
அதே இரவில் மீண்டும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அவந்திகை, திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணம், இப்போது அகனுக்கும் இதில் விருப்பம் இல்லை என்பதை அறிந்துக் கொண்டவளுக்கு ஒரு தெளிவு பிறந்திருந்தது.
கதவடைத்து அவனை வெளியே தள்ளிய பிறகு, மீண்டும் கதவு தட்டபடத் திறந்து பார்த்தாள்.
“அக்கா.!” என்று பயந்தபடி நின்றாள் சிவசக்தி.
“ஏட்டி சக்தி.! என்னாச்சு.? இன்னேரத்துல உறங்காம அலைஞ்சிட்டு திரியுர”
“எக்கோ குடிசையில தனியா படுக்கப் பயமா இருக்கு, நான் வேணும்னா உன் கிட்ட படுத்துகிடவா.?”
“ஏட்டி நானெல்லாம் நாப்பது நாள் ஒலை குடிசைக்குள்ள தான்டி இருந்தேன், உனக்கு என்ன ஏழு நாளு தான சொல்லியிருக்காவ, நீ என்னட்டி பயந்துட்டு வந்து நிக்குதவ.?”
“எக்கோய் ஆறு நாளும் மன்ராசா அத்தான் காவலுக்கு இருந்தாவ, வெளிய தான் படுந்திருந்தாவ, இன்னைக்கி ஆளையே காணோம்க்கா”
“ஆளையே காணோமா.? அங்க தான்ட்டி எங்காயவது முடங்கிக் கிடப்பான், நல்லா பார்த்தியாட்டி சக்தி.?” எனக் கேட்ட அவந்திகை கதவடைத்துவிட்டு, அவனைத் தேடி செல்ல முற்பட்ட போது,
“அவிக்கா நானும் உன் கூட வர்றேன்”
“ஏட்டி நீ வர வேணாம் நான் பாத்துகிடுதேன், நீ அக்கா ரூம்ல இருட்டி” என எச்சரித்தாள் அவந்திகை.
“உன் கல்யாண பேச்சு வந்ததுல இருந்து மன்ராசா அத்தான் முகமே சரியில்லை, எப்பயும் சாப்பிடியா சக்தின்னு கேட்டு, திண்ணையில தான் உறங்குவாவ, இன்னைக்கி ஆளையே காணோம்க்கா”
விளக்குகளை ஒளிர செய்து, வீட்டை சுற்றி ஒருமுறை பார்த்தாள் அவந்திகை, ஆனால் மன்னராசா எங்கும் காணவில்லை, தன் அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பெடுத்தும் பயனில்லை, அலைபேசி அணைத்து வைக்கபட்டிருந்தது, எங்குத் தேடியும் அவன் கிடைக்கவில்லை, அவன் வீட்டுக்கு செல்வதாய் இருந்தால் சொல்லியிருப்பானே, என அவந்திகை நினைத்துக்கொண்டிருந்தாள்.
“சக்தி அவனை எங்க தேடியும் காணாலைட்டி, நான் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திட்டு வந்திடுதேன்” என அவந்திகை சொல்ல,
“எக்கோய் அதுவரைக்கும் நான் தனியாவ இருக்க?”
“உன்னை அப்பா ரூம்ல விட்டுட்டு போகவாட்டி?” அவந்திகை அக்கறையோடு சொன்னாள்.
“எக்கோய் எல்லாரும் உறங்கிருப்பாவக்கா, எழுப்புனா அப்பா திட்டுவாவ”
“சரி சரி சலம்பாம பின்ன வாட்டி”என அவந்திகை சொல்ல, அக்காவின் பின்னே தங்கையும் சென்றாள், மொட்டை மாடியில், மது அருந்திவிட்டு அரைப் போதையில் வெறும் தரையில் குப்பற விழுந்து கிடந்தவனைப் பார்த்து இருவருமே அதிர்ந்து போயினர். மன்னராசாக்கு மது அருந்தும் பழக்கம் இல்லவே இல்லை.
“எக்கோய் அத்தானுக்குக் குடிபழக்கமே இல்லைல, இப்போ என்னக்கா இப்படிக் குடிச்சிட்டு கிடக்கு” பதறியபடி கேட்டாள் சிவசக்தி.
“நொய் நொய்ன்னு பேசமா செத்த சும்மாயிராம்ட்டி” எனக் கண்டித்த அவந்திகை.
“ஏல்.. எழும்பாம்டே” எனக் குரல் கொடுத்தாள், அவன் உடம்பில் துளியும் அசைவில்லை,
“எக்கோய் உறங்கிட்டாவ போல வா நம்ம கீழ போயிரலாம்”பயத்துடன் சொன்னாள் சக்தி.
“இருட்டி குடிச்சதுக்கு என்ன கதை சொல்றான்னு கேட்டு போவோம்”
“ஏலே மன்ராசா” என எழுப்ப முயன்றபடி என அவனைப் புரட்டி போட, வாயில் நுரை வந்து கண் சொருகி போய்க் கிடந்தான் மன்னராசா.
“ஏட்டி சக்தி அப்பாவ எழுப்பிக் கூட்டிட்டு வாட்டி” எனச் சொல்லிவிட, சக்தி அழுதபடி கீழயிறங்கி ஓடினாள், தங்கை போன பின் அவன் குடித்துப் போட்டு வைத்திருந்த பாட்டில்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள் அவந்திகை.
“எப்போ.! கதவை திறங்க” என அறைக் கதவை படபடவெனத் தட்டினாள் சிவசக்தி.
“ஏட்டி சக்தி உறங்காம என்னட்டி பண்ணிட்டு இருக்க.?” எனக் கோபமாய்க் கேட்டார் முத்து வேல், அவள் கதவை தட்டும் சத்தம் கேட்டு வீட்டில் அனைவரும் விழித்து விட, அவள் கண்ணில் நீர் துளிகள் நிற்காமல் வழிந்தோடியது.
“சக்தி என்னாச்சுட்டி, சொல்லு” பதறிய படி கேட்டார் ஜெயக்கொடி.
“மன்ராசா அத்தான் மருந்து குடிச்சிட்டாவமா, வாயெல்லாம் நுரையா இருக்கு, மொட்டை மாடில கிடக்காவ” எனச் சொல்ல இதைக் கேட்டவுடன் அகத்தினியன் பாய்ந்து மாடியை நோக்கி ஓடினான். அங்கே பயந்தபடி நின்றுக்கொண்டிருந்த அவந்திகையைப் பார்த்தவன்.
“அவந்தி என்னாச்சு.?” என அகனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள்,
“என்னாச்சு தெரியலையே அகன், வாங்க தூக்கிட்டு கீழ போவோம்” என அவந்தி சொல்ல, அதற்குள் முத்து வேல், ராஜபூபதி இருவரும் வந்து விட, மூவரும் சேர்ந்து மன்னராசவை தூக்கிக்கொண்டு கீழே இறங்கினர், அவந்திகை இன்னும் மொட்டை மாடியில் எதையோ ஆராய்ந்துக்கொண்டிருந்தாள்.
“செயக்கொடி மருத்துவச்சிய கூப்பிடு” என உரக்க குரல் கொடுத்தார், பார்வதி தன் மகன் சுயமின்றிப் பேச்சு மூச்சு இல்லாமால் கிடப்பதை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“இல்லை மாமா ஹாஸ்பிட்டல் போறது தான் நல்லது” எனச் சொல்லியபடி அவன் நாடியை பிடித்துப் பார்த்த அகன்.
“பல்ஸ் ரேட் கொறைஞ்சிட்டே இருக்கு மாமா” எனப் பேசியவனின் கண்களில் பட்டது மன்னராசாவின் கைகளில் பாம்பு கடித்திருந்த தடம்.
“ஓ ஷிட் பாம்பு கடிச்சிருக்கு” எனச் சொல்லிக்கொண்டிருந்த போதே, கடித்த பாம்பை கையில் பிடித்தபடி, கண்களில் துளியும் பயமில்லாமல் வந்து நின்றாள் அவந்திகை, அதற்குள் அங்கு மருத்துவச்சியும் வந்துவிட, பாம்பை பார்த்தபிறகு அதற்கான வைத்தியத்தைச் செய்தவர், விசம் தலைக்கேறாமல் இருக்க இரவு முழுவதும் உறங்காமல் பார்த்துக் கொள்ளும் படி சொல்லி சென்றார், மன்னராசா கண் விழித்துப் பார்த்த பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர். அனைவரும் மன்னராசாவின் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தனர், சிவசக்தி யாரும் அறியாமல் அக்காவின் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டு அழத் துவங்கியிருந்தாள்.
கையில் பிடித்திருந்த பாம்பை காட்டுப் பகுதியில் அவந்திகை விடச் செல்ல அவளுக்குத் துணையாய் அக்த்தினியனை அனுப்பி வைத்திருந்தனர், வீட்டில் அனைவரும் பாம்பை கண்டால் பயந்து நடுங்குவார்கள், ஆனால் பாம்பை கூட எளிதாகக் கையாளுவாள் அவந்திகை.
“அவந்தி இவ்வளவு பெரிய பாம்பை கையில பிடிச்சிருக்கியே பயமே இல்லையா.?” அவளிடம் இருந்து விலகி நடந்தபடியே கேட்டான் அகன். அவன் கைகளில் ராந்தல் விளக்கு பாதைக்கு ஒளிக்கொடுத்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் ரீங்காரமும், அமைதியான மோன நிலையும், அகனுக்குள் திக் உணர்வை கொடுத்தது.
“அகன் இந்தப் பாம்போட வாயை அழுத்தி பிடிச்சிகிட்டா அதால கடிக்க முடியாது” அதன் வாயை அவன் புறம் காட்ட பயத்தில் முகம் வெளிரி போனான் அகன்.
“இருந்தாலும் உனக்கு ரொம்பத் தான் தைரியம் அவந்தி” என அவன் சொல்ல,
“ஆமா ஆமா தைரியம் தான், உங்களுக்குப் பாம்புனா பயமோ அகன்.?” கேள்வியாய் பார்த்தாள்.
“லைட்டா பயம்” எனச் சமாளித்தான் அகன்.
“அகன், நான் சொல்லுதேன்னு தப்பா நினைச்சுகாதிய நம்பப் பெரியவிய நினைக்குற மாதிரி கலியாணம் கட்டிகிடலாமா.?” அவள் பட்டெனக் கேட்டுவிட்டாள்.
“அவந்தி என்ன சொல்ற.? கல்யாணத்தை நிறுத்த இப்போ தான ப்ளான் போட்டோம்” எனத் தயங்கிய படி கேட்க,
“இல்லை அகன், வீட்ல நடக்குற எல்லாச் சமாச்சாரமும் என்னால தான் நடக்குது, இதுக்கு முடிவு கெட்டி ஆகணும், எனக்கு அப்பறம் சக்தி இருக்கா, அவளுக்கு நல்லா வாழ்க்கை அமையணும்ல” என அவள் இடைவிடாமல் பேச, அவன் எதுவும் பேசாமால் அமைதி காத்து வந்தான்.
“என்ன அகன், இவ புதுசா எதையோ சொல்லுறாளேன்னு பாக்குதியா.?”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அவந்தி”
அப்போது அவனிடம் அவள் மனதில் உறுத்திக்கொண்டிருந்த விசயத்தை இறக்கி வைத்தாள் பெண்ணவள், அதை ஏற்றுக்கொண்டவன், அதைக் கேட்டு அவளின் குணத்தில் முதலில் அவனை ஈர்த்துவிட்டாள் அவந்திகை, இருந்தாலும் அவனின் முன்னால் காதலி லேகா வின் நினைவு அவன் மனதில் அலைமோத, தன் மனதில் உள்ளதை பட்டெனச் சொன்ன அவந்திகையிடம், லேகாவை பற்றி அவளிடம் சொன்னால் திருமணம் நின்றுவிடும் என மனகணக்கு போட்டவன், அவளிடம் பேச துவங்கினான்.
“நீ என்கிட்ட இவ்ளோ விசயத்தைச் சொல்லும் போது நானும் உன்கிட்ட ஒரு விசயத்தைச் சொல்லணும் அவந்தி” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே அவள் கைகளில் இருந்த பாம்பு நெளிய ஆரம்பிக்க,
“செத்த இரு அகன் இதை நான், தூக்கி போட்டுகிடுதேன்” எனச் சொன்னவள் பாம்பை தூக்கி எறிந்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினர்.
“சொல்லு அகன் எதோ சொல்லணும்னு சொன்ன.?”
“நீ யாரையாவது லவ் பண்ணுருக்கியா அவந்தி.?” இருட்டிலும் அவளின் மான்விழியைப் பார்த்து கேட்டான்.
“ம்ம் பண்ணிருக்கேன், இன்னும் கூடக் காதலிச்சிட்டுதான் இருக்கேன்” வேகமாய் அவள் தலையசைத்து சொல்ல,
“அப்பறம் எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்ப அவந்தி..?” அவன் கேட்க,
“உன்னைக் கட்டிக்கிட்டாலும் நான் காதலிச்சிட்டு தான் இருப்பேன்” அவள் சொல்லி களுக்கெனச் சிரிக்க.,
“அப்படி யாரை காதலிக்குற அவந்தி”
“நான் யாரை காதலிக்குறேன்னு தெரியணுமா.? வா காட்டுதேன்” என அவனை அழைத்துச்சென்றாள் அவந்திகை.
அவளின் தொழிற்கூடத்திற்குத் தான் அழைத்துச் சென்றவள், விளக்குகளை ஒளிர செய்து காட்டினாள்.
“இது தான் என் உலகம், இந்த உலகத்தைத் தான் நான் காதலிக்கிறேன்” அவள் பூரிப்போடு சொன்னாள்.
“என்ன திகைச்சு போய்ட்ட அகன், வெளியிலை இருந்து பார்க்க தான் இது பொட்டிக்கடை, ஆனால் இது இல்லைனா நான் இல்லை அகன், கல்யாணம்ன்ற பேர்ல இதுகிட்ட இருந்து என்ன பிரிச்சிருவாங்கன்னு தான், கல்யாணத்தைத் தடுத்துக்கிட்டு இருந்தேன், ஆனால் நானே இப்போ கல்யாணத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டுட்டேன் அகன், எனக்கு ஏன் குடும்பமும் முக்கியம். என்னால அது உடைஞ்சிடக் கூடாது” என அவள் உணர்ச்சி பெருக பேச வாயடைத்து நின்று அந்தத் தொழிற்கூடத்தைச் சுற்றி பார்த்தான்.
“அவந்தி இவ்ளோ ப்ராடக்ட்ஸ் இருக்கு, ஆர்கானிக் சோப், ஆர்கானிக் டர்மெரிக், வாட் இஸ் திஸ்.?” எதையோ கையில் தூக்கி அவன் கேட்க,
“கருப்பட்டி அகன்,பனைமரத்துல இருந்து பைனி எடுத்துக் காய்ச்சி செய்யுறது” என அவந்தி சொல்ல அதைப் புட்டு வாயில் வைத்து சுவைத்தவன்,
“வாவ் சுகர் மாதிரி இனிக்குது” சுவைத்தபடி சொன்னான்.
“உங்க சுகர்லாம் இப்போ தான் வந்திச்சு, இது தமிழரோட பாரம்பரியமான ஒண்ணு” அவள் சொல்ல, அங்கிருந்த அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டுக் கூடத்தை மூடிவிட்டு இருவரும் வீட்டிற்குள் நுழைய, மன்னராசா ஒரளவு தெளிவாகி இருந்தான்.
“அத்தை மாமா, நீங்க போய்த் தூங்குங்க, நானும் அகனும் மன்ராசாவ உறங்க விடாம பார்த்துகிடுதோம்” அவந்திகை பார்வதி ராஜபூபதியை பார்த்து சொல்ல,
“இல்லை அவந்தி நீயும் அகனும் உறங்குங்க, நாங்க பார்த்துகிடுதோம், சக்தி ரொம்பப் பயந்திருப்பா அவளை என்னன்னு பாருமா” அக்கறையோடு சொன்னார் பார்வதி.
“அகன் தம்பி நீங்க போய்த் தூங்குங்க” என அனுப்பி வைக்க மன்னராசவை முறைத்தபடி சென்று கதவடைத்துக்கொண்டாள் அவந்திகை.
தனக்கான அறைக்குள் சென்று மெல்ல கண் அயர்ந்தான் அகத்தினியன். அவனின் செல்பேசி மெல்ல இசைந்தது, விழி திறக்காமல், செல்பேசிக்கு செவிக்கொடுத்தான் அகன்.
“அகத்தினியன் ஸ்பீக்கிங்”
“இனியன்” குழைந்தபடி ஒலித்தது அந்தப் பெண்ணின் குரல். அவள் குரல் கேட்டு திடுமென எழுந்தமர்ந்தான்.
“லேகா..!”
“வாட் ஏ வாவ்.! என் குரல் நியாபகம் வச்சிருக்கியே இனியன்”
“லேகா..! ஐ யெம் ரியலி சாரி, ஐ வில் கம் ஃபார் யூ, ஐ யெம் இன் பிக் ட்ரபுள்” அவன் நிலையை அவன் விளக்க முற்பட்டான்.
“வெயிட் வெயிட்..! என்ன பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க இனியன், டூ யூ திங்க் ஐ யெம் மேட் டூ பிலிவ் யூ அகெயின்.?”
“லேகா தெட்ஸ் தி லிமிட், ஸ்டாப் இட்” கத்தினான்
“என்ன இனியன், நீ கால் பண்ணலைன்னா என்னால எதுவும் செய்ய முடியாது நினைச்சிட்டு இருக்கியா, நீ இப்போ யூஸ் பண்ணுற நம்பரையே எடுத்துட்டேன்” எனத் திமிராய் லேகா பேச,
“லேகா..!”
“இனியன் ஸ்விட்ச் டூ வீடியோ கால்” என அவள் கேட்க, அவள் சொன்னது போல் செய்ய, அவளோ முழு மணப்பெண் அலங்காரத்தில் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியவளின், புதிதாய்ப் பூத்திருந்தது அவள் கழுத்தில் மங்கள நாண்.
“லேகா, என்ன இதெல்லாம்”
“ம்ம் ஃபர்ஸ்ட் நைட் நடக்கப் போகுது, உனக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணலாம்னு கால் பண்ணினேன்” என அவள் சொல்ல முகம் சுளித்தான்.
“ரொம்ப முகம் சுளிக்காத இனியன், உன் பட்டிக்காட்டு பொண்டாட்டிக்கு, எந்த முகத்தைக் காட்டுவ.?” அவள் நக்கலாய் சிரித்தவளை, கருவிழி விரிய பார்த்தான் அகன்.
“எனக்கு எதுமே தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா இனியன், உன்னோட வொர்க்கர்ஸ் தெரிஞ்ச விசயம் எனக்கு எப்படித் தெரியாம போகும், எவளையோ கட்டிக்கிறதுக்குப் பேரே தெரியாத பட்டிகாட்டுல உட்காந்திருக்கியாமே” அவளின் நக்கல் பேச்சுக்கு அவள் முற்று புள்ளி வைக்காமல் தொடர, அகனின் விழிகளில் எரிச்சல் வழிவதை பார்த்துச் சந்தோசம் கொண்டவள் அருகே ஒரு குரல் கேட்டது.
“ஹே பேபி..!” அவளுக்கு மாலை சூட்டியவனின் குரல்.
“ஹாய் ஸ்வீட்டி” இவளும் கொஞ்சலாய் மொழிந்தாள், இதைப் பார்த்துக்கொண்டிருந்த அகன் இணைப்பை துண்டிக்கச் செல்ல,
“இனியன் வெயிட் டூ மினிட்ஸ்” என்றவள்
“பேபி என்னோட எக்ஸை பாக்குறியா..?” தன் கணவனிடம் கேட்டாள்,
“ஐ டோன்ட் வான்ட் டூ சி தெட் அன் லக்கி ஃபெல்லோ” என அவளின் கணவன் குரல் கேட்க, இணைப்பை பட்டெனத் துண்டித்திருந்தான் இனியன்.
அறையிலே நடை பயில ஆரம்பித்தான், தான் இழைத்த தவறால் தான் இத்தனையும் நேர்ந்து விட்டது, எனத் தன்னையே குறைபட்டுக் கொண்டது அவனுடைய மனம், இப்படி மனதில் இருந்த ஆசையை அப்பா முன்பே சொல்லியிருந்தால், லேகாவிடம் பழகாமல் இருந்திருக்கலாமே எனத் தோன்ற ஆரம்பித்தது அந்த நல்லவனுக்கு, என்ன செய்வது அனைத்தும் காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்டது தானே. விதியை மாற்றும் சக்தி மனிதனிடம் இருந்தால் கடவுளாகி விடமாட்டானா.? விதியின் கோர பிடியில் சிக்கி தவித்தவனுக்கு அவந்திகை தேவதையாய் தெரிய துவங்கினாள். இரவுகளை உறக்கமின்றித் தத்தளித்தவன், விடியலை பார்த்தவுடன் மொட்டை மாடி சென்று, எதிரே சுழன்று கொண்டிருந்த காற்றாலையைப் பார்த்தபடி நடை பயில துவங்கியிருந்தான். அதே சமயம் வீட்டின் முன்னே அவந்திகையும் மன்னராசாவும் பேசிக்கொண்டிருந்த விசயங்கள் இவன் செவிகளை மெல்ல தீண்டியது.
“என்ன லே முழிக்கா, எனக்குத் தெரியதுன்னு நினைச்சிகிட்டியோ” கோபமாய் மன்னராசாவின் முகத்தைப் பார்த்தாள்,
“அவி யார்கிட்டையும் சொல்லாதட்டி” கெஞ்சலாய் ஒலித்தது மன்னராசாவின் குரல்.
“ஏலே பொண்ணுக்காகச் சாவ போயிருக்கியே, நீயெல்லாம் உருப்படுவியா.?” அவனைப் பார்த்து முறைத்தாள்.
“பாம்பு கடிச்சிட்டு நான் என்னட்டி செய்வேன், காலைலயே சாடியா”அவன் பதில் கொடுக்க.
“சரி தாம்லே கேன சிறுக்கி இருக்கான்னு நினைச்சிகிட்டியோ, உன்ன எவாம்லே குடிக்கச் சொன்னது”
“வருத்ததுல குடிச்சிட்டேன்”
“சரிதாம்லே வருத்ததுல இதையும் குடிப்பியோ” என இடையில் சொருகியிருந்த விஷ பாட்டிலை எடுத்து அவன் புறம் காட்டினாள்.
“அவி இதை எப்படிட்டி எடுத்தா.?” அவள் கைகளில் இருந்த விச பாட்டிலை வேகமாய்ப் பிடிங்கி தூர எறிந்தான்.
“நீ போயட்ட சந்தோசமா இருப்போம்ன்னு நினைச்சிகிட்டியோ, அத்தை மாமாக்கு நீ ஒத்த பிள்ளை இந்த வேலைய தான் செய்வியோ, உனக்கெல்லாம் மண்டைல என்னதாம்லே இருக்கு”
“அவி உனக்கே தெரியும்லாம்ட்டி எனக்கு உன் மேல எம்புட்டு ஆசை இருக்குன்னு, இப்ப வீ்ட்ல நடக்குறதையெல்லாம் பார்த்தா, என் கைய விட்டு போய்ருவியோன்னு பயமா இருக்குட்டி” அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு சொல்ல,
“வீட்டு பெரியவிய என்ன முடிவு எடுக்குதாவளோ அதான் சரியா இருக்கும் லே, நீ ஏன் போட்டு சலம்பிட்டு கிடக்க, என்னைகாவது உன்னைக் கட்டிகிடுதென்னு சொல்லிருக்கேனாலே, அதையே பிடிச்சு தொங்கிகிட்டு கிடக்கா., உன்ன பெத்து வளத்தவியளுக்குக் கொஞ்சமாவது நல்லது செய்யாம்ல, இதெல்லாம் ஒரு விசயம்ன்னு சாவியதுக்குப் போயிருக்கா, பாம்பு கடிக்கலைன்னா, விசத்தைக் குடிச்சி செத்திருப்பா, நேத்து சக்தி மட்டும் இல்லன்னு வையி பரலோகம் போய்ச் சேர்ந்திருப்ப” எனக் கோபமாய்த் திட்டி முடித்தாள் அவந்திகை.
“என்னட்டி சொல்லுத.? சக்தியா காப்பாத்தினா.?”
“அவ தான் மன்ராசா அத்தானை காணலைன்னு அழுது வடிஞ்சிட்டு கிடந்தா, விடிய விடிய ஒரே அழுகை, அவளைப் போய் முதல்ல பாரு” எனச் சொல்லி நகர்ந்தவள் எதிரே இருந்த பெட்டிக்கடையையும் தொழிற் கூடத்தையும் திறந்து வைத்தாள்,
இதை அனைத்தையும் மொட்டை மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு ஒரு தெளிவு பிறக்க தான் செய்தது, மன்னராசாவிற்கு அவந்திகை சொன்ன அறிவுரைகள் முழுவதும் இவனுக்குப் பொருந்தியதை உணர்ந்து, அவளின் பேச்சும், தளாரத எண்ணமும் அவனுக்குப் பிடிக்கத் தான் துவங்கியது.
****
அதே சமயம், அவந்திகையின் அறையில் கண்கள் சிவந்து முகம் வீங்கிய படி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் சிவசக்தி, இரவெல்லாம் உறங்காததன் விளைவு. அவளின் வதனத்தில் வரி கோடுகளாய் உவர் நீர் பதிந்திருக்க, அவந்திகையின் அறைக்குள் நுழைந்தான் மன்னராசா. அவன் வரும் அரவம் கேட்டு விழி மலர்த்தியவள், அவன் விழிகளில் விழுந்த நொடி பாய்ந்து கட்டியணைத்திருந்தவள் மீண்டும் அழ துவங்கினாள்.
“ஏட்டி சக்தி, என்ன பண்ணுத விடு” நெளிந்தான் அவன்.
“எங்களை விட்டு போயிருவியளோன்னு பயந்துட்டேன் அத்தான்” சக்தி அழுதபடி உரைத்தாள்.
“அதான் வந்துட்டேன்ல, ஏம்ட்டி அழுவுதா, அழாதா” எனப் பேசிய படி அவளை விலக்கி நிறுத்த முயற்சிக்க, விலக்கிய வேகத்தில் மீண்டும் அவனைக் கட்டியணைத்துக்கொண்டாள் சக்தி.
“ஏட்டி சக்தி, விலவி நில்லு, யாரவது பார்த்தா என்ன நினைப்பாவ” அதட்டலாய்ச் சொன்னான் மன்னராசா. அதன் பிறகு பசையைப் போல் ஒட்டியிருந்தவள் விலகி நின்றாள்.
“அத்தான் எங்களை விட்டு போவ மாட்டியளே” அவனின் விழி பார்த்து கேட்டாள்.
“போவமாட்டேன்ட்டி”
“குடிக்கமாட்டியளே”
“தெரியாம குடிச்சுட்டேன், இனி குடிக்கமாட்டேன் சரியா போய் உறங்கு நான் நல்லா தான் இருக்குதேன்” என அவன் பேசிக்கொண்டிருந்த போதே.மீண்டும் அவனை அணைத்தவள்,
“என்னைக் கட்டிகிடுதியாளா அத்தான்.?” அவள் கேட்க அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டான்.
“ஏட்டி சக்தி நீ சின்னப் பிள்ளைட்டி, சின்னப் பிள்ளை மாதிரி நடந்துக்க, இப்படியெல்லாம் என்கிட்ட பேசுத வேலை வச்சிக்கிடாத” எனக் கோபமாய் உறைத்தவன் படபடவென அறையை விட்டு வெளியே சென்றிருந்தான்.

