
அத்தியாயம்-23
மதியுடன் பேசிக் கொண்டிருந்தவள் துருவன் வரவும் புறப்பட, அவளைக் கண்டு அதிர்ந்து விழித்தவனது இதழ்களில் அழகாய் ஒரு புன்னகை குடிபுகுந்தது.
‘என்ன வாயி?’ என்று எண்ணியவன் தன் சிகையைக் கோதிக் கொள்ள, அங்கு வண்டியை உருட்டியபடி துருவனுடன் சென்றவள்,
“டேய் துருவா.. நான் லவ் பண்றேன்டா” என்றாள்.
“ம்ம்.. வேற காமெடி சொல்லு” என்றபடி அவன் அலைபேசியை நோண்ட,
“உனக்குக் கல்யாணம் ஆகாம இருக்க யாகம் பண்ண போறேன்டா” என்றாளே பார்க்கலாம்.
அதில் பதறிப் போனவன், “யாரை லவ் பண்ற?” என்று வினவ,
“ம்ம்.. இது நல்ல பிள்ளைக்கு அழகு” என்றவள், “மதிமகிழன். சைகேட்ரிஸ்ட். அகர்ணன் கிடைச்சிட்டார்னு அகா ட்ரீட் வச்சப்போ ஒருத்தரோட ஜுஸ மாத்தி குடிச்சேனே? அவர் தான்” என்றாள்.
“ஜுஸ் குடிச்சதுக்கு லவ்வா?” என்று அவன் வினவ,
“தெரியலை. ஆனா அன்னிக்கு அவர் மேல வெரும் மதிப்பு தான் இருந்தது. இன்னிக்கு அதையும் தாண்டின ஒரு ஃபீல். புதுசா பார்க்குறதை வைச்சு இது லவ் தான்னு பாலும் கிணத்துல விழுக நான் சின்னப் பொண்ணும் இல்லை, அந்தளவு பக்குவம் இல்லாமலும் இல்லை. பிடிச்சது.. பளிச்சுனு சொல்லிட்டேன்” என்று கூறினாள்.
“சொல்லிட்டியா?” என்று அவன் அதிர்ச்சியடைய,
“ஆமாடா.. அவரும் என்னவிட ஒன்னு ரெண்டு வயசு மூத்தவரா இருப்பாரு. எதுக்கு வெயிட் பண்ணனும்னு உடனே சொல்லிட்டேன். புடிச்சிருந்தா லவ்வ டெவலப் பண்ணலாம். இல்லைனா ஓகே டாட்டானு வந்துட வேண்டியது தான்” என்றாள்.
“எப்படி இவ்ளோ ஈசியா சொல்ற ஜான்? லவ் வேணாம்னு சொன்னா.. ப்ச்.. அந்தப் பெயின் எப்படிடி தாங்குவ?” என்று கேட்டவன் முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்துச் சிரித்தவள்,
“நான் தான் அவன ட்ரூவா லவ்வே பண்ணலையேடா” என்றாள்.
“என்னமா குழப்புற” என்று அவன் புரியாமல் விழிக்க,
“ஸீ.. எனக்கு ஜஸ்ட் அவர பிடிச்சிருக்கு. நல்ல டைப்பா தெரியுறாரு. அவர் உண்மைலயே நல்லவரா வல்லவரா எப்படி பட்டவர்னுலாம் எனக்குத் தெரியாது. பார்க்க, பேசப் பிடிச்சிருக்கு. நோட் பண்ணவரை நல்லவரா தான் படுறார். என்னோட ஆசையைச் சொன்னதும் சரி ஓகேனு சான்ஸ் யூஸ் பண்ற மாதிரியும் பேசலை, யோசிச்சு முடிவு சொல்லுங்கனு சொன்னதும் சரினும் தலையாட்டலை. அவருக்கு நான் ஒரு ஸ்டிரேஞ் பெர்சன் தான் அப்படிங்குற லுக் அதுல இருந்தது. ஐ லைக் இட். என்னோட அப்ரோச் அவரைப் பாதிக்காதுனா லவ் பண்ணலாம்னு தான் ப்ரபோஸ் பண்ணேன். மத்தபடி இப்ப அவர்மேல லவ் இல்லை. ஆனா அவருக்கும் விருப்பம்னு சொன்னா நீ நினைக்குற போலான அந்த ட்ரூ லவ் கண்டிப்பா என்கி(ட்ட).. எங்ககிட்ட இருக்கும்” என்று அத்தனை நம்பிக்கையோடு கூறினாள்.
அவளது எதார்த்தமான பேச்சும், வழக்கமும் கண்டு கர்வமாய் சிரித்துக் கொண்டவன், “இந்த வாய் இல்லைனா..” என்று அவளைக் கழுத்தோடு இறுக்கி ஒரு கொட்டு வைக்க,
“நாயே வண்டிடா” என்று அலறினாள்.
அந்த ஒருவாரமும் தினமும் வேலை முடிந்து வண்டியை எடுத்துக் கொண்டு சிட்டாய் பறந்து மருத்துவமனை வருபவள் ஒருமுறையாவது அவனைப் பார்த்து,
“சிக்ஸ் டேஸ் டூ கோ”
“ஃபைவ் டேஸ் டு கோ”
என்று நினைவு படுத்திவிடுவாள்.
தோழர்களிடமும் அவள் துருவனிடம் கூறியதையே ஒப்பித்திருக்க, அவளது விளையாட்டில் சிரித்துக் கொண்டவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவள் சொன்ன ஒருவார கெடுவுக்கு இன்னும் ஒருநாள் பாக்கி உள்ளதாக நினைவுபடுத்த அவள் வந்திருக்க, ஒரு தம்பதியருக்கு கௌன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனுக்காக வெளியே அவள் காத்திருக்க, முடித்துவிட்டு வெளியே வந்தவன் கண்டது அவளைத் தான்.
அவனுக்கு நினைவுபடுத்த வேண்டி அவள் எழ,
தானே அவளிடம் வந்தவன், “ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு” என்றுவிட்டுச் சென்று சொன்னபடி பத்து நிமிடத்தில் தனது உடைமைகளுடன் வந்தான்.
அவளுடன் அவர்களது முதல் சந்திப்பிடமான அந்த வெதுப்பகத்திற்கு சென்றவன், “ம்ம்” என்க,
“என்ன ம்ம்? இன்னும் ஒருநாள் தான் இருக்கு” என்றாள்.
“தேவையில்லை. நான் முடிவு பண்ணிட்டேன். இது செட்டாகாது. எனக்கு லவ்ல இன்டிரெஸ்ட் இல்லை” என்று கூறியவன் அவள் முகத்தை ஆராய, அதில் துளிகூட தவிப்பில்லை.
அதே புன்னகையுடன் “சரி ஓகே டாக்டர் சார். இனி உங்களை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். ஒரு வாரம் வந்து இம்சை பண்ணப்போ ஈவ் டீசிங்னு கம்பிலைன் கொடுக்காம விட்டதுக்கு தேங்ஸ்” என்று கூறியவள் சிரித்தபடி எழ,
அவள் கைபிடித்து அமர்த்தியவன், “கோவம் வரலையா?” என்றான்.
“எதுக்கு?” என்று தோள்களைக் குலுக்கியவளைக் கண்டவன்,
“யூ ஆர் சோ டிஃபரென்ட்” என்றான்.
“நான் ஒன்னும் உங்களை லவ் பண்ணலை. எனக்குப் பிடிச்சிருந்துச்சு சொன்னேன். லைக் ஒரு கிரஷ்.. இது காதலா மாறினா அழகா இருக்கும்னு ஒரு எண்ணம். உங்களுக்கும் பிடிச்சிருந்தா லவ் பண்ணலாம்னு தான் கேட்டேன். உங்களுக்குப் பிடிக்கலை. சோ என்னுடைய பிடித்தம் ஜஸ்ட் ஒரு சினி ஃபீல்ட் கிரஷ் போல கடந்துடுவேன்” என்று அவள் கூற,
“பிடிச்சிருக்குனு சொல்லிட்டு ரெண்டு மாசம் கழிச்சு வேணாம்னு சொல்லிருந்தாலும் இதேதான் சொல்லிருப்பியா?” என்று வினவினான்.
“சத்தியமா இல்லை. செருப்ப கலட்டி ஓட ஓடத் துறத்திருப்பேன். நான் ஒன்னும் அப்பாவி சைலென்டுலாம் கிடையாது. நல்லா சண்டை போடுவேன். என்மேல தப்பு இருந்தாலும் சண்டை போட்டுட்டு பிறகு நானே எல்லாத்துக்கும் சேர்த்து சாரியும் கேட்டுடுவேன். அடிச்சா வாங்கிட்டு அழுதுட்டுலாமும் போகமாட்டேன். ஒன்னுக்கு ரெண்டா திரும்பவே கொடுத்துட்டு அடிக்கு மருந்தும் கொடுத்துடுவேன். நீங்கச் சொல்றபோல லவ் பண்ணிட்டு ஏமாத்தினா சும்மாவெல்லாம் விட்டுட மாட்டேன். அதே நேரம் வேணாம்னு கழட்டி விட்டவன திரும்ப லவ் பண்ண சொல்லிக் கெஞ்சவும் மாட்டேன்” என்று ஜான் கூற,
“வெரி இம்பிரசிவ்” என்றான்.
“ம்ம்.. அப்போ நீங்க வேணாம்னு சொன்னா என்னோட ரியாக்ஷன் என்னனு பார்க்கப் பொய் சொல்லிருக்கீங்க?” என்று அவள் வினவ,
“பரவாயில்லையே.. நல்லா கேட்ச் பண்ற” என்று மதி கூறினான்.
“சைக்காலஜிலாம் படிக்கலை ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கவும் தெரியும்” என்றவள் அவனைப் பார்த்துக் கண்ணடிக்க, அழகாய் ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்தான்.
இப்படி துவங்கிய இவர்கள் உறவில் பேச்சுக்கள் நீண்டு ‘அவர்’ ‘நீங்க’ என்பதெல்லாம் காற்றோடு கரைந்து ‘வாடா’ ‘போடா’ வரை வந்து நின்றது.
அவள் சொன்னது போல் அத்தனை ஆத்மார்த்தமாய் காதலித்த இருவரும் காதலில் நிலைத்த ஒரே வருடத்தில் வீட்டிலும் கூறியிருந்தனர்.
இருவீட்டிலும் சில வாரங்களுக்குப் பின்பு சம்மதமும் கிடைத்திருக்க, பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான்.
அப்படி இப்படியென மற்றோரு வருடம் கடந்த நிலையில் இருவருக்கும் திருமணம் செய்வதற்கு, ஜானுக்கு மதி வீட்டிலிருந்து வந்து பூ வைத்து நாள் குறித்துவிட்டுச் சென்றிருக்க, மேலும் மகிழ்ச்சி பெருகியது.
அந்தச் சமயத்தில் தான் இடியாய் வந்திறங்கியது அவனது மரணம். அதுவும் உண்மையான மரணம் இல்லை என்று ஒருவித ஆசுவாசம் அடைந்திருந்தவளுக்கு தற்போது அவன் உடல் காணாமல் போனது பெரும் புயலாக இருந்தது.
மருத்துவமனை சென்று அவன் உடலில் அதே வெப்பநிலை பராமரிக்கப்பட்டிருப்பதை ஆனந்தத்தோடு தன் தோழர்களிடம் தெரிவிக்க வீடு வந்திருந்தாள்.
வந்த கையோடு தோழர்களைக் கூட்டிக் கொண்டு மாடிக்கு வந்தவள், “டேய்.. நம்ம மகியோட பாடிய வீட்டுக்குக் கொண்டுவந்துடலாம்டா” என்று கூற,
“ஏன் ஜான்.. அவனைப் பழையபடி ஆக்குற வழி கிடைச்சிடுச்சா?” என்று அகா கேட்டாள்.
“இல்லடி” என்று ஜான் கூற,
“அப்றம் எதுக்கு கொண்டு வரணும்?” என்று விஷ் கேட்டான்.
“இல்லடா. அவனோட பாடிய பார்க்கத் தான் போனேன். அ..அது சுடுதுடா” என்று ஜான் கூறவும்,
“சுடுதா? ஜில்லுனு தானே இருக்கணும்? வெண்ணீர்ல போட்டுட்டானுகளா” என்று துரு வினவ,
“டேய் சத்தியமா சிரிப்பு வரலை அடிச்சிட போறேன்” என்றாள்.
“எதாச்சும் புரியுற போலச் சொல்லுமா” என்று அகா கூற,
“அச்சோ.. அவனோட உடம்புல உள்ள வெப்பநிலை அப்படியே தான் இருக்கு. ஐஸ் பெட்டில வச்சதுக்கான சில்நெஸ் கூட அது எடுத்துக்கலை” என்று கூறினாள்.
“அதெப்டி ஜான்? உடம்புல உயிர் இல்லைனா உடல் மக்கிப்போகும் தானே? எப்படி வெப்பநிலையைப் பராமரிக்கும்?” என்று விஷ் வினவ,
“டேய் லூசு மாங்காய்களா.. அவன் உடம்புலருந்து ஆவி பிரிஞ்சு வர்றது மட்டும் சாத்தியமாவா இருக்கு? நடக்காது தானே? இதுல கோலாறு பண்ணின மேஜிக்கோட வேலையா தான் இருக்கும் இதுவும். எனக்கு என்னமோ அங்க அவன் உடம்பை வச்சிருக்குறது சேப்டினே படலை. நம்ம திரும்ப எடுத்துட்டு வந்துடுவோம்” என்றாள்.
“சரி ஓகே ஜான். எடுத்துட்டு வந்து எங்க வச்சுக்க?” என்று அகா வினவ,
மூவரையும் பார்த்தவள் தன் தலைமுடியை காதுமடலில் சொருகியபடி, “என் ரூம்ல” என்றாள்.
அதில் மூவரும் விழிகள் தெறிக்க அவளைப் பார்க்க,
“சாரி கைஸ்.. இதுல என்னால அந்த ஆஸ்பிடல நம்ப முடியாது. அங்கருந்து வெளிய கொண்டு வந்தா அவனோட வீட்லயும் வைக்க முடியாது. என்னுடைய வீட்லனா என் ரூம்ல யாருக்கும் தெரியாம வைச்சுக்கணும். அதுதான் சேஃப்னு எனக்குப் படுது. புரிஞ்சுக்கோங்க” என்றாள்.
ஒருபெருமூச்சுவிட்ட துருவன், “உன் பயம் புரியுது ஆனா உன் ரூமுக்கு அதை எப்படி கொண்டுவர? யாரும் பார்க்காம கொண்டுவர அது ஒன்னும் கைக்கு அடக்கமான பொருள் இல்லை” என்று கூற,
“எங்கம்மா அப்பா வேலைக்குப் போனபிறகு ஒரு சாக்குமூட்டைல கட்டி கொண்டு போயிடலாம்” என்றாள்.
“எல்லாம் ஃபுல் ப்ளானோட தான் இருக்க” என்று கூறிய துருவன் மதியை நோக்க,
“எனக்குமே ஜானு சொல்றதுதான் சரினு படுதுடா” என்றான்.
“அவ்வளவு பெரிய ஆஸ்பிடல்ல நம்ம எப்படி உன் ஃப்ரண்ட் ஒருத்தனை மட்டுமே நம்பி இருக்க முடியும்?” என்று மதி வினவ,
“ஓகே ஃபைன். ஆனா ஜான் கேர்ஃபுல் மாமா ஹார்ட் ஃபேஷன்ட். பாடிய பார்த்துட்டாரு அம்புட்டுதான். பத்திரமா வச்சிருக்கணும்” என்று துரு கூறினான்.
“எல்லாம் யோசிச்சு தான் முடிவு எடுத்தேன் துரு. விஷ் ரூம்ல கண்டிப்பா வைக்க முடியாது. அவன் பொண்டாட்டி பார்த்துட்டா அம்புட்டு தான். உன் ரூமுக்கு உங்கம்மா வந்து போவாங்க. அகா ரூம்ல இளா வருவா.. அதனால என்ரூம் தான் சேஃப். இப்போ நானிருக்கும் நிலைமைல என் ரூமுக்குள்ள கூட யாரும் வரமாட்டாங்க. அதனால தான் சொல்றேன்” என்று ஜான் கூற,
“தென் ஓகே. அவதான் இவ்வளவு காண்பிடென்டா சொல்றாள்ல? வாங்கடா போவோம்” என்று அகா கூறினாள்.
சரியென நால்வரும் புறப்பட்டு வர, உள்ளே அவர்களை அழைத்துச் சென்ற துருவனின் தோழன் ரேக்கை திறக்கவும் ஐவருமே அதிர்ந்தனர்.
காலியான பெட்டியைக் கண்டு அதிர்ந்தவர்களில் ஜான், “மகி எங்க?” என்று வினவ,
“இ..இங்க தான்” என்ற துருவனின் தோழனுக்கு வார்த்தையே வரவில்லை.
வெளியே ஏதோ சலசலப்புக் கேட்கவும், ஜானை அமர்த்தி விஷ் கூடவே இருக்க, துருவனும் அகாவும் சென்று பார்த்தனர்.
மேலும் ஒரு சடலமும் சேர்ந்து தொலைந்து போயிருப்பது தெரியவரவே மற்றைய சடலத்தின் உரிமையாளர்கள் காரசாரமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் காவல் துறையில் புகார் கொடுக்க இருப்பதாகக் கூறிச் செல்ல இங்கே வந்த துருவன் நடந்த அனைத்தையும் கூறி முடித்திருந்தான்.
அனைத்தையும் தன் மனதில் ஓட்டிப் பார்த்து நிகழ்வுக்கு வந்த ஜான்விகா முன் மதி தோன்ற, “என்னை விட்டுப் போயிட மாட்டல்ல மகி?” என்று கண்ணீரோடு வினவினாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

கல்யாணம் ஆகாம இருக்க யாகம் செய்ய போறேன் 🫢🫢 என்ன ஒரு டெக்னிக் நம்ப பேச்ச கவனிக்க வைக்க.
எதார்த்தமான அணுகுமுறை ஜானுடையது. 👏🏼
பிடித்தது ரசிக்கிறேன், விரும்புதல் என்பது அவனது விருப்பத்தோடு, பிறகு விலக நினைத்தாலும் தர வேண்டியதை தந்துவிடுவேன்.
எத்தனை தான் இலகுவாக வாழ்வை அணுகினாலும், அவர்களையும் வருந்த செய்யும் அளவு இக்கட்டில் நிறுத்தும் வாழ்க்கை.