Loading

அத்தியாயம்-24

 

“ஜானுமா..” என்று மதி அவனவள் கன்னம் பற்ற, 

 

அவன் தொடுகையை ஸ்பரிசிக்க முடியவில்லை என்றாலும் மனதால் உணர முடிந்தது அவளுக்கு. 

 

“பயமா இருக்கு மகி.. எ..என்னால உன்னை விட்டுட முடியாதுடா” என்று அவள் கூற, 

 

“ஜான்.. முதல்ல நான் பேசுறதைக் கேளு. என்னோட உடம்பை கண்டுபிடிச்சாலே போதும் நான் பழையபடி மாறிடுவேன்” என்று கூறினான்.

 

அதில் அகல விழி விரித்தவள், “எப்படி?” என்று வினவ, 

 

“என்னை என் உடம்பவிட்டுப் போகச் சொன்ன நீதான் அதுக்கான யோசனையையும் முதல்லயே சொல்லிருக்க. ரெண்டையுமே சீரியஸா எடுத்துக்காம விட்டுட்டோம். நீ சொன்னல எதும் சி.ஐ.டி வேலை பார்க்கணுமானு. அதேதான். என்னோட பாடியோட சேர்ந்து இன்னொரு பாடியும் காணாமல் போயிருக்குல? அந்த வீட்டுக்கு நான் போனேன். ஐ திங்க் நான் பார்க்க வேண்டிய சி.ஐ.டி வேலை இந்த ரெண்டு உடம்பையும் கண்டுபிடிக்குறதுதான்னு நினைக்குறேன்” என்று தெளிவுரக் கூறினான்.

 

“அ..அங்க போனதுக்கு எதும் பலன் கிடைச்சுதா?” என்று ஜான் வினவ, 

 

“சரியா தெரியலை” என்றவன் தான் கண்டவற்றைக் கூற துவங்கினான்.

 

அந்த இன்னொரு உடலுக்குச் சொந்தமானவன் ஒரு பணக்கார வீட்டைச் சேர்ந்த இளைஞன். காதல் தோல்வியின் காரணமாகத் தூக்கிட்டு தன் உயிரை அவன் மாய்த்திருக்க, அவனது உடல் மருத்துவமனைக்கு உடற்கூற் ஆய்வுக்கு எடுத்துவரப்பட்டது. அந்தச் சமயம் பார்த்துத் தான் அவ்வுடலும் மதியின் உடலும் காணாமல் போனது!

 

அங்கு அப்பெரிய வீட்டில், அந்த இன்னொரு சடலத்திற்கு சொந்தமான இளைஞனின் தந்தை குணசேகரன் தன் அலைபேசியில் பெரிய பெரிய அதிகாரிகளுக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருந்த சமயமே மதி அங்கு தோன்றினான்.

 

அனைவர் முகத்திலும் அத்தனை கலக்கத்தைக் கண்டவன் அங்குள்ள ஒருவரின் முகத்தில் மட்டும் தெரிந்த படபடப்பைக் குறித்துக் கொண்டான். 

 

“அதெப்படி காணாம போகும்? சிசிடிவி செக் பண்ணீங்களா?” என்று குணசேகரின் மனைவி சாரு கண்ணீரோடு வினவ, 

 

“கேட்டேன்.. அதைதான் பார்த்துட்டு இருக்காங்க” என்று கூறினார்.

 

“அப்பவே எம்பொண்ணுக்கு கட்டிவைக்கச் சொல்லிக் கேட்டேன். முதல்லயே அவளுக்குத் தான் இவன்னு பேசி வச்சிருந்தா இப்படி எவளையோ காதலிச்சு கயித்துல தொங்கிருப்பானா?” என்று தன் முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடி, குணசேகரின் தங்கையான ஊர்மிளா அழ, 

 

அவரது கணவர் மாரிமுத்து, “எப்ப எதைப் பேசணும்னு விவஸ்தையே கிடையாதாடி உனக்கு?” என்று கத்தினார்.

 

“அண்ணி சொல்றதுல என்ன தப்பிருக்கு அண்ணா? ஏதோ வீணா போனவள லவ் பண்ணிட்டு சுத்திருக்கான். அவ வேணாம்னா பொண்ணா இல்லை? இதுக்கு போய் தற்கொலை ஒரு முடிவா?” என்று சாரு கூற, 

 

“இப்ப இந்தப் பேச்சு தேவையாக்கா?” என்று குணசேகரின் தம்பி மனைவி மதுமிதா கேட்டார்.

 

மதுமிதாவின் கணவர் தனசேகரன் ஏதும் பேசவில்லை. ஒருவித பதற்றம் அவர் முகத்தில் இருப்பதை மதியால் உணர முடிந்தது. 

 

“அண்ணனோட பாடிய யாருப்பா கடத்த போறாங்க? அதுல என்ன யூஸ் இருக்கு?” என்று தனசேகரன் மகன் பிரபு வினவ, 

 

தனா “எ..எனக்கும் தெரியலைப்பா” என்றார்.

 

“எம்புள்ளைய யாரு எடுத்துட்டுப் போனாங்களோ தெரியலையே.. கடைசில இந்த வீட்டோட தலை வாரிசுக்கு ஈம காரியம் கூடச் செய்ய முடியாதா?” என்று கேட்டுச் சாரு அழ, 

 

“அக்கா.. போலீஸ்ல கொடுத்திருக்குல்ல? நீங்கக் கவலைப்படாதீங்க க்கா.. நம்ம பையனோட உடம்பை காப்பாத்தி கொடுத்துடுவாங்க” என்று மது கண்ணீரோடு ஆறுதல் கூறினார்.

 

“உசுர புடிச்சு வைக்க முடியலை மது.. உடம்பையாவது உருப்படியா எரிச்சு அந்தச் சாம்பள அள்ளிப் போடவாது விடுறாங்களா?” என்று சாரு கதற, 

 

தன் சிவந்த கண்களை மூடித் திறந்த குணா மனைவியைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

அழுதபடியே யாவரும் அவரவர் அறைக்குச் செல்ல, பதற்றத்துடன் மொட்டை மாடிக்குச் சென்ற தனா யாருக்கோ அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். 

 

அவரோடே வந்த மதி தடுப்பு சுவரில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருக்க, 

 

அழைப்பு ஏற்கப்பட்டதும் பதட்டத்துடன் தனசேகரன் “ஹ..ஹலோ” என்றார்.

 

சட்டென அவர் அலைபேசியோடு ஒன்றி நின்ற மதி இருவர் பேச்சையும் ஒட்டுக் கேட்க, 

 

எதிர்முனையில் “என்ன புள்ளை செத்துட்டானா?” என்று யாரோ கேட்டார்.

 

“இ..இது உன் வேலையா?” என்று இவர் பதற்றப்பட, 

 

“ஏய்.. உன் வாய்மொழி வாக்கியம் என்கிட்ட இருக்குறவரை நீ தான் கொலைகாரன். எதையாவது செய்யப் பார்த்த, உன் அண்ணனுக்கு அதை அனுப்பிடுவேன். பிறகு நீ தான் கொலையாளினு உன்னைப் புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க” என்று மிரட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

அந்த அலைபேசியையே அவர் வெறித்து நிற்க அந்த எண்களை மனனம் செய்துக் கொண்ட மதி அடுத்ததாகக் காவலர்களிடம் சென்றான்.

 

அங்குக் காணொளிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்த காவலர்கள் அருகே அமர்ந்தவன், “என்ன தெரிகிறது” என்றபடி காணொளியைப் பார்க்க, 

 

முற்றும் முழுதும் கருப்பு சட்டை, கருப்பு கால்சாராய், கருப்பு முகமுடியென அணிந்து கொண்டு உள்ளே குதித்த இருவரைக் கண்டனர். 

 

அதை நிறுத்தி, உற்றுநோக்கிப் பார்க்க, இருவரும் ஆண்கள் என்பதைத் தவிற வேறு ஏதும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. 

 

“இதென்னடா மகிழா உனக்கு வந்த சோதனை” என்று நினைத்துக் கொண்டவன் காவலர்களைப் பார்க்க, 

 

“பையன் பெரிய இடம். பாடி கிடைக்கலைனா பெரிய பிரச்சினை ஆகிடும்னு மேலிடத்துலருந்து அழுத்தம் தாங்கலை” என்று ஒருவர் கூறினார்.

 

மீண்டும் காணொளி இயக்கப்பட, ஒருவன் மட்டும் உள்ளே சென்று மருத்துவ அங்கியில் இரண்டு பிணங்களையும் தள்ளிக் கொண்டு வர, சாக்குப்பையில் மூட்டைக் கட்டிக் கொண்டு மீண்டும் தப்பியிருந்தனர்.

 

“சார் ரெண்டு பொணத்தை திருடிட்டுப் போறானுங்க. ஒன்னு குணா சாரோட பையன் வேந்தன். இன்னொன்னு யாரோடது?” என்று ஒருவர் வினவ, 

 

“அது என்னோடது தான் சார்” என்று மதி கூறினான். என்ன பயன்? அவன் கூறுவது தான் யாருக்கும் கேட்காதே!

 

“தெரியலை மூர்த்தி” என்று அவர் கூற, 

 

“அட ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் ஒரு மூர்த்தி இருக்காங்கப்பா” என்றபடி அந்த மூர்த்தியின் மீசையைப் பிடித்துத் தூசி தட்டிவிட்டான். 

 

“அந்த பாடிக்கு சொந்தமானவங்கக் கிட்டருந்து கம்பிலைண்ட் கூட வரலையே சார்” என்று மூர்த்தி வினவ, 

 

இங்குத் தூக்கிவாரி போட்ட உணர்வில் “யோ மூர்த்தி.. இப்ப தானே உன் மீசைக்கு பணிவிடை செஞ்சேன்.. அதுக்குள்ள கோர்த்து விடுற” என்று மதி கூறிக் கொண்டான்.

 

“மூடி மறைச்சிருப்பானுங்க மூர்த்தி. பாவம் அந்தக் குடும்பத்துக்கு இன்னும் விஷயம் தெரியாது போல. இல்லைனாலும் எதையாவது சொல்லி இப்போதைக்கு சமாளிச்சு வைச்சிருப்பானுங்க” என்று பெரிய அதிகாரி கூற, மூர்த்தியும் தலையசைத்துக் கொண்டான்.

 

அங்கும் வேறு ஏதும் தடயம் இப்போதைக்கு இல்லை என்பது புரிந்தவுடன் மீண்டும் வேந்தன் வீட்டிற்கு சென்றான். 

 

அங்கு அவன் சென்றபோது இருந்த அதே நிலை. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்க்க, வேந்தனின்‌ தாய் தந்தை அறையில் அதே அழுகாட்சி தான்.

 

வருத்தமான பார்வையோடு அவன் ஊர்மிளா மாரிமுத்து அறைக்குச் செல்ல, அவர் “ஒழுங்கா என் புள்ளையை கட்டிக்க சம்மதம் சொல்லிருந்தா இதெல்லாம் தேவையா அவனுக்கு? நேரத்தைப் பாருங்க.. உசுரும் போச்சு உடம்பும் போச்சு. இந்தச் சாம்ராஜ்யதையே ஆள வேண்டியவன் இப்படியா அல்பாய்சுல போகணும்” என்று அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார்.

 

“செத்த பிறகும் அந்தப் பையன நிம்மதியா விடுதா இந்தம்மா.. அவன் அவனுக்கு இருக்குற விருப்பத்தை யாருதான் புரிஞ்சுக்குறாங்க” என்று புலம்பிய மதி அடுத்த அறைக்குச் செல்ல, 

 

அங்குக் கண்ட காட்சியில் அரண்டு விழித்தான்.

 

ஊர்மிளாவின் மகள் ரூபாவும், தனசேகரின் மகன் பிரபாவும் கட்டியணைத்து நின்றிருக்க, 

 

“என்னால தான் அத்தான் செத்துட்டாங்களா?” என்று கண்கள் பனிய அந்தப் பெண் கேட்டாள்.

 

“நிச்சயம் அண்ணா அவ்வளவு முட்டாள் கிடையாது ரூபா.. இதுல வேற ஏதோ இருக்கு” என்று பிரபா கூற, 

 

“அத்தான் லவ் பெய்லியர்னால தான்னு சொன்ன வாய்ஸ் ரெகார்ட் இருக்கு. அ..அப்ப என்னால தானே?” என்றாள்.

 

“இந்தாமா.. அப்ப அவன் உன்னைத்தான் லவ் பண்ணானா? நல்லா இருக்கு.. உங்கம்மா எம்பொண்ண வேணாமுன்டான் எம்பொண்ண வேணாமுன்டான்னு குதியா குறிக்குறாங்க.. நீ இப்படி சொல்ற” என்று மதி இருவருக்கும் அருகே வந்து தான் பேசுவது அவளுக்குக் கேட்காது என்று தெரிந்தும் கூறினான்.

 

“இல்ல ரூபா.. இதுல வேற ஏதோ இருக்கு. அண்ணா உன்னை விரும்பினார் தான். ஆனா நீயும் நானும் விரும்புறோம்னு சொன்னதுமே முறையா விலகிட்டார். அண்ணா உன்னை விரும்பினதும், நீ என்னை விரும்பினதும் தெரிஞ்ச ஒரு ஆள் தான் இதைப் பண்ணிருக்கனும். யாரா இருக்கும்” என்று பிரபா யோசிக்க, 

 

“நல்லா யோசிடா.. நீ யோசிக்குறதுல தான் என் உடம்பே இருக்கு” என்று மதி கூறிக் கொண்டான்.

 

“நம்ம லவ் தெரிஞ்ச ஒரே ஆள் என் அப்பா தான். ஆனா அவருக்கு அண்ணானா உயிரு. எனக்குத் தெரிஞ்சு பெரியப்பாவோட எதிரிகள் யாராவது தான் இதைச் செஞ்சிருக்கனும்” என்று பிரபா கூற, 

 

“கொல்றவங்களுக்கு அத்தானோட லவ் எப்படி தெரிஞ்சிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினாள்.

 

“அதான? பிள்ளை பாயிண்டா கேட்குதுபா” என்று மதி கூறிக் கொள்ள, 

 

“நீ ஏன் தெரிஞ்சே செஞ்சிருக்கணும்னு நினைக்குற? சும்மா ஒரு காரணத்துக்கு லவ் பெய்லியர்னு அவங்களா போட்டு அண்ணா வாய்ஸ்ல மிமிக் பண்ணிருக்கலாமே?” என்று பிரபா கூறினான். 

 

“அட இவனும் பாயிண்டா பேசுறானே? டேய் என் உடம்பை எவந்தான்டா கடத்திருப்பான்” என்று மதி புலம்ப, 

 

“சரி நான் என் ஃப்ரண்டு மூலமாவும் விசாரிக்கப் பார்க்குறேன். நீ எதையும் நினைச்சு மனச போட்டுக் குழப்பிக்காத” என்று கூறி அவளைப் பிரபா அனுப்பி வைத்தான்.

 

ஒரு பெருமூச்சுடன் மதி அடுத்த அறை செல்ல, மதுமிதா தனது உறவினர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து நடந்த கதையைக் கூறி அழுதுகொண்டிருந்தார். 

 

தனசேகரன் பால்கனியில் அமர்ந்து கொண்டு படபடப்போடே அலைபேசியை பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தார்.

 

சிலநிமிடங்கள் அவர் அருகேயே அமர்ந்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்த மதி, புறப்பட்டு ஜானைத் தேடி வந்திருந்தான்.

 

“சூப்பர் மகி.. அந்த ஃபோன் நம்பர சொல்லு யாருனு பார்ப்போம்” என்க, தானும் அந்த இலக்கங்களைக் கூறினான். 

 

தனது அலைபேசியில் அழைத்துப் பார்த்தவளுக்கு முதல் இரண்டு முறை அழைப்பு எடுக்கப்படாமல் போக, மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட்டது.

 

பாவையோ “ஹலோ..” என்க, 

 

“ஹலோ சொல்லுங்க” என்று ஒரு ஆணின் குரல் கேட்டது. 

 

“சார் நாங்க ஐபிஎஃப்பி பேங்க்ல இருந்து பேசுறோம். உங்களுக்கு லோன் எதும் வேணுமா?” என்று பாவைக் கேட்க, 

 

“லோன்லாம் எதுவும் வேணாம் மேடம்” என்றார்.

 

“தவணை முறைல கடனை அடைக்கலாம் சார். குறைந்த வட்டில” என்று அவள் பேச்சு கொடுத்து, 

 

“உங்க நேம் எங்க வர்க் பண்றீங்கனு சொல்லுங்க சார். அதுக்கு தகுந்த சலுகைகள் இருந்தா சொல்றேன்” என்க, 

 

“அதான் சொல்றேன்லமா. எனக்கு எந்த லோனும் வேணாம்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்