Loading

அகம் 4

 

அந்தி சாயும் வேளையில் மஞ்சள் பூசிய வானம், ஆதவன் மெல்ல மறைய துவங்கியிருந்தது, சிவசக்தியின் தோழிகள் அவளைச் சூழ்ந்திருந்தனர், அலங்காரமின்றிச் சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் பெண்ணவள், உறவுகளின் கூட்டத்தில் வீடு நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது, அவந்திகை அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்துக்கொண்டிருந்தாள், முத்துவேல் அவரின் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், ஜெயக்கொடி வந்திருக்கும் விருந்தினரை வரவேற்பதில் மும்மரமாய் இருந்தார், அகத்தினியன் , சந்தியா, காயத்ரி மூவரும் நடப்பதை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தனர், மகனின் திருமணப் பேச்சை எப்படித் துவங்குது என்ற தயக்கத்தில் காயத்ரி நின்றிருந்தார். அதே சமயம் மன்னராசா வாழை மரத்தை வீட்டின் நுழைவாயிலில் கட்டிக்கொண்டிருந்தான்.

“ஏட்டி சக்தி எப்படியோ வயசுக்கு வந்திட்ட” குறும்பாய் கேட்டாள் அவளின் தோழி.

“சீ போட்டி” எனச் சிணுங்கினாள் சிவசக்தி.

“இந்தாட்டி சக்தி உன் அத்தான் தான் மாங்கு மாங்குன்னு வேலை செய்யுறாவ போல” இன்னொருத்தி அவள் காதில் கிசுகிசுக்க, புன்னகை சிந்தினாள் சிவசக்தி,

“உனக்குச் சிவப்பு ரிப்பன் கொண்டாந்துருக்கேன்ட்டி சக்தி” என ஒருத்தி சொல்ல,

“இந்தாட்டி வளையல் உனக்காக தான்” இன்னொருத்தியும் நீட்டினாள்.

இப்படி அலங்கார பொருள்கள் ஒவ்வொருத்தரை கொண்டு வந்து தர, அன்போடு வாங்கிக்கொண்டாள் சிவசக்தி. பூப்படையும் பெண்களுக்கு அக்கம் பக்கத்தில் இருக்கும் தோழிகள் அலங்கார பொருள்களைக் கொண்டு வந்து தருவது ஒரு முறையாகும்.

“உன்னைக் கூட்டி இருத்த நாங்க எல்லாரும் வந்திருக்கோம்ட்டி” என ஒருத்தி சொல்ல, தோழிகள் அனைவரும் கலகலவெனச் சிரிக்க, வீடே கலகலப்பாய் மாறிப் போயிருந்தது.

அதே சமயம் கொள்ளை புறத்தில் மின் விளக்கின் வெளிச்சத்தில் பித்தளை அண்டாவில் நிறைந்திருந்த தண்ணீரில் மஞ்சளை கலக்கிக்கொண்டிருந்தாள் அவந்திகை.

“இருபத்தி ஏழு வருசமா வராதவியள இப்ப யாரு வரச்சொன்னதாம், இனி நாங்க தான் தண்ணி ஊத்துவேன்னு முன்ன வந்து நிக்கட்டும், மூக்கறுபட்டு தான் போவங்க” எனத் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள் அவந்திகை.

“என்னட்டி அவி தனியா பொலம்பிட்டு இருக்குறவ.?” எனப் பார்வதி பின்னால் இருந்தபடி கேட்க,

“பார்த்தியளா அத்தை நல்ல நாளும் பெரிய நாளும் பிரச்சனை பண்ணணும்னே வந்திருக்காவ, அவியல பார்த்தாளே எரிச்சலா வருது, அதுவும் பனைமரத்துல பாதில ஒருத்தன் வந்திருக்கானே அவன” என எரிச்சல் தொனியில் அவள் சொல்ல,

“ஏட்டி அவி நீ எதுக்கு இம்புட்டு கோவபடுற, வீடாம்டி அவிய போக்குல அமைதிய தான இருக்குதாவ, நீ ஆக வேண்டிய வேலைய பாரேன்ட்டி” எனச் சமாதானம் செய்தார் பார்வதி.

“நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டாகணும் அத்தை” எனச் சொல்லி விட்டு நகர்ந்தாள் அவந்திகை. உள்ளுக்குள் குளிர்ந்து போனார் பார்வதி.

“ஏம்மோய் சக்திய கூட்டி வாங்க தண்ணி ஊத்தணும்ல” அவந்திகை குரல் கொடுக்க, விறுவிறுவென வீட்டின் வாயிலை நோக்கி நடந்த ஜெயக்கொடி, காயத்ரியின் கைகளைப் பற்றி அழைத்தார்.

“மைனி வாங்க நீங்க தான் சின்னவளுக்குத் தண்ணி ஊத்தணும்” என அழைக்க,

“நானா..?”

“நீங்க தான் மைனி, மூத்தவளுக்குத் தான் உங்க கையால தண்ணி ஊத்தல, சின்னவளுக்காவது கடவுள் அந்தப் புண்ணியத்தைக் கொடுத்தானே” என நெகிழ்ந்தபடி சொன்ன ஜெயக்கொடியை பார்த்துப் பூரித்துப் போனார் காயத்ரி.

“நான் சீர் எதுவும் செய்யலையே ஜெயா, எப்படித் தண்ணி ஊத்துறது”

“நீங்க வாங்க மைனி” எனச் சிவசக்தி அருகே கூட்டி வந்து நிறுத்தினார்.

“சின்ன மருமகளைக் கூட்டிட்டு வாங்க மைனி” எனச் சொல்லிவிட்டுக் கொள்ளைபுறம் சென்று விட, அகத்தினியனையும், சந்தியாவையும் அழைத்து, சீர் செய்யத் தேவையான பொருள்களை வாங்கி வரும்படி பணித்தார் காயத்ரி, தாயின் சொல்லைக் கேட்டு இருவரும் அம்பாசமுத்திரம் நோக்கி பயணமானார்கள்.

மஞ்சள்தனில் நீராட சிறியவளை கைபற்றி அழைத்தவர்,

“நானும் அத்தை தான் மா வா” அன்போடு சொன்னார் காயத்ரி.

“ம்ம்ம” எனத் தலைக் கவிழ்ந்தபடி சொன்னாள் சிவசக்தி,

“அவளுக்கு நீங்க மட்டுமா அத்தை, நானும் தான் அத்தை ஹூம்ம்” என உதட்டை பிதுக்கினார் பார்வதி, பதிலேதும் பேசாமல் நின்ற காயத்ரியை,

“வாங்க நீங்க இருக்கும் போது நாங்க முறை செய்ய முடியாதுல” எனப் பார்வதி சொல்ல புரியாது விழித்தார் காயத்ரி.

“வாங்க மைனி இன்னுமா, இங்க நின்னுட்டு இருக்கிய.?” என ஜெயக்கொடியும் வந்துவிட மூவரும் சேர்ந்து சிவசக்தியை அழைத்து வந்து மணக் கட்டையில் அமர்த்தினர், ஆனாலும் காயத்ரியின் மனதில் சிறிய தயக்கம், தன் கணவன் இறந்துவிட்டார், சுமங்கலிகள் முன் நின்று செய்ய வேண்டிய சடங்கை எப்படித் தான் நின்று செய்வது என்ற குழப்பம் இருந்தாலும், தயங்கியபடி முன்நின்றிருந்தார்.

“என்ன தான் நடக்குது இங்க.?” முறைத்தபடி கேட்டாள் அவந்திகை,

“ஏட்டி அவி செத்த சும்மாயிரு” அதட்டினார் ஜெயக்கொடி,

“இத்தனை வருசம் வரதாவிய என் தங்கச்சிக்கு தண்ணி ஊத்த மட்டும் வந்துட்டாவளோ, நான் வயசுக்கு வந்தப்ப, இந்த அத்தை சொத்தையெலாம் எங்க போனவ.?” எனப் பொரிந்து தள்ளினாள் அவந்திகை,

“ஏட்டி வாயடக்கி பேசு, நல்ல காரியம் நடக்கும் போது இடைஞ்சலா” என முறைத்தார் ஜெயக்கொடி.

“நீ செத்த சும்மா இர்றேன்மா” எனப் பேசியவள் காயத்ரி புறம் திரும்பினாள்,

“மெட்ராஸூ அத்தை, சொகமா இருக்கியளா..? நான் பொறந்த நாள்ல இருந்து இப்ப வரைக்கும் வராதவிய, இப்ப வந்ததுக்கான காரணம் என்ன, நான் வயசுக்கு வந்த தகவலை தந்தி அடிச்சு அனுப்புனதுக்குக் கூட வராதவிய, இப்ப யார் குடிய கொடுக்க வந்திய.?” எனக் கேள்விகளை அவள் அடுக்க,

“யார பார்த்து என்ன கேள்விடி கேக்குத, பெரியவியளுக்கு உள்ள பிரச்சனைல, நீ என்னடி சில்வண்டு மாதிரி கத்திக்கிட்டு இருக்குதவ, போயான்ட்டி, இங்க நிக்காத” என அதட்டிய ஜெயக்கொடி முறைத்தவள்.,

“பெரியவிளுக்கு மரியாதை கொடுக்கணும்னா, பெரியவிய மாதிரி நடந்துகிடணும்” என உரக்க அவந்திகை சொல்லி நகர்ந்தாள்.

“ஏட்டி அவி அங்க என்ன சத்தம்.? இங்கிண வா” என முத்து வேல் அழைக்க, கோபத்துடன் பார்வையைக் காயத்ரி மேல் பதித்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றாள், ஏனோ காயத்ரியை பார்த்தாள் அவந்திகைகுள் பற்றிக்கொண்டு தான் வந்தது, அண்ணனையும் தங்கையும் பிரித்துவிட்டு வேடிக்கை பார்த்த அரக்கி எனத் தோன்றியது, அனைத்தும் செவி வழியில் கேட்ட செய்தியால் அவள் அனைத்தையும் நம்பி விட்டாள், அவள் அங்கிருந்து நகர்ந்துவிட, சடங்கும் சம்பிராதயங்களும் முறைப்படி நடந்தேற துவங்கியது,அவந்திகையோ அதன் பின் அனைத்திலும் ஒதுங்கி நின்றுக்கொண்டாள், அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தவளுக்கு, காயத்ரி சடங்களைச் செய்ய வந்ததேனோ பிடிக்கவில்லை.

கலந்து வைத்த மஞ்சள் நீரை சிவசக்தியின் மீது ஊற்ற,

“என்ன மைனி குலவை விடாம தண்ணிய மட்டு ஊத்துறீக” ஜெயக்கொடி கேட்க,

“மெட்ராஸ்காரவியளுக்குக் குலவை விடத் தெரியுமா என்ன.? நான் தான் என் மருமகளுக்குக் குலவை விடணும்” வார்த்தையால் குத்தினார் பார்வதி,

“உலுலு.. உலுலுலு” என்ற குலவை சத்ததை மூன்று முறை எழுப்பினார் பார்வதி அங்கே நின்றிருந்த பெண்களும் அவரைத் தொடர்ந்து அதே போல் செய்தனர்.

அவளின் தளிர் மேனி குளிர்ந்த நீர் பட்டு நடுங்க ஆரம்பித்தது, அத்தைகள் இருவரும் மாறி மாறி நீரை ஊற்றி விட்டு, மன்னராசா வாங்கி வந்த புடவையை அவள் மேல் சுற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்ற போது, அவன் வாங்கிக் கொடுத்த புடவையில் இதமாய் உணர்ந்தாள் பெண்ணவள், அதன் பின் புடவையைக் கட்டி விடும் போது குலவை சத்ததை எழுப்பினர் பெண்கள் அலங்காரம் செய்து முடித்த சமயத்தில், தாய் சொன்ன அனைத்து பொருள்களையும் வாங்கி வந்திருந்தனர் சந்தியாவும், அகத்தினியனும், ஆண்கள் உள்ளே செல்ல முடியாத காரணத்தினால் தங்கையை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே நின்றுக்கொண்டான், நடப்பதை எதுவும் பிடிக்காததல் அவந்திகையும் வெளியே தான் நின்றிருந்தாள்.

“ஏய் பாப்பா.?” அகத்தினியனின் குரல் கேட்டு திரும்பினாள் அவந்திகை.

“யாருக்கு யாரு பாப்பா, இது ஒண்ணும் உங்க மெட்ராஸ் இல்லை பார்த்துகிடுங்க, பார்த்து பதமா நடந்துக்கங்க” சீறி பாய்ந்தாள் அவள்.

“நீ தான தப்பான வழியைச் சொல்லி, என்னைச் சுத்தல்ல விட்ட இடியட்”

“வீட்டு முன்ன வந்து நின்னுகிட்டடு வழி கேட்ட அப்படித் தான் சொல்லுவாவ, பெரிய துரைன்னு நினைப்பு வண்டியை விட்டு இறங்காம தான் வழி கேப்பிகளோ.? பார்த்த படிச்சவிய மாதிரி இருக்கிய, ஊர்குள்ள எப்படிப் பேசணும்னு தெரியலை, எல்லாம் உங்க அம்மா வளர்த்த வளர்ப்பு”எனச் சாடினாள் அவந்திகை.

“யூ ப்ளடி, என் அம்மாவை பத்தி நீ ஏன்டி பேசுற” கோபம் கொப்பளித்தது அகத்தினியனுக்கு.

“மாமன் மகனாச்சேன்னு மரியாதை வச்சிருந்தேன் நீயே கெடுத்துகிட்ட, இங்க பாரு இனி பார்ப்ப, இந்த அவந்திகை யாருன்னு நீ பார்ப்ப” என அவள் சவலாய் சொல்லி நகர,

“வெயிட் என்ன நேம் சொன்ன.?”

“இங்குலீஷ்ல கேட்ட பதில் சொல்ல முடியாது”

“என்ன பேரு சொன்ன”

“அவந்திகை” என அவள் பெயரை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, அவன் தலையில் இடி இறங்கியது போல் உணர்ந்தான், இப்படியொரு பொண்ண கட்டிக்கணுமா, அய்யோ என்றிருந்தது அவனுக்கு.

****************

“மைனி அண்ணேன் வருவாவ சொன்னீய இன்னும் காணலை.?” தவிப்புடன் கேட்டார் ஜெயக்கொடி. என்னவென்று அவர் சொல்வர், சபகாரியம் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில், உன் அண்ணன் இறந்துவிட்டார் எனச் சொல்லி குடும்பத்தின் சந்தோசத்தைக் களைக்கக் காயத்ரி விரும்பவில்லை, மனதளவில் நொந்து போனவர், அழுதுக்கொண்டிருந்த மனதை கட்டுபடுத்தியபடி,

“நாளைக்கு வருவாங்க ஜெயா, செய்ய வேண்டிய முறையை இனியனை வச்சுப் பண்ணிக்கலாம்” எனக் காயத்ரி சொல்ல, பார்வதியின் முகம் சிறுத்துப் போனது.

“அப்பறம் என் மகன் எதுக்கு இருக்கான், அத்தை மாமான்னு நாங்க எதுக்கு இருக்குதோம், தண்ணி ஊத்துற முறைய செஞ்சுட்டிய சீர் செய்யுற முறையை நாங்க பார்த்துகிடுதோம்.” எனக் கோபமாய்ச் சீறினார் பார்வதி.

“பார்வதி மைனி, பெரியவளுக்குத் தான் நீங்க சிறப்பா செஞ்சியளே இந்த முறை மெட்ராஸ் மைனி செய்யட்டுமே” எனக் கெஞ்சலாய் ஜெயக்கொடி பேச,

“பார்வதி அக்கா பரவாயில்லை, நீங்களே செய்யுங்க, தண்ணி ஊத்துற உரிமைய கொடுத்ததே எனக்குப் போதும்கா” என மென்மையாய் காயத்ரி சொல்ல, சிறய தலையசைப்புடன், தற்காலிகமாய் வீட்டின் முன் பந்தல் போட்டு மேடை அமைத்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தார் பார்வதி, சிவசக்திக்குச் செய்ய வேண்டிய முறையை மன்னராசா செய்ய, அவள் கழுத்தில் மாலையை அணிவிக்க, உள்ளுக்குள் குளிர்ந்து போனாள் சிவசக்தி,ஆனால் பயந்தபடி தலைக் கவிழ்ந்து நின்றிருந்தாள். அவளின் கன்னத்தில் சந்தனம் பூசி நெற்றியில் பொட்டு வைக்க, மன்னராசாவின் கால்களில் விழுந்து எழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டாள், அதன் பின் அவளுக்காக வாங்கி வந்திருந்த தங்க சங்கிலியை அவளுக்கு அணிவித்து விட, பெண்ணவள் வதனம் சிவந்து போனாள், அனைத்தையும் ஓரமாய் நின்று அவந்திகை கவனித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்ததாகக் காயத்ரி அனைத்து சீர்களையும் அகத்தினியனை வைத்துச் செய்தார், அகத்தினியனும் தங்க சங்கிலி ஒன்றை சிவசக்திக்கு அணிவித்துவிட்டு, பட்டுபுடவையைச் சீராகக் கொடுக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊர் மக்கள், இருவரும் போட்டி போட்டு செய்த சீர் வரிசகளைப் பார்த்து மலைத்து போய் நின்றனர்.

“சிவசக்தி கொடுத்து வச்சவதன்ட்டி, அவந்திகைகு கூட இம்புட்டு சீர் வரிசை செய்ய ஆள் இல்லையே” என ஒரு பெண்மணி பேச.,

“இங்க பாரு கிழவி, வந்தியா சோத்த திண்ணியான்னு இரு,கலகத்தை உண்டு பண்ணிறாத” என மரியாதையாய் அவந்திகை பேச.,

“போயாம்ட்டி போக்கத்தவளே” என அந்தப் பெண் சொல்லி நகர்ந்தார்.

“என் புள்ள காயத்ரி, சின்னவளுக்குச் சீர் சனத்தி செஞ்சிட்ட, பெரியவளுக்கு என்ன செஞ்சு ஈடுகட்ட போற.?” இன்னொரு பெண்மனி கேட்க,

“எல்லாரும் சம்மதிச்சா என் பையனை அவளுக்குக் கட்டி வச்சு எனக்கு மருமகளா ஆக்கிறேன்” எனப் புன்னகை தவழ காயத்ரி சொன்னார்.

“ஹா ஹா அப்படிப் போடு அரிவாள, மனசுக்குள்ள இதை வச்சிகிட்டு தான் இவ்வளவும் செஞ்சியாக்கும், நல்ல சொல்லு சொல்லியிருக்கப் புள்ள” என அந்தப் பெண்மணி சொல்ல, அவர் சொன்னதைக் கேட்டு அவந்திகை முகம் சுணங்க, முத்துவேல் மற்றும் ஜெயக்கொடியின் முகம் பளிச்சிட்டதையும் கவனித்தாள் அவந்திகை.

“சரியா போச்சு, அப்போ என் மகன் மன்னராசா எதுக்கு இருக்குதானாம், அவிந்திகைய மனசுல சமந்துகிட்டுத் திரியுதான்” எனப் பார்வதி கோப முகம் காட்ட, நிலைமையைச் சமாளிக்க முற்பட்ட ஜெயக்கொடி,

“அதெல்லாம் பிறவு பேசிக்கிடலாம், வந்திருக்கவியள கவனிக்கணும், சடங்கு முடியட்டும்” எனச் சொல்லிவிட அத்தனை பேரின் வாயும் பட்டென மூடிக்கொண்டது, வீடே விழக்கோலம் பூண்டது, சிவசக்தி புகைப்படத்துக்குப் புன்னகைத்தபடி நிற்க, வீட்டின் வெளியே பந்தலிட்டு பந்தி பரிமாறத் துவங்கியிருந்தார்கள், தான் நினைத்ததைச் சொல்லிவிட்ட சந்தோசத்தில் காயத்ரி இருக்க, அனைவரும் அவர் அவர் வேளையில் மும்மரமாய் இருக்க, அவந்திகை மனம் நொடிந்து போனது, என்ன தான் தனக்கான தொழில் இருந்தாலும், திருமணம் என்ற உறவில் செல்வதற்கு அவளின் மனம் தடை விதித்தது, தன்னையே சுற்றி வரும் மன்னராசாவையே மதிக்காமல் இருப்பவளுக்கு, திருமணம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசந்தது. மனம் ஒரு நிலையில் நிற்க மறுத்தது, அத்தனையும் யோசித்தபடி, வீட்டின் மொட்டை மாடியில், தனக்கெதிரே சுழன்றுக்கொண்டிருந்த ராட்சத காத்தடியை (wind mill) பார்த்தபடி நின்றிருந்தாள் அவந்திகை. தளிர் மேனி எங்கும் குளிர் பரவ, கட்டியிருந்த புடவை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

“அவி” என்ற மன்னராசாவின் குரல் கேட்டு திரும்பினாள் அவந்திகை. அவனைப் பார்த்தலே எரிந்து விழும் பழக்கத்தை உடையவள், அமைதியாய் திரும்பி

“சொல்லு மன்ராசா” என்றாள்.

“என் அவி இப்படிப் பேசமாட்டளே, என்ன டே சொல்லுன்ல சொல்லுவா” என அவளைப் போல் அவன் பேசிகாட்ட. மென்மையாய் புன்னகைத்தாள் அவள்.

“என்னட்டி அவி, எதுவும் பிரச்சனையா.?”

“நீ தான் பார்த்தல, மெட்ராஸ்காரவிய என்ன சொன்னவன்னு”

“அதெல்லாம் நடக்காதுட்டி அவி, உனக்கு நான் தான்” மன்னராசா உறுதியாய் சொல்லி அவளைப் பார்க்க,

“உனக்கு எப்பயுமே விளையாட்டு தான் டே, அவிய என் கல்யாணத்தைப் பத்தி பேசுறாவ, எனக்கு இந்த ஊர விட்டெல்லாம் போக முடியாது டே”

“இந்த ஊரை விட்டுப் போகக் கூடாதுன்னா, நீ என்ன தான்ட்டி கட்டியாகணும் அவி” என மீண்டும் புன்னகை தவழ சொன்னான்.

“ஏலே கூமுட்டை, கலியாணமே வேண்டாம்னு சொல்லுதேன், மரமண்டைக்கு விளங்குதா.?” கோபமாய் அவந்திகை பேச.

“இது தான் என் அவி, திட்டு திட்டு நல்லா திட்டு, இதைக் கேக்க தான் இவ்வளவு நேரம் காத்திட்டு இருந்தேன்ட்டி” என மகிழ்வோடு அவன் சொல்ல.

“உன்கிட்ட மனியன் பேசுவானா, போயாம்லே”

“உனக்கென்ன கலியாணம் நடக்கக் கூடாது அவ்வளவு தான நான் பார்த்துகிடுதேன், அதெல்லாம் விடு சுருட்டு யாருக்குட்டி வாங்கிட்டு வந்த.?”

“நான் வலிக்கத் தான் வாங்கிட்டு வந்தேன், கூறு கெட்டவனே, சாமிக்கு வச்சி கும்பிட வாங்கிட்டு வர சொன்னேன் டே” என அவள் சொன்ன பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டான் மன்னராசா.

“அப்பறம் முக்கியமான விசயம்ட்டி அவி, நம்ம சக்தி பள்ளிக்கொடத்துல பயலுவ இம்சை பண்ணுறானவ போல உன் கிட்ட சொன்னாளா.?”

“சொன்னா சொன்னா, பள்ளிகொடத்துல புகார் கொடுத்துட்டு, அந்தப் பயவுள்ளைக்கு ரெண்டு காட்டு காட்டிட்டு தான் வந்தேன்” என அவந்திகை சொல்ல.

“இப்போ பெரிய மனுசியா வேற ஆகிட்டா வேற பள்ளிகொடத்துல சேர்த்தா என்னட்டி”

“அவ பனிணென்டாபூல படிக்குதா, இப்ப எப்புடி பள்ளிகொடம் மாத்த முடியும் டே”

“அதெல்லாம் நான் பார்த்துகிடுதேன்ட்டி, அவளுக்கு வண்டி ஓட்ட சொல்லிக்கொடேன்ட்டி, காத்து நிக்கப் போய்த் தான எடக்கு பண்ணுதானுவ” என அக்கறையாய் மன்னராசா சொல்ல, என்ன தான் அவனைத் திட்டினாலும் அவன் மீது மரியாதை ஏற்பட்டது அவந்திகை மனதில். குடும்பத்தில் உள்ள அனைத்தையும் கவனித்துக்கொள்கிறான், ஒரு வேளையில் நிரந்தரமாய் நிற்காமால் தாவிக்கொண்டிருப்பது மட்டுமே அவன் மீது குறையாகச் சொல்ல முடியும், அதற்காக வேலை இல்லை என்று முடங்கி விடமாட்டான், பனை ஏறுவதும், பனையிலிருந்து பதனீர் எடுப்பதுமே அவனுக்குப் பிடித்தமான வேலை, ஆனால் அதில் சொற்ப பணமே கிடைக்கும். கிடைக்கும் வேலையைச் செய்வான், வயல் வேலையிலிருந்து கடையில் நிற்பது, டவுனிலிருந்து பொருள்களை வாங்கி வருவது என அனைத்தையும் சிறப்பாகச் செய்வான் மன்னராசா.

“சொல்லி தரேன் டே, நீ பந்திய கவனி” என அவள் சொல்ல.

“நான் சும்மா வந்தேன்னு நினைச்சியோ, உன்னைச் சாப்பிட கூட்டிட்டுப் போகத் தான் வந்தேன் வாயாம்ட்டி”

“இல்லை டே, அங்க அவிய எல்லாம் இருப்பாவ, நான் வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டேன், எதையாவது பேசி விட்டுருவேன்” என விரக்தியாய் அவள் சொல்ல.,

“ஒரு தட்டுல போட்டு இங்க கொண்டு வரவாட்டி” அக்கறை வழிய அவன் பேச.

“நீ உன் வயித்த பாராம்லே எனக்குச் சாப்பிட்டுக்கத் தெரியும்” என்ற அவளின் அதட்டலிலே படியிறங்கி சென்று விட்டான் மன்னராசா.அவன் சென்ற பிறகும் அவள் கால்கள் நிற்காமால் நடை பயற்சி செய்ய ஆரம்பித்தது. தனிமையில் அவளின் யோசனை தறிக்கெட்டு ஓட, அவள் எண்ணத்தில் பச்சக்கென வந்து ஒட்டிக்கொண்டான், அந்த ஆறடி ஆண்மகன் அகத்தினியன்.

“ஏட்டி அவி..!” என்ற தாயின் குரல் கேட்டு எண்ணம் களைந்தவள்,

“வாரேன்” எனக் குரல் கொடுத்தபடி ஓடி வந்தாள்.

“எங்கட்டி போயிட்ட, வந்திருக்கவியள கவனிக்காம, அப்படி என்ன வெட்டி முறிக்க வேலை” சாடினார் ஜெயக்கொடி.

“இப்ப என்ன செய்யணும் சொல்லு செய்யுதேன், அதுக்காக என் பேரை ஏலம் விடாதமா” எனக் கோபமாக உரைத்தாள் அவந்திகை.

“ஊர்காரவியெல்லாம் சாப்பிட்டு போயிட்டாவ, நம்ம உறவுகாரவியளுக்குச் சாப்பாடு வை” என அதட்ட, உணவை பரிமாறச் சென்றாள் அவந்திகை.

இரவு உணவு என்பதால், இட்லி, சாம்பார் பறிமாறபட்டது, மன்னராசா குடும்பமும் அகத்தினியன் குடும்பமும் அமர்ந்திருக்க, அவர்களோடு சேர்ந்து சிவசக்தியும் அலங்காரத்தோடு அமர்ந்திருக்க, ஜெயக்கொடியும், முத்து வேலும் அமர்ந்திருந்தனர்.

முதலில் இலையை மன்னராசா அனைவருக்கும் போட்டான், அதன் பின் நெகிழி குவளையை ஒவ்வொருவருக்கும் வைத்தாள் அவந்திகை, ஒவ்வொரு நெகிழி குவளையிலும் தண்ணீரை நிரப்பினான் மன்னராசா, இலையின் ஓரத்தில் கேசரியை வைத்தாள் அவந்திகை. அவளின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டிருந்தார் காயத்ரி.

அதன்பின் இட்லியை மன்னராசா வைக்க, அனைவரும் இட்லியை பிய்த்து போட்டுவிட்டு குழம்புக்காகக் காத்துக்கொண்டிருக்க, சாம்பார் வாளியுடன் வந்தாள் அவந்திகை. வரிசையாய் ஊற்றி வர, அகத்தினியனின் இலைக்கு வந்து பார்த்த போது இட்லி பியித்து வைக்காமல் அப்படியே வைத்தபடி சிந்தனையில் முழ்கி இருந்தான் அவன்.

“இட்லியை யாரு பிச்சி வைப்பாங்க.? பிச்சு வைங்க குழம்பு ஊத்தாண்டமா.?” என அவள் கேட்க புரியாது விழித்தவனைப் பார்த்துக் கோபம் தான் வந்தது அவளுக்கு,

“உங்க ஊரு மாதிர இட்லி பஞ்சு போல இருக்காது, பிச்சி போட்ட தான் இட்லி ஊரும்” எனச் சொன்னவள் அவன் இலையில் இருந்த மூன்று இட்லியை பியித்து வைத்தவள், அதில் சாம்பாரை ஊற்றி நகர, அவந்திகை வருவதற்குள் சந்தியா இட்லியை பியித்து வைத்திருந்தாள்.

“அண்ணி இப்படித் தானா.?” எனச் சந்தியா தலையாட்டி கேட்க,

“இப்படித் தான், ஆனா அண்ணி இல்லை” எனச் சாம்பரை ஊற்றிவிட்டு, அடுத்ததாகக் காயத்ரி இலையில் சாம்பாரை அவள் ஊற்ற,

“என் புள்ளைக்கு ஏத்த சமார்த்திய காரி நீ தான் மா” என அவர் வார்த்தைகளை உதிர்க்க முகத்தை ஊர்ரென்று வைத்தபடி சாம்பார் வாளி கோபமாய் வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் அவந்திகை.

முத்து வேலுக்கும், ஜெயக்கொடிக்கும் அளவில்லாத மகிழ்ச்சி தான் இந்த விசயத்தில், பிரிந்த குடும்பம் இந்தத் திருமணத்தில் தான் இணையனும்னு இருந்திருப்பது இருவரும் ஓரே மாதிரியாய் உணர, பார்வதியின் முகம் வாட்டமாகக் காணப்பட்டதோடு, மன்னராசாவின் மனம் மௌனமாய் அரேற்றியது,

இதில் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருந்ததென்னவோ சிவசக்தி தான், “அக்காக்குக் கலியாணம் ஆகிட்டா மன்ராசா அத்தான் கூட நமக்குத் தான் கலியாணம்” என்ற எண்ணம் மேலோங்க, தன் மஞ்சள் நீராட்டு விழாவில், ஓடியாடி வேலை செய்து, வேர்வையிலே குளித்திருந்த தன் ஆசை அத்தானை பார்த்தபடி.

“மன்ராசா” என மனதில் அழைக்க, அதே சமயம் அவனும் அவளைத் திரும்பி பார்க்க, ஒற்றைக் கண்ணைத் திறந்து மூடி, இதழ் குவித்துப் பறக்கும் முத்தம் கொடுக்க, அதை எதிர்பாராதவன் நிலை தடுமாறி வாழையிலை குவித்து வைத்திருந்த குவியலில் பொத்தென விழ, அவனைப் பார்த்து, கலகலவெனச் சிவசக்தி சிரித்தாள்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்