
அகம் 8
நாற்பது நாட்கள் கழிந்த நிலையில் சிவசக்திக்கு சாலையோரமாய் நடந்தபடி பள்ளிச் சென்றிக்கொண்டிருந்தாள். பத்து நாட்களிலே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் அவள். எப்போதும் தன்னைப் பள்ளியில் விடும் மன்னராசா சில நாட்களாக வருவதில்லை என்பதிலும் வருத்ததுடன், பள்ளி சீருடையும் இரட்டை ஜடையும் போட்டிருந்தவளின் முதுகுக்குப் பின் அந்தக் குரல் கேட்டது.
“ஏய் பாப்பா” என இருபது வயது மதிக்கத் தக்க பெண் அழைத்தாள்.
“சொல்லுங்ககா” எனச் சக்தி பதில் கொடுக்க,
“பாப்பா நான் கேக்குற கேள்விகெல்லாம் பதில் சொல்லுறியா.?”
“யாருக்கா நீங்க நான் பள்ளிகொடத்துக்குப் போவணும், வேற யார்கிட்டையாவது கேட்டுகிடுதியளா.?”
“ஏய் பாப்பா பயப்படாதா சும்மா நாலு கேள்வி தான்” எனச் சொல்லியபடி தன் கை பையில் இருந்த பேனாவையும் சில காகிதங்களையும் எடுக்க.
“எக்கா நேரமாயிட்டுனா டீச்சர் ஏசுவாவக்கா” மீண்டும் சக்தி மறுத்தாள்.
“நீ பதில் சொன்ன உனக்குக் கிஃப்ட்டு தருவோம் பாப்பா” எனச் சொல்ல சரியென அறைகுறையாய் சம்மதித்தாள் சிவசக்தி.
“நீ என்ன சோப்பு யூஸ் பண்ணுற பாப்பா..?” அந்தப் பெண் கேட்க,
“சோப்பா..? துளசி சோப்பு” வெள்ளந்தியாய் சொன்னாள் சிவசக்தி.
“அதைக் கேக்கல பாப்பா..? சோப்புக்கு பேர் இருக்கும்ல..?”
“ஓ அதைக் கேக்குதியளா..? அவந்தி ஆர்கானிக் சோப்” அவள் சொன்ன பின் தவறாமல் குறிப்பெடுத்துக் கொண்டாள் அந்தப் பெண்.
“தலைக்கு என்ன எண்ணெய் தேய்க்குற பாப்பா..?”
“அது செம்பருத்தி எண்ணெய் அதுவும் அவந்தி தான்” அவள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அவந்தி என்ற பதிலே வர,
“ஏன் பாப்பா எல்லாமே அவந்தி ப்ராடக்ட்ஸ் தான் யூஸ் பண்ணுறியா..?” திகைத்துப் போய்க் கேட்டாள் அந்தப் பெண்.
“நான் மட்டும் இல்லைக்கா இந்த ஊர்காரவிய, அதைத் தான் வாங்குவாவ, சந்தேகம் இருந்தா கேட்டுகிடுங்க்ககா, எனக்குப் பள்ளிகொடத்துக்கு நேரமாச்சு” என அவள் சிட்டாய் பறக்க போன நேரத்தில்,
“பாப்பா நீ இவ்வளவு நேரம் பதில் சொன்னால அதுக்கு இந்தா கிஃப்ட்” என அன்றாடம் பயன்படுத்தும் சோப், ஷாம்பு, எண்ணெய், சாக்லேட் வகைகள் இருந்த ஒரு டப்பாவை சக்தியிடம் நீட்ட,
“இதெல்லாம் பள்ளிகொடத்துக்குக் கொண்டு போன டீச்சர் திட்டுவாவக்கா, ஊருக்குள்ள பேனியினா, அவந்திகை அங்காடின்னு ஒரு சின்னக் கடை இருக்கும் நான் சொன்னேன்னு கொடுத்திட்டு போயிடுங்க” எனச் சொன்னவள் விரைந்து நடந்திருந்தாள். இந்தப் பெண்ணும் அவந்திகை அங்காடியை தேடி அலைய துவங்கியவள். அலைபேசி எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.
“ம்ம் சொல்லு” கம்பீரமான ஆணின் குரல் மறுமுனையில் ஒலிக்க,
“சார் நீங்க சொன்னது உண்மை தான் சார்” பயந்தபடி சொன்னாள் அவள்.
“யூ ப்ளடி இடியட், டூ வாட் ஐ சே..! எனக்குத் தெரியாத அது உண்மையா பொய்யான்னு, போய் வேலையை முடிச்சிட்டு வா” கடுங்கோபத்தில் அவனின் குரல் ஒலித்தது, அழைப்பை துண்டித்துவிட்டு, மேலும் முன்னேறி நடந்த பெண் அவந்திகையின் கடையின் முன் வந்து நின்றாள்.
சிவசக்தியிடம் பெயருக்கு நாலு கேள்வியைக் கேட்டு விட்டு, அந்தப் பரிசு பொருள்களைத் தருவது போல் வந்தவள், அந்த டப்பாவை அவந்திகையிடம் கொடுக்க, அதைப் பிரித்துப் பார்த்து ஆத்திரம் கொண்டாள் அவந்திகை.
“இன்னும் எத்தனை பேரு ஊருக்குள்ள திரியுரிய, ஒழுங்கா வந்த வழிய பார்த்து ஓடி போயிடுக” எச்சரிக்கும் தொனியில் சொன்னாள் அவந்திகை.
“மேம் அது வந்து, இந்த ப்ராடக்ட்ஸ் யூஸ் பண்ணி பார்த்து சொல்லுங்க, பிடிக்கலைனா வாங்க வேண்டாம், ஃப்ரீ தான்” என அந்தப் பெண் சொல்ல, கையிலிருந்த டப்பாவை தூக்கி வீதியில் வீசயவள், கடையிலிருந்து வெளியே வந்தாள்.
“நீ கொடுத்துருக்க எல்லாமே ரசாயாணம் கலந்தது, இது எதுமே இயற்கை முறையில செய்யப் படலை, ஒழுங்க எடுத்திட்டு போற வேலைய பாக்குதீயா, ஊரை கூட்டவ, இந்தத் திசை பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்கக் கூடாது” என அவந்திகை கோபத்தில் கத்த, அவள் குரல் கேட்டு அகனும் வெளியே வந்தான்.
“அவந்தி வாட் ஹப்பன்.?” என அவனும் வந்து விட.
“அகன் ஒண்ணுமில்லை, நான் பார்த்துகிடுதேன், நீங்க வீட்டுக்குள்ள போங்க” எனச் சொன்னவள் அந்தப் பெண்ணிடம் எகிறிக்கொண்டு நின்றாள்.
அவந்திகையைப் பார்த்து பயந்து ஓடியிருந்தாள் அந்தப் பெண்.
“அவந்தி எதுக்காக டென்சன்.?” அகன் கேட்டான்
“அப்படிலாம் இல்லை அகன், மாசத்துல ஒருத்தர் இப்படி வந்திடுறாவ, ரசாயாண சோப்பையும் ஷாம்பையும் தூக்கிட்டு” எனப் பொறுமையாய் சொன்னாள்.
“அதுக்கு ஏன் நீ இவ்ளோ டென்சன் ஆகுற அவந்தி, அவங்களும் வித்துட்டு போகட்டுமே” என அகன் சொல்ல.
“பிரச்சனை அது இல்லை அகன், முதல்ல ஃப்ரியா கொடுப்பானுவ, பிறவு குறைஞ்ச விலைக்குக் கொடுப்பானுவ, ஊர்காரவிய வாங்கிப் பழகிய பிறவு ஏரோப்ளைன் விலை சொல்லுவாவ, இதுவே நம்ம சோப்பு பதினைஞ்சு ரூவா தான், தொடக்கத்துல இருந்து இப்போ வரைக்கும் அதே தான்” என அவள் சொல்லி முடித்தாள்.
“பிடிச்சவங்க வாங்கிட்டு போறாங்க அவந்தி விடு” என அக்கறையாய் அவன் சொல்ல.
“ஊங்க ஊரு மாதிரி கழிவு நீரை கலந்து விட ஆறோ குளமோ இங்க கிடையாது அகன், குளிக்குற தண்ணில இருந்து, எல்லாத் தண்ணியும் இந்த மண்ணுல தான் சேரும், அதுக்காகத் தான் இந்த ஊர்காரவிய எல்லாரும் சேர்ந்து இந்த முடிவ எடுத்திருக்கோம், அதுக்காக உருவாக்க பட்டது தான் அவந்திகை அங்காடி” அவள் பெருமையாய் சொல்ல, அவளின் அறிவை பார்த்து வியந்து போனவனுக்கு, அவள் படிக்காதவள் என்பதை மட்டும் நம்பவே முடியவில்லை, இவளின் வயதில் அப்பாவின் பணத்தில் சுக போகமாய்ச் சுற்றி திரிந்த நினைவுகள் அவனைச் சாட்டையால் அடித்தது.
“அவந்தி..! ஐ யெம் இம்ப்ரஸ்ட்” என அவன் சொல்லி நகரந்துவிட.
“மெட்ராஸ்காரவியளே..!” அவள் குரல் கேட்டுத் திரும்பினான்.
“என்னையவா கூப்பிட்ட..?”
“உங்களைத் தான், எதோ சொன்னியளே அதுக்கு அர்த்தத்தைச் சொல்லிட்டு போங்க” என அவன் முகம் பார்த்து கேட்க.,
“அது வந்து” என அவன் எதோ சொல்ல வருவதற்குள்,
“உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு அர்த்தம் டா அவி கண்ணு” எனக் காயத்ரியின் குரல் கேட்டு, தலை கவிழ்ந்து வெட்கம் கொண்டவள், தன் அங்காடிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டாள்.
“என்னம்மா இப்படிச் சொல்லீட்டீங்க” தாயின் முகம் பார்த்தான் அகன்.
“எல்லாமே நல்லதுக்குத் தான் அகன்” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தார் காயத்ரி.
*******
அதே சமயம் வீட்டினுள் தன் கணவனின் எதிரே கையைப் பிசைந்தபடி நின்றிருந்தார் ஜெயக்கொடி.
“என்ன செயா எதுவும் பிரச்சனையா, ஏம்ட்டி திருத் திருன்னு முழிச்சிகிட்டு இருக்க..?” கேட்டார் முத்துவேல்.
“அவி அப்பா..! நம்ம அவி கலியாணத்தை விரச முடிக்கது நல்லது நினைக்கேன்”
“அதான் செயா, பேச்சு நடந்துகிட்டுதானே இருக்கு. பிறவு எதுக்கு விசனபடுதவ.?” முத்துவேல் கேட்க.
“இல்லை அவிய நெனைச்சா தான் மனசு பதைபதைக்குது, விவரம் தெரியாதவ, எப்புடி காலத்தைத் தள்ளிக்குவான்னு கவலைய இருக்குதுங்க, நம்ம குலசாமிகிட்ட உத்தரவு வாங்கிகிடியது நல்லதுன்னு படுது, அதான் நாப்பது கழிஞ்சிட்டுல” தயங்கி தயங்கி ஜெயக்கொடி பேசிக்கொண்டிருக்க, சந்தியா அங்கே அறை தூக்கத்தில் எழுந்து வந்தாள்.
“அத்தை..!”
“சொல்லுமா சந்தியா..? காப்பி வேணுமோ..?” அக்கறையாய் விசாரித்தார் ஜெயக்கொடி.
“ஆமா அத்தை” எனப் பதில் கொடுத்தாள் சந்தியா. அப்போது நடந்துக்கொண்டிருந்த பேச்சை நிறுத்திவிட்டு, அடுக்களையில் நுழைந்திருந்தார் ஜெயக்கொடி. சந்தியாவும் பல் துலக்க சென்றுவிட்டாள். அதே சமயம் வெளியே செல்லச் சென்ற முத்துவேல், அடுக்களையை நோக்கி நடந்தவர், எட்டி பார்த்து சொன்னார்.
“செயா..! நாளைக்குக் குலசாமி கோவிலுக்குப் போவோம், பார்வதிக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லி வரச் சொல்லு” எனக் கூறிச்செல்ல சம்மதமாய்த் தலையசைத்தார் ஜெயக்கொடி…
******
அடுத்த நாள் விடியலுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர் அனைவரும், ஆனால் அவந்திகை மட்டும் குழப்பத்தில் தான் இருந்தாள். வீட்டின் சுவர் கடிகாரம் மூணு மணியைக் காட்டியது. தூக்கம் வராத காரணத்தால் வேறு புறம் திரும்பி படுக்க, இன்னொரு படுக்கையில் சிணுங்கிக்கொண்டிருந்தாள் சிவசக்தி.
“ஏட்டி சக்தி, உறங்காம தான் இருக்கீயோ” எனப் போர்வையை விலக்கி பார்க்க.
“எக்கா..!” எனத் தமக்கையைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் சிவசக்தி.
“இன்னேரத்துல எதுக்குட்டி அழுதுக்கிட்டு இருக்க..?”
“எக்கோ குலசாமி கோயிலுக்குப் போயிட்டு வந்த பிறவு, உன் கல்யாணத்தை முடிவு பண்ணிடுவாவால்ல.?”
“தெரியலைட்டி சாமி உத்தரவு கொடுக்கணும்ல”
“அதெப்படிக்கா மாமா தான் சத்தியம் வாங்கிட்டு இறந்து போய்ட்டாவ, இனி இந்தக் கல்யாணத்தை எப்படியும் நடத்திருவாவ” அழுது வடிந்த முகத்தைத் துடைத்தபடிச் சொன்னாள் சிவசக்தி.
“அதுக்கெதுக்குட்டி இன்னேரத்துல அழுதுக்கிட்டு இருக்காவ.?” சாடினாள் அவந்திகை.
“அவிக்கா நீ மெட்ராஸூக்கு போயிட்டனா..? நான் எப்படிக்கா இருப்பேன், நீ கல்யாணம்ல பண்ணிக்காதக்கா நம்ம ஊர்லையே இருந்திறேன்” கெஞ்சலாய் கேட்டாள் சக்தி.
“சக்தி எதையாவது பேசிட்டு இருக்காத, ஏசிருவேன் படுத்து உறங்கு, வெள்ளன கோயிலுக்குப் போகணும், உறங்காம்ட்டி” எனத் திட்டிவிட்டாள் அவந்திகை.
“அவிக்கா..!”
“உறங்காம்ட்டி”
“என்னை உன் மனசு தேடாதக்கா..? மெட்ராஸ் போன மறந்திருவியோ.?”
“ஆமாட்டி உன்னை மறந்திட்டு மெட்ராஸ் முழுக்கச் சுத்தி பார்க்க போறேன், போதுமா.?” என அவந்திகை முகத்தைத் திருப்பிக்கொள்ள.,
“அவிக்கா..! அங்க போனதும் என்னை மறந்திட மாட்டியே..?
“உனக்கு இப்ப என்னட்டி செய்யணும், சும்மா உறங்காம்ட்டி” என ஏசியவள் தன் தங்கை அருகே வந்து படுத்துக்கொண்டு அவளைக் கட்டிக்கொண்டாள் அவந்திகை.
“அவிக்கா உனக்கும் என் மேல பாசம் இருக்கதான் செய்யுது, அதை ஏன்ட்டி மறைக்கா..?” எனச் சிவசக்தி தமக்கையைக் கட்டிகொள்ள.
“வாட்டி போட்டி சொல்லுத வேலை வச்சிக்காதேட்டி, பல்லை தட்டி கையில கொடுத்திருவேன்” அவந்திகை பொய் கோபம் காட்ட.
“எனக்குக் கிடைக்க எல்லாப் பனம்பழத்தையும் நீயே வச்சிக்கோ அவிக்கா., இனி உன்கிட்ட எடக்கே பண்ணமாட்டேன்” என மாறி மாறி பேசியபடி உறங்கி போயிருந்தனர் இருவரும்.
*****************
அதிகாலை வெய்யோன் தன் கதிர்களைப் பரப்ப, காவி நிற உடையை உடுத்திக்கொண்ட ஆகாயத்தில், பறவையினங்கள் பறந்து செல்ல, முத்துவேலின் வீடே குல தெய்வ கோவிலுக்குச் செல்ல பரப்பரபாய் இருந்தது. ராஜபூபதி மற்றும் பார்வதி குடும்பம் நேரே கோவிலுக்கு வந்துவிடுவதாய்ச் சொல்லி இருந்தனர். அதன்படி இங்கிருந்து அனைவரும் வேனில் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
சிவசக்தி பட்டு தாவணி உடுத்தியபடி அவந்திகையின் அறைக்குள் நுழைந்தாள். அவந்திகை சிவப்பு நிற பட்டுச் சேலை அணிந்துக்கொண்டு, மல்லிச் சரங்களைத் தலையில் சூடிக்கொண்டிருந்தாள்.
“அவிக்கா..!” என அறையினுள் நுழைந்தவள் தமக்கையைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.
“ஏன்ட்டி இப்பிடி பேயை பார்த்த மாதிரி முழுக்குத.?” வினோதமாய்ப் பார்த்தவள், கையில் இருந்த மற்றொரு பூச்சரத்தை தங்கை சிகையில் சூடினாள்.
“எக்கா..? இதென்ன சீலைலாம் உடுத்தியிருக்க..?”
“ஏன்ட்டி அம்மா உடுத்திக்கன்னு சொன்னவ கட்டியிருக்கேன், இப்போ அதுக்கு என்னட்டி”
“இந்தச் சீலையை மறந்துட்டியோ..?” அதிர்ச்சியான பார்வையைப் பார்த்து வைத்தாள் சக்தி.
“அய்யோ ஆமாட்டி மறந்து தொலைச்சுட்டேன் பாரேன்” எனப் படபடத்தவள் உடையைக் களைக்கப் போக, அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் அவந்திகை.
“என்னட்டி அக்காவும் தங்கச்சியும் கிளம்பிட்டியளா.? வண்டிகாரன் ஆரன் அடிக்கது காதுல விழலையோ.? வெரசா வாங்களாம்ட்டி” சாடினார் ஜெயக்கொடி.
“எம்மா இந்தச் சீலையை எதுக்குமா எடுத்து உடுத்த சொன்ன” கோபமாய்ப் பார்த்தாள் அவந்திகை.
“ஏம்டி கோயிலுக்கு நேரமாச்சு சொல்லிக்கிட்டு இருக்கேன், கதை அளந்திட்டு இருக்கா, எல்லாரும் வண்டில ஏறிட்டாவ, சக்தி ஓடி வண்டில ஏறுட்டி” எனத் துரிதபடுத்த சக்தி ஜன்னல் இருக்கையைப் பிடிக்க விரைந்து ஓடினாள்.
“எம்மா தெரிஞ்சு தான் செய்யுறியா..?”
“எல்லாம் தெரிஞ்சு தான் செய்யுதேன் வாட்டி” என அவந்திகை இழுத்துச் சென்றவர் அவளை வண்டியில் ஏற்றிவிட்டு தானும் சென்று இருக்கையைப் பிடித்து அமர்ந்துக்கொண்டார். அவந்திகை அனைவரையும் பார்த்து புன்னகையை உதிர்த்து விட்டு சக்தி அருகே சென்று அமர்ந்துக்கொண்டாள். எதிர் இருக்கையில் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் அகன்.
அவந்திகையின் முகம் பதட்டத்தைத் தத்தெடுத்திருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக்கொட்ட, தன்னைத் தானே தேற்றிக்கொள்ள நினைத்தவளின் கரங்களை அவன் பற்றியிருந்தான்.
“அவந்தி ச்சில்.!” என்றான் அகன்.
தன்னிடம் இருந்த கைகுட்டையை எடுத்து அவளிடம் கொடுத்தவன் அவள் செவி மடல் அருகே சென்று.
“எது நடக்கணுமோ அது நடந்து தான் ஆகும் அவந்தி, நீ இப்படி டென்சன் ஆகுறதால நடக்கமா போயிறாது” எனச் சொன்னவனை விழி விரிய பார்த்தாள்.
“லுக்ஸ் கார்ஜியஸ் இன் திஸ் சாரி” என அவள் மனதை மாற்ற அவன் முயன்றான், பட்டெனப் புன்னைகை சிந்தியவள்.
“நீங்க சொன்னது எதுமே புரியலை அகன்” எனக் கண்களைச் சிமிட்ட.
“அண்ணி நீங்க சாரில செம்ம அழகா இருக்கிங்கன்னு சொல்லுறான்” என முன் சீட்டில் இருந்து திரும்பி சொன்னாள் சந்தியா.
“வாலு உன்ன கேட்டாங்களா.? திரும்பு” என அகன் கண்டிக்க.
“ஏய் சக்தி நீ வேணும்னா என் பக்கத்துல வா, நம்ம ரெண்டு பேரும் பேசிக்கிட்டே போவோம்” சந்தியா சக்தியை அழைக்க,
“இல்லை சந்தியாக்கா, நான் அவிக்கா பக்கத்துலையே இருந்துகிடுதேன்” என உறைத்தாள் சக்தி.
எல்லாரும் சிரித்துப் பேசி விளையாடி வர, அவந்திகை மட்டும் திக் பிரம்மை பிடித்தவளை போல் அமர்ந்திருந்தாள். சில மணி நேர பயணங்களில் அந்த அடர்ந்த காட்டு பகுதியை அடைந்திருந்தனர். காட்டுக்குள் சில தூரம் நடந்து சென்று தான் கோவிலை அடைய முடியும்.
காட்டுக்கோவிலை அடைந்த நொடியிலிருந்து அவந்திகை எதையோ வித்தியாசமாக உணர்ந்துக்கொண்டே தான் இருந்தாள். ஜெயக்கொடியும் காயத்ரியும் பொங்கல் வைப்பதில் மூழ்கி போயிருந்தனர். இருவரோடும் பார்வதியும் வந்து சேர்ந்துக்கொண்டார். ராஜபூபதியும் முத்துவேலும், முத்துவேலுக்குச் சொந்தமான தென்னந்தோப்பினுள் நுழைந்து விட்டனர். மன்னராசா கோயிலை சுத்தபடுத்திக் கொண்டிருக்க, அவனுக்கு உதவியாய் சந்தியாவும், சிவசக்தியும் நின்றுக்கொண்டிருந்தனர்.
சிவப்பு நிற புடவையில் மனதில் குழப்பத்துடன் தன் குல தெய்வத்தை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவந்திகை. மேற்கூரை விரும்பாத காட்டுக்கோயில் அம்மன். திரிசூலத்துடன் அழகாய் காட்சி தந்தவளின் விழிகளும் அழகாய்ப் புன்னகைத்தது. அம்மனின் திறந்த கண் மலர்களை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள் அவந்திகை. திறந்த வெளி கோவில் என்பதால் ஆபரணங்கள் எல்லாம் பூட்டாமல், கற்சிலையாய் காட்சி தந்த அம்மனை பார்த்துக்கொண்டிருந்தவள், தீடிரென விறுவிறுவெனக் குளக்கரையை நோக்கி நடந்தவள்.
குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அம்மன் மீது ஊற்ற துவங்கினாள்,
அந்த நொடியிலிருந்து அவந்திகை வினோதமாய்த் தெரிந்தாள். அகன் அமைதியாய் நின்று நடப்பவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
“பொங்கல் பொங்குது குலவை போடுங்க, ரொண்டு மைனி நிக்குதிய, யாரும் குல விட மாட்டுறீயளே” எனச் சொல்லிய படி தானே குலவையிட்டார் ஜெயக்கொடி.
“என்ன தான் இருந்தாலும் உன்ன மாதிரி குலவை போட முடியுமா ஜெயா” எனக் காயத்ரி சிரிக்க. அவர் சிரிப்பை பார்த்து மகிழ்வுற்றாளும், இப்படியொரு சந்தோசமான நிகழ்வில் தன் அண்ணன் தன்னுடன் இல்லை என்ற வருத்தம் மேலோங்கியதை காட்டிக்கொள்ளாது தன் விழியில் துளிர்த்த நீரை துடைத்தார் ஜெயக்கொடி. அதைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வதி.
“ஜெயா..! பொங்கலை பாரு, என்ன நினைப்புல நிக்குத” எனப் பார்வதி துரிதபடுத்த தமையனின் நினைவில் இருந்து வெளியே வந்தார் ஜெயக்கொடி.
பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் குடும்பம் ஒன்றாய் கூடி இருப்பதை நினைத்து மகிழ்ந்த முத்துவேலின் மனம், தன்னுடைய கோபத்தால் காயத்ரி குடும்பத்தை ஒதுக்கி வைத்து பெரும் பாவம் செய்துவிட்டதாய் நினைத்து குற்ற உணர்வில் தன்னையே நொந்துக்கொண்டார்.
என்ன தான் கோபம் இருந்தாலும் போன உயிர் திரும்ப வந்து மன்னிக்கவா போகிறது., செய்த பாவத்திற்கு இணையாய் செந்தில் நாதனின் கடைசி ஆசையாக அகத்தினியன், அவந்திகை திருமணத்தை நடத்தி வைத்து, பாவ கணக்கை குறைத்துக்கொள்ள மனம் முத்துவேலை ஊந்தியது.

