அத்தியாயம் 3

Loading

தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு ஓடி வந்த தாரகேஷின் கைகள் நடுங்கின. வெறிபிடித்தவன் போல் வீடு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக நடந்தான். பூ சொன்ன உண்மை அவன் இத்தனை காலம் கட்டி வைத்திருந்த போலித் தத்துவத்தை வேரோடு சாய்க்கப் பார்த்தது. அவனது பிடிவாதமான மனம் அதை ஏற்க மறுத்துப் போராடியது.

 

“என் பூ என்னையே குற்றம் சொல்லுதா? நான் தப்பு பண்றேனா? இல்லை… இல்லை! என் பூவுக்கு விவரம் பத்தாது. அதுக்கு இந்த உலகம் எவ்வளவு கொடூரமானதுன்னு தெரியாது. நான்தான் அதைப் பாதுகாக்கணும்… நான்தான்!” தனக்குத்தானே வெறித்தனமாக முணுமுணுத்துக் கொண்டான்.

அவனது கால்கள் அவனை அறியாமலேயே அந்தப் பெரிய நிலைக்கண்ணாடியின் முன் கொண்டு போய் நிறுத்தின. கலைந்த தலைமுடி, சிவந்த கண்கள், வியர்த்துக் கொட்டும் முகம்… கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை அவன் உற்றுப் பார்த்தான்.

 

“ஒருவேளை… அந்தப் பூ சொல்றது உண்மையா இருக்குமோ? அப்படின்னா நான் பண்றது தப்பா? ஆனா நான் பூக்களுக்கு நல்லதுதானே செய்ய நினைக்கிறேன்? நான் நல்லது சொல்றது ஏன் அந்தப் பூக்களுக்குப் பிடிக்கலை? அதுக்காக அதைக் காப்பாத்தாம அப்படியே விட்டுட முடியுமா? ஒருவேளை நான் காப்பாத்துறது புரியாம அந்தப் பூ என்னை வெறுத்துட்டா…?” என தன் முகத்தைப் பார்த்து தானே கேட்டவன்,

 

அடுத்த நொடி அவன் கண்கள் பயத்தில் விரிந்தன. “ஐயோ… என் பூ என்னை வேண்டாம்னு சொல்லிடுமா? என்னை வெறுத்துடுமா? நான் அதைக் காப்பாத்தவே கூடாதா?” என்ற முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள் அவன் மூளையைச் சூடாக்கின.

 

பூக்கள் கேட்ட கேள்விகள் ஒருபுறம். அதை ஏற்க மறுக்கும் அவனது பிடிவாதமான குணம் மறுபுறம். இரண்டுக்கும் நடுவே அவன் சிக்குண்டான். காதுகளுக்குள் அந்தப் பூக்களின் கேள்விகள் ஓயாமல் ரீங்காரமிட்டன. அந்தக் குரல்களை நிறுத்த வழி தெரியாமல், “ஆஆஆஆஆ….!” என இரு கைகளாலும் தன் தலைமுடியை அழுந்தப் பிடித்துக் கொண்டு வெறித்தனமாகக் கத்தினான். மனதின் அழுத்தம் தாங்க முடியாமல், கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தின் மீது ஓங்கி ஒரு குத்து விட்டான்.

 

கண்ணாடி சில்லுசில்லாக உடைந்தது.

 

அந்தச் அதிர்ச்சியில் ஒரு நொடி நிதானித்தவன், கீழே சிதறிக் கிடந்த துண்டுகளைப் பார்த்தான். அந்த நூறு துண்டுகளிலும் அவனது முகம் நூறு விதமாகத் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு மீண்டும் அழுகை முட்டியது.

 

“பூ உன்ன கஷ்டப்படுத்திட்டேனா.. என்னை மன்னிச்சிரு. என்னை விட்டு போய்டாத… எனக்கு நீயும் இல்லன்னா நான் என்ன பண்ணுவேன். உன்ன நான் பாதுகாக்கனும். என்ன தப்பா நினைக்கத. என்ன வெறுத்துடாத.” என கதறியவன் கண்ணாடி துண்டுகளுக்கு ஊடே படுத்தான்.

 

ஒரு சிறு குழந்தையைப் போலக் கை கால்களை அடித்துக் கொண்டு அவன் அழுத அழுகையில், தரையில் கிடந்த கூர்மையான கண்ணாடி சில்லுகள் அவன் உடலைப் பதம் பார்த்தன. கை, கால், முதுகு எனப் பல இடங்களில் கீறல்கள் விழுந்து ரத்தம் கசியத் தொடங்கியது. எதையும் உணராதவனாகக் கதறித் தீர்த்தான். ஒரு கட்டத்தில் அழுத களைப்பிலேயே, ரத்தக் கறைகளுக்கு நடுவே அந்தக் கண்ணாடிச் சில்லுகளிலேயே தன் கால்களைக் குறுக்கிக் கொண்டு சுருண்டு படுத்தான். தாரகேஷ் அங்கேயே தூங்கிப் போனான்.

 

மறுநாள் காலை கண்விழித்த தாரகேஷ், தன் உடலில் ஊடுருவிய வலியால் முகத்தை சுருக்கினான். கை, கால் என உடலின் பல பகுதிகளில் ஒருவித எரிச்சலை உணர்ந்தவன், மெல்ல எழுந்து தன்னை ஆராய்ந்தான். ரத்தக் கறைகளும், சிதறிக் கிடந்த கண்ணாடிச் சில்லுகளும், தான் படுத்திருந்த கோலமும் நேற்று மாலை நடந்த நிகழ்வுகளை மங்கலாக அவனுக்கு நினைவுபடுத்தின.

 

“அடச்சே! நம்ம பூ எதோ உலகம் தெரியாம பேசிருக்கு அதுக்கு போய் இப்படி ரியாக்ட் பண்ணிருக்கோமே” என முதல்நாள் நடந்தது ஒன்றுமே இல்லை என்பது போல் தன்னுடைய காயங்களுக்கு மருந்திட்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

 

அதேநேரம், சென்னையில் பிரபல வி.ஆர் மாலில் தன் தங்கையுடன் ஞாயிற்றுகிழமையை நெட்டித்தள்ளி கொண்டிருந்தாள் ராகவி. சுபாஷூடன் 2 வருடங்களுக்கு முன் காதலர் தினத்தில் தன் காதலை முறித்துக்கொண்டவள் அதன்பின் காதல் என்றாலே தயக்கம் கொண்டாள்.

 

ஃபுட் கோர்ட்டில் அமர்ந்து கையில் இருந்த வெஜ் பர்கரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராகவியைக் கடந்து சென்றாள் ஒரு கர்ப்பிணிப் பெண். அவள் தனக்கான ஒரு இருக்கையைத் தேடி அமர, அவளை நோக்கி ஒரு ஆடவன் வந்தான்.

 

அந்த ஆடவனின் முகம் ராகவிக்குத் தெரியவில்லை என்றாலும், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது, அவன் அவளது கணவனாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஏனோ அந்தப் பெண்ணின் முகத்திலிருந்து ராகவியால் பார்வையை விலக்க முடியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சி! தன் கணவனுடன் சின்னதாக விளையாடிக்கொண்டும், சிரித்துப் பேசிக்கொண்டும் அவள் சாப்பிட்ட விதம் ராகவியின் மனதை ஏதோ செய்தது. அந்தப் பெண்ணின் கண்களில் இருந்த குறும்பை வைத்தே, எதிரில் இருந்த ஆடவன் இந்நேரம் வெட்கப்பட்டுத் தலை குனிந்திருப்பான் என்பதை ராகவி உணர்ந்தாள்.

 

தன்னுடைய பர்கரை உண்டு முடித்துவிட்டு, அவர்களைக் கடந்து சென்ற ராகவி, எதேச்சையாக அந்த ஆடவனின் முகத்தைப் பார்த்தாள்.

 

அவள் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

 

அவன் சுபாஷ்!

 

அன்று மட்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், இன்று அந்தப் பெண்ணின் இடத்தில் அமர்ந்து சுபாஷுடன் சிரித்துக் கொண்டிருப்பவள் ராகவியாக இருந்திருப்பாள்.

 

ராகவி தன் அதிர்ச்சியை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, மெல்ல சுபாஷின் அருகில் சென்றாள். அவளது இதயம் வேகமாகத் துடித்தது.

 

“எக்ஸ்க்யூஸ் மீ…” – ராகவியின் மெல்லிய குரல் கேட்டதும், இப்போது அதிர்வது சுபாஷின் முறை ஆனது.

 

திடுக்கிட்டுத் திரும்பிய சுபாஷ், நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான். ”ராகவி! நீயா? நீ… நீ…?” வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.

 

“சும்மா… தங்கச்சியோட வந்தேன். இது…” என இழுத்தவள், தவிப்புடன் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அந்தப் பெண்ணும் இவர்களின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

சட்டென்று தன்னை நிதானித்துக் கொண்ட சுபாஷ், “இது என் வைஃப், ரேணு” என்று அவளை அறிமுகப்படுத்தினான்.

 

“ஹாய்!” ரேணு எந்தப் பாகுபாடும் இன்றி நட்புடன் கை அசைத்தாள்.

 

ராகவிக்குத் தொண்டை அடைத்தது. மீண்டும் ஒருமுறை சுபாஷைப் பார்த்தவள், “இஃப் யூ டோண்ட் மைண்ட்… நான் சுபாஷ்கிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசலாமா?” எனக் கேட்டாள்.

 

“ஒய் நாட்?” என ரேணு கள்ளங்கபடம் இல்லாமல் சிரித்தாள்.

 

சுபாஷின் புறம் திரும்பிய ராகவியின் கண்கள் கலங்கின. “அன்னைக்கு… அந்தப் பிப்ரவரி 14 அன்னைக்கு…” என வார்த்தைகள் வராமல் தவித்தாள்.

 

சுபாஷின் முகம் இறுகியது. ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டுச் சொன்னான், “ராகவி, நான் அன்னைக்கே அதைத்தான் சொல்ல வந்தேன். ஆனா நீ எதையும் கேட்குற நிதானத்துல இல்லை. அப்போ நடந்த சம்பவங்கள் எல்லாமே ஃபேக்கா நம்மள பிரிக்கிறதுக்காக உருவாக்கப்பட்டது.”

 

ராகவிக்குத் தலை சுற்றியது. கால்கள் தள்ளாடின.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்