Loading

அத்தியாயம்-16

 

உடலின் மொத்த ரத்தமும் சுண்டிவிட்ட நிலையில் முகமெல்லாம் வெளுத்து உடல் உறைந்து நின்றிருந்தாள், ஜான்விகா. 

 

அவள் பின்னே நின்றிருந்த அவளது தோழர்கள் துருவன், விஷ்வேஷ்வரன் மற்றும் அகநகை திகைப்புடன் நின்றிருக்க, ஜான்விகாவால் தன் முன் சடலமாய் கிடப்பவன் உடலைக்கண்டு நிலமையைக் கிரகிக்கவே முடியவில்லை.

 

கண்களில் நீர் சுரப்பிகள் திடீரென்று ஏறியதைப் போல் கண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓட, “மகீ..” என்று பெருங்குரலெடுத்துக் கதறினாள். 

 

அவளைக் கண்டதும் அந்த உயிரற்ற உடலுக்குச் சொந்தமானவனின் சொந்தங்கள் மேலும் அழ, 

 

“இப்படி உன்னை நம்பி வாழ இருந்த பொண்ண அநியாயமா விட்டுட்டு போயிட்டியேடா” என்றபடி அங்கிருந்து ஒரு பாட்டி கதறி அழுதார்.

 

‘அதுக்குனு அவளையும் கூடக் கூட்டிக்கிட்டா போக முடியும்?’

 

கால்கள் நடுங்க அவன் சடலத்தின் அருகே சென்று பொத்தென அமர்ந்தவள், “எ..எப்படி அத்தை?” என்று அவன் அம்மாவிடம் வினவ, 

 

“தெரியலையேடா. காலைல எப்பவும்போலச் சிரிச்ச முகமா கிளம்பி போனான். சாயிங்காலம் இப்படி கொண்டு வந்து கொடுத்துட்டு போறாங்க. மயங்கி விழுந்தான், ஆஸ்பிடல் கூட்டிட்டு போனா உயிரில்லைனு சொல்றாங்கனு சொல்றாங்க” என்று அவர் மேலும் கதறி அழுதார்.

 

அவன் முகத்தைக் கண்டு கண்ணீர் வடித்தவள், “ஏன் மகி என்ன விட்டுட்டு போன? நி..நீ இல்லாம எப்படிடா நான்?” என்றவள் அவனை வைத்திருந்த கண்ணாடிப் பேழையில் முகம் புதைத்துக் கதறி அழுதாள்.

 

யாருக்கும் என்ன செய்வது என்றே புரியாத நிலை. இப்படியான திடீர் மரணத்தைச் சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் திகைப்பும் வருத்தமும் கலந்த நிலையில் இருக்க, அங்கு மையல் கொண்டு காத்திருந்தவளுக்கு என்ன ஆறுதல் கூறவென்று யாருக்கும் புரியவில்லை.

 

சில நிமிடங்களில் ஜான்விகாவின் தாய் தந்தையான ஜகன் மற்றும் ஆத்விகா வந்துவிட, 

 

தன் அன்னையைக் கட்டிக் கொண்டு “என் மகி என்னை விட்டுப் போயிட்டான்மா..” என்று கதறித் துடித்தாள். 

 

அவன் இழப்பு ஒருபக்கம் அவரை வருத்தியது என்றால், மகளின் வாழ்வே கேள்விக்குறியானதே என்ற வருத்தம் வேறு ஒருபுறம் அவரை உருக்குலைத்தது.

 

ஜான்விகாவின் தந்தை சென்று “எப்படி?” என்று அந்தச் சடலத்திற்கு உரியவனின் தந்தையான பாலாஜியிடம் வினவ, 

 

“தெரியலையே.. என்னென்னமோ சொல்றாங்க. என் புள்ள எப்படி செத்தான்னே புரியலை. திடீர்னு மயங்கி விழுந்தவன ஆஸ்பத்ரி தூக்கிட்டு போனா செத்துட்டான்னு சொன்னதா சொல்றாங்க. எனக்கு ஒன்னும் புரியலைடா” என்று அந்த முதிர்ந்த மனிதரும் கேவி அழுதார்.

 

நண்பர்கள் மூவரும் சென்று ஜான்விகாவை அரவணைக்க, “எனக்கு என் மகி வேணும்.. அ..அவன் இல்லாம என்னால.. முடியாதுடா.. மகி” என்று கதறினாள்.

“ஜான்..” என்பதைத் தவிர வேறு வார்த்தைகளே அவர்கள் நாவிலிருந்து எழவில்லை. 

 

எப்படியான காதல் அவர்களுடையது? ஒன்றரை வருடத்திற்கும் மேலான கால அளவு குறைவாகப்பட்டாலும் அந்தக் காதலின் ஆழம் உடன் இருந்து கண்டு ரசித்த அந்தத் தோழமைக் கூட்டத்திற்குத் தெரியுமே! 

 

அவள் குறும்புக்குச் சளைக்காத சுட்டித்தனத்துடன் அவளை வம்பிழுத்து சிரிக்கும்போது அவர்கள் காதலின் குறும்புத்தனத்தையும், அவளுக்கென்றால் முதலில் நின்று தனது உரிமையையும், தன் நேசத்தையும் அவன் நிலைநாட்டும் தருணங்களில் அவர்கள் காதலின் முதிர்ச்சியையும் காட்டியவன் அவன்.

 

ஜான்விகாவின் காதலைப் பெருவதற்கும் அவளைத் தன் அளவில்லா காதலில் திக்குமுக்காட வைப்பதற்கும் என்றே வந்தவன்.. மதிமகிழன். அனைவருக்கும் மதி.. அவளுக்கு மட்டுமே மகி!

 

மாலை வானம் மங்கி, மெல்ல இருள் சூழ்ந்து இரவை அடைந்திட, உறவினர்கள் கலைந்து அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறைகளுக்குச் செல்வதும், தத்தமது வீட்டிற்கு செல்வதுமாக இருந்தனர். 

 

மதிமகிழனின் உடன்பிறந்த அண்ணன், வேலை ஒன்றுக்காக வெளிநாட்டில் இருக்க, மறுநாள் காலை அவன் வரும்வரை சடலத்தை எடுக்காது இருக்க முடிவு செய்திருந்தனர்.

 

அது அவர்கள் சொந்து வீடு என்பதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் இருக்க, வரவே மாட்டேன் என்று அடம்பிடித்த ஜான்வியை அவளது தாய் தந்தை கெஞ்சி இழுத்துச் சென்றனர். 

 

வயது பெண்ணை இழப்பு நேர்ந்த வீட்டில் அதுவும் சடலம் எடுக்கப்படாத நிலையில் தனியே விட்டுச் செல்லவும் இயலாது அங்கு அவளுடனே இருந்து மேலும் மதியின் முகம் கண்டு நோகவும் இயலாத அவர்களின் தவிப்பே அவ்வாறு செய்ய வைத்தது.

 

தன் வீட்டிற்கு நடைப்பிணமாக வந்தவள், உள்ளே நுழையவும் சுவரில் அவள், மகி, விஷ்வேஷ் அவனது மனைவி அமிர்தப்ரியா, அகநகை, அவளுடைய காதலன் அகர்ணன் மற்றும் துருவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சட்டமாய் தொங்கிக் கொண்டிருந்தது.

 

அதைக் கண்டவுடன்‌ அத்தனை நேரம் அடக்கி வைத்த உணர்வுகள் மெத்தமும் வெடித்துவிட, “ஆ..” என்று கத்தியபடி தலையைப் பிடித்துக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள். 

 

அவரவர் வீடு செல்லவிருந்த தோழர்கள் விறுவிறுவென உள்ளே வர, ஜான்வியின் தாய் ஆத்விகா மகளின் நிலை காண இயலாது கண்ணீரோடு தங்கள் அறைக்குள் ஓடிவிட்டார். 

 

ஜகன் மகளின் அருகே சென்று தோள் தொட, “வலிக்குது ப்பா.. அ.. அவன் இல்லாம எப்படி ப்பா? ஏன்ப்பா நான் அவன பார்த்தேன்? ஏன் அவன லவ் பண்ணேன்? என்னால அவன் இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூடப் பார்க்க முடியாதுப்பா. சத்தியமா முடியாது” என்று கதறியவள் தந்தையைப் பார்த்துத் தன் இடது மார்பை சுட்டிக்காட்டி “வலிக்குதுப்பா” என்று கதறினாள்.

 

மகளைத் தோளோடு அணைத்துக் கொண்ட அந்தப் பெரியவரும் அழுதிட, இதற்குமேல் விட்டால் சரிவராது என்று புரிந்து கொண்ட தோழர்கள் நிலமையைத் தங்கள் கையிலெடுத்தனர்.

 

“மாமா.. நீங்க உள்ள போய் அத்தைய பாருங்க” என்று அவரை உள்ளே அனுப்பிய துருவன் சென்று நீர் எடுத்துவந்து அவளுக்குப் புகட்டினான். 

 

விஷ்வேஷ் தோள் சாய்ந்தவள், “எப்படிடா? என்னால ஏத்துக்கவே முடியலை” என்றவள் சட்டென எழுந்து, 

 

“அதெப்டி மயங்கி விழுந்து செத்துபோவாங்க? ஏய்.. வாங்கடா நம்ம போய் ஒருதடவ பார்த்துட்டு வருவோம்” என்று பைத்தியம் பிடிக்காத குறையாகக் கத்த, 

 

“ஜான்‌‌.. ஹார்ட் அடேக்” என்று விஷ் கூறினான்‌‌.

 

“அப்படிலாம் முதல் அட்டேக்லயே சாகமாட்டாங்க” என்று அவள் நம்பாது கூற, 

 

“ஜான் நிஜமாவே ஹீ இஸ் நோ மோர். நாங்க நல்லா விசாரிச்சுட்டோம்” என்று துருவன் கூறினான். 

 

ஏற்றுக் கொள்ள முடியாமல் மீண்டும் அவள் கத்த, ‘காதல் தோல்வி’ என்பது எத்தனை வலிக்கும் என்பதை சிலநாட்களேனும் வலிக்க வலிக்க உணர்ந்த விஷ் மற்றும் அகாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

அவளைக் கட்டியணைத்தபடி பிடித்துக் கொண்ட அகா, “ஜான் ப்ளீஸ் டோன்ட் லூஸ் யுவர் பேஷன்ஸ் (உன் பொறுமைய இழக்காத). அவனுக்கான கடைசி சடங்குகளில் உன் பங்கெடுப்பு கண்டிப்பா இருக்கணும். நீ இப்படி இருக்காத. அதை அவனும் விரும்பமாட்டான்” என்று அவளை நிலைப்படுத்த முயற்சித்தாள்.

 

அத்தனை எளிதில் ஏற்கும் இழப்பு அல்ல அது என்று புரிந்தபோதும் அவளைச் சமன் செய்ய வேண்டி அவள் கூற, அமைதியாக அழுதவண்ணம் அவளை இறுக அணைத்துக் கொண்டாள். 

 

சில நிமிடங்களில் அழுதபடியே அவள் உறங்கிவிட, கண்ணீரோடு தோழியை நீள்விருக்கையில் சாய்ந்து அமரச் செய்தாள்.

 

“வேணாம் அகா. ரூம்ல ஃப்ரீயா படுக்கட்டும்” என்ற துரு அவளை அவள் அறைக்குத் தூக்கிச் சென்று படுக்க வைத்துவிட்டு வர, 

 

“நான் இங்கயே இருக்கேன்டா. நீங்க போங்க” என்று விஷ் கூறினான்.

 

“வேணாம் விஷ். ப்ரியாக்கு வேற உடம்பு சரியில்லை. நீ போ. நான் இருக்கேன்” என்று அகா கூற, 

 

“ரெண்டு பேரும் கிளம்புங்க. நான் இருக்கேன்” என்று துருவன் கூறினான். 

 

மேலும் அடுத்து பேச வந்த அகாவைத் தடுத்த துருவன், “அகா ப்ளீஸ்.. நீ வீட்டுக்குப் போ. இளா தனியா இருப்பா. மாமா அத்தை ரெண்டுபேரும் ஆஸ்பிடல்ல எமெர்ஜென்ஸினு போயிருக்காங்க” என்று கூறி அனுப்பி வைத்தான்.

 

இருவரையும் அனுப்பிவிட்டு ஒரு பெருமூச்சுடன் கூடத்து நீள்விருக்கையிலேயே அவன் அமர்ந்திட, 

 

உள்ளே படுத்திருந்த ஜான்விகாவின் உறக்கம் சிறுக சிறுக கலைந்து வந்தது. 

 

தன்னை யாரோ எழுப்ப முனைவதைப் போன்ற உணர்வில் தலையில் பாரம் ஏற, உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான மயக்க நிலையில் படுத்திருந்தாள்.

 

எத்தனை மணி நேரம் அப்படியே தவித்தாளோ? மூச்சை முட்டும் உணர்வில், நீண்ட பெருமூச்சை இழுத்தபடி அவள் எழுந்து அமர, உடல் முழுதும் தொப்பலாய் வியர்த்திருந்தது. 

 

நடந்தவை, முடிந்தவை என்று யாவும் அவள் புத்தியில் பதிய சற்று நேரம் பிடித்திட, வேக மூச்சுக்கள் வாங்கியபடி சாய்ந்து அமர்ந்தாள்.

 

‘எவ்வளவு நேரம்தான்டி உன்னை எழுப்புறது தூங்கு மூஞ்சி’ என்று அருகே காற்றுக்கும் வலிக்காத ஒலியில் அவளவன் குரல் கேட்க, திடுக்கிட்டுப் போனவள் சுற்றி முற்றிப் பார்த்தாள்‌. 

துடைத்த வியர்வை தடம் மறைவதற்குள் மீண்டும் வியர்வை சுரந்து அவள் உடலை நனைக்க, 

 

“என்ன தேடுற?” என்று மீண்டும் அவன் குரல் அவள் அருகே கேட்டது.

 

தன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவளுக்கு மூச்சு ஏகத்திற்கும் வாங்க, புறங்கையால் வியர்வையைத் துடைத்தபடி தனக்கு அருகே இருந்த இடத்தில் காற்றில் கையசைத்துப் பார்த்தாள்.

 

“என்னடி காத்துல கையாட்டுற?” என்று அவன் குரல் கேட்க, 

 

பயந்து போனவள் பட்டென்று கட்டிலைவிட்டு எழுந்தாள். 

 

“எதுக்குடி எழுந்த?” என்ற குரலை அடுத்து கட்டிலிலிருந்து தலையணை கீழே விழ, கண்கள் விரிய அதைப் பார்த்தவள் தனக்கு பின்னே எட்டுக்கள் வைத்து நகர்ந்தாள்.

 

“அடியே இந்தக் கோழிமுட்ட கண்ணு முழிய சுருக்கு. எனக்கே பயமா இருக்கு” என்று அவன் கூற, 

 

“எ..என்ன நடக்குது? க..க.. கனவா? கனவா தான் இருக்கும்” என்று தானே கேள்வி கேட்டு, தானே பதில் கூறிக் கொண்டவள் மேஜையில் இருந்த நீரை எடுத்து வேக வேகமாகக் குடிக்க, 

 

“பொறுமையா குடி ஜானு” என்றான்.

 

அதில் புறையேறி வாயிலிருந்த நீரையெல்லாம் கீழே துப்பியவள், “ய..யாரது?” என்க, 

 

“நான் தான் ஜானு” என்றான். 

 

“நா..நான் தான்னா?” என்று கேட்டதுக்கு உடலெங்கும் நடுங்கியது. 

 

“என் குரல் தெரியலையாடி உனக்கு?” என்று அவன் கோபமாக வினவ, 

 

“ஆத்தா மாரியாத்தா.. செத்தவன் என்னையும் கூட்டிக்கிட்டு போக ஆவியா வந்துட்டானா?” என்று வாய்விட்டுப் புலம்பினாள்.

 

“ஆமா அங்க என் பாட்டி உன்னைத் தனியா விட்டுட்டு நான் மட்டும் போயிட்டேன்னு சொன்னாங்கள்ல? அதான் கூட்டிட்டு போக வந்தேன்” என்று அவன் கூறியது தான் தாமதம், 

 

“அம்மா..” என்று கத்தப் போனவள் வாய் யாரோ கைவைத்து அடைத்த உணர்வில் அடைபட்டது.

 

பதற்றத்துடன் தன் வாய்மீது அழுத்தும் அந்த உருவமற்ற அருவத்தின் கையைக் காற்றோடு தேடியவள் பதறிப்போக, 

 

“ஜானு ப்ளீஸ் லிசென் நான் தான் உன் மகி” என்றபடி அவளுக்குத் தன் ஆத்மாவின் உருவத்தைக் காட்சிப்படுத்தினான், அவளது மகி!

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அமிர்தப்ரியா விஷ் கல்யாணம் ஆகிவிட்டதா?

    குறும்புத்தனம் மின்ன சுற்றுபவள் வருந்தி அழுக காணும் அவள் நண்பர்களுக்கு வேதனை தான்.

    இறந்தவன் ஆன்மாவா வந்துட்டானா 😯 எவண்டா இப்படி ஆசைப்பட்டது இந்த முறை?

    விட்டுட்டு போயிட்டேனு பாட்டி சொல்லுச்சு அதுனால கூட்டிட்டு போக வந்தேன். 🤣🤣