
அத்தியாயம் -30
அனைவரும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றிட, விரிந்த விழிகள் விரிந்தபடியே நிலைகுத்தி நின்றன.
“மகி சாகலை. அவன் அன்கான்ஷியஸா இருந்திருக்கான். அவனோட ஆர்கன் எடுக்க உடம்ப வாங்கிட்டுப் போன ஆஸ்பிடல்ல உள்ள டாக்டர் தான் அதை நோட் பண்ணி அவனுக்கான ட்ரீட்மென்ட் கொடுத்தார். அவன் உண்மைலயே பொழைப்பானானு தெரியாம வீண் நம்பிக்கை கொடுத்து மறுபடி சோதிக்க வேணாம்னு தான் நமக்கு வேற பிணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டிருக்காங்க” என்று வீட்டிற்கு வருவதற்குள் அவள் தீட்டியிருந்த கதையை மனப்பாடம் செய்ததைப் போல் ஒப்பித்து முடித்தாள்.
அப்போதும் அதிர்ச்சி விலகாத பாவனையில் அனைவரும் விழிக்க,
பொத்தென்ற ஏதோ விழும் சத்தம் கேட்டது.
‘ஆத்தி நைனா..’ என்று திரும்பிய ஜான் சோபாவில் விழுந்துகிடக்கும் அமிர்தப்ரியாவைப் பார்த்து, “ஏ ப்ரியா” என்க,
மனைவியைத் திரும்பிப் பார்த்தவன், “ஏ அமி..” என்று அவளை உலுக்கினான்.
அதில் அனைவரும் நிலைக்குத் திரும்ப, சென்று தண்ணீர் எடுத்து வந்த இளா, ப்ரியாவின் முகத்தில் தெளித்தாள்.
தலையைத் தாங்கியபடி விழித்தவளுக்கு தலை கிறுகிறுக்க, சந்தேகமாய் அவள் முகம் பார்த்த இளா அவள் நாடி பிடித்துப் பார்த்து,
“ஏ.. குட்டி” என்று கத்தினாள்.
அதில் விஷ் அவளைப் புரியாமல் பார்க்க,
“விஷ்.. டாடியாகப் போறீங்க” என்றதும், அகல விழி விரித்தபடி மனையாளைப் பார்க்க அவளும் அதே அதிர்ச்சியோடு தான் கணவனைப் பார்த்தாள்.
“போடு.. டபுள் சந்தோஷமா இருக்கு” என்று துருவனின் அண்ணி கீர்த்தி குதூகலிக்க,
சில நிமிடங்களில் மதி மீண்டுவிட்டான் என்ற செய்தியைக் கிரகித்துக் கொண்டனர்.
“திடீர்னு எப்படி அன்கான்ஷியஸ்?” என்று அந்த அதிபுத்திசாலித்தனமான கேள்வியை ஜகன் கேட்டுவிட,
‘ரொம்ப முக்கியமா நைனா’ என்று ஜான் எண்ணிக் கொண்டாள்.
“தெரியலை மாமா” என்று மதி கூற,
“அந்த டாக்டர நான் பார்க்கணும்பா. இல்லைனு நினைச்ச என் புள்ளைய எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கார். நிச்சயம் அவருக்கு நன்றி சொல்லணும்” என்று மாதவி கூறினார்.
“ஆமாப்பா.. அன்னிக்கு கொடுத்த உடம்போட முகத்தை ஏன் அந்த நர்ஸு பொண்ணு மூடிக் கொடுத்துச்சுனு இப்பதான் புரியுது” என்று பாலாஜி கூற,
அகாவுக்கு புரையேறியது. விடயம் தெரிந்த தோழர்கள் முகத்தில் குறும்பாய் சின்ன சிரிப்பு.
“அய்யோ மாமா.. அவரு வெளிநாடு போயிட்டாரு. நானே உங்களுக்கும் சேர்த்து அவருக்குக் கோடான கோடி நன்றி சொல்லிட்டேன்” என்று ஜான் கூற,
“அ..ஆமாம் ப்பா” என்று மதி அவளுக்கு ஒத்து ஊதினான்.
இன்பத்தினும் இன்பமாய் பொழுது ஓடிட மகிழ்வோடு யாவரும் அவரவர் வீடு திரும்ப, தங்கள் அறைக்கு வந்தவுடன் மனையாளை கட்டியணைத்து முத்தம் பதித்தான் விஷ்வேஷ்.
“நான் செம்ம ஹேப்பிடி அத்தை பொண்ணே” என்று அவன் கூற,
“நா.. நானும். இன்னிக்கு வரிசையா எதிர்ப்பார்க்காததா இருக்கு” என்றாள்.
“ம்ம்..” என்றவன், மனையாள் மணிவயிற்றை வருடி, “குட்டி அமி இஸ் ஆன் தி வே” என்று கூற,
நாணச்சிரிப்போடு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
மறுநாளே ‘குடும்ப சொத்து பிரச்சினையில் மருமகனை கொலை செய்த மாமன்’ என்று செய்தி வெளியாகி இருந்தது. தனது மகள் காதல் விடயம் தெரிந்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகளின் காதல் விவகாரத்தைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. பிரபாவின் அழுத்தம் அவர் அறிந்ததாயிற்றே! மகளை வைத்து மொத்த சொத்தையும் கரக்க நினைத்தவருக்கு தற்போது வேந்தன் தடையாக அமையவும் அவனுக்கு விஷம் கொடுத்து அவனே அறியாது அவனை இப்புவி விட்டு அனுப்பியிருந்தார்.
அவனது குரலைப் போலவே ‘AI’ மூலம் பேச வைத்துத் தானாக ஒரு தற்கொலை வாக்குமூலம்போல் உருவாக்கிவிட்டிருந்தார். யாருமில்லா நேரம் பார்த்து இவற்றைச் செய்திருந்தவர், யாரோ வரும் அரவம் கேட்டுச் சட்டென அவனைத் தூக்கிலிட்டது போல் செய்துவிட்டு ஓடியிருந்தார்.
அவர் எதிர்பாராத ஒன்று அவனது உடற்கூற் ஆய்வுதான். அதில் விஷம் கொடுக்கப்பட்டது தெரிந்துவிடும் என்பதால் வேறு வழியின்றி அவனது பிணத்தைக் கடத்தியிருந்தவர் சந்தேகம் வாராது இருக்க வேண்டி மதியின் பிணத்தையும் கடத்தியிருந்தார். ஆனால் அவரது மொத்த செயலையும் மதி தவிடுபொடியாக்கியிருக்க, இதோ அவர் சிறைச்சாலையில்!
தொடர்ந்து ஒருவார காலம் அமைதியாய் கழிய, அந்த ஞாயிறு அகநகை வீட்டில் தான் அனைவரும் இருந்தனர்.
மனதில் புயல் அடிப்பதை முகம் காட்டிவிடாது தடுக்க, அவள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்க, நீள்விருக்கையில் வரைசையாக மதி, ஜான், விஷ், ப்ரியா மற்றும் அவர்களுக்கு எதிர் நீள்விருக்கையில் அன்புக்கரசி, தமிழ்வேந்தன் துரு மற்றும் இளா அமர்ந்திருந்தனர்.
அனைவர் பார்வையும் அவள்மீது தான்.
பெற்றோரின் பார்வை எதிர்பார்ப்போடும் மற்றவர்களின் பார்வை பரிதாபத்தோடும் அவளை நோக்க, கையில் பிடித்திருக்கும் யாரோ ஒருவனின் புகைப்படம் தான் அதிக அழுத்தம் பெற்று கசங்கியது.
இதோ அதோ என்று அவள் கண்களில் நீர் தேங்கிவிட, அதை அழுந்த மூடியவள், “வெ..வேணாம் ப்பா” என்றாள்.
“ஏன் வேண்டாம்? மாப்பிள்ளை பிடிக்கலையா?” என்று அன்புக்கரசி கேள்விகளை அடுக்க,
“எ..எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை” என்றவளது கூற்றில் ‘இந்த’ என்ற வார்த்தையில் மட்டும் அழுத்தம் கூடியது.
“ஏன்?” என்று தமிழ் வினவ,
“நா..நான்..” என்று தவித்தவள்,
“நான் சொல்லவா?” என்ற அவளவன் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
தன் தாய் ஆதிரை மற்றும் தந்தை அகிரவனோடு வந்திருந்த அகர்ணனைப் பார்த்து அனைவரும் எழ, தானே வந்து பெற்றோரோடு அமர்ந்துகொண்டான்.
மகளின் கலங்கிய முகமும் அவளுக்கு ஆறுதல் கூறும் பார்வையோடு இருக்கும் அகர்ணனின் முகமுமே பெற்றோருக்கு விடயத்தைக் கூறிவிட, ஏதோ சீரியல் பார்ப்பது போல் தோழமைக்கூட்டம் நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தது.
பேச்சைத் துவங்கிய அகிரவன், “என் பேரு (பெயர்) அகிரவன் சார். நானும் என் வைஃப் ஆதிராவும் காலேஜ்ல ப்ரொபசரா வேலை பார்க்குறோம். இது என் ஒரே பையன் அகர்ணன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். உங்க பொண்ணு வேலை பார்க்கும் கம்பெனி சி.ஈ.ஓவோட பி.ஏ.
ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க. என் புள்ளை விரும்புறது எனக்குத் தெரியும். தெரிஞ்சதுமே பொண்ணு கேட்க வர்றதா தான் இருந்தேன். ஆனா அவன் தான் அப்ப வேணாம்னு சொல்லிட்டான்.
ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க பொண்ணப் பெத்தவங்க. ஒரு பொண்ணை கட்டிக் கொடுக்கும் இடம் எப்படிபட்டதா இருக்கணும்னு ஒவ்வொரு தகப்பனுக்கும் ஒரு கனவு இருக்கும். அதைக் குலைக்குற விதமா நான் இருந்திடக் கூடாதுப்பானு தன்னோட நிலையை உயர்த்திக்கிட்டு உங்ககிட்ட பெண் கேட்க போகலாம்னு சொன்னான்.
இப்பவும் உங்க அளவு வசதியில்லை நாங்க. ஆனா சொந்த வீடும் காரும் இருக்கு. முக்கியமா எதுவும் என் சொத்தில்லை. உங்க பொண்ணுக்காக என் பிள்ளை சம்பாதிச்சு போட்டு வாங்கினது” என்க,
அதற்குமேல் தாங்காது அழுகையோடு அகா உள்ளே சென்றுவிட்டாள்.
விஷ்வேஷை நிமிர்ந்து பார்த்த அகர், உள்ளே செல்லக் கண்காட்ட, இளையவர்கள் யாவரும் அவள் அறைக்குச் சென்றனர்.
“ஏ லூசு எதுக்கு இப்ப அழற?” என்று ஜான் வினவ,
“அவளுக்காக அவர் அவ்வளவு செஞ்சிருக்காரு. இவளால காதலைக்கூட தைரியமா சொல்ல முடியலைனு அழறா” என்று அவளைக் கண்டவுடன் நிலை புரிந்தவனாக விஷ் கூறினான்.
“அக்கா.. நீங்க ஏன் இப்படிலாம் நினைக்குறீங்க? சீனியர் உங்கள தப்பாவே நினைக்கமாட்டாரு” என்று அமிர்தா கூற, அவளிடம் பதிலேதுமில்லை.
இங்கு பெற்றோர் இருவரும் ஆடித்தான் போயினர். தன் மகளுக்காக ஒருவன் இத்தனை தூரம் செய்துள்ளானா என்று பிரம்மிப்பும் ஆச்சரியமும் கொண்ட இருவருக்கும் அந்தச் சூழலில் அடுத்த என்ன பேசவென்றே தெரியவில்லை.
“என் பையன் கண்டிப்பா உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பான். நம்பி அனுப்பி வைங்க” என்று ஆதிரா கூற,
பெற்றோரைப் பார்த்துப் புன்னகைத்தவன், “மாமா.. அவின்னா எனக்கு உயிரு. நான் அவளுக்கு உயிருக்கும் மேல. சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் முடிவு உங்க கைல” என்று கூறினான்.
ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்ட அன்பு மற்றும் தமிழ், “ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை” என்க,
எதிர்ப்பார்த்த பதில்தான் எனினும் அவன் உள்ளம் அத்தனை குளிர்ந்தது.
அறை வாசலிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த இளா, “ஏ அகா.. அழுமூஞ்சி.. கண்ண துடை. அப்பா அம்மா ஓகே சொல்லிப் பச்சை கொடி காட்டிட்டாங்க” என்று குதூகலிக்க, அவளும் கண்ணீரோடு இன்பமாய் அதிர்ந்து நிமிர்ந்தாள்.
(ஷப்பா.. எத்தனை ஸ்வீட் ஷாக் தான் கொடுக்குறது.. வோல்ட் அதிகமா உடம்புல ஏறிபோச்சு.. நம்ம கடைய சாத்துவோம்)
அனைத்தும் சுமுகமாய் முடிய தோழிகள் இருவருக்குமே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. வரும் நல்ல முகூர்த்தம் ஒன்றையே இருவீட்டைச் சேர்ந்த பெரியோர்களும் குறித்துக் கொடுத்திருக்க, தோழிகளின் குதூகலத்துக்குத் தான் அளவே இல்லாது போனது.
அன்று நான்கு ஜோடிகளும்.. சாரி சாரி.. மூன்று ஜோடிகள் மற்றும் ஒரு வருங்கால ஜோடியென எட்டுபேரும் உணவகத்திற்கு வந்திருந்தனர்.
“அமிமா.. காரமா வேணாம்டா..” என்று தன் நான்கு மாத கரு தாங்கிய மனைவியிடம் விஷ் கொஞ்சிக் கொண்டிருக்க யாவரும் அவனைப் புன்னகையோடு பார்த்தனர்.
“கியூட்..” என்று ஜான் கூற,
“நானும் உன்கிட்ட இப்டி கொஞ்சுவேன்.. அது இன்னும் கியூட்டா இருக்கும்” என்று மதி முறுக்கிக் கொண்டான்.
“ஆமா.. கல்யாணமே இன்னும் ஆவலையாம் அதுக்குள்ள தொர எங்கயோ போயிட்டாரு. தோசைய தின்னுயா” என்று லஜ்ஜயேயின்றி அவள் அவனை வார,
அனைவரும் கலகலவெனச் சிரித்து, பாவம் அந்த ஆண்மகனை வெட்கமடையச் செய்தனர்.
அகா தித்திப்பினும் தித்திப்பாய் அவன் கரம்பற்றிக் கொண்டு அமர்ந்திருக்க,
லேசான சிரிப்போடு அவள்புறம் சாய்ந்தவன், “கைய விட்டாதான் என்ன? எங்கயாவது ஓடியா போகப் போறேன்” என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், “போயிடுவீங்களா?” என்று வினவ,
அட்டகாசமாய் சிரித்தவன் இல்லை என்று தலையசைத்தான்.
“அதுங்க தனியா டிராக் ஓட்டுதுங்க” என்று இளா கூற,
“எல்லாம் தனிதனியா தான் ஓட்றாங்க. நாம தான் எப்ப ஓட்டப் போறோமோ” என்று துரு முணுமுணுத்தான்.
“ஆங்?” என்று அவள் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்க்க,
“கிரேவி நல்லாருக்குனு சொன்னேன்” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பிவிட்டு திரும்பிக் கொண்டான்.
உணவை முடித்துக் கொண்டு அகர்ணனின் காரில் அகா, இளா மற்றும் துரு செல்ல, விஷ் தனது இருசக்கர வாகனத்தில் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு சென்றான்.
இங்கு தங்கள் வீட்டு அருகில் உள்ள உணவகம் என்பதால் நடந்தே வந்திருந்த மதி அவளுடன் கைகோர்த்தபடி நடக்க, “செம்ம ஹேப்பியா இருக்கு தெரியுமா?” என்றாள்.
“அது நீ என்னை வச்சு செய்யும்போதே புரிஞ்சுகிட்டேன்” என்று அவன் கூற,
களுக்கிச் சிரித்தவள் அவன் கன்னம் கில்லி, “லவ் யூடா” என்றாள்.
“ம்ம்…ம்ம்…” என்று அவன் சலிப்பாகக் கூற,
“அட.. டாக்டர் சார். என்னவாம்?” என்று கேட்டாள்.
“கொஞ்ச நேரம் பார்க் போகலாம் வாம்மா” என்று அவன் அழைக்க,
“சரி சரி வா” என்றுவிட்டுச் சென்றாள்.
அவன் கைகோர்த்தபடியே அமர்ந்தவள், வானை வெறிக்க, “லைஃப் இஸ் சோ மேஜிக்கல்” என்று மதி கூறினான்.
“யோ.. நல்ல நேரத்துல ஏன்யா அந்த மேஜிக்க நினைவுபடுத்துற?” என்று ஜான் பீதியோடு வினவ,
“எங்க அந்த வாயாடி ஜான காணும்?” என்றான்.
“டேய்.. ரொம்ப தான் ஓட்ற நீ” என்று அவள் முறைக்க, வாய்விட்டுச் சிரித்துக் கொண்டவன், “சரிசரி பொங்காத” என்று அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
அங்கு அகாவின் அறையில் அந்தச் சீட்டுக்கட்டு ஒவ்வொன்றாகப் பறந்து காற்றில் மிதந்தது. மிதந்த சீட்டுக்கள் சிலவற்றில் தங்க நிற எழுத்துக்கள் மினுமினுக்க, அவற்றில் ‘Intermission’ என்ற வார்த்தை ஒளிர்ந்து சீட்டுகள் மீண்டும் டப்பாவிற்குள் சென்று அடைபட்டுக் கொண்டன.

