Loading

அத்தியாயம்-32

 

அசரீரி கூறியதை ஜீரணிக்கவே அனைவருக்கும் சில நிமிடங்கள் பிடிக்க, 

 

சட்டென இளா புறம் திரும்பிய மதி, “இந்தாம்மா இளா.. நீதான நேத்து அட்வென்சர் பண்ண போகனும் புதையல் கண்டுபிடிக்கனும்னு சொன்னது?” என்று கேட்டான்.

 

“ஏ அண்ணா.. நான் சும்மா விளையாட்டா தானே சொன்னேன்?” என்று இளா பதற, 

 

“விளையாட்டு வினையாகிடுச்சு போலயே” என்று ப்ரியா கூறினாள்.

 

“சரி கேளுங்க.. புதையல் கண்டுபிடிக்குறதுக்கு உங்களுக்கு சில க்ளூஸ் கிடைக்கும். இப்ப உங்க கைக்கு ஒரு தடயம் வந்தா அது அடுத்த தடயம் எங்க இருக்கு அப்படிங்குறதுக்கான துப்பு அதுல இருக்கும். எல்லா துப்பையும் ஒழுங்கா கண்டுபிடிச்சா புதையல் எங்க இருக்குனு கண்டுபிடிச்சுடலாம். இதுல உங்க எல்லாருக்கும் ஒரு எக்ஸ்ட்ரா பவரும், ஒரு லாஸ் ஆஃப் பவரும் இருக்கும்” என்று அசரீரி கூற, 

 

“அய்யயோ.. அப்ப எனக்குக் காது கேக்காதது தான் லாஸ் ஆஃப் பவரா?” என்று ஜான் அலறினாள்.

 

“அறிவாளி பொண்ணு..” என்ற அசரீரி, “ஜான்விகாவுக்கான சக்தி கண் பார்வை தான். எவ்வளவு தூரத்துல இருக்குறதையும் சுலபா பார்க்க முடியும், ஆனா காது கேட்காது. 

 

மதிமகிழனுக்கு விலங்குகளோட பாஷை புரியும், பதில் பேச முடியும். ஆனா தண்ணீல கண்டம். 

 

அகநகை செல்விக்கு புத்தி கூர்மை அதிகமா செயல்படும், ஆனா பேச முடியாது. 

 

அகர்ணனுக்கு மோப்ப சக்தி அதிகம், ஆனா எழுத்து வடிவங்கள் எல்லாமே மறந்து போயிடும். அதாவது வாசிக்கவோ எழுதவோ வராது. 

 

விஷ்வேஷ்வரனுக்கான பலம் பலவீனம் ரெண்டுமே காது கூர்மையா கேட்பது தான். 

 

அதேபோல அமிர்தப்ரியாவோட பலம்‌ பலவீனம் ரெண்டும், அவ என்ன சொன்னாலும் அது நடக்கும். 

 

ஆனா அதை இந்தத் தேடலோட ரூல்ஸுக்கு எதிரா பயன்படுத்த முடியாது. 

 

துருவன் மற்றும் இளநகைக்கு எந்தப் பலமும் கிடையாது, பலவீனமும் கிடையாது.. ஆனா இங்க இந்தப் புதையல் வேட்டைல செயல்முறை எல்லாமே அவங்க தான் செய்யனும்” என்று அசரீரி கூறியது.

 

“உங்க எல்லாரையும் இந்த மாயாஜால உலகத்துக்கு வரவேற்கிறேன்.. முதல் க்ளூ இந்தக் காட்டுல நீங்க சந்திக்கும் முதல் ஜீவன். உங்க ஆசைப்படி விளையாடுங்க.. ஆல் தி பெஸ்ட். இன்னும் பத்து நிமிஷத்துல உங்க பலம் பலவீனம் உங்களுக்கு வந்துடும் அதுக்குள்ள ஏதாவது பேசனும்னா பேசிக்கோங்க” என்றுவிட்டு அசரீரி மறைய, யாவரும் பேயறைந்ததைப் போலிருந்தனர்.

 

“இதென்னடா நம்ம வாழ்க்கைல அடிக்கடி மேஜிக் வேலை காட்டுது” என்று அகா கூற, 

 

“அடிக்கடியா?” என்று அகர்ணன் கேட்டான்.

 

தற்போது அகர்ணன், ப்ரியா மற்றும் இளநகை மட்டுமே அனைவரையும் புரியாமல் பார்க்க, “அடேய் சீக்கிரம் சொல்லி முடிங்கடா.. எனக்குக் காது கேட்காம போயிடும்.. எதும் முக்கியமா பேசுறதுனா பேசிடுங்க” என்று ஜான் அவசரப்படுத்தினாள்.

 

ஒரு பெருமூச்சு விட்ட அகா தங்களின் முதல் மாயாஜால வரலாற்றைக் கூற, மதி அந்த இரண்டாம் மாய நிகழ்வைக் கூறினான்.

 

“என்னடா என்னென்னமோ சொல்றீங்க? ஏ அவி.. கோவில்ல பார்த்து லவ் பண்ணேன்னு தானடி சொன்ன?” என்று அகர் ஆச்சரியமாய் வினவ, 

 

“ஆமா.. அங்க நான் உங்களை ஃபர்ஸ்ட் கோவில்ல தான் மீட் பண்ணேன்” என்றவள் “காலம் வேறையா இருந்தாலும் என் காதல் உண்மை தான்” என்றாள்.

 

அவ்வரியை கூறும்போது அவள் கண்கள் லேசாகக் கலங்கிவிட, அதில் சிரித்தபடி அவளிடம் வந்தவன், “நீ பொய்யா காதலிச்சனு நான் சொல்லவே இல்லையே?” என்றபடி அவளை அணைக்க, “பதற வைக்குறீங்க அகர்” என்று தானும் அணைத்துக் கொண்டு கலங்கிய விழிகளை அவன் சட்டையில் துடைத்தாள்.

 

அவளை இலகுவாக இறுக அணைத்தவனுக்கு அப்போதே அந்த வித்தியாசம் தென்பட்டது. 

 

“ஏ புள்ளைய எங்கடி?” என்று அவன் கூற, ஒட்டிய தன் வயிற்றைக் கண்டு அரண்டு போனாள்‌.

 

“அய்யோ சாரி கைஸ் சொல்ல மறந்துட்டேன்” என்று மீண்டும் ஜதக்கென்று குதித்த அசரீரீயை அனைவரும் அரண்டு போய் மேலே பார்த்தனர்.

 

“காட்டுல நிறையா இடையூறுகள்.. குதிக்குறது தாவுறதுனு ப்ராஸஸ் அதிகமா இருக்கும். அதனால தான் பேபிய எடுத்துட்டேன். போட்டி முடிஞ்சு போகும்போது திரும்ப வயித்துக்குள்ள வச்சு குடுத்துடுவேன்” என்று அந்த அசரீரீ கூற, 

 

“அடிங்கு.. அதென்ன சந்தைல வாங்கின அரிசி மூட்டையாடா?” என்று இளநகை கத்தினாள்.

 

அதையெல்லாம் காதில் வாங்காத மானங்கெட்ட அசரீரீ மறைந்து போக, “அப்ப மதியண்ணா செத்துபோனதும் மேஜிக் தானா?” என்று ப்ரியா கேட்டாள்.

 

“அட அதெல்லாம் பெரிய கூத்துமா.. கொஞ்ச நாள் பேயா இருந்ததே அவ்வளவு கஷ்டமா இருந்தது.. இந்தப் பேயெல்லாம் எப்படித்தான் பேய் வேசம் போடுதோ” என்று அவன் கூற, 

 

அவன் விலாவிலேயே குத்திய ஜான், “அதெல்லாம் ஒரிஜினல் பேய்.. நீ அப்ப பார்ட் டைம் பேய்” என்றாள்.

 

“சரி சரி.. கன்பியூஷன் எல்லாம் முடிஞ்சுதா?” என்று துருவன் கேட்க, 

 

“எனக்கும் உங்களுக்கும் மட்டும் ஏன் எதுவும் குடுக்கலை?” என்று இளநகை கேட்டாள்.

 

“இதுவொரு நல்ல கேள்வி” என்று விஷ்வேஷ் கூற, 

 

“தெரியலை.. ஆனா நம்மதான் எல்லாம் செய்யனும்.. ஐ மீன்.. இப்ப க்ளூ கிடைச்சு அடுத்த க்ளூ எங்க இருக்குனு நாம தான் எடுக்கனும்” என்று துருவன் கூறினான்.

 

அவன் மனதில் நேற்று இளா சிறுவயது விளையாட்டுப் பற்றிக் கூறும்போது அவளோடு தானும் சென்று தேடுவதைப் போன்றும் இடையிடையே காதல் சில்மிஷம் புரிவது போன்றும் அவன் நினைத்துப் பார்த்தது வந்துபோனது.

 

“நேத்து கார்ட்ஸ் விளையாடிட்டு வந்தபிறகு கையெல்லாம் ஏதோ ஜிகினாவா இருந்ததுல? ஒருவேளை அதுல தான் ஏதும் மேஜிக் இருக்குமோ?” என்று ப்ரியா கேட்க, தோழர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

ஆம்! ஒவ்வொரு முறையும் அந்த மாய சீட்டுகளைக் கொண்டு விளையாடியபோது அவர்கள் பேசியதுதான் மாயமாக நிகழ்ந்தன. எனில் அதுதான் இந்த மாயத்தின் காரணமா? என்று நினைத்த நால்வரும், “ஏ அந்தக் கார்ட்ஸ் நம்ம காலேஜ் படிக்கும்போது ட்ரிப்பா ஏற்காடு போனப்ப அந்த மேஜிக் பண்ண தாத்தா கிட்ட தானே வாங்கினோம்?” என்று ஒன்றுபோலக் கூறினர்.

 

பெரிய ஒளி ஒன்று தோன்றி மறைய, அனைவரது உடைகளும் அந்தக் காட்டுப் பகுதியில் நடப்பதற்கு ஏற்றார் போல் ‘ட்ராக் அன்ட் டீ-ஷர்ட்’-ஆக மாறியது.

 

மீண்டும் அவரவருக்கான பலமும் பலவீனமும் வந்தது!

 

துருவனும் இளநகையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “இப்ப என்ன பண்றது?” என்று இளநகை வினவ, 

 

“டேய்.. எனக்கு மறுபடியும் காது கேட்கலைடா.. சைகைல பேசுங்க” என்று ஜான் கத்தினாள்.

 

தன் காதுகளைப் பொத்திக் கொண்டு “ஆ..” என்று கத்திய விஷ்வேஷ், 

 

“அவன் பலம் பலவீனம் ரெண்டுமே காது கேட்குறதுனு சொன்னப்ப எதுக்கு நல்லா காது கேட்குறத பலவீனம்னு சொல்றான்னு யோசிச்சேன்டா.. பிரைட்னெஸ் மண்டையன் இவ ரூபத்துல என் காது ஜவ்வ கிழிக்க பிளான் பண்ணிட்டான்” என்று கதறலாய் கூற, 

 

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க” என்று துருவன் கூறினான்.

 

ஜான்விகாவைப் பார்த்து “உனக்குக் காது கேட்காது ஆனா கண்ணு நல்லா தெரியுமா?” என்று சைகை செய்து துருவன் கேட்க, 

 

“ஆ..” என்று கத்தப் போனவள் வாயைக் கப்பென்று மூடிய மதி, “மெல்ல பேசு” என்று சைகை செய்தான்.

 

அவளும் ஆமென்று தலையசைக்க, “அகா உனக்கு வாய் பேச முடியாது. உன்னோட ப்ளஸ் என்ன?” என்று இளா கேட்க, 

 

தன் நெற்றியை தட்டி காட்டினாள். 

 

“புத்தி கூர்மை” என்று துருவன் கூற, 

 

“ஒரு நோட் வேணும். நாம தான் கைட் பண்ணனும். அதனால நமக்கு இதெல்லாம் குறிச்சுக்க நோட் வேணும்” என்று இளா கூறினாள்.

 

“இந்தக் காட்டுல நோட்டுக்கு நான் எங்கம்மா போக?” என்ற துருவன் சட்டென நினைவு வந்தவனாய் ப்ரியாவைப் பார்த்தான்.

 

முதலில் அவன் பார்வைக்கான அர்த்தம் புரியாதவள் விழிக்க, “ஏ அமி.. நீ என்ன சொன்னாலும் நடக்கும்டி” என்று விஷ் உற்சாகமாய் கூறினான்.

 

“அட.. ஆமால்ல” என்றவள், “இப்ப என்ன நோட் வேணுமா?” என்க, 

 

இளநகை வேகமாகத் தலையசைத்து, “ஒரு பேனாவும் வேணும்” என்றாள்.

 

“இப்ப இங்க ஒரு நோட் அன்ட் பென் வரனும்” என்று அவள் கூற, அனைவரும் வானத்தை அண்ணார்ந்து பார்த்தனர். 

 

‘எதுக்கு பாக்குறானுங்கனு வேற தெரில..‌ சரி நாமளும் பாப்போம்’ என்று எண்ணிக் கொண்ட ஜான்விகாவும் மேலே நோக்க, இளநகை, தோளை யாரோ சுரண்டுவது போலுணர்ந்து திரும்பினாள்.

 

திரும்பியவள் “ஆ..” என்ற கதறலுடன் துருவன் புஜங்களைப் பற்றிக் கொண்டு ஒன்றிவிட, 

 

“அய்யோ பெருமாளே..” என்று விஷ்வேஷ் தன் காதை மூடிக் கொண்டான்.

 

தன்னோடு வந்து பாவை ஒன்றி நின்றதில் திடுக்கிட்டுப் போனவன், தன் தோள்வரை உயரம் கொண்டவளின் கார்குழல் மறைத்த முகத்தைக் காதலோடு கண்டுவிட்டு திரும்ப, “அம்மே.. பேயி” என்று அரண்டு தானும் கத்தினான்.

 

“அய்யோ..‌ அமி.. உன் புருஷன சாவடிக்க பாக்குறானுங்கடி..” என்று காதுகளைப் பொத்திக் கொண்டு குப்புற விழுந்து விஷ்வேஷ் கதறினான்.

 

அவர்கள் கதறியதன் முழுக் காரணியாகக் கருப்பு நிறத்தில் ஏழடிக்கு ஒரு கரடி கையில் புத்தகம் மற்றும் பேனாவுடன் நின்றிருந்தது.

 

“பாருடா.. டெடி பேர் டெடி பேர் டர்ட் அரௌன்ட்” என்று மதி உற்சாகமாய் கூற, அந்தக் கரடி சட்டென மதியை நிமிர்ந்து பார்த்தது.

 

அதில் பாடிக் கொண்டிருந்த மதி சட்டென மௌனமாக, கையிலிருந்தவற்றை கீழே போட்ட கரடி அவனை நோக்கி ஓடியது.

 

“அம்மா நானில்ல..” என்று கத்திய மதி தெரித்து ஓட, கரடி அவனைத் துரத்தி ஓடியது.

 

“அய்யோ அம்மா.. ஏய் ஜானு.. காப்பாத்துடி.. அய்யோ டேய்.. எவனாவது காப்பாத்துங்கடா..” என்று ஒரு மரத்தை அவன் சுத்தி சுத்தி ஓட, 

 

“ஒருவேலை அந்தக் கரடி அவன லவ் பண்ணுதோ?” என்று அகர் ஜானைப் பார்த்துக் கேட்டான்.

 

அவளோ அவன் கூறுவது கேட்காமல், “ஆங்?” என்க, 

 

“சாரிமா.. உனக்கு ஸ்பீக்கர் போச்சுனு மறந்துடுச்சு..” என்றுவிட்டு அகாவைப் பார்த்துக் கூற, அவளும் அவனை அமைதியாய் பார்த்தாள்.

 

“அய்யோ.. உனக்கு மைக் போச்சோ?” என்றவன் விஷ்வேஷ் புறம் திரும்ப, கைநீட்டி தடுத்தவன் “கேட்ருச்சு” என்று அகர்ணனை நிறுத்தினான்.

 

சட்டென “ஹே..” என்று உற்சாகமாய் இளா குதிக்க, 

 

“ஆ.. ஏன் தாயி சாவடிக்குற?” என்று விஷ் காதைப் பொத்தினான்.

 

“சாரி விஷ் காதைக் கொஞ்சம் பொத்திக்கோ” என்றவள், “மதிண்ணா.. உங்களோட பவரே விலங்குகளோட பாஷை உங்களுக்குப் புரியுங்குறது தான். அந்தக் கரடி உங்களை எதும் பண்ணாது” என்று கத்த, 

 

“அட ஆமாம்ல?” என்று சடன் பிரேக் அடித்து நிறுத்தியவனை வந்து இறுக கட்டிக் கொண்டது அந்தக் கரடி.

 

“ஆ.. ஏ.. என் எலும்பு..” என்று அதன் இறுக்கத்தில் தவித்தவன் மெல்ல கரடியைத் தடவிக் கொடுக்க, அதுவும் தன் பிடியை இலகுவாக்கியது.

 

‘ஜான்- காது கேட்காது, கண்ணு நல்லா தெரியும்

மதி அண்ணா- தண்ணில கண்டம், விலங்குகள் பாஷை தெரியும்

அகா- வாய் பேச முடியாது, அறிவு ஜாஸ்தி

அகர் மாமா- மோப்ப சக்தி அதிகம், எழுதப் படிக்கத் தெரியாது

விஷ்- காது நல்லா கேட்கும்

ப்ரியா-சொன்னது அப்படியே நடக்கும்’

 

என்று அனைத்தையும் குறித்துக் கொண்டவள் துருவனைப் பார்த்து, “இப்ப நாம முதல் க்ளூவ எங்க தேடனும்?” என்று வினவ, அவனும் சற்றே யோசித்து விடை கிடைத்தவனாய் முகம் பிரகாசிக்க நிமிர்ந்தான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்