Loading

அத்தியாயம் 28

 

வெள்ளை நிற டாப் பிளவுஸ், ஐஸ் பச்சை நிற நீளமான பாவாடை அணிந்து, உச்சி பிரித்து, இரண்டு பக்கம் முடி எடுத்து, பின்னி கிளிப் போட்டு, வட்ட முகத்தில் கோபுர வடிவ பொட்டு வைத்து, மஞ்சள் பூசாமலே அந்திவான் சூரியனாக மிளிர்ந்தாள் பர்விதா.

 

கோபுர சிலைக்கு இணையாக, கோயிலில் அபரஜித்திற்காக காத்திருந்தாள்.

 

மெரூன் நிற ஷர்ட், சாண்டல் நிற பேண்டும் அணிந்து, சற்று நீளமான தனது கேசத்தை காற்றில் கலைய விட்டு, தன் காரில் வந்திறங்கியவன்,

 

கோயில் வாசலிலேயே பர்விதாவிற்காக பூவும், அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

 

அபர்ஜித்தை கண்டதும் அகம் மலர்ந்து, இதழ் விரிய, அவனிடம் ஏதோ அவள் சொல்ல வர,

 

“ஸ்ஸ்.. எதுவும் கேட்காத…” என்று வாயில் விரல் வைத்து சொன்னவன், அவள் கையில் அர்ச்சனைத் தட்டை கொடுத்துவிட்டு “திரும்பிடி…” என்று அவளை திருப்பி, அவள் தலையில் பூச்சரத்தை வைத்து விடவும்,

 

நாணமும் வெட்க சிவப்புமாக, முகம் ஜொலிக்க திரும்பி நின்றிருந்தாள். அவளை முன் திருப்பி ஆசை தீர திருப்தியாக அவள் முகம் கண்டவன் “கல்யாணம் பண்ணிக்கலாமா பர்வி…?” என்றான்.

 

அவன் காதல் பார்வையில் கட்டுண்டு நின்றவள், அவன் வார்த்தைகளில் உள்ளம் திடுக்கிட “என்ன.. என்ன சொன்னீங்க…?” என்று அவன் வார்த்தைகள் பொய்யோ என்று மீண்டும் கேட்க

 

இழுத்து பெருமூச்சு விட்டவன், காலையில் வீட்டில் நடந்தது முதல் அவன் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பது வரை கூறியவன்,

 

“எனக்கு எதிர்காலத்து மேல பயமா இருக்கு பர்வி.. அதுலயும் உன் மேல நம்பிக்கையே இல்ல.. பார்கவிக்காக எங்க நீ என்ன தூக்கி போட்டுடுவியோனு தோணுது.. இங்க உன் கூட இருந்தாலாவது உன்ன என் கைக்குள்ள வச்சிருப்பேன்..

 

…ஆனா இப்போ நினைச்ச உடனே வர முடியாத தூரத்துக்கு போக போறேன்.. எனக்கு ஒரு நம்பிக்கை வேணும் பர்வி.. தனியா எத்தன நாள் நான் தவிக்கணுமோ தெரியல.. என் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேணும்..

 

…திரும்பவும் நான் நாட்டுக்கு திரும்பி வரணும்னா, அது எனக்காக ஒருத்தி காத்துட்டு இருப்பாள் என்ற நினைப்பு வரணும்.. அந்த எனக்கான ஒருத்தி என் பொண்டாட்டியா இருக்கணும்.. அதுக்கு இப்போ, இந்த நிமிஷம் நம்ம கல்யாணம் பண்ணிக்கணும்…” என்று அவன் சொல்ல

 

கலங்கிய கண்களுடன் அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள். “அவ்வளவுதான் இல்ல என் மேல இருக்கிற நம்பிக்கை…” என்று கேட்டவள் கண்ணம் நனைத்த கண்ணீரைத் துடைக்க

 

“ஹேய் பர்வி, ப்ளீஸ் அழாத.. நான் உன் மேலயோ, உன் காதல் மேலயோ நம்பிக்கை இல்லைன்னு சொல்லல.. என்மேல நீ வச்சுக்கிற காதல விட உன் அக்கா மேல நீ வச்சிருக்க பாசம் தான் பெருசுன்னு எனக்கு தெரியும்.. அதனால வந்த இன்செக்யூரிட்டி ஃபீல்..

 

…அது மட்டும் இல்லாம நான் உன் அக்காக்கு பண்ணுன பாவத்துக்கு கடவுள் எனக்கு எதை வேணும்னாலும் தண்டனையா தரட்டும்.. அதை ஏத்துப்பேன், ஆனா ஒரு வேள உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சுட்டா அதை என்னால தாங்கவே முடியாது.. அதுக்காகத்தான் சொல்றேன் கல்யாணம் பண்ணிக்கலாம்…”

 

“அதுக்கு, ஏற்கனவே என் அக்காவுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ திருட்டு கல்யாணம் பண்ணி என் அப்பா அம்மாவுக்கு துரோகம் பண்ணனுமா?.. நேத்து தானே சத்தியம் பண்ணீங்க.. எல்லாரோட சம்மததோடயும், ஊர கூட்டி தாலி கட்டுவேன்னு.. அந்த சத்தியம் என்ன ஆச்சு…?” என்று ஆதங்கமாக அவள் கேட்க,

 

“அந்த சத்தியத்த நான் மறக்கல.. அதே நேரம் இப்போ நம்ம கல்யாணம் நடக்கணும்.. உனக்கு சம்மதமானு மட்டும் சொல்லு…” என்று அழுத்தமாக அவன் கேட்க

 

அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. தவிப்பாக அவன் முகம் பார்க்க, அவனும் அவள் கண்களை ஊன்றி பார்த்து “உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?…” என்று கேட்க

 

“என்ன இது அபத்தமான கேள்வி.. உங்கள பண்ணிக்காம வேற யார பண்ணிப்பேன்.. ஆனா இப்போ.. இப்படி…” என்று அவள் தடுமாற

 

“இன்னைக்கு இப்பதான்.. போற நான் திரும்பி வரணும்னா அது என் பொண்டாட்டிக்காக மட்டும்தான்.. இல்லன்னா அங்கேயே தங்கிடுவேன்…” என்று சொல்ல

 

ஒரு முடிவுக்கு வந்தவளாக “சரி பண்ணிக்கலாம்…” என்று சம்மதம் சொல்ல

 

முகம் விகாசிக்க புன்னகைத்தவன் “சரி வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு, அம்மன் சன்னதி வந்தான்.

 

பர்விதா அர்ச்சனைத் தட்டை ஐயரிடம் கொடுக்க, அந்த தட்டில் நகை பெட்டி ஒன்றை வைத்தவன் “இத ஆசீர்வாதம் பண்ணி குடுங்க.. இன்னைக்கு எங்களுக்கு கல்யாணம்…” என்று சொல்ல

 

ஐயரோ “பேஷா பண்ணிடலாம்.. மாலை எங்க?…” என்று கேட்க, நாக்கை கடித்தவன் உடனே ஓடிச்சென்று இரண்டு ரோஜா பூ மாலை வாங்கி வந்தான்.

 

ஐயர் மந்திரம் கூற, இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்தவாறு மாலை மாற்றிக்கொண்டனர்.

 

ஐயரிடம் இருந்து நகை பெட்டியை அபர்ஜித் வாங்க, அவன் தாலி கட்ட போகின்றான் என்று எண்ணி, தலை குனிந்து, கலக்கம் பாதி மகிழ்ச்சி மீதியாக விழி மூடி பர்விதா நின்று இருக்க,

 

“கண்ண திறந்து என்னப் பாருடி…” என்று அவன் சொல்ல, இமை திறந்து அவன் முகம் கண்டவள், பின் அவன் கையில் இருந்த செயினை பார்த்து புரியாமல், கேள்வியாக அவனைப் பார்க்க,

 

“என்ன பாக்கிற.. உனக்கு பண்ணி கொடுத்த சத்தியத்த எப்படி காப்பாத்தாம போவேன்.. இது உனக்கும் எனக்கும் மட்டும் நடக்கிற கல்யாணம்…” என்றவன்

 

அவன் கையில் இருந்த செயினை தூக்கி காட்டி “இதை ஃபர்ஸ்ட் நைட்ல காதல் சின்னமா உன் கழுத்துல போட்டு விடணும்னு வாங்கி வச்சேன்.. ஆனா இது நம்ம கல்யாண சின்னமா இருக்கட்டும்…” என்று அவன் சொல்ல

 

அந்த தங்க செயினில் ஆங்கில எழுத்தில் தொங்கிய பெண்டனை வாசித்தவள் “அது என்ன அபர்வி?…” என்று கேட்க

 

“அபர், பர்வி நீயும் நானும்.. நமக்கான பேர்…” என்று வார்த்தையில் காதலை கலந்து சொல்ல, அதே காதலை கண்களில் தேக்கி “போட்டு விடுங்க…” என்றாள் முழு மனதாக.

 

இப்போது மனதில் எந்தவித கவலையோ, கலக்கமோ, குற்ற உணர்வோ இல்லை.

 

அபர்ஜித்தும் மனதால் மாங்கல்யம் என்று எண்ணி, அந்த செயினை அவள் கழுத்தில் போட்டு விட்டவன், அவள் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு, உச்சியில் முத்தம் வைத்தான்.

 

இரு காதல் மனதும் கடவுள் சன்னதியில் நெகிழ்ந்து கலந்த தருணம் அது.

 

சற்று நேரத்தில் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்பதால், பர்விதாவை அழைத்துக் கொண்டு பீச் ஹவுஸ் வந்தவன், உடைகளை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர ,

 

கசங்கிய முகத்துடன், கண்ணீர் கண்களில் குளம் கட்ட அவனையே பார்த்திருந்தாள் பெண்ணாள்.

 

அவள் வாழ்வில் அனைத்துமே அவளைக் கேட்காமலே அதிரடியாகவே நடந்து முடிந்து விட்டது.

 

முதல் முத்தம், முதல் காதல், இதோ மூன்று முடிச்சு போடவில்லை என்றாலும் முதல் திருமணம், முதல் பிரிவு, என்று அவள் உணரும் முன்பே அனைத்தும் நடந்து விட்டது.

 

பர்விதாவின் அருகில் வந்தவன், எதுவும் பேசாமல் அவளை இழுத்து அணைத்து இருந்தான். இத்தனை நாட்கள் இல்லாத பாசமும், நேசமும் அந்த அணைப்பில்.

 

அவன் நெஞ்சில் தலையை சாய்த்து, கண்ணீர் சிந்தியவளின் முகத்தை நிமிர்த்தி இதழ்களை இணைத்துக் கொண்டான்.

 

அவனுக்குமே கண்ணீர் கரையை உடைக்கும் நிலைதான். ஒரே நாளில் மொத்த உறவையும் பிரிந்து செல்ல வேண்டுமே,

 

இருவராலும் முத்தமிட முடியவில்லை. இதழ்கள் விரிந்து அழுகையில் வளைந்தன. அபர்ஜித் தான் இன்றோடு உலகம் அழிந்து விடும் என்று நினைத்து, முயன்று கவலையை பின்னுக்கு தள்ளி, காதலோடு இறுக்கமாக அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்.

 

கண்ணீரும் காதலுமாக முத்த பரிமாற்றம் நேரங்கள் கடக்க, மனதே இன்றி மங்கையவளின் இதழை பிரிய

 

(போகாதே) எனும் விதமாக அவன் ஷர்டை பிடித்து இழுத்து, மீண்டும் பெண்ணவள் முத்தமிட்டாள். அவனை காலம் மறந்து, காதலால் உறைய வைக்கும் ஒரே ஆயுதம் முத்தம் அல்லவா.

 

ஆனால் இம்முறை மொத்தமாக அவன் கட்டுண்டு நிற்கவில்லை. “அம்லு போகணும்டி…” என்று இதழை விடுவித்து இளையவளை நெஞ்சில் சாய்த்துக் கூற,

 

“வேணாம் இங்கயே இருங்களேன்…”என்று அவள் சொல்ல முயன்று தன் கவலையை மறைத்தவன்

 

“இங்கே இருந்தா இன்னைக்கு ராத்திரி ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிடுவேன் ஓகேவா…?” என்று கேட்க

 

அவன் தன்னை இயல்பாக்கும் பொருட்டு பேசுவது புரிய, முகத்தை அப்படியும் இப்படியும் அவன் நெஞ்சில் தேய்த்தவள் “ம்ம், எனக்கு ஓகே தான்.. போகாதீங்க…” என்று சொல்ல

 

“அடிப்பாவி! வெரட்டி வெரட்டி அடிப்பனு பார்த்தா.. விட்டா நீயே மேட்டர முடிச்சிடுவ போல…” என்று அவள் நெற்றி முட்டியவன்

 

அந்த பிறை நெற்றியில் அழுத்தி இதழ் பதித்து, அவள் கன்னங்களை கைகளில் தாங்கி “கொஞ்ச நாள் தானே பர்வி, உனக்கும் சரி, எனக்கும் சரி இப்போதைக்கு பார்கவிதான் முக்கியம்.. அவ மனசு மாறுற வரைக்கும் நமக்கு இந்த பிரிவு வேணும்.. புரிஞ்சுக்க…” என்று அவன் சொல்ல

 

“புரியுது.. நானும் ஏர்போர்ட் வாரனே…” என்று சொல்ல

 

“வேணாம்டி அம்லு உன்ன பார்த்தா என்னால போக முடியாது.. நீ வீட்டுக்கு போ.. நான் மட்டும் போயிக்கிறேன்…” என்றவன்

 

மீண்டும் ஆவேசமாக அவள் நெற்றி, கன்னம், இதழ் என்று முகம் எங்கும் முத்தம் பதித்தவன், நெற்றி முட்டி சிறிது நேரம் மூச்சு வாங்க இளைப்பாறினான்.

 

பின் அவள் கைபிடித்து வெளியே வந்தவன், இரண்டு ஆட்டோவை நிறுத்தி, ஒன்றில் அவளை ஏற்றிவிட்டு, “பத்திரமா போ.. நான் போய் சேர்ந்ததும் கால் பண்றேன்…” என்றவன் அவள் முகத்தில் தவழ்ந்த முடியை காதோரம் எடுத்துவிட்டு, கன்னத்தை வருடியவன், இதயம் நிறைந்த வலியுடன் தனக்கான ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

 

இரு வண்டிகளும் எதிரெதிர் திசையில் பயணிக்க, இதயங்கள் இணைந்து பயணித்தது.

 

அபர்ஜித் விமானம் ஏறிய பின்னர் தான் அஸ்வந்தின் எண்ணிற்கு அழைத்து விடயத்தை கூறினான்.

 

“என்னடா ண்ணா சொல்ற.. ஏன் இப்படி பண்ற…” என்று அஸ்வந் ஆதங்கமாக கேட்க

 

“எனக்கு இந்த மாற்றம் தேவைனு தோணுதுடா.. பார்கவிக்காக உனக்காக என்றத தாண்டி எனக்கும் இது வேணும்.. என் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சியில இருந்து நான் வெளிய வரணும்.. அதுக்கு இந்த பிரிவு அவசியம்…” என்றவன் ஒருநொடி மௌனத்தின் பின்

 

“அஸ்வந் உன்ன ஃபோர்ஸ் பண்ணி இந்த லைப்ல நான் தள்ளி விடலையே…” என்று தவிப்பாக கேட்க

 

“அண்ணா, கல்யாணம் எப்படி வேணும்னாலும் நடந்திருக்கட்டும்.. ஆனா இந்த நிமிஷம் இப்போ பார்கவி தான் என் பொண்டாட்டி.. அதுக்கும் மேல நான் அவள நேசிக்கிறேன்.. அவள சரி பண்ணி அவளோட சந்தோஷமா வாழ வேண்டியது என்னோட பொறுப்பு.. அதுக்காக நீ இவ்ளோ தூரம் போயிருக்கணுமானு தான் எனக்கு வருத்தமா இருக்கு…” என்று அஸ்வந் சொல்ல ,

 

மனதில் ஒருவித நிம்மதி பரவ “நான் தான் சொல்றேனே அஸ்வந் இது எனக்காக.. உங்களுக்காக கிடையாது.. நீயும் பார்கவியும் சந்தோஷமா வாழ ஆரம்பிங்க.. கொஞ்ச நாளைக்குதான்டா.. உன்ன விட்டுட்டு நான் எங்க போக போறேன்..

 

…காலம் மாறட்டும், கண்டிப்பா நம்ம எல்லாரும் ஒத்துமையா சந்தோஷமா இருக்கலாம்.. அம்மா கிட்ட நீ எதுவும் சொல்ல வேணாம்.. நான் சொல்லிக்கிறேன்…” என்றவன் அஸ்வந்தின் அழைப்பை துண்டித்து விட்டு

 

செவ்வந்திக்கு அழைப்பை எடுத்து விஷயத்தை கூற “ம்ம்..” என்று கேட்டுக்கொண்டார். வேற எதுவும் சொல்லவில்லை.

 

மகனை நினைத்த நேரம் சென்று பார்க்க முடியாது என்ற கவலை தான் நெஞ்சை அழுத்தியது. இருந்தும் அவனிடம் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

 

கடல் கடந்து தனக்கான தனிமையை தண்டனையாக தேடிச் சென்று இருந்தான் அபர்ஜித்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்