Loading

அத்தியாயம் 07

 

சமையலறையில் தாய்க்கு உதவிகளை செய்துவிட்டு, தமக்கையின் அறைக்கு வந்த பர்விதா கண்டது,

 

கையில் அபர்ஜித் தந்து சென்ற சாக்லேட்டை வைத்துக் கொண்டு, ஃபோனின் தொடுதிரையில் அபர்ஜித்தின் புகைப்படம் இருக்க, விரிந்த புன்னகையுடன் அவற்றை மாறி மாறி பார்ப்பதும், எதையோ நினைத்து வெட்கச் சிரிப்போடு ஒற்றைக் கையால் முகத்தை மூடுவதும் என்று இருந்த பார்கவியைத்தான் .

 

இந்த 16 நாட்கள் வள்ளியம்மாவின் இழப்பை விட, அபர்ஜித் அவளிடம் சரியாக பேசவில்லை என்பதே பெரும் துயரமாக இருந்தது பார்கவிக்கு. அது அவளது முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது.

 

ஆனால் இன்று அபர்ஜித் ஐந்து நிமிடங்கள் கூட சரியாக பேசியிருக்க மாட்டான். அவனைப் பார்த்த பின்பு அவளது முகத்தில் அவ்வளவு தேஜஸ். அத்தனை பிரகாசம்.

 

தமக்கையை ஆசையாக பார்த்தவளுக்கு அவளின் இந்த மகிழ்ச்சிக்காகவே எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.

 

அபர்ஜித் மன்னிப்பு கேட்டிருந்தாலும் பர்விதாவின் மனதில் ஏதோ ஒரு சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது.

 

ஆனால் இப்போது பார்கவியின் பூரிப்பான முகத்தை பார்க்கும்போது தன்னுடைய மனநிலைமையை விட, தமக்கையின் சந்தோஷமே முக்கியம் என்று தோன்றியது.

 

“என்னக்கா.. இத்தன நாளா பியூஸ் போன பல்பு போல இருந்துச்சு உன் மூஞ்சி.. மாமா வந்ததும் 1000 வாட்ஸ் பல்ப் மாதிரி ஜொலிக்குது…” என்று பார்கவியை கிண்டல் செய்தவாறு அவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

தங்கை தன்னை கண்டு கொள்ளவும் அசடு வழிந்த பார்கவி “தெரியலடி.. ஆனா என்னவோ அவர் கூட பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. அவர் எனக்கானவர்னு நினைக்கும் போது மனசு ஏதோ மாதிரி இருக்கு.. பட்டாம்பூச்சியா.. இல்ல ஏதோ ஒன்னு.. ஆனா காத்துல மிதக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்…” என்று சொல்ல

 

“ஓஹோ கல்யாணத்துக்கு முன்னாடியே காதல் வந்துடுச்சா…?” என்று பர்விதா கேட்க

 

“ஹா.. காதலிக்கிறேனானு தெரியல.. ஆனா என் வாழ்க்க துணை அவர்தான்றதுல ரொம்ப உறுதியா இருக்கேன்.. அவரோட வாழ்ற வாழ்க்கை தான் எனக்கு சந்தோஷத்த தரும்னு ஆழமா நம்புறேன்.. அதுக்கு மேல அவர நேசிக்கிறேன்.. இது தான் காதல்னா.. சரி எனக்கும் காதல் வந்துருச்சு போல…” என்று சொன்னவள் முகத்தை மூடி வெட்கப்பட ,

 

“அட பார்டா.. வெட்கம் வந்துருச்சோ…”என்று சொல்லி பர்விதா அவள் கையை விலக்கி விட்டு வயிற்றில் கீச்சு கீச்சு மூட்ட,

 

“ஹேய்..பர்வி கூச்சமா இருக்குடி…” என்று சொல்லி பார்கவியும் மாற்றி அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டினாள். இரு சகோதரிகளும் இத்தனை நாட்கள் இருந்த இறுக்கமான மனநிலையை சற்று தளர்த்தி சந்தோஷமாக இருந்தனர் .

 

******

ஆனால் அபர்ஜித்தோ தனக்கு என்ன வேண்டும். தன் மனநிலை என்ன என்பதை ஆராய்வதற்காக தன் அலுவலகம் வந்தவன், தனது இருக்கையில் அமரவும், அவனது ஆஃபீஸின் உள் அறையில் இருந்து தொம்மென்று பெரிய சத்தத்துடன் சலசல என்று பைல்கள் விழும் சத்தமும் கேட்டது.

 

திடுக்கிட்டவன் என்னவென்று ஓடிச் சென்று பார்க்க . பைல்கள் அனைத்தும் கீழே விழுந்து ஒரு குவியலாக இருந்தது.

 

வெளியே இரண்டு கையும் காலும் தெரிந்தது. தலையில் அடித்துக் கொண்ட அபர்ஜித் “என் அறிவே…” என்று திட்டியவாறு அந்த உருவத்திடம் நெருங்கி அதன் மீது இருந்த பைல்களை எடுத்துவிட,

 

“அப்பாடா.. வந்துட்டீங்களா சீனியர்.. இப்பதான் மூச்சு விட முடியுது…” என்று எழுந்து அமர்ந்தாள் அறிவழகி.

 

அபர்ஜித்தோ “எரும.. எரும.. இப்போ எதுக்கு ஆஃபிஸ் ரூம்ல வந்து இந்த பைல் எல்லாம் கீழே கொட்டி வச்சிருக்க…?”

 

“என்ன சீனியர் மறந்துட்டீங்களா?.. வர வர உங்களுக்கு மறதி ஜாஸ்தி ஆகிட்டே போயிட்டு இருக்குது.. நீங்க தானே சொன்னீங்க கேஸ் ஹிஸ்ரி எல்லாம் எடுத்து வைக்க சொல்லி…” என்று சொல்ல அவளை முறைத்துப் பார்த்தவன்

 

“லூசு.. அறிவழகினு உனக்கு யார் தான் பேர் வெச்சாங்களோ.. அறிவும் கிடையாது அழகும் கிடையாது…”

 

“சீனியர் இப்போ என்ன நடந்துச்சுனு இந்த குதி குதிக்கிறீங்க.. முதல்ல ரீசன் சொல்லுங்க…” எனவும்

 

“என் அறிவு கொழுந்தே! கேஸ் ஹிஸ்ரிய போய் போலீஸ் ஸ்டேஷன்ல வாங்கிக்கொண்டு வைக்க சொன்னேன்.. இங்க இருக்கிற ஹிஸ்ரி எல்லாம் எடுத்து வைக்க சொல்லல…”

 

“ஓஹோ..ஹோ…” என்று தாளம் கூட்டி இழுத்தவள் “அத தெளிவா சொல்லணும்.. என் மேல தப்பு கிடையாது உங்க மேலதான் தப்பு…”

 

“ஓஹோ நான் தப்பு..”

 

“ஆமா..மொட்டையா கேஸ் ஹிஸ்ரிய எடுத்து வைக்க சொல்லிட்டீங்க.. முன்னாடி எல்லாம் எப்டி சொல்லுவீங்க.. இந்த ஸ்டேஷன் போயி.. அங்க இந்த இன்ஸ்பெக்டர் கிட்ட.. இந்த டீடைல்ஸ் வாங்கிட்டு வான்னு சொல்லுவீங்க..

 

…அந்த மாதிரி டீடைல்ஸ்ஸா சொல்லணும்.. நமக்கு வார்த்தை தான் முக்கியம்.. நம்ம வக்கீலுங்க…”

 

“ஆமா.. நீ வக்கீல்னு உன் வாயால சொல்லிக்கிட்டா தான் உண்டு.. எந்திரிச்சு வா…” என்று அவன் டேபிளில் சென்று அமர,

 

தட்டு தடுமாறி புடவையை வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவள், அவன் முன் அமர்ந்து இதுவரை பெண்டிங்கில் உள்ள கேஸ் விஷயங்களையும், அவன் இனி முடித்தாக வேண்டிய விடயங்களையும் வரிசையாக கூறிக் கொண்டு வந்தவள்,

 

“சீனியர்.. இது மட்டும் ரெண்டு வாரத்துக்கு மேல அப்டியே இருக்குது.. இந்த ஃபோன் நம்பருக்கு ஃபோன் போட்டு அன்னைக்கு என்ன விவரம்னு விளாவரியா விசாரிச்சிங்களா?.. உங்களுக்கு பன்ச்வாலிட்டியே கிடையாது சீனியர்…” என்று சொல்லவும்

 

சத்தமே போடாமல் அபர்ஜித் அவளை முறைத்து பார்க்க “என்ன சத்தத்தையே காணோம்…” என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “எதுக்கு சீனியர் என்ன உத்து பாக்குறீங்க.. திடீர்னு அழகா ஆயிட்டேனா என்ன…” என்று கேட்க

 

“என் அறிவே.. உன்ன நான் முறைச்சி பாத்துட்டு இருக்கேன்…” என்று சொல்ல

 

“ஓஹோ இதுதான் முறைச்சி பார்க்கிறதா.. அது சரி எதுக்கு வை முறைச்சி பையிங் மீ…” என்று கேட்க

 

“அந்த ஃபோன் நம்பர் தந்த பையன் உன் கிட்ட என்ன சொன்னான்…?”

 

“அதுவா…” என்று பிளாஷ்பேக் சென்று பார்த்தவள், அது.. எனக்கு பொண்ணு பாக்குறாங்க.. எனக்கு அவங்கள எல்லாம் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.. என் வாழ்க்க உன் கையில தான் இருக்கு.. நல்ல முடிவா சொல்லு.. உன்ன நம்பித்தான் இருக்கேன்னு சொன்னான்..

 

…ஒரு வக்கீல் கிட்ட ஃபோன் நம்பர் தந்து என் வாழ்க்க உன் கையில தான் இருக்குன்னு சொன்னா என்னவா இருக்கும்.. ஏதோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்.. என்ன காப்பாத்தி விட சொல்லி இருக்கான்…

 

…அந்த கேஸ நானே தனியா எடுத்து வாதாடாம சீனியர் என்கிற முறையில உங்களுக்கு ஒரு கேஸ் கொண்டு வந்து தந்தா நீங்க என்னையவே குறை சொல்றீங்க…” என்று கேட்க

 

“அறிவு கெட்ட அறிவே.. அவன் உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கான்.. ஃபோன போட்டு என்ன விஷயம்னு கேட்டா.. அவங்கள லவ் பண்றேன் அவங்க எனக்கு ஃபோன் பண்ணுவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. ஆனா நீங்க ஏன் ஃபோன் பண்றீங்கன்னு அவன் பயந்துட்டான்..

 

…நான் வேற எடுத்ததுமே அட்வகேட்னு சொன்னேன்.. அவ்வளவுதான் ஃபோன ஆஃப்ல போட்டுட்டு போனவன் தான் அதுக்கு பிறகு ஆன்னே பண்ணல.. ஒருத்தன் ப்ரொபோஸ் பண்றது கூட புரியாத அளவுக்கு இருக்க பாரு…” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள

 

“ஓஹோ இப்டித்தான் ப்ரொபோஸ் பண்ணுவாங்களா?.. ஆனா சீனியர் கைல ரோஸ் கொடுத்து, முட்டி போட்டு ஐ லவ் யூ.. இப்படித்தானே சொல்லுவாங்க.. அவன் ஐ லவ் யூ சொல்லவே இல்லையே.. அப்போ அவன் மேல தானே தப்பு…”

 

“ஆமா அப்படியே ஐ லவ் யூ சொல்லிட்டாலும்.. மேடமுக்கு புரிஞ்சுற போகுது.. உன் மண்டையில பல்ப் எரியுதோ இல்லையோ உன் வாழ்க்கையில விளக்கு ஏத்துற சம்பவம் நடக்க வாய்ப்பே இல்ல என்றது நல்லா தெரியுது…” என்று அவன் திட்ட

 

அந்த மட சாம்பிராணிக்கு இப்போதும் எதை பல்ப் என்று சொன்னான், எதை விளக்கேற்றுவது என்று சொன்னான் புரியவில்லை.

 

எனவே தலையை சொரிந்தவள் “எதுக்கு பல்ப் எரியனும்.. நான் எதுக்கு விளக்கேத்தனும்.. இரண்டுமே வேணாம் சீனியர்.. நான் டார்ச் லைட் வசிக்கிறேன்…” என்று அறிவழகி சொல்ல,

 

அவளை வெட்டுவதா குத்துவதா என்னும் வகையில் பார்த்துக் கொண்டிருந்தான் அபர்ஜித் “வை மறுபடியும் மொறச்சி பையிங்…” என்று அவள் கேட்க, இறுக்கம் தளர்ந்து சத்தமாக சிரித்தவன்

 

“எனக்கு என்ன பிரச்சன இருந்தாலும் நீ ஒருத்தி போதும் அறிவு…” என்று சொல்ல

 

இல்லாத காலரை தூக்கி விட்டவள் “அதுக்குத்தான் அறிவு வேணும்ங்கிறது…” என்று சொன்னவள்

 

“நான் உங்க கூட இருக்கும் போது அவ்ளவு ரிலீஃபா ஃபீல் பண்றீங்களா சீனியர்…?” என்று கேட்க

 

“அதெல்லாம் இல்ல.. உன்ன மாதிரி ஒரு பெரிய பிரச்சனைய கூடவே வெச்சிருக்கேனா.. எனக்கு வெளியில இருந்து வார மத்த பிரச்சனை எல்லாம் பிரச்சனையா தெரிய மாட்டேங்குது…” சிரிப்பை அடக்கிய படி அவன் சொல்ல ,

 

“கிரேட் இன்சல்ட்…” என்று விரல்களை மடக்கி கை முட்டியை நெற்றியில் வைத்துக் கொண்டு ஓர கண்ணால் அவனைப் பார்க்க ,

 

இப்போதும் அதே புன்னகையுடன் “பச்சையா நடிக்காத…” என்று சொல்ல

 

“சரி கண்டுபிடிச்சிட்டிங்க.. நீங்கதான் விண்.. ஆனா சரோஜாதேவி சோப்பு டப்பா உடைஞ்சு போச்சாம்.. வேற ஏதாவது உங்களுக்கு வாங்கி தாரேன்…” என்றவள்

 

“சரி இப்போ சொல்லுங்க.. எப்பேர்பட்ட கேஸா இருந்தாலும் அசால்டா டீல் பண்றவரு என் சீனியர்.. என்னாச்சு உங்களுக்கு.. கல்யாணம் நின்னு போனதுல இருந்து அப்செட்டா இருக்கீங்க.. எதையோ யோசிச்சு டல்லாவே சுத்தி வந்திங்க.. மேடம ரொம்ப லவ் பண்ணிட்டீங்களோ?…” என்று கேட்க

 

அபர்ஜித்தோ புன்னகை வடிந்து போக “யார கேக்குற..?” என்று கேட்க

 

“மேடம்னு நான் யார சொல்ல போறேன்.. நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணத்தான்.. பார்கவி மேடம்…” என்று சொல்ல,

 

“லவ் பண்றேன் தான்.. ஆனா பார்கவிய இல்ல…” என்று அழுகாமல் குலுங்காமல் அவள் பிஞ்சு தலையில் ஒரு மூட்டை நெல்லை தூக்கி வைத்தது போல் செய்தியை இறக்க,

 

“இல்ல எனக்கு புரியல.. கல்யாணம் நின்னதாலதானே அப்செட்டா இருந்தீங்க அப்டி இல்லையா.. ஐயோ! சீனியர் நீங்க வேற யாரையும் லவ் பண்றீங்களா?.. அப்டின்னாலும் கல்யாணம் நின்னதுக்கு சந்தோஷப்படனுமே.. கல்யாணம் நின்னதுல இருந்து தானே அப்செட்டா இருக்கீங்க…” என்று குழப்பமாக கேட்டாள்.

 

புளிபோட்டு விளக்கினாலே அறிவழகிக்கு விளங்காது. இவன் புதிர் போட்டு விளக்க, தன் வெண்கலத் தொண்டையை திறந்து அதிர்ச்சியில் கத்தியே விட்டாள்.

 

“ஷூ.. இப்போ எதுக்கு சத்தம் போடுற…” என்றவன் ஆதி முதல் அந்தம் வரை, இப்போது பர்விதாவை அவள் வீட்டில் சென்று பார்த்துவிட்டு வந்தது வரை, தன் மனதில் இருப்பதை கூறினான்.

 

அதைக் கேட்டவளுக்கு தலை கிறுகிறுதத்து மயக்கம் வருவது போல் இருக்க “சீனியர் ரெண்டு மேங்கோ ஜூஸ், ஒரு பக்கெட் சிக்கன், சாக்லேட் கேக் ஹாப் கே ஜி, அப்புறம் குளுக்கோஸ் பாக்கெட் ரெண்டு, ஆர்டர் பண்ணுங்க…” என்று சொல்ல,

 

“ஆர்டர் பண்றேன்.. ஆனா எனக்கு வேணாம்.. உனக்கு மட்டும் ஆர்டர் பண்ணிடுறேன்…” என்று சொல்ல

 

“ஐயோ சீனியர்.. இது அவ்ளவும் எனக்கு தான்.. உங்களுக்கு எதுவும் வேணும்னா நீங்க தனியா ஆர்டர் போட்டுக்குங்க.. நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்…” என்றவள் அப்படியே மேசையில் தலையை கவிழ்த்து படுத்துக் கொண்டாள்.

 

“ஏய் அறிவு என்னாச்சு.. ஏதாவது நீ சொல்லுவேன்னு உன்கிட்ட விஷயத்த சொன்னா.. நீ பாட்டுக்கு கவுந்து படுத்துட்ட…”

 

“ஏது.. நான் ஏதாவது சொல்லனுமா.. நீங்க என்ன சீனியர்.. உங்ககிட்ட ஜூனியரா வந்து சேர்ந்ததுக்கு காரணமே எல்லாத்தையும் நீங்க பாத்துப்பீங்க.. நோகாம சம்பளத்த வாங்கி குடும்பத்த பத்துக்கலாம்னு தான்.. நீங்க என்னடானா என் குட்டி மூளைக்கு இவ்ளோ பெரிய ஷாக் கொடுத்ததும் இல்லாம..

 

…அதுக்கு சொல்யூஷன் வேற கேக்குறீங்க.. இது உங்களுக்கே அடுக்குமா? நியாயமா? தர்மமா?…” என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக

 

“ஏய்..பொறு.. பொறு.. பொறு நீ இவ்ளவு தம்பிடிச்சு பேசுறதுக்கு கொஞ்சம் யோசிக்கலாம் இல்ல…” என்று கேட்க

 

“அதத்தான் இவ்ளவு நேரம் தம் கட்டி சொல்லிட்டு இருக்கேன்.. என்னால யோசிக்கலாம் முடியாது சீனியர்.. ஆனா எப்டி சீனியர் கிஸ் அடிச்சு இருக்கீங்க.. இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்திருக்கீங்க…” என்று அவள் கிண்டலாக பார்க்க

 

“அறிவு நான் தான் சொல்றேனே அது பார்கவினு நினைச்சு பண்ணுனேன்.. ஆனா அது பர்விதான்னு தெரிஞ்சதுல இருந்து என்ன பேய் பிடிச்சு ஆட்ற மாதிரி அந்த சம்பவம் உள்ளுக்குள்ள போட்டு உலுக்குது..

 

…ஆனா இப்போ என் மனசு முழுக்க பர்விதா தான் இருக்கா.. இது எப்டி நடந்துச்சு எனக்கே தெரியல.. எவ்ளவு கேவலமான விஷயம் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு புரியுது..

 

…ஆனா இப்போ கூட பார்கவிய பாத்துட்டு வாரேன், அவள என் வைஃபா பாக்க முடியல..அதே சமயம் பர்விதாவ என்னால சாதாரணமா பார்க்க முடியல.. நான் பண்றது சரியா தப்பா எதுவுமே புரியாம ரொம்ப குழப்பத்துல இருக்கேன் அறிவு…” என்றவன் தன் இருகைகளால் தன் தலை முடியை இருக்க பற்றி மேஜையில் அழுத்தத்தை கொடுத்தான்.

 

“எனக்கு ஒரு ஐடியா…”

என்று துள்ளி குதித்து உற்சாகமாக அறிவு சொல்ல ஆர்வமாக அவளை நிமிர்ந்து பார்த்த அபர்ஜித் அவள் கூறிய ஐடியாவில் கொலை வெறி கோபத்திற்கு உண்டான.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்