
அத்தியாயம் 32
அபர்ஜித் சென்று ஆறு மாதங்கள் முடிந்து இருந்தது.
அன்று அஸ்வந்தின் தந்தையின் கூட பிறந்த தங்கை மகனின் திருமணத்திற்கு அஸ்வந், பார்கவி, செவ்வந்தி மூவரும் வந்திருந்தனர்.
மண்டபத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே பார்கவி அசௌகரியமாக நெளிந்தாள். அவள் அருகில் அமர்ந்து இருந்த அஸ்வந் அதை கவனித்து விட்டு,
அவள் காதருகே குனிந்து “கவி என்னாச்சு?.. ஏன் ஒரு மாதிரி இருக்க?…” என்று கேட்க
அவனிடம் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கினாலும், அவனை தவிர்த்து வேறு யாரிடமும் சொல்லவும் தோன்றாமல்
“அது, எனக்கு பீரியட்ஸ் டேட், பெயினா இருக்கு…” என்று சொல்ல
அஸ்வந்துக்கு கோவம் தான் வந்தது. இத்தனை மாதங்களில் அவள் சொல்லவில்லை என்றாலும் அந்த நாட்களில் வலியில் எப்படி துடிப்பாள் என்று அவனுக்கு நன்கு தெரியுமே.
அந்த வலியுடன் ஏன் வரவேண்டும் என்று தான் கோபம்.
“முன்னாடியே சொல்லி இருக்கலாமே கவி.. நம்ம வீட்டுலயே இருந்திருக்கலாம், அம்மா மட்டும் வந்திருப்பார்களே…” என்று அவன் சொல்ல
“இல்ல இதுக்கு முன்னாடியும் நிச்சயம் பண்றப்போ கூப்பிட்டு இருந்தாங்க, அப்போ நான் வரல.. ஆளாளுக்கு ஆயிரம் கேள்வி கேட்டு அத்தைய கஷ்டப்படுத்திடாங்கனு சொன்னாங்க.. இப்பவும் நான் வரலைன்னா நல்லா இருக்காதுனு தான் வந்தேன்.. நான் ஓகே தான் நீ விடு…” என்று சொல்ல
“என்ன ஓகே.. நீ வலிய பொறுத்துக்குறது உன் முகத்துலேயே தெரியுது.. அம்மா இருந்து கல்யாணத்த முடிச்சிட்டு வரட்டும் நம்ம கிளம்பலாம் வா!…” என்று அவன் அழைக்க
“அய்யோ! ஏன் இப்படி பண்ற.. வந்ததும் வந்துட்டோம் தாலி கட்டி முடிஞ்சதும் கிளம்பலாம்…” என்று அவள் சொல்ல
அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வலியில் அவதிப்படும் அவளை பார்க்கும் போது கவலையாக இருக்க,
கதிரையின் கைப்பிடியில் அழுத்தத்தை கொடுத்து வலியை பொறுத்துக் கொண்டவளின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டான் அஸ்வந்.
பார்கவி அவன் முகம் பார்க்க “என் கைய அழுத்தி பிடிச்சுக்க…” என்று சொல்ல
“இல்ல வேணாம்…” என்று கையை விலக்க பார்க்க, “சொல்றேன் இல்ல…”என்று அழுத்தி சொன்னவன், தன் கையை அவள் கையினுள் நுழைத்துக் கொள்ள,
பெண்ணவளும் ஒவ்வொரு முறையும் வலி அதிகமாகும் போது, அவன் கையில் அழுத்தத்தை கொடுக்க, அவள் வலியை அவன் உணர்ந்து கொண்ட தருணம் அது.
திருமணம் இனிதே முடிந்து விட, செவ்வந்தியிடம் பார்கவிக்கு உடம்பு சரியில்லை என்று அஸ்வந் கூற, செவ்வந்தியும் அவள் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்டு கொண்டவர்,
“சரிடா, பொண்ணு மாப்பிள்ளைய வாழ்ந்திட்டு நீங்க கிளம்புங்க.. நான் பிறகு வாரேன்…” என்றவர் அவர்களை அழைத்துக் கொண்டு மேடை ஏற,
அபர்ஜித்தின் ஆசானும், சீனியருமான ராஜாபதியின் மனைவி சிவகாமி செவ்வந்தியை பார்த்துவிட்டு “செவ்வந்தி எப்படி இருக்கீங்க?.. இப்போ அபர்ஜித்துக்கு ஓகேவா?…” என்று கேட்க
“நான் நல்லா இருக்கேன்.. ஆனா அபருக்கு என்ன?…”
“அட அவன் விஷயம் தான் எல்லாருக்கும் தெரியுமே.. இன்னும் எத்தன நாளைக்கு மறைக்க போறீங்க.. இப்போ இல்லாத டெக்னாலஜியா அதான் ஆஸ்திரேலியா போயிருக்கானே தன்னோட குறைய சரி பண்ணிட்டு வந்துடுவான் கவலைப்படாதீங்க…” என்று சொல்ல
“என்ன சொல்றீங்க? என்ன குறை அவனுக்கு…” என்று செவ்வந்தி புரியாமல் கேட்க
“இதென்னடா கூத்தா இருக்கு.. எதுவுமே தெரியாதது போல கேக்குறீங்க.. அவனுக்கு முடிவு பண்ணி இருந்த பொண்ண தம்பிக்கு கட்டி வச்சப்பவே புரியாதா..! பெரியவனுக்கு உடம்புல ஏதோ குறை இருக்க போகத்தானே சின்னவனுக்கு இந்த பொண்ண கட்டி வச்சீங்க..
…பொண்ணுக்கு பிரச்சனைன்னா வேற பொண்ணு இல்ல பார்த்திருப்பீங்க.. அவனோட தொழில்வட்டத்துல கதை பரவி, என் வீட்டுக்காரர் கூப்பிட்டு கேட்டாங்க.. சிரிச்சு மழுப்பிட்டான், வாய திறந்து எதுவும் சொல்லல, அப்போ மத்தவங்க பேசுறது உண்மைன்னு தானே அர்த்தம்…” என்று அவர் சொல்ல,
செவ்வந்தி, அஸ்வந்,பார்கவி மூவருக்குமே அதிர்ச்சி தான். இத்தனை நாட்கள் இது எதுவும் அவர்கள் காதிற்கு வரவில்லையே.
“ஏங்க அதெல்லாம் எதுவும் உண்மை இல்ல.. அவன் வேலை விஷயமாத்தான் ஆஸ்திரேலியா போய் இருக்கான்.. வந்ததும் அவனுக்கு கல்யாணம்தான்…” என்று செவ்வந்தி மறுத்து கூற
“அது சரி, வைத்தியம் பாத்துட்டு வந்தா கல்யாணம் பண்ணி வைக்கலாம் தான்.. அவனும் நல்ல பையன் தான்.. ஆனா நான் மட்டும் அவன் குறைய பத்தி பேசல.. உங்க நாத்தனார் கூட உங்க சொந்த பந்தத்துக்கிட்ட இப்பதான் இத பத்தி பேசினாங்க..
…எப்படி பாத்தாலும் உறவுக்காரங்க அறிஞ்சவங்க பக்கத்துல இருந்து பொண்ணு தர மாட்டாங்க.. வெளியூர்ல தான் அவனுக்கு பொண்ணு தேடணும்…” என்று பரிதாபப்படுவது போன்று நைஸ்சியமாக பேசி நஞ்சை கக்கி விட்டு செல்ல,
” என்னடா இது..உன் அத்தையுமா இந்த மாதிரி வதந்திய பரப்புறா…”என்று செவ்வந்தி கவலையாக அஸ்வந்திடம் கேட்க
“நடக்க இருந்த கல்யாணம் நின்னு போனா யாரா இருந்தாலும் இப்படித்தான் பேசுவாங்க.. ஏன் நீங்க கூட கவி வீட்டுல ஏன் மாப்பிள்ள மாறிடுச்சுன்னு கேட்டா மூத்தவனுக்கு ஏதாவது குறை அதான் சின்னவனுக்கு கட்டி வைக்கிறோம்னு சொல்லுங்கனு சொல்லல…” என்று கேட்க
“டேய் நான் அப்போ இருந்த கோவத்துல சொன்னது டா.. ஆனா இப்படி மத்தவங்க சொல்லி கேட்கும் போது தாங்க முடியலையே.. இதெல்லாம் அவனுக்கு தேவையான?.. அந்த சிறுக்கிக்காக அவன் மேல அவனே அழிக்க முடியாத கரைய எடுத்து பூசிக்கிட்டானே…”
“அந்த சிறுக்கியா யாரு..?”
“வேற யாரு.. அவன் பின்னாடியே வேதாளம் போல சீனியர் சீரியன்னு சுத்துறாளே அந்த அறிவில்லாதவளத்தான் சொல்றேன்…”
“எனக்கு என்னமோ அறிவா இருக்கும்னு தோனலம்மா…”
“சரி எவளா இருந்தா என்ன.. இப்போ இவன் பேரு இல்ல நாசமா போச்சு…” என்று செவ்வந்தி ஆதங்கப்பட
“இது எதையுமே அவன் யோசிச்சு இருக்க மாட்டான்னு நினைக்கிறிங்களா.. கல்யாணத்த நிறுத்துனா இப்படி பல வதந்தியும் கேள்வியும் வரும்னு தெரியும்.. தெரிஞ்சும் அந்த முடிவ எடுத்து இருக்கான்னா அந்த பொண்ண அவன் அந்த அளவுக்கு உறுதியா காதலிக்கிறான்னு அர்த்தம்…”
“நமக்கே இப்படி இருக்கே அவன் கிட்ட எத்தன பேர் நேரடியா கேட்டிருப்பாங்க அவன் எதையுமே காட்டிக்கவே இல்லையே…” என்று செவ்வந்தி கவலைப்பட
“இதுதான் நடக்கும்னு தெரிஞ்சதால எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு இருந்திருப்பார்…” என்று பார்கவி சொல்ல
அவளை வைத்துக்கொண்டு அபர்ஜித்தை பற்றி பேசிய மடத்தனத்திற்காக தாயும், மகனும் மனதுக்குள் கொட்டிக் கொண்டனர்.
“சரி அவன் செஞ்ச தப்புக்கு அனுபவிக்கிறான்..நீங்க வாங்க…”என்று செவ்வந்தி இருவரையும் அழைத்துக் கொண்டு மேடை ஏறி, மணமக்களை வாழ்த்தி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
*****
அதன் பின் இரண்டு நாட்கள் கடந்து இருக்கும்.
கேண்டீனின் பின்புறம் வழக்கம் போன்று நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அஸ்வந்தின் அலுவலகம் வழியாக அவனை தேடிக் கொண்டு வந்தனர் ஐந்து ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பல்.
பார்க்கும்போதே தெரிந்தது பிரச்சனை செய்யத்தான் வந்திருக்கின்றார்கள் என்று. “யார்டா இங்க இன்ஜினியர் அஸ்வந்…” என்று அதில் ஒருவன் சத்தமாக கேட்க
அவர்களின் பின் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்த ஒருவன் “அதோ, அவன்தான்…” என்று அஸ்வந்தை கைகாட்ட,
இவர்கள் சத்தத்தில் திரும்பி பார்த்த அஸ்வந் புருவம் சுருக்கி அவர்களை பார்த்து, எழுந்து நிற்க.
பெண்கள் மூவரும் கலவரமாக வந்திருந்தவர்களையும் அஸ்வந்தையும் மாறி மாறி பார்த்தனர்.
“யார் நீங்க? எதுக்கு இங்க வர வாரீங்க…”என்று அஸ்வந் கோவமாக கேட்க,
அஸ்வந்தின் அலுவலக செக்யூரிட்டி உடைக்கலைந்து, முகத்தில் வீக்கத்துடன் ஓடி வந்தவர் “சார் நான் எவ்வளவு தடுத்தும் இவங்க கேட்கல…” என்று சொல்ல
அவரைப் பார்த்ததும் தெரிந்தது அடித்திருக்கின்றார்கள் என்று. “யார்டா நீங்க? எதுக்கு இவர அடிச்சீங்க?.. என்ன பிரச்சனை உங்களுக்கு…” என்று அஸ்வந் கோவமாக கேட்க
“உனக்கு என்னடா பிரச்சனை.. நீ இப்போ கட்டிட்டு இருக்குற ஹோட்டலோட இடம் இவருக்கு சொந்தமானது.. வேலைய நிறுத்த சொன்னா நிறுத்த மாட்டேன் என்கிறியாம்..இங்க பாரு உசுரு மேல ஆசை இருந்தா அந்த வேலைய கைவிட்டுட்டு வேற வேலைய பாரு…” என்று அதில் ஒருவன் மிரட்ட
அஸ்வந்துக்கு அவர்கள் யாரென்று புரிந்து விட்டது. அவன் கட்டிக் கொண்டிருக்கும் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருக்கும், அவர் தம்பிக்கும் இடையில் இருக்கும் பகையினால், நிலம் தனக்கு சொந்தம் என்று கோட்டில் கேஸ் போட, அதை வாதாடி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது அபர்ஜித் தான்.
தீர்ப்பான பின்னரும் அங்கு வேலை செய்யக்கூடாது என்று பலமுறை பிரச்சனை செய்து விட்டனர். ஆனால் நேரடியாக ஆட்கள் வைத்து மிரட்டுவது இதுதான் முதல் முறை.
“இங்க பாருங்க இடத்தோடு ஓனருக்கும் உங்களுக்கும் பிரச்சனைனா அவரோட பேசி நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.. எனக்கு ப்ராஜெக்ட் தந்தவர் நிறுத்த சொல்லாம நான் வேலைய நிறுத்த மாட்டேன்…” என்று சொல்ல
“அடிங்க, இவ்ளோ தூரம் சொல்றேன் நீ சட்டம் ரூல்ஸ்னு பேசுற…”என்று அஸ்வந்தின் சட்டை பிடித்து அடிக்க கையை ஓங்க,
அவன் கையை தடுத்து பிடித்தவன் மாறி அவன் முகத்திலேயே ஒரு குத்து விட, அந்த ரவுடி தள்ளி போய் விழுந்தான்.
அஸ்வந் தாக்க ஆரம்பித்ததும், மற்ற ரவுடிகளும் ஒட்டுமொத்தமாக தாக்க, தமையனுடன் போட்டிக்கு செய்த உடற்பயிற்சி,விளையாட்டாக போட்ட ரெஸ்லிங் சண்டை என இரண்டின் புண்ணியத்தால் ஒரு அளவு அவர்களை சமாளிக்க முடிந்தது அஸ்வந்தால்.
பார்கவியோ நெஞ்சில் கையை வைத்து, திகைத்து விரிந்த விழிகளுடன், உயிர் எகிறி குதித்து தொண்டையில் வந்து துடிக்க, உறைந்து போய் நின்று இருந்தாள்.
கண்மணி, மாளவிகா இருவருமே அதிர்ச்சியும் பயமுமாக நின்றிருந்தனர்.
ரவுடிகள் அனைவரும் சேர்ந்து அஸ்வந்தை அழுத்தி பிடிக்க, நிலைமை விபரீதமாக, செக்யூரிட்டி ஓடிச் சென்று விலக்க முயற்சிக்க,
பார்கவியும் உயிர் துடிக்க ஓடி சென்று அவர்களை பிரித்து இழுத்து விலக்க முயன்றாள்.
அவர்களோ பார்கவியையும் செக்யூரிட்டியையும் பிடித்து பலமாக தள்ள, ஆளுக்கொரு திசையில் கொண்டு விழுந்தனர்.
பார்கவி விழுந்ததை பார்த்த அஸ்வந் “கவி!” என்று பதறியவாறு, முடிந்த மட்டும் பலம் கொண்டு ரவுடிகளை பிடித்து தள்ள, ஒன்று இரண்டு பேர் தடுமாறி விழுந்தனர்.
இரண்டு பேர் அவனை பலமாக பிடித்து இருக்க, விழுந்ததில் ஒருவன் அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு அஸ்வந்தை தாக்க முயல,
அதைக் கண்ட பார்கவி “அஸ்வந்!” என்று கத்தி, கண்களை இருக்க மூடிய சிறிது நொடிகளில், “அம்மாஆஆ..?!” என்ற கண்மணியின் கதறல் தான் கேட்டது.
அவள் சத்தத்தில் கண்விழித்துப் பார்த்த பார்கவி கண்டது, தலையில் குருதி வழிய, சுருண்டு விழுந்த கண்மணியை தான்.
ஆம் அஸ்வந்தை தாக்க விடாமல், அந்த கம்பியை பிடித்து அவள் தடுக்க, அந்த ரவுடியும் அவளிடம் இருந்து கம்பியை விடுவிக்க முயன்றவன், அவள் பிடி உறுதியாக இருக்க, முழு பலத்தை பிரயோகித்து கம்பியை விடுவித்தவன், அந்த கம்பியால் அவள் தலையில் ஓங்கி அடித்திருந்தான்.
அஸ்வந், மாளவிகா உட்பட அனைவரும் அதிர்ச்சியில் விழி விரித்து நின்று இருக்க, “ஏய்!” என்று பதட்டமாக அவ்விடம் வந்து சேர்ந்தாள் அறிவழகி.
அவளுடன் காவல் அதிகாரிகளும் இருந்தனர். அறிவுக்கு விடயம் தெரிந்து, அவள் இங்கு வந்து சேரும் முன் நிலைமை கை மீறி போயிருந்தது.
போலீசார் ரவுடிகளை கொத்தாக அள்ளிக் கொண்டு போக, கண்மணியை அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தனர் மாற்றவர்கள்.

