
அகம் 6
அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார் ஜெயக்கொடி, வழக்கம் போல் அவந்திகை கடையில் அமர்ந்தபடி, வானொலியில்,
சொல்ல சொல்ல இனிக்குதடா.!
முருகா.!
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல இனிக்குதடா..! என்ற பக்தி பாடலை கேட்டுக்கொண்டிருந்தாள் அவந்திகை.
அப்போது வேலைக்கு வந்த பால்கனி, கோலம் போட்டுக்கொண்டிருந்த ஜெயக்கொடியை நெருங்கினார்.
“செயக்கொடி” என்றழைக்க,
“வாங்க சித்தி.! சக்திய பார்த்துட்டு போக வந்தீயளோ, வாங்க வீட்டுகுள்ள வாங்க” பாசமாய் அழைத்தார் ஜெயக்கொடி, பால்கனி ஒருவகையில் சித்தி முறை தான் ஜெயக்கொடிக்கு.
“இல்லைட்டி அவிக்கி கலியாணம் பேசுறத கேள்விபட்டேன்”
“ஆமா சித்தி, அதை ஏன் கேக்குதீய, அது பெரிய கதை, வாங்க உள்ள வந்து காப்பித் தண்ணிய குடிக” என அன்போடு அழைத்து, கருப்பட்டி காப்பியில் பசும்பாலை கலந்துகொடுத்தார் ஜெயக்கொடி, அதைப் பருகியபடி வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார் பால்கனி.
“அவிய குலசாமிக்கிட்ட நாளைக்குப் பூ கட்டி போட்டுப் பார்க்கலாம் சொல்லிருக்காவ சித்தி, அதுபடி தான் நடக்கும்” என நடந்தேறியவற்றை விவரித்தார் ஜெயக்கொடி,
“செயக்கொடி சொல்லுதேன்னு தப்பா நினைச்சிகிடாத, அவிக்கி நல்ல காரியம் நடக்கும் போது சித்தி இப்படிப் பேசுதாவளேன்னு மனசுல வச்சிக்காத” எனப் பால்கனி பொடி வைத்து பேச.
“என்ன சித்தி இப்படிச் சொல்லிட்டிய, நீங்க எங்க நல்லதுக்குத் தான் சொல்லுவியன்னு எனக்குத் தெரியாதோ.?” என்ற புரிதலுடன் ஜெயக்கொடி பேச வாஞ்சையாய் அவர் தலையைத் தடவிக்கொடுத்தார் பால்கனி.
“இல்லட்டி சின்னவளை கூட்டி இருத்தி நாற்பது நாளுக்கு, தீட்டு வீடுதான சொல்லுவோம், நீ எப்படிப் பூ போட்டு பார்ப்பிய.?அது மட்டுமில்லாம கட்டிக்கப் போறவன வீட்டுகுள்ள வச்சிருக்கது நல்லது இல்லை, மனசுல பட்டத சொல்லிட்டேன் அவ்வளவு தான்” என அவர் சொல்லிவிட்டு கிளம்பி விட, அதைத் தற்செயலாகக் காயத்ரி கேட்டு விட்டார், அதைப் பார்த்த ஜெயக்கொடி பதறிப் போனார்.
“மைனி தப்பா எடுத்துகாதீக” என அருகில் வர.
“இல்லை ஜெயா, இதெல்லாம் யோசிச்சு தான் நான் வந்தேன், இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” எனச் சொல்ல,
“மைனி..!” பயந்தபடி அவர் முகத்தை ஜெயக்கொடி பார்த்தார்.
“ஜெயா பொண்ணு வீடுன்னு இருக்கும் போது, மாப்பிள்ளை வீடுன்னு ஒண்ணு இருந்து தான ஆகணும்” என அவர் சொல்ல, அப்போது வெள்ளை வேட்டி சட்டை சகிதமாய் வந்தார் முத்துவேல்.
“முத்து அண்ணேன், எனக்குன்னு அப்பா ஒரு வீடு எழுதி வச்சாரே, அதோட பத்திரம் எங்க.?”எனக் காயத்ரி கேட்டு விட,
“அது வந்துமா.?“ எனத் தடுமாறி அவர் நின்றார் முத்துவேல்.
“சரி நீங்க எடுத்து வைங்க, நான் வீட்டை போய்ப் பார்த்திட்டு வர்றேன், அவந்திகை, இனியன் கல்யாணம் முடியுற வரைக்கும் நாங்க இந்த ஊர்ல தான் இருப்போம்” எனச் சொன்னவர்,
“இனியன்.!” எனக் குரல் கொடுக்க, தாயின் குரல் கேட்டு உடனே வந்து நின்றான். ப்ரவுன் நிற டீசர்ட்டும் , கருப்பு நிற முட்டி வரையிலான ஷார்ட்ஷூம் அணிந்திருந்தான் அவன்.
“நம்ம பரம்பரை வீட்ட பார்க்க போறோம், என் கூட வா, சந்தியா எங்க.?”
“ம்மா அவ பத்து மணிக்கு தான் எந்திருப்பா ம்மா” எனச் சொல்ல.
“முத்து அண்ணேன் சாவி கொடுங்க போய்ட்டு வந்தறேன்” எனக் காயத்ரி சொல்ல, என்ன தான் காயத்ரி மேல் சித்தி மகள் என்ற கோபம் இருந்தாலும், இவரின் வெட்டிக் கோபத்தால் தேவையில்லாமல் ஜெயக்கொடியின் தமையனை தண்டித்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியால், இனியாவது காயத்ரிக்கு தமையனாய் இருக்க முடிவெடுத்திருந்தார்,
“தங்கச்சி..!” என்று முத்து வேல் அழைக்க, காயத்ரியின் சிவந்த விழியில் இருந்து சந்தோஷ கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“அண்ணேன் என்ன கூப்பிட்டிங்களா.?”
“உன்ன தான்மா காயத்ரி”என முத்து வேல் சொல்ல, கணவரின் மாற்றத்தை உணர்ந்தபடி அவரையே பார்த்திருந்தார் ஜெயக்கொடி.
“முத்து அண்ணேன்” என அன்பும் பாசமும் ஒருசேர கலந்த விழியில் நீராய் வெளி வர, முத்துவேலின் தோள் சாய்ந்து அழுதார் காயத்ரி. இத்தனை வருடத்தில் தன் தந்தை இறந்த போது அழுத தாயை தான் பார்த்திருக்கிறான் அகத்தினியன், முதல் முறையாய் ஒரு உறவுக்காக அழும் அன்னையாய் பார்த்து வியந்தபடி நின்றான் அகத்தினியன்.
“ஏட்டி காயத்ரி”
“சொல்லுண்ணே”
“உன்ன அண்ணேன் ஏட்டின்னு கூப்பிட்டுகிடவா.?”
“ஏன் இப்படிக் கேக்குறீங்க, நீங்க என்கிட்ட உரிமையா பேசமாட்டிங்களான்னு, எத்தனை நாள் ஏங்கி தவிச்சிருக்கேன்” எனத் தன் ஏக்கத்தைக் காயத்ரி சொல்ல,
“அதே உரிமைல தான் சொல்லுதேன், நீ பொறந்த வீடு இது, இங்கேயிருந்து யாரும் உன்னைப் போகச் சொல்ல மாட்டோம்ட்டி, அண்ணேன் கிட்ட ஏச்சு வாங்காம இங்கேயே இருட்டி, இவ்வளவு பெரிய வீட்ட வச்சிகிட்டு நீ ஏன் அந்தக் காட்டுக்குள்ள போயி தங்கணும்” என உரிமையாய் பேச,
“நீங்க சொன்ன சரிதான்னே” காயத்ரி சொல்ல, குளிர்ந்து போனார் முத்துவேல்.
“என்ன மருமவனே, உங்களுக்குச் சம்மதம் தானே.?”
“சரிதான் மாமா” என அகத்தினியன் சொல்ல,
“மருமவனே சாப்பிட்டியளா.?”
“இல்லை மாமா இனி தான்”
“சரி மருமவனே நான் வேலை வெட்டிய பார்த்திட்டு வந்துகிடுதேன், சாப்பிடுங்க,செயா எல்லாத்துக்கும் சாப்படாடு எடுத்து வச்சு கொடான்ட்டி” எனக் கிளம்ப முற்பட்ட போது,
“நீங்க சொல்லி தான் நான் சாப்பாடு வச்சு கொடுக்கணுமோ.? “ என முத்துவேலின் காதில் கிசுகிசுத்தார் ஜெயக்கொடி.
“மருமவன நல்லா கவனிட்டி” என ஜெயக்கொடிக்கு கட்டளையிட்டு கிளம்பினார் முத்துவேல்.
வீட்டில் இவ்வளவு இதமான சூழலில் முடிய, அவந்திகையோ கொதித்தபடி கடைக்குள் அமர்ந்திருந்தாள்.
“என்ன மிலுக்குச் சொல்லுத, தமையனும் தங்கச்சியும் சேர்ந்துட்டவளா.?”
“ஆமாட்டி கூறுகெட்டவளே, நான் மறைஞ்சிருந்து கேட்டேனே”
“அய்யோ இப்போ என்னத்த செய்யுறது” யோசனையில் முழ்கினாள் அவந்திகை,
“இவியள பிரிச்சா தான் உண்டு, அந்த நெட்டை நெடுமான்அஞ்சி கூட எனக்குக் கலியாணம் நடக்காது” என அவள் சொல்ல.
“நீ சொல்லிக்கொடுத்த மாதிரி தான் உன் அம்மைகிட்ட பேசினேன்ட்டி” எனப் பால்கனி சொன்னார்.
“என்னத்த சொல்லிவச்சியோ, என் அய்யன் சும்மாவே ஆடுவாரு இனி சலங்கை வேற கட்டி விட்டாச்சா.? நீ தான் கிழவி சொதப்பிட்ட”
“கிழவின்னு சொன்ன கொம்மட்டுல குத்திபுடுவேன் ஆமா” எனப் பால்கனி எச்சரிக்க.,
“எனக்கு வழிய தான் காட்டேன் மிலுக்கு” அவள் புலம்பிக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்து நின்றான் அகத்தினியன்.
“ஏய் கூலிங்கா என்னை இருக்கு உன் கடையில” அதிகாரமாய்க் கேட்டான் அவன்.
“ஹான் பைனி இருக்கு குடிக்குறியளா.?” அவந்திகை கேட்க.,
“வாட்”
“பைனி தொரியதோ.? சரிதான் மோர் வேணுமா” அவள் கேட்க.
“கோக் இல்லையா”
“அதெல்லாம் மனியன் குடிப்பானா.? கரு கருன்னு இருக்குமே அது தான, அது உடம்புக்கு எவ்வளவு கேடுன்னு தெரியுமா.?”
“எய்யா இந்தப் பைனிய குடிச்சு பாருயா, உடம்புக்கு நல்லது” எனப் பால்கனி பரிந்துரைத்தார், பால்கனி சொன்னது போல் பதநீர் உடல் சூட்டை தணிக்கும் பானம் தான். நம் தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்திலிருந்து பதநீர் எடுக்கபடுகிறது. பனைமரத்தை கற்பகதரு என்றும் அழைப்பர், பதநீரில் சுன்னாம்பு கலந்து குடிப்பதால் இயற்கை முறையிலே கால்சியம் சத்து கிடைக்க வழி செய்து தருகிறது.
“இவளுக்காக இல்லை பாட்டி உங்களுக்காகக் குடிக்கிறேன் ஒன்னு கொடுங்க” அகத்தினியன் சொல்ல,
“இங்க பாரு மெட்ராஸ்கார அவ இவன்னு சொல்லிட்டு திரிஞ்சன்னு வையி”
“என்னடி பண்ணுவ, என்ன பண்ணுவ பட்டிக் காட்டான்” அவன் திட்டிவிட
“கோட்டிக்கார” எனச் சொல்லி முறைத்தவள் உதட்டை சுழித்தாள்,
“பாட்டிமா அவ என்ன சொன்னா..?”
“அதெல்லாம் விடுயா, இந்தப் பைனிய குடி” எனப் பதனீரை கலசத்துடன் எடுத்துக்கொடுத்தார் பால்கனி.
“இதுல எப்படிப் பாட்டி குடிக்குறது” புரியாது விழித்தான் அவன், வெள்ளை துணியில் மூடி வைத்திருக்கப் பதநீர் கலசத்தைத் திறந்து கொடுத்தார் பால்கனி, உள்ளே எட்டி பார்த்தவன், அதிலிருந்த பூச்சிகளைப் பார்த்து பயந்து பட்டெனத் தூக்கி எறிய, கலசம் சுக்குநூறாய் அவந்திகையின் கடை வாசலிலே உடைந்து கிடந்தது, பதநீர் பனையில் இருந்து இறக்கும் போதே கலசத்தில் அதைக் குடிக்க வரும் பூச்சிகள் விழுந்து கிடப்பது வழக்கம்.
“உமக்கு அறிவே இல்லையா.? கலயத்துக்கு ஐம்பது ரூவா, பைனிக்கு முப்பது ரூவா கொடுத்திட்டு போங்க” கோபமாய்க் கேட்டாள் அவந்திகை.
“உன்கெல்லாம் பணம் தர முடியாது, கூல்டிரிங்க்ஸ் கேட்டா பூச்சிய போட்டு என்ன கொல்ல பாக்குற” எனத் திட்டியபடி நகர்ந்திருந்தான் அவன்.
“ஏட்டி அவி அந்தப் புள்ளை கிட்ட எதுவும் கேக்காத, நாளைக்கு உன் பிரியானாகப் போறவன்” என அக்கறையாய் சொன்னார் பால்கனி.
“சரியான கோப்ளையா இருப்பான் போல, பைனியோட அருமை தெரியல பாரு மிலுக்” எனப் பேசியபடி, அவளின் அன்றாட வேலைகளைச் செய்துக்கொண்டிருந்தாள் அவந்திகை.
********************************
அன்றிரவு இரவு உணவை உண்டுவிட்டு ஒன்றாய் வரவேற்பரையில் அமர்ந்திருந்தனர், சிவசக்தியை ஒன்பதாம் நாள் வீட்டுக்குள் எடுப்பதால் மன்னராசா குடும்பமும் அங்கே தான் இருந்தார்கள்.
“எல்லாரும் சாப்பிட்டியளா.?” கரகரத்த குரலில் கேட்டார் முத்துவேல், அனைவரும் சாப்பிட்டுவிட்டதாய் தலையசைக்க,
“ஊரு உலகம் பேசுது அவிய பேசுறாவ, இவிய பேசுறாவன்றதெல்லாம், துப்பரவா ஒதுக்கிரலாம், அவி, இனியன், மன்ராசா, சக்தி, இவிய நம்ம பிள்ளேல், இவியோளாட நல்லது கெட்டத தீர்மானிச்சாக வேண்டிய கட்டாயத்து எல்லாருமே இருக்குதோம்” என முத்து வேல் பேச, இடையில் கூறுக்கிட்டுப் பேசினால் பிடிக்காது என்ற காரணத்தினால் அனைவரும் அமைதியாய் இருந்தனர்.
“எப்பா நான் பேசியாகணும்”
“ஏட்டி அவி அப்பா பேசிட்டு இருக்காவல்ல, செத்த அமைதியா இரு” கண்டித்தார் ஜெயக்கொடி,
“ஜெயா அவி பேசட்டும்” எனக் காயத்ரி பரிந்துரைத்த போது அகத்தினியனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள் அவந்திகை. என்ன என்பது போல் அகத்தினியன் புருவம் உயர்த்திக் கேட்க,கண்டுகொள்ளாதது போல் திரும்பிக்கொண்டாள் அவந்திகை.
“என்ன அண்ணேன் அண்ணிக்கிட்ட கண்ணாலயே பேசுறியா.?” சந்தியா கிசுகிசுக்க, அவள் காதை மெல்ல திருகினான் அகன். “ஸ்ஸ்” என்றவன் தன் உதட்டில் விரலை வைத்து தங்கையை அமைதியாய் இருக்கும் படி செய்கை செய்தான்.
“அவி நம்ம கல்யாணத்தைப் பத்தி தான பேச போற” அவந்திகையிடன் மன்னராசா கேட்க,
“போயாம்லே அந்தப் பக்கம்” அவனை உதாசீனம் செய்தவள்,
“சொல்லு அவி, உன் மனசுல உள்ளத சொல்லாம்மா” முத்துவேல் கேட்க,
“இத்தனை நாளு இல்லாம, இன்னக்கி புதுசா வந்திருக்கவியள நான் எப்படிக் கட்டிகிட முடியும், நம்ம உறவுக்காரவியளா இருந்தாலும் இத்தனை நாள் இவிய வேற்று உலகத்துலையா இருந்தாவ.? என்ன தான் அகனுக்குக் கட்டி வைக்கணும்னு செத்து போனா மாமா நினைச்சவான்னா, ஏன் அவிய ஒரு தடவ கூட இந்த மருமகளை வந்து பார்க்கல, எனக்கு அவிய என்ன செஞ்சுருக்காவ, சக்தி வயசுக்கு வரும் போது இவியல்லாம் வந்திருக்காவ சரி சந்தோசம் தான், நான் வயசுக்கு வரும் போது இவியெல்லாம் எங்க போனாவ, அன்னைக்கே வராத தாய் மாமன் என்ன பொறுத்த வரை அன்னைக்கே செத்துட்டாவ” என அவள் சொல்லி முடிக்க, ஜெயக்கொடி அவள் கன்னத்தில் அறைந்திருந்தார். ஒருநாளும் அடிக்காத அன்னை, தான் எடுக்கும் முடிவு சரியாக இருக்கிறது எனச் சொல்லும் அன்னை இன்று கைநீட்டி அடித்துவிட்டார் என உரைந்து போய் நின்றாள் அவந்திகை. திருமணம் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவந்திகை அப்படிப் பேசினால் என்பது புரியாமல் ஜெயக்கொடி அடித்துவிட்டார்.
“இவளை என்ன செய்யுதென்னு பாருங்க” என ஆவேசமாய் அடுக்களைக்குள் நுழைய போனவரை தடுத்திருந்தனர் பார்வதியும் ராஜபூபதியும்.
“செயா ஏய் செயா என்ன செய்யுத.?” முத்துவேலின் குரலில் நிதானித்தார் ஜெயக்கொடி,
“இங்கே பாருட்டி அவி, என் அண்ணனை பத்தி என்னட்டி நினைச்சிகிட்ட, அவன் மனச பத்தி என்னட்டி உனக்குத் தெரியும், உங்க அப்பா ஏன் அண்ணனை பத்தி பேசினாலே பொறுத்துகிடமாட்டேன், நீ பேசுவியோட்டி.?” என ருத்ர பார்வை பார்த்தார் ஜெயக்கொடி.
“எம்மா அப்போ ஏன்மா அவிய வந்து பார்க்கலை.?”
“என் அண்ணேன் எதுவும் செய்யலைன்னு நீ கண்டியோட்டி.? நீ கண்டியோ.?” அவர் அழுத்தமாய் முறைத்தார் அவந்திகையை.
“உனக்குப் பேரு வச்சதுல இருந்து, உன் கலியாணத்துக்கு இந்தச் சீலை தான் கட்டணும்னு முடிவெடுத்தது என் அண்ணேன் தான்ட்டி, இதெல்லாம் உங்க அப்பாக்கு கூடத் தெரியாதுட்டி” எனச் சொன்னவர் விரைந்து அவந்திகையின் அறைக்குள் சென்று, இரும்பு பெட்டி ஒன்றை எடுத்து வந்தார். அதைத் திறந்தவர்,
“இதென்ன தெரியுதாட்டி, நீ பால் குடிச்ச வெள்ளிச்சங்கு, நீ பெறந்தப்ப, பெரிய ஆஸ்பத்திரில யாருக்கும் தெரியாமா மறைஞ்சு வந்து பாரத்திட்டு இதையும் இந்தத் தங்க சங்கிலியும் கொடுத்திட்டு போனவட்டி” எனச் சொல்ல அனைவரும் அதிர்ந்தபடி பார்த்தனர், ஆனால் காயத்ரி மட்டும் இயல்பாய் இருந்தார், செந்தில் நாதனிடம் வெள்ளி சங்கை கொடுத்து அனுப்பியவரே அவர் தானே.
“இதைப் பாருட்டி நீ பெரிய மனுசியாகி மொத மொத கட்டின, பாவடை தாவணி, இந்த ஒத்தை கால் தங்க கொலுசு என் அண்ணேன் வங்கி கொடுத்தது, அதைத் தான் தொலைச்சிட்டு வந்துட்டியேட்டி, என் மனசு எவ்ளோ பதறிட்டு தெரியுமாட்டி.? நீ கொலுசை தொலைச்சு ஏன் அண்ணன கொண்ணுட்டியேட்டி” எனக் கதறி அழுதார் ஜெயக்கொடி, அகத்தினியனின் விழிகளோ அந்த ஒற்றைக் கால் தங்க கொலுசிலே நிலைத்திருந்தது, அந்தக் கொலுசை தேர்ந்தெடுத்ததே அகத்தினியன் தான், அப்போது அவனுக்கு வயது பதினாறு இருக்கும், படபடக்கும் பட்டாம் பூச்சியாய் மனம் பறக்க, இளமையின் வாயிலில் கால் அடி எடுத்து வைத்த நாள்.,
“டாட் இன்னைக்கி என்னோட பர்த்டே, சோ செயின் வாங்கித் தரப்போறீங்க அதுக்காகத் தான ஜூவல்லரி ஷாப் வந்திருக்கோம்” மீசை ரோமம் சிறியதாய் அரும்பியருந்த அகத்தினியன் கேட்டான்.
“இனியன்.! நம்ம அதுக்காக இங்க வரலை” எனச் செந்தில் நாதன் உரைக்க
“அப்பறம் எதுக்காக வந்திருக்கோம்.?”
“அதெல்லாம் நீ கேட்க கூடாது” எனக் கட்டளையாய் அவர் சொல்ல, தங்க கொலுசு இருக்கும் பிரிவிற்கு அழைத்துச்சென்றார், அங்கிருந்த கொலுசுகளில் ஒன்றை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான் அகத்தினியன், அவன் தங்க முத்துக்கள் இணைந்திருந்த இடத்தில் கிளி இருந்தது, அதைப் பார்த்தவுடன் பட்டெனத் தேர்ந்தெடுத்துவிட்டான் அகன்,
“இனியன் இதுதான் உனக்குப் பிடிச்சிருக்கா.?” செந்தில் நாதன் கேட்க,
“அந்தக் கிளி அழகா இருக்குப்பா” அவன் சொல்ல, அவந்திகையைப் பற்றிச் சொல்ல வாய்த் திறந்தாலும் அவரே வாய்க்கு பூட்டுப் போட்டுக்கொண்டார்,
இப்போது தான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான், திருமணப் பேச்சை இப்போது எடுத்தால் படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் அவர் தன் ஆசையைத் தன் மகனிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். பொதுவாய் தங்க ஆபரணங்களை இடுப்புக்குக் கீழ் போட கூடாது எனச் சொல்வார்கள், ஆனால் தன் வருங்கால மருமகளுக்குத் தங்க கொலுசு போட்டு அழகு பார்க்க நினைத்தார் செந்தில்நாதன்.
அதே கொலுசை ஜெயக்கொடியின் கையில் பார்த்துப் பூரித்துப் போய் நின்றான் அகத்தினியன், முதல் முறை அனைவரின் முன்னிலையிலும் அவந்திகைக்காக ஒரு குரல் ஒலித்தது,
“அத்தை விடுங்க, அவந்தி சின்னபொண்ணு, புரியாம பேசியிருப்பா, நீங்க டென்சன் ஆகாதீங்க” என்ற அகத்தினியனின் குரலில் குடும்பமே அதிர்ந்தபடி திரும்பி பார்த்தது. அவந்திகை முற்றிலும் அதிரிச்சியில் உறைந்து போனாள்.
அவந்தி என்று அவன் உதிர்த்த மொழியிலே, பெண்ணின் மனம் நிலைக்குத்தி நின்றது, எவ்வளவு உரிமையுடன் அவந்தி என்றழைக்கிறான். இதுவரை அவளின் பெயர் சொல்லி அவன் அழைத்தே இல்லை, புதுவித அனுபவத்தில் சிக்கி தவித்தாள் பேதை பெண்ணவள்.
“என்னட்டி பாக்குத அவி, மாப்பிள்ளை சொல்லுதாறேன்னு உன்ன விடுதேன்” என ஜெயக்கொடி சொல்ல, அவந்தி வேறு உலகத்தில் மிதந்துக்கொண்டிருந்தாள்.
“அவிம்மா, அம்மா மேல கோபபடாதே, இதெல்லாம், என்னோட சம்மதத்தோட தான் நடந்திச்சு, எல்லாம் முத்து அண்ணனுக்குப் பயந்து தான், நம்ம குடும்பச் சூழல் அப்போ அப்படி இருந்திச்சு, இப்ப தான் எல்லாமே மாறிருச்சே, உனக்காக நான் இருக்கேன் மா, எங்க வீட்டுக்கு வர்றதுக்கு நீ பயபட வேண்டாம், என்ன பொறுத்தவரை நான் விரும்பி கல்யாணம் செஞ்ச என் கணவனோட முதலும், கடைசியுமான ஆசையை நிறைவேத்தனும் அவ்வளவு தான், அது உன் கையில தான் இருக்கு” என அவந்திகையின் கையை அழுத்தமாய்ப் பற்றிக் காயத்ரி சொன்னார்.
“அது வந்து அத்தை” என அவள் சொல்ல வந்து இடை நிறுத்த,
“நீ தயங்காம சொல்லு அவி, உன் மனசுல வேற யாரவது இருக்காங்கன்ன கூடச் சொல்லு, நாங்க இப்போவே கிளம்பி போயிறோம், அப்படி உன்னைக் கட்டாயபடுத்திக் கல்யாணம் பண்ணுறத என் கணவனும் விரும்ப மாட்டாரு” எனக் காயத்ரி சொல்ல,
அனைவரின் விழிகளும் அவந்திகையை மொய்த்துக்கொண்டிருந்தது, அவள் என்ன பதில் சொல்வாள், எங்கே மன்னராசா தன் மனதில் இருப்பதாகச் சொல்லிவிடுவாளோ என்ற எண்ணமும் அனைவரின் மனதிலும் தோண்றி மறைந்தது.
“என் மனசுல யாரும் இல்லை, என்னால எந்த முடிவையும் எடுத்துகிட முடியலை சிறையா இருக்கு, எனக்குன்னு கனவுகள் இருக்கு” என வருந்திய படி அவள் சொன்னாள்.
“தயங்காத அவி, மனசுல என்ன இருக்கோ சொல்லிரு, உன் முடிவு எனக்கு ரொம்ப முக்கியம், நல்லதோ கெட்டதோ சொல்லிரு” எனக் காயத்ரி மீண்டும் கேட்டார்.
“எனக்கு முடிவு எடுக்க முடியலை அவ்ளோ தான், என் மனசுல யாரும் இல்லை, இருந்தாலும் நேரடியா சொல்லுற அளவுக்கு எனக்குத் தைரியம் இருக்கு” என அவந்திகை சொல்லி விட்டாள்
“முத்து அண்ணேன் இந்த விசயத்தைக் கொஞ்ச நாள் தள்ளி போட்டுக்கலாம், நாங்க வந்தது வந்திட்டோம் கல்யாணத்தை இருந்து முடிச்சிட்டே போறோம்” எனக் காயத்ரி அனுமதி கேட்டார்.
“சரிமா காயத்ரி, சக்திக்கு நாப்பது கழியட்டும் அப்பறம் பேசிகிடலாம்” என முத்துவேல் சொல்லி விட்டு உறங்க சென்று விட, அனைவரும் அவர் அவர் அறைக்கு உறங்க சென்றுவிட்டனர்,
அகனும், அவந்தியின் விழிகளில் மட்டும் உறக்கம் வரவில்லை, அவள் அறையில் சிவசக்தியின்றி வெறுமையாய் இருந்த அறையைப் பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் எண்ணத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தான் அகன், “அவந்தி.!” அவன் உரிமையாய் சொன்ன அந்த வார்த்தையைப் பெண்ணவளின் மனம் ஆழமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்க, அவளறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள்.
அவள் எண்ண ஓட்டத்தில் அலைபாய்ந்துக்கொண்டிருந்த அகனே அவளின் கண்முன் வந்து நிற்க, திக் உணர்வை பெற்றதோடு திருதிருவென விழித்தாள் அவள், அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் மேலும் முன்னேறி அவளறைக்குள் நுழைந்தான்.
“ஏய் எங்க வர்றிய வெளிய போங்க” அவள் கோபமாய்க் கத்தினாள், அவளை நெருங்கி அவளிதழில் ஒற்றை விரலை வைத்தவன் அவளை அமைதியாய் இருக்கும் படி பணித்தான்.
“கைய எடுங்க, பொட்டைபுள்ள இருக்க ரூம்ல வந்து நுழையுறிய, இத தான் உங்க பட்டணத்து பள்ளிகொடத்துல சொல்லி கொடுத்தாவளோ.?”
“உனக்கு இந்த மேரேஜா நிறுத்தணுமா வேண்டாமா.?”அவன் கேட்ட நொடியில் அவந்திகையின் கண்கள் பளிச்சிட்டது.
“ஃப்ரெண்ட்ஸ்” அவன் நட்பு கரம் நீட்ட, வணக்கம் வைத்து அவனின் நட்பை ஏற்றுக்கொண்டாள் அவந்திகை.
“ஓகே அவந்தி, நம்ம ஒரு ப்ளான் பண்ண போறோம், எங்க அப்பாக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தால என்னால கல்யாணத்தை நிறுத்த முடியாது, ஆனா நீ நினைச்சா நிறுத்தலாம்” அவன் துள்ளலாய் சொல்ல,
“அப்போ உனக்கும் இதுல விருப்பம் இல்லையோ.?”
“ஏய் என்ன மரியாதை இல்லாம் பேசுற.? வாங்க போங்க சொல்லணும்”
“நீ என்ன ஏன் புருசனா,வாங்க போங்க சொல்லியதுக்கு, கூட்டாளி பயலுவ அப்படித் தான் சொல்லுவாவ, நீ என் கூட்டாளி தான” அவள் புருவம் உயர்த்திக் கேட்க,
“சரி சரி அதெல்லாம் விடு, கல்யாணத்தை எப்படி நிறுத்தணும்னு டிஸ்கஸ் பண்ணலாமா.?”
“ஹான் சொல்லு” எனச் சொன்னவள் மெத்தையில் அமர,
“ஓகே அவந்தி, நீ யாரையாவது லவ் பண்ணுறேன்னு சொல்லணும்”
“என்ன நினைச்சிட்டு இருக்கிய, நான் லவ் பண்ணுதேன்னு சொன்ன யாரு ஆள காட்டுன்னு சொல்லுவாவலே” அவந்தி சொல்ல,
“அதான் இருக்கானே மன்னராசா அத்தை மகன், அவனைக் கைய காட்டு”
“விளையாடுதீயோ.? அப்படிச் சொன்ன உடனே கல்யாணம் பண்ணி வச்சிருவாவ”
“அதுக்குத் தானா நானும், சொல்லுறேன் உனக்குக் கல்யாணம் ஆகிட்டா நான் ஃப்ரீ ஆகிருவேன், அப்பறம் இந்த மொட்டை பட்டிக் காட்டுல இருக்க வேண்டிய அவசியம் இல்லையே”
“நீயெல்லாம் மனியனா, எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிகிட்டு இருக்கேன், உன் ப்ளான கொண்டு போயி குப்பையில போடு” அவளின் கோபம் அவனைச் சிறுதும் தாக்கவில்லை,
“அப்போ என்ன தான் செய்யுறது.?”
“நீ கடுதாசி எழுதி வச்சிட்டு ஓடி போயிராம் டே, பிறவு நான் சமாளிச்சுக்குவேன்” என அவந்திகை மூளையைக் கசக்கி யோசனை சொல்ல.
“இங்க பாரு அவந்தி அதெல்லாம் என்னால செய்ய முடியாது, அம்மா என் மேல நம்பிக்கை அதிகமா வச்சிருக்காங்க, அதை எப்படி நான் ஸ்பாயில் பண்ண முடியும்”
“இவ்ளோ பேசுதீயே, அதுக்கு உங்க அம்மாக்கிட்ட நீ உள்ளத சொல்லிட்டா பிரச்சனை முடிஞ்சிரும்ல” அவள் கேட்க,
“சரி அவந்தி நாளைக்கு, இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன், ஆனா உன்னோட உதவி எனக்கு இதுல கண்டிப்பா தேவை, முரண்டு பிடிக்க மாட்டியே”
“விடியட்டும் பேசிக்கிடலாம்” என அவனை வெளியே அனுப்பிக் கதவை சாத்தினாள் அவந்திகை.

