ராகவியின் குரலில் நடுக்கம் இருந்தது.
“முதல்ல நான் எதையும் கவனிக்கலை. ஆனா நீ கொஞ்ச நாளா என்கிட்ட விலகல் காட்டினதும் எனக்கு எதுவும் புரியல. அப்புறம்தான் வித்தியாசம் தெரிஞ்சது. எல்லாரும் என்னை ஒரு மாதிரி குறுகுறுன்னு பார்க்கிற ஃபீலிங். பிறகு நம்ம டீம் கோகுல்கிட்ட விசாரிச்சப்போ தெரிஞ்சது… நம்ம ஆபீஸ்ல யாரோ நான் ‘கே’ (Gay) அப்படின்னு பரப்பிவிட்ருக்காங்க. நான் யாரோ ஒரு ஆண்கூட நெருக்கமா இருக்கிற போட்டோவை ஆபீஸ் குரூப் சாட்ல ‘அனானிமஸ்ஸா’ (Anonymous) பரப்பிவிட்ருக்காங்க.
அநேகமா நீயும் அதைத்தான் நம்பியிருக்கணும்னு நினைக்கிறேன். அதுனாலதான் என்னை விட்டு விலகினியோன்னு எனக்குச் சந்தேகம் வந்தது. உன்கிட்ட என் நிலைமையைச் சொல்லிப் புரிய வைக்க முயற்சி பண்ணும்போதெல்லாம் நீ என்னை அவாய்ட் பண்ணின. என்னைப் பார்த்தாலே பயந்து ஓடின. அதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியல. நம்ம பிரேக் அப் பண்ணின கொஞ்ச நாள் நீ ஆபீஸ்க்கு வரல. அந்த நேரத்துலதான் நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊருக்கே போயிட்டேன்.
ரொம்ப உடைஞ்சு போயிருந்தேன் ராகவி. எதுக்காக என் மேல இப்படி ஒரு பொய் பரவணும்? யார் செஞ்சிருப்பா? எதுக்குச் செஞ்சிருப்பாங்க? ஒண்ணுமே புரியல. என் வீட்டுல இருக்கவங்களுக்கும் விஷயம் தெரியாது. நான் சோகமா இருக்கிறதைப் பார்த்து ரேணு… என் மாமா பொண்ணு, என் கூடவே இருந்தா. கொஞ்சம் கொஞ்சமா என்னை இயல்புக்குக் கொண்டு வந்தா. அவகிட்ட மட்டும் என் மனசுல இருக்கிறதைச் சொன்னேன். அவளும் அதிர்ச்சியாகிட்டா.
முதல்ல நான் ‘கே’ இல்லைன்னு நிரூபிக்கணும்னு என் மூளைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அதே நேரம் என் மாமாவுக்கும் நிறைய கடன் இருந்திருக்கும் போல… ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. கடன் கொடுத்தவன் ரேணுவைப் பிரச்சனைக்குள்ள இழுத்துட்டான். நான் கஷ்டப்பட்டப்போ என் கூட இருந்தது ரேணு. இப்போ அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா என்னால பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியலை. உன்னையும் தொடர்பு கொள்ள முடியல… எனக்கும் வேற வழி இல்லாம ரேணுவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
கல்யாணத்துக்கு அப்புறம் விலகிப்போன காதலை இழுத்துப் பிடிக்க எனக்கு இஷ்டம் இல்ல. என்னை நம்பி வந்தவ ரேணு. அவளுக்கு உண்மையா இருக்க முயற்சி பண்ணினேன். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம். இன்னொரு முறை ஐடி வேலையே வேணாம்னு ஊர்ல இருக்க எங்க கடையைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். இப்போ கூட இங்கே ஒரு சொந்தக்காரங்க ஃபங்க்ஷனுக்காகத்தான் சென்னை வந்தோம். நாளைக்கு மறுபடியும் ஊருக்குக் கிளம்பிருவோம். ஆனா உள்ளுக்குள்ள யாரு இப்படிப் பண்ணிருப்பான்னு தேடிக்கிட்டே இருக்கேன். இதோ… இப்போ நான் நல்லா இருக்கேன். ஆனா அது யாரு? ஏன் என்னை இப்படித் தப்பா காட்டுறதுனால யாருக்கு லாபம்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்!” என தன் பக்கத்து நியாயங்களைக் கூறினான் சுபாஷ்.
நடந்ததைக் கேட்ட ராகவிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது. ஒருவாறு நிதானத்திற்கு வந்தவள், தனக்கு வந்த மெசேஜ், ஆடியோ, அவனது வீட்டில் கண்ட அந்தப் புத்தகம், அலுவலக பார்ட்டியில் தான் கேட்ட உரையாடல் எனத் தாரகேஷ் செய்த அனைத்துச் சூழ்ச்சிகளையும் கூறினாள்.
ராகவி கூறியதைக் கேட்ட சுபாஷிற்கு அந்த முகம் தெரியாத எதிரியின் மீது கோபம் தாளவில்லை. அதே நேரம் யார் இதை எல்லாம் செய்திருப்பார்கள் என அவன் குழம்பினான். தன் வீட்டிற்கு வரும் அளவிற்கு நெருக்கமாக இருந்த நண்பர்களில் யாரோ ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.
ராகவி மற்றும் சுபாஷ் இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். இருவர் மீதும் தவறு இல்லாத பட்சத்தில் யாரைக் குறை கூறுவது? அந்த நிமிடத்தைக் கடக்க முடியாமல் தவித்தனர். அந்நேரம் தன் தங்கை தங்களை நோக்கி வருவதைக் கண்ட ராகவி, “ஓகே சுபாஷ்… நான் கிளம்புறேன். என் சிஸ்டர் வந்துட்டா…” என்றாள். பேசும்போதே அவளுக்குத் தொண்டை அடைத்தது.
அவளின் நிலை புரிந்த சுபாஷ், “எனக்கு புரியுது ராகவி. உன் மேலயும் தப்பு இல்லை. நீயும் என்னைக் கடந்து போயிருப்பேன்னு நம்புறேன். எப்பவும் என்னோட பழைய சக ஊழியரா உன் மேல எனக்கு ஒரு மரியாதை இருக்கும்!” எனத் தன் இறுதி விளக்கத்தைக் கூற, கசப்பான அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு ராகவி அங்கிருந்து கிளம்பினாள்.
அன்று வீட்டிற்கு வந்த ராகவி, சுபாஷின் சந்திப்பால் மனம் சரியில்லாததால் நன்றாக உறங்கி எழுந்தாள். அன்று மாலை, ராகவியைக் காண அவளது கல்லூரித் தோழி சரண்யா பெங்களூரில் இருந்து வந்திருந்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு தன் தோழியைப் பார்ப்பதற்காக ராகவி கிளம்பிச் சென்று, சரண்யாவை ஒரு காபி ஷாப்பில் சந்தித்தாள்.
சரண்யா அவளைப் பார்த்ததுமே கேட்டாள், “என்னடி… முகம் எல்லாம் வாடி இருக்கு?”
ராகவி மெல்லத் தொடங்கினாள், “சரண்யா… நான் முன்னாடி எங்க ஆபீஸ்ல சுபாஷ்னு ஒருத்தரை லவ் பண்ணேன்னு சொல்லிருக்கேன்ல?”
“ஆமா… அந்த ஒரு மாதிரியான பையன் தானே?” சரண்யா சுபாஷைப் பற்றி ராகவி ஏற்கனவே சொல்லியிருந்த அரைகுறைத் தகவல்களை வைத்துப் பேசினாள்.
ராகவி வருத்தத்துடன், “அவன் உண்மையிலேயே அப்படி இல்லைடி. யாரோ ப்ளான் பண்ணி எங்களைப் பிரிச்சுவிட்ருக்காங்க. இப்போ அவன் தன் மாமா பொண்ணைக் கல்யாணம் பண்ணி, அவ இப்போ பிரக்னென்ட்டா இருக்கா…” என்றாள்.
சரண்யா அதிர்ச்சியுடன், “உனக்கு எப்படிடி தெரியும்?” எனக் கேட்டாள்.
“இன்னைக்கு மால்ல பார்த்தேன் சரண்யா. செம ஷாக்! யாரோ செஞ்ச சூழ்ச்சியால ஒரு நல்ல பையனை இழந்துட்டு நிக்கிறேன்,” என்றாள் ராகவி.
சரண்யா கோபமாக, “உனக்குனாலும் ஒரு நல்ல பையன் தான் போயிருக்கான். ஆனா அவனுக்கு வாழ்க்கையையே அழிக்கப் பார்த்திருக்கான் ஏதோ ஒரு பரதேசி!” என்றாள்.
“ஆமாடி… அதான் யாரா இருக்கும்னு ஒண்ணுமே புரியல…” என ராகவி குழம்பினாள்.
“சரி விடு… அவனுக்கு ஒரு மாமா பொண்ணு கிடைச்ச மாதிரி, உனக்கு ஒரு அத்தை பையன் கிடைக்காமலா போயிடுவான்?” எனச் சரண்யா அவளைத் தேற்றினாள். “அதுவும் சரிதான்… ஆமா, உன் லவ் என்ன ஆச்சு?” என ராகவி பேச்சை மாற்றினாள்.
சரண்யா சலிப்புடன், “எங்கே… அவன் தான் சரியான களிமண்ணாச்சே! ஆமா, அவன் முன்னாடி உங்க ஆபீஸ்லதானே டீம் லீடரா இருந்தான்? அவன் மனசுல பெரிய ‘இது’ன்னு நினைப்பு. 32 வயசாச்சே… கல்யாணம் பண்ணுவோம், குழந்தை குட்டின்னு செட்டில் ஆவோம்னு இல்லாம சாமியார் மாதிரி இருக்கான். அவன் இப்படி இருக்கறது மட்டுமில்லாம, பார்க்குற பொண்ணுங்களை எல்லாம் ஏதோ சாமியைப் பார்த்த மாதிரி பக்தியோட பார்க்குறான். நானும் எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் கண்ணியமா இருக்கானேன்னு லவ்வ சொன்னா, ‘முடியாது’ன்னு சொல்றான். செம்மையா டென்ஷன் ஆகிடுச்சு… சரிதான் போடான்னு வந்துட்டேன். ஆனா அவன் கிட்ட என்னமோ தப்பா இருக்கு ராகவி… ஒருவேளை அவனுக்கு எதுவும் அந்த மாதிரி பிரச்சனை இருக்குமோ?” எனத் தாரகேஷைத் திட்டிக்கொண்டே ஆரம்பித்தவள், கிண்டலாக முடித்தாள்.
சரண்யா பேசியதை இதுவரை விளையாட்டுத்தனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ராகவிக்கு, அப்பொழுதுதான் ஏதோ ஒன்று புரிவது போலவும், அதே சமயம் அதுவே குழப்புவது போலவும் இருந்தது.
ராகவி யோசனையுடன், “தாரகேஷ் என்னோட பழைய டீம் லீடர் தான். ஆனா நீ சொல்றதைக் கேட்கும்போது ஏதோ வித்தியாசமான ஃபீலிங்கா இருக்குடி…” என்றாள்.
“என்ன ஃபீலிங் டி?” – சரண்யா புரியாமல் கேட்டாள்.
“சரியா தெரியல… ஒரு மாதிரி சொல்லத் தெரியல… ஆனா ஏதோ வித்தியாசமா இருக்கு!” ராகவியின் மூளை சுபாஷ் சொன்ன விஷயங்களையும், சரண்யா சொல்லும் தாரகேஷின் குணத்தையும் இணைத்துப் பார்க்கத் தொடங்கியது.
சரண்யா, “சரி… ஃப்ரீயா விடு. அப்புறம் உன் தங்கச்சி என்ன பண்றா?” என்று பொதுவான மற்ற விஷயங்களைப் பேச ஆரம்பித்தாள்.
இரவு படுக்கையில் சாய்ந்த ராகவிக்கு உறக்கம் வரவே இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் சுபாஷை வேறொரு ஆணுடன் நெருக்கமாகக் காட்டிய அந்தப் புகைப்படம்… அன்று அவளுக்கு வந்த மெசேஜ்… இன்று சரண்யா சொன்ன “சாமியார் மாதிரி இருக்காண்டி… பக்தியா பார்க்கிறான்… அவனுக்கு என்னமோ பிரச்சனை… உன் ஆபீஸ்ல தாரகேஷ்!” என்ற வார்த்தைகள் அவள் மூளையில் மாறி மாறி ரீங்காரமிட்டு அவளைத் தொந்தரவு செய்தன.
ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி தாரகேஷின் பின்னால் இருப்பதை உணர்ந்தவள், சட்டெனப் படுக்கையில் இருந்து எழுந்தாள். யோசிக்காமல் சரண்யாவிற்கு போன் செய்தாள்.
ராகவி: “ஹேய் சரண்… உன் ஆபீஸ் பிரண்ட் கிருத்திக்கு பிரேக்-அப் ஆச்சுன்னு சொன்னல்ல?”
சரண்யா தூக்கக் கலக்கத்தில் எரிச்சலுடன் கேட்டாள், “நைட்டு 2 மணிக்கு போன் பண்ணிக் கேட்கிற விஷயமா இது? அவ பிரேக்-அப் உனக்கு எதுக்குடி?”
ராகவி பிடிவாதமாக, “தெரியல… ஆனா எனக்கு அவ நம்பர் வேணும்!” என்றாள்.
சரண்யா, “சரி… அனுப்பித் தொலைக்கிறேன். வேற எதுனாலும் தயவுசெஞ்சு காலைல கால் பண்ணு!” என்றுவிட்டுப் போனை வைத்துவிட்டாள்.
கிருத்தியின் நம்பரை வாங்கிய ராகவி, எப்போது விடியும், எப்போது கிருத்தியிடம் பேசுவோம் எனக் காத்துக்கொண்டிருந்தாள். வினாடிகள் யுகங்களாக நகர்ந்தன.
அங்கு பெங்களூரிலோ, இவை எதுவுமே அறியாத தாரகேஷ், நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

