Loading

அத்தியாயம்-20

 

ஈமச்சடங்குகள் முடிந்து எப்படியோ இரண்டு நாட்கள் கடந்திருந்தன. ஜான்விகா தன் அறையிலேயே முடங்கி இருப்பதைப் போல் பாவனை செய்திருக்க, பாவம் அவள் பெற்றோர் தான் அதை உண்மையான வேதனை என்று நினைத்துக் கொண்டு வாடினர்.

 

அறையில் கட்டிலில் உருண்டு புரண்டபடி, “அய்யோ பசிக்குதே” என்று அவள் கூற, 

 

அவளையே வைத்து விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்த மதி, “போய் சாப்ட வேண்டியது தான ஜானுமா” என்றான்.

 

சட்டென நிமிர்ந்து அவனை கோபத்துடன் பார்த்தவள், தலையணையைத் தூக்கி விச, அவன் ஆத்மாவைத் தாண்டிக் கொண்டு கீழே விழுந்தது. 

 

“உன்னை எவன்டா சாவ சொன்னது?” என்று அவள் வினவ, 

 

“நீ தானே செத்து பார்த்துட்டு வர சொன்ன?” என்றான்.

 

“நான் சொன்னா செத்துடுவியா?” என்று அவள் பல்லைக் கடிக்க, 

 

“இங்க நீ என் காதலைப் பார்த்து நெக்குருகி நிக்கணும். பாரு நீ சொன்னனு செத்துட்டு வந்து உக்காந்திருக்கேன்” என்று அப்பாவிப் போல் கூறினான். 

 

“ஊ..இவன..” என்று அவள் மேலும் ஆத்திரமடைய, 

 

“சாப்பிட வேண்டியதுதானேன்னு தான கேட்டேன்?” என்றான்.

 

“பைத்தியமாடா உனக்கு? நீ செத்த சோகத்துல நான் டிப்ரஷன்ல இருக்கேன். இப்ப போய் மூனு வேளையும் கொட்டிக்க முடியுமா?” என்று அவள் எகுற, 

 

“ஓ.. அப்ப சாப்பிட கூடாதா நீ?” என்று கேட்டான். 

 

“ஆமா.. மூனு வேளையும் போய் நல்லா தின்னா நான் சோகமா இருக்கேன்னு யாரு நம்புவாங்க? நல்லா தான இருக்கானு தான் கேட்பாங்க. நேத்தே உன் அத்தை வந்தப்ப அதைதான் சொன்னாங்க. அப்பதான் மதியமும் சாப்பிடாம இருந்த பசில போய் சாப்ட உக்காந்தேன். ஏற இறங்க பார்த்துட்டு, அவ்வளவு தான், ஒருத்தன் செத்துட்டான். எத்தனை நாளைக்கு சோகமா இருக்க? நல்லா சாப்பிட்டு அடுத்த காரியத்தை பாருனு குதர்க்கமா சொல்லிட்டு போறாங்க. வச்ச சோறு உள்ள இறங்குவேனானு ஆயிடுச்சு” என்று வருத்தத்துடன் கூறினாள்.

 

உண்மையிலேயே தான் இறந்திருந்தால் இவளது நிலை என்னவாகியிருக்கும் என்று நினைக்கவே அவனுக்கு அத்தனை பதறியது. 

 

“ஆணோ பெண்ணோ? செத்தவங்க அப்பா அம்மாவைக் கூட அடுத்து இன்னோரு புள்ளை இருக்கு உங்கள நம்பி தான் உங்க குடும்பம் இருக்குனு ஆறுதல் சொல்லுவாங்க. ஆனா பொண்டாட்டிக்கோ காதலிக்கோ அப்படியெல்லாம் ஆறுதல் கிடைக்காது. ‘அப்றம் என்னத்த உங்க வாழ்க்கைல காதலிச்சீங்க? அந்த காதலுக்கு என்ன வர்த்? வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? அதுக்குள்ள எப்படி மீண்டு வந்தனு?’ கேள்விகள் தான் பாயும். என்னமோ நீ இல்லாம நான் ரொம்ப சந்தோஷமா இருந்துடுற போல நினைப்பு அவங்களுக்கு. நேசிச்சவங்க இல்லாம போனா அந்த வேதனை எவ்வளவு வலிக்கும்னு பட்டாதான் புரியும்” என்றவள் கண்ணீரோடு அவனைப் பார்த்து, 

 

“நான் ஒன்னும் யாருக்கும் சாபமெல்லாம் கொடுக்கலை மகி. ஆனா ஏன் என்னை குற்ற உணர்வுக்குள்ள தள்ள ட்ரை பண்றாங்கனு இருக்கு. நிஜமாவே நீ இல்லாம போயிருந்தா இந்த பேச்சுலயே நானும் செத்துருப்பேன் போலடா” என்றாள்.

 

“ஜானு..” என்றவனுக்கு அவள் கண்ணீரைத் தாண்டி வேறு வார்த்தைகள் வராது அடைத்தது. 

 

உணர்வுகள் எல்லாம் உயிரோடு கலந்தவையல்லவா..! இங்கு உயிர் மட்டுமே சுமந்து நிற்பவனுக்கு உணர்வுகளின் பிரவாகத்தை நன்றாகவே உணர முடிந்தது.

 

அவளை சமன் செய்வதற்கு முதலில் அவள் வயிற்றை நிறைக்க வேண்டும் என்று புரிந்துகொண்டவன், “இரு வரேன்” என்று மாயமாய் மறைந்து போனான்.

 

அங்கு தன் அறையில் விசிலடித்தபடி குளியலறையிலிருந்து, இடையில் பூந்துவாலையுடன் வந்த துருவன், கண்ணாடி முன்னே நின்று தன் தலையை சிலுப்பிக் கொண்டபடி, “அழகன்டா நீ” என்று கூறிக் கொண்டு பீரோவைத் திறக்க, 

 

“டேய் துருவா..” என்றபடி மதி பீரோவுக்குள்ளிருந்து வந்தான்.

 

அவனை சட்டெனக் கண்டதிலும், மேலும் தான் இருந்த கோலத்தாலும் பதறிப் போனவன், “ஆ..” என்று அலறிவிட, 

 

அவன் அலறலில் பயந்து போன மதியும் “ஆ..” என்று கத்தி வைத்தான். 

 

(பேய பார்த்து மனுஷன் பயப்படணும். இங்க மனுஷன பார்த்து பேய் பயப்புடுது)

 

பீரோவிலிருந்து ஒரு துண்டை எடுத்து போர்த்திக் கொண்டவன், “கொய்யா இலை” என்று கத்த, 

 

“டேய் துருவா.. என்னாச்சுடா” என்றபடி அவன் அன்னை வந்து கதவைத் தட்டினார். 

 

தனது சட்டை ஒன்றை எடுத்துப் அவசர அவசரமாக அணிந்தவன், கதவைத் திறக்க, “என்னாச்சுடா?” என்றார்.

 

“என்னமா?” என்று அவன் வினவ, 

 

“எதுக்குடா பேய பார்த்த மாதிரி கத்தி தொலைச்ச?” என்று அவர் வினவ, 

 

‘ஆத்தி.. இவனால..’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டான். 

 

காக்கி உடையில் டிப் டாப்பாக கிளம்பி வந்த வித்வன், “என்னடா இன்னும் ஆஃபிஸ்கு ரெடியாகலை?” என்க, 

 

“அ..ஆகணும்டா” என்றான்.

 

“என்னமா அவன இப்ப விசாரணை நடத்திக்கிட்டு இருக்கீங்க?” என்று வித்வன் வினவ, 

 

“ஏதோ கத்தினான்டா. பயந்துபோய் கதவை தட்டி என்னனு கேட்டா திருதிருனு முழிக்குறான்” என்றார். 

 

“அ..அய்யோ அம்மா.. நான் கத்தலை. பா.. பாட்டு பாடினேன்” என்று துருவன் சமாளிக்க, 

 

“பாட்டு பாடினியா? நல்லா பாடின போ. எதும் பொண்ண இம்ப்ரெஸ் பண்றேன்னு பாட்ட கீட்ட பாடி தொலைஞ்சுடாதடா. அப்றம் காலம் முழுக்க உனக்கு பிரம்மச்சரியம் தான்” என்றார்.

 

“எம்மா எம்மா.. ஏம்மா இப்படி காலங்காத்தால வந்து சாபம் விடுற. நான் பாட்டும் பாடல ஒன்னும் பாடலை.. டேபில்ல இடிச்சுகிட்டேன். போம்மா” என்று துருவன் பதற்றமும் பீதியுமாக கூற, 

 

“இடிச்சுக்கிட்டியா? பாத்து நடனு எத்தனை தடவ சொல்றது. எங்கயாவது பிராக்கு பார்த்துக்கிட்டே நடந்தா இப்படிதான்” என்று அதற்கும் ஆடிவிட்டுச் சென்றார்.

 

அதில் வித்வன் வாய்விட்டு சிரிக்க, அவன் மனைவி கீர்த்தனா வந்து, “என்ன சிரிப்பு உங்களுக்கு? சாப்பாடு எடுத்து வச்சாச்சு. எத்தனை தடவை கத்துறது? வந்து சாப்பிடுங்க” என்றுவிட்டுச் சென்றாள். 

 

தற்போது அண்ணனைக் கண்டு அழகு காட்டியவன் கதவை பூட்டிவிட்டு அதில் சாய்ந்து பெருமூச்சுவிட, அவன் முன் மதி நின்றுகொண்டிருந்தான். 

 

ஏதோ கத்த வந்த துருவன் சாற்றி வைக்கப்பட்டிருந்த ஜன்னலையும் பூட்டிவிட்டு ஏசியைப் போட, 

 

“ஏன்டா கத்தின?” என்று மதி வினவினான். 

 

“பேயே பேயே.. நீ பேயாகிட்டு ஏன்டா என் உசுர வாங்குற? கொஞ்சம் லேட்டா வந்திருந்தா என் கற்புக்கு யாருடா பதில் சொல்றது? நாம பேயா இருக்கோம், திடீர்னு போனா பயந்துடுவானுங்களேனு கொஞ்சமாவது யோசனை இருக்கா? உன்னால காலைலயே கல்யாணம் ஆகாதுனு சாபமெல்லாம் வாங்க வேண்டியிருக்கு” என்று பொறிந்தான்.

 

“ஓ.. அதுக்கு தான் கத்துனியா” என்ற மதி வாய்விட்டுச் சிரிக்க, 

 

“இவனுங்களுக்கு நடுவுல மாட்டிகிட்டு.. ச்சை” என்றபடி கட்டிலில் அமர்ந்தவன், “என்ன வேணும்?” என்றான். 

 

பின்பே வந்த விடயம் நினைவு வந்து மொத்த கதையையும் கூறிமுடித்த மதி, “வந்து அவளை சாப்பிட வைடா. அவளா வெளிய போகமாட்றா” என்றான்.

 

“டிப்ரஷன்னா சோறு தண்ணி இறங்க கூடாதா? யாரது வந்து அவள பேசுறதுக்கு? எழவு விழுந்தா போதும் எதும் பேசுறதுக்குன்னே கிளம்பி வந்துடுவானுங்க” என்று கடுப்பாகக் கூறிவிட்டே அவர் மதியின் சொந்தம் என்று நினைவு பெற்றவனாக “ப்ச்.. சாரிடா” என்று அவனைப் பார்க்க, 

 

“தூரத்து சொந்தம் தான்டா.. எனக்குமே யாருனு சரியா தெரியலை. தெரிஞ்சவங்களாவே இருந்தாலும் அது தப்பு. பாவம்டா.. அழுவுறா” என்று வருத்தத்தோடு கூறினான்.

 

“சரி நான் ரெடியாகிட்டு வரேன் நீ போ” என்ற துருவன், “டேய் ஒருநிமிஷம்” என்க, 

 

“என்னடா?” என்றான். 

 

“என் ரூமுக்குள்ள பூந்த மாதிரி விஷ்வேஷ் ரூமுக்குல்லாம் போய்டாதடா. புதுசா கல்யாணம் ஆனவன்” என்று துருவன் கூற, 

 

“ச்ச..ச்ச.. நான் அவ்வளவு விவஸ்தை கெட்டவன்லாம் இல்லைடா. அன்ட் அவன் புதுசா கல்யாணம் ஆனவன்லாம் இல்லை. அவனுக்கு கல்யாணம் ஆயி மூனு மாசம் ஆவப்போகுது” என்று ஈ என இளித்தபடி கூறினான்.

 

சில நிமிடங்களில் கிளம்பி வந்த துருவன், “ம்மா.. ஜகன் மாமா வீட்டுக்கு போறேன். அங்க போய் சாப்பிட்டுக்குறேன்” என்று கூறிவிட்டு தனது அலுவலகப் பையையும் எடுத்துக் கொண்டு சென்றான். 

 

ஜகனும் ஆத்விகாவும் சோகமாக கூடத்தில் அமர்ந்திருக்க, உள்ளே வந்தவன், “மாமா..” என்றான். 

 

அவனைக் கண்டதும் வருத்தத்துடன் நிமிர்ந்தவர், ஏதும் பேசவில்லை. 

 

“அவ எங்க?” என்று துரு வினவ, 

 

“இன்னும் ரூம்ல தான் இருக்காப்பா. பாவம் நேத்தெல்லாம் சாப்பிடலை. பசி தாங்காத பொண்ணு இப்படி உடம்ப வருத்திக்குது” என்று கூறினார்.

 

“சாப்பாடு ரெடியா?” என்று அவன் வினவ, 

 

‘ஆம்’ என்று தலையசைத்தார். 

 

சென்று தட்டு நிறைய உணவை எடுத்துக் கொண்டவன், “நான் கொடுக்குறேன்” என்றுவிட்டு அவள் அறைக்குச் செல்ல, 

 

கட்டிலில் முகம் புதைத்து சிறு பிள்ளைப் போல் அழுதுகொண்டிருந்தாள்.

 

உள்ளே வந்து துருவன் கதவடைக்கும் சத்தம் கேட்டு அவள் நிமிர, தட்டுடன் நின்றிருந்த துருவன் அவளைப் பாவமாகப் பார்த்தான். 

 

உண்மையில் மதி இல்லாமல் போயிருந்தால் அந்த துக்கம் அவளை மற்றதை யோசிக்க விட்டிருக்காது என்றாலும் பசி என்ற உணர்வு இல்லாமல் இருந்திருக்காதே?

 

அப்படியிருக்க தற்போதைய நிலையே வேறு அல்லவா? ஜான்விகா எந்த அளவிற்கு விளையாட்டான பெண்ணோ அதைவிட பசி என்ற வந்துவிட்டால் சிறுபிள்ளையாகி விடுவாள். 

 

ஜான்விகா என்றில்லை, யாராக இருப்பினும் பசியென்ற உணர்வு உருக்குலைய வைத்திடுமே! பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்று சாதாரணமாகவா கூறியுள்ளனர்!?

 

நேற்று முழுதும் உண்ணாமல் இருந்ததும் வந்து சென்ற உறவினரின் பேச்சும் அவளை வெகுவாக வதைத்தது. நிலையாக இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு பதிலடி கொடுத்து தொங்க விட்டிருப்பாள் என்பது வேறு கதை. 

 

அதுமட்டுமல்லாது மதி உண்மையில் இறக்கவில்லை என்றாலும் அவனது ஆத்மாவை மீண்டும் எப்படி உடம்போடு இணைப்பது என்ற கவலை அவளை சூழ்ந்தே இருந்தது.

 

உணவை மேஜையில் வைத்துவிட்டு அவளிடம் வந்து அமர்ந்தவன் “ஜான்” என்க, 

 

அவன் மடியில் படுத்துக் கொண்டு “பசிக்குதுடா” என்று அழுதாள். 

 

அவள் அழுவதை சோகத்தோடு பார்த்தவன் “சாப்பிட வேண்டியது தான லூசு. நீ எதுக்கு இப்படி ரூமுக்குள்ள அடைஞ்சு கிடக்குற?” என்று வினவினான். 

 

“அ..அவங்க என்னென்னமோ பேசுறாங்கடா. ம..மதி சாவுல எனக்கு வருத்தமே இல்லாத மாதிரியும் நான் நல்லா சா..சாப்பிட்டு சந்தோஷமா இருக்குற மாதிரியும்..” என்றவள் மேலும் விசும்ப, 

 

அவளுக்கு தட்டிக் கொடுத்தவன், “கண்டவங்க கண்டதும் பேசுவாங்க. அதெல்லாம் நீ ஏன் காதுல போட்டுக்குற? முதல்ல எழுந்திரி. போய் முகம் கழுவிட்டு வா” என்று அவளை குளியலறைக்குள் அனுப்பினான்.

 

சென்று முகம் கழுவி வந்தவள் கட்டிலில் அமர, அவளது முடியை இழுத்து கொண்டையிட்டவன், உணவு தட்டைக் கொடுக்க, வாங்கி வேக வேகமாக உண்டு முடித்தாள். மொத்த தட்டும் காலியான பின்பே அவள் முகம் தெளிந்தது.

 

“இன்னும் கொஞ்சம் கொண்டு வரவா?” என்று அவன் வினவ, 

 

“போதும் போதும்” என்றவள் சென்று தட்டையும் கையையும் கழுவிவிட்டு வந்தாள். 

 

“ஓகேவா?” என்று துருவன் வினவவும், 

 

“எவடா அவ அது நேத்து வந்து அந்த பேச்சு பேசுனவ? எங்க அந்த மகி? கூப்டு அவன? அது யாருனு ஒரு கை பாக்கணும்” என்று பொறிந்தாள். 

 

அங்கு தோன்றிய மதி, “அதுக்கு அவசியம் இல்ல பேபிமா. என் செல்லத்தை அழ வெச்சவளுக்கு பயம் காட்டிட்டு வந்துட்டேன்” என்று கூற, 

 

“அடேய்.. என்னடா பண்ண?” என்று துரு வினவினான்.

 

“வேற என்னடா? எத்தனை தமிழ் படத்துல பார்த்துருப்போம்? லைட்ட போட்டு போட்டு அணைச்சுட்டு ரெண்டு பாத்திரத்தை உருட்டி விட்டுட்டு வந்தேன். அந்த அத்தை அதுக்கே அலறிட்டாங்க” என்றுவிட்டு அவன் ஈ என்று இளிக்க, 

 

“நீ செத்தப்ப கூட என் பேச்சை இவ்வளவு மதிக்குற புருசனானு சந்தோஷப்படலைடா. ஆனா இப்ப பண்ணிட்டு வந்துருக்க பாத்தியா?? இப்ப தான் திருப்தியா இருக்கு” என்று ஜான் கூறியதும் துருவன் தான் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

 

பின்பே துருவனைக் கண்டவள், “எங்கடா கிளம்பப் போற? டிப்டாப்பா ரெடியாகி இருக்க?” என்று வினவ, 

 

“எங்க கிளம்பப்போறேனா? நாசமா போச்சு.. அடியே நான் வேலைக்கு போவனும்டி” என்று கூறினான். 

 

“ஓ..ஆமால்ல” என்று அவள் பாவம்போல் வினவ, 

 

“நீயும் போ ஜானு” என்று மதி கூறினான்.

 

“என்ன பேசுற மகி? இப்ப தான் நீ செத்து போயிருக்க. அதுக்குள்ள நான் வெளிய வாசல்னு போனா அம்புட்டுதான்” என்று அவளும் சராசரி பெண் போல பேச, 

 

“ஏன் ஜானு.. செத்துபோனது நான் தான? வருத்தம் யாருக்குதான் இல்லை? இதயே நினைச்சுகிட்டு எத்தனை நாள் இருக்கப் போற? நடிப்பாவே இருந்தாலும் நீ இப்படி முடங்கி இருக்குறது எனக்கு பிடிக்கலை. யார் என்ன சொன்னா உனக்கு என்ன? சொல்றவங்க உன் லைஃப அடுத்து எப்படி நகர்த்தி கொண்டு போறதுனு யோசிக்கப் போறாங்களா? ரெண்டு நாளா அத்தையும் மாமாவும் உன்னை நினைச்சுட்டு அழுதுட்டே இருக்காங்க. அதென்ன ஒருத்தர் செத்துட்டா அவங்க சம்மந்தப்பட்டவங்க அப்படியே முடங்கி போயிடணுமா? என் ஜானு அப்படி இருக்க வேணாம்”

 

“இப்ப இல்லை ஒருநாள் உண்மைலயே எனக்கு சாவு வரும். அப்பவும் நீ இப்படி இருந்திடவே கூடாது ஜானு. வருத்தம் இருக்கும்தான். அழுகை வரும்தான். அதுக்காக போனது இல்லைனு ஆகுமா? அடுத்து உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. நீ இன்னும் உயிரோட தானே இருக்கனு உனக்காக யோசி. இதெல்லாம் சுயநலம் இப்படியா இருப்பனு ஆயிரம் பேர் ஆயிரம் பேசினாலும் உன் வருத்தத்திலயோ சந்தோஷத்துலயோ அவங்க பங்கு எடுக்கப் போறதே இல்லை. அதனால போய் ரெடியாகி நீயும் ஆஃபிஸ் கிளம்பு” என்று நீளமாக பேசினான்.

 

அவனையே ஆவென்று வாய் பிளந்து பார்த்தவள், “எல்லாம் சரிதான்.. ஆனா நான் நீ செத்த சோகத்துக்காகலாம் லீவு போடலையே” என்றாளே பார்க்கனும். 

 

“ஏதே..” என்று மதி வினவ, 

 

“ஆமாடா.. நீதான் சாகவே இல்லையே. அப்றம் என்ன வெண்ணைக்கு நான் லீவு போடணும்னு தான் யோசிச்சேன்.. ஆனா ஏற்கனே உன்னோட ஆத்மாவை திரும்ப எப்படி சேர்க்கனு யோசிச்சு ஸ்டிரெஸ்ஸா இருக்கேனா.. அதான் வேலைக்கு போய் அங்க அந்த சிடுமூஞ்சி மூஞ்சில முழிச்சு கூட கொஞ்சம் பிரஷர் ஏத்த வேணாம்னு லீவு சொல்லிட்டு உக்காந்திருக்கேன்” என்றாள்.

 

தன் தலையில் அடித்துக் கொண்ட மதி, “உனக்கு போய் பக்கம் பக்கமா வசனம் பேசினேன் பாரு, என்னை சொல்லணும். போய்த் தொலைடி” என்றுவிட்டு மறைய, 

 

பாவமாக துருவனைப் பார்த்தவள், “இவன் என்னடா இவ்வளவு டென்சன் ஆகுறான்?” என்றாள். 

 

“ஆகாம?” என்று துருவன் முணுமுணுத்தான். 

 

“சரி துருவா ஒரு உதவிடா. எனக்கு ஒரு பெரிய பாக்கேட் சிப்ஸ் வாங்கி குடுடா. இன்டர்நெட்ல இவன எப்படி பழையபடி சரிபண்ணனு தேட போறேன். நடுவுல பசிச்சா சாப்பிடணும்ல” என்றாள்.

 

அவளை ஏற இறங்க பார்த்தவன் ‘நீ சாப்பிடாம பட்னியாவே படுத்துக் கிடந்திருக்கணும்’ என்று திட்டினாலும் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டே புறப்பட்டான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஹ்ம் இவரு காதலை பார்த்து நெக்குருகி போய் நிக்கனுமா 🤣

    உண்மை தான் துணை இல்லாம போனா அவங்கள நினைச்சு நினைச்சே நம்ப செத்து போயிட்டா கூட, உடனே சாகாம இவ்ளோ நேரம் கடத்திருக்கா பாரேன்னு தான் சொல்வாங்க.

    அவங்களோட அனுமானப் பேச்சுக்கு நம்ப கவலை பட தேவையே இல்லை.

    இவன் பேயாகிட்டு மத்தவங்களை போட்டு படுத்தி எடுக்கிறான் டா.

    பீரோ உள்ள இருந்தா டா வருவா? பைத்தியக்கார்!

    🤣🤣 நீ சொல்லி செத்தத விட உனக்காக அவங்கள பயமுறுத்தினது தான் புருஷ லட்சணமா ஜான். நல்ல partnership 🤭