Loading

அத்தியாயம் – 20

ஜெயலட்சுமி, சக்தியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் “ஒரு நாள் மட்டும் விக்ரம் வீட்டில் தங்கிக் கொள்ளலாம்” என்று. 

ஆனால் சக்தி, “என்னால் முடியாது அவன் வீட்டில் நான் காலை வைக்கவே மாட்டேன். நான் எதை நினைத்து வந்தேனோ அது நிறைவேறி விட்டது”. 

“நிலா கஷ்டப்பட்டதை பார்த்து நான் சந்தோஷ பட்டேன் எனக்கு அது போதும். நான் கிளம்புறேன் நீ ஏதாச்சும் பண்ணிக்கோ” என்று ஜீப்பில் ஏறி சுஜிதாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

ஜெயலட்சுமி, அட பைத்தியக்காரனே நிலா கஷ்டப்படுறதெல்லாம் ஒரு விஷயமா நினைச்சு பேசிக்கிட்டு இருக்கான். 

இவனை இங்க கூட்டிட்டு வருவதற்கு வேறு வழி தெரியாமல் ஒரு பேச்சுக்கு நிலாவை கஷ்டப்படுத்தி நீ சந்தோஷப்பட்டுக்கோ. 

உன் கோபம் குறையும் என்று நான் சொன்னேன் கடைசியில் அதையே பெரிய விஷயம் போல் நினைத்து கொண்டு செல்கிறான். 

இவன் எப்படி தான் எனக்கு தம்பியாக பிறந்தானோ எனக்கே தெரியலை. நான் நெனச்சது இன்னும் நடக்கவே இல்லையே கடவுளே எனக்கு எப்போது தான் அந்த சொத்து எல்லாம் கிடைக்குமோ என்று நொந்து போனாள்.

ஜெயலட்சுமி, வேறு வழியின்றி அனைவரிடமும், “இன்னொரு நாள் கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சுந்தரத்துடன் கிளம்பி விட்டார். 

ராஜலட்சுமி குடும்பத்தினரும் வீட்டிற்கு புறப்பட்டார்கள். 

மித்ரா வீட்டை சென்று அடைந்தவுடன், “அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் நிறைய வேலை செஞ்சுட்டேன் போல இன்னைக்கு” என்று சோம்பல் முறித்த படி கூறினாள். 

ராஜலட்சுமி, “அப்படி என்ன வேலை எல்லாம் மேடம் பண்ணீங்க?” என்றாள்.

மித்ரா, “ஐயோ என்ன மா இப்படி கேட்டுட்ட. என் பிரண்ட்ஸ் எல்லாம் வந்து இருந்தாங்க நான் எவ்வளவு போட்டோஸ் எடுத்துக்கிட்டு இருந்தேன்”. 

“அதுவும் நின்று கொண்டே இருந்தது எனக்கு கால் எல்லாம் வலிக்குது. உன்கிட்ட பேச கூட என்னால் முடியல நான் போய் படுக்கிறேன்” என்றாள்.

ஆதித்யா, “அம்மா நானும் போறேன் எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு. நிறைய சாப்பிட்டு விட்டேன் போல என்னால் நிக்க கூட முடியல” என்று அவனும் சென்று விட்டான்.

பிறகு ராஜலட்சுமி, ராஜேந்திரனிடம் “பாருங்க உங்க பசங்களை ஒருத்தி போட்டோஸ் எடுத்தே டயர்ட் ஆகிட்டாலாம்”. 

“இன்னொருத்தன் சாப்பிட்டே டயர்ட் ஆகிட்டானாம் இதையெல்லாம் வெளியில் சொன்னா எனக்கு தான் அசிங்கம்” என்றாள்.

ராஜேந்திரன், “நமக்கு கல்யாணம் ஆகிய போது எல்லாம் நீ எப்படி இருந்த கொஞ்சம் யோசிச்சு பாரு. நான் எது சொன்னாலும் ஆதித்யா மாதிரி தான் நீயும் பதில் கொடுப்ப” என்று சிரித்தான்.

ராஜலட்சுமி, “இப்ப ரொம்ப முக்கியம் இல்ல அது” என்று முறைத்தாள். பிறகு விக்ரம், நிலாவை அழைத்துக் கொண்டு மேலே சென்றான். 

ராஜலட்சுமி, “ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்றார். விக்ரம், “என்ன?” என்றான். ராஜலட்சுமி, “நீ ரூமுக்கு போ நிலா கிட்ட நான் சில விஷயம் பேசணும் பேசிட்டு அனுப்பி வைக்கிறேன்” என்றார். 

விக்ரம், நிலாவை பார்த்து ஓகேவா என்று தலை அசைத்து விட்டு சென்றான். 

ராஜலட்சுமி, நிலாவை அழைத்துக் கொண்டு அடுப்பங்கரையை நோக்கி சென்றாள். ராதிகாவும் இவர்கள் பின்னாலேயே சென்றாள். 

ராஜலட்சுமி தயங்கியபடி, “உங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னைக்கு தான் முதல் நாள் நீ விக்ரம் கூட தூங்க போகிற இல்ல” என்றாள் புன்னகையோடு.

நிலா தலை குனிந்தபடி ஆமா என்று தலை அசைத்தாள். ராஜலட்சுமி, “இன்னைக்கு… உங்களுக்கு…. நான் எப்படி சொல்வது” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

ராதிகா, “நீ இப்படி முழிக்கிற அளவுக்கு என்ன இருக்கு. இன்னைக்கு முதலிரவு அவ்வளவுதான். இவள் என்ன ஒன்றும் தெரியாதவலா?”. 

“காதலிச்சு திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்க தெரியுதுல. அதுவும் பெரிய இடத்து பையனா பார்த்து வளைச்சு போட்டு இருக்கா”. 

“இன்னைக்கு தான் இவளுக்கு முதலிரவுன்னு நம்ப நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால், உண்மை என்னன்னு நமக்கு எப்படி தெரியும்”. 

“இப்போ இருக்க பசங்க எல்லாம் காதலிக்கும் போதே தான் எல்லா தப்பும் பண்ணிடுறாங்களே” என்றாள் படபடவென. 

ராஜலட்சுமி, “நீ கொஞ்ச நேரம் சும்மா வாயை மூடிட்டு இரு டி. எப்ப பாரு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க”. 

“உன் வாயில் இருந்து நல்லவிதமான வார்த்தைகளே வராதா” என்று அவளை முறைத்தாள்.

ராதிகா, “ஆமா இந்த விஷயத்துக்கெல்லாம் இவளோட அம்மா வீட்டில் இருந்து யாராவது ஒருத்தவங்க வரணும். வந்து பொண்ணு முதலிரவுக்கு சடங்குக்கு தயார் பண்ணி அனுப்பி வைக்கனும்”.

  

“ஆனா, இங்க பாரு இவளுக்குன்னு யாருமே வரல. அப்படின்னா இவ சரி இல்லாதவள் தானே. அவங்க வீட்டிலேயே யாருக்கும் இவளை பிடிக்காது நினைக்கிறேன். அதனால் தான் இவ வீட்டில் இருந்து யாருமே வரலை” என்றாள். 

ராதிகா பேசியதில் நிலா முகம் வாடிப்போய் அழுகை வந்தது. ராஜலட்சுமி, “நீ வாயை திறந்தாலே பாம்பைப் போல் கொத்திக்கிட்டே தான் இருப்பியா?”. 

“பாவம் அந்த பொண்ணு முகத்தை பாரு எப்படி வாடி போச்சு. நீ முதல்ல இங்கிருந்து போ. நான் பாத்துக்குறேன் எல்லாத்தையும்” என்று ராதிகாவை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

ராஜலட்சுமி, “நிலா நீ இவ சொல்றதை எல்லாம் நினைத்து கவலைப்படாதே” என்று ஒரு பால் செம்பை கையில் கொடுத்தார்.

பிறகு, “நீ இதை எடுத்துக்கிட்டு மாடிக்கு போ சந்தோஷமா உங்க வாழ்க்கைய ஆரம்பிங்க” என்று நிலாவை அனுப்பி வைத்தார். 

விக்ரம் மேலே சென்று அரை கதவை திறந்தான் பூக்களால் பாதை வடிவில் கட்டில் வரை போட்டிருந்தது. கட்டில் முழுக்க பூக்கள் நிறைந்திருந்தது நடுவில் மட்டும் ஹார்டின் வடிவில் பூக்களை வைத்து அலங்கரிக்க பட்டிருந்தது. 

ஒரு தட்டில் பழங்கள் நிறைந்திருந்தது. அதை பார்த்த விக்ரம் சிரித்துக் கொண்டே இதை எல்லாம் யார் எப்போ தயார் பண்ணதுன்னு தெரியலையே என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றேன்.

நிலா வந்து இதை எல்லாம் பார்த்துட்டு எப்படி ரியாக்ட் பன்னுவானே தெரியலையே என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே ஒரு பக்கம் ஆமா அவ வந்து வாயை கூட திறக்க மாட்டா எந்த பீலிங்ஸ் காட்ட மாட்டா. 

ஆனால், நா விட மாட்டேன் கண்டிப்பா இன்னைக்கு எல்லா உண்மையும் சொல்லி எங்க வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவேன் என்று தனக்குத்தானே பேசினான்.

விக்ரம் ஒரு குளியலை போட்டு விட்டு கண்ணாடியை பார்த்து விசில் அடித்த படி தலை வாரி கொண்டிருந்தான். 

கதவைத் திறந்து கொண்டு நிலா கையில் பால் செம்புடன் வெள்ளை நிறத்து புடவையில் தேவதை போல் தலையில் மல்லிகை பூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.

விக்ரம் அவளை பார்த்தவுடன் சிரிப்புடன் சென்று அவள் இரு கரங்களையும் பிடித்து கட்டிலில் அமர வைத்து அவள் கையில் இருந்த பால் செம்பை வாங்கி பக்கத்தில் வைத்தான். 

நிலா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தாள். அவள் தலையை தன் கரங்களைக் கொண்டு மேலே நிமிர்த்தி தன்னை பார்க்கும்படி செய்தான்.

விக்ரம், “இன்னைக்கி நான் உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுரேன் டார்லிங்” என்றான். நிலா அவனைப் பார்த்து, “நீங்கள்” என்று ஏதோ கூற ஆரம்பித்தாள். 

அதற்குள் விக்ரம் அவள் வாயில் தன் கைகளை வைத்து, “நீ எதுவும் பேசக் கூடாது நான் மட்டும் தான் இப்போ பேசுவேன். என் மனசுல இருக்க ரகசியத்தை உன்கிட்ட இப்ப சொல்லியே ஆகணும். அதனால் நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு” என்றான்.

பிறகு விக்ரம் எழுந்து திரும்பி நின்று கொண்டு, “நிலா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால்”.

“என் குடும்பத்திடம் கூட செல்லாமல் உனக்காக உன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி கஷ்டப்பட்டு உன்னை கல்யாணம் பண்ணிருக்கேன். என் காதல் அந்த அளவுக்கு ஆழமானது” என்றான்.

நிலா, “நீங்க சொல்றது எல்லாம் உன்மை தானா என்னை அந்த அளவுக்கு காதலிக்கிறிங்களா?” என்றாள். 

விக்ரம், “அதை சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்த நிமிஷம் எனக்காக உண்மையாவே ஒருத்தவங்க இருக்காங்க அப்படின்னா அது நீ மட்டும் தான். உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்“ என்றான்.

நிலா அவன் வாயில் தன் ஒற்றை விரலை வைத்து, “ஷ்ஷ்ஷ் இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை” என்று அவன் முதுகில் தன் முகத்தை புதைத்து இருக்கி கட்டி அணைத்து கொண்டாள்.

விக்ரம் கண்களை மூடி அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அந்த சமயம் டக் டக் என்று சத்தம் கேட்டது. விக்ரம், கண்களை திறந்து திரும்பிப் பார்த்தான். அங்கு கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

விக்ரம் ச்சே எல்லாம் கனவா? என்று சிரித்துக் கொண்டே தலையை கோதிய படி, “இதோ வரேன்” என்று கதவை திறந்தான்.

நிலா அவன் நினைத்தது போலவே அழகாக வெள்ளைப் புடவை அணிந்துக் கொண்டு கையில் பால் செம்புடன் வந்து நின்றாள். ஆனால், அவன் எதிர் பார்த்ததற்கு மாறாக கோபமாக வந்திந்தாள். 

நிலா கையில் இருந்த செம்பை டேபிள் மேல் வைத்துவிட்டு,‍ “நானா உங்களை காதலித்தேன். இதற்கு முன்னாடி நான் உங்களை எங்கேயாவது சந்தித்து இருக்கிறேனா?”.

“நீங்க என்னை கேட்காமல் என் மனதில் என்ன இருக்கிறது என்று கூட தெரிந்து கொள்ளாமல் என் கழுத்தில் தாலியை கட்டுனீங்க”. 

“ஆனா உங்க வீட்டில் எல்லாம் என்னை தப்பு தப்பா பேசுறாங்க. எனக்கு உங்களை சுத்தமாக பிடிக்கவே இல்லை” என்றாள் கோபமாக. 

விக்ரம் ஏதோ கூறுவதற்காக ஆரம்பித்தான். ஆனால், அவனை பேச விடாமல் நிலா பேசிக் கொண்டே சென்றாள். 

விக்ரம், நிலாவை ஆச்சரியமாக பார்த்தான் நீ இவ்ளோ பேசுவியா என்று.

நிலா, “என்னோட காதல் ரொம்ப ஆழமானது நீங்க என்ன பண்ணாலும் என் மனசுல நுழையவே முடியாது” என்று கண்கள் கலங்கியபடி கூறினாள்.

விக்ரம் அவள் தோள்பட்டையில் கை வைத்து “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு” என்றான்.

நிலா, அவன் கைகளை தள்ளிவிட்டு கோபமாக “நான் எந்த அளவுக்கு துருவ் ஐ காதலிக்கிறேன்? ஏன் காதலித்தேன் தெரியுமா?” என்றாள் ஆக்ரோஷமாக.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சே .. கனவா … போ மா நிலா … விக்ரமை இப்படி ஏமாத்திட்ட …