Loading

அத்தியாயம் 06

 

வள்ளியம்மா இறந்து பதினாறு நாட்கள் ஓடி இருந்தன. இந்த பதினாறு நாட்கள் அபர்ஜித் அவன் மனதோடு நடத்திய போராட்டங்கள் ஏராளம். என்னதான் அடிக்கடி பர்விதாவின் வீட்டிற்கு சென்று வர இருந்தாலும், பர்விதாவிடம் அவன் பேச நினைத்தவற்றை பேசுவதற்கான தகுந்த இடமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

 

அவள் வெளியில் வந்தால் தான், அவளை சந்தித்து தன் மனதில் உள்ளவற்றை பேச முடியும் என்று காத்திருந்தான். பதினாறு நாள் முடியவும் அவள் கண்டிப்பாக காலேஜுக்கு வருவாள் என்று யூகித்திருந்தான்.

 

அதேபோல் பர்விதாவும் அன்று காலேஜுக்கு வந்திருந்தாள். காலேஜ் முடிந்து வெளியே வந்தவளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி தான். வெளியே காரில் சாய்ந்தவாறு அபர்ஜித் நின்று இருந்தான்.

 

உள்ளே சற்று தடுமாறினாலும் இயல்பாக இருப்பது போல் “ஹாய் மாமா.. நீங்க இங்க என்ன பண்றீங்க…” என்று சாதாரணமாகவே கேட்டாள் .அவளது இந்த இயல்பான பேச்சில் அவனுக்குத்தான் ஏதோ ஒன்று தடம் புரண்டது.

 

“உன்ன.. ‘க்கும்’ உன்ன பாக்க தான் வந்தேன்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பர்வி…” என்றான் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல். “எங்கிட்டயா மாமா.. என்கிட்ட என்ன பேசணும்?…”

“கார்ல ஏறு வேற இடத்துக்கு போய் பேசலாம்…” என்றான்.

 

அவள் சற்று தடுமாற “கண்டிப்பா பேசணும் பர்வி ப்ளீஸ்…” என்றான் கெஞ்சுதலாக. சரி தானும் சிலவற்றை பேசி இன்றோடு முடித்து விட வேண்டும் என்று அவன் காரில் ஏறினாள். காரை கடற்கரையை நோக்கி செலுத்தினான்.

 

கடற்கரையில் காரை நிறுத்தியவன் கீழே இறங்காமல் அவள் புறமாக திரும்பி பேச ஆரம்பித்தான் “சாரி பர்வி.. அன்னைக்கு நடந்தது நானே எதிர்பாராத ஒன்னு.. எனக்கு அதுக்கு எப்டி விளக்கம் கொடுக்கிறதுனு தெரியல.. பார்கவினு.. நினச்சு தான்….” என்று தடுமாறியவன்

 

“சாரி..சாரி நான் என்ன விளக்கம் சொன்னாலும் அது சரி வராது.. தயவு செஞ்சு என்ன மன்னிச்சிரு …அந்த விஷயத்த மறந்துடு…” என்றான். அவன் பேச வந்தது இவற்றை அல்ல ஆனால் எல்லாவற்றையும் மறந்து இயல்பாக இருப்பவளின் மனதை திசை திருப்புவது சரி இல்லை என்பது புரியவே மறந்துவிடு என்று மன்னிப்பையும் யாசித்தான்.

 

“எனக்கும் புரியுது மாமா.. நீங்க இவ்ளவு சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நான் மன்னிச்சிட்டேன்.. மறந்துடுறேன்…” என்று சொன்னவளுக்கு தெரியும் கடைசி வரைக்கும் அந்த சம்பவத்தை அவளால் மறக்க முடியாது என்பது.

 

ஆனால் தன் தமக்கையின் நல்வாழ்வுக்காக எல்லாவற்றையும் கடந்து தான் வர வேண்டும் என்று எப்போதோ முடிவு எடுத்துவிட்டாள்.

 

“தேங்க்ஸ் பர்வி.. எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு.. இத இதோட நம்ம விட்ரலாம்.. இத பத்தி பார்கவி கிட்ட பேச தேவையில்ல… சரி நானே உன்ன வீட்ட ட்ராப் பண்றேன்..” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே

 

திறந்திருந்த கார் கண்ணாடியின் வழியே பூ விற்கும் ஒரு பெண்மணி பர்விதாவிடம் “மேடம் பூ வாங்கி இருக்கிறீங்களா?…”என்று கேட்க அவளோ “இல்லக்கா வேணாம்” என்று சொன்னாள்.

 

ஆனால் அபர்ஜித் “குடுங்க அக்கா…” என்று சொல்லி அவரிடம் பணத்தை எடுத்து நீட்டினான். “எதுக்கு மாமா இதெல்லாம் வேணாம்…”

“பரவால்ல பர்வி வாங்கி வச்சுக்க.. பூ வேணாம்னு பொண்ணுங்க சொல்லக்கூடாதுனு அம்மா சொல்லுவாங்க…” என்று சொல்ல

 

சரி என்று தலையாட்டியவாறு அந்த பெண்ணிடம் இருந்து பூவை வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள். “சரி போலாமா..” என்று கேட்டவாறு அவளின் வீட்டை நோக்கி புறப்பட்டான் .

 

போகும்போது முதல் தடவை போன்றே கடையொன்றில் வண்டியை நிறுத்தி பார்கவிக்காக சாக்லேட் ஒன்றையும் வாங்கிக் கொண்டே புறப்பட்டான் . வீட்டிற்கும் வந்து சேர்ந்தது விட்டனர்.

 

அபர்ஜித்தை ஹோலில் உட்கார வைத்துவிட்டு, உள்ளே சென்று தாயையும் தமக்கையையும் அழைத்து வந்தாள் பர்விதா. வெளியே வந்த பார்கவிக்கு அவ்வளவு சந்தோஷம்.

 

இந்த பதினாறு நாட்கள் ஆபர்ஜித்துடன் சரியாக பேச முடியவில்லை. ஃபோனில் அழைத்தாலும் வேலையாக இருப்பதாக கூறி விடுகின்றான். மெசேஜ் போட்டாலும் (ஆம், இல்லை) என்பதை தவிர வேறு சம்பாசனைகள் இல்லை.

 

வள்ளியம்மையின் இறப்பிற்கு முன்புவரை தன்னுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவன், சட்டென விலகிச் செல்வது போன்றதொரு எண்ணத் தோற்றம் அவளுக்கு. ஆனால் இப்போது கையில் சாக்லேட் உடன் அவன் தன்னை தேடி வந்தது அத்தனை இதமாக இருந்தது.

 

“வாங்க மாப்பிள்ள நீங்க மட்டும் தான் வந்தீங்களா?…” என்று கேட்டார் சங்கரி. “ஆமா அத்த.. வார வழியில பர்விய பாத்தேன் அப்டியே உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…” என்றான்.

 

“சரிங்க மாப்பிள்ள நீங்க பேசிட்டு இருங்க.. நான் இதோ வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு சமையலறை பக்கம் சென்றார். பர்விதாவும் அங்கு நிற்காமல் தாயின் பின்னே சென்றுவிட்டாள்.

 

அபர்ஜித்தோ பார்கவியை நோக்கி தான் வாங்கி வந்த சாக்லேட்டை நீட்ட, அதை மென்புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள் “என்னாச்சு உங்களுக்கு.. நான் மெசேஜ் பண்ணேன் ஹால் பண்ணேன் எதுக்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்ல…” என்று கேட்டாள்.

 

அவனோ “ஒரு கேஸ் விஷயமா கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. அத முடிச்சுட்டு நானே உன்கிட்ட பேசலாம்னு இருந்தேன்.. அதான் நேர்ல பார்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்…” என்று சொன்னான்.

 

“ஓ ..சரி சரி எனக்கு புரியுது.. நீங்க உங்க கேஸ்ச பாருங்க …அதே நேரம் டைம் கிடைக்கிறப்போ எனக்கு சின்னதா ஒரு மெசேஜ் போட்டா கூட போதும்” என்றாள் வார்த்தையில் அதிகப்படியான நேசத்தை சுமந்து.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, கையில் காஃபி கப்புடன் வந்த பர்விதா, இருவருக்கும் காஃபியை கொடுத்து விட்டு திரும்பி நடக்க, பர்விதாவின் தலையில் இருந்த மல்லிகை பூவையும், பார்க்கவியின் கையில் இருந்த சாக்லேட்டையும் பார்த்தவன்

 

(‘பொண்டாட்டிக்கு பூவும் மச்சினிச்சிக்கு சாக்லேட்டும் வாங்கி கொடுக்கணும்.. நான் மாத்தி மாத்தி வாங்கி கொடுத்திருக்கனோ… இல்ல இதுதான் சரியா’) என்று அவனது மனதினுள் சலனம் …

 

காஃபியை அருந்திவிட்டு “சரி அப்போ நான் கிளம்புறேன்.. டைம் இருக்கிறப்போ பேசுறேன்…” என்று பார்கவிடம் கூறிவிட்டு, வெளியே வந்த சங்கரியிடமும் விடை பெற்று, ஒரு கணம் பர்விதாவை பார்த்துவிட்டு வெளியே சென்றான்.

 

அபர்ஜித் வெளியே செல்லவும், டீப்பாயில் இருந்த காஃபி காப்புகளை எடுத்த பர்விதா, கைதவரி கீழே காஃபியை கொட்டிவிட்டாள். “அச்சோ.. இத வேற இப்போ கிளீன் பண்ணனுமா…” என்று அழுத்துக் கொண்டு சமையலறை சென்று துணி ஒன்றைக் கொண்டு வந்து கீழே அமர்ந்து குனிந்து துடைத்துக் கொண்டிருந்தாள்.

 

அபர்ஜித் கிளம்பியதுமே அவனைப் பார்த்த சந்தோஷ மிகுதியில் தனது அறையினுள் புகுந்து கொண்டு, கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டாள் பார்கவி. சங்கரியும் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

 

வெளியே வந்த அபர்ஜித், கார் கீ யை தவற விட்டு வந்ததை உணர்ந்து, திரும்பி உள்ளே வந்தான். வந்தவன் கண்டது குனிந்து தரையை துடைத்துக் கொண்டிருந்த பர்விதாவைத்தான்.

 

அவள் குனிந்து இருந்ததால் அவளது சுடிதார் சற்றே கீழ இறங்கி, அவளது மென் அங்கங்கள் பட்டும் படாமல் தெரிந்தது. அபர்ஜித்தின் கண்கள் அவற்றையே வெறித்தன.

 

சற்றென்று தலையை உலுக்கிக் கொண்டவன், தொண்டையைக் கனைத்துக் கொண்டே முன்னேறினான். அவனது சத்தம் கேட்டு எழுந்து நின்றவள், என்ன என்ற வகையில் பார்க்க, “கார் கீய வெச்சிட்டு போயிட்டேன்…” என்றான்.

 

அவள் திரும்பி பக்கத்தில் இருந்த, டீப்பாயில் இருந்த கார் கீயை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதை அவளது விரல்களை ஸ்பரிசித்துக் கொண்டே வாங்கியவன் “தேங்க்ஸ்…” என்று சொல்லிக்கொண்டு

 

திரும்ப எத்தனித்தவனின் பார்வையில் பட்டது, பர்விதாவின் ஆடை கழுத்தடியில் சற்று விலகியதால் அவளது உள்ளாடையின் பட்டி. அவளிடம் அதை எப்படி சொல்லுவது என்று யோசித்தவன்,

 

பின்பு வீட்டில் தானே இருக்கின்றாள் அவளது தாயோ, தமக்கையோ பார்த்து சரி செய்ய சொல்வார்கள் என்று எண்ணி திரும்பியவன், பின் என்ன நினைத்தானோ, அவளை அவர்கள் கூட தவறாக பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில்

 

அவளை நெருங்கி தொண்டையை செருமியவன் “பர்வி…” என்று அழைக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள். அவளது முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தவாறு “கழுத்தடியில ட்ரெஸ்ஸ அட்ஜஸ்ட் பண்ணிக்க…” என்று கூற

 

அவன் கூறிய அடுத்த நொடி தானாக அவளது கைகள் இரண்டு பக்கமும் உடையை சரி செய்தது. இப்போது அவனது முகத்தை அவள் பார்க்க முடியாமல் சங்கடமாக நிற்க, அவன் அவளை தாராளமாக கீழிருந்து மேல் வரை அளந்து விட்டு “சரி நான் வாரேன்…” என்று கூறி விடை பெற்று சென்றான்.

 

அவன் சென்ற பின்னர் “ச்சே..அவர் பாத்து சொல்ற அளவுக்கு கண்டுக்காம விட்டுட்டேனே… என்று தலையில் தட்டிக் கொண்டாள். சற்று சங்கடமாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்தவள் தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

 

பார்கவியின் வீட்டிலிருந்து புறப்பட்ட ஆபர்ஜித்துக்கு மனது ஒரு நிலையில் நிற்கவில்லை. அவன் பேச நினைத்தது என்ன… இப்போது பேசிவிட்டு, செய்துவிட்டு வந்த காரியங்கள் என்ன…

 

சொல்லப்போனால் பரவிதாவின் இயல்பான நடவடிக்கை அவனுக்கு நிம்மதியை தான் தந்திருக்க வேண்டும். ஆனால் அவன் எதிர்பார்த்தது அதை அல்லவே… அவனையும் அறியாமல் அவன் மனது எதிர்பார்த்தது அவளின் கோபம்.

 

கோபப்படுவாள், திட்டுவாள், நியாயம் கேட்பாள், அப்போது அவனிடம் கூறுவதற்கு தகுந்த நியாயங்களும் காரணங்களும் இருக்காவிடனும், அவன் காதலை கூறலாம் என்று எண்ணி இருந்தான்.

 

ஆம் காதல். இந்த 16 நாட்களில் அவள் மீது உண்டானது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல, முத்தத்தினால் உண்டான மோகம் இல்லை, அதையும் தாண்டி, அவனுள் ஏதோ வைரஸ் ஊடுறுவதைப் போல் அவள் மீதான நேசம் அவன் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி மொத்தமாக அவனை ஆற்கொண்டு விட்டிருந்தது .

 

இது முத்தமிட்டதினால் உண்டான உடல் இச்சையோ… அல்லது அவளின் உடலின் மீது உண்டான மோகமோ கிடையாது. அதை அவன் உணர்ந்து கொண்ட தருணம் இன்றுதான்.

 

இதோ அவளை தனிமையில் காரில் தன் அருகில் கண்ட அந்த நொடி, அந்த முத்த சம்பவத்தையும் தாண்டி அவளை பார்க்கும் போது அவன் இதயம் துள்ளிக் குதிக்கின்றதே… இந்த துள்ளலும் பரவசமும் பார்கவியை பார்க்கும்போது, அவள் அருகில் இருக்கும் போது வந்தது கிடையாது.

 

பார்கவியிடம் அவன் வயதுக்கே உரிய மெச்சூரிட்டியுடன் இருந்தவன். பர்விதாவை பார்க்கும் போது மட்டும் அரும்பு மீசை முளைக்கும் இளம் வயது பையனைப் போற்று உடலினுள்ளும் மனதினுள்ளும் ஏதேதோ உணர்வுகள்.

 

அவன் காதலை உணர்ந்து கொண்ட தருணம். காதல் மலர ஒரு நொடி கூட தேவைப்படாதே. அபர்ஜித்திற்கும் நொடிகள் தேவைப்படவில்லை.

 

பார்கவியுடன் முடிவு செய்யப்பட்ட அந்த திருமணம், அவனை தீர்க்கமாக முடிவு எடுக்க விடாமல் இத்தனை நாட்கள் அலைக்கழித்தன. இப்போது அவன் மனது அடித்துக் கூறியது. கண்டிப்பாக பார்கவியுடன் அவனது வாழ்க்கை சந்தோஷமாக அமையாது.

 

அவன் வாழ்க்கை பர்விதாவுடன் அமைந்தால் மட்டுமே சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கும் என்று. ஆனால் அவன் எடுத்திருக்கும் இந்த முடிவில் இரு குடும்பங்களின் சந்தோஷம், நிம்மதி, கௌரவம் அனைத்தும் அடங்கி இருக்கின்றது.

 

எல்லாவற்றுக்கும் மேல் அவன்தான் தன் வாழ்க்கை துணை என்று கல்யாண மண்டபம் வரை வந்த பார்கவி. அவளுக்கு அவன் என்ன நியாயம் கூறி விட முடியும். திருமணத்திற்கு முதல் நாள் உன் தங்கையை முத்தமிட்டதிலிருந்து அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வான்.

 

அப்படியே அவன் சொன்னாலும் அவன் காதல் காதல் லிஸ்டில் சேருமா… இல்லை உடல் இச்சை, காமம் என்று தூற்றப்படுமா… நிறையவே யோசிக்க வேண்டி இருந்தது அபர்ஜித்துக்கு. வீட்டிற்கு செல்ல இருந்தவன் வாகனத்தை

தனது அலுவலகம் நோக்கி செலுத்தினான். ஆழ்ந்து சிந்திக்க அவனுக்கான இடம் அதுவாகத்தான் இருந்தது.

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்