Loading

அத்தியாயம் 05

 

பார்கவியின் திருமணத்துக்கு என்று அனைத்து சொந்தங்களும் வந்திருக்க, அவர்கள் அனைவரும் வள்ளியம்மாவின் இறப்பிற்காக அங்கேயே தங்கிவிட, வீடு முழுவதும் சொந்தங்கள்.

 

அந்த சூழ்நிலையில் பர்விதாவிடம் தனியாக அபர்ஜித்தினால் பேச முடியவில்லை. ஒரே ஊர் என்பதால் செவ்வந்தி குளித்து, உடைமாற்ற, சிறிது நேரம் ஓய்வெடுக்க என்று மட்டுமே அவர் வீட்டுக்கு வந்து சென்றனர்.

 

அதை தவிர்த்து மற்ற நேரங்கள் பார்கவியின் வீட்டில் தான் இருந்தனர். பர்விதாவை முத்தமிட்ட பின்னர் சாதாரணமாக கூட பார்கவியை அபர்ஜித்தால் பார்க்க முடியவில்லை.

 

ஆனால் கண்கள் முழுவதும் பர்விதாவிலேயே இருந்தது. அவள் வந்தவர்களுக்கு டீ குடுக்கும் போது, சாப்பாடு பரிமாறும் போது, அவனுக்கும் கொடுத்தாள்.

 

அப்போதெல்லாம் அவன் பார்வை தானாகவே அவள் உதட்டிற்கு சென்று வந்தது. உதட்டில் சிறிய வெடிப்பு இருந்தது. மற்றவர்கள் கண்ணுக்கு அது தெரியவில்லை. காயப்படுத்தியவன் அவன் தானே அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

 

அதைப் பார்க்கும்போதெல்லாம் கண்களை இறுக மூடி, அந்த சம்பவத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்வான்.

 

அந்தோ பரிதாபம் கண்களை மூடினாலும் அந்த சம்பவமே கண்முன் விரிந்து காட்சியாகியது.

 

******

ஐந்து நாட்கள் அரக்கப் பறக்க செல்ல, ஆறாவது நாள் தனியாக ஒரு அறையில் வைத்து பர்விதாவை தடுத்து பிடித்திருந்தான் அபர்ஜித். அவள் அவனை திகைத்துப் பார்க்க, எதற்கோ வந்தவன் அவளைப் பார்த்த மறுநொடி அவள் இரு கன்னங்களையும் கைகளில் தாங்கி இதழில் இதழ் பதித்திருந்தான்.

 

மென்மையாக பஞ்சு மிட்டாய் சுவைப்பது போன்ற இதமான முத்தம். கண்களை மூடி உணர்வின் பிடியில் இருந்தவன் அவள் இதழ் சுவையில் கிரங்கித்தான் போனான்.

 

தேன் சுவை என்பர்…

தீஞ்சுவை என்பர்…

அவள் இதழ் எச்சுவை என்று அவனால் கூற முடியவில்லை. முத்தமிட்டு விலகியவன் அவள் இதழ்களை பார்க்க, அந்த ரோஸ் பட்ஸ் இதழ்கள் எச்சிலில் மினுமினுத்து மீண்டும் வா வென்று அழைத்தது.

 

அவளை மீண்டும் முத்தமிட குடிந்தவனை நெஞ்சில் கையை வைத்து பர்விதா தள்ளி விட, கட்டில் இருந்து விழுந்திருந்தான் அபர்ஜித். தரையில் நெற்றி அடிபட “ஆஅ..” என்று வலியுடன் நெற்றியைப் பொருத்தியவன்,

 

அப்போதுதான் கவனித்தான் அவன் இருக்கும் இடத்தை. இதுவரை அவன் கனவுலகில் மிதந்ததை இப்போதுதான் உணர்கின்றான். “கனவா! எதுக்கு இப்டி ஒரு கனவு.. எல்லாத்தையும் மறக்கணும்.. சரி பண்ணனும்னு நினைக்கிறேன்.. ஆனா என்னால அதுல இருந்து வெளிய வரவே முடியல…” என்று தலையை பிடித்துக் கொண்டான்.

 

பார்கவி தான் தன் மனைவி என்று உறுதியான பின்னர் கூட, இது போன்ற எண்ணங்கள் துளியும் இருந்ததில்லை. கற்பனைகளோ, கனவுகளோ அவன் கண்முன் விரிந்ததில்லை.

 

ஆனால் எப்போது பர்விதாவை முத்தமிட்டானோ, அப்போதிலிருந்து இப்படித்தான் தூக்கத்தை தொலைத்து ஒன்று கனவில் துடிக்கின்றான்… இல்லை கற்பனையில் தவிக்கின்றான்…

 

அவனையும் மீறி அவனால் அன்று அவள் இதழில் கண்ட இன்பத்தை இன்று வரை மறக்க முடியவில்லை. அவனுக்கான முதல் முத்தம் அது… முத்தமிட்ட பின் அவளைக் கண்ட அந்தக் கோலம் அன்று உறுத்தியது.

 

இன்று கண்ணுக்குள் குளிர்ச்சியாக நின்று இதம் கூட்டியது. வீங்கிச் சிவந்த உதடுகளும், கசங்கிய மாராப்புமாக நின்றவளே கண்ணுக்குள் நின்று கலவரம் செய்தாள்.

 

அன்று அவன் உணர்ந்த அவள் உடல் சூடு, அந்த கதகதப்பு, அவன் தொட்ட அந்த மென் மலரின் மென்மை, எல்லாவற்றுக்கும் மேல் அவன் உயிரினுள் ஊடுருவி சென்ற அவள் உதட்டு முத்தம். அத்தனையையும் அவன் ஆழ் மனது வறண்ட பூமிக்கு கிடைத்த வான் மழையாக உள் இழுத்து பதுக்கிக் கொண்டது.

 

எத்தனை முயன்றும் அந்த எண்ணங்களில் இருந்து அவனால் வெளிவரவே முடியவில்லை.

முதல் காதல்… முதல் முத்தம்… என்றும் மறக்காதல்லவா… அவனாலும் மறக்க முடியவில்லை.

 

மீண்டும் மீண்டும் நினைக்க தொடங்கினான். அந்த முத்தத்தோடு சேர்த்து அவளையும்…

 

பர்விதாவோ மீண்டும் மீண்டும் மறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அந்த சம்பவத்தை. என்னதான் சாதாரணமாக இருப்பது போல் அவள் காட்டிக் கொண்டாலும். உள்ளுக்குள் உருகி கொண்டிருந்தாள்.

 

தமக்கையிடம் விசயத்தை சொல்லவும் முடியாமல், தனக்குள்ளே போட்டு புதைக்கவும் முடியாமல், பார்கவியை நினைத்தும் அபர்ஜித்தை நினைத்தும் காற்றில் ஆடும் ஊஞ்சலாய் அல்லாடிக் கொண்டிருந்தது பர்விதாவின் மனது.

 

அது ஒரு விபத்து என்பது நன்கு தெரியும். இருந்தும் அந்த சம்பவத்திலிருந்து அவளாலும் வெளியில் வர முடியவில்லை. அவளுக்குமே முதல் முறை ஓர் ஆணின் அத்தகைய நெருக்கம். வாழ்நாளில் அதை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

 

என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், குளியல் அறையில் நின்று வெகு நேரம் யோசித்தவள் முகத்தை தண்ணீரால் அடித்து கழுவிக்கொண்டு வெளியே வர, பார்கவி தொலைபேசியை பார்த்துக் கொண்டு கண்களில் கண்ணீர் திரண்டு இருக்க கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

 

பார்கவியை அந்தக் கோலத்தில் பார்த்ததும் ஒரு நொடி பர்விதாவிற்கு காலின் அடியே உலகம் நழுவியது. ஒருவேளை அபர்ஜித் உண்மையை கூறி விட்டானோ. அது தெரிந்து தான் இடிந்து போய் அமர்ந்திருக்கின்றாளோ! என்று எண்ணியவள் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு மெதுவாக தமக்கையை நெருங்கி அவள் தோளைத் தொட்டாள்.

 

அப்போதுதான் கவனித்தாள். கையில் இருந்த ஃபோனில் அபஜித்தின் புகைப்படம். “என்னாச்சுக்கா.. எதுக்கு இப்போ இப்டி கண்கலங்குற…” என்று குரல் அடைக்க கேட்க

 

தங்கையை கட்டிக்கொண்டு விம்மி அழுதாள் பார்கவி. பர்விதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் சில நொடி அப்படியே நின்றவள்.

 

பின் பார்கவியின் கன்னத்தைப் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தாள். “என்னாச்சுக்கா.. ஏதாவது சொல்லு.. எனக்கு கஷ்டமா இருக்குல்ல…” என்று கேட்கவும் அழுகையை விழுங்கிக் கொண்ட பார்கவி

 

“எல்லாரும் சொல்ற மாதிரி.. நா நான் அதிர்ஷ்டம் இல்லாதவளா பர்வி.. என்னோட ராசி தான் கல்யாணத்துக்கு முதல் நாளே பாட்டி இறந்துட்டாங்களா?.. எனக்கு கல்யாண யோகமே இல்லையா?.. எனக்கும் அபர்ஜித்துக்கும் கல்யாணம் நடக்காதா…?”

 

“அக்கா.. என்னக்கா பேசுற.. ஊரு நாலு விதமா பேச தான் செய்யும்.. அது எதுவும் உண்மையாகிடாது.. பாட்டிக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல.. அவங்களுக்கு ஏதாவது ஆகுறதுக்கு முன்னாடி கல்யாணம் நடக்கும்னு தானே அவசர அவசரமா ஏற்பாடு பண்ணனுனோம்..

 

…இருந்தும் உன் கல்யாணத்த பாக்க அவங்களுக்கு கொடுத்து வைக்கல அவ்ளோதான்.. அதுக்காக உனக்கு கல்யாண யோகம் இல்லன்னுலாம் இல்ல.. அத்த தான் சொல்லிட்டாங்களே அவங்க வீட்டு மருமக நீ தான்னு.. இன்னும் மூணு மாசத்துலயோ இல்ல ஆறு மாசத்துலயோ உனக்கும் மாமாக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்..

 

…சும்மா அடுத்தவங்க பேசுறத கேட்டு மனச போட்டு குழப்பிக்காத க்கா.. கண்ண துடச்சுக்க.. இதுக்கா இவ்ளவு அழுத…” என்று பார்கவின் கண்களை பர்விதா துடைத்து விட ,

 

“நான் அதெல்லாம் கேட்டுட்டு கூட ஏதோ பேசுறவங்க பேசுறாங்கன்னு விட்டுட்டேன் டி.. ஆனா அபர் என்கிட்ட இந்த ஆறு நாளா பேசவே இல்ல.. கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் டெய்லி மெசேஜ் பண்ணாரு.. ஒருத்தடவையாவது ஃபோன் பண்ணி பேசுனாரு..

 

…பாட்டி இறந்ததுக்கு பிறகு நம்ம வீட்டுக்கு வந்து போயிட்டு தான் இருக்காங்க.. பக்கத்துல இருந்தும் கூட என்கிட்ட ஒரு வார்த்த பேசல.. ஃபோன்ல கூட ஒரு மெசேஜ் இல்ல.. அத்த மட்டும்தான் இதப்பத்தி யோசிக்காத.. அழாத, தைரியமா இருன்னு ஆறுதல் சொன்னாங்க..

 

…யார் என்ன சொன்னாலும் அபர்ஜித் ஒரே ஒரு வார்த்த இத பத்தி யோசிக்காத, கவலப்படாத நீ தான் என் வைஃப்னு சொல்லி இருக்கலாம் இல்ல.. அப்போ அவர் மனசுலயும் நான் அதிர்ஷ்டம் இல்லாதவனு தோணிருச்சோ.. நான் வேணாம்னு நினைச்சிட்றாரோனு பயமா இருக்கு பர்வி…”

 

“அக்கா நீயா எதையாவது யோசிச்சு மனச போட்டு வருத்திக்காத.. மாமா அப்டி நினைச்சு இருந்தா இங்க வந்திருக்கவே மாட்டாங்க.. நேத்து வரைக்கும் இங்க வந்துட்டு தான் போனாங்க.. நமக்கு ஆறுதலா இருக்காங்க.. அப்பா கூட துணையா நிக்கிறாங்க..

 

…அதுக்கு காரணம் என்ன.. இந்த வீட்டோட மூத்த மருமகன் என்ற உரிமை.. உனக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கலன்னாலும் அந்த உரிமைய அவர் எடுத்துக்கறதுக்கு காரணம், என்னைக்கா இருந்தாலும் நீ அவர் மனைவி என்கிற எண்ணம் இருக்கிறதால தான்..

 

…அது மட்டும் இல்லாம மாமா ஒரு வக்கீல்.. அவருக்குன்னு தனிப்பட்ட வேலைகளும் இருக்கும்.. அதையும் பார்த்துட்டு இங்கயும் வரனும்.. கல்யாணம்னு சொல்லி அது நடக்கல.. அத பத்தி நிறைய பேர் விசாரிப்பாங்க அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணும்..

 

…இப்டி நிறைய டென்ஷன் இருக்கும் க்கா.. அது எல்லாமே சரி பண்ணதும் அவராவே உன்ன தேடி வந்து பேசுவாரு.. நீங்க ரெண்டு பேரும் இத்தன நாள் பேசி பழகி இருக்கீங்க.. இவ்ளவுதான் உங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்கா.. பேசிக்கல பாத்துக்கல என்றதுக்காக அன்பு இல்லன்னு ஆகிறாதுக்கா…” என்று பர்விதா சொல்ல சற்று தெளிவடைந்த பார்கவி

 

“ஆமா இல்ல.. ஆனா அப்புறம் ஏன் என் முகத்தை கூட பாக்க மாட்டேங்கிறாங்க…?” என்று கேட்க

 

பர்விதாவோ இறுக்கம் தளர்ந்து மெலிதாக சிரித்தவள் “ஹா.. மாமா உன்ன பாத்தாலே லீட்டர் கணக்கா ஜொல்லு ஊத்துவாரு.. இது துக்க வீடு உன்ன ப்ரியா சைட் அடிக்க முடியாது இல்ல.. யாராச்சும் பாத்துட்டாங்கன்னா சங்கடமேன்னு உன்ன பாக்கிறத அவாய்ட் பண்ணலாம்…” என்று சொல்ல

 

பார்கவியும் அழகாக புன்னகைத்தவள் “இருக்கும்.. இருக்கும்.. எப்பவுமே என்ன ஒரு மார்க்கமா பாப்பாரு.. நான் தான் தேவை இல்லாம ஏதேதோ யோசிச்சு.. ச்சே…” என்று தன் தலையில் தட்டிக் கொண்டவள்

 

அபர்ஜித்திற்கும் (அபர் உங்க நிலைமை புரியுது.. நேரம் கிடைக்கும் போது மெசேஜ் பண்ணுங்க.. உங்கள் பதிலுக்காக ஆவலாக காத்திருக்கும் உங்கள் பார்கவி) என்று ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு இயல்பாகி விட்டாள்.

 

பர்விதாவோ பார்கவியின் வாழ்க்கையும், சந்தோஷமும் தான் முக்கியம். தன்னுடைய சங்கடமோ, மனநிலையோ முதன்மை கிடையாது, என்று முடிவு எடுத்தவள் அபர்ஜித்தை சந்திக்கும்போது இயல்பாக இருக்க வேண்டும் .

 

அந்த சம்பவம் தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று எடுத்துக்காட்ட வேண்டும். அப்போதுதான் அபர்ஜித்தும் குற்ற உணர்வு எதுவும் இன்றி பார்கவியுடன் முன்பு போல் இயல்பாக, அன்பாக இருப்பான் என்று முடிவு எடுத்துக் கொண்டாள்.

 

நிச்சயமாக அந்த சம்பவத்தை அவளால் மறக்க முடியாது. மறைக்க நினைத்தாள். மறக்க நினைத்து முடியாமல் மனதோடு அந்த நினைவுச் சுழலோடு சிக்கிக்கொண்டாள்.

 

பெண்கள் பஸ்ஸில் ஊர் பேர் தெரியாதவன் தவறாக உரசினாலே அதை மறக்க முடியாமல் தவிப்பார்கள். இவன் உறவுக்காரன். அடிக்கடி பார்க்க நேரிடும். அப்போதெல்லாம் அவனைப் பற்றிய நினைவலைகளில் நினைவுச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா? சிறு பெண்ணவளுக்கு அதற்கான வழி தான் தெரியவில்லை.

 

நாம் எதை நினைவடுக்கில் இருந்து அழிக்க நினைக்கின்றோமோ அதை நம் மனது அடி ஆழத்தில் பத்திரபடுத்தி விடுமாம். அப்படி இருக்க பர்விதாவின் நிலை….

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்