அத்தியாயம் 23_மு.தா

Loading

அத்தியாயம் 23

 

அன்று ஞாயிற்று கிழமை. பார்கவியும் அஸ்வந்தும் அவர்களின் அறையில் தான் இருநதனர்.

 

அறையில் சிறிய டேபிள் இருக்க அங்கே அமரந்து, அடுத்து வரும் நாட்கள் மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடங்களை குறிப்பாக எடுத்துக் கொண்டிருந்தாள் பார்கவி.

 

அஸ்வந்தும் சோஃபாவில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அடிக்கடி பார்க்கவி அவனை திரும்பி திரும்பி பார்த்தாள். காரணம் அவனது செயல்பாடுகள்.

 

இதோ இத்தனை நாட்கள் பாடசாலை சென்று வருகின்றாள். பாடசாலை பக்கத்தில் அவனது அலுவலகம் என்பதால் தினமும் மதிய சாப்பாட்டிற்கு அங்கு தான் வருகின்றான்.

 

எப்போது இருந்து துவங்கியதோ இந்த பழக்கம். கண்மணியுடன் நெருங்கி பழகுகின்றான். அவள் கொண்டுவரும் உணவைத்தான் சாப்பிடுகின்றான். சாப்பிட்டு முடித்ததும் அவளது கைகுட்டையை வாங்கித்தான் கையை துடைக்கின்றான்.

 

அவனுக்காகவே தினம் ஒரு கைக்குட்டை என்று கொண்டு வருகின்றாள் கண்மணி.

 

அதேபோன்று மாலை ஆனால் அவளிடம் டீ வேண்டும் என்று பாலுக்கு அடம் பிடிக்கும் குழந்தையாக வந்து நின்று விடுகின்றான். கண்மணியும் அவனுக்காக தன் கையினால் டீ தயாரித்து பிளாஸ்கில் எடுத்து வருகின்றாள்.

 

இதையெல்லாம் பார்கவி அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாள். கண்மணி முன்பு இதெல்லாம் செய்தது அவன் மீது இருந்த ஒரு தலை காதலால்.

 

இப்போது அவளுக்கு பார்கவி தான் அவன் மனைவி என்று தெரிந்த பின்னர் சற்று சங்கடமாக இருந்தது.

 

ஒரு தடவை நாசுக்காக சொல்லியும் பார்த்து விட்டாள். உடனே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு “அப்போ சாப்பாடு எடுத்து வர மாட்டியா…?” என்று கோபித்துக் கொண்டான்.

 

கண்மணி காதலினால் செய்த விடயங்கள் எல்லாம், அஸ்வந்தை பொருத்தவரை நட்பின் அதிகப்படியான பாசமாகவே தெரிந்தது.

 

அவனுக்கு திருமணமான பின்னர் கண்மணி நாசுக்காக விலகுவதும். அது புரியாமல் இவன் ஒட்டி உறவாடுவதும், பார்கவிக்கு எரிச்சலாகவும், அதே நேரம் ஏதோ ஒரு நெருடலாகவும் இருந்தது. அதனால் தான் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

பார்கவின் மனநிலை அவ்வாறு இருந்தால் அஸ்வந்தின் மனநிலை வேறு விதமாக இருந்தது.

 

அன்று உஷ்ணம் அதிகமாகவே இருந்தது. அறையில் ஏசி போட்டு இருக்க, அவள் பேனையும் ஓட விட்டு அமர்ந்திருந்தாள்.

 

அவளின் பக்கவாட்டாக அமர்ந்திருந்தவனுக்கு பேன் காற்றின் மூலம் சேலை விலகி, அவளது வெண்ணிற இடை பளிச் என்று கண்ணில் பட, திருட்டுத்தனமாக நான்கு ஐந்து முறை அவன் பார்வை அங்கு தான் சென்று வந்தது.

 

மனதின் உள்ளே ‘அட என்னடா குஷி பட சீன் ரீகிரியேட் ஆகுது எனக்கு…’ என்று அலறிக்கொண்டான்.

 

ஒரே அறையில் இப்பதால் சோஃபாவில் பார்கவி புரண்டு படுக்கும்போது அவளது சேலை விலகி இடை, அங்கங்கள் தெரியும், ஆனால் அதை சாதாரணமாக கடந்துவிடுவான்.

 

ஆனால் இப்போது எல்லாம் அவன் பார்வை வேறு விதமாக மாறி இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது .

 

மதிய உணவின்போது பார்கவி, மாளவிகா, கண்மணி என்று மூன்று பேருடன் அமர்ந்து தான் சாப்பிடுவான்.

 

வீட்டில் இருக்கமாக இருக்கும் பார்கவி இலக்கமாக இருப்பது கண்மணி மாளவிகாவுடன் மட்டுமே.

 

அப்போது அவளது சாதாரண பேச்சு, சிறிய கீற்று போன்ற புன்னகை,

 

பாடசாலையில் சேர்ந்த சிறிது நாட்களிலே அவளை மாணவர்களுக்கு பிடித்து போக, எப்போதும் மாணவர்கள் அவளைச் சுற்றி இருப்பார்கள். அவர்களுடன் இருக்கும் போது அவளது முகத்தில் இருக்கும் அந்த சந்தோஷம்.

 

எப்போதும் பொறுமையாக நடந்து கொள்ளும் அவளது நடவடிக்கைகள். இவையெல்லாம் சிறுக சிறுக அஸ்வந்தின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவளை மனைவியாக மனது யோசிக்க ஆரம்பித்து விட்டது.ரசிக்கவும் துவங்கி விட்டான்.

 

அதுதான் இன்று அவனது கள்ளப் பார்வைக்கு காரணம். ‘அச்சச்சோ!.. இதுக்கு முன்னாடி எல்லாம் எனக்கு இப்டி தோணுது இல்லையே.. 25 வயசு வரைக்கும் ஒழுக்கமா இருந்தேனே..

 

…திடீர்னு வயசுக்கு வந்துட்டேனா என்ன.. ஏன் இவ என் கண்ணுக்கு தாறுமாறா தெரிஞ்சு தொலைக்குறா..இது சரி இல்ல…’ என்று மனதில் நினைத்தவன் உடனே பேனை ஆப் செய்து விட்டான்.

 

அவள் அவனை திரும்பி ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை, ஏசி வேலை செய்கின்றது என்று விட்டுவிட்டாள்.

 

ஆனால் சேலை மீண்டும் விலக இப்போதும் அவன் பார்வை மீண்டும் அங்கு தான் சென்றது. ‘ஆண்டவா!.. இந்த சின்ன வயசுல எனக்கு இப்டி ஒரு சோதனையா…’ என்று புலம்பிக்கொண்டவன்

 

‘இது சரி வராது…’ என்று ஏசியையும் ஆப் பண்ணிவிட்டான். ஒருவேளை அதனால் வரும் காற்றில் தான் அவள் சேலை அசைகிறது என்பது இன்ஜினியரிங் மாறுதலான எண்ணம்.

 

ஏசியை ஆப் பண்ணி விட, சிறிது நேரம் பொறுத்த பார்கவி, கையில் ஏசி ரிமோட்டை வைத்திருந்தவனிடம் “எதுக்கு ஏசிய ஆப் பண்ணுன.? சூடா இருக்குல்ல…” என்று கேட்க,

 

‘உனக்கு ஏசி போடலன்னா சூடா இருக்கு.. எனக்கு போட்டா சூடாகுது..’ என்று மனதில் பதில் சொன்னவன்

 

“சாரி” என்று சொல்லி ஏசியை போட்டுவிட்டு அறை விட்டு வெளியேறி விட்டான் தோட்டத்திற்கு. அங்கே அவன் தனக்காக பிரத்யோகமாக அமைத்துக் கொண்ட இடத்தில் கொஞ்ச நேரம் உலாவியவன், பின் ஸ்போர்ட்ஸ் கிளப் சென்று விட்டான்.

 

இரவு எட்டு மணி இருக்கும்.

நாள் முழுவதும் அறையிலேயே இருந்த பார்கவிக்கு சற்று அலுப்பாக இருக்க, வெளியே வந்து ஹாலை எட்டிப் பார்த்தாள்.

 

செவ்வந்தி சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ அவரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

செவ்வந்திக்கு உள்ளுக்குள் சற்று குளிர் சாரல் வீசியது, மருமகள் தனுடன் வந்து அமர்ந்ததும்.

 

இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “இந்த சேனல் பாக்குறியா பார்கவி.. இல்ல வேற ஏதும் மாத்தட்டுமா…?” என்று கேட்க

 

“இல்ல இதுவே இருக்கட்டும் அத்த…” என்று வந்தது பதில். அந்த வீட்டுக்கு வந்ததுக்கு பின் அவளாக சேர்ந்தது போன்று இரண்டு வார்த்தை பேசியது இதுதான் முதல் தடவை.

 

பார்கவியின் மனது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை நினைத்து சந்தோஷப்பட்டவர், அவளுடனே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இரவு மணி ஒன்பது இருக்கும் அஸ்வந் உள்ளே வந்தவன், மனைவியும், தாயும் ஒன்றாக அமர்ந்து டிவி பார்ப்பதை மெல்லிய புன்னகையுடன் பார்த்துவிட்டு, அவர்களை கடந்து அவனது அறைக்கு சென்றான்.

 

பார்கவியை அவன் கடக்கும்போது விழியை உயர்த்தி அவனை பார்க்கத்தான் செய்தாள்.

 

அஸ்வந் வந்துவிட்டதால் “அம்மாடி பார்கவி சாப்பிடலாம், நீ உன் புருஷன கூட்டிட்டு வாம்மா…” என்று சொல்ல

 

டிவியில் கண்களை பதித்தவாறு “அவர் இன்னும் வரலையே அத்த…” என்றவள் வாசலை பார்க்க,

 

அவளை புருவம் சுருக்கி பார்த்த செவ்வந்தி, டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் அஸ்வந் வந்ததை அவள் கவனிக்கவில்லை என்று எண்ணி

 

“அஸ்வந் வந்துட்டாமா.. இப்பதானே உள்ள போனான்…” என்று சொல்ல

 

“அஸ்வந் வந்தது தெரியுமே.. அபர்…” என்று சொல்ல வந்தவள் அப்போதுதான் தான் என்ன செய்கிறோம் என்பது புரிந்து உள்ளம் திடுக்கிட பதட்டமாக அவரைப் பார்த்தாள்.

 

திருமணமாகி இத்தனை நாட்களாகியும் இன்னும் அஸ்வந் தான் தன் கணவன் என்பதை அவள் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது செவ்வந்திக்கு புரிந்து போனது, அவளை நினைத்து ஆயாசமாக இருந்தது.

 

இது இப்படியே போனால் இவர்கள் மூவரின் வாழ்க்கைக்கும் நல்லது இல்லை என்பது தான் அவரது கவலையாக இருந்தது.

 

கலக்கத்தில் இருக்கும் அவளை ஏதாவது சொல்லி இன்னமும் மனவேதனைக்கு உள்ளாக்க விரும்பாமல் “வாமா!.. சாப்பிட்டு போய் படுத்துக்கோ…” என்று அவளை மட்டும் அழைத்தவர்

 

அவரே சென்று அஸ்வந்தையும் சாப்பிடுவதற்கு அழைத்து வந்தார். பார்கவியால் நிலை கொள்ளவே முடியவில்லை.

 

அவள் இதெல்லாம் வேண்டும் என்று செய்வதில்லை. அவளை மீறி நடக்கும் விஷயங்கள், மனதில் ஆழமாக பதிந்து போனதை எப்படி மாற்றுவது, அவளே அறியாத ஒன்று.

 

கண்களை கண்ணீர் நிறைக்க, மூச்செடுக்க முடியாமல் நெஞ்சு அடைக்க, அதற்கு மேல் அவளுக்கு நிம்மதியாக உணவு உண்ண முடியும்மா என்ன, அழுது கொண்டே தனது அறைக்கு சென்று படார் என்று கதவடைத்துக்கொண்டாள்.

 

அந்த சத்தத்தில் செவ்வந்தி விழிகளை மூடி திறந்தார். அவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

தினமும் சங்கரி பார்கவிக்கு தொலைபேசியில் அறிவுரைகள் வழங்குவது தெரியும். ஒரு மாமியாராக அவரும் அவளுக்கு அறிவுரை கூறினால், அவளது வெறுப்பை சம்பாதிக்க கூடுமோ என்று தான் அவருக்கு சற்று தயக்கமாக இருந்தது

 

ஆனால் இதை எத்தனை நாட்கள் இப்படியே விட்டு வைப்பது என்பதும் புரியவில்லை.

 

பார்கவி சாப்பிடாமல் வேகமாக சென்று கதவடைக்கவும் “நல்லாதானே இருந்தீங்க என்னாச்சு..” என்று அஸ்வந் கேட்க

 

“அது ஒன்னும் இல்ல.. நீ சாப்பிடு.. அஸ்வந் பார்கவி கிட்ட நீ கொஞ்சம் கொஞ்சமா பேசலாம் இல்ல.. பக்கத்து பக்கத்துல வேலைக்கு போறீங்க.. நீ கார்லயும் அவ பஸ்லயும் போயிட்டு வாரது நல்லாவா இருக்கு..

 

…அவள கார்ல நீ கூட்டிட்டு போகலாம் இல்ல.. வீட்டுக்கு வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் எப்டி இருக்கீங்க என்றது உங்க முகத்திலேயே தெரியுது.. ஒரு மாசம் ஆகப் போகுதுடா இன்னும் இப்டியே இருந்தா எப்படி?…” என்று கேட்க

 

“அம்மா ப்ளீஸ்!.. நான் ஏற்கனவே சொன்னது தான், அவ தன்ன தானே மீட்டு எடுக்க போராடிட்டு இருக்கா அவளுக்கான ஸ்பேஸ்ஸ குடுங்க..

 

…எனக்கு ஒன்னும் விருப்பம் இல்லாம இல்ல, அவள கார்ல கூட்டிட்டு போகணும், கூட பேசணும், அவ மனசு மாத்தணும்னு, ஆனா நாம இப்ப என்ன சொன்னாலும் அவ மனசுல இருக்குற காயத்த ஆத்த முடியாதும்மா..

 

… நீங்களும் ஒரு பொண்ணு தானே.. அவ இடத்துல இருந்து யோசிங்க..கொஞ்ச நாள் போகட்டும் ம்மா.. அதுவரைக்கும் அவகிட்ட எதுவும் கேட்காதீங்க..

 

…அதுமட்டுமில்ல பார்கவி வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு திரும்பிட்டு இருக்கா..

 

…என்ன பொறுத்த வரைக்கும் அதுவே பெரிய மாற்றம் தான்.. கண்டிப்பா ஒரு நாள் சரியாகும் அதுவரைக்கும் நம்ம வெயிட் பண்ணித்தான் ஆகணும்…” என்றவன் அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல் கையை கழுவி விட்டு அறைக்கு வந்தான்.

 

அவன் இரண்டு மூன்று முறை தட்டிய பின்னர் தான் கதவை திறந்தாள் பார்கவி. அவன் முகம் கூட பார்க்காமல் பால்கனியில் போய் நின்று கொண்டாள்.

 

அவளை பார்த்து பெருமூச்சை இழுத்து விட்டவன் “பார்கவி சாப்பிட்டு தூங்கு…” என்று மட்டும் கூறிவிட்டு தன்னிடத்தில் படுத்துக்கொண்டான்.

 

ஆனால் தூக்கம் தான் வந்த பாடில்லை. இப்போதெல்லாம் பார்கவியை நினைத்து கவலையாக இருந்தது. அவளது மனதில் இருக்கும் அழுத்தம் அவனுக்கு தெரியும் அதனால் தான் அவன் அவளை நெருங்கவில்லை.

 

சாதாரணமாக நெருங்கி பழகினால் கூட தாலி கட்டி விட்டதால் கணவன் என்று உரிமையை எடுத்துக் கொள்கிறான் என்று அவளுக்கு இன்னும் அவன் மீது வெறுப்பு வரும் என்பது அவனுக்கு நன்கு தெரியும்.

 

இதோ இத்தனை நாட்கள் அவள் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து ஒன்றாகத்தான் சாப்பிடுகின்றனர்.

 

கண்மணி தான் தினமும் அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வருகின்றாள். கண்மணியை சந்திக்கும் முன்பு செவ்வந்தி மதிய உணவை கட்டி கொடுத்து அனுப்பி விடுவார்.

 

இல்லையென்றால் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்வான். கண்மணியின் நட்பு கிடைத்த பின்னர் அவளது சமையலுக்கு அடிமையாகி விட்டான்.

 

எனவே தான் மதிய உணவிற்கு அவளை தேடி சென்று விடுவான். கேண்டீன் பின்புறமும் அவன் அலுவலகத்தின் பின்புறமும் ஒன்று என்பதால் அவர்கள் சந்தித்துக் கொள்வதற்கு எந்த அசௌகரியமும் இருக்கவில்லை.

 

தினமும் தனக்கான உணவை மட்டும் எடுத்து வரும் பார்கவி, ஒரு நாள் கூட அவனை சாப்பிட சொல்லி அழைத்து கிடையாது.

 

முதலில் இதை எல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்கே எப்போது எந்த நொடி என்று தெரியாமலே அவள் அவன் மனைவி என்று அடி மனதில் ஆழமாக பதிந்து போனதோ

 

அப்போதில் இருந்து அதிகமாக கண்மணியுடன் உறவாடுவதும், அவளது உணவை பறித்து உண்பதும் இவளுக்கு தன் கணவன் என்ற உரிமை உணர்வாவது வராதா என்ற நட்பாசையில் தான்.

 

ஆனால் பார்கவியிடம் இன்று வரை எந்த ஒரு சின்ன சலனமோ மாற்றமோ கிடையாது.

 

நிர்மலமான அவன் மனதில் நிலையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் அவள்.

 

ஆனால் ததும்பி தள்ளாடும் அவள் மனதில் தனக்கான இடத்தை எப்படி பிடிப்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.

 

அவள் பார்க்கனியிலேயே அமர்ந்திருக்க, எழுந்து அமர்ந்தவன் “சாப்பிடாம ஃபீல் பண்ணுனா தான் ஃபீலிங் லிஸ்ட்ல சேரும்னு எவன் சொன்னானோ…” என்று முணுமுணுத்தவன் அவளை நோக்கி பால்கனிக்கு சென்றான்

 

அவனது காலடி சத்தம் கேட்டவுடனே “ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ…” என்று மட்டும் சற்று கேவளுடன் வந்தது அவளது வார்த்தைகள்.

 

அதற்கு மேல் அவளை நெருங்கினால் கண்டிப்பாக கோபப்படுவாள், கத்துவாள், இந்த இரவில் சண்டை தேவை இல்லை என்பதால் எதுவும் பேசாமல் வந்து படுத்து தூங்கிவிட்டான்.

 

*******

 

அதே நேரம் பர்விதா தனது படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். இத்தனை நாட்கள் அபர்ஜித்தை தவிர்க்க வேண்டும் என்று அவள் ஒழிந்து விளையாடிய போதெல்லாம் எந்த ஒரு உருத்தலும் இருக்கவில்லை.

 

ஏனென்றால் அவனைப் பார்ப்பதே அவளுக்கு போதும் என்று இருந்தது. ஆனால் இன்று (இனி உன்னை பார்க்க வரமாட்டேன் நீயாகத்தான் என்னை தேடி வர வேண்டும்) என்று அபர்ஜித் சொன்ன பிறகு அவன் நினைவு அதிகமாகவே வந்தது .

 

உண்மையாகவே நாளைக்கு தன்னை பார்க்க வரமாட்டானோ என்று யோசித்து, யோசித்து அவளுக்கு தூக்கம் வரவில்லை.

 

“அது எப்படி அவரால என்ன பாக்காம எல்லாம் இருக்க முடியும்.. நான் என்ன பண்றது, குற்ற உணர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் இருந்து அல்லாடிகிட்டு இருக்கேன்..

 

…என் அக்காவ நோகடிச்சு நான் மட்டும் எப்டி சந்தோஷமா இருக்க முடியும்.. அது ஏன் அவருக்கு புரியல.. இப்போதைக்கு எனக்கு கிடைக்கிற சின்ன சந்தோஷமே தூரத்துல இருந்தாவது அவர பாக்கிறது தான்..

 

…இப்போ அதையும் என் காதல நிரூபிக்க சொல்லி இப்டி இல்லாம பண்றாரே.. நான் மட்டும் அவர தேடிப்போனா, அவர கண்ட்ரோல் பண்ணவே முடியாது..

 

… டெய்லி பாக்கணும், முத்தம் கொடுக்கணும்னு இம்ச பண்ணிட்டு இருப்பாரு…” என்று சலித்துக் கொள்ள

 

((ஏன் அது உனக்கு பிடிக்காதா?)) என்றது அவளது மனசாட்சி

 

“பிடிக்கும் தான்.. ரசிப்பேன் தான்.. அதனால தான் வேணாம்னு சொல்றேன்.. அவரோடான அந்த அழகான தருணங்கள என்னால முழு மனசோட அனுபவிக்க முடியாது..

 

…எனக்குள்ள சந்தோஷம் பரவும் போதெல்லாம் என் அக்காவோட சோகமான முகம் தான் என் கண்ணு முன்னாடி வந்து நிக்குது.. நான் என்ன பண்றது…” என்று வெகு நேரம் புலம்பியவள்

 

“இல்ல.. இல்ல.. அவருக்கு அந்த அளவுக்கு ரோஷம் எல்லாம் இல்ல.. நாளைக்கு காலையில ஈனு பல்ல இளிச்சிட்டு வந்து நிற்பாரு…” என்று நினைத்தவள் அவனது நினைவுகளில் மூழ்கி தூக்கத்திற்கு சென்றாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
25
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்