
அத்தியாயம்-33
ஏதோ பேச வந்தவன் வாயைத், தன் கரம் கொண்டு இளநகை மூடிவிட, அதில் திடுக்கிட்டு அவள் புறம் தன் பார்வையைத் திருப்பினான்.
பெண்ணவள் என்னவோ இலகுவாகத்தான் அச்செயலை செய்திருந்தாள். ஆனால் அவன் பார்வை தீண்டிய நொடி ஏதோ ஓர் குறுகுறுப்பு மனதில் தோன்ற, மெல்ல தன் கரம் எடுத்தவள் “ஒ..ஒரு நிமிஷம்” என்றாள்.
அவளிலிருந்து தன் பார்வையை எடுக்காது அவன் தலை மட்டும் மேலும் கீழுமாய் ஆட,
“ப்ரியா எனக்குச் சில பொருட்கள் வேணும். முதல்ல பஞ்சு வேணும்” என்று கூறினாள்.
“அது எதுக்கு?” என்று அகர்ணன் வினவ,
“விஷ் காதுல வைக்க. நாம நார்மலா பேசுறதே அவங்களுக்கு சத்தமா தான் கேட்குது. நம்ம திடீர்னு கத்தினா அவங்க காது கிளோஸ் தான்” என்றாள்.
“அய்யோ என் புருஷன் பாவம்” என்று பிரியா கூற,
“ரொம்ப அக்கறை தான்டி.. இதை நீ முதல்லயே யோசிச்சு ஏற்பாடு பண்ணிருக்கனும்” என்று கூறினான்.
“சரி வேற என்னலாம் வேணும்?” என்று கேட்ட ப்ரியா அந்தக் காட்டுப் பகுதியைச் சுற்றிப் பார்த்தாள்.
அமைதியான அந்தக் காடு அத்தனை ரம்மியமாகத் தென்பட, “வாவ்.. காடு ரொம்ப அழகா இருக்குல்ல?” என்றாள்.
பேசிக் கொண்டிருந்த யாவரும் அவள் கூற்றில் அப்போது தான் அந்தக் காட்டைச் சுற்றிப் பார்த்தனர்.
சுற்றிலும் பச்சை பசேலென்று நெடு நெடு மரங்களுடனும், பாசி படிந்த பாறைகளுடனும் எனக் காண்பதற்கே அத்தனை மனோரமாக விளங்கியது.
சில்லென்று காற்று வந்து மோத, “இப்ப மழை பெஞ்சா சூப்பரா இருக்கும்” என்று ப்ரியா கூறினாள்.
அந்தக் காட்டின் ரம்மியத்தில் மூழ்கியிருந்தோரும் அவள் கூற்றுக்கு ஒத்து ஊத, ‘ததாஸ்து..’ என்ற அவளது சக்தி மெல்ல மழை பொழிவதற்காக வானை தயார் நிலையில் நிறுத்தியது.
திரள் திரளாய் திரண்ட மேகம் மோகம் கொண்டு ஒன்றோடு ஒன்று உராய்ந்து திடும்மென்ற இடி முழக்கங்களை இசைத்து, தங்கள் ஜீவ ஊற்றைப் பூமிக்கு துளிகளாய் பொழிந்தது.
வானை அண்ணார்ந்து பார்த்த இளநகை அந்த முதல் துளியைத் தன் கன்னங்களில் வாங்கிக் கொள்ள, மழையை ரசித்துக் கொண்டிருந்த துருவனின் விழிகள் மங்கையை ரசிக்கத் துவங்கியது.
அடுத்த நொடியே இருவர் அலறல் ஒலி அவனை நடப்பிற்கு இழுத்து வந்தது.
“அய்யோ.. எரியுது எரியுது.. அம்மா..” என்று மதி சுற்றி சுற்றி மழையிலிருந்து தப்ப வேண்டி ஓட, கரடியும் காரணமே தெரியாமல் அவன் பின்னே ஓடியது.
“ஆ..எரியுது..” என்று அவன் கத்த, “ஆ.. வலிக்குது” என்று விஷ் கத்த, ஒன்றுமே புரியால் திருதிருவென ஜான்விகா இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அகர்ணன் மண் வாசத்தை தன் நுரையீரலில் ஆழ சுவாசித்து மந்தகாச புன்னகையுடன் அகாவை நோக்க, தன் தலையில் அடித்துக் கொண்டவள் ஏதோ சைகை செய்தாள்.
ஒன்றும் புரியாமல் விழித்தவன், “என்ன அவி சொல்ற?” என்க,
மீண்டும் தலையில் அடித்துக் கொண்டவள் ப்ரியா புறம் சென்று அவள் முகத்தில் குத்துவது போல் பாவனை செய்தாள்.
“ஏ அகா.. என்னாச்சு?” என்று ப்ரியா புரியாமல் நோக்க,
வானத்தைக் கைக்காட்டி ‘வேண்டாம்’ என்பது போல் சைகை செய்தாள்.
முதலில் புரியாது விழித்த ப்ரியா, “மழை நிக்கனுமா?” என்க,
சட்டென மழை நின்றது.
பொத்தெனப் பாறையில் படுத்த மதி பெருமூச்சுவிட, கரடியும் அவன் அருகே படுத்துத் தட்டிக் கொடுத்தது.
அகா ஏதோ சைகையிலேயே ப்ரியாவை திட்ட, இளநகையும் துருவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போதே இருவருக்கும் விடயம் புரிந்தது. “அட ராமா..” என்ற இளநகை “ப்ரியா.. பஞ்சு, டேப்பு, குடை, கயிறு, இன்னொரு நோட் பென் இதுலாம் மட்டும் வேணும்” என்று இளநகை கூற, ப்ரியாவும் அவையாவும் வேண்டினாள்.
சிறிது நேரத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை சத்தம் எங்கிருந்தோ கேட்டது விஷ்வேஷுக்கு.
“காய்ஸ்.. சி..சிங்கம் வருது..” என்று அவன் கூற,
துருவன் வேகமாக மதியை பாறையிலிருந்து எழுப்பிக் கீழே கூட்டி வந்தான்.
வேகமாக ஓடி வந்த சிங்கம் இவர்களைப் பார்த்துத் தன் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு உறுமி, பாய்வதற்கு தயாராக,
“சிங்கக்குட்டி.. அ..அண்ணே உனக்குக் குல்பி வாங்கி தரேன்டா.. தங்கமில்ல.. மெல்ல வ்..வாங்க” என்று மதி பீதியுடன் கூறினான்.
வேகமாய் வந்த சிங்கம் மதிமீது பாய,
“டேய்.. என் ஒரே புருஷன்டா..” என்று ஜான் கத்தினாள்.
மதி மீது பாய்ந்த சிங்கம் அவன் கன்னம் நக்கி விளையாடவும், “அந்தச் சிங்கத்துக்கும் உன் புருஷன் தான் ஒரே புருஷன் போல ஜான்.. என்ன ஏதுனு விசாரிச்சாக்கோ” என்று துருவன் கூற,
“ஆங்?” என்றாள்.
“உன்கிட்ட பேசினது என் தப்புதான்டி” என்ற துருவன், சிங்கம் முதுகிலிருந்த பள்ளிப் பையை (ஸ்கூல் பேக்) எடுக்க,
இளநகை கேட்ட அத்தனையும் அதில் இருந்தது. முதலில் பஞ்சை விஷ்வேஷிடம் கொடுக்க, அதை வைத்து முடிந்தளவு தன் காதை அடைத்துக் கொண்டான்.
அதற்குள் சிங்கத்திற்கு தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்து மதி பெருமூச்சுக்களுடன் வர,
“ஹெவி லவ் போலயே” என்ற சிரிப்புடன் அவனுக்குக் குடையை கொடுத்தான்.
புத்தகம் மற்றும் பேனாவை அகநகையிடம் கொடுத்து, “எதாச்சும் இம்பார்டென்டா சொல்லனும்னா எழுதிக்காட்டு” என்க,
அகாவும் சரியென்று தலையசைத்தாள்.
துருவன் கயிற்றையும், ஒட்டுநாடாவையும் (sellotape) இருகைகளிலும் பிடித்துக் கொண்டு இளநகையை கேள்வியாய் பார்த்தான்.
கயிற்றை வாங்கி ஜான்விகா மற்றும் மதியின் கரத்தை இணைத்துக் கட்டியவள், “காது கேட்காம ஜான் பாட்டுக்கு ஒரு பாதைல போயிட போறா” என்று கூற,
“டேப் எதுக்கு?” என்று ப்ரியா கேட்டாள்.
அதில் சிறிதளவு கிளித்தவள், “உன் வாய்ல ஒட்டதான்” என்று அதை ஒட்டிவிட, ப்ரியா அதிர்ந்து விழித்தாள்.
“நீ என்ன பேசினாலும் அது நடக்கும் ப்ரீ.. அவசரத்துல என்னத்தையாவது வாய விட்டு இப்ப நடந்த போல எதும் நடந்துட கூடாது பாரு.. அதான்.. தேவையானப்போ எடுத்துப்போம்” என்று கூறிய இளநகை,
“இப்ப என்ன பண்ணனும்?” என்று துருவனைப் பார்த்தாள்.
சுற்றி முற்றி பார்த்தவன், “அந்தக் கரடியெங்க?” என்று கேட்க,
மதி “டேய் டேடிபேர்..” என்று கத்தியதுதான் தாமதம் மரத்திலிருந்து தொம்மெனக் குதித்து அவனை மிரள வைத்தது.
“அதுக்கிட்ட தான் இப்ப நாம வழி கேட்கனும். நாம இந்தக் காட்டுல சந்திக்குற முதல் ஜீவன் இதுதான்” என்று துருவன் கூற,
“கரடிகுட்டி.. இங்க வாங்க.. ரெண்டாவது க்ளூ எங்க இருக்குனு சொல்லுங்க” என்று அதைக் கொஞ்சியபடி கேட்டான்.
திடீரென விறைப்புற்ற நின்ற கரடி, வேகமாகச் செல்ல, “ஏ டேடி பேர் நில்லு” என்றான்.
சட்டென நின்ற கரடி அவனைப் பிடித்துக் கொண்டு ஓட, “அய்யோ கடவுளே..” என்று கரடி இழுபட்டதில் கிட்டத்தட்ட காற்றில் பறக்கும் நிலையில் அவன் சென்றான் என்றால், “அடேய்.. என்னைய காப்பாத்துங்கடா.. அய்யயோ.. புருஷனயும் பொண்டாட்டியயும் ஒன்னா சாவடிக்க பாக்குறானுங்களே.”’ என்று அவன் கையுடன் தன் கை இணைக்கப்பட்ட நிலையில் தானும் அவன்பின்னே பறந்த ஜான் கத்தினாள்.
“ஆத்தீ.. இந்தக் கரடி என்ன வெறிபுடிச்ச மாதிரி ஓடுது” என்று துருவன் புலம்ப,
“இப்ப நாம எப்படி அவங்கள ஃபாலோ பண்றது?” என்று இளநகை திருதிரு விழிகளுடன் கேட்டாள்.
அங்கிருந்த அறுவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, சட்டென அகா அகர்ணனை பிடித்து இழுத்தாள்.
“என்ன அவி?” என்று அவன் கேட்க, அவள் அவனைக் குறிப்பிட்டு ஏதோ சொல்ல முயன்றாள்.
அவள் கழுத்தில் தொங்கிய நாட்குறிப்பை அவள் கையில் கொடுத்தவன், “என்ன சொல்லவரனு புரியலை இதுல எழுது” என்க,
வேகமாக எழுதி அவனிடம் காட்டினாள்.
அத்தோ பரிதாபம்! அவன் தான் எழுதப் படிக்க மறந்து போனானே! தன் தலையில் அடித்துக் கொண்டவள் அதை இளநகையிடம் காட்ட,
“அட மாமா.. உங்களுக்குத் தான் மோப்ப சக்தி இருக்கே. அவங்க வாசம் வச்சு நாம போகலாம்னு அகா சொல்றா” என்று இளநகை கூறினாள்.
“அட ஆமாம்ல?” என்றவன் கண்களை மூடி ஸ்வாசிக்க,
கரடியின் பிரத்யேக மணம் அவன் நாசியில் நுழைந்தது.
“இந்தப் பக்கம்” என்றவன், “விஷ்.. நீ அவங்க சத்தம் கேட்குதானு பாரு அப்படியே” என்று கூற,
“ம்ம் ஓகே அகர்” என்றவன் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துக் கேட்டான்.
வாசத்தினையும் சத்தத்தையும் கொண்டு தேடியோர் அனைவரும் சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு ஆற்றை அடைந்தனர்.
அந்த ஆற்றுக்கு அந்தப்புறம் பெரிய அடர்ந்த ஆலமரம் இருக்க, “எப்பா டேய்.. காப்பாத்துங்கடா” என்று ஜோடியாக அந்த அலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இருவரும் குரல் கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் சிங்கம் படத்தில் விவேக்கும் குற்றவாளியும் கைவிலங்குடன் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் போன்றிருக்க, அவர்களை அக்கோலத்தில் பார்த்த அறுவரும் அடக்கமாட்டாது சிரித்தனர்.
“அடேய்.. சிரிப்பா இருக்காடா உங்களுக்கு? வயிறெல்லாம் கலக்குது வந்து இறக்கிவிடுங்கடா டேய்” என்று ஜான் கத்த,
“ஆ..” என்று காதுகளில் மீண்டும் பஞ்சை அடைத்துக் கொண்ட விஷ், “அந்த டேப்பை கொஞ்சம் இவ வாயிலுயும் போட்டிருக்கலாம் இளா நீ” என்று கூறினான்.
“ஏ ஆற எப்படி கடக்குறது?” என்று துருவன் கேட்கும்பொழுதே ஆற்றிலிருந்து இரண்டு முதலைகள் கறைக்கு வந்தன.
அதைக் கண்டு அரண்டு போன ப்ரியா விஷ்வேஷ் முதுகில் தவ்விக் கொள்ள,
“அம்மாடி.. அடியே.. உனக்கு இப்பத்தான் உப்புமூட்டை விளையாடுற ஆசை வருமா? நானே நொந்து போயிருக்கேன்.. ஏன்டி?” என்று விஷ்வேஷ் புலம்பினான்.
“ம்ம்..ம்ம்..” என்று அவள் கூறவும் அவன் ‘’என்ன சொல்ற?” என்று அவளை நோக்க, அவள் அவனுக்கு முன்னே கண்காட்டி அச்சத்துடன் சத்தமிட்டாள்.
என்னடி என்றுபடி திரும்பியவன் முன், ‘ஆ..’ என வாயைப் பிளந்துக் கொண்டு நின்றது அந்த முதலை.
“ஆ.. மு..முதலைனு சொல்ல வேண்டியது தானடி” என்றபடி அவளையும் சுமந்துக் கொண்டு பின்னே அவன் ஓட, ‘அதான் வாய கட்டிவச்சுருக்கீங்களேடா பக்கிகளா’ என்று எண்ணிக் கொண்டாள் பெண்.
அகநகை வேக வேகமாகத் தனது குறிப்பு புத்தகத்தில் ஏதோ எழுத, “பெரிய ரைட்டுரு இப்பத்தான் எழுதுவா.. முதலை வந்துடுச்சு அவி..” என்றபடி அகர்ணன் ஒருபுறம் அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.
“ஏ.. தப்பிக்குறேன்னு ரொம்ப தூரம் போய்த் தொலைஞ்சுடாதீங்க” என்று துருவன் கத்த,
“து..துரு..துரு.. முதலை..” என்று அவன் கரங்களை இறுக பற்றிக் கொண்டாள்.
“ஏ மகி.. அந்த முதலைய கூப்பிடுடா.. அவங்களை எதாவது பண்ணிட போவுது” என்று தொங்கியபடி கால்களைப் பரபரப்பாய் ஆட்டிக் கொண்டு ஜான்விகா கூற,
தன் கால்களால் அவள் கால்களில் உதைத்து தன்னை பார்க்கச் செய்தவன், “அவனைப் பெர்பாமென்ஸ் பண்ண விடாவோமே? அந்த அசரீரீ அவங்களை சேர்ந்து இதை விளையாட விடுறதே அவளுக்கு அவனோட லவ்வ ப்ரூஃப் பண்ணதான் ஜானு” என்று மெல்ல உச்சரித்து அவளுக்குப் புரியவைத்தான்.
“எல்லாம் சரிடா.. கடிச்சு வச்சுடா போவுது..” என்று அவள் கூற,
“அவ்வளவு தூரம் போகாம பார்த்துக்குறேன்.. இப்பதான் நட்பு மேல அக்கறை பாயும்.. உன் ஜாம் பன்ன அவன் புடுங்கி தின்னது மறந்துடுச்சா?” என்று ஒற்றை கையில் அபிநயம் காட்டி அவன் ஆவேசமாய் கேட்டான்.
“அட ஆமாம்ல? அவனை ரெண்டு கடி கடிச்சாலும் பரவால விடுடா” என்று ஜான்விகா கூறிட,
“அடிப்பாவி.. ஜாம் பன்னுக்காக நட்பைக் காவு குடுக்குறியேடி” என்று எண்ணினான்.

