
ருத்ரா… இன்னைக்கு இங்கேயே இருடா. நாளைக்கு போய் அந்த வீட்டுக்குப் போடா…”
என்று அபிராமி அவன் தாடையை மெதுவாகப் பிடித்து கெஞ்சினார்.
பின் மோனிகாவை நோக்கி,
“மோனி… நீயும் கொஞ்சம் சொல்லுமா?” என்றார்.
கணவனை ஒரு கணம் பார்த்த மோனிகா, தயக்கத்துடன்,
“அதான்… பாட்டி சொல்றாங்களே…” என்று திக்கித் திக்கி கூறினாள்.
மனைவியின் முகத்தைச் சலிப்புடன் பார்த்த ருத்ரா,
“சரி பாட்டி… நீங்க சொல்றதாலே நைட்டு இங்கேயே தங்குறேன்,”
என்று விரைப்பாகச் சொன்னவன்,
மேலும் எதுவும் பேசாமல் கடகடவென மாடிப்படிகளில் ஏறி,
தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான்.
அவனைப் பார்த்தபடி நின்ற அபிராமி,
மோனிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு,
“ரொம்ப பண்றான் உன் புருஷன்…கல்யாணம் முன்னாடி கூட இப்படி இல்லை,இப்போ தான் இப்படி நடந்துக்கிறான்… இவன் கோபத்துக்கும் முசுடுத்தனத்துக்கும் கூட இருக்கிறது ரொம்ப கஷ்டம்”
என்று ஆதங்கமாகக் கூறினார்.
மோனிகா எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அப்போது பிருந்தா இடைமறித்து,
“எல்லாத்துக்கும் காதல்தான் பாட்டி காரணம்…அண்ணாவுக்கு அண்ணி மேல அவ்வளவு லவ்,
அண்ணிக்கும் அண்ணா மேல அவ்வளவு லவ்.அதான் அண்ணன் அண்ணி சொல்றதை கேட்டுக்கிறார்..
அதோட ரெண்டு பேரும் சின்ன சண்டை கூட இல்லாம
ஹேப்பியா வாழுறாங்க,”
என்று சிலாகித்துக் கூறினாள்.
அனைவரும் தலையாட்டி சிரித்தபடி இருந்தாலும்,
கமலின் மனதில் மட்டும்
மாலை ருத்ரன் அறையில் இருவரின் விவாதத்தை கேட்டது ஒரு நொடிக்கு மின்னி மறைந்தது.
ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…
மோனி மெதுவாக அறைக்குள் வந்தாள்.
அங்கே ருத்ரன் குழந்தையின் உடைகளை மாற்றிவிட்டு,
தானும் உடையினை மாற்றிக்கொண்டு,கட்டிலின் ஓரமாக முகம் திருப்பியபடி படுத்திருந்தான்.
அவனைச் சில கணங்கள் அசையாமல் வெறித்துப் பார்த்தவள்,
எதுவும் பேசாமல் மறுபுறம் வந்து படுத்தாள்.
அவள் வந்தது ருத்ரனுக்குத் தெரிந்திருந்தும்,
அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல்
கண்களை மூடிக்கொண்டான்.
அச்சமயம் மோனியின் மொபைல் அதிர்ந்தது.
எடுத்து பார்த்தவள்
அவளின் அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.
ஒருமுறை கணவனைப் பார்த்தாள்.
அவன் தூங்குவது போல இருந்ததை உறுதி செய்தபின்,
மெதுவாக பால்கனி பக்கம் சென்று பேச ஆரம்பித்தாள்.
அவள் அறையை விட்டு சென்றதும்,
ருத்ரன் கண்களைத் திறந்தான்.
தலையைச் சற்றே உயர்த்திப் பார்த்தவன்,
ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டு
மீண்டும் கண்களை மூடி உண்மையிலேயே தூங்கிப் போனான்.
அரை மணி நேரம் கழித்து,
அறைக்குள் வந்த மோனி,
எந்த சத்தமும் இன்றி கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
அவள் மனதுக்குள், ருத்ரனைப் பற்றிய எண்ணற்ற யோசனைகள்
அலைமோதிக் கொண்டிருந்தன.
ஆனால் அந்த நேரத்தில்,
அவற்றை புறம் தள்ளிவிட்டு,
கண்களை மூடி தூங்கிப் போனாள்…
*************
“வீர்… நாளைக்கு அங்கப் போகப் போறோம்…”
என்று இனி மெதுவாகச் சொன்னாள்.
அவனின் நெஞ்சில் சுகமாகத் தலை சாய்த்திருந்தாலும்,
அவள் குரலில் ஒரு நடுக்கம் மறையவில்லை.
“அங்க போய் எல்லாரையும் ஃபேஸ் பண்ணனும்…அம்மா,அப்பா என மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைத்தது…
அவளின் விரல்கள் அவனின் சட்டையைப் பிடித்து
இறுகிக் கொண்டன.அவனின் நெஞ்சில் இன்னும் நெருங்கி ஒட்டிக்கொண்டாள்.
அவளின் கவலையை உணர்ந்த வீர்,
ஒரு வார்த்தை கூட பேசாமல்,
அவள் தலையில் மெதுவாக கை வைத்து, அந்த விரல்களால் அவளின் முடியை மெல்ல வருடிக் கொடுத்தான்.
அவனின் உறுதியான நெஞ்சுத் துடிப்பு, அவளுக்குள் இருந்த அச்சத்தை,கவலையை
மெதுவாக குறைக்க தொடங்கியது.
“நான் இருக்கேன் இனி…”
என்று அவனின் இறுகிய அணைப்பே கூறியது, அவளுக்கான மிகப் பெரிய ஆறுதலாய் மாறியது.
அவனின் அணைப்பில்
நாளை பற்றிய பயம்
அவளின் மனதில் சற்றே மங்க, கண்களை மூடி அவன் அளித்த
அந்த பாதுகாப்பு உணர்வில்
மௌனமாக தஞ்சம் புகுந்தாள்…
******
காலை ருத்ரன் சீக்கிரமாகவே எழுந்தான். குளித்து தயாராகி, எழுந்து அமர்ந்து குழந்தையை மெதுவாகத் தட்டி கொடுத்து அமைதிப்படுத்தியவன், அவளைத் தோளில் போட்டபடி கீழிறங்கி நேராக கிச்சனுக்குள் நுழைந்தான்.
பிரிட்ஜைத் திறந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தான். குழந்தையை தோளில் சாய்த்தபடி தட்டி கொடுத்துக் கொண்டே, பால் கொதிக்கத் தொடங்குவதை கவனித்தான்.
அந்நேரம் கிச்சனுக்குள் வந்த அம்பிகா,
“என்ன ருத்ரா… இங்கே என்ன பண்ற?” என்று கேட்டபடியே, அடுப்பின் மேல் கொதித்துக் கொண்டிருந்த பாலைக் கவனித்தார்.
“எதுக்கு பால்? நீ டீ தானே குடிப்ப… இரு அம்மா, நான் போட்டுத் தரேன். நீ இங்கிட்டு வா,” என்று கூறினார்.
அவரை இந்நேரம் எதிர்பார்க்காத ருத்ரன்,
“இல்லம்மா… இந்த தடவை பால் குடிக்கணும்னு தோணுச்சு. அதான் நானே ரெடி பண்ண வந்தேன்,” என்று தடுமாறியபடியே சமாளித்தான்.
அந்தச் சமயம் குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது.
“அச்சோ… நிலா குட்டிக்கு பசிக்குதா? மம் மம் வேணுமா?” என்று சொல்லியபடியே,
“நீ கொடுடா… இவளை நான் மோனிக்கிட்ட கொண்டு போய் கொடுக்கிறேன். அவ பால் தரட்டும்,” என்று குழந்தையை வாங்க கை நீட்டினார் அம்பிகா.
“அம்பி… அம்பி…” என்று அபிராமி மருமகளை அழைத்தார்.
“இல்லம்மா… நானே போய் கொடுக்கிறேன். பாட்டி கூப்பிடுறாங்க பாருங்க, நீங்க போங்க,” என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தான் ருத்ரன்.
பாலை நன்றாகக் காய்ச்சி, சர்க்கரை கலந்து ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டவன் மெதுவாக மேலே சென்றான்.
குழந்தை அழுததும், அவன் கீழே சென்றதும்—எதையும் உணராமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மோனி.
ஒரு நிமிடம் அவளைப் பார்த்து நின்றவன், பின்னர் குழந்தையின் பாட்டிலில் பாலை ஊற்றி, அவளிடம் கொடுத்தான்.
பசியில் அழுது அரற்றிய குழந்தை, இன்னும் அதிகரித்த பசியோடு வேக வேகமாக சப்பி குடிக்கத் தொடங்கினாள்…
எல்லாரும் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.
ருத்ரனும் மோனியும் கிளம்பி கீழே வந்தார்கள்.
“சரி… நாங்க எங்க வீட்டுக்கு போறோம் பாட்டி,” என்று ருத்ரன் கூறவும்,
“உன் வீடா?” என பாட்டி அபிராமி
நீட்டி முழக்கியவர்,
முகம் கடுமையாக இறுக,
“இங்கிருந்து பக்கத்தில தான் உன் ஆஃபீஸ். ஆனா நீ இவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு, இங்கிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி அந்த அப்பார்ட்மெண்ட்ல போய் தனியா இருக்கணும்னு பிடிவாதம் பிடிக்கற!”
“கேட்டா… என் ப்ரைவேசி போகுது, அப்படி இப்படின்னு கதை சொல்ற,” என்று கோபமாக கூறியவர்,
மேலும் தொடர்ந்து
“உன் பொண்டாட்டிக்கே இங்க கூட்டு குடும்பமா இருக்க தான் பிடிக்குது. ஆனா நீ தான் அவளை இழுத்து தனியா கூட்டிட்டு போற!” என அவனை குற்றம் சாட்டினார்…
அம்பிகாவுக்கு மகனை குற்றம் சொல்வதை கேட்டு மனது கஷ்டமாக இருந்தது…
நாம் இடையில் ஏதாவது சமாதானமாக பேச போனால் இன்னும் கோபமாக ஏதாவது பேசுவார்,வீண் வார்த்தைகளை வீசுவார் மனக்கஷ்டம் ஏற்படும் என அனுபவத்தினால் உணர்ந்தவர் அமைதியாய் மகனை பார்த்தபடி இருந்தார்…
அபி இப்ப எதுக்கு இதை பத்தி பேசுற,அவங்களை போக விடு என லிங்கம் தடுத்தார்…
“ நீங்க சும்மா இருங்க, அவன் முன்னாடி போகும் போதே எனக்கு சரிபடல…நீங்க தான் கொஞ்ச மாசம் இருக்கட்டும் சொன்னீங்க சரின்னு நானும் விட்டேன்…
இப்ப பார்த்தா மொத்தமா தனி குடும்பமாவே இருந்திடுவான் போலேயே…ஏதாச்சும் விசேஷம் வச்சா வரான், முடிஞ்ச உடனே அந்த வீட்டுக்கு போயிடுறான்…
நேத்து கூட அப்படி தான் கிளம்ப பார்த்தான்…நான் தான் இருக்க சொல்லி கெஞ்சுன பிறகு இருந்தான்…இவனை இப்படியே விட்டா சரி வராதுங்க..
அங்க இவன் ஆஃபீஸ் போயிடுவான். இவளும் குழந்தையும் தனியா இருப்பாங்க. ஆத்திரம், அவசரம் வந்தா உதவ யார் ஓடி வருவா சொல்லு?”
“இது எதையும் கேட்காம, அந்த குருவி கூட்டுல போய் இருக்க பரபரக்கிறே!” என்று திட்டினார்.
தற்பொழுது இவர் சொல்வதில் நியாயம் இருப்பதால் அனைவரும் அமைதி காத்தனர்…
மோனி பாவமாய் நின்றாள்…
பாட்டி அவ்வளவு பேசியும்,
ருத்ரன் ஒன்றும் பேசாமல் நின்றான்.
ஜன்னல் வழியே தெரிந்த அசைந்து கொண்டிருந்த புங்கை மரத்தை,
வேடிக்கை பார்த்தன அவனது கூர்மையான கண்கள்…
அவனின் அமைதியுடன் கூடிய அலட்சியம் பாட்டியின் கோபத்தை இன்னும் தூண்டியது..
உடனே அவர் மருமகள் பக்கம் திரும்பினார்.
“பாரு அம்பி… உன் பையனை!”
“பாட்டி இவ்வளவு சொல்லுறாங்களே… கொஞ்சமாவது காது கொடுத்து கேட்கணும்.
அவங்க பேச்சை மதிக்கணும்.
ஒண்ணுமே இல்ல!” என்று கோபத்துடன் பாய்ந்தார்.
அம்பிகா ஒன்றும் பேச முடியாமல்,
அப்பாவித்தனமாக
மகனையும்…
மாமியாரையும்…
மாறி மாறி பார்த்தபடியே நின்றார்.
சலிப்புடன் தலையசைத்த பாட்டி,
உடனே தனது பார்வையை மகன் கருணா பக்கம் திருப்பினார்.
“கருணா… உன் மகன் முன்னாடி எப்படி இருந்தவன்!”
“சொல் பேச்சை கேட்டு, பெரியவர்களை மதிச்சு நடந்தவன்…”
ஒரு நொடி நின்று,
அவமானம் கலந்த கோபத்தோடு தொடர்ந்தார்.
“எப்போ சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு நாலு காசு பார்க்க ஆரம்பிச்சானோ,
அப்போதே நல்ல குணம் எல்லாம் காத்துல பறந்துரும் போல!”
மகனையும் விட்டு வைக்காமல், வார்த்தைகளால் வெளுத்தார்..
அந்தச் சமயம் தினேஷ் இடையில் வந்து,
“பாட்டி… அண்ணா அவன் வீட்டுக்கு போறதுக்கு,
அப்பாவும் அம்மாவும் என்ன பண்ணுவாங்க?”
“ஏன் அவங்களைப் பிடிச்சு இப்படி கத்துறீங்க?” என்று மென்மையாக கேட்டவன்,
“ஃப்ரீயா விடுங்க பாட்டி…
டென்ஷன் ஆகாதீங்க.
கூல்… கூல்…” என்று சொல்லியபடி,
பாட்டியின் கையைப் பிடித்து சமாதானப்படுத்தினான்.
கமல் மெதுவாக ருத்ரனைத் தட்டி,
கண்களால் பாட்டியைச் சுட்டிக் காட்டினான்.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட ருத்ரன்,
அவர் அருகே சென்று கையினை பிடித்தவன்
“பாட்டி… சாரி…நீங்க சொல்றதை கேட்கலைன்னு கோபப்படாதீங்க.”
அவன் குரலில் கெஞ்சல் இருந்தது…
“இன்னும் ஒரு சிக்ஸ் மன்த்ஸ் டைம் கொடுங்க. நான் ஒரே அடியா இங்கேயே வந்துடுவேன்.”
அப்புறம் நம்ம குடும்பத்தை விட்டு,
எங்கேயும் தனியா போக மாட்டேன்…
ப்ராமிஸ்,” என்று சொல்லியபடி,
அவர் கைகளில் சத்தியம் செய்தான்.
அவன் ஏன் ஆறு மாத அவகாசம் கேட்டான் என்பதைக் குறித்து,
யாருமே சிந்திக்கவில்லை.
முன்னே மாதிரியே,
பாட்டியை சமா
தானப்படுத்தத்தான் இப்படிச் சொல்கிறான் என்று எண்ணி, எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால்,
ருத்ரனின் கண்களில் மட்டும்
அந்த ஆறு மாதங்கள்
ஒரு முடிவுக்கான
மௌனமான கணக்காக
ஓடிக்கொண்டிருந்தது…
தேவன் வருவான்❤️❤️❤️…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
