Loading

அத்தியாயம் -26

 

துருவனின் அலைப்பேசி இருப்பிடத்தையும் மதி கூறிய அலைபேசியின் இருப்பிடத்தையும் ஒப்பிட்டு விஷ்வேஷ் அவர்களை வழிநடத்த, ஒருகட்டத்தில் இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதாகக் கணினி காட்டியது.

 

“துரு.. நீயும் அந்த நம்பருக்கு சொந்தமானவனும் பக்கத்துல தான் இருக்கீங்க. நான் ஜான கால் பண்ண சொல்றேன். பாரு” என்று விஷ் கூறியதை ‘ப்ளூடூத்’ காதொலிப்பான் மூலம் கேட்டவன் “ம்ம்” என்க, 

 

இங்கு ஜான் அதே எண்ணுக்கு மீண்டும் அழைத்தாள்.

 

சுற்றிமுற்றி துருவனும் மதியும் நோக்கினர்.

 

அது ஒரு ஆள் அரவமற்ற தெரு.. 

 

ஆளே இல்லாத பட்சத்தில் அலைபேசி ஒலிதான் தங்கள் பிடிமானம் என்று காதைக் கூர்தீட்டி இருவரும் எதிர்நோக்க, ஓர் வீட்டின் கதவு திறந்துக் கொண்டது.

 

கதவைத் திறந்தவன் கையில் அலைபேசி ஒலி எழுப்ப, 

 

“செத்தடா” என்றபடி அவனிடம் வந்த துருவன் அவன் ஃபோனைப் பிடிங்கி “யாருடா நீ?” என்றான். 

 

பேந்த பேந்த விழித்தவன் “யாருடா நீ?” என்று திரும்பக் கேட்க, 

 

அவனது அலைபேசி மீண்டும் ஒலித்தது. 

 

“ஏ கால கட் பண்ணுடி ஆள புடிச்சுட்டேன்” என்று தனது காதொலிப்பானை அழுந்தப் பிடித்துத் துரு கூற, 

 

“மூதேவி! அவ இன்னும் காலே பண்ணலை நீ யார புடிச்ச?” என்று விஷ் தலையில் அடித்துக் கொண்டான்.

 

அதில் அரண்டு போய் விழிகள் விரித்தவன் தான் பிடித்திருப்பவனை விட்டு, அவன் சட்டையை உதறி, “சாரிண்ணே.. வேற யாரோனு நினைச்சுபுட்டேன்.. உங்க தம்பியா நினைச்சு விட்றுங்க” என்று கூற, 

 

அவன் பிடித்ததில் அரண்டு இருந்தவரும் அலைபேசியை வாங்கிக் கொண்டு ஓடியிருந்தார்.

 

“இங்க பாரு உனக்கு ஹீரோயிஸம்லாம் செட் ஆவாது‌. யாருனு பார்த்து மதிய அனுப்பிவிடு. அவன் பூச்சாண்டி காட்டி மேட்டர வாங்கிட்டு வரட்டும்” என்று கூறிய ஜான் அழைப்பு விடுத்தாள்.

 

அங்கு அருகே உள்ள ஒரு வீட்டில் அலைபேசி ஒலிப்பது அமைதியான இடத்தில் நன்றாகவே கேட்டது. 

 

“மதி நீ உள்ள போய்ப் பாரு” என்று துரு கூற, 

 

அவனும் அந்த வீட்டினுள் சென்றான்.

 

அங்கு அழைப்பை ஏற்றவனோ, “ஹலோ” என்க, 

 

மதி அவன் அருகே சென்று அலைபேசியோடு தன் காதை ஒட்டி வைத்துக் கொண்டு கேட்டான். 

 

“ஹலோ சார்.. நான் ஐ.பி.ஓ.பி பேங்க்லருந்து பேசுறேன்” என்று ஜான் கூற, 

 

“ஐ..சக்ஸஸ்” என்றபடி வெளியே வந்தவன், “டேய் துருவா.. இந்த உள்ள இருக்குறவன் தான்டா” என்று கூறிவிட்டு மீண்டும் உள்ளே செல்ல, 

 

“மச்சி புடிச்சாச்சுடா” என்று துரு கூறினான்.

 

“சூப்பர்டா” என்ற விஷ் ஜானிடம் கண்காட்ட, 

 

சூடு சுரணை இல்லாது அவனிடம் திட்டுவாங்கிக் கொண்டிருந்தவள் பட்டென அழைப்பைத் துண்டித்தாள்.

 

அங்கு மதியோ “இவன்கிட்டருந்து எப்டி உண்மைய வாங்க?” என்று யோசித்து “ம்ம்.. ஐடியா” என்றவனாகத் தன் தொண்டையை செருமிக் கொண்டு “டேய்..” என்க, 

 

அந்தத் தடியனோ சுற்றி முற்றிப் பார்த்தான்.

 

“ப்ச்” என்று தோளைக் குலுக்கிக் கொண்டு, உள்ளே செல்ல அவன் அடியெடுத்து வைக்க, 

 

மீண்டும் ‘ராரா’ குரலில் “டேய்..” என்று மதி அழைத்தான்.

 

அதில் மீண்டும் திரும்பியவன் சுற்றி முற்றி பார்த்து “யாருடா அது?” என்க, 

 

“நான் தான்டா.. வேந்தன்” என்று கர்ஜிப்பது போல் கூற முயற்சித்தவன், ‘சை.. பேயா நடிக்குறது எவ்வளவு கஸ்டமா இருக்கு’ என்று நினைத்துக் கொண்டான். 

 

“டேய்.. எவன்டா அவன்?” என்று அந்தத் தடியன் கத்த, 

 

பக்கத்திலிருக்கும் மேஜையிலிருந்த பூச்சாடியை கஷ்டபட்டு உருட்டிவிட்டவன், “அதான் சொல்றேன்ல.. நான் தான்டா வேந்தன்” என்றான்.

 

“வே..வேந்தனா..யா..யாரு” என்று உருண்டு விழுந்த பூச்சாடியைப் பார்த்தவாறு தடுமாற்றத்தோடு அவன் வினவ, 

 

‘அய்யோ.. அவன் அப்பன் பேரு மறந்துபோச்சே’ என்று எண்ணியவன், “ஏன் உனக்குத் தெரியலையோ” என்று கத்தினான்.

 

அதில் அரண்டு விழித்தான், “ஏய்.. யாருடா நீ? அந்தத் தனசேகரன் அனுப்பின ஆளா?” என்று கத்த, 

 

‘ஹப்பா.. பேரு நியாபகம் வந்துடுச்சு.. அந்தச் சின்ன சேகர் அண்ணன் பேரு குணசேகரன் தானே..’ என்று நினைத்துக் கொண்டு, “டேய்.. குணசேகரன் புள்ள வேந்தன்டா.. எங்கடா என் பிணம்” என்று கத்தியபடி மீண்டும் அருகிலிருந்தவற்றையெல்லாம் உருட்டிவிட்டான். 

 

‘எங்க அந்த ஸ்விச்சு போர்டு.. இவனுங்களுக்கு காஞ்சனா பட எஃபெக்டு தான் வேலைக்கு ஆகும்’ என்றவன் ஸ்விட்ச் போர்டைத் தேடி சென்றான். 

 

அதிலிருந்து ஒவ்வொன்றாக அழுத்தி விளக்கின் பொத்தானைக் கண்டுகொண்ட மதி, விளக்கை இயக்கி, அணைத்து விளையாட, 

 

“எ..ஏய்.. யாரு..ஏய்.. வே..வேந்தா.. நான் உன் பொணத்தை எடுக்கலைடா. சு..சும்மா உன் சித்தப்பன மிரட்டினேன்” என்றான். 

 

மீண்டும் ஒரு கண்ணாடி தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாய் உடைய அதில் அலறியே விட்டவன், “ச.. சத்தியமா நான் எதும் பண்ணல வேந்தா, நம்பு. உன் சித்தப்பன் குடி போதைல ஒருநாள் நீ இல்லாம போனா அ..அவர் பையன் தான் இந்த மொத்த சொத்துக்கும் அதிபதினு சொன்னாரு. நானும் தூண்டிவிட உன்னைப் போ..போட்டுத் தள்ள ஐடியா கொடுத்தேன். ஆனா அ..அப்பவும் உன்மேல உள்ள பாசத்துல என்னைத் திட்டிட்டு போயிட்டார். பிறகு எங்களுக்குள்ள வந்த ஒரு பிரச்சினைல நாங்க எதிரிகளாகிட்டோம். 

 

அப்ப ஒருமுறை நான் செஞ்ச ஒரு விஷயம் அவர்கிட்ட மாட்டி என்னை மிரட்டினார். நான் அவர் போதைல உளறின வீடியோவ அனுப்பினேன். அவரு இதெல்லாம் என் புள்ள நம்பமாட்டான்னு சொல்லி என்னை மடக்கின விஷயத்துல என் மேல கேஸ் போட, அதுலருந்து நான் தப்பி வரவே பெரும் பாடா போச்சு. அந்தச் சமயம் தான் நீ செத்து போன. அவரா ஃபோன் போட்டு இது என் வேலையானு கேட்க நானும் அவரை மிரட்டிப் பார்ப்போம்னு தான் அப்படி பேசினேன். இன்னும் சொல்லணும்னா நீ செத்ததே அப்ப தான் எனக்குத் தெரியும். தற்கொலைனு கூடத் தெரியாது அப்ப. கொஞ்சம் முன்ன தான் உன் பொணம் காணாம போனதே தெரியும்‌” என்று அனைத்தையும் கூறி முடித்தான்.

 

அதைக் கேட்டவுடன் மதிக்கு புஸ்ஸெனக் காற்று இறங்கிய உணர்வு. 

 

திடீரென ஏற்பட்ட அமைதியில் மேலும் கதிகலங்கிப்போன அந்தத் தடியன் விறுவிறுவென வீட்டு பூஜையறைக்கு சென்றுக் கொண்டான். 

 

வெளியே வந்த மதியைக் கண்ட துரு, “என்னடா எதும் தெரிஞ்சதா?” என்று வினவ, 

 

“இல்லடா” என்றவன் அவனையும் கூட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.‌ 

 

“என்னாச்சு மகி” என்று ஜான் ஆர்வமாக வினவ, 

 

வாடிய முகத்துடன் நடந்தவற்றைக் கூறியவன், “ச்சை.. கடுப்பா வருது” என்றான்.

 

“தளராத மதி.. வேற ஐடியா ஏதும் கிடைக்கும்” என்று அகா கூற, 

 

“சரி எதுக்கும் நான் அந்தப் பையன் வீட்ல ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு வரேன்” என்றுவிட்டு செல்ல, ஜான் தான் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

 

அவளுடன் அமர்ந்த தோழர்களில் “ஜான்.. ச்சில்.. இதில்லைனா வேற வழி எதும் இருக்கும்” என்று விஷ் கூற, 

 

அவளிடம் அதே அமைதி. 

 

“ஜான்..” என்று அகா அவள் தோளில் கரம் வைக்க, 

 

“நான் ரூமுக்கு போறேன் கைஸ்” என்றுவிட்டுச் சென்றாள்.

 

“ஜான இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்குடா” என்று அகா கூற, 

 

“எப்பவும் எதையுமே டேக் இட் ஈசியா கலகலனு கடந்து வர்றவள திடீர்னு இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்று விஷ் கூறினான்.

 

“அவளோட மொத்த எமோஷன்ஸும் மதி தான். அவ என்கிட்ட அவ்வளவு உறுதியா சொன்ன வார்த்தைடா அது. மதிக்கு ப்ரபோஸ் பண்ணிட்டு, அவனை லவ் பண்ணலை, பிடிச்சிருக்கு, லவ் பண்ணலாமானு கேட்டிருக்கேன். ஆனா லவ் பண்ணிட்டா விடவே மாட்டேன்னு அவ்வளவு உறுதியா சொன்னா. அந்த உறுதி தான் அவளை இவ்வளவு அழ வைக்குது” என்று துரு கூற, 

 

இருவரும் ஆமோதிப்பாகத் தலையசைத்தனர்.

 

அங்கு கட்டிலில் தன் முட்டிகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தவளுக்கு உடலெல்லாம் நடுங்கும் உணர்வு. 

 

நடுக்கத்துடன் நிமிர்ந்து தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்தவளுக்கு அழையா விருந்தாளியாய் சில நினைவுகள்.

 

அன்று அவனைக் காண மருத்துவமனை வந்தவள் வெளியே காத்திருக்க, தனது வேலை நேரம் முடிந்து வந்தவன் அவளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தான். 

 

அவர்களது ஆஸ்தான இடமான அந்த வெதுப்பகம் வந்தவர்களிடம் சின்ன உரையாடல்.

 

“என்ன இன்னிக்கு ரொம்ப லேட்?” என்று அவள் வினவ, 

 

“ஒரு சூசைட் கேஸ்மா” என்றான். 

 

“என்னாச்சு?” என்று அவள் வினவ, 

 

“ட்ரூ லவ்.. மூனு வருஷம் பண்ணிருக்காங்க. அந்தப் பையன் ஏதோ ஆக்ஸிடென்ட்ல செத்துடானாம். அதை ஏத்துக்க முடியாமல் தற்கொலை முயற்சி பண்ணிருக்கா இந்தப் பொண்ணு” என்றான்.

 

“ப்ச்.. வலி தான்.. ஆனா அதுக்கு இப்படியொரு முடிவா?” என்று ஜான் அங்கலாய்க்க, 

 

“ஹ்ம்.. ரொம்ப தைரியசாலி. அதான் இந்த முடிவு” என்றான். 

 

பெண்ணவள் அவனைப் புரியாது பார்க்க, “பெரும்பாலும் சூசைட் பண்றவங்கள கோலைனு சொல்றோம். லிட்ரலி நானும் அதை ஏத்துக்கும் ஒருத்தன் தான். ஆனா உண்மைலயே அதுக்கு நிறையா தைரியம் வேணும்மா. அவ்வளவு ஈசி இல்ல சூசைட் பண்றது. தெரிஞ்சே நமக்கு நாமே மரணத்தை ஊட்டி அதை அணுவணுவா அணுபவிச்சு சாகுறது பெரும் கொடுமை. கணநேர உந்துதல். நான் செத்துட்டா உன்னோட மன உணர்வு எப்படி இருக்கும் யோசி” என்றான்.

 

அவ்வளவு தான்! புசுபுசுவெனக் கோபம் வந்துவிட்டது அவளுக்கு. 

 

“ஷட் அப் மகி” என்று கத்தியேவிட்டாள். 

 

அதில் அரண்டு போனவன், “ஏ ஜானு.. ஜஸ்ட் அ ஸே (just a say).. சும்மா தான் சொல்றேன். நெருப்புனு சொன்னா சுட்டுடுமா?” என்று அவன் கூற, 

 

அவன் கூற்றை ஆமோதித்த போதும் மனம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. 

 

“ஒரு வாரம் கழிச்சு பார்க்க வந்திருக்கேன். இப்படியான வார்த்தைகள் தான் பேசணுமா?” என்றவள் கண்களில் கண்ணீர் இல்லை தான். ஆனால் நாசி சிவந்து குரல் நழிந்து வந்தது. 

 

தன் விடயத்தில் அவள் எத்தனை தூரம் ஆழ்ந்திருக்கின்றாள் என்பது புரிய, “இங்க பாரு ஜானு. சாவு ஒன்னும் அபூர்வம் கிடையாது. எல்லாருக்கும் வரும் ஒன்றுதான். எனக்கும் வரும் உனக்கும் வரும். இப்படியொரு சொல்லுக்கே நீ எமோஷனல் ஆனா இன்னிக்கு நான் பார்த்த கேஸ் போல தான் நாளைக்கு யாரோ உன்னை ட்ரீட் பண்ண வேண்டி வரும்” என்றான்.

 

“விளையாட்டுக்குப் பேசினா நானும் சிரிச்சு கடந்துடுவேன் மகி. சீரியஸ் டாபிக்ல இ..இப்டி பேசாத. எனக்குப் பிடிக்கலை” என்று அவள் கூற, 

 

அப்போதும் விடாது “உண்மை கசந்தாலும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என்றான். 

 

“எப்பா டாக்டர்.. ஒத்துக்குறேன். நான் ஒன்னும் நீ இல்லைனா சூசைட்லாம் பண்ணிக்க மாட்டேன். இவர் பெரிய இவுரு.. இவரு போனா நாங்களும் பின்னோடயே வர்றதுக்கு” என்று அவள் கூற, 

 

அவள் கூறியதில் வாய்விட்டுச் சிரித்திருந்தான்.

 

அந்த நினைவுகளில் மூழ்கி மீண்டவள், “நான் உன்னை இழக்கக் கூடாது மகி. ப்ளீஸ் வந்துடு. இ..இந்த வலி எனக்கு இப்பவே வேண்டாம். உன்னோட எனக்கு ஒரு லைஃப் வேணும். ப்ளீஸ்” என்று கலங்க, 

 

“ஜானு…” என்றபடி அவள் முன் தோன்றிய மகி அவளைத் தீண்டாதெனத் தெரிந்தும் முத்தங்களை வாரி வழங்கினான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்