
அத்தியாயம் 26
பார்கவியின் முகத்தில் இருந்த ஆக்ரோஷத்தையும் அவளின் நடவடிக்கையையும் மிரட்சியாக பார்த்த செவ்வந்தி
“பார்கவி!.. நான் உன்ன வேல செய்யணும்னு சொல்லல.. நீ இது இல்ல .. ஏன் இப்படி இருக்க.. உன் மனசுல அப்படி என்னதான் இருக்கு.. இந்த வீட்டையும் அஸ்வந்தோட நடந்த கல்யாணத்தையும் உன்னால ஏத்துக்க முடியாம எது தடுக்கிது.. ஏதாவது வாய திறந்து சொல்லு…” என்று கேட்க
அங்கே வந்து சேர்ந்தனர் அஸ்வந்தும் அபர்ஜித்தும். ஆவேசமாக வெட்டிக் கொண்டிருந்த கொத்தவரங்காயை அள்ளி எறிந்தவள்
“என்ன சொல்லணும்.. இல்ல என்ன சொல்லணும்..கண்ணுக்கு எதுக்க இவர வச்சுக்கிட்டு இவர் தம்பி கூட நான் வாழனும் இல்ல.. என்னை பத்தி என்ன நினைச்சீங்க..
…மாசத்துக்கு மாசம் மனச மாத்திக்கிற கேவலமான கீழ்த்தனமான பொண்ணு நான் கிடையாது..
…இவன் தான் உன் புருஷன், இவனுக்கும் உனக்கும் தான் கல்யாணம்னு சொன்னதால, அவர மனசார புருஷனா ஏத்துக்கிட்டு.., அவர் கூட கல்யாணம், வாழ்க்கை, குழந்தை, அதுவரைக்கும் யோசிச்சிட்டு.. அவர கண்ணு முன்னாடி வச்சுட்டு அவர் தம்பி கூட நான் வாழனும்.. எப்பேர் பட்ட கேவலம்..
…நீங்க கேக்கலாம் ஏன் மத்தவங்க எல்லாம் இன்னொரு வாழ்க்கைய ஏத்துக்கிறது இல்லையான்னு.. நடக்குது புருஷன் இறந்ததுக்கு பிறகு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. அந்த வாழ்க்கையும் சந்தோஷமா வாழுறாங்க
…ஏன்னா புருஷன் உயிரோட இல்ல, என்னதான் முதல் கல்யாணத்த மறக்க முடியலனாலும் அவர் இனி இல்ல நம்ம கண்ணு முன்னாடி வர மாட்டாரு என்றத மனசு ஏத்துக்கும் அதனால இரண்டாவது கல்யாணத்த ஏத்துக்கிட்டு வாழ்வாங்க ஆனா எனக்கு அப்படி இல்லையே…” என்று சொல்லி அபர்ஜித்தை பார்வையால் தழுவி நிறுத்த
“அப்போ, என் புள்ள செத்துப் போகணும்னு சொல்றியா?…” என்று நெஞ்சம் துடிக்க கேட்டார் செவ்வந்தி .
“நான் ஒன்னும் அவ்ளவு கொடூரமானவன இல்ல அத்த.. உங்க அளவுக்கு…” என்றாள் அழுத்தி.
“என் அளவுக்கா!, நான் கொடூரமானவளா?…” என்று அவர் அதிர்ச்சியில் கேட்க
“ஆமா அத்த, கல்யாணம் நின்னுட கூடாது, உங்க குடும்ப கௌரவம், என் குடும்ப கௌரவம்னு எல்லாத்தையும் பாத்தீங்க.. என் மனச பத்தி யாருமே யோசிக்கல.. எப்படி என்னால முடியும்னு நெனச்சீங்க.. நீங்க மட்டும் அஸ்வந்த கல்யாணம் பண்ணிக்க சொல்லலனா இந்த நரக வாழ்க்கை எனக்கு இல்ல
… ஏன் பொண்ணுங்க லவ் பண்ணிட்டு, அந்த காதல மறந்துட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையான்னு கேக்கலாம்.. பண்ணிக்கிறாங்க.. அப்படி பண்ணிக்கிற யாருமே தினம் தினம் காதலிச்சவன் முகத்த பார்த்துக்கிட்டே வாழ்றதில்ல..
…ஆனா அந்த கொடுமைய தான் நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்.. தினமும் இதோ இவர் முகத்துல நான் முழிக்கணும்.. இவர பாக்கும் போதெல்லாம் எனக்கு என்ன தோணும்னு தெரியுமா..
…இவர் கூட நான் வாழ வேண்டிய வாழ்க்கைய இவர் தம்பி கூட நான் வாழணுமானு நினைக்கும் போது உடம்பு எரியுது அத்த.. நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு.. எந்த பொண்ணுக்கும் என் நிலைம இருக்காதுன்னு நினைக்கிறேன் ..
…காதலிச்சவன கண்ணுக்கு முன்னுக்கு வச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழ்றது அவ்ளவு கொடுமையானு நீங்க கேட்கலாம்.. ஏன் ஒரு சில பொண்ணுங்க வாழலையானு கேக்கலாம்..
…அந்த ஒரு சில பொண்ணுங்கள்ல கண்டிப்பா நான் இல்ல.. என்னால அப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாது..
…ஒருத்தன மட்டுமே காதலிக்கனும், ஒருத்தன மட்டுமே கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தேன்.. அதனாலதான் கல்யாணத்துக்கு முன்னாடி இரண்டு மூணு பேர் எனக்கு ப்ரொபோஸ் பண்ணியும் கூட நான் யாரையுமே ஏறெடுத்தும் பாக்கல..
..வீட்ல மாப்பிள்ளனு கை காமிச்சு, அப்பா, அம்மா சம்மதத்தோட ஒருத்தர கல்யாணம் பண்ணி, அவர காதலிச்சு அவரோட கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழனும்னு கண்ணியமா இருந்தேன்..
அதே மாதிரி தான், இவர காட்டி மாப்பிள்ளன்னு சொன்னாங்க.. பாத்த நாள்ல இருந்து இவர்தான் என் புருஷன்னு மனசுல பதிய வெச்சு பதிய வெச்சு, இவர் கூட என் வாழ்க்கை எவ்வளவு தூரம் போகும்னு குழந்தை பிறக்குறதுல இருந்து.. அந்த குழந்தைங்க எத்தன என்றதுல இருந்து, அந்த குழந்தைகள எப்படி எல்லாம் வளர்க்கணும் என்ற வரைக்குமே கற்பனை பண்ணி வச்சிருந்தேன்..
…இப்போ என் கற்பனை எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உங்க ரெண்டாவது மகனோட நான் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கணும் இல்ல..
…முடியலயே அத்த, ஒரு பொண்ணா நான் நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சிருந்தா என்ன உங்க வீட்டுக்கு மருமகளா கூட்டி வந்து இப்படி ஒரு நரக வாழ்க்கைய எனக்கு தந்து இருக்க மாட்டீங்க.. வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா நான் மாறி இப்பேன்..
…தாலி கட்டின புருஷன் கண்ணுக்கு முன்னுக்கு இருந்தும், என்னையும் அறியாம மனசு தடுமாறும் போது அசிங்கமா இருக்கு அத்த.. எனக்கே என்ன புடிக்கல.. நான் ஒழுக்கமான பொண்ணு இல்லையோன்னு என் மேலே எனக்கே கோவம் வருது..
… இப்படி அசிங்கமா எதுக்கு வாழனும்னு ஆத்திரம் வருது.. செத்துரலாமானு தோணுது.. நானும் மனுஷி தான் அத்த எனக்கும் வலிக்கும்.. வலிக்குது …”என்று முத்தை மூடி அவள் கதற
அவளது வார்த்தைகளில் இருந்த வலியின் அனலை அங்கிருந்தவர்கள் யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மூவருக்கும் இதயத்தில் நெருப்பை அள்ளி போட்ட வேதனை.
யாருக்குமே அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை.
உண்மைதானே பார்கவியின் பக்கம் இருந்து அவளது அந்த சிறிய மனதின் பக்கம் இருந்து யாரும் பார்க்கவில்லை. தாங்க முடியாத பாரத்துடன் இத்தனை நாட்கள் தவித்தவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை.
மரணத்தை விட கொடியதல்லவா மறுகிச் சாவது. அந்த நரக வேதனையை தான் இத்தனை நாள் பார்கவி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
செவ்வந்தியால் மூச்சு எடுக்க கூட முடியவில்லை. நெஞ்சை அடைப்பது போன்று இருந்தது. கால்கள் நிலத்தில் நிற்க முடியாமல் தள்ளாடியவர் சோஃபாவில் விழுந்தார்.
அஸ்வின் பதறிப்போய் “அம்மா! என்னாச்சு ம்மா?…” என்று அவர் அருகில் வர “ஒன்னும் இல்லப்பா…” என்றவர் அவன் கையை பற்றி கொண்டு அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தார். அவன் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட்டார் அல்லவா.
பார்கவியை பார்த்தவருக்கு அந்த நிமிடம் தோன்றியது ஒன்று மட்டும்தான். மனதை கல்லாக்கிக் கொண்டு அஸ்வந்தையும் பார்கவியையும் தனி குடுத்தனம் வைக்க வேண்டும் என்று எண்ணியவர், அதை வார்த்தைகளாக கோர்த்து சொல்ல முற்படும் முன்,
அபர்ஜித் “இனி இந்த கஷ்டம் உனக்கு இருக்காது பார்கவி.. நான் வீட்ட விட்டு போறேன்…” என்று சொல்ல
அஸ்வந்தும் செவ்வந்தியும் அவன் வார்த்தைகளில் அதிர்ச்சியாக பார்த்தனர்.
அஸ்வந்தோ “என்னடா பேசுற.. அதெல்லாம் எதுவும் வேணாம்…” என்று சொல்ல
அபர்ஜித் தாயின் கண்களை தான் உற்றுப் பார்த்தான். அவன் மனது புரிந்தவராக, மனது வலித்தாலும் மனப்பூர்வமாக அந்த முடிவை ஏற்றுக் கொண்டவர்,
“அவன் சொல்றது தான் சரி.. இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே அவன்தான்..அவனே தனியா இருக்கட்டும்…” என்று சொல்ல
“அம்மா! என்னம்மா நீங்களும்..கவி கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவாம்மா.. அதுக்காக அண்ணன வீட்ட விட்டு போக சொல்றதெல்லாம் சரி இல்லம்மா…” என்று அஸ்வந் சொல்ல
“அவன் உன் கூட பிறந்தவன் என்றதால துடிக்கிறியே.. இங்க ஒருத்தி கதறிட்டு இருக்காளே, இவ உன் கண்ணுக்கு தெரியிறாளா.. அவ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என் நெஞ்சுல ஊசிய இறக்குன மாதிரி இருந்துச்சு.. உனக்கு வலிக்கல…”என்று கேட்க
அவனுக்கு மட்டும் வலி இல்லாமல் இருக்குமா என்ன. சாதாரண பெண்ணாகவே அவளின் மனவேதனை அவனை தாக்கும். இப்போது புதிதாக அவள் மீது துளிர்த்த நேசம் அவளின் வேதனைகளை பல மடங்காக சுடுகின்றதே.
ஆனாலும் நினைவு தெரிந்த நாளிலிருந்து தந்தையாக பாவித்து பார்த்து, அவனை வளர்த்த தமையன்,
தாங்க முடியாத துயருடன் மனைவி இருவரில் யாரின் பக்கம் அவன் நிற்பான் .
“வேணாம் யாரும் எனக்காக வீட்ட விட்டு போக வேணாம்.. என்னால தானே இந்த வீட்டோட நிம்மதி தொலைஞ்சு போச்சு, நானே போயிடுறேன்.. என்ன அத்து விட்…” என்று பார்கவி சொல்ல எடுக்க
“வாய மூடுடி, நீ இதுவரைக்கும் பேசினது எல்லாமே நியாயமானது தான். ஆனா இதுக்கு மேல ஒரு வார்த்த பேசாத..உள்ள போ…” என்று அஸ்வந் பார்கவியை திட்ட, அவனது கோபத்தில் திகைத்து விழித்தவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அபர்ஜித்தோ “அஸ்வந் என்ன இது.. அவளே வலியிலயும் வேதனையிலயும் துடிச்சிட்டு இருக்கா.. ஆறுதல் சொல்லாம இப்படி கோபப்படுற..
…அவ கேட்டா இல்ல நான் வேற வீட்டுக்கு போயிருந்தாலாவது வாழ்ந்திருப்பேனோ என்னவோ, எதுக்கு இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்கன்னு.. நான் அவள வேணாம்னு சொன்னதும் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னதும் முதல்ல சந்தோஷப்பட்டது நான் தான்..
…ஏன்னா எங்க விஷயம் ஊருக்கெல்லாம் தெரியும்.. எல்லாம் தெரிஞ்சு, அவள புரிஞ்சுகிட்டு, ஒருத்தன் கல்யாணம் பண்ணி அவளோட வாழ்றதெல்லாம் நடக்கிற காரியம் இல்ல.. ஆனா உனக்கு எல்லாமே தெரியும்.. நீ அவள புரிஞ்சிப்ப, அவள நல்லபடியா பார்த்துப்ப என்ற நம்பிக்கையில தான் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நான் ஆசைப்பட்டது..
என்னோட நம்பிக்கைய பொய்யாக்கிடாத அஷ்வந்.. இன்னும் நீ சின்ன பையன் இல்ல.. பொறுப்பா குடும்பத்த பாத்துக்க வேண்டியது நீதான்.. அம்மாவையும் உன் பொண்டாட்டியையும் சந்தோஷமாக பார்த்துக்க…” என்று அவன் வேதனையுடன் சொல்ல
“அண்ணா! நான் பார்கவிய பாத்துக்குறேன்.. அதுக்காக நீ வீட்ட விட்டு போகணும்னு இல்ல.. இது இன்னும் எத்தன நாளைக்கு.. எப்படி இருந்தாலும் நம்ம எல்லாரும் ஒன்னா தானே இருக்கணும்…” என்று கேட்க
“அதுதான் நானும் சொல்றேன்.. நம்ம எல்லாரும் ஒன்னா, சந்தோஷமா இருக்கணும்.. அதுக்கு இந்த பிரிவு கண்டிப்பாக முக்கியம்.. அவ இடத்துல இருந்து யோசிச்சு பாரு அஸ்வந்.. பார்கவி சொல்றது சரி..
…அவ மனசு மாறுறதுக்கு ஏத்த சூழ்நிலையையும் சந்தர்ப்பத்தையும் நம்ம ஏற்படுத்திக் கொடுக்காம.. மாறு மாறுனு சொன்னா, அவ ஒன்னும் ப்ரோக்ராம் செய்யப்பட்ட மிஷின் இல்ல.. உயிருள்ள மனிஷி, அவ உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்..
“சொல்லப்போனா இத்தன நாளா என்ன பண்ணி இத சரி பண்ணலாம்னு நானே யோசிச்சிட்டு தான் இருந்தேன்.. பார்கவி சொல்றது எனக்கு சரியா தான் தோணுது.. நானும் அவளும் ஒரே இடத்துல இருந்தோம்னா கண்டிப்பா மனசு மாறாது..
…அவளோட ஏமாற்றமும் இழப்பும்தான் பெருசா தெரியும்.. அவள நம்ப வச்சு கழுத்த அறுத்து இருக்கேன் டா.. என்ன பாக்கும்போதெல்லாம் அவளுக்கு எப்படி இருக்கும்.. கொஞ்ச நாள் வீட்ட விட்டு பிரிஞ்சு இருக்கிறதால நான் ஒன்னும் செத்துட மாட்டேன்..
…ஆனா இப்டியே அவ இருந்தானா ஒரு நாள் இல்ல ஒரு நாள், அவள நம்ம முழுசா இழந்துடுவோம்.. அதுதான் உனக்கு வேணுமா?…” என்று கேட்க
அஸ்வந்துக்கு தூக்கி வாரி போட்டது. தன்னை அத்து விடுங்க என்ற அந்த வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவளை அதட்டினான். வார்த்தை அளவில் கூட அவள் பிரிவதை விரும்பாதவன் அவளை மொத்தமாக இழக்க துணிவானா என்ன.
அபர்ஜித் பேசிய வார்த்தைகள் அறையில் இருந்த பார்கவியின் காதிலும் விழுந்தது. இப்போதாவது தன் மனது புரிந்ததே என்று தான் தோன்றியது.
இந்த அளவுக்கு பேசுவாள் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. மனதில் இருந்த அத்தனை அழுத்தத்தையும் கொட்டி விட்ட பின்பு தான் அவளால் மூச்சு விட முடிந்தது. இப்போது சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.
அபர்ஜித்தின் முடிவை வேறு வழியே இன்றி செவ்வந்தியும் அஸ்வந்தும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி அவர்களிடம் அவன் கூறியது பீச் ஹவுஸில் அவன் தங்கிக் கொள்வதுதான்.

