

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
ராகவியும் சுபாஷும் தாரகேஷின் கீழ் பணி புரிந்தனர். பார்த்ததும் ஈர்ப்பு ஏற்பட்ட இருவரும் காதல் என்னும் நிலைக்கு படிப்படியாக முன்னேறினர். அதே நேரம், ராகவியின் வீட்டில் பல பிரச்சனைகள் இருந்ததால், காதலை பொக்கிஷம் போல் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்தனர்.
யாரிடம் இருந்தும் காதலை மறைக்கலாம்; ஆனால் கூடவே வேலை செய்யும் சக ஊழியர்களிடம் எவ்வளவு தூரம் மறைக்க முடியும்? அன்பான சிறு பேச்சும், அக்கறையான கள்ளப்பார்வையுமே தாரகேஷிடம் இவர்களை காட்டிக்கொடுக்க போதுமானதாக இருந்தது. ஆனால் தாரகேஷ் இவர்களை கவனிக்கும் முன்பே, இவர்களின் காதல் வேர்விட்டு நன்கு வளர்ந்திருந்தது.
ராகவி–சுபாஷ் காதல் விஷயம் தாரகேஷ்க்கு தெரியவந்ததிலிருந்தே, ராகவி என்னும் பூவை காக்கும் காப்பாளனாக தாரகேஷ் தவித்தான்.
இப்படியான நேரத்தில் தான், ஒரு நாள் ராகவிக்கு புலனத்தில் ஒரு புதிய எண்ணில் இருந்து செய்தி வந்திருந்தது.
அதில்:
“தயவு செய்து எனது காதலனை விட்டுவிடு. இதை அவனுக்காக மட்டும் இல்லை, உனக்காகவும் சேர்த்து தான் சொல்கிறேன். இப்படிக்கு…”
என ஒரு ஆண் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலில் ராகவி அதை கவனிக்கவில்லை.
‘யாரோ ஒரு ஆணுக்கு அனுப்ப வேண்டியதை தவறுதலாக மாற்றி எனக்கு அனுப்பியிருக்காங்க’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
ஆனாலும் மனதில் ஒரு சின்ன சலனம். ‘நான் தான் புலனத்தில் என்னுடைய புகைப்படம் மற்றும் பெயர் வைத்திருக்கிறேனே… அப்படியானால் செய்தி அனுப்பியவருக்கு நான் ஒரு பெண் என தெரிந்திருக்கும் தானே… அப்படியும் யார் இப்படி ஒரு செய்தி அனுப்பியிருப்பார்?’ என்று குழம்பினாள்.
அந்த வார சனிக்கிழமை, மீண்டும் வேறொரு எண்ணில் இருந்து சுபாஷ் ஒரு ஆணுடன் நெருக்கத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் அவளது புலனத்திற்கு வந்திருந்தது.
அதை பார்த்த ராகவிக்கு ஒரு நொடி என்ன செய்வது என்றே புரியவில்லை. இதைப் பற்றி சுபாஷிடம் நேரிலே கேட்கலாம் என்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, சுபாஷை நேரடியாக சந்திக்க அவனது வீட்டிற்குச் சென்றாள்.
அங்கோ, சுபாஷ் வீட்டில் இல்லாமல் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான்.
ராகவி சுபாஷிற்கு போன் செய்தாள்.
ராகவி, “சுபாஷ், நான் உன் வீட்டுக்கு வந்துருக்கேன் டா. கதவை திற…”
சுபாஷ், “ஏண்டி, சொல்லிட்டு வர மாட்டியா? நான் ஃபிரண்ட்ஸோட கிரிக்கெட் விளையாட வந்துட்டேன். நீ ஒன்னு பண்ணு. வீட்டு வாசல்ல இருக்க ஆலோவேரா செடிக்கு கீழ சாவி இருக்கு. கதவு திறந்து உள்ள போ. ஒரு த்ரீ ஹார்ஸ் வெயிட் பண்ணு, நான் வந்துடுறேன்.
ரொம்ப போர் அடிச்சா டி.வி ரிமோட் டிவி ஸ்டாண்ட்ல தான் இருக்கும். எடுத்து பார்த்துட்டு இரு. லவ்வர் வீட்டுக்கு வந்துருக்கோம், லவ்வரை சர்ப்ரைஸ் பண்ணுவோம்னு அடுப்படிக்குள்ள எதுவும் போய்டாத. நான் வரும் போது உனக்கும் சேர்த்து லஞ்ச் வாங்கிட்டு வந்துடுறேன்.” என்று குறும்புடன் கூடிய அக்கறையில் கூறினான்.
சுபாஷின் விளையாட்டுத்தனமான பேச்சில் ‘நாம் எதற்காக இங்கு வந்தோம்?’ என்பதையே ராகவி மறந்தாள்.
சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்ற ராகவி, சிறிது நேரம் சோஃபாவில் அமர்ந்து டி.வியை பார்த்தாள். ஆனால் அதுவும் போர் அடிக்க, “இவன் என்ன சொல்றது?” என்று சமையல் அறைக்குள் சென்றாள்.
“அவன் வரும் போது வரட்டும்… நாம அவனுக்கு சின்னதா பாயாசம் மட்டும் செய்வோம்” என ஃபிரிட்ஜில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்தாள். பின் சர்க்கரையை தேட, அதுவோ மேலே உள்ள செல்ஃபில் இருந்தது.
சற்று எக்கி சர்க்கரையை எடுக்க முயன்ற போது, அவள் கை பட்டதால் ஏதோ கீழே விழுந்தது.
எடுத்து பார்த்தவள், நெருப்பை தொட்டது போல கையில் எடுத்த பொருளை மீண்டும் கீழே போட்டாள். அங்கே, ஆண்களை கவர்ச்சியாக சித்தரிக்கும் புகைப்படங்களை கொண்ட புத்தகம் இருந்தது.
அதிர்ந்து நின்றவள், தனது போனின் சத்தத்தில் மீண்டும் நிஜத்துக்கு வந்தாள்.
சுபாஷ் தான் அழைத்திருந்தான். “பேபி, நான் பிரியாணி கடைல தான் இருக்கேன். இங்க கூட்டமா இருக்கு. வர 45 நிமிஷத்துக்கும் மேல ஆகும்..” அவள் பேச இடம் கொடுக்காமல் அவன் கூறினான்.
ராகவி சட்டென சுதாரித்தாள். அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்தாள். அப்போது, அமேசானில் இருந்து சுபாஷ் பெயருக்கு இரண்டு பார்சல்கள் வந்தன. சற்றும் யோசிக்காமல், அவளே வாங்கினாள்.
ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த அவள், ஏதோ ஒரு உள் உணர்வில், வாங்கிய அந்த பார்சல்களை டைனிங் டேபிளில் வைத்து மெதுவாக திறந்தாள்.
ஒன்றில் அவனுடைய வேலைக்கு தேவையான புத்தகங்கள் இருந்தன. மற்றொன்றில் அந்த ‘ஆண்கள்’ புத்தகம் இருந்தது.
மீண்டும் அதிர்ந்தவள், அந்த பார்சல்களை அப்படியே வைத்துவிட்டு, சுபாஷிடம் எதுவும் சொல்லாமல், தன் வீட்டிற்கு எதிலிருந்தோ தப்பிப்பது போல ஓடிவிட்டாள்.”
தாரகேஷுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த சுபாஷ், வீட்டில் ராகவி இல்லாததை கண்டு குழம்பினான்.
அந்நேரம் சமையல் அறைக்கு தண்ணீர் குடிக்க சென்ற தாரகேஷ், காலையில் சுபாஷை விளையாட கூப்பிட வந்தபோது தான் ஒளித்து வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து, தனது முதுகில் சட்டைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டான்.
அதேபோல், சுபாஷுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே, அவன் ஆர்டர் செய்திருந்த புத்தகங்களில் ஒன்றை “நான் படிச்சுட்டு கொடுக்கிறேன்” என்று சொல்லி, டேபிளில் இருந்த ‘அந்த’ புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டான்.
இந்த சூழ்ச்சிகள் எதுவும் அறியாத ராகவி, மெல்ல சுபாஷிடம் விலகல் காட்டத் தொடங்கினாள்.
அன்று அவர்கள் அலுவலகத்தில் மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்றுக்கான வெற்றிக்கொண்டாட்டம்.
ஆண்கள், பெண்கள் என அனைவரும் அந்த ஸ்டார் ஹோட்டலின் பார்ட்டி ஹாலில் அமர்ந்திருந்தனர். முதலில் விழா முடிந்ததும், அனைவரும் சாப்பிட சென்றனர்.
பஃபே முறையான விருந்து என்பதால், அனைவரும் தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு அமர்ந்தனர். ஆண்கள் பலர் மதுவின் பின்னால் சென்றனர்.
ராகவியிடம் வந்த சுபாஷ், “பசங்க எல்லாம் சரக்கடிக்க கூப்பிடுறாங்க. நான் குடிக்கலன்னாலும், அவங்க கூட இருக்கனும். நீ உன் ஃபிரண்ட்ஸ் கூடவே இரு. வீட்டுக்கு போகும் போது நான் கூட்டிட்டு போறேன்.” என்றான். ராகவியும் குழப்பமான மனநிலையில் இருந்ததால் ஒன்றும் சொல்லவில்லை.
இரவு ஒன்பது மணியளவில், ராகவி சுபாஷை அழைக்கச் செல்ல, அங்கே பலர் மதுவின் போதையில் பிதற்றிக்கொண்டிருந்தனர்.
அசௌகரியமான மனநிலையில் அவள் அங்கே சென்றபோது, அலுவலக நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டாள்.
“டேய் சுபாஷ், நீ செம்ம க்யூட் டா… அப்படியே கட்டிப்புடிச்சு கிஸ் அடிக்கணும் போல இருக்குடா…”
சுபாஷ், “உனக்கு சரக்கு ஓவர் ஆகிருச்சு… நீ வீட்டுக்கு கிளம்பு. இன்னைக்கு உன் பொண்டாட்டி உன்னை கும்ம போறா.”
“நீ என் பக்கத்துல இருக்கும்போது என் பொண்டாட்டியை ஏண்டா நியாபகப்படுத்துற? அவ கெடக்குறா… இது நல்லா இருக்கு.. அன்னைக்கு கூட ஜெண்ட்ஸ் டாய்லெட்ல…”
மேலே அவன் என்ன பேசியிருப்பானோ, ராகவி உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
எதிரே வந்த தனது தோழியிடம் “நான் வீட்டுக்கு போறேன்” என்று சொல்லிவிட்டு, உடல் நடுங்க அங்கிருந்து சென்றாள்.
முதல் நாள் கேட்ட செய்தி, அதற்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து அவளை மிகுந்த சோர்வடையச் செய்தது. இந்த மனநிலையுடன் தன்னால் வேலை செய்ய முடியாது என்று நினைத்து, மறுநாள் விடுமுறை எடுத்துக்கொண்டாள்.
அன்று மாலை, அவளுக்கு மீண்டும் புலனத்தில் ஒரு ஆடியோ வந்தது. ஒரு முறை மட்டும் கேட்கக்கூடியது. அதில் சுபாஷ் யாரோ ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்தான்.
அதில், “சுபாஷ், ஏண்டா இப்படி நடக்கிற? LGBTQ ஒன்னும் தப்பில்ல… நீ உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போ. ஆனா ராகவிய ஏண்டா இதுல இழுக்குற?”
சுபாஷ், “புரிஞ்சி தான் பேசுறியா? நம்ம நாட்டுல இன்னும் LGBTQ எல்லாம் சாதாரணம் இல்ல. அதவிட என் அம்மா அப்பாக்கு என்ன பதில் சொல்றது? முதல்ல ராகவிய கல்யாணம் பண்ணிக்கனும். அப்புறம் என்னோட நிலைமைய சொல்லனும். அவளுக்கு வேணும்னா, அவளுக்கு பிடிச்ச யாருடனும் ரிலேஷன்ல இருந்துக்கட்டும். ஆனா வெளி உலகத்துக்கு நாங்க கணவன்–மனைவி. ராகவி என்ன லவ் பண்றா… கண்டிப்பா என்ன புரிஞ்சிப்பா.”
என்றதோடு அந்த ஆடியோ முடிந்தது.
அந்த ஆடியோ முடிந்ததும், ராகவியின் உலகமே இருண்டது.
அடுக்கடுக்காக தாரகேஷ் அமைத்த பொய்களை உண்மையென நம்பிய ராகவி, அங்கேயே மயங்கி விழுந்தாள்.

