
காதல் தேவனே 1
லண்டனின் கிரீன்விச் பகுதியில், டிசம்பர் மாதம்,நள்ளிரவு நேரம்…
தேம்ஸ் நதிக்கரையோரம் விரிந்து கிடக்கும் தெருக்களின் மீது
பனி, மெல்லிய வெள்ளை போர்வை போலச் சாய்ந்து படர்ந்திருந்தது.
சாலைகளில் நகர்ந்த கார்கள் கூட
அந்த மௌனத்தை மதிப்பது போல
மெதுவாகச் சரிந்து சென்றன.
டயர்களின் உராய்வு சத்தம் கூட
பனிக்குள் கரைந்து,
ஒரு நிசப்தமாக மாறியது.
தெருவிளக்குகளின் மஞ்சள் ஒளி
பனி துகள்களைத் தொட்டு
மங்கலாக ஒளிரச் செய்தது.
அந்த ஒளிக்குள் பனி சுழன்று விழும் காட்சி,
நேரமே நின்றுவிட்டது போல்
ஒரு மாய உணர்வை உருவாக்கியது.
தெருவில் மனிதத் தலைகள்
ஒன்றிரண்டு மட்டுமே தென்பட்டன.
அவர்களும் பொழியும் பனி மழையிலிருந்து தப்பிக்க
கோட், ஸ்கார்ஃப், கையுறைகள் அணிந்து,பனியில் கால்கள் புதைய
மெதுவாக வீடு நோக்கி
பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த அமைதியான இரவை
ஜன்னல்கள் வழியே ரசித்துக் கொண்டிருந்தாள்
இருபத்தி மூன்று வயது பருவ மங்கை.
சீரான புருவங்கள்,உணர்வுகளை மறைத்துக் கொள்ளும்
ஆழி போன்ற நீண்ட கண்கள்,
மென்மையாக வளைந்த
சிரிக்கும் இதழ்கள்…
பனியின் வெண்மை போலவே
அவளது முகத்திலும்
ஒரு அமைதியான அழகு
பரவி கிடந்தது.
மணி சரியாக பன்னிரண்டு மணியைத் தொட்டதும்,
மொபைல் அலாரத்தின் ஒலியில் அவள் திரும்பினாள்.
உடனே கட்டிலின் மேல் கிடந்த மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்தியவள்,
கட்டிலின் நடுவில் தலையில் குல்லா,
கை கால்கள் உறைய ஸ்வெட்டர் அணிந்து,
சுகமென உறங்கிக் கொண்டிருந்த
ஒரு வயது நிரம்பிய பாலகனைப் பார்த்தாள்.
குழந்தையை நெருங்கியவள்,
அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு
“ஹேப்பி பர்த்டே… நிலன் குட்டி”
என்று மெலிதாகச் சொன்னாள்.
தூக்கத்திலேயே தாயின் வாசத்தை உணர்ந்தவன்,இதழ்களை சப்பியபடி சிறு அசைவொன்று செய்தான்.
மகனின் அந்தச் செயலில் புன்னகைத்தவள்,அவன் முகத்தை ஆசையோடு பார்த்துக்கொண்டு
அப்படியே நின்றிருந்தாள்.
“இனி தூங்குறப்போ பிள்ளையை கண் வைக்கக்கூடாது…”
என்று சொல்லியபடியே,
கைகளில் பிறந்தநாள் கேக்கை ஏந்திக் கொண்டு
அவளவன் வந்தான்.
அவள் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“நீ அன்னைக்கு என்னை சொன்னில…”
என்று அவன் கண்களை சிமிட்டி கூற,
அசடு வழியும் புன்னகையுடன்
“என்ன பண்றது…வீர் என் நிலன் குட்டி அம்புட்டு அழகா இருக்கான்”
என்று கொஞ்சலாகச் சொன்னாள்.
“ஆமா… அப்படியே அவன் அம்மா மாதிரி, அவ்வளவு க்யூட்…”
என்று காதலோடு அவன் சொல்ல,
அவன் தோளில் தட்டியவள்,
“ஏற்கனவே குளிர் தாங்கல… நீங்க வேற ஓவர் ஐஸ் வைக்கிறீங்க!”
என கலாய்த்தாள்.
“உண்மைதான் மா… என் பொண்டாட்டி ரொம்ப ரொம்ப அழகு,”
என்று சிரித்தபடியே கூறியவன்,
அவள் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டான்.
அவன் முத்தத்தின் ஸ்பரிசத்தில்
அவள் கன்னம் தானாகவே சிவந்தது.
அந்த கன்னச் சிவப்பை ரசித்தபடி இருந்தவன், டீபாயின் மீது கேக்கை வைத்துவிட்டு,
முயல் குட்டி போல
வெள்ளை ஸ்வெட்டரில் விரலைச் சப்பியபடி
உறங்கிக் கொண்டிருந்த குட்டியை பார்த்தான்.
அவனது விரலை மெதுவாக எடுத்து,
குட்டியின் உள்ளங்கையில் ஒரு முத்தமிட்டவன்,
“ஹேப்பி பர்த்டே… என் லிட்டில் சேம்ப்,”
என்று மகனை ஆசையாய் பார்த்தபடி வாழ்த்தினான்.
மகனையும் கணவனையும்
கண்கள் கனிந்து பார்த்தபடி நின்றவளிடம்,
“சரி வா இனி … கேக் கட் பண்ணலாம்,”
என்று சொல்லி அவளை அழைத்து வந்து
சோஃபாவில் அமர வைத்தான்.
கேக்கை பார்த்தவள்,
“என்ன வீர்… என் பேரும் எழுதி வாங்கியிருக்கீங்க?”
என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“இன்னைக்கு உங்களுக்கும் குட்டிக்கும் தானே பிறந்த நாள்?”
என்று அவள் புரியாமல் கேட்க,
கேண்டிலை கேக்கில் வைத்து கொண்டே,
“ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம்,ஒரு மறு ஜென்மம் தான்…
சோ இன்னைக்கு உனக்கும் தான் பர்த்டே,” என்று எளிமையாய் விளக்கம் அளித்தபடி
அவளை பார்த்தான்.
கணவனை கண் சிமிட்டாமல் பார்த்தவள்,அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்…
அதன் பின் இருவரும் சேர்ந்து மெதுவாக ஊதி கேண்டிலை அணைத்து, ஒன்றாக கேக்கை வெட்டினர்.
“ஹேப்பி பர்த்டே வீர்…”
என குதூகலமாக கூறியவள், கேக்கை அவனுக்கு ஊட்டிவிட்டு கன்னத்தில் தடவ வர,
“ஹே மகி… வேணாம்டி…”
என சிரித்தபடி தடுக்க முயன்றான்.
“க்ஹூம்… முடியாது!”
என கொஞ்சியவள் அவன் கன்னத்தில் கிரீமை தடவினாள்.
பதிலுக்கு அவன் அவள் உதட்டில் மெதுவாக கிரீமை பூசி, சுவைக்க இதழை நெருங்கினான்.
அவள் தானாகவே கண்களை மூடிக் கொண்டாள்…
அந்த நேரம்,
“க்கும்…”என குரலை செருமியபடி, வாசலில் நின்று இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணொருத்தி உள்ளே நுழைந்தாள்.
அவளை கண்டதும் வீர் சட்டென்று மனைவியை விட்டு விலகினான்.
இனி சங்கடமாக அவளை பார்த்தவள்,
“அஞ்சு, வாடி… வீர், என் அக்காவும் வந்துட்டா பாருங்க!”
என சந்தோஷமாக அவனிடம் கூறினாள்.
அஞ்சலி கட்டிலின் அருகே வந்தவள், தங்கையின் மகனை கனிவு பொங்க பார்த்து
“ஹேப்பி பர்த்டே குட்டி…
நீ தான் உன் அம்மாவுக்கு உலகம்.
அவளை எப்போதும் சந்தோஷமா வச்சுக்கோடா தங்கம்…
அது தான் என்னோட ஆசை,”
என அவன் காதருகே மெதுவாக கூறி, ஒரு முத்தம் இட்டு விலகினாள்.
“வீருக்கும் விஷ் பண்ணுடி அவருக்கும் இன்னைக்கு தான் பர்த்டே”
“ஹேப்பி பர்த்டே வீர்” குரலில் இனிமையை வலுக்கட்டாயமாக சேர்த்து முகத்தை சிரித்தபடி வைத்து வாழ்த்தினாள்…
இந்தாடி…என கேக்கை கட் செய்து கொடுத்தவள் “வீர் வாங்கிட்டு வந்த கேக் எப்படி இருக்கு ,”
சிறிதளவு உண்டு பார்த்தவள் குட் என கூறிவிட்டு தங்கையை ஒரு கணம் பார்த்துக் விட்டு வெளியே சென்றாள்.
அவள் சென்ற பின்,
“ஏன் உன் அக்கா உன்னையே ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க?”
என வீர் கேட்டான்.
“அது… அது தெரியலையே…”
என தன் இதழ்களை பிதுக்கினாள்…
*********
சென்னை காலை வேளை…
வீட்டின் உள்ளே அங்கும் இங்கும் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தார் அம்பிகா.
“மஞ்சள் கொண்டு வாங்கோ…”
அய்யரின் குரல் ஒலிக்க, மஞ்சளும் எண்ணெய் பாட்டிலும் எடுத்துக் கொண்டு வந்தவர், மஞ்சளை அய்யரிடம் கொடுத்து விட்டு, ஏற்ற வேண்டிய விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு வைத்தார்.
“அம்மா… பால் பாயசம் பண்ணிட்டேன். எப்படி இருக்கு பார்த்து சொல்லு…”
ஆறு மாத கர்ப்ப வயிற்றை மெதுவாகத் தாங்கியபடி, மென் நடையுடன் கிண்ணத்தில் பாயசத்தை எடுத்து வந்த தன் மகளைப் பார்த்த அம்பிகாவின் கண்கள், மகளின் தாய்மை உணர்வால் நெகிழ்ந்தன.
“கடவுளுக்கு படைக்கறதை நாம ருசி பார்க்கக் கூடாது, பிருந்தா…”
என்றார் புன்னகையுடன்.
“அப்போ எப்படி தெரியும்… நான் பண்ணது நல்லா இருக்கானு?”
என சிணுங்கினாள் பிருந்தா.
“என் பொண்டாட்டி எது பண்ணாலும் நல்லாதான் இருக்கும்!”
என்று சொல்லியபடி அங்கே ஆஜரானான் கமல்.
“பார்… உன் புருஷனே சொல்லிட்டான்’ல. அப்புறம் என்ன?”
என்றார் அம்பிகா சிரிப்புடன்.
“அத்தை! என்ன உங்க மருமகனை இப்படிப் பொசுக்குனு மரியாதை இல்லாம பேசுறீங்க?
நீ கூட எனக்காகக் கேட்க மாட்டியா, பிரு குட்டி?”
என்று மூக்கை உறிஞ்சினான் கமல்.
“போடா படவா!
அங்கிட்டு, சின்ன வயசுல என் முன்னாடி கிண்கிணி மிங்கினின்னு திரிஞ்சிட்டு இருந்த பையன்…
உனக்கு மரியாதை கொடுக்கணுமோ?”
என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டார் அம்பிகா.
“அத்த…”
என்று பல்லைக் கடித்தவன்,
“போதும்… காலையிலேயே என்னை அசிங்கப்படுத்தினது போதும். போங்க…”
என்று கூறியபடி, வாயில் கை வைத்து சிரிப்பை அடக்க முயன்ற மனைவியை
“சிரிக்காதடி…” என்று சிணுங்கியவாறு அழைத்து சென்றான்.
அவர்களை பார்த்து சிரித்துக் கொண்ட அம்பிகா, மீண்டும் தன் வேலைகளை கவனிக்கச் சென்றார்.
சில நிமிடங்கள் கழித்து
“அம்பிகா… எல்லாத்தையும் தயார் பண்ணிட்டியா?”
என்று மாமியார் அபிராமி, கணவர் லிங்கத்துடன் அங்கு வந்து சேர்ந்தவர் கேட்டார்.
“எல்லாம் ரெடியா இருக்கு அத்தை.
எல்லாரும் பூஜைக்கு வந்தா போதும்… ஆரம்பிச்சிடலாம்,”
என்று அமைதியாக பதிலளித்தார் அம்பிகா.
“அப்ப போய் எல்லாரையும் கூட்டிட்டு வா…” என்று கூற, அவர் மாடி ஏறும் முன்பே
“அம்மா நீ இரு… நான் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்!”
என்று மாடிப்படிகளில் இருந்தே கத்தினான் இரண்டாவது புதல்வன் தினேஷ்.
அவர் சரி எனும் விதமாக தலையசைத்துவிட்டு, பூஜை நடைபெறவிருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.
தினேஷ் முதலில் அத்தை–மாமா, பின்பு அக்கா–மாமா ஆகியோரைக் கூப்பிட்டான்.
அதற்குப் பிறகு, கடைசியாக இருந்த ஒரு அறையின் கதவின் முன்பு வந்து… சிறிது தயக்கத்துடன் நின்றான்.
நேரம் ஆகிக் கொண்டிருப்பதை உணர்ந்து,
“அண்ணா… அண்ணா…”
என்று மெதுவாக கதவைத் தட்டினான்.
“ம்ம்ம்… இருடா, வரேன்…”
என்று உள்ளிருந்து சத்தம் கொடுத்தவன் இரு நிமிடம் கழித்து, கதவைத் திறந்தான் ருத்ரன்.
வெள்ளை வேட்டி–சட்டையில், சிறிது நீளமாக வளர்ந்த முடியைச் சிறிய குடுமியாக கட்டி,
நெற்றியில் மெல்லிய சந்தனம்,
கழுத்தில் VI எழுத்து பொறித்த டாலர் தொங்கும் மெலிய தங்க சங்கிலி,
வலது கையில் தங்கக் காப்பு,இடது கையில் கடிகாரம் என,
அழகிய கந்தர்வனாய் காட்சி அளித்தான்.
அண்ணனின் அழகில் ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் நின்ற தினேஷ்,
ருத்ரன் சொடக்கிடவும் தான் சுயம் வந்தவன்
“ரொம்ப… ரொம்ப சூப்பரா இருக்க அண்ணா! பார்க்க மேரிட் மேன் மாதிரி இல்ல… சிங்கிள் மாதிரி இருக்க!”
என்று அவன் புகழ,
“வாயை மூடுடா!
உன் அண்ணி உள்ளதான் இருக்கா.
கேட்டா காளி ஆட்டம் ஆடுவா.
பிறந்த நாள் அதுவுமா… இவகிட்ட பேச்சு வாங்கணுமா நானு?”
என்று கிண்டலாகச் சொன்னான் ருத்ரன்.
தினேஷ் சிரித்தான்.
“ஹூம்…” என்று குரலைச் செருமியபடி,
“ருத்ரா… நானும் பொம்முவும் ரெடி…”
என்று சொல்லிக்கொண்டே, பட்டு சேலை சரசரக்க, ஒரு வயது பெண் குழந்தைக்கு மேனியை உறுத்தாத காட்டன்–பட்டு பாவாடை அணிவித்து,
அழகான அலங்காரத்துடன் தூக்கியபடி வந்து நின்றாள்
அவனின் மனைவி மோனிகா.
“ம்ம்… கீழே போலாம் மோனி.
பூஜைக்கு லேட்டாகிடுச்சு,”
என்று கூற, அவள் முன்னே செல்ல
அண்ணன்–தம்பி இருவரும் பின்னே சென்றனர்.
அங்கே, முழு குடும்பமும் ஏற்கனவே அமர்ந்திருந்தது.
இவர்கள் வரவும்,
“அந்த மனையில உட்காருங்க,”
என்று ருத்ரனின் அத்தை கங்கா கூற,
இருவரும் ஓம குண்டத்தின் முன்பு அமர்ந்தனர்.
ஐயர் மாலையை கொடுக்க,
இருவரும் வாங்கி போட்டுக் கொண்டனர்.
“பிள்ளை ராசி, நட்சத்திரம் சொல்லுங்கோ…”
என்று ஐயர் கேட்க,
பேத்தியின் ராசி–நட்சத்திரத்தை கூறிய அம்பிகா,
“என் மூத்த பையனுக்கும் இன்னைக்குத் தான் பிறந்த நாள்.
அவனுடையதையும் சொல்றேன்…
அவனுக்கும் சேர்த்து பூஜை பண்ணுங்க,”என்று கூறி,
ருத்ரனின் ராசி–நட்சத்திரத்தையும் சொன்னார்.
ஐயர் தலையசைத்தபடி பூஜையைத் தொடங்கினார்.
இன்று குழந்தை நிலாவிற்கான முதல் பிறந்த நாள்.
தன் பூட்டப் பேத்தி நீண்ட ஆயுளோடும், மன மகிழ்வோடும்,
எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஒரே வேண்டுதலின் பேரில் இந்த பூஜையை அபிராமி ஏற்பாடு செய்திருந்தார்.
தேவன் வருவான்❤️❤️❤️…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
2

